COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, October 10, 2021

 

பா. .. ஆட்சியின் அடக்குமுறை அவலங்களும் மக்கள் போராட்டங்களும்

ஆர்.வித்யாசாகர்

மதவாத பாசிச பா . . . ஆட்சியில், விலைவாசி உயர்வு, வேலையின்மை, வரிச்சுமை, கருப்பு சட்டங்கள், கடுமையான ஒடுக்குமுறை கடுஞ்சுமைகளாக சாமான்ய மக்களின் வாழ்க்கையை நாளுக்கு நாள் அரித்துக்கொண்டிருக்கிறது

. "பேய் அரசாட்சி செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள்" என்ற முண்டாசுக்கவிஞன் பாரதி கூறியது போல, மோடி அரசு, மக்களின் நியாயமான போராட்டங்களை தன் இஷ்டம்போல ஆக்டோபஸ் கரங்களை நீட்டி, புதிய புதிய வடிவங்களில் ஒடுக்குவதன் மூலம் காட்டுமிராண்டிதனமாக நடந்து கொண்டிருக்கிறது. 1837-ம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியில், மெக்காலேவால் உருவாக்கப்பட்டு, 1870-ம் ஆண்டு சிறப்பு மசோதா மூலம்  இந்திய தண்டனைச் சட்டத்தில்  இணைக்கப்பட்ட  தேசத்துரோக சட்டம் (இந்திய தண்டனைச் சட்டத்தில் 124 பிரிவு) இந்தியாவிலேயே பழைமையான ஒரு சட்டம் என்பதோடு இதை இயற்றிய பிரிட்டனிலேயே இந்த சட்டம் தூக்கி எறியப்பட்டுவிட்டது. ஆனால் பல மக்கள் ஆதரவு சட்டங்களை காலாவதியாகிப்போன சட்டங்கள் என்று தூக்கி எரியும் மோடி, தேசத்துரோக சட்டத்தை தன்னுடைய ஆர்.எஸ்.எஸ். நிகழ்ச்சிநிரலுக்கு ஒரு சிறந்த ஆயுதமாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். மனித உரிமை போராளிகள் பலர் இந்த சட்டத்தினால் தாக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஒன்றிய அரசால்  அதிகம் பயன்படுத்தப்படும் யுஏபிஏ எனப்படும்சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ (Unlawful Activities (Prevention) Act )  எனும் கருப்புச் சட்டம் தீவிரவாதத்தை ஒடுக்க உருவாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. ஆனால் இது தடா, பொடாவையெல்லாம் மிஞ்சும் வகையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.  அப்பாவி மக்களே இந்தச் சட்டத்தால் மிக அதிகமாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதற்கெல்லாம் மேல் உச்சபட்ச அதிகாரம் படைத்த தேசிய போலீஸான என்.. (தேசியப் புலனாய்வு முகமை - NIA - The National Investigation Agency) அமைப்பின்  பாய்ச்சல், அளவிட முடியாததாகவே மாறி நிற்கிறது. மாநில அரசுகளின் அதிகார வரம்புகளையெல்லாம் அடித்து நொறுக்குகிறது. என்... அரசாங்கத்தின் அநியாயங்களுக்கு எதிராகக் குரல் கொடுப்பவர்களையெல்லாம் தேச விரோதிகள் என முத்திரை குத்தி கைது செய்துகொண்டிருக்கிறது. "ம் என்றால், சிறைவாசம்... ஏனென்றால் வனவாசம்" ... என்ற அளவிற்கு அடக்குமுறை அதிகரித்திருக்கிறது. தொடர்ந்து பல்வேறு வழிகளில் மக்களை ஒடுக்கும் மோடி அரசின் கொடுங்கோலாட்சியின் சமீபத்திய உதாரணங்கள்  பா... ஆட்சி செய்யும் அசாம் மாநிலத்திலும் உத்திரபிரதேச மாநிலத்திலும் நடந்த ஒடுக்குமுறைகள்.

தேசிய குற்ற ஆவண முனையத்தின் புள்ளி விவரப்படி, நாட்டிலேயே அதிகமாக யுஏபிஏ சட்டத்தையும், தேசத்துரோக சட்டத்தையும் மக்கள் மீது அதிகம் பயன்படுத்திய நான்கு மாநிலங்களின் முன்னணியில் அஸ்ஸாமும் .பி.யும் இருக்கின்றன. தேசிய குற்ற ஆவண முனையத்தின் புள்ளி விவரங்கள் நாட்டிலேயே மக்கள் மீது மிக மோசமான ஒடுக்குமுறை கொண்ட மாநிலம் .பி. என நிரூபித்திருக்கிறது.

