இன்னும் எத்தன நாளைக்குத்தான் ட்ரெய்லர்?
மெயின் பிக்சர் எப்போ....?
எங்கும் சுதந்திரம் என்பதே பேச்சு என்று பாரதி பாடக் கேட்டோம். இன்று தமிழ்நாட்டில் எங்கும் முன்னாள் ஆளும் கட்சி பிரமுகர்கள் ஊழல்கள்தான் பேச்சாக இருக்கிறது.
கே.பி.பார்க் குடியிருப்பு கட்டுமானப் பணிகளில் நடந்துள்ள மோசடிகள் பற்றி ஆராய ஒரு குழு போடப்பட்டாகிவிட்டது. இன்னும் ஒரு குழு. நல்லது. இந்தக் குழு அதற்கு இடப்பட்ட பணியை செவ்வனே நிறைவேற்றட்டும். கட்டிடம் கட்டுவதில் மோசடி நடந்துள்ளது பார்த்த உடனேயே தெரிகிறது. இப்போது அதை அறிவியல்பூர்வமாக, அதிகாரபூர்வமாக நிறுவ வேண்டும். பின் அதற்குக் காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சில மாத காலம் ஆகலாம். ஏற்கனவே அதிகாரிகள் இரண்டு பேரை தற்காலிக பணி நீக்கமும் செய்தாகிவிட்டது. புதிய அரசின் நடவடிக்கைகள் இங்கு நின்றுவிட்டன.
அவ்வளவுதானா? தாங்கள் வாழ்ந்த இடங்களில் இருந்து அரசாங்கத்தால் பலவந்தமாக அப்புறப்படுத்தப்பட்டு, பலமற்ற அந்த கட்டிடங்களில் குடியமர்த்தப்பட்டு, ஆபத்துடன் தினமும் உறவாடிக் கொண்டிருக்கும் அந்த மக்கள் அடுத்து என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு ஏதாவது சொல்லப்பட்டதா? ஏற்கனவே அங்கு ஒரு பகுதியில் மின்இணைப்பு இல்லை, மின் தூக்கி இல்லை, குடிநீர் வசதி இல்லை என்று சொல்கிறார்கள். இதற்கெல்லாம், அந்த எளிய மக்களிடம் கணிசமான தொகை கேட்பதாகவும் சொல்லப்படுகிறது.
இப்போது அவர்கள் என்ன செய்ய வேண்டும்? தரமற்ற அந்த கட்டிடங்களுக்கு அதிகாரிகள் கேட்கும் தொகையை தர வேண்டுமா? அந்தத் தொகையை புரட்ட முடியவில்லையெனில் ஒன்பது மாடி கட்டிடத்தில் மின்தூக்கியின்றி வாழ்ந்து கொண்டு இருப்பதை தொடர வேண்டுமா? தண்ணீர் சுமக்க நேரும் பெண்கள், படிகட்டுகளில் ஏற நேரும் முதியவர்கள், நோயர்கள், கர்ப்பிணி பெண்கள், மாற்றுத் திறனாளிகள்.... என்ன வாழ்க்கை இது? இங்கு இவர்களுக்கு இன்னும் விடியல் வரவில்லை முதலமைச்சர் அவர்களே.
ஆட்சி அமைக்கப்பட்டதில் இருந்து ஒரே குழுக்களாக போடப்படுகின்றன. கடந்த ஆட்சி காலத்தில் மக்கள் சார்பு கருத்துகளை தெரிவித் தவர்கள் அந்தக் குழுக்களில் இருக்கிறார்கள். அந்தக் குழுக்களுக்கு மக்கள் பணத்தில் இருந்து ஊதியம், இன்ன பிற சலுகைகள் தரப்படுகின்றன. என்ன செய்கிறார்கள்? கே.பி.பார்க் குடியிருப்பு பிரச்சனையில் இந்த வெவ்வேறு குழுக்களிடம் ஆலோசனைகள் கேட்கப்பட்டதா? அல்லது இன்னும் ஒரு குழு அமைக்க ஆலோசனை சொன்னார்களா?
