COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, September 5, 2021

தேசவிரோத பணமயமாக்கல்


சமூகப் பொறுப்பில் இருந்து  அரசு பின்வாங்கும் இயக்கப்போக்கு கிட்டத்தட்ட நிறைவுறுகிறது


பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ என்று பாரதி கேட்டான். அன்று, அப்படியில்லை என்று பதில் கிடைத்தது; கொள்ளை தடுத்து நிறுத்தப்பட்டது.

அந்நிய ஆட்சியாளர்கள் வெளியேற்றப்பட்டனர். இன்று சொந்த நாட்டு மக்கள் மீது போர் தொடுத்துள்ள ஓர் அரசாங்கம் தனக்குப் பிரியமான ஒரு சில பணக்காரர்களுக்கு, கார்ப்பரேட் கொள்ளையர்களுக்கு நாட்டு வளங்களை கூறு போட்டு கொடுத்து, அதற்கு பணமயமாக்கல் என்று பெயர் வைக்கிறது.
உள்கட்டுமான வசதிகளுக்கு, மேம்பட்ட, நீடித்த விதத்தில் நிதி உத்தரவாதம் செய்ய நாட்டின் சொத்துக்களை பணமாக்கும் திட்டம் 2021 - 2022 நிதிநிலை அறிக்கையில் முன்வைக்கப்பட்டது. 2020ல் இருந்து 2025க்குள் ஆண்டுக்கு ரூ.22 லட்சம் கோடி என ரூ.111 லட்சம் கோடி செலவில் உள்கட்டுமான வசதிகள் உருவாக்குவது திட்டம். சுதந்திர தின உரையிலும் ரூ.100 லட்சம் கோடியில் திட்டங்கள் வரவுள்ளன என்று தலைமை அமைச்சர் மோடி சொன்னார். இன்று 22, 111, 100 ஆகியவற்றுக்கு எங்கும் பொருந்தாமல் 6 என்ற இலக்கம் அவைக்கு வருகிறது.
இந்த தேசிய பணமயமாக்கத் திட்டம் எப்படி நிறைவேற்றப்படும் என்று விளக்க, திட்ட கமிஷன் ஒழிக்கப்பட்டு அந்த இடத்தில் உருவாக்கப்பட்ட, இந்தியாவை மாற்றும் தேசிய அமைப்பு, நிதி ஆயோக் (அயோக்) இரண்டு தொகுதிகள் வெளியிட்டுள்ளது.
நாட்டின் உள்கட்டுமான வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்குத் தருவார்களாம். அவர் கள் அதை காசாக்குவார்களாம். அந்தக் காசில் நாட்டுக்கான உள்கட்டுமான வளங்களை அரசு உருவாக்குமாம். இதை தனியார்மயமாக்கம் என்றோ, சொத்து விற்பனை என்றோ பார்க்கக் கூடாதாம். இப்படி இப்படி செய்ய வேண்டும் என்று கறாராக ஒப்பந்தம் போடுவார்களாம். 25 ஆண்டுகளுக்கு அல்லது அதற்கும் கூடுதல் காலத்துக்கு... திட்ட அறிக்கையின் முதல் தொகுதியில் இப்படிச் சொல்கிறார்கள். வெற்றிகரமான செயல்பாட்டில் இருக்கும், உருவாக்கி முடித்து செயல்பாட்டுக்கு தயாராக இருக்கும், எந்த பிரச்சனையும் இல்லாமல் வணிகம் நடக்கும் உத்தரவாதம் இருக்கும் ஒரு திட்டத்தை அந்த கட்டத்தில் தனியாரிடம் கொடுத்து அவர்கள் அந்த வணிகத்தை செய்வார்களாம். ஏதோ ஒரு தொகை வாங்கிக் கொண்டு தந்து  விடுவார்களாம்; அல்லது அவ்வப்போது அவர்கள் தருவதை வாங்கிக் கொள்வார்களாம். (எல்லாம் மொள்ளமாறித்தனமா இருக்கே....)
