பரப்புரை இயக்கத்தின் துவக்கநாள் முதல் நிறைவுநாள் வரை கலந்து கொண்ட தோழர்களின் பார்வையில்...
தோழர் சக்திவேல்: கல்வி, வேலை வாய்ப்பில், தொழிலாளர் நலனில், மக்கள் நலனில் அக்கறையற்றதாக இருக்கும், நாட்டின் முதுகெலும்பாக உள்ள விவசாயிகளுக்கும் விவசாயத்திற்கும் எதிரான சட்டங்களை உருவாக்கும், மக்களை பிளவுபடுத்தும், நாட்டின் செல்வங்களை கார்ப்பரேட்களுக்கு விற்கும், அனைத்து தரப்பு மக்களுக்கும் நாட்டு நலனுக்கும் எதிராக செயல்படும் ஒன்றிய அரசு ஆட்சி செய்ய தகுதியற்றதாகிவிட்டது.
உலக அரங்கிலும் மோடி ஆட்சியின் அவலங்கள் விமர்சிக்கப்பட்டு வருகிறது.மாநில உரிமைகளை அடகு வைத்து, ஊழலில் ஊறித் திளைத்த அடிமை ஆட்சியை தமிழ்நாட்டு மக்கள் தூக்கி எறிந்துவிட்டார்கள். தேர்தல் வாக்குறுதிகளால் ஆட்சியில் அமர்ந்திருக்கும் திமுக அரசு, மக்கள் நம்பிக்கையை பெற தனக்கு வாக்களித்த மக்களுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அதை உறுதிப்படுத்தவும், மதவாத சக்தி தமிழகத்தில் வேரூன்றாமல் தடுக்கவும், திமுக தனது தேர்தல் வாக்குறுதியில் சொன்னபடி, பெண்களுக்கான உரிமை தொகை மாதம் ரூ.1000 உடனடியாக வழங்க வேண்டும். கேஸ் மானியம் ரூ100 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளர்களை காலமுறை ஊதியத்தோடு பணி நிரந்தரப்படுத்த வேண்டும். என்யுஎல்எம் தூய்மைப் பணியாளர்களை நிரந்தரப்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சி தலைவராக ஸ்டாலின் இருக்கும்போது சொன்னதை இன்று முதலமைச்சராக நடைமுறைப்படுத்த வேண்டும். தமிழகத்தை முதலீட்டலாளர்களின் முதல் முகவரியாக மாற்ற முயற்சிக்கும் தமிழக அரசு முதலீட்டாளர்களோடு போடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் தொழிலாளர்களின் பணிஓய்வுக் காலம் வரை வேலை உத்தரவாதப்படுத்த வேண்டும். இந்த கோரிக்கைகளோடு பரப்புரை பயணம் சென்றபோது பெருந்திரள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது. கொரோனா தொற்று நெருக்கடி காலத்திலும், தமிழகத்தின் மக்கள் சார்பு எதிர்க்கட்சி பாத்திரமாற்றுவதில் கம்யூனிஸ்ட் கட்சி முன்னணியில் இருக்கிறது.
தோழர் கோவிந்தராஜ்: பரப்புரை பயணம் நாம் மேற்கொண்ட மிகப்பெரிய அரசியல் பயணமாகும். செப்டம்பர் 17 பெரியார் பிறந்த நாள், செப்டம்பர் 28 மாவீரன் பகத்சிங் பிறந்த நாள் தேர்வு மிக முக்கியமானதாகும்.
மோடி அரசு மீது விவசாயிகள், தொழிலாளர்கள், மாணவர்கள், இளைஞர்கள், மீனவர்கள் என நாட்டு மக்கள் கோபம் கொண்டு போராடிக் கொண்டிருக்கும் சூழலில் மக்கள் விரோத, தேசவிரோத மோடி அரசு பதவி விலக வேண்டும் என பரப்புரை பயணம் முன்வைத்தது.
திமுக அரசு தேர்தல் வாக்குறுதிகளை உடனே நிறைவேற்ற வேண்டும் என கேட்டு மக்கள் மத்தியில் சென்றுள்ளோம்.
மேற்கில் துவங்கிய இந்த அரசியல் பயணம் தலைநகர் மண்டலத்தில் சுடர்விட்டு எரிந்தது. இந்த பரப்புரை பயணம், மக்களிடம் செல்ல, அமைப்புகளை இயக்க, பலப்படுத்த, புதிய வாய்ப்புகள் கிடைக்க உதவி உள்ளது. தமிழ்நாட்டில் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே காத்திரமான மக்கள் சார்பு எதிர்க்கட்சி பாத்திரமாற்றுகிறது. சேலத்தில் கோஆப்டெக்ஸ் தொழிலாளர்களின் கோரிக்கையை முன்வைத்து பரப்புரை செய்துவிட்டு வந்தோம். பரப்புரை பயணம் நிறைவு பெறுவதற்குள் நாம் முன்வைத்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று, சட்டமன்றத்தில் பெரிய எதிர்க்கட்சியாக இருக்கும் அஇஅதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கோரிய செய்தி தமிழகத்தில் முக்கிய செய்தியாக மாறியது. வரும் நாட்களில் நாம் எழுப்பும் கோரிக்கையை யாரும் ஒதுக்கிவிட்டு அரசியல் நடத்த முடியாத நிலை ஏற்படும்.