பேரிடர் காலத்து துரித நடவடிக்கைகள் இந்த அரசாங்கத்தின் அடையாளமாக காணப்பட்டன. அரும்பாக்கத்திலிருந்து அகற்றப்பட்டு கே.பி.பார்க் குடியிருப்புக்கு மாற்றப்பட்டவர்கள், ஏற்கனவே அங்கு குடியிருப்பவர்கள் சந்திப்பதும் பேரிடரை ஒத்ததுதான். இங்கும் துரிதமான நடவடிக்கைகள் தேவை. உடனடியாக, அந்த மக்களுக்கு குடியிருப்புகளுக்கு மாற்று ஏற்பாடுகள் தேவை. கவுரவமான குடியிருப்புகள் தேவை. அவர்கள் பிழைப்புக்குச் சென்று வர வேண்டும். குழந்தைகளுக்கு கல்வி நிலையங்கள் அருகில் இருக்க வேண்டும். மருத்துவ வசதிகள் எட்டும் தூரத்தில் இருக்க வேண்டும். அவர்களுக்கும் கேளிக்கைகளுக்கான உரிமைகள் உண்டு. இவை எல்லாம் விடியல் அரசின் கவனத்துக்கு, அந்த அரசு அமைத்த குழுக்களின் கவனத்துக்கு இதற்குள் வந்திருக்க வேண்டும்.
அப்படி நடக்கவில்லை என்பது ஏமாற்றம் தருகிறது. சென்னையின் மய்யத்தில் 1920 வீடுகளில் குடியமர்த்தப்பட்ட 1920 குடும்பங்களின் பிரச்சனை தள்ளிப் போடக்கூடியது அல்லவே. சட்டமன்றத்திலும் பொது வெளியிலும் சத்தமாக பேசப்பட்டும், அரசின் கவனம் போதுமான அளவுக்கு ஈர்க்கப்பட்ட பின்னரும் கே.பி.பார்க் மக்களின் வாழ்க்கை தரத்தில் எந்த மாற்றமும் நடக்கவில்லை. அவர்கள் எப்போதும்போல் ஒன்பது மாடிகள் ஏறுகிறார்கள். மின் வசதி, குடிநீர் வசதி இல்லாமல் தவிக்கிறார்கள்.
உலக வங்கியின் உதவியுடனான, அதன் ஆலோசனையின்படியான திட்டம், முந்தைய அரசின் கொள்கை மற்றும் செயல்பாட்டு குளறுபடி என்றெல்லாம் வியாக்கியானங்கள் சொல்லிக் கொண்டிருப்பதால் மக்கள் படும் துன்பங்கள் மட்டுப்பட்டுவிடாது. இப்போது, நீங்கள் என்ன செய்யப் போகிறீர்கள்?
மாற்று இடம் ஏற்பாடு செய்வது அந்த அளவுக்கு கடினமான செயலாக இருக்கும் என தெரியவில்லை. சென்னையின் மய்யமான இடங்களில், அரசுக்குச் சொந்தமான கட்டிடங்கள் காலியாக உள்ளன. புதிய சட்டமன்ற கட்டிடம் பத்தாண்டுகளாகியும் பயன்பாட்டுக்கு வராமல் அப்படியேதான் இருக்கிறது. சட்டமன்ற கூட்டத் தொடர் கலைவாணர் அரங்கில் நடக்கிறது என்றால், சட்டமன்ற கட்டிடம் காலியாகத்தான் இருக்கிறது. அந்தக் கட்டிடத்தை ஒட்டி அரசினர் விருந்தினர் மாளிகை வரை இருக்கும் பரந்த வெளியில் பெரிய குடியிருப்புகள் கட்ட முடியும். பசுமை வழிச் சாலையில் அமைச்சர்கள் ஒவ்வொருவரும் பெரிய பெரிய மாளிகை களில் குடும்பங்களுடன் வசிக்கிறார்கள். மாட்டு கொட்டகை முதல் தனியாக எல்லா வசதிகளும் அவர்கள் செய்து கொள்கிறார்கள். ஒரு குடும்பம் வசிக்க இந்த அளவுக்கு வசதிகள் இருக்கும்போது, வாக்களித்த மக்கள் ஏன் ஆபத்து என்று தெரிந்தும் அந்த கட்டிடங்களில் வசிக்க வேண்டும்? அண்ணாநகரில் இருக்கும் அம்மா மண்டபத்தில் பணக்காரர்கள் மட்டும்தான் வந்து செல்ல வேண்டுமா? அங்கும் எல்லா வசதிகளும் உள்ளன. இன்னும் இது போன்ற கட்டிடங்கள், பூங்காக்கள், அரங்கங்கள் சென்னையில் பயன்படுத்தப்படாமல் இருக்கின்றன.