.பி.யில் விவசாயிகள் போராட்டத்தால் ஆட்டம் காணும் பா. .. ஆட்சியும், அதன் அடக்குமுறைகளும்

நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கும் லக்கிம்பூர் கேரி சம்பவத்தில் இதுவரை நான்கு விவசாயிகள் கொல்லப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த மாவட்டத்திலுள்ள பன்வீர்பூர் கிராமத்தில் அக்டோபர் 3 நடைபெறவிருந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு அந்த மாநில துணை முதல்வர் கேசவ் பிரசாத் மௌரியா சிறப்பு விருந்தினராகப் பங்கேற்கவிருந்தார். இந்தத் தகவலை அறிந்த விவசாயிகள் அவருக்குக் கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டனர். துணை முதல்வரை வரவேற்க ஒன்றிய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தேனியின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா போராடும் விவசாயிகளின் மீது காரை ஏற்றி தள்ளிவிட்டுச் செல்லும் காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. இந்த காணொளியை படம் பிடித்த பத்திரிகையாளர் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ஒன்றிய இணை அமைச்சர் தனது மகன் அந்தக் காரை ஓட்டவில்லை என்றும் போராடும் விவசாயிகள்தான் தங்களை தாக்க வந்தனர் என்றும் வகைமாதிரி சங்கி வாதத்தை முன்வைக்கிறார். ஆனால், உத்தரபிரதேச அரசாங்கம், ஒன்றிய இணை அமைச்சர் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கும் என்றும் படுகொலை செய்யப்பட்ட விவசாயிகள் குடும்பங்களுக்கு நட்டஈடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என்று அறிவித்துள்ளது. உத்தரபிரதேச அரசின் இந்த அறிவிப்புகள் ஒன்றிய இணை அமைச்சர் போராடும் விவசாயிகள் மீது அவதூறாக குற்றம் சாட்டியுள்ளார் என்பதை காட்டுகின்றன. ஒன்றிய அமைச்சரின் மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டும் இன்னும் கைது செய்யப்படவில்லை.

.பி.யின் லக்கிம்பூர் கேரியில் நடந்துகொண்டிருந்த விவசாயிகள் போராட்டமும், அதை தொடர்ந்து அக்டோபர் 3ஆம் தேதி ஏற்பட்ட  கலவரமும் ஏதோ திடீரென்று வெடித்ததல்ல.  அதன் பின்னணியில் பல்வேறு  நிகழ்வுகள் இருக்கின்றன.

ஒன்றிய பா. .. அரசால் கடந்த ஆண்டு கொண்டுவரப்பட்ட விவசாயிகள் விரோத, மக்கள் விரோத, மூன்று விவசாய சட்டங்களை திரும்பப் பெறுமாறு  கிட்டத்தட்ட ஓராண்டு காலமாக, பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் போராடிக் கொண்டிருக்கின்றனர். இது மட்டுமல்லாது .பி. மற்றும் ஹரியானா மாநிலங்களில் பல பகுதிகளில் விவசாயிகளின் "மகா பஞ்சாயத்" என்ற பெயரில் விவசாயிகள் தங்கள் எதிர்ப்பை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். ஒவ்வொரு மகா பஞ்சாயத்திலும் ஒரு லட்சம் விவசாயிகளுக்கு மேலாக திரண்டிருக்கின்றனர்.  பா. ..விற்கு இது ஒரு பெரிய சவால். முஸாபர்நகரில் நடந்த மகா பஞ்சாயத்தில் விவசாயிகள் புதிய விவசாய சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அதே நேரத்தில் பா. ..வின் வகுப்பு வாத அரசியலையும் எதிர்த்திருக்கிறார்கள். விவசாயிகள் மாநாட்டில், வரவிருக்கும் தேர்தலில் பாஜக-வுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடிவு செய்தார்கள்.

