COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 5, 2021

டாக்டர் அம்பேத்கர் பக்கம்


பாகிஸ்தான் அல்லது இந்தியப் பிரிவினை


முன்னுரை (முதல் பதிப்பு, டிசம்பர் 1940)
 

பக்கம் 18 - 25, தொகுதி 15
பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு


......இந்தியா முழுவதிலும் மேலாதிக்கம் செலுத்தக்கூடிய ஒரே மத்திய அரசாங்கம் அமைக்கப்படுவதை எதிர்ப்பதே பாகிஸ்தான் கோரிக்கையின் சத்தும் சாரம்சமும் எனலாம். பாகிஸ்தானுக்கு ஒன்றும், இந்துஸ்தானுக்கு ஒன்றுமாக இரண்டு மத்திய அரசாங்கங்கள் அமைக்கப்பட  வேண்டுமென்று  முஸ்லீம்கள் கோருகின்றனர்.

இது இந்துக்கள் கருத்திற் கொள்ள வேண்டிய இரண்டாவது முக்கிய விஷயம். புதிய அரசியலமைப்புச் சட்டத்திற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டு, அதற்கான அடித்தளம் இடப்படுவதற்கு முன்னதாக பாகிஸ்தான் பிரச்சனை தீர்க்கப்பட வேண்டும் என்பதே இதன் பொருள். இந்தியாவுக்கு ஒரே மத்திய அரசாங்கம் மட்டுமே இருக்க வேண்டுமாயின் அதற்கான அரசியல் அமைப்பு சட்டத்தின் உருவரை ஒருவிதமானதாக இருக்கும்; ஆனால் இந்துஸ்தானுக்கு ஒரு மத்திய அரசாங்கமும் பாகிஸ்தானுக்கு ஒரு மத்திய அரசாங்கமும் என்றிருக்க வேண்டுமாயின் அப்போது அதற்கான அரசியலமைப்புச் சட்டத்தின் உருவரை வேறுபட்டதாக இருக்கும். ஆதலால் இது விஷயத்தில் முடிவை ஒத்திப்போடுவது பெரிதும் விவேகமற்றதாகும். ஒன்று பாகிஸ்தானை உருவாக்கும் திட்டம் கைவிடப்பட்டு, பரஸ்பர உடன்பாட்டின் பேரில் மற்றொரு திட்டம் வகுக்கப்பட வேண்டும் அல்லது இது குறித்து ஒரு திட்டவட்டமான முடிவுக்கு வர வேண்டும். அவ்வாறில்லாமல், பாகிஸ்தான் கோரிக்கையை இப்போதைக்குக் குழிதோண்டிப் புதைத்துவிட்டால், மீண்டும் அது ஒருபோதும் தலைதூக்காது என்று நினைப்பது மடமையிலும் மடமையாகும். கடைந்தெடுத்த அறிவீனமாகும். பாகிஸ்தானைப் புதைப்பது என்பதும் பாகிஸ்தான் பூதத்தைப் புதைப்பது என்பதும் ஒன்றல்ல. இந்தியாவுக்கு ஒரே ஒரு மத்திய அரசாங்கம் என்னும் திட்டத்தைக் கடுமையாக எதிர்ப்பதே பாகிஸ்தான் கோரிக்கையின் ஆதார அடித்தளமாகும்; இந்த வக்கிரமான எதிர்ப்பு  நீடிக்கும் வரை பாகிஸ்தான் பூதமும் இருந்து வரவே செய்யும்; இந்தியாவின் அரசியல் எதிர்காலத்தின்மீது அது தனது தீய கரும்நிழலைப் பரப்பி வரவே செய்யும். இதில் எனக்கு எள்ளளவும் ஐயமில்லை. இப்போதைக்கு ஏதேனும் ஒரு தற்காலிக ஏற்பாடு செய்துகொண்டு, பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணுவதைப் பின்னொரு நாளைக்கு ஒத்திப்போடுவது அறிவுடைமையாகாது. இவ்வாறு செய்வது  நோயைக் குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை மட்டும் அகற்றுவதற்கு ஒப்பாகும். இத்தகைய நிலைமைகளில் பல சந்தர்ப்பங்களில் என்ன நடைபெறுகிறது? நோய் தற்காலிகமாக சற்று தணிந்து, மீண்டும் கொடிய ரூபத்தில் அது தலைதூக்குவதைப் பார்க்கிறோம்.