இப்போது அமைக்கப்பட்டுள்ள குழு கே.பி.பார்க் குடியிருப்பை தட்டிப் பார்த்து தரத்தை நிர்ணயிப்பது ஒரு புறம் நடக்கட்டும். கோவில் நிலங்கள் பற்றிய அறிக்கை வெளியிடப்படுவதுபோல், சென்னையின் மய்யமான இடங்களில் பயன்படுத்தப்படாமல் இருக்கிற கட்டிடங் கள், இருப்பிடங்கள் பற்றிய தகவல்களும் மக்கள் அறிய வெளியிடப்பட்டு உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு அந்த இடங்கள் இந்த மக்களுக்கு ஒதுக்கப்பட வேண்டும். மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் நிலத்தை ஆக்கிரமித்து ஏதோ கிளப், மனமகிழ்மன்றம் செயல்படுவதாகக் கூட செய்திகள் வந்தன. பணக்காரர்கள் மனமகிழ்வும் பொழுதுபோக்கும் எளிய மக்களுக்கான இருப்பிடத்தை விட முக்கியமானவை அல்ல.
குழுக்கள் எல்லாம் ஆலோசனைகள், மாற்று வழிகளும் சொல்லட்டும்; நகர்ப்புறங்களில் நூறு நாட்கள் வேலைத் திட்டம் பற்றி பேசப்படுகிறது. ரூ.100 கோடி ஒதுக்கப்பட்டிருக்கிறது. நகர்ப்புற வறிய மக்கள் வேலையின்றி, வருமானமின்றி, வாழ்க்கையின்றி வாடிப் போயிருக்கிறார்கள். வாழுமிடங்களில் இருந்து அகற்றப்பட்ட மக்களுக்கு அந்தச் சூழலிலேயே இருப்பிடங்கள் உருவாக்க இந்தத் திட்டம் பயன்படட்டும். வேலை வாய்ப்பற்றவர்களை அந்த கட்டுமானப் பணிகளில் அரசு ஈடுபடுத்த வேண்டும். அவர்களுக்கு வேலையும், குடியிருப்பும் ஒரு சேர உறுதிப்படுத்தப்படும்.
முகலிவாக்கம் கட்டிடம் இடிந்து விழுந்தபோது, கட்டுமானப் பணிகள் நிறைவு பெற வில்லை. கட்டுமானத் தொழிலாளர்கள் உயிரிழந்தார்கள். இப்போது இடிந்து விழும் நிலையில் இருக்கும் கே.பி.பார்க் குடியிருப்பில் பலநூறு குடும்பங்கள் குடியிருக்கிறார்கள். கட்டிடம் தரமற்றது என்று தெரிந்த பிறகும் அவர்களை அங்கேயே குடியிருக்க பார்த்திருப்பது அறமற்ற அணுகுமுறை.
கே.பி.பார்க் குடியிருப்பில் உள்ள குடும்பங்கள், அவர்களின் வாழ்வாதாரத்துக்கு, கல்விக்கு, மருத்துவத்துக்கு எந்த பாதிப்பும் இல்லாமல், அடிப்படை வசதிகளுடனான பாதுகாப்பான கட்டிடங்களுக்கு தற்காலிகமாக மாற்றப்பட வேண்டும். அவர்களுக்கு நகருக்குள் தரமான குடியிருப்புகள் போர்க்கால அடிப்படையில் கட்டப்பட வேண்டும். இந்த அரசின் துரித செயல்பாட்டை கொரோனா கட்டுப்பாட்டில் நாம் பார்த்திருக்கிறோம். எனவே வறிய மக்கள் வாழ்வதற்கு குடியிருப்பு உருவாக்கும் நடவடிக்கையையும் இந்த அரசால் மேற்கொள்ள முடியும் என்பது தெளிவு.
இனியும் ட்ரெய்லருடன் நின்றுவிட முடியாது. மெயின் பிக்சரைப் பார்க்க தமிழ்நாட்டு மக்கள் ஆர்வமாக இருக்கிறார்கள். கே.பி.பார்க் மக்களின் உரிமை காப்பது மெயின் பிக்சரின் முதல் காட்சியாக இருக்கட்டும்.