திமுக அரசின் விவசாய நிதிநிலை அறிக்கை கிராமப்புற மக்களின் பிரச்சனைகளுக்கான, விவசாய நெருக்கடியில் இருந்து மீள்வதற்கான தீர்வை நோக்கி நகர்கிறதா??
ஆர்.வித்யாசாகர்
கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களை அடுத்து, விவசாயத்திற்கென தனியான நிதிநிலை அறிக்கை வெளியிடுவதில் தமிழ் நாடு மூன்றாவது இடத்தை பிடித்திருக்கிறது. தமிழ் நாடு வரலாற்றில் முதன் முறையாக விவசாயத்துறைக்கென பிரத்யேகமான நிதிநிலை அறிக்கையை (2021-22) திமுக அரசு வெளியிட்டிருக்கிறது.
விவசாய நிலங்கள் ரியல் எஸ்டேட் தரகர்கள் மூலம் வீட்டடி நிலங்களாக மாறுவது, மண்ணின் உயிர்ச்சத்து குறைந்துகொண்டே போவது, நீர் ஆதாரங்களை அதிகமாக சுரண்டுவதால் நீராதாரங்கள் குறைந்து கொண்டே வருவது, இளம்தலைமுறையினர் விவசாயத்தை தொழிலாக கொள்வதில் அதிக தயக்கம் காட்டுவது, விவசாய விலை பொருட்களுக்கு கட்டுப்படி ஆகும் விலை கிடைக்காமல் போவது, விவசாயத்தில் உற்பத்தி செலவு அதிகரித்துக்கொண்டே இருப்பது, அறுவடைக்கு பின்பு ஏற்படும் இழப்புகள் போன்ற இன்னபிற பிரச்சனைகளை அட்லஸ் பூமியை தூக்கி சுமப்பது போல் விவசாயிகள் தங்கள் தோள்களில் சுமந்து கொண்டிருக்கின்றனர் என்று விவசாயத்திற்கான நிதிநிலை அறிக்கையின் துவக்க உரையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. எனவே குறிப்பிட்டிருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு நிதி நிலை அறிக்கை எதை தீர்ப்பாகக் கூறுகிறது என்பதும் முக்கியம். இதில் குறிப்பிட்டுள்ளபடி பிரச்சனைகள் இதோடு நின்று விடவில்லை.
விவசாயத்தில் விதை, உரம், பூச்சி மருந்து, போன்ற இடுபொருட்களின் விலை நிர்ணயம் தனியார் கார்ப்பரேட் நிறுவனங்களின் கைககளில் இருக்கிறது. இந்த விலைகள் தொடர்ந்து உயர்ந்துகொண்டிருக்கும் நிலையில், விவசாயிகள் மேலும் மேலும் அதிக கடன் சுமைகளுக்கு ஆளாக்கப்பட்டு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் ஓட்டாண்டிகளாகிக்கொண்டிருக்கின்றனர். இதற்கு மற்றொரு காரணம் விவசாய பொருட்களுக்கான சந்தையையும் பெரும்பாலும் தனியார் கைவசம் வைத்துள்ளனர். எவ்வளவுதான் கடன் தள்ளுபடி செய்தாலும், விவசாயத்தில் வருமானம் எம்.எஸ்.சாமிநாதன் கமிட்டி பரிந்துரைப்படி இடுபொருள் செலவை விட ஒன்றரை மடங்கு, அதாவது விவசாய உற்பத்தி செலவை விட 50% அதிகமாக இருப்பதே இல்லை (அரசின் குறைந்த பட்ச விலை நிர்ணயம் இதை கணக்கில் எடுத்துக்கொள்வதே இல்லை). எனவே விவசாயிகளும் இளைஞர்களும் கடன் சுமையால் விவசாயத்தை விட்டு இடம் பெயர் தொழி
லாளர்களாகவும், விவசாயமற்ற துறைகளில் வேலை செய்வதற்கும் வெளியேறிக் கொண்டிருக்கிறன்றனர்.