இந்தியாவுக்கு ஒரே ஒரு மத்திய அரசாங்கம்தான் இருக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்பட்டுவிட்ட விஷயமல்ல என்று நான் உறுதியாக நம்புகிறேன். அது தற்போது சர்ச்சையிலுள்ள விவாதத்திலுள்ள ஒரு விஷயம்; அது தற்போது மிகவும் சூடான பிரச்சனையாக இல்லாவிட்டாலும்கூட என்றேனும் ஒருநாள் அது விசுவரூபம் எடுக்கும் என்பது நிச்சயம்.
இந்தியாவுக்கு எத்தகைய மத்திய அரசாங்கமும் உருவாக்கப்படுவதைத் தாங்கள் விரும்பவில்லை என்று முஸ்லீம்கள் அறிவித்திருக்கிறார்கள்; இதற்கான காரணங்களை மிகத் தெள்ளத்தெளிவாக எத்தகைய ஐயப்பாட்டுக்கும் இடமில்லாத வகையில் தந்துள்ளார்கள். முஸ்லீம்கள் மிகப்பெரும் எண்ணிக்கையில் இருக்கும் ஐந்து மாகாணங்களை இனம் காணுவதில் அவர்கள் வெற்றி கண்டுள்ளார்கள். இந்த மாகாணங்களில் முஸ்லீம்கள் ஒர் அரசாங்கத்தை  நிறுவும் சாத்தியக்கூறைக் காண்கிறார்கள்; இந்த மாகாணங்களில் அமைக்கப்படும் முஸ்லீம் மாகாணங்களின் சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஆர்வமும் அக்கறையும் கொண்டவர்களாக இருக்கிறார்கள். இத்தகைய கருத்துகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, மத்திய அரசாங்கம் என்பது இந்திய முஸ்லீம்களின் கண்களை உறுத்துவதாக இருக்கிறது; அவர்களுக்கு வெறுப்பூட்டுவதாக இருக்கிறது; தங்களுடைய முஸ்லீம் மாகாணங்கள் இந்துப் பெரும்பான்மையினரின் மத்திய அரசாங்கத்துக்குக் கீழ்பட்டிருக்கும் காட்சியையும்,மேற்பார்வை அதிகாரம் பெற்ற அந்த அரசாங்கம் இந்த முஸ்லீம் மாகாணங்களின் நிர்வாகத்தில் தலையிடும் காட்சியையும் முஸ்லீம்கள் உருவகித்துக் காண்பதே இதற்குக் காரணம். இந்தியா முழுவதற்கும் ஒரே மத்திய அரசாங்கம் என்னும் யோசனையை ஏற்பது முஸ்லீம் மாகாண அரசாங்கங்களை இந்து மத்திய அரசாங்கத்தின் ஆதிக்கத்திற்கு உட்படுத்துவதற்கு சம்மதிப்பையே குறிக்கும் என்று முஸ்லீம்கள் நினைக்கிறார்கள்; மேலும்,  முஸ்லீம் மாகாணங்களை உருவாக்குவதால்  கிட்டும் ஆதாயம் மத்தியிலுள்ள இந்து அரசாங்கத்தின் ஆதிக்கத்துக்கு இம் மாகாணங்களை உட்படுத்துவதன் மூலம் இழக்கப்பட்டு விடும் என்று முஸ்லீம்கள் அஞ்சுகிறார்கள். இந்தியாவில் மத்திய அரசாங்கமே இல்லாதிருப்பதுதான் இந்துக்களின் கொடுங்கோல் மத்திய ஆட்சியிலிருந்து முஸ்லிம்கள் தப்புவதற்கான வழியாக அவர்கள் காண்கின்றனர்.
