பெண்கள் அதிகாரம் மாநில ஊழியர் கூட்டம்
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி ஆகஸ்ட் 8 அன்று பெண்கள் அதிகாரம் அமைப்பின் கூட்டம் சென்னையில் தோழர் கூடத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் அறிமுக தாள் முன்வைக்கப்பட்டது.
கூட்டத்தில் கலந்துகொண்ட பள்ளி ஆசிரியர் அவர்கள் தமிழ்ச் சொற்களுக்கு அழகூட்டும் வகையில் அதை சிறப்புடன் வாசித்தார்.
தோழர்கள், குப்பாபாய், லில்லி, தீபா மற்றும் மாலதி ஆகியோர் தலைமை தாங்கினர். தூய்மைப் பணியாளர்கள், இசபெல்லா மருத்துவமனை, காஞ்சி காமகோடி மருத்துவமனை, ஜிம்கானா கிளப் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள், ஆசிரியர்கள், மாணவிகள், இல்லப் பணி செய்யும் தோழர்கள், வீட்டு வேலை செய்பவர்கள், சட்டம் படித்தவர்கள் என பல தரப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.
பெண்கள் சமூகத்தில் சந்திக்கிற பிரச்சனைகள், குடும்ப நெருக்கடிகள், வேலை போன்றவை பற்றியும், பெண் தொழிலாளர்கள் நடத்தும் போராட்டம் பற்றியும் கூட்டத்தில் கருத்துகள் தெரிவிக்கப்பட்டன. சக தொழிலாளர்களின் போராட்டங்களுக்கு பெண்கள் அதிகாரம் அமைப்பின் ஆதரவு இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
தோழர்கள் சீதா, குப்பாபாய், லில்லி, புவனேஸ்வரி ஆகியோர் கூட்டத்தில் உரையாற்றினர். கூட்டத்தில் கலந்துகொண்ட பெண்களில் பெரும்பான்மையானவர்கள், அவர்கள் யாரும் இது வரை இப்படி ஒரு பெண்கள் அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டதில்லை என்றனர்.
பெண்கள் அதிகாரம் அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது. கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது.
கூட்டத்தின் இறுதியில் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் மாநில அமைப்பாளர் தோழர் கு.பாரதி, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனை குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி உரையாற்றினர்.
கூட்டம் முடிந்த பிறகு பெண்கள் அதிகார தோழர்களின் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், குடும்பத் தலைவிக்கு மாதம் ரூ.1000 வழங்க வேண்டும், கேஸ் மானியம் வழங்க வேண்டும், பெண்களுக்கு பாதுகாப்பு வேண்டும், சுதந்திரம் வேண்டும், விடுதலை வேண்டும், மோடி அரசு பதவி விலக வேண்டும் என முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
பெண்கள் அதிகாரம் அமைப்பு உறுப்பினர் சேர்ப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.
பெண்களின் உரிமைகளுக்காக, சமூக மாற்றத்திற்காக விடாப்பிடியாக போராட கூட்டம் உறுதியேற்றது.
- சீதா