திமுக அரசின் இந்த விவசாய நிதி நிலை அறிக்கை இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணுமா என்பது முக்கியமான அம்சம். ஒரு நிதி நிலை அறிக்கை மூலம் அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு காண முடியும் என்று கூற முன் வரவில்லை. ஆனால் தமிழ் நாடு விவசாயம் எந்த இலக்கை நோக்கி செல்ல வேண்டும் என்பது குறித்த ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட, அடிப்படை பிரச்சனைகளுக்கான தீர்வை நோக்கி செல்லக்கூடிய ஒரு விவசாய கொள்கை வகுக்கப்பட வேண்டும். விவசாய நிதி நிலை அறிக்கை என்பது அதன் ஒரு அங்கமாக இருக்க வேண்டும். இல்லையெனில் தற்பொழுது உள்ள நிதி நிலை அறிக்கையில் குறிப்பிட்டுள்ள பல்வேறு அம்சங்கள் கொத்தி பொறுக்கும் விதமாக (pick and choose) விவசாயிகளை தற்காலிகமாக திருப்திப்படுத்துவதாக அமைந்துவிடும். அடிப்படை மாற்றங்கள் நிகழாது. எனவே தொலை நோக்கு பார்வையுடனான, அடிப்படை பிரச்சனைகளை உள்ளடக்கிய ஒரு விவசாயக் கொள்கை முதலில் உருவாக்கப்படவேண்டும். பா. ஜ .கவின் பினாமியாய் செயல்பட்ட அதிமுக அரசின் அதே குரலில் மூலதனத்தை மேலும் மேலும் வரவேற்கும் திமுக ஆட்சியால் அத்தகைய கொள்கையை வகுக்க முடியுமா என்பது கேள்விக்குறி? இந்த பின்னணியில் விவசாய நிதி நிலை அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் சில முக்கியமான அம்சங்களை பார்ப்போம்.
2021-22 ஆம் ஆண்டில் விவசாயம் மற்றும் சார்புத்துறைகளுக்கு என்று ரூ.34,220.65 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் விற்பனை, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கால்நடை பராமரிப்புத்துறை, மீன்வளம், கூட்டுறவுத்துறை, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை, வனத்துறை, நீர்வள ஆதாரத்துறை, கூட்டுறவுத்துறை, பால்வளத்துறை போன்ற உழவர் நலன் சார்ந்த துறைகள் மூலம் மேற்கொள்ளப்படும் திட்டங்களின் பலன்கள் ஒட்டு மொத்த கிராம வளர்ச்சிக்கு உதவும் வகையில் ஒருங்கிணைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
2020-21ம் ஆண்டு புள்ளி விவரப்படி, 45% உழைக்கும் மக்கள் சார்ந்திருக்கும் விவசாயத்துறையால் தமிழ் நாட்டின் மொத்த வருமானத்தில் (GSDP), வெறும் 12% மட்டுமே வருகிறது. இது கிராமப்புற மக்களின் பொதுவான வறுமை நிலையை, விவசாயத்துறையில் உள்ள பல்வேறு நெருக்கடிகளை குறியிட்டு காட்டுகிறது. விவசாயம் செய்பவர்களை விட தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக அதிகம். தமிழகத்தில் விவசாயிகளைவிட இரண்டு மடங்கு, கிட்டத்தட்ட 96 லட்சம் மக்கள் தங்கள் உழைப்பை மட்டுமே நம்பி இருக்கக்கூடிய தொழிலாளர்களாக இருக்கின்றனர். இவர்களின் வாழ்க்கையை முன்னேற்ற திட்டமிடாமல் விவசாயத்துறையை முன்னேற்ற முடியாது. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் கிராமப்புற தொழிலாளர்களின் வாழ்வை முன்னேற்றுவது குறித்து எதுவுமில்லை. கோவில் நிலங்களிலிருந்து, நகர்புறங்களிலுள்ள செல்வாக்கு மிக்க ஆக்கிரமிப்பாளர்களை அகற்றுவதில் அக்கறை காட்டும் அரசாங்கம் காலங்காலமாக உழைத்து உற்பத்தி செய்த கோயில் நில குத்தகைதாரர்களுக்கும், கோயில் நிலங்களில் பட்டா இன்றி காலங்காலமாக குடியிருக்கும் கிராமப்புற ஏழை மக்களுக்கும் என்ன கொள்கை வகுக்கப்போகிறது. இது தமிழ் நாட்டில் பல்வேறு கிராமங்களில் உள்ள முக்கியமான பிரச்சனை ஆகும். இதற்கு ஒரு வழி வகுப்பதன் மூலம் கிராமப்புற ஏழை மக்களின் வாழ்க்கையை ஓரளவிற்கு முன்னேற்ற முடியும்.
