COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 5, 2021

ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சி


உமாமகேஸ்வரன்


மார்க்ஸ் வரலாற்று நிகழ்வுகள் முதலில் துக்ககரமானதாகவும் மீண்டும் அதுவே கேலிக்கூத்தாக முடிந்து விடுகின்றது என்று கூறினார். தற்போதைய ஆப்கானிஸ்தான் நிகழ்வுகள் மீண்டும் அதை மிகச்சரியாக மெய்ப்பிக்கின்றன.


ஆப்கானிஸ்தான் வரலாறு முழுவதும் தொடர்ந்து பல்வேறு பேரரசுகளின் வேட்டைக் காடானது.  80களில் சோவியத் படையெடுப்பு, அதைத் தொடர்ந்து பாகிஸ்தான் உதவியுடன் அய்க்கிய அமெரிக்காவின் ஆப்கான் போர், சோவியத் படை வெளியேற்றம், அதன் காரணமாக மக்கள் ஜனநாயக கட்சியால் தலைமை தாங்கப்பட்ட முகமது நஜிபுல்லா அரசு 1992ல் வீழ்ந்தது தொடர்ந்து பல பத்தாண்டுகளாக நடந்து வந்த போர்களால் இராணுவமயமாக்கப் பட்ட ஆப்கான் சமூகம் மேலதிகமாக ஆயுதம் தாங்கிய காவலர்கள், தனியார் பாதுகாவலர்கள், வெளிப்படையாக சுற்றித்திரியும் ஆயுதமேந்திய குடிமக்கள், குழுக்கள் ஆகியவற்றால் நிரம்பி வழிந்தது. மரபு சார்ந்த அதிகார அமைப்புகளான மதகுருமார்கள், சமுதாயத் தலைவர்கள், அறிவாளி பிரிவினர் மற்றும் ராணுவம் ஆகியவற்றிடமிருந்து அதிகாரம் சக்திவாய்ந்த போராளிகளின் கைகளுக்கு மாறியது. ஆயுதக் குழுக்கள் இடையேயான மோதல்கள் பாலியல் வன்புணர்ச்சி கொலைகள் மற்றும் பணம் பறிப்பு ஆகியவற்றால் அராஜகமான சூழல் நிலவியது. பல்வேறு தலைவர்களுக்கு இடையேயான சமாதான முயற்சிகள் கூட்டணிகள் ஆகியவை தோல்வியில் முடிந்தன. அதன்பின் 1994 செப்டம்பரில் ஒரு புதிய இயக்கம் பாகிஸ்தானில் மதரஸா இஸ்லாமிய பள்ளி மாணவர்களால் உருவாக்கப்பட்டது இந்த ஆயுதமேந்திய மாணவர் இயக்கம். தாலிப் என்றால் மாணவர் என்று அர்த்தம், அதுதான் தாலிபான் என்று அழைக்கப்பட்டது.
இந்த இயக்கம் பாகிஸ்தானின் ராணுவ உதவியுடன் அந்த வருடமே காந்தகார் நகரை கைப்பற்றி இறுதியாக ரபாணி அரசை காபூலில் இருந்து 1996ல் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றிய தாலிபான்கள் இஸ்லாமிய ஷரியத் சட்டத்தை நடைமுறைப்படுத்தி ஆப்கான் மக்களை, குறிப்பாக பெண்களை கொடூரமாக நடத்தியது. வடக்கு கூட்டணி என்று அழைக்கப்பட்ட பஞ்சஷீல பள்ளத்தாக்கு தலைவர்கள் தலிபான்களுடன் போரிட்டபோதிலும் தாலிபான்கள் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் தளபதி பர்வேஸ் முஷாரப் உதவியுடன் வடக்கு கூட்டணித் தலைவர் அகமது ஷா மசுத் பஞ்ச்ஷீல் பள்ளத்தாக்கில் கொலை செய்யப்பட்டார். 1990 க்கும்  2001க்கும் இடையே சுமார் நான்கு லட்சம் ஆப்கானியர்கள் உள்நாட்டுப் போரில் கொல்லப்பட்டனர். 1996 இருந்து 2001 வரை தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் ஆட்சி அதிகாரத்தில் இருந்தனர்.