ஒரு மத்திய அரசாங்கம் ஏற்படுவதை முஸ்லிம்கள் மட்டும்தானா எதிர்க்கிறார்கள்? இந்துக்களின் நிலை என்ன? இந்தியாவில் அரசியல் சட்ட அமைப்பின் ஒரு நிரந்தரமான பகுதியாக இந்தியாவுக்கு எப்போதுமே ஒரு மத்திய அரசாங்கம் இருக்க வேண்டும் என்பது குறித்து நடைபெற்றுவரும் எல்லா அரசியல் விவாதங்களுக்கும் அடிப்படையாக ஒரு மௌனமான கோட்பாடு இருந்து வருவதாகத் தோன்றுகிறது. ஆனால் இந்தக் கோட்பாட்டைப் பற்றித் திட்டவட்டமாக எதையும் என்னால் கூற முடியாது. எனினும் இந்த கோட்பாட்டில் இரண்டு அம்சங்கள் அடங்கியுள்ளன என்பதையும், இப்போதைக்கு அவை செயலற்றவையாக இருந்தாலும் என்றைக்கேனும் ஒருநாள் அவை ஆதிக்க நிலைபெற்று, மத்திய அரசாங்கம் அமைக்கும் யோசனையிலிருந்து இந்துக்களைப் பின்வாங்கச் செய்யும் என்பதையும் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இவற்றில் முதலாவது அம்சம் இந்து மாகாணங்களிடையே இயல்பாக நிலவும் கலாச்சார முரண்பாடாகும். இந்து மாகாணங்களை ஒரு மகிழ்ச்சிகரமான குடும்பம் என்று கூறி விடுவதற்கில்லை. வங்காளிகளிடமோ, ராஜபுத்திரர்களிடமோ அல்லது மதராசிகளிடமோ சீக்கியர்களுக்கு எத்தகைய பரிவும் கனிவும் இருப்பதாகப் பாசாங்கு செய்ய முடியாது. வங்காளி தன்னை மட்டுமே நேசிக்கிறான். மதராசியோ தனது சொந்த உலகில் கட்டுண்டு கிடக்கிறான். மராட்டியனோ, இந்தியாவில் முஸ்லீம் சாம்ராஜ்யத்தை ஒழித்துக்கட்டுவதற்குப் புறப்பட்ட மராட்டியர்கள் ஏனைய இந்துக்களுக்கு ஆபத்தானவர்களாக மாறியதையும், அவர்களை ஏறத்தாழ ஒரு நூற்றாண்டுக் காலம் தங்களது அடிமை நுகத்தடியின் கீழ் அடக்கி ஒடுக்கி வைத்திருந்ததையும் நினைவு கூறுவதில்லை. இந்து மாகாணங்களிடையே பொதுவான மரபுகள், சம்பிரதாயங்கள் ஏதும் இல்லை; அவற்றைக் கட்டுப்படுத்தும் நலன்களும் இல்லை. மறுபுறம், மொழி, இன வேற்றுமைகளும், கடந்தகால சண்டைச் சச்சரவுகளும் பிணக்குகளும் அவற்றைப் பிரிக்கும் வலிமை வாய்ந்த சக்திகளாக இருந்து வந்திருக்கின்றன. இத்தனைக்கிடையேயும் இந்துக்கள் ஒன்றுபட்டு வருகிறார்கள் என்பதும் ஓர் ஐக்கிய தேசமாக மலர வேண்டும் என்ற உணர்வு அவர்களிடையே மேலோங்கிவருகிறது என்பதும் உண்மை. எனினும் அவர்கள் இன்னும் ஒரு தேசமாகப் பரிணமிக்கவில்லை என்பதை மறந்துவிடக்கூடாது. அவர்கள் ஒரு தேசமாக உருவாகும் இயக்க நிகழ்வில் இருந்து வருகிறார்கள். இந்த இயக்க நிகழ்வு பூர்த்தியடைவதற்கு முன்னர், ஒரு பின்னடைவு ஏற்பட்டு, ஒரு நூற்றாண்டுக் காலப் பணி முழுவதுமே தகர்த்துவிடக் கூடும்.