1. “ஐந்து ஆண்டுகளில் அனைத்து கிராமங்களிலும் "கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம்" அறிமுகம். நடப்பாண்டில் 2500 கிராமங்களில் நீர் ஆதாரங்களை உருவாக்கி, சாகுபடிப் பரப்பினை உயர்த்தி, விவசாயிகளின் வருமானம் உயர்வதற்கான திட்டப்பணிகளுக்காக ரூ.250 கோடி மாநில நிதியிலிருந்து ஒதுக்கீடு. ஒன்றிய, மாநில அரசுத் திட்டங்களை ஒன்றிணைத்து, ரூ.995.45 கோடி, ஆக மொத்தம் ரூ.1,245.45 கோடியில் திட்டம் செயல்படுத்தப்படும்” என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.
வேர்க்கால்மட்ட சுயாட்சி அமைப்புகளுக்கு அதிகாரம் (குறிப்பிட்ட துறைகளில் முடிவெடுக்கும் அதிகாரப் பகிர்வு ) மற்றும் அதற்கான நிதி பங்கீடு போன்றவை, இந்திய அரசியலமைப்பு சட்ட திருத்தம் 72 மற்றும் 73 படி எங்குமே நடைபெறவில்லை. தமிழ் நாட்டிலும் மேற்கூறிய சட்ட திருத்தங்களில் கூறியுள்ள 29 வகையான அதிகாரப்பகிர்வு என்பது கிராமப்புற, மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மன்றங்களுக்கு கிடையாது. வேர்க்கால் மட்டத்திலிருந்து திட்ட மிடுவது, அதை நடைமுறை படுத்த அதிகாரமும் நிதி ஆதாரமும் இருந்தால்தான் மேற்கூறிய நிதி நிலை அம்சத்தை நிறைவேற்ற முடியும். இதுவரை கிராம வளர்ச்சிக்காக கொண்டுவரப்பட்ட பல திட்டங்கள் நிறைவேறாமல் போனதற்கு, பஞ்சாயத்துகள் பெரும்பாலும் அதிகார வர்கத்தை சார்ந்திருக்கவேண்டிய நிலையால்தான்.
2. நெல் விவசாயிகளின் நலனுக்காக, நெல்லிற்கான கொள்முதல் விலை சாதாரண இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,015 ம், சன்ன இரகத்திற்கு குவிண்டாலுக்கு ரூ.2,060 என உயர்த்தி நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதே போல் கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஒரு டன்னிற்கு ரூ.2900 என விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
ஆனால் திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கையில் நெல்லுக்கு குவிண்டாலுக்கு ருபாய் 2500 மற்றும் கரும்புக்கு ஒரு டன்னிற்கு ரூ.4000 உயர்த்தப்படும் என அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பு என்னவாயிற்று என்று விவசாயிகள் கேட்கின்றனர்.
நெல் கொள்முதலில் உள்ள முக்கியமான பிரச்சனை நெல்லை கொள்முதல் செய்வதற்கான உள்கட்டுமான வசதிகள் மிகக் குறைவு. மொத்த நெல் உற்பத்தியில் சுமார் 20% தான் அரசு கொள்முதல் செய்வதாக புள்ளி விவரங்கள் கூறுகின்றன. எனவே குறைந்தபட்ச ஆதரவு விலையை ஏற்றினாலும் கொள்முதலுக்கான கொள்கை இல்லாமல் இது வெற்றி பெற முடியாது. தனியார் வியாபாரிகளின் ஆதிக்கம் தொடரும். விவசாய நிதி நிலை அறிக்கையில் ரூ. 520 கோடி தார்பாலின் வாங்க ஒதுக்கப்பட்டிருக்கிறது. உள்கட்டமைப்பை வளர்ப்பதற்கான கொள்கை இல்லாமல் தார்பாலின் வாங்குவது மூலமாக பிரச்சனையை தீர்க்க முடியாது. அங்குசம் வாங்கிவிட்டு யானை வாங்காத கதை இது.
