மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்புகளின் மாநில ஊழியர் கூட்டம்
மக்களுக்கான மாணவர்கள், மக்களுக்கான இளைஞர்கள் அமைப்புகளின் மாநில ஊழியர் கூட்டம், ஆகஸ்ட் 22 அன்று, கட்சி தலைமையகத்தில் நடைபெற்றது.
தோழர்கள் ஆண்டனி தினகரன், மோகன்ராஜ், சீதா, சுகுமார் ஆகியோர் கூட்டத்துக்கு தலைமை தாங்கினர்.
சென்னை, அம்பத்தூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் இருந்து இளைஞர், மாணவர் முன்னணிகள் கலந்துகொண்டனர்.
கூட்டத்தின் தலைமைக் குழு தோழர்கள் தங்கள் போராட்ட அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இடதுசாரி அமைப்பொன்றின் கூட்டத்தில் முதல் முறை கலந்துகொள்ளும் தோழர்கள் எண்ணிக்கை பெரும்பான்மையாக இருந்தது.
அடுத்த கட்ட வேலை, மாணவர் இளைஞர்களின், மக்களுக்கான போராட்டங்களில் பங்களிப்பு எவ்வாறு இருக்க வேண்டும், அமைப்புரீதியான வேலைகளை முன்னெடுத்து செல்வது, அர்ப்பணிப்பின், தியாகத்தின், கடின உழைப்பின் அவசியம் ஆகியவை பற்றிய கருத்துகள் உள்ளடங்கிய தாள் முன்வைக்கப்பட்டது. வாசிக்கப்பட்டது.
இந்தத் தாளின் அடிப்படையில் தங்கள் பகுதிகளின் பிரச்சனைகள், மக்களுக்கான போராட்டங்களை முன்னெடுப்பது, எந்த வடிவிலான போராட்டங்களை முன்னெடுப்பது, அமைப்பு பற்றிய பார்வைகள், போராட்டங்களில் எவ்வாறு ஈடுபடுத்திக் கொள்வது, அந்தந்த மாவட்டங்களின் அடுத்த கட்ட வேலைகள் பற்றி கூட்டத்தில் கலந்துகொண்ட தோழர்கள் கருத்துகள் முன்வைத்தனர்.
இளைஞர் மற்றும் மாணவர் அமைப்பிற்கான கட்சியின் பொறுப்பாளர் தோழர் பாரதி கூட்டம் நடத்திய தலைமை தோழர்களுக்கு ஆலோசனையுடன் கூட்டத்தை முறைபடுத்தினார்.
சிறப்பு பார்வையாளர்களாக ஜனநாயக வழக்கறிஞர் சங்க மாநில பொதுச்செயலாளர் தோழர் சுரேஷ், கட்சியின் அம்பத்தூர் பகுதி செயலாளர் தோழர் மோகன், நாமக்கல் மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், கோவை மாவட்டச் செயலாளர் குருசாமி, மாநில ஆலோசனைக் குழு உறுப்பினர் தோழர் புவனா, கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தோழர் குமாரசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
தோழர்கள் பாரதி மற்றும் கோவிந்தராஜ் இளைஞர் அமைப்பின் தேவை மற்றும் நோக்கம் பற்றிய விரிவான உரை நிகழ்த்தினர். மாணவர்கள் இளைஞர்கள் அமைப்பிற்கான அடையாள அட்டை வெளியிடப்பட்டது.
தற்போதைய அரசியல் சூழல், மாணவர்கள் இளைஞர்களின் அரசியல் பங்களிப்புக்கான தேவை, அவசியம், இளைஞர் மாணவர் அமைப்பு எவ்வாறானதாக இருக்க வேண்டும், எவ்வாறான களங்களுக்கு அது தயாராக வேண்டும் என விளக்கி, ஆலோசனைகளை வழங்கி கட்சியின் ஆலோசனைக் குழுத் தலைவர் தோழர் குமாரசாமி பேசினார்.
18 பேர் கொண்ட மாநில குழு, 6 பேர் கொண்ட மாநில ஒருங்கிணைப்பு குழு உருவாக்கப்பட்டது.
கூட்டத்தைத் தொடர்ந்து, திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், காரணங்களை உருவாக்கி அதை கை காட்டி தப்பிக்க கூடாது, மக்கள் விரோத ஜனநாயக விரோத மோடி அரசு பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் தோழர் சீதா உரையாற்றினர்.
நீட் தேர்வு தொடர்பான வாக்குறுதியில் தமிழ்நாடு அரசு தடுமாறுவதை கண்டித்தும், எழுவர் விடுதலையின் மீது அரசின் அக்கறையின்மையை கண்டித்தும், தேர்தல் வாக்குறுதியை, சொன்னபடி எவ்வித விடுதலுமின்றி நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்தியும், எதிர்ப்பு இயக்கங்களை கட்டமைக்க மாநில குழு உறுதிபூண்டது. அதனடிப்படையில் அந்தந்த மாவட்டங்களில் எதிர்ப்பு இயக்கங்களை கட்டமைக்க மாநில குழு அழைப்பு விடுக்கிறது.
- ஆண்டனி தினகரன்