9/11 நிகழ்வுகள் (இரட்டை கோபுர தாக்குதல்) மற்றும் அய்க்கிய அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பென்டகன் தாக்குதல் அதை நிகழ்த்திய அல்கொய்தா மற்றும் அந்த அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடனை அழித்து ஒழிக்கவும் பயங்கரவாதத்தை வேரறுப்பதற்காகவும் ஜனநாயகத்தை ஆப்கானிஸ்தானில் ஏற்ப டுத்துவதற்காகவும் அத்துடன் போர் புரிய வேண்டிய கட்டாயம் உள்ளதாக கூறி அய்க்கிய அமெரிக்கப் படைகள் அக்டோபர் 2001ல் நுழைந்தன. டிசம்பர் 2001 தாலிபான் அரசு தூக்கி எறியப்பட்ட பின் ஹமீத் கர்சாய் தலைமையில் இடைக்கால அரசு ஏற்படுத்தப்பட்டது. அய்க்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் சர்வதேச பாதுகாப்பு உதவி கொண்டு உருவாக்கப்பட்டு நிர்வாகத்திற்கு அடிப்படை பாதுகாப்பு அளிக்கப்பட்டு வந்தது 20 ஆண்டு உள்நாட்டுப் போரி னால் ஏற்பட்ட பஞ்சத்தினால் பெரும்பான்மையான ஆப்கன் மக்கள் பசி பட்டினியால் சொல்ல முடியாத துன்பத்தை அனுபவித்தனர். பல வெளிநாட்டினர் பசியால் வாடும் மக்களுக்கு நிவாரணம் வழங்கவும் போரால் சீர்குலைந்த ஆப்கனை மறுகட்டமைப்பு செய்யும் செய்யவும் நிதி உதவி செய்தனர். இதற்கிடையே தாலிபான் படையினர் பாகிஸ்தானில் சென்று மறு அணிச்சேர்க்கை செய்யத் துவங்கினர். சர்வதேச நாடுகளின் உதவியுடன் கர்சாய் அரசு பொருளாதாரம், சுகாதாரம், கல்வி, போக்குவரத்து மற்றும் விவசாயம் ஆகியவற்றை முன்னேற்ற நடவடிக்கை எடுத்து வந்தது. 2014 செப்டம்பர் மாதத்தில் தேர்தல் மூலமாக ஆட்சி மாற்றம் நடந்து ஆப்கான் வரலாற்றில் முதல் முறையாக ஜனநாயக முறைப்படி அதிகார மாற்றம் ஏற்பட்டு அஷ்ரப் கனி அதிபரானார். இதற்கிடையில் தாலிபான் மற்றும் இதர குழுவினருடனான போர் ஒருபக்கம் நடந்து கொண்டிருந்தது. அய்க்கிய அமெரிக்க உள்நாட்டு நெருக்கடி 2500 மேற்பட்ட ராணுவ வீரர்களை இந்த இருபது வருடத்தில் இழந்தது ஆப்கான் போருக்காக சுமார் 2 லட்சம் கோடி அமெரிக்க டாலர்களை செலவிட்டது. சர்வதேச சூழ்நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் ஆகியவை காரணமாக தனது படைகளை முற்றிலுமாக விலக்கிக் கொள்ள முடிவெடுத்தது பிப்ரவரி 2020ல் அமெரிக்கா டிரம்ப் நிர்வாகத்திற்கும் தாலிபான்களுக்கும் இடையே பேச்சு வார்த்தை நடந்து தோஹாவில் அமெரிக்கப் படை விலக்கல் ஒப்பந்தம் 29/2/20 அன்று கையெழுத்தானது. தாலிபான்கள் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் அல்கொய்தாவையோ அல்லது வேறு எந்த ஒரு பயங்கரவாத குழுவையோ இயங்க அனுமதிக்காது என்கின்ற உறுதிமொழியின் அடிப்படையில் ஒப்பந்தம் கையெழுத்தானது. அய்க்கிய அமெரிக்காவுக்கும் தாலிபான்களுக்கும் இடையேயான இந்த ஒப்பந்தம் ஆப்கானின் வருங்காலத்தை தீர்மானிக்கும். தொடர் பேச்சுவார்த்தைக்கு முன் நிபந்தனையாக 5000 தாலிபான்கள் 1000 ஆப்கான் கைதிகளுக்கு மாற்றாக அரசு விடுவிக்க வேண்டும் என்கின்ற தாலிபான் கோரிக்கையையும் அய்க்கிய அமெரிக்கா ஏற்றுக் கொண்டது. பின்னர் கைதிகள் பரிமாற்றமும் நடைபெறவில்லை பேச்சு வார்த்தை நின்று போனது வேறு விஷயம்.