இந்த பணமயமாக்கலில் சொத்துரிமை கை மாறாது. அரசின் சொத்து அரசின் சொத்தாகவே இருக்கும். கார்ப்பரேட் முதலாளி அந்த சொத்தை அனுபவிப்பார். அரசு இதற்கு அந்த கார்ப்பரேட் முதலாளிக்கு சலுகையும் தரும். சொத்து கை மாறினால் என்ன மாறாவிட்டால் என்ன? இன்றைய நிலைமைகளில் அரசின் உரிமை என்றிருக்கிற சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்கள்தானே பெரிய அளவில் அனுபவிக்கிறார்கள். (இந்த வௌக்கெண்ணய சொல்றதுக்கு 88 பக்கம் எதுக்கு? அம்புக்குறியா போட்டு படம் எதுக்கு?)
பயன்படுத்தப்படாத நிலம், கட்டிடங்கள் போன்ற வளங்களை தருவது பற்றி இந்தத் திட்டம் பேசவில்லை. தற்போது நல்ல வருவாய் ஈட்டும் கருவான வளங்களைத்தான் கார்ப்பரேட் முதலாளிகளிடம் தரப் போகிறார்கள். ரயில்வே, தொலைதொடர்பு, எரிவாயு குழாய்கள், சாலைகள், துறைமுகங்கள், விமான நிலை யங்கள், நிலக்கரி மற்றும் கனிம வளச் சுரங்கங்கள்.... அய்ந்து நட்சத்திர தங்கும் விடுதிகளை, விளையாட்டு அரங்கங்களைக் கூட விட்டு வைக்கவில்லை. உணவுப் பாதுகாப்புச் சட்டம் கொண்டு வரப்பட்டு பறித்தெடுக்கப்பட்ட உணவுப் பாதுகாப்பில் மிச்சமிருக்கிற உணவு பாதுகாப்பை இந்த பணமயமாக்கல் திட்டம் அழித்துவிடும். ஏனென்றால் இந்திய உணவுக் கழகத்தின் கிட்டங்கிகள் பணமயமாக்கலுக்கு விடப்படும்.
பணமதிப்பகற்றமோ, பணமயமாக்கமோ, எதுவானாலும் கார்ப்பரேட்களுக்கு களிநடனம், சாமான்ய மக்களுக்கு கொடும் யதார்த்தம் என்பதாக இருக்கும்படி பார்த்து பார்த்து செய்கிறார்கள்.
விவசாயிகள் விரோத மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் விவாதங்களின்றி நிறைவேற்றப் பட்டதைத் தொடர்ந்து அதானி அரியானாவில் குதிர் கட்ட நிலம் வாங்கியிருக்கிறார் என்ற செய்தி பரபரப்பானது. அதானி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனம் அந்தச் செய்தி பொய்ச் செய்தி என்று அளித்த விளக்கத்தில் 2008ல் இருந்து அந்த குதிர் இயங்கி வருவதாகச் சொல்லி எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றது.
அதானி அக்ரி லாஜிஸ்டிக்ஸ் லிமிடெட் உணவுப் பொருட்களை கொள்முதல் செய்வது, சுத்தப்படுத்துவது, உலர்த்துவது, சேமித்து வைப்பது, விநியோக மய்யங்களுக்கு எடுத்துச் செல்வது ஆகிய பணிகளைச் செய்கிறது. இந்த மய்யங்கள் இந்திய உணவு கழகத்தின் ஒப்புதல் பெற்றவை. அதானி குழுமம் இந்த நடவடிக்கைகளை உணவுப் பாதுகாப்பை உறுதி செய்கிறது என்று சொல்கிறது. உணவுப் பாதுகாப்பின் எதிர்காலம் என்று தலைப்பிடுகிறது. இந்தத் தொழிலில் கடந்த 15 ஆண்டுகளாக, தற்போதைய அரசு ஆட்சியை பிடிக்கும் முன்பிருந்தே இருப்பதாகச் சொல்கிறது. விவசாயிகள் சிந்தும் ஒவ்வொரு துளி வியர்வைக்கும் அவர்களுக்கு கிடைக்க வேண்டியது கிடைப்பதை உறுதி செய்கிறார்களாம். விவசாயிகளை அதிகாரமுடையவர்கள் ஆக்குகிறார்களாம். 15 ஆண்டுகளாக இந்தத் தொழில் செய்து எத்தனை விவசாயிகளை அதிகாரமுடையவர்களாக்கி இருக்கிறார்கள் என்ற விவரம் எதுவும் அந்த தளத்தில் இல்லை. பஞ்சாபின் மோகாவிலும் அரியானாவின் கைத்தாலிலும் ராட்சத குதிர்கள் வைத்திருக்கிறார்கள். இவை ஒவ்வொன்றும் 2 லட்சம் டன் கொள்திறன் கொண்டவை. மும்பையில் 50,000 டன் கொள்திறன் கொண்ட, சென்னை,  கோவை, பெங்களூரு, கொல்கத்தா ஆகிய நகரங்களில் 25,000 டன் கொள்திறன் கொண்ட கிளை வசதிகள் வைத்திருக்கிறார்கள்.
