COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 17, 2012

1

களம்

காதலை ஆதரிப்போம். எதிர்ப்பவர்களை புறக்கணிப்போம்.

காதலை விதியாக்குவோம். விவாகரத்தை எளிதாக்குவோம்.

மயிலாடுதுறையில் பேரணி, கருத்தரங்கம்

காதலை ஆதரிப்போம், எதிர்ப்பவர்களை புறக்கணிப்போம், காதலை விதியாக்குவோம், விவாகரத்தை எளிதாக்குவோம் என்ற பொருளில் 08.12.2012 அன்று மயிலாடுதுறையில் புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடத்தின. 170க்கும் மேற்பட்ட மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொண்டனர். சாதி வெறியை தூண்டும் ராமதாஸ், காடுவெட்டி குருவை கைது செய்யும்படியும், வேடிக்கை பார்க்கிற தமிழக அரசை கண்டித்தும் முழக்கமிட்டனர். பேரணியைத் தொடர்ந்து நடந்த கருத்தரங்கத்திற்கு நாகை மாவட்ட புரட்சிகர இளைஞர் கழக பொறுப்பாளர் தோழர் கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கருத்தரங்கில் முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, சிபிஅய் (எம்.எல்) மாநிலக்குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன், தோழர், டி.கே.எஸ்.ஜனார்தனன், கடலூர் மாவட்ட மாணவர் கழக பொறுப்பாளர் தோழர் ராஜசங்கர், மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் பாரதி கலந்து கொண்டு உரையாற்றினார்.

 

பதானிதோலா, பரமக்குடி, கீழ்வெண்மணி, கொடியங்குளம், தர்மபுரி

இனியும் அனுமதிக்க மாட்டோம்!

கரம்பக்குடியில் ஆர்ப்பாட்டம்

பதானிதோலா, பரமக்குடி, கீழ்வெண்மணி, கொடியங்குளம், தர்மபுரி இனியும் அனுமதிக்க மாட்டோம் என்ற முழக்கத்துடன் கரம்பக்குடியில் டிசம்பர் 9 அன்று புரட்சிகர இளைஞர் கழகமும் அகில இந்திய மாணவர் கழகமும் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 60க்கும் மேற்பட்ட மாணவர், இளைஞர்கள் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கரமக்குடி ஒன்றிய புரட்சிகர இளைஞர் கழக அமைப்பாளர் தோழர் சண்முக சுந்தரம் தலைமை தாங்கினார். சிபிஅய் (எம்.எல்) மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான், புரட்சிகர இளைஞர் கழக மாவட்ட தலைவர்கள் தோழர்கள் கலைச்செல்வன், விஜயன், தோழர் கோவிந்தராஜ், மாணவர் கழக மாநில செயலாளர் தோழர் ரமேஷ்வர் பிரசாத், புரட்சிகர இளைஞர் கழக மாநில அமைப்பாளர் தோழர் பாரதி ஆகியோர் உரையாற்றினர்.

 

பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தம் வெல்லட்டும்!

அந்நிய நேரடி முதலீட்டை எதிர்த்தும், தர்மபுரி தலித் மக்கள் மீதான தாக்குதலை கண்டித்தும், குமரி மாவட்டச் செயலாளர் தோழர் அந்தோணிமுத்து, விழுப்புரம் பெண்கள் கழக மாவட்ட அமைப்பாளர் தோழர் சுசீலா ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்ததை கண்டித்தும், பிப்ரவரி 20, 21 அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தும் 10.12.2012 அன்று அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகமும், ஏஅய்சிசிடியுவும் அம்பத்தூரில் கண