இந்த ஒப்பந்தத்தின்படி 6 மாதத்திற்குள் அதாவது 31/8/2021க்குள் அய்க்கிய அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் முற்றிலுமாக திரும்பப்பெற்றுக் கொள்வது என்றும் எல்லா குழுக்களையும் உள்ளடக்கிய ஒரு இடைக்கால புதிய அரசு ஒன்று தாலிபான்கள் தலைமையில் ஆப்கானிஸ்தானில் ஏற்படுத்துவது என்றும் முடிவானது. இந்த முடிவின் விளைவாக நேட்டோ படை விலக்கல் மே 1ஆம் தேதியிலிருந்து துவங்கும் என அதன் தலைவர் திரு.ஜென்ட்ஸ் ஸ்டோல்டன்பெர்க் அறிவித்த உடனேயே அரசு படைகள் வலுவிழந்துவிட்டதும் தாலிபான்கள் அரசு படைகளுக்கு எதிராக தாக்குதல் நடப்பதும் துவங்கிவிட்டது. வேகமாக முன்னேறிய தாலிபான் படைகளின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் அரசு படைகள் நிலை குலைந்துவிட்டது. அய்க்கிய அமெரிக்க உளவுப் பிரிவு அறிக்கைப்படி நேட்டோ படை அதனுடைய படைகளை முற்றிலுமாகத் திரும்பப் பெற்றுக் கொண்ட ஆறு மாதத்தில் ஆப்கான் அரசு கவிழ்ந்து விடும் என்று கணித்து இருந்தது. ஆனால் 16/8/2021ல் தாலிபான் மறுபடியும் மிகப் பெரும்பான்மையான ஆப்கான் பிரதேசத்தை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து ஆப்கான் தலைநகரமான காபூலை பிடித்து விட்டது. ஆப்கான்  குடிமக்கள், அரசு உயர் அதிகாரிகள், வெளிநாட்டுத் தூதரக அதிகாரிகள் வெளியேற்றப்பட் டனர்.  ஆப்கான் அதிபர் அஷ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடி விட்டார்.