பல்வேறு கோரிக்கைகளை கரும்பு விவசாயிகள் அரசாங்கத்திடம் வைத்திருந்தனர். கரும்புக்கு சரியான விலை கிடைக்காததாலும், சர்க்கரை ஆலைகளிடமிருந்து விவசாயிகளுக்கு அதிக பாக்கி இருந்ததாலும், 2010-11ல் 22.5 லட்சம் டன்களாக இருந்த கரும்பு உற்பத்தி தற்சமயம் வெறும் 8 லட்சம் டன்களாக குறைந்துவிட்டது. தமிழ் நாட்டிலுள்ள 24 ஆலைகளிடமிருந்து விவசாயிகளுக்கு ரூ.1219 கோடி பாக்கி இருக்கிறது. 9 தனியார் ஆலைகளும் , 4 கூட்டுறவு ஆலைகளும் விவசாயிகளுக்கு பாக்கியை தாராமலேயே மூடி விட்டன. இதை மீட்டெடுப்பது பற்றி நிதி நிலை அறிக்கையில் ஒன்றுமே இல்லை என கரும்பு விவசாயிகள் தங்கள் ஆதங்கத்தை தெரிவிக்கின்றனர்.
3. மானாவாரி நில மேம்பாட்டு இயக்கத்தின் கீழ், நடப்பாண்டில், தொகுப்பு அணுகுமுறையில் 7.5 இலட்சம் ஏக்கர் மானாவாரி நிலங்களில் 3 இலட்சம் விவசாயிகள் பயன்பெறும் வகையில், திட்டங்கள் தீட்டப்படும் என்றும் மேலும் தற்போதுள்ள 10 லட்சம் ஹெக்டர் நஞ்சை சாகுபடி நிலங்களை இரு போக நிலங்களாக 20 லட்சம் ஹெக்டர்களாக மாற்றப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதற்கு முக்கியமாக தொலை நோக்கு பார்வையில் நீர் ஆதாரங்களை அதிகரிப்பது, பாதுகாப்பது போன்ற திட்டங்கள் உருவாக்கப்படவேண்டும். ஏற்கனவே தண்ணீர் இல்லாமல் மானாவாரி நிலங்களும், ஏன் நஞ்சை நிலங்களும் கூட விவசாயம் அல்லாத தேவைகளுக்கு மாற்றப்படுகின்றன. விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாத பட்சத்தில் இதற்கு விவசாயிகள் ஆதரவுக்கு இருக்காது.
காவேரி டெல்டா பகுதிகளை பெரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி வருவது கார்ப்பரேட் ஆதரவு எண்ணெய் கிணறு, மீத்தேன் வாயு திட்டங்களாகும். பாதுகாக்கப்பட்ட விவசாய மண்டலமாக அறிவிக்கப்பட்டதில், டெல்டா பகுதியில் திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்கள் சேர்க்கப்படவில்லை. ஆனால் இந்த நிதி நிலை அறிக்கையில் அதைப்பற்றி ஒன்றுமே குறிப்பிடப்படவில்லை. இந்த நிலையில் ஒரு போக நிலங்களை எப்படி இரு போக நிலங்களாக இரட்டிப்பாக மாற்ற முடியும்.
4. பயிர்க் காப்பீட்டுத்திட்டத்தில் விவசாயிகளின் சார்பாக, காப்பீட்டுக் கட்டண மானியத்தில் மாநில அரசின் பங்காக ரூ.2,327 கோடி நிதி ஒதுக்கீடு.
பயிர்க் காப்பீடு செய்யும் காப்பீடு கம்பெனிகள் மத்திய அரசாங்கத்தால் பாட்டிலியலிடப்பட்டவை (EMPANELLED). 2020-21ஆம் ஆண்டில் நாட்டில் மொத்தம் சுமார் 4 கோடி விவசாயிகள் 261 லட்சம் ஹெக்டரில் தங்கள் பயிர்களுக்கு காப்பீடு செலுத்தி இருந்தனர். இதற்காக விவசாயிகள், ஒன்றிய அரசு, மாநில அரசாங்கங்கள் கொடுத்திருந்த பிரீமியம் மொத்தம் ரூ.19047 கோடிகள். ஆனால் காப்பீடு கம்பெனிகள் பயிர் நட்ட ஈடாக விவசாயிகளுக்கு அளித்த மொத்த தொகை வெறும் 15 கோடிகள் மட்டுமே. இதில் பெரும்பாலும் காப்பீடு கம்பனிகளே பயன் அடைகின்றன. நாடு முழுவதும் பெரும்பாலும் இதில் ஈடுபட்டிருப்பது பாரத் ஆக்சா ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற தனியார் கம்பெனியே.
