பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின்
இன்னுமொரு வெற்றி
கோவை பிரிக்கால் நிர்வாகத்தால் 302 பேர் வெளிமாநிலங்களுக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கு (OP.எண்: 6/2019) சென்னை தொழிற் தீர்ப்பாயத்தில் நடைபெற்று வந்தது.
இந்த வழக்கில் 26.08.2021 அன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. தீர்ப்பு விவரங்களை தொழிலாளர்களுக்கு தெரிவிப்பதற்காக 03.09.2021 அன்று பிரிக்கால் தொழிலாளர் பொதுப் பேரவை நடைபெற்றது. தொழிலாளர்களின் நீதிக்கான சட்டப் போராட்டத்தில் சிறப்பான பங்களிப்பு செய்து வெற்றி தேடித் தந்த ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநிலத் தலைவர் தோழர் கு.பாரதி, பொதுச் செயலாளர் தோழர் கே.சுரேஷ் மற்றும் எம்.கே.நிவேதா (ஜனநாயக வழக்கறிஞர் சங்கம்) ஆகியோருக்கு, கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.கே. நினைவுப் பரிசு வழங்கினார்.
சென்னை தொழிற் தீர்ப்பாயம் OP.எண்: 6/2019 வழக்கின் தீர்ப்பு விவரங்களை தோழர் கு.பாரதி விளக்கிப் பேசினார். செப்டம்பர் 17 பிரச்சார பயணத்தில் பிரிக்கால் வழக்கு குறித்த விவரங்களையும், தேவைப்பட்டால் பிரிக்காலில் பணியிட மாற்றம் செய்யப்பட்ட தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு எடுக்கக் கோரும் கோரிக்கையும் எழுப்பப்படும் என்று பேசினார். ஜனநாயக வழக்கறிஞர்கள் சங்க மாநில பொதுச்செயலாளர் தோழர் கே.சுரேஷ், பிரிக்கால் தொழிலாளர் வழக்கை தொழிலாளர் வழக்காக கருதாமல் எங்கள் சொந்த வழக்காகவே கருதி நடத்தினோம் என்றார். தோழர் எம்.கே.நிவேதா, போராட்டத்தின் ஆரம்ப காலத்தில் சகதொழிலாளியின் குழந்தையாக அறிமுகமாகி, இன்று அதே போராட்டத்தின் வழக்கை நடத்தும் வழக்கறிஞராக வளர்ந்து, கூட்ட மேடையில் தொழிலாளர்களிடம் உறவு முறை விளித்து பேசியது தொழிலாளர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக்குழு தலைவர் தோழர் எஸ்.கே. வழக்கின் தீர்ப்பு, தீர்ப்பிற்கு பிறகான அடுத்த கட்ட நடவடிக்கைகள் பற்றி பேசினார். செப்டம்பர் 17 - 28 பிரச்சார பயணத்தில் திரளான தோழர்களின் பங்களிப்பை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தினார். முன்னதாக கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் தோழர்கள் நடராஜன், சுவாமிநாதன், ஜெயபிரகாஷ் நாராயணன் பேசினார்கள். நிறைவாக சிறையிலுள்ள தோழர்கள் மணிவண்ணன், ராமமூர்த்தி குடும்ப ஒருமைப்பாடு நிதி அவசியம் குறித்து பேசிய தோழர் சக்திவேல் நன்றியுரை கூறி கூட்டத்தை நிறைவு செய்தார்.
கூட்டத்திற்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் கமிட்டி மற்றும் கேஎம்பிடிஓஎஸ் நிர்வாகக் கமிட்டி சேர்ந்த கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் செப்டம்பர் 17 - 28 பிரச்சார பயணத்தில் கோவை மாவட்டத்தின் தயாரிப்பு, கோவை - மேட்டுப்பாளையம் ரோடு பிரச்சனையில் கட்சியின் தலையீடு ஆகியவை பற்றி விவாதிக்கப்பட்டது.
- ஜே.பி