இன்று ஆப்கானிஸ்தானத்தில் ஒரு குழப்ப மான சூழ்நிலை நிலவுகின்றது. சர்வதேச நாடுகள் அங்கு அரசை அங்கீகரிக்கின்ற நிலைமை இல்லை. அய்நா சபை நிலைமையை  வேடிக்கை பார்க்கிறது என்று சொல்ல முடியாவிட்டாலும் கையறு நிலையில் இருக்கின்றது. ஆப்கான் நோக்கர்கள், முன்னாள் இன்னாள் ராணுவ தளபதிகள், பிரபல சர்வதேச ஊடகவியலாளர்கள், அனுபவமிக்க ராணுவவியலாளர்கள், பன்னாட்டு அரசியல் நிபுணர்கள், உயர் தூதரக அறிஞர்கள் ஆகிய எல்லோருடைய கணிப்புகளையும் மீறி நிகழ்ச்சிகள் அசுரவேகத்தில் அரங் கேறிவிட்டன. எதுவுமே நிகழாத பல ஆண்டுகள் இருக்கின்றன அதேசமயம், சில வாரங்களிலேயே பல பத்தாண்டுகள் நிகழ்கின்றன என்ற தோழர் லெனின் கூற்று ஆப்கானுக்கு முற்றிலும் பொருந்தும். அமெரிக்க ஏகாதிபத்தியம் தன்னுடைய சொந்த நலன்களுக்காக ஆப்கானிஸ்தானில் நுழைந்து 2001ல் தாலிபான் களை விரட்டியடித்து விட்டு ஒரு புதிய அரசை கர்சாய் தலைமையில் நிறுவியது. ஜனநாயகம், மனித உரிமை, ஆப்கான் மக்கள் சுதந்திரம் ஆகிய மாண்புகளை பற்றிப் பேசிய அமெரிக்க ஏகாதிபத்தியம் தன் நிகழ்ச்சி நிரலை நிறை வேற்றிய 20 ஆண்டுகளுக்குப் பின் தோல்வியுற்று கடும் நெருக்கடிக்கு உள்ளாகும் போது தாலிபான்கள் உடன் ஒப்பந்தம் செய்து கொண்டு நிறுவப்பட்ட ஆப்கன் அரசின் ஆலோசனை மற்றும் கோரிக்கைகளைப் புறந்தள்ளிவிட்டு தாலிபான்களை மீண்டும் அரசு அமைப்பதற்கான எல்லா ஏற்பாட்டையும் செய்து இருக்கிறது வான்வழித் தாக்குதல் மூலமாக தாலிபான்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த அய்க்கிய அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப் படை - தாலிபான் தாக்குதல் நடந்த மூன்று நிமிடத்திற்குள் எதிர் தாக்குதல் நடத்தி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வரும் - வெளியேறும் போது 3 லட்சம் படை வீரர்களை கொண்ட ஆப்கன் தேசிய அரசுக்கு எந்தவித நவீன தாக்குதல் ரக ஹெலிகாப்டர்கள், சிறகுகள் பொருந்திய ராணுவ விமானங்கள் மற்றும் எதிரியை எதிர்கொள்ள தேவையான ராணுவ உபகரணங்கள் எதையும் தர மறுத்துவிட்டனர். ஆப்கன் அரசுப் படைக்கு உதவி அளிப்பதற்காக அய்க்கிய அமெரிக்காவின் கேந்திரமான பாக்ரம் உள்ளிட்ட சில விமான தளங்கள் மற்றும் விமான படை அணியினரை விட்டுச் செல்லுமாறு கூறிய மாற்று யோசனையை கூட பரிசீலிக்க தயாரில்லை.