இப்போது இந்திய உணவு கழக கிட்டங்கிகளின் 39%, அதாவது 210 லட்சம் மெட்ரிக் டன் கொள்திறன் வசதியுள்ள கிட்டங்கி வசதி,  தனியாருக்குத் தரப்பட்டு, ரூ.28,900 கோடியை அரசு பெறும். இந்திய உணவு கழகம் கொள்முதல் செய்த உணவு தானியத்தை சேமித்து வைக்க குதிர் கட்டிய அதானியிடம்தான் இனி இந்திய உணவு கழக கிட்டங்கிகளின் சேமிப்பு வசதியும் இருக்கும். வெறும் 2 லட்சம் கொள்திறன் உள்ள குதிரை நிர்வகித்த ஒரு நிறுவனத்துக்கு 210 லட்சம் டன் கொள்திறன் கொண்ட கிட்டங்கிகளைக் கொடுத்தால் எப்படி நிர்வகிக்கும்? ஒரு வேலையை அனுபவத்தின் அடிப்படையில்தான் தர முடியும். இந்த 210 லட்சம் டன் கொள் திறன் வசதியுள்ள கிட்டங்கிகளை நிர்வகிக்க, செயல்படுத்த அனுபவம் கொண்ட நிறுவனங்கள் உள்ளனவா?
பிறகு, உணவுப் பாதுகாப்பு தொடர்பான உடன்விளைவுகள், கிளைவிளைவுகள், வேர் விளைவுகள் எல்லாம் எப்படி இருக்கும் என நாம் எளிதில் கற்பனை செய்து கொள்ள முடியும். ரூ.28,900 கோடிக்கு நாட்டின் உணவுப் பாதுகாப்பின் மீது தனியார் கட்டுப்பாடு வரப்போகிறது என்ற ஆபத்து இதில் இருக்கிறது. உணவுப் பாதுகாப்பு என்ற அடிப்படையான உரிமைக்கு நேரவிருக்கும் கேடு பற்றியே கவலைப்படாமல், தொலைநோக்கு பார்வை எதுவும் இல்லாமல் கிட்டங்கிகளை தனியாருக்கு தர முடிவு செய்தவர்கள் வேறு எதைத்தான் விட்டுவைப்பார்கள்?
விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் எல்லாம் அம்பானிக்கும் அதானிக்கும் பிரித்துக் கொடுக்கும் இயக்கப்போக்கு ஏற்கனவே துவங்கி நடந்து கொண்டிருக்கிறது. அந்த இயக்கப் போக்கை பணமயமாக்கல் மேலும் துரிதப்படுத்தும். முழுமையாக்கும். எரிவாயு குழாய்கள் அம்பானிக்கும் மின்கட்டுமானம் அதானிக்கும் சுரங்கங்கள் இரண்டு பேருக்கும் என வஞ்சம் இல்லாமல் பிரித்து கொடுத்துவிடலாம். துறைமுகங்கள் மீதும் இருவருக்கும் கண் உள்ளது.
நட்டத்தில் இயங்குவதாகச் சொல்லப்படும் பிஎஸ்என்எல்லின் இழை கட்டுமானத்தையும் செல்கோபுர கட்டுமானத்தையும் விற்கிறார்கள். பிஎஸ்என்எல் நட்டத்தில் இயங்குகிறது என அவர்கள் இத்தனை ஆண்டுகள் சொல்லி வந்தது கட்டுக்கதை என்று இப்போது தெரிகிறது. ஏனென்றால் செயல்படும் வளங்களை பணமயமாக்குவதுதான் திட்டம்.