தமிழ் நாட்டில் சோழமண்டலம் எம்.எஸ். ஜெனரல் இன்சூரன்ஸ் கம்பனி லிமிடெட் என்ற தனியார் கம்பெனியும், அக்ரிகல்சுரல் இன்சூரன்ஸ் கம்பெனி ஆப் இந்தியா லிமிடெட் என்கிற பொதுத்துறை கம்பெனியும் பயிர் காப்பீட்டில் ஈடுபடுத்தப்படுகின்றன. மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட கம்பனிகள் வருடா வருடம் டெண்டர் மூலமாக தேர்ந்தெடுக்கப்படும். விவசாயிகளிடமிருந்து வசூலிக்கப்படும் பிரீமியம் மொத்த காப்பீடு தொகை மதிப்பில் 1.5 முதல் 2% வரை ஆகும். மீதமுள்ள பிரீமியம் ஒன்றிய மற்றும் மாநில அரசாங்கத்தால் வழங்கப்படும். தமிழ் நாட்டில் 2020ல் சுமார் 13 லட்சம் விவசாயிகள் 16,40,000 ஹெக்டேர் நிலத்தில் விவசாயத்திற்கு காப்பீடு செய்திருந்தனர். மொத்த பிரீமியம் தொகை ரூ.3163 கோடியாகும். இதில் விவசாயிகளின் பங்கு 5%, ஒன்றிய அரசின் பங்கு 35%, மாநில அரசின் பங்கு 60%. பயிர் நட்டத்தை கணக்கிடுவதில் பல கோளாறுகள் இருக்கின்றன. பெரும்பாலான நிதி கொள்ளை லாபத்தின் மூலம் இன்சூரன்ஸ் கம்பனிகளையே சென்றடைகின்றன. இதற்கு மாறாக மாநில அரசாங்கமே ஒரு கூட்டுறவு காப்பீட்டு திட்டத்தை தொடங்கி, விவசாயிகளுக்கு நியாயமான முறையில் நட்ட ஈடு கிடைக்க வழி செய்யலாம். மேலும் கொடுபடாத தொகை மாநில அரசாங்கத்திடம் போய்சேரும். மேலும் பயிர் காப்பீடு என்பது வெறும் பயிர் நட்டம் என்பதோடு நில்லாமல் ஒரு விரிவான பயிர் பாதுகாப்பு, வருமான பாதுகாப்பு, பேரிடர் பாதுகாப்பு, விலை வீழ்ச்சி, பருவ நிலை மாற்றத்தால் ஏற்படும் நட்டம் போன்றவற்றை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும்.
5. மண் வளத்தை பாதுகாத்து, ஆரோக்கியமான உணவை மக்களுக்கு வழங்குவதற்காக இயற்கை விவசாய வளர்ச்சித் திட்டமும் அதற்கான தனி அமைப்பும் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இயற்கை விவசாயம் என்பது பயிர்களுக்கு உணவளிப்பதல்ல. மாறாக மண்ணை வளப்படுத்துவதாகும். விவசாய பல்கலைக்கழகங்கள், விவசாய ஆராய்ச்சிகள் பெரும்பாலும் பயிர் உற்பத்தி, பயிர்களின் ஆரோக்கியம் பற்றி மட்டுமே சிந்திக்கின்றன. இந்த நிலை தலை கீழாக மாற்றப்படவேண்டும். மண் வளம் தமிழ் நாட்டில், ரசாயன பயன்பாட்டால் மிகவும் நலிந்து போயிருக்கிறது. நீண்ட கால அடிப்படையில் இதை மாற்றினால் தான் இயறக்கை விவசாயத்தை மேம்படுத்த முடியும். அதற்கான கொள்கைகளும் திட்டங்களும் தேவை.
6. நமது மாநில மரமான பனை மரத்தை நம்பி உள்ள விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த, பனை தொடர்பான பல்வேறு தொழில்களை ஊக்குவிக்க, பனை மரங்களை வெட்டுவதை தவிர்க்க, பனை மேம்பாட்டுத் திட்டம் தீட்டப்பட்டிருக்கிறது.