தாலிபான் தலைமையிலான புதிய அரசு சர்வதேச அங்கீகாரம் பெற வேண்டிய நெருக்கடியில் உள்ளது. தலிபான்களுடன் உலக நாடுகள் ஒரு சட்டபூர்வமான உறவை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்கிற சூழல் உருவாக்கப்பட வேண்டியுள்ளது. அதற்கு தொண்ணூறுகளில் இருந்ததற்கு மாறாக ஒரு புதிய தோற்றம் தேவைப்படுகிறது. அதனால்தான் தாலிபான்கள் பெண்கள் சுதந்திரமாக பணியாற் றுவது மற்றும் கல்வி பெறுவது முடியும் என்றும் அதற்கு சில அடிப்படையான ஷரியத் விதிமுறைகளை பின்பற்றினால் போதுமானது என் றும் சில சமிக்கைகளை அனுப்புகிறார்கள். ஊடகங்களும் சுதந்திரமாக இயங்க தாலிபான்கள் தங்கள் போராளிகளை ஊடக அலுவலகங்களுக்குப் பக்கத்தில் இருப்பதை அப்புறப்படுத்தும் என்கிறார்கள். இருந்த போதும் தாலிபான்களின் இதுவரையிலான நடத்தை நம்பிக்கையை ஏற்படுத்துவதாக இல்லை. தொண்ணூறுகளில் இருந்த அவர்களுடைய ஷரியத் சட்டம் அரசு நிர்வாகம் வெளிநாடுகள் அங்கீகரிக்கவும் பணம் மற்ற இதர உதவிகள் கிடைப் பதற்கும் உதவாது. தாலிபான்கள் பழையவர்களாக இருக்கலாம், ஆனால் சாதாரண குடி மக்கள் தங்களுக்கு பணியாற்றுகின்ற ஒரு அரசு கட்டமைப்பு இருக்க வேண்டும் என்று விரும் புவது முற்றிலும் புதிய விஷயம். தாலிபான்கள் போதைப் பொருட்கள் மூலம் கிடைக்கும் பணத்தை மட்டுமே பயன்படுத்திக் கொண்டு உயிர் பிழைத்திருக்க முடியாது. மக்களின் அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்ய வேண்டும், அதற்கு சர்வதேச ஒத்துழைப்பு மிகவும் அவசியம். காபூல் ஆட்சியாளர்கள் அவர்கள் நடந்து கொள்கின்ற விதத்தை பொறுத்தும் உலக அரங்கில் அவர்களின் உறவும்தான் அவருடைய வருங்காலத்திசை வழியை தீர்மானிக்கும். இத்தகைய சூழலில் கள யதார்த்தத்தை கருத்தில் கொண்டு ஆப்கான் அரசு தலிபான்களுடன் போர் புரிவது நாட்டிற்கு பெரும் சேதத்தையும், ஆயிரக்கணக்கான சாதாரண குடிமக்கள் உயிர் இழப்பார்கள் என்பதையும் கருதி மீண்டும் ஒரு உள் நாட்டுப் போரை தவிர்த்திருப்பது சரியான முடிவாகவே தோன்றுகிறது. இன்று பந்து தாலிபான்களின் ஆடுகளத்தில் இருக்கிறது. சர்வதேச சமூகம் ஏற்றுக் கொள்ளக்கூடிய குறைந்தபட்ச உத்திரவாதம் இல்லை எனில் தாலிபான் அரசும் முன்னையோ அல்லது பின்னையோ  வீழ்வது தவிர்க்க முடியாது.
ஆப்கான் மக்கள் ஒரு கடினமான மற்றும் குழப்பமான காலகட்டத்தில் இருக்கிறார்கள். ஆப்கானிஸ்தான் மத்திய ஆசியாவிற்கும் தெற் காசியாவிற்கும் இடையே உள்ள முற்றிலும் நிலத்தால் சூழப்பட்ட ஒரு நாடு. கேந்திர முக்கி யத்துவம் வாய்ந்த பூகோள அமைப்பில் அமைந்திருக்கிறது. அதன் நிலப்பரப்பு ஈரானை தாண்டி அய்ரோப்பா வரை நீள்கின்றது. எனவே ஆப்கான் உள்நாட்டுப் பிரச்சனை ஆசிய அய்ரோப்பிய நாடுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தெற்காசிய பிராந்தியத்தில் இது பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இருந்தபோதும் ஆப்கானிஸ்தானும் அங்கம் வகிக்கும் தெற்காசிய நாடுகளின் பிராந்தியக் கூட்டமைப்பான சார்க்லிருந்து இதுவரை தாலிபான்கள் அரசு அமைப்பது பற்றிய ஆப்கான் சூழ்நிலை பற்றி ஒரு வார்த்தை கூட இல்லை. மற்ற நாடுகள் குறிப்பாக சீனா, ரஷ்யா, ஈரான் ஆகியவை தாலிபான் அரசுக்கு சட்டபூர்வ அங்கீகாரம் வழங்குவது குறித்து சில வரையறைகளை முன்வைத்துள்ளன.  