லக்கிம்பூர் கேரி மாவட்டம் சர்க்கரை உற்பத்தியின் களஞ்சியம் என்று அழைக்கப்படும் ஒரு மாவட்டம். ஆசியாவிலேயே மிகப் பெரிய சர்க்கரை ஆலைகள் என்று கருதப்படும் மூன்று சர்க்கரை ஆலைகள் இங்கு இருக்கின்றன. (பஜாஜ் ஹிந்துஸ்தான் சுகர், பலியா  கலன் மற்றும் பைராம்பூர் சீனி மில்ஸ்). கரும்பு விவசாயம் இந்த மாவட்டத்தின் முதுகெலும்பு போன்றது. சுமார் 5 லட்சம் கரும்பு விவசாயிகள் இந்த மாவட்டத்தில் உள்ளனர். ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலைகள் கொடுக்கவேண்டிய மொத்த நிலுவை தொகையான ரூ.5500 கோடியில் (.பி. முழுவதுமாக), இந்த மாவட்டத்தில் மட்டும் ரூ. 999 கோடி நிலுவையில் உள்ளது. கரும்பு உற்பத்தி ஆலையை அடைந்தவுடன்  14 நாட்களுக்குள் அதற்கான  தொகை விவசாயிகளுக்கு கொடுக்கப்படவேண்டும். ஆனால் வருடக்கணக்காக கொடுப்படாமல் உள்ள தொகை மிக அதிகம். ஏற்கனேவே இதனால் கோபமடைதிருந்த விவசாயிகள் புதிய விவசாய சட்டங்களை எதிர்ப்பதோடு மட்டுமல்லாமல் நிலுவைத்தொகையை உடனே கொடுப்பதற்காகவும் போராடிக்கொண்டிருந்தனர். கடந்த நான்கு ஆண்டுகளில் முதல் முறையாக யோகி ஆதித்யநாத் அரசு ஆதரவு விலையில் ஒரு குவிண்டால் கரும்பு விலையை ரூ.25 ஏற்றி அறிவித்திருந்தார். இது டீசல் விலையேற்றம், மின்சார கட்டண ஏற்றம், இடு  பொருட்கள் விலையேற்றம் போன்றவற்றை ஈடுகட்ட கூட போதாது என்று விவசாயிகள் மேலும் கோபமடைந்திருந்தனர்.

மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் குமார் மிஸ்ரா தேனி, லக்கிம்பூர் கேரி மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சில நாட்களுக்கு முன் பேசிய ஒரு காணொளியில் போராடும் விவசாயிகளை தீய சக்திகள் என்றும், அவர்கள் போராட்டத்தை விலக்கிக்கொள்ளாவிட்டால் அதற்கான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று மிரட்டி இருந்தார். (சமீபத்தில் ஹரியானா முதலமைச்சர் போராடும் விவசாயிகளை பழிக்கு பழி (tit-for-tat) வாங்குவோம் என்று மிரட்டி இருந்ததை இங்கு நினைவு கூற வேண்டும்)

அஜய் குமார் மிஸ்ரா தேனி, சமீபத்தில் விரிவாக்கப்பட்ட ஒன்றிய அமைச்சரவையில் சேர்க்கப்பட்ட புதிய அமைச்சர். ஒரு பார்ப்பரான இவரை அமைச்சரவையில் சேர்த்ததே .பி.யில் உள்ள பார்ப்பனர்களை திருப்தி படுத்தி 2022 மாநில தேர்தலில், அவர்களின் வாக்குகளை பெறுவதற்கே.

இந்த நிலையில், தற்போது நடந்திருக்கும் இந்தச் சம்பவம் யோகி தலைமையிலான பாஜக அரசுக்குப் பெரும் நெருக்கடியைக் கொடுத்திருக்கிறது.

விவசாயிகளின் மீதான அடக்குமுறைக்கு  எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும் அங்கு செல்ல முயன்ற பிரியங்கா காந்தி, அகிலேஷ் யாதவ் இருவரும் கைதுசெய்யப்பட்ட நிலையில், பஞ்சாப் மாநில துணை முதல்வர் சுகிந்தர் ரன்தவா, சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாதல் போன்றவர்கள் லக்னோ விமான நிலையம் வருவதற்கு உத்தரப்பிரதேச அரசு தடை விதித்திருக்கிறது. இந்த ஒட்டுமொத்தச் சம்பவத்துக்கும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துவருகிறார்கள்.

தமிழ் நாட்டில் நமது கம்யூனிஸ்ட் கட்சி இந்த அடக்குமுறை சம்பவத்தை வன்மையாக கண்டித்ததுடன் மாநிலத்தின் பல பகுதிகளில் நீதி கோரி ஆர்ப்பாட்டங்கள் நடத்தி இருக்கிறது.