பத நீரிலிருந்து கருப்பட்டி உற்பத்தி செய்யும் தொழிலில் பல பனைஏறும் தொழிலாளர்கள் தமிழ் நாட்டில் ஈடுபட்டிருக்கின்றனர். ஆனால் இவர்களில் பெரும்பாலோனோருக்கு பனை மரங்கள் சொந்தமில்லை. இவர்கள் உற்பத்தியில் ஒரு கணிசமான பகுதி பனை மர உரிமையாளர்களுக்கு குத்தகையாக சென்று விடுகிறது. மேலும் இவர்கள் ஏழ்மை காரணமாக கருப்பட்டி முதலாளிகளிடம் கடன் வாங்கி இருப்பதால் அவர்கள் சொல்லும் விலைக்குத்தான் இவர்கள் கருப்பட்டியை விற்க முடியும். இதில் ஒரு கொத்தடிமை முறை இருக்கிறது. இதை மாற்றாமல் பனை பொருட்களின் விற்பனையை உயர்த்துவதால் கடினமாக உழைக்கும் பனைஏறும் தொழிலாளர்களுக்கு அதனால் பயன் இல்லை. உழைப்பாளர்களின் நிலை முன்னேற திட்டங்கள் தீட்டப்படவேண்டும்.
7. விவசாய பட்டதாரிகள் மற்றும் இதர இளைஞர்கள் விவசாய பணிகளில் ஈடுபடுவதை ஊக்குவிக்கும் வகையில் திறன் மேம்பாட்டு பயிற்சியும் அளிக்க திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருக்கின்றன.
தமிழ் நாட்டில் மொத்த விவசாயிகளின் எண்ணிக்கை 2001ல் மொத்த உழைப்பாளர்களில் 18.4% ஆக இருந்தது. இது 2011ல் 12.9% ஆக குறைந்து விட்டது. அதே போல் 2001ல் 31% ஆக இருந்த விவசாய தொழிலாளர்களின் எண்ணிக்கை 2011ல் 29.2% ஆக குறைந்து விட்டது. இதற்கு முக்கிய காரணம் விவசாயத்தில் தொடர்ந்து கொண்டிருக்கும் நெருக்கடியாகும். எனவே விவசாய நெருக்கடியை போக்க நீண்ட கால கொள்கையும் திட்டங்களும் தீட்டினால் மட்டுமே இளைஞர்களை விவசாயத்தில் ஈர்க்க முடியும். அதற்கு விவசாயம் உண்மையிலேயே லாபகரமான தொழிலாக மாற வேண்டும்.
இவை தவிர பம்ப் செட்டுகள் இணைப்பு, குறிப்பிட்ட பொருட்களுக்கான அந்தந்த மாவட்டத்தில் சந்தை வளர்ச்சிக்கான ஏற்பாடு, விவசாய சார்பு தொழில் துவக்கம் போன்ற பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டியிருக்கின்றன. இவை அனைத்துமே, விவசாயத்தில் தனியார் கார்ப்பரேட் கம்பனிகளின் ஆதிக்கத்தை ஒழிக்காமல் வெற்றி அடைய முடியாது. விவசாயத் துறையில் மாநிலங்களுக்குள்ள உரிமைகளை முற்றாக பறிக்கும் ஒன்றிய அரசின் கொள்கைகளுக்கு எதிராக விவசாயத்திற்கென தனி நிதி நிலை அறிக்கை உருவாக்கி இருப்பது மாநில உரிமைகளை மீண்டும் நிலை நிறுத்தும் போக்கில் எடுத்து வைக்கப்படும் ஓர் அடி என்ற வகையில் இந்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது என்றாலும் விவசாயத்தை கார்ப்பரேட் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்கும் தொலை நோக்கு பார்வை கொண்ட ஒரு விவசாயக்கொள்கையை உருவாக்கவேண்டும். ஒன்றிய அரசின் விவசாய விரோத சட்டங்களை எதிர்த்து தீர்மானம் இயற்றிய தமிழக அரசு அனைத்துவகையிலும் ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு விவசாயக் கொள்கைகளுக்கு எதிராக முழுமையாக வினை ஆற்ற வேண்டும்.