இரண்டாவதாக, நிதியம்சம் குறுக்கிடுகிறது. மத்திய அரசாங்கத்தைப் பராமரிப்பதற்கு இந்திய மக்களுக்கு எவ்வளவு செலவாகும் என்பதும், இதில் ஒவ்வொரு மாகாணமும் ஏற்கவேண்டிய பளு எந்தளவுக்கு இருக்குமென்பதும் போதிய அளவுக்குத் தெரியவில்லை.
பிரிட்டிஷ் இந்தியாவின் மொத்த ஆண்டு வருமானம் ரூ.194,64,17,926 ஆகும். இந்தத் தொகையை மாகாண அரசாங்கங்கள் ஆண்டுதோறும் மாகாண வள ஆதாரங்களிலிருந்து ரூ73,57,50,125யும் மத்திய வள ஆதாரங்களிலிருந்து மத்திய அரசாங்கம் ஆண்டுதோறும் ரூ.121,06,67,801யும் திரட்டித் தருகின்றன. இதிலிருந்து மத்திய அரசாங்கத்தை பராமரிப்பதற்கு இந்திய மக்கள் எவ்வளவு செலவிட வேண்டி உள்ளது என்பதைத் தெரிந்து கொள்ளலாம். இத்தனைக்கும் மத்திய அரசாங்கம் அமைதியையும் ஒழுங்கையும் பாதுகாப்பும் பாதுகாக்கும் பணியை மட்டுமே செய்து வருகிறது; மக்களின் முன்னேற்றம் சம்பந்தப்பட்ட வேறு எந்தப் பணிகளையும் அது செய்வதில்லை. அப்படியிருக்கும்போது, அமைதியை நிலைநாட்டுவதற்காக ஆண்டுதோறும் இவ்வளவு பெரும் தொகையைக் கொட்டி அழுவது அவசியம்தானா என்று மக்கள் கேட்க ஆரம்பித்திருப்பதில் வியப்பேதும் இல்லை. இவ்வகையில் பார்க்கும்போது, மாகாணங்களில் உள்ள மக்கள் அநேகமாக கவ்வும் குடலை இறுகப் பிடித்துப் பட்டினி கிடக்கிறார்கள் என்பதையும், தங்களது வருமானத்தைப் பெருக்குவதற்கு அவர்களுக்கு வேறு ஆதாரம் ஏதுமில்லை என்பதையும் இங்கு நினைவிற் கொள்ள வேண்டும்.
மத்திய அரசாங்கத்தைப் பராமரிப்பதற்கு இந்திய மக்கள் ஏற்கவேண்டியுள்ள சுமை பல்வேறு மாகாணங்களிடையே மிகவும் ஏற்றத்தாழ்வான முறையில் விநியோகிக்கப்பட்டிருக்கிறது. மத்திய வருவாய்க்கான ஆதாரங்கள் வருமாறு 1. சுங்கவரிகள் 2. உள்நாட்டுப்  பொருட்கள் மீது விதிக்கப்படும் தீர்வைகள் 3. உப்பு 4. செலவாணி 5. தந்தி மற்றும் அஞ்சல் 6. வருமானவரி 7. ரயில்வே. இந்திய அரசாங்கம் பிரசுரித்துள்ள கணக்குகளிலிருந்து அஞ்சல் மற்றும் தந்தி, ரயில்வே, காகித நாணயம் அச்சடித்தல் ஆகிய மூன்று துறைகளிலிருந்து எவ்வளவு வருமானம் கிடைக்கிறது என்பதை நிச்சயிக்க முடியவில்லை. ஏனைய துறைகளிலிருந்து கிட்டும் வருவாயை மட்டுமே மாகாணவாரியாக அறிய முடிகிறது. அந்த விவரங்களைப் பின் கண்ட அட்டவணையில் காணலாம்.