காவல் துறை உயரதிகாரிகளுக்கும்  விவசாயிகளுக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தையில், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.45 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சமும் கொடுக்கப்படும் என்று முடிவாகியிருக்கிறது. உயிரிழந்த விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கப்படும் என்று .பி. அரசு அறிவித்துள்ளது. ( கொடூரமான ஹத்ராஸ் சம்பவத்தில் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்டு , தடயங்களை அழிக்க நள்ளிரவில் காவல் துறையால் எரிக்கப்பட்ட பெண்ணின் குடும்பத்திற்கு ஒரு வருடத்திற்கு மேலாகியும் எந்தவித நஷ்ட ஈடோ, குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை என்ற யோகியின் வாக்குறுதியோ இது வரை நிறைவேற்றப்படவில்லை). இந்த சம்பவம் குறித்து 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. ஒன்றிய உள்துறை இணையமைச்சர் மகன் ஆஷிஷ் மிஸ்ராவுடன் மொத்தம் 30 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆஷிஷ் கைது செய்யப்படுவாரா  என்பது .பி. அரசுக்கு மட்டுமே தெரியும். வழக்கம் போல உயர் நீதிமன்ற ஒய்வு பெற்ற  நீதிபதி தலைமையில் விசாரணை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஒன்றிய இணை அமைச்சர் தனது மகன் அந்தக் காரை ஓட்டவில்லை என்றும் போராடும் விவசாயிகள்தான் தங்களை தாக்க வந்தனர் என்றும் வழக்கமான  சங்கி வாதத்தை முன்வைக்கிறார். ஆனால், உத்தரபிரதேச அரசாங்கம், ஒன்றிய இணை அமைச்சர் மகன் மீது கொலை வழக்கு பதிவு செய்து, உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடக்கும் என்று அறிவித்திருப்பது ஒன்றிய இணை அமைச்சர் போராடும் விவசாயிகள் மீது அவதூறாக குற்றம் சாட்டியுள்ளார் என்பதை காட்டுகிறது.

சிறுபான்மையின மக்கள், பெண்கள், தலித்துக்கள் ஆகியோருக்கெதிரான வன்முறை, காவல் துறையின் சட்டத்திற்கு புறம்பான நடவடிக்கைகள், பெண்களை பாலியல் கொடுமைகளுக்கு ஆளாக்கும் நபர்களுக்கு பாதுகாப்பு, இளைஞர்களுக்கு வேலையின்மை, கொரோனா பேரிடரில் சரியான நடவடிக்கைகள் எடுக்காமல் மக்கள் கங்கை ஆற்றிலே பிணங்களாக மிதந்தது போன்றவைதான் யோகி தலைமையிலான பாஜக அரசின் சிறப்பு அம்சங்களாக இருக்கிறது. அடி  மேல் அடி  வாங்கிய மக்களின் கோபாவேசம்தான் லக்கிம்பூர் கேரியில் வெளிப்பட்டிருக்கிறது.  .பி மக்கள் இந்த அரசை  மன்னிக்க மாட்டார்கள்.

 

"ஏழைகளாக, சிறுபான்மையினராக இருந்தால் வாழ உரிமை இல்லை"

சமீபத்தில் அஸ்ஸாமின் அண்டை மாநிலமான  மிசோரம் உடனான எல்லைப் பிரச்னையில்  துப்பாக்கிச் சத்தம் ஒலித்தது.  தற்போது அஸ்ஸாமிற்கு உள்ளேயே ஒலிக்கிறது.  ஒரு வகையில் இரண்டுமே ஆக்கிரமிப்பு - வெளியேற்றம் என்ற பெயரில் தான் நடந்து கொண்டிருக்கின்றன.  கடந்த சில நாள்களுக்கு முன்பு (செப்டம்பர் 23, 2021)அசாம் அரசு `சட்டவிரோத ஆக்கிரமிப்பு நில மீட்பு' என்ற பெயரில் மேற்கொண்ட நடவடிக்கை காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் இடையேயான மோதலாக  மாறியது. இதில், 12-வயது சிறுவன் ஷேக் ஃபரீத் உட்பட பொதுமக்கள் இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.. மேலும், சுட்டுக்கொல்லப்பட்டவர்களில் மற்றொரு நபர்மீது, அரசு புகைப்படக்கலைஞர் ஏறிநின்று தாக்குதல் நடத்தும் வீடியோ ஒன்றும் சமூக வலைதளங்களில் பரவி பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பிஜாய் சங்கர் பனியா எனும் அந்த புகைப்படக்காரர் தற்போது கைது செய்யப்பட்டிருக்கிறார். கலவரம் நடந்திருக்கும் இந்த சூழலிலும்,`` ஆக்கிரமிப்பு அகற்றும் பணி தொடர்ந்து நடைபெறும்" என தெரிவித்திருக்கிறார் அசாம் முதல்வர்.