ஒட்டகங்கள் ஏற்கனவே கூடாரத்துக்குள் தலையை நுழைத்துவிட்டன. ஒட்டகங்களுக்கு மேலும் சிரமம் இல்லாமல் உள்ளே இருப்பவர்களை வெளியேற்ற பணமயமாக்கம் என்ற பசப்பு.
ரயில்வேயின் வளங்கள் ரூ.1,52,496 கோடிக்கும் சாலைகள் ரூ.1,62,422 கோடிக்கும் விற்கப்படும் என்றால், இப்போது இந்த அளவுக்கு பெரிய தொகை கொடுத்து வாங்க யார் முன்வருவார்கள்? பிரிய முதலாளிகள் பெருமளவில் கடன் பாக்கி வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு மேலும் கடன் கொடுத்தால், இந்த வளங்களை பெரிய மனதுடன் வாங்கி வளர்த்து, எடுத்துக் கொண்டு, எல்லா வளமும் வடிந்த பின் திருப்பி கொடுப்பார்கள். கன்று குட்டியை வளர்த்து அது மாடாகி பால் தரும் கட்டத்தில் இவர்களிடம் கொடுத்துவிட்டால் பிறகு கசாப்பு கட்டத்தில் திருப்பி கொடுப்பார்கள்.
ஆக, உண்மையில் ரூ.6 லட்சம் கோடி நாட்டுக்கு வரப் போவதில்லை. ரூ.6 லட்சம் கோடியும் அதற்கு மேல் வளமும் போகப் போகிறது. வளர்ச்சி நிதியம் உருவாக்க உள்கட்டுமானம் மற்றும் வளர்ச்சிக்கு நிதி வழங்கும் தேசிய வங்கி சட்டம் 2021 நிறைவேற்றப்பட்டது. துவக்கத்தில் இந்த வங்கியில் அரசு ரூ.20,000 கோடி போடும். அது தவிர 0.1% வரை வட்டிக்கு உத்தரவாதம் வழங்கும். மூன்று ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி வரை கடன் பத்திரங்கள் வைத்திருக்கும். ஒவ்வொரு துறைக்கும் தனித்தனியாக உள்கட்டுமான முதலீட்டு அறக்கட்டளை என்ற அமைப்பு பற்றியும் பணமயமாக்கல் திட்ட வரைவில் பேசப்படுகிறது. சுற்றிச்சுற்றி ஏதோ சொல்கிறார்கள். கூட்டிக் கழித்துப் பார்த்தால் கடன் பத்திரங்கள் தவிர எதுவும் மிஞ்சப் போவதில்லை.
திட்டத்தில் வேலை வாய்ப்பு பற்றி பேசுவது மிகவும் குரூரம்.
