COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 5, 2021

நினைவு நல்லது வேண்டும்
நிதியமைச்சர் அவர்களே!


எஸ்.குமாரசாமி


தமிழ்நாட்டின் நிதியமைச்சர் முதலமைச்சருக்கு திருத்தம் சொல்வது நடைபெற்றுள்ளது. நாடாளுமன்ற ஜனநாயகம், அமைச்சரவை முறை தழைப்பதாக மகிழ்வதா? அல்லது அவர் சொன்ன திருத்தத்திற்காக வருந்துவதா?


நிதியமைச்சர் நீதி பேசி அநீதிக்கு வழிவகுத்து விட்டார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் என்று சொன்னாராம். அதில்  பொருளாதார  நீதிக்கு ஏற்ப, எல்லோருக்கும் எல்லாம் என்ற  திருத்தத்தை நிதியமைச்சர் முன்வைத்துள்ளார்.
மூலதனம் அரியணையில் அமர்ந்துள்ள சமூகங்களில் ஒரு பொருளாதார நீதியும், மூலதனம் அடக்கப்பட்ட சமூகங்களில் வேறொரு பொருளாதார நீதியும் நிலவும். இந்தியாவும் தமிழ்நாடும் மூலதனம் அரியணையில் அமர்ந்து உள்ள பகுதிகளே. இங்கு மு.க.ஸ்டாலின் முதல்வரான பிறகும் ரத்தத்தை, வியர்வையை, வாழ்க்கையை முதலீடு செய்தவர்களை காட்டிலும் மூலதன முதலீடே உயர்ந்ததாகும். தமிழ்நாடு உழைக்கும் தொழிலாளிகளுடைய, விவசாயிகளுடைய முதல் முகவரி ஆகாமல், முதலீட்டாளர்களின் முதல் முகவரி ஆவதே முதல்வர் முன்வைத்த நோக்கமாக உள்ளது. அது முதலீட்டாளர்களுக்கு ஆதரவாக அவர்கள் பக்கம் சாயும் பொருளாதார நீதியாகவும், சாமானிய மக்களுக்கு பொருளாதார அநீதியுமாகவுமே இருக்கும். இந்த பொருளாதார நீதி, மக்களை உள்ளடக்குவது, உள்வாங்குவது என்பதாக இல்லாமல் வெளியே தள்ளுவதாகவே இருக்கும். இங்கும் நிதிப் பொறுப்பு மற்றும் நிதி வரவு செலவு அறிக்கை மேலாளுமை சட்டத்திற்கு மாநில அரசு அடங்கிப் போகிறதே தவிர, அரசை கேள்விக்குள்ளாக்கவில்லை.
ரேஷன் அட்டை அடிப்படையில் குடும்ப தலைவிகளுக்கு உரிமைத் தொகை வழங்கப்படாது. வறியவர் யார் என சல்லடை போட்டுத் தேட ஒரு குழு அமைக்கப்படும். அந்த வல்லுநர் குழு பரிந்துரை, மக்களுக்கு  தரப்பட்ட வாக்குறுதியை விட, மக்களின் வாக்குகளை விட மேலானதாக்கப்படும்.
குடும்பத்திற்கு எரிவாயு மானியம் மாதம் ரூ.100, டீசல் விலை லிட்டருக்கு 3 குறைப்பு ஆகியவை பற்றி பேச்சு மூச்சு இல்லை.
கூட்டுறவு வங்கிகளில் நகைக் கடன், விவசாய கடன் தள்ளுபடி வாக்குறுதி என்ன ஆனது எனக் கேட்டால், கடன் வழங்கியதிலேயே ஏராளமான முறைகேடுகள், விசாரணை நடக்கிறது, முடிவு வரட்டும் பின்னர் பார்ப்போம் என்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஜ÷லை 31, 2021 நிலைமைப்படி, வேலை தேடி பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை 70 லட்சத்து 30 ஆயிரமாக இருக்கும்போது, 19 வயதிலிருந்து முப்பத்தைந்து வயது வரை வேலை தேடுபவர்கள், 44 லட்சத்து 15 ஆயிரம் ஆக இருக்கும்போது, முதலீட்டாளர்கள் 83,000 புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க உள்ளனர் என பெருமை பேசுவதில் என்ன பயன்?
அங்கன்வாடி, சத்துணவு ஊழியர்கள் அனைவரையும் அரசு ஊழியர் ஆக்குவது என்ற வாக்குறுதி பற்றி, 3 1/2 லட்சம் அரசு காலிப் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று வாக்குறுதி பற்றி, 2 லட்சம் புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும் என்ற வாக்குறுதி பற்றி மவுனம் சாதிப்பதில் என்ன நியாயம் இருக்க முடியும்?
மோடி, ரூ 6 லட்சம் கோடி பணம் புரட்ட, விமான நிலையம், ரயில் நிலையம், நெடுஞ்சாலைகள் அனைத்தையும் நீண்டகால குத்தகைக்கு விட முன்வரும்போது, தமிழ்நாட்டின்  நிதியமைச்சர், கார்ப்ரேட் நெடும் தடம் ஒன்று தமிழ்நாட்டில் போடப்படும் என்கிறார்.