 

அசாமில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் பா.. ஆட்சி நடைபெற்றுவருகிறது. 2021 தேர்தலில் இரண்டாவது முறையாக பாஜக வெற்றிபெற்றதும், ஹிமந்தா பிஸ்வா சர்மா முதல்வரானார். அதனைத்தொடர்ந்து, அசாம் மாநிலத்தின் அரசு நிலங்கள், கோவில் மற்றும் மடத்தின் நிலங்கள் மீதான சட்டவிரோத ஆக்கிரமிப்புகள் அனைத்தும் உடனடியாக அகற்றப்படும் எனக்கூறி, மீட்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார். டராங் மாவட்டம் தால்பூரில் ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும் 2,800 ஏக்கர் சட்டவிரோத ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டு, அவை விவசாயத் திட்டங்களுக்கு பயன்படுத்தப்படும் என அறிவித்தார்.அவரே நேரடியாக அந்த பகுதிக்கு  வந்து பார்வையிட்டு ஆக்கிரமிப்புகளை அகற்ற உத்தவிட்டார். முதல்கட்டமாக, செப்.20 அன்று டராங் மாவட்டம் சிபாஜார் கிராமத்தில் குடியிருந்த 800 குடும்பங்கள், வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டு, அவர்கள் குடியிருந்த வீடுகள், வழிபாட்டுத் தலங்கள் அனைத்தும் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டன. இதன்மூலம், 1,487 ஏக்கர் (4,500 Bigha) நிலம் மீட்கப்பட்டிருப்பதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.இரண்டாம் கட்டமாக, செப்.23 அன்று சிபாஜார் கிராமத்தில் மீதமிருந்த ஆக்கிரமிப்பு நிலங்களை, மீட்டெடுக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் இறங்கியது. ஆனால், அரசாங்கத்தால் மாற்று இடங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையில், மக்கள் குடியிருந்த வீடுகளை விட்டு வெளியேற மறுத்திருக்கின்றனர். எச்சரிக்கை செய்த காவல்துறையினர் ஜே.சி.பி. மூலம் வீடுகளை இடிக்கும் பணியைத் தொடங்க, இதனால் ஆத்திரமடைந்த மக்கள் அதிகாரிகளை தடுத்துநிறுத்தி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். காவல்துறை தடியடி நடத்த, நிலைமை மோசமடைவதை உணர்ந்து மேலிட உத்தரவின்பேரில் துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களே தற்போது கைது செய்யப்படுகின்றனர். வழக்கம் போல குவஹாத்தி உயர் நீதி மன்ற ஒய்வு பெட்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

அஸ்ஸாமில் "சட்டவிரோத ஆக்கிரமிப்பு" என்ற பெயரில் சிறுபான்மை மக்கள் கொடூரமான அடக்குமுறை மூலம்  வெளியேற்றபடுகிறார்கள். சட்டத்திற்கு புறம்பாக நில ஆக்கிரமிப்பு என்பது வெளிப்படையாக சொல்லப்படும் தகவல். ஆனால் அஸ்ஸாமில் தொடர்ந்து சங்கிகளால் மக்களின் மூளைக்குள் ஏற்றப்படும் விஷயம் 'மற்றமை' என்ற கருத்து உருவாக்கமாகும். குறிப்பாக பங்களாதேஷ் பகுதியிலிருந்து இங்கு குடியேறிய (மூன்று நான்கு தலை முறைகளுக்கு முன்) சிறுபான்மை மக்கள் வெளியாட்கள்/அந்நியர்கள்/ வந்தேறிகள் என்று குற்றம் சாட்டப்பட்டு பல்வேறு வழிகளில் தங்கள் வாழ்வுரிமையை இழந்து நிற்கின்றனர். என்.ஆர்.சி. குடியுரிமை சட்டத்திருத்தம் ஆகியவை இவர்களுக்கு குடியுரிமை இருக்கிறது என்ற பிறகும் கூட,    இவர்களை வெளியேற்ற முடியாத சூழல்  எற்பட்டுள்ள நிலையில், அசாம் மாநில அரசாங்கம் `சட்டவிரோத ஆக்கிரமிப்பு' என்னும் பெயரில் இந்த மக்களை வெளியேற்றி வருகிறது.