ஐநா பாதுகாப்புச்சபையில்  இது தொடர்பான பிரச்சனைகள் விவாதிக்கப்பட உள்ளன. இந்த கடினமான இருண்ட சூழ்நிலையிலும் கருமேகங்களுக்கு இடையே தோன்றும் ஒளிக்கீற்று போல் சில விஷயங்களை பார்க்க முடிகிறது. சர்வதேச நாடுகள் ஆப்கான் புதிய அரசு தாலிபான் தலைமையில் அமைவதற்கான நிகழ்ச்சிப் போக்கில் சில குறைந்தபட்ச அடிப்படை உத்தரவாதங்களை ஏற்படுத்த முயற்சிக்கின்றன. கடந்த 20 ஆண்டுகளில் ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள பாரதூரமான மாற்றங்களை நாம் கவனிக்க வேண்டியுள்ளது தகவல் தொடர்பு போக்குவரத்து இருப்புப் பாதைகள், சாலை வசதிகள், சேவை துறை வளர்ச்சி ஆகிய வற்றின் காரணமாக புதிய வர்க்கங்கள் தோன் றியுள்ளன. அறிவாளி பிரிவினர், தொழில்நுட்ப பொறியாளர்கள், ஊடகத்துறை, கல்வி வளர்ச்சியின் காரணமாக புதிய சிந்தனைகள், நவீன உலகத்தின் தாக்கம் சமூகத்தில் குறிப்பாக நகர்புறத்தில் ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயகம், சுதந்திரம் பெண்கள் கல்வி மற்றும் வேலைவாய்ப்பு, அடிப்படை மனித உரிமைகள் பற்றிய விழிப்புணர்வு ஆகிய முற்போக்கு சிந்தனைகள் வேர் விட ஆரம்பித்திருக்கின்றன. எனவேதான் தாலிபான்கள் இவைகளை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு இருக்கிறார்கள்.
புரட்சியை ஏற்றுமதி செய்ய முடியாது, ஆப்கான் மக்கள்தான் மாற்றங்களை நிகழ்த்த வேண்டும். அந்நிய ஏகாதிபத்திய தலையீட்டினால் மட்டும் மாற்றங்கள் நிகழாது. ஆப்கான் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகள் சுதந்திரம் பெண்கள் உரிமை ஜனநாயகம் ஆகியவற்றை அவர்கள் போராடித்தான் பெற வேண்டும். கடினமான பாதை என்றாலும்கூட கடந்துதான் போகவேண்டும். அதற்கான அகநிலை சக்திகளும் புறநிலை யதார்த்தங்களும் நம்பிக்கை அளிக்கின்றன.
ஆப்கானிஸ்தான் பேரரசுகளின் சவக்குழி என்கின்ற வரலாற்று உண்மை அய்க்கிய அமெரிக்கா மற்றும் நேட்டோ கூட்டுப் படைகளின் வெளியேற்றம் மீண்டுமொருமுறை நிரூபிக்கப்பட்டிருக்கிறது. அடிப்படை மதவாதம் மற்றும் எதேச்சதிகாரம் ஆகியவை ஒரு தேசத்தை சீரழித்து சின்னாபின்னமாக்கும் என்பதை ஆப்கான் நிகழ்வுகள் இந்தியாவுக்கும் மற்ற மத அடிப்படையில்  இயங்கும் நாடுகளுக்கு  ஏற்படுத்தும் என்பதை மக்களுக்கு உணர்த்திருக்கிறது. ஆப்கானிஸ்தான் இன்று பூகோளரீதியாக மட்டுமல்லாமல் அரசியல்ரீதியாகவும் குறுக்குச் சாலையில் நின்று கொண்டு இருக்கிறது, சர்வதேச சமூகம் தன் பின்னால் நிற்கும் என்ற நம்பிக்கையுடன்!

Search