ரூ.6 லட்சம் கோடிக்கு, செயல்படும், லாபம் ஈட்டும் வளங்களை குத்தகைக்கு கொடுத்து அதில் வரும் பணத்தை வைத்து உள்கட்டுமான வசதிகளைப் பெருக்குவதை விட, இப்போது, அந்த வளங்களால் உருவாகும் செல்வத்தைக் கொண்டு, தற்போது, அந்த வளங்களை திறம் பட நிர்வகிக்கும் வளர்த்தெடுக்கும் அரசு நிறுவனங்களே மேலும் வளங்களை உருவாக்குவதில் என்ன பிரச்சனை? பணமயமாக்கல் திட்டத்தில் விற்கப்படுவதாகச் சொல்லப்படும் வளங்களின் மதிப்பை, விலையை எப்படி வரையறுக்கிறார்கள்? இந்த ரூ.6 லட்சம் கோடி என்பது, அந்த  சொத்துகள் உருவாக்கும் வளங்களின் மதிப்பா? அல்லது அந்த சொத்துகளின் மதிப்பே அவ்வளவுதானா? தனியாரை நம்பி நிலக்கரி மற்றும் கனிம வளச் சுரங்கங்களைத் தந்தால் அங்கு ஆபத்தான நிலைமைகளில் வேலை செய்யும் சுரங்கத் தொழிலாளர்களுக்கு யார் பொறுப்பு? சொத்து உன்னுடையது, அதனால் நீதான் பொறுப்பு என்று அந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் சொல்லாதா? அரசின், பொதுத் துறை நிறுவனங்களின் செயல்படும் சொத்துக்கள் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் போனால், அங்கு வேலை செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பு என்ன? இந்த அளவுக்கு பெரிய மதிப்பிலான சொத்தை நிர்வகிக்கும் திறன் கொண்ட கட்டமைப்புடனான, இந்த அளவுக்கு நிதித் திறன் கொண்ட தனியார் நிறுவனங்கள் உள்ளனவா? நாட்டின் சொத்துக்கு சேதம் ஏற்பட்டால் என்ன இழப்பீடு? யார் சொத்தை யார் விற்பது? நாட்டின் வளங்கள் எல்லாம் கார்ப்பரேட்டுகள் கட்டுப்பாட்டுக்குப் போய்விட்டால், பிறகு அரசுக்கு என்ன வேலை? அரசு என்ன வளத்தை உருவாக்கும்? அரசிடம் வளம் ஏதாவது இருந்தால்தானே அதை மக்களுக்கு பிரித்துத் தர முடியும்? வளம் எல்லாம் தனியார் கைகளுக்குப் போய்விட்டால் பின்னர் சாமானிய மக்களின் வாழ்வாதாரம், வாழ்க்கைத் தரம் ஆகியவற்றை மேம்படுத்த என்ன வழி?
மோடி அரசின் பல்வேறு மக்கள் விரோத, தேசவிரோத திட்டங்கள் போலவே பணமயமாக்கலும் பல கேள்விகள் எழுப்புகிறது. எந்தக் கேள்விக்கும் பதில் சொல்ல முடியாது என்பதால்தான் திட்ட விளக்கக் குறிப்பை பக்கம்பக்கமாக இரண்டு தொகுதிகள் வெளியிட்டு, வெற்றுச் சொற்களால் நிரப்பியிருக்கிறார்கள்.
குத்தகைக்கு விடப்படுவது, பணமயமாக்கப்படுவது சொத்துக்கள் மட்டுமல்ல. நாட்டின் வரலாறு, அதன் பெருமிதம், எதிர்காலம், நாட்டு மக்களின் வரலாறு, அதன் பெருமிதம், எதிர்காலம், நாட்டு மக்களின் இன்றைய நாளைய நல்வாழ்க்கை என எல்லாமும்தான்.
அரசு தனது சமூகப் பொறுப்பில் இருந்து  பின்வாங்கும் இயக்கப்போக்கு கிட்டத்தட்ட நிறைவுறுகிறது. இன்னும் மயானங்கள் மட்டும்தான் மிச்சமிருக்கின்றன. மயானங்கள் நிரம்பிய காலத்தை, ஆற்றங்கரையோரங்கள் மயானங்களாக மாறிய காலத்தை, தகன மேடை இல்லாமல் இந்தியர்களின் உயிரற்ற உடல்கள் காத்திருந்ததை மிகச் சமீபத்தில்தான் பார்த்தோம். மோடி அரசை அதன் போக்கில் அப்படியே விட்டால், மோடி அரசு அடுத்து வளர்த்தெடுக்க வேண்டிய முக்கியமான, அவசரமான கட்டுமானம் மயானமாகத்தான் இருக்கும். இந்த படுமோசமான நிலைமை உருவாவதற்குள் உடனடியாக நாட்டை மோடி அரசிடம் இருந்து மீட்க வேண்டும்.
நாட்டை, நாட்டு வளங்களை நிர்வகிக்க  திறன் இல்லை என்று, பணமயமாக்கல் திட்டம் மூலம் தானே அறிவித்துவிட்ட, நாட்டு வளங்களை பாதுகாக்க, மேம்படுத்த திறனற்ற, அந்தக் கடமையில் தவறிவிட்ட மோடி அரசு உடனடியாக பதவி விலக வேண்டும்.

Search