2019ல் ப்ரம்மா கமிட்டி அறிக்கையின்படி, அசாம் அரசு,  நிலமற்ற உள்ளூர் வாசிகளுக்கு எப்படி நிலம் வழங்குவது, அந்த நிலத்தில் குடியிருக்கும் உள்ளூர்வாசிகள் அல்லாதவர்களை எப்படி வெளியேற்றுவது என்பது குறித்தும் நிலம் சம்பந்தமான ஒரு நிலக்கொள்கையை உருவாக்கியது. "உள்ளூர்வாசிகள்" யார் யார் என்பது குறித்து இதில் வரையறை செய்யப்படவில்லை. ஆனாலும் மதவெறி பாசிச பா. . . அரசு, தொடர்ந்து வங்காள பின்னணி கொண்ட சிறுபான்மை முஸ்லிம் மக்களை விரட்டிக்கொண்டிருக்கிறது. குடியுரிமை சட்டத்தின் படி அவர்களுக்கு குடியுரிமை வழங்கிய பின்பும் அவர்கள் வந்தேறிகளாக பாகுபடுத்தப்படுகின்றனர்.

அசாமில் டராங் மாவட்டத்தில் தால்பூரில் காவல் துறையால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்கள் அனைவரும் வங்காள பின்னணி கொண்ட இஸ்லாமிய மக்கள். இவர்கள் ஆற்றில் ஏற்பட்ட அரிப்பால் தற்போதைய இடத்தில் அரசால் குடியேற்றப்பட்டவர்கள். 1979, பிப்ரவரிக்கு முன் வழங்கப்பட்ட நில ஒப்படைப்பு ஆவணங்கள் இவர்களிடம் இருக்கின்றன. ஆனாலும் இவர்கள் இஸ்லாமியர்/ அந்நியர் என்ற அடிப்படையிலேயே கட்டாய வெளியேற்றத்திற்கு ஆளாக்கப்பட்டிருக்கின்றனர்.

அதே நேரத்தில் லைக்காவிலும், தின்சுக்கியாவிலும், டாடியாவிலும் நிலஅரிப்பினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உள்ளூர் வாசிகள் என்ற முத்திரை அளிக்கப்பட்டு, பா. . அரசு அவர்களுக்கு நிலமளிக்க  ஒப்புக்கொண்டுள்ளது.ஒரே பிரச்சனையால் பாதிக்கப்பட்ட மக்கள் மத அடிப்படையில் மத வெறி பாசிச அரசால் பாகுபடுத்தப்படுகின்றனர்.

1983 ஆம் ஆண்டு அஸ்ஸாமில் நெல்லி என்ற இடத்தில், வங்காள பின்னணி கொண்ட முஸ்லீம் மக்களுக்கு வாக்குரிமை அளித்து நாடாளுமன்ற இடைத்தேர்தல் நடத்த அன்றைய பிரதம மந்திரி இந்திரா காந்தி ஒப்புதல் அளித்ததால், இதற்கு எதிரான மத வெறி சக்திகள் 6 மணி நேரத்திற்குள் 13 கிராமங்களில் இருந்த கிட்டத்தட்ட 2000 முஸ்லீம் மக்களை படுகொலை செய்தனர். இதில் பெரும்பாலும் பெண்களும் குழந்தைகளும் அடங்குவர். இதை விசாரிப்பதற்காக திவாரி என்ற குடிமை பணி அதிகாரி நியமிக்கப்பட்டார். ஆனால் இவருடைய அறிக்கை இதுவரை வெளிச்சத்தை பார்க்கவில்லை. மதவெறி சக்திகள் திட்டமிட்டு உருவாகியிருக்கும் நாம்-அவர்கள் என்ற மற்றமை கருத்தாக்கம் ஆழமாக வேரூன்றியிருக்கிறது. தற்போது மத வெறி சக்திகளே ஆட்சியில் உள்ள போது திட்டமிட்ட தாக்குதல் நடக்கின்றது.

மதசார்பற்ற மக்கள் ஜனநாயக ஆட்சியில்தான் இப்பிரச்சனைக்கு முழுமையான தீர்வு காண முடியும்.

Search