விவசாய நிலங்களை காக்கும் விவசாய மண்டல சட்டத்திற்குள் திருச்சியை, கரூரை, அரியலூரை கொண்டு வராத திமுக அரசு, விளைநிலங்களில், பூமியைக் குடையும் எரிவாயு திட்டங்களுக்கு தடை போட முன்வரவில்லை.
நிதியமைச்சர், ஜெயலலிதா போல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள்  மேல் வன்மம் காட்டுகிறார். சூத்திர இழிவு நீங்கி தமிழ்நாட்டில் பெரும் எண்ணிக்கையில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அடித்தட்டு மக்கள் மத்தியில் இருந்து பல பத்தாண்டுகளாக வந்ததால்தான், கல்வியில், சுகாதாரத்தில், மக்கள் நலன் குறியீட்டு எண் வரிசையில் தமிழ்நாடு தலைகுனியாமல் இருக்கிறது என்பதை நீதிக்கட்சி வாரிசான நிதியமைச்சர் எப்படி மறந்தார்? அரசு ஊழியர் ஆசிரியர் ஊதியம் 24.92%, ஓய்வூதியம் 10.5%, மானியங்கள் 27.06% என வெள்ளை அறிக்கையில் சொன்ன பழனிவேல்ராஜன் ஊதியம் ஓய்வூதியம் 65% என நஞ்சை உமிழ்வது நியாயமா? ஒட்டு மொத்த செலவு வளர்ச்சி விகிதத்தோடு ஒப்பிடும்போது, ஊதிய, ஓய்வூதிய அதிகரிப்பு விகிதம் குறைவானது என வெள்ளை அறிக்கையில் சொல்லியுள்ள நிதியமைச்சர், அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் மேல் பழி சுமத்துவது, இரண்டு முறை நிவாரண நிதி அள்ளி அள்ளித் தந்தவர்கள் மீது சேறு இறைப்பது ஏற்கத்தக்கதல்ல.
ஏப்ரல் 2020, ஏப்ரல் 2021 பஞ்சப்படியை 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்களுக்கு, ஆசிரியர்களுக்கு, ஓய்வூதியதாரர்களுக்கு மறுத்துள்ள நிதியமைச்சர், பழைய ஓய்வூதியத் திட்ட வாக்குறுதியை நிறைவேற்ற முடியாது என கறாராக சொல்லிவிட்டார்.
கூட்டணி கூட்டாளிகள் மெல்லவும் முடியாமல் விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார்கள். விவசாய பட்ஜெட் விவசாய தொழிலாளர்கள் பற்றி எதுவும் சொல்லவில்லை என சுட்டிக் காட்டிய திருமாவளவன் பாராட்டுக்குரியவர். விவசாய பட்ஜெட்டை கிராமப்புற மேட்டுக் குடியினர் நலன்காக்கும் பாமக புகழ்ந்து தள்ளி திமுக கூட்டணியில் இடம் பிடிக்க துண்டு போடுகிறது.
நிதியமைச்சரும் தமிழ்நாடு அரசும் வாக்களித்த தமிழ்நாட்டு மக்களை சரியாக மதிப்பிடவும், மதிப்பு தரவும் கற்றுக்கொள்வது நல்லது.
மக்கள் கவனிக்கிறார்கள்.
முந்தைய அரசின் மீது பழிபோட்டு பழி போட்டு தப்பிக்க முடியாது. சேமிப்பு குவிந்துள்ள வருவாய் கொட்டுகிற கருவூலம் கைக்கு வராது என மு.க.ஸ்டாலினுக்கு, அவருக்கு அறிவுரை வழங்கியவர்களுக்கு தெரியாதா? தெரியாமல் புரியாமல் 'நல்லெண்ணத்தில்' வாக்குறுதி தந்து விட்டோம் என்று சொல்லி தப்பிக்க மக்கள் விட மாட்டார்கள்.
சென்னையின் தேசிய நகர்ப்புற வாழ்வாதார திட்ட தூய்மைப் பணியாளர்கள், எதிர்க் கட்சித் தலைவராக இருந்தபோது தூய்மைப் பணியை அவுட்சோர்ஸ் செய்யாதே, தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்கு எனக் கேட்ட முதல்வரே, எங்களுக்கு நியாயம் வேண்டும் என வேலை நிறுத்தம் உள்ளிட்ட போராட்டக் கொடி உயர்த்தி விட்டனர். தமிழ்நாட்டு மக்கள்  அஇஅதிமுக ஆட்சிக் காலத்தில், ஆயிரமாயிரம் போராட்டம் நடத்தியவர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்று என்பதோடு நில்லாமல், மக்கள் நலன் காக்கும், சமூக முன்னேற்றம் தரும், பிற்போக்கு விழுமியங்களை, நடவடிக்கைகளை ஒழிக்கக் கோரும் கோரிக்கைகளையும் மக்கள் முன்வைப்பார்கள். போராடுவார்கள்.

Search