மேற்கண்ட அட்டவணையிலிருந்து நாம் என்ன காண்கிறோம். மத்திய அரசாங்கத்தைப் பராமரிக்கும் செலவும் மிக அதிகமாக இருப்பதோடு, பல்வேறு மாகாணங்கள் விஷயத்தில் அது பெரிதும் ஏற்றத் தாழ்வாக இருப்பதையும் பார்க்கிறோம். பம்பாய் மாகாண அரசாங்கம் திரட்டுவது ரூ.12,44,59,353. அதேசமயம் பம்பாயிலிருந்து மத்திய அரசாங்கம் திரட்டுவதோ ரூ.22,53,44,747. வங்க அரசாங்கம் திரட்டுவது ரூ.12,76,60,892; வங்காளத்திலிருந்து மத்திய அரசு வசூலிக்கும் தொகை ரூ.23,79,01,583. சிந்து அரசாங்கம் பெறும் தொகை ரூ.3,70,29,354; மத்திய அரசாங்கம் சிந்துவிலிருந்து பெரும் தொகை ரூ.5,66,46,915. அஸ்ஸாம் அரசாங்கம் ஏறத்தாழ ரூ.2 1/2கோடி வசூலிக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கமோ அசாமில் இருந்து கிட்டத்தட்ட ரூ. 2 கோடி கறக்கிறது. மாகாண அரசாங்கங்கள் மீது மத்திய சர்க்கார் சுமத்தும் பளு இவ்வாறிருக்கும்போது, ஏனைய மாகாண அரசாங்கங்கள் மத்திய அரசாங்கத்துக்கு அளிக்கும் தொகையோ மிகவும் குறைவு. உதாரணமாக, பஞ்சாப் தனக்காக ரூ.11 கோடி வசூலிக்கிறது; ஆனால் மத்திய அரசுக்கோ ரூ.1 கோடிதான் வழங்குகிறது. இதுபோன்று, வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தின் வருமானம் ரூ.1,80,83,548; எனினும் மத்திய அரசாங்கத்திற்கு அது அளிக்கும் மொத்தப் பங்கு ரூ.9,28,294தான். இவ்வாறே, ஐக்கிய மாகாணம் திரட்டும் தொகையை ரூ.13 கோடியாக இருக்கையில் அது மத்திய அரசுக்கு ரூ.4 கோடி மட்டுமே அளிக்கிறது. பீகார் தனக்காக ரூ. 5 கோடி வசூலிக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கத்திற்குத் தருவதோ ரூ.1 1/2 கோடிதான். மத்திய மாகாணமும் பேராரும் ரூ.4 கோடி அளவுக்கு வரி வசூலிக்கின்றன. ஆனால் மத்திய அரசுக்கு ரூ.31 லட்சம்தான் செலுத்துகின்றன
இந்த நிதி அம்சம் இதுவரை எவரது கவனத்தையும் கவராமலேயே இருந்து வந்திருக்கிறது. எனினும் இந்தியாவில் ஒரு மத்திய அரசாங்கமே நிறுவப்படுவதை மிக வலுவாக, ஆழமாக ஆதரிக்கும் இந்துக்களையும் கூட தற்போது தேசபக்த அம்சம் கவர்வதை விடவும் நிதி அம்சம் பெரிதும் கவரும் ஒரு காலம் வரவே செய்யும். எனவே, என்றேனும் ஒருநாள் முஸ்லீம்கள் வகுப்பு நோக்கங்களுக்காகவும் இந்துக்கள் பொருளாதார நோக்கங்களுக்காகவும் மத்திய அரசாங்கத்தை ஒழித்துக் கட்டுவதற்கு கைகோர்ப்பது சாத்தியமே.
இது நிகழுமானால், புதிய அரசியலமைப்புக்கான அடித்தளம் இடுவதற்கு முன்னர் இது நிகழ்வது சாலச்சிறந்ததாக இருக்கும். இவ்வாறின்றி, ஒரு மத்திய அரசாங்கம் அமைப்பதற்கு வகை செய்யும் புதிய அரசியல் அமைப்புக்கான அஸ்திவாரம் போடப்பட்ட பின்னர் இது நிகழுமானால் அது மிகப்பெரிய விநாசத்தில், விபரீதத்தில் போய் முடியும். இந்த பொதுவான சிதைவில், அழிபாட்டில் இந்தியா ஓர் ஒன்றுபட்ட நாடு என்பது மறைந்தழிந்து போவதோடு, இந்துக்களின் ஒற்றுமையைக் கூட காப்பாற்ற முடியாமல் போகக்கூடும். நான் ஏற்கனவே குறிப்பிட்டது போன்று, இந்து மாகாணங்களிடையே கூட அவற்றை இணைக்கும் பிணைப்பு அதிகமில்லாத போது, அந்த அற்ப சொற்ப பிணைப்பும் இழக்கப்பட்டு விடுகையில், இந்த மாகாணங்களின் ஒற்றுமையையே கூடக் கட்டி உருவாக்குவதற்கு வளர்த்து வலுப்படுத்துவதற்கு எதுவும் இல்லாது போய்விடும். இதன் காரணமாகத்தான் திட்டங்கள் தீட்டுவதற்கும், அவற்றிற்கான அடித்தளங்கள் இடுவதற்கும் முன்னர் அரசியலமைப்புச் சட்டம் யாருக்காக உருவாக்கப்படுகிறது என்பதையும், அது தற்காலிகமானதா, நிரந்தரமானதா என்பதையும் இந்தியர்கள் தீர்மானித்துக் கொள்ள வேண்டும் என்கிறோம். ஏனென்றால் ஒரே அஸ்திவாரமிட்டு, ஒரு முனையிலிருந்து மறு முனைவரை எத்தனை எத்தனையோ உத்தரங்களையும் எஃகுக் கட்டுமானங்களையும் அமைத்து ஒரு முழுக் கட்டிடத்தையும் கட்டிய பிறகு, அதில் ஒரு பகுதியைப் பிரிக்க வேண்டுமென்றால், உத்தரங்களையும் எஃகு கட்டுமானங்களையும் உடைக்க வேண்டியிருக்கும்; அப்போது முழுக் கட்டிடமுமே ஆட்டம் காணும்; ஒரே கட்டுமானமாக இருக்க வேண்டும் என்று கட்டப்பட்ட அந்தக் கட்டிடத்தின் இதர பகுதிகளில் பயங்கர வெடிப்புகள் ஏற்படும். அதிலும் இந்தியா விஷயத்தில் இந்தப் பகுதிகளை பிணைக்கும் சிமெண்ட் மிகவும் தரம் குறைந்ததாக இருந்தால், வெடிப்புகளின் அபாயம் பெரிதும் பயங்கரமானதாக இருக்கும். இந்தியா முழுவதற்கும் ஒரு புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு, அதன் அடித்தளத்தின்மீது ஒரு கட்டுமானம் எழுப்பப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். இதன் பிறகு, இந்துஸ்தானத்திலிருந்து பாகிஸ்தானைப் பிரிக்கும் பிரச்சனை எழுப்பப்பட்டு, அதற்கு இந்துக்கள் இணங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படுகிறது என்றும் வைத்துக் கொள்வோம். அப்போது என்ன நிகழும்? இந்தப் பிரிவினைக்கு வழிவகுப்பதற்குச் சில மாற்றங்கள் செய்ய வேண்டி இருக்கும். அந்த மாற்றங்கள் காரணமாக கட்டிடம் முழுவதுமே நொறுங்கி தகர்ந்து விழ நேரிடும். முஸ்லீம் மாகாணங்களைப் பீடிக்கும் இந்தப் பிரிவினை நோய் இந்து மாகாணங்களையும் எளிதாக தொற்றிக் கொள்ளும் முஸ்லீம் மாகாணங்களின் இந்தப் பிளவு உணர்வு ஒட்டுமொத்த சிதைவை ஏற்படுத்தும்.
அரசியலமைப்பு சட்டங்கள் சீர்குலைவுக்குள்ளான சம்பவங்கள் வரலாற்றில் எத்தனை எத்தனையோ உண்டு. அமெரிக்க  கூட்டரசைச் சேர்ந்த  தெற்கத்திய நாடுகளின் உதாரணம் நம் கண் முன்னே இருக்கிறது. தென்னாப்பிரிக்க கூட்டரசிலிருந்து வெளியேறுவதற்கு நேட்டால் எப்போதுமே ஆர்வம் காட்டி வந்திருக்கிறது. ஆஸ்திரேலிய காமன்வெல்த்திலிருந்து பிரிந்து செல்வதற்கு  மேற்கு ஆஸ்திரேலியா  அண்மையில் முயன்று அந்த முயற்சியில்  தோல்வியடைந்ததை நாம் அறிவோம்.
இந்த சம்பவங்களில் எல்லாம் உண்மையில் சீர்குலைவு ஏதும் ஏற்படவில்லை; அப்படியே ஏற்பட்டாலும் அது உடனடியாக சரி செய்யப்பட்டுவிட்டது. ஆனால் இத்தகைய அதிர்ஷ்டம் தங்களுக்குக் கிட்டும்  என்று இந்தியர்கள் எதிர்பார்க்க முடியாது. அநேகமாக செக்கோஸ்லோவியாவிற்கு ஏற்பட்ட கதிதான் அவர்களுக்கு நேரிடக் கூடும். முதலாவதாக, முஸ்லீம் மாகாணங்கள் இந்து மாகாணங்களிலிருந்து பிரிந்து சென்று, இந்திய அரசியலமைப்பு சீர்குலைக்கப்படும்போது உள்நாட்டுப் போருக்குப் பிறகு அமெரிக்காவில்  நடைபெற்றது போன்று, பிரிந்து சென்ற சில மாகாணங்களைத் திரும்பவும் இந்திய மாகாணங்களின் அரவணைப்பின் கீழ் கொண்டு வருவது சாத்தியமே என்று நம்புவது வீண். இரண்டாவதாக, புதிய இந்திய அரசியலமைப்பு குடியேற்ற நாட்டு அரசியலமைப்புக்காக இருக்குமாயின், அதற்கான அடித்தளமிடப்பட்ட பிறகு இத்தகைய சீர்குலைவிலிருந்து அந்த அரசியலமைப்பைக் காப்பாற்ற பிரிட்டிஷாராலேயே கூட முடியாது. எனவே, புதிய அரசியலமைப்புச் சட்டம் வகுக்கப்படும் முன்னர் பாகிஸ்தான் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காண்பது காணுவது இன்றியமையாததாகிறது.
பாகிஸ்தான் கோரிக்கையை அடுத்த முறை அரசியலமைப்புச் சட்டம் திருத்தப்படும்போது இந்தியர்கள் தீர்மானிக்க வேண்டிய ஒரு திட்டம் என்பதிலும், இது சம்பந்தமாக ஒரு முடிவுக்கு வருவது தவிர்க்க முடியாதது என்பதிலும் எத்தகைய ஐயத்துக்கும் இடமில்லை என்றால், பிரச்சனையைச் சரியாக புரிந்து கொள்ளாமல் அதனை அணுகுவது மிகவும் விநாசகரமான  தவறாகும்.  வட்டமேசை மாநாட்டில் பங்கெடுத்துக் கொண்ட சில இந்தியப் பிரதிநிதிகளுக்கு அரசியலமைப்புச் சட்டம் பற்றிய ஞானம் பூஜ்ஜியமாக இருப்பது கண்டு வியந்துபோன அப்சர்வர் பத்திரிகையைச் சேர்ந்த திரு.கார்வின் பின்வருமாறு கூறியது எனக்கு நினைவிருக்கிறது; சைமன் கமிஷன் இந்தியாவைப் பற்றி அறிக்கை  தயாரித்ததற்குப் பதிலாக இந்திய அரசியலமைப்புப் பிரச்சனைகள் குறித்தும், உலகில் பல்வேறு நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் இப்பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வு காணப்பட்டுள்ளது என்பது குறித்தும் ஓர் அறிக்கையை தயாரித்திருந்தால் நலமாக இருந்திருக்கும். தென் ஆப்பிரிக்காவின் அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கிய  பிரதிநிதிகள் பயன்படுத்திக் கொள்வதற்கென்று இத்தகைய ஓர் அறிக்கை தயாரிக்கப்பட்டது என்பதை நான் அறிவேன். இக்குறைபாட்டை நீக்கும் ஒரு முயற்சி என எனது இந்த நூலைக் கூறலாம்; இவ்வகையில் காலத்திற்கேற்ற நூலாக இது வரவேற்கப்படும் என்று நம்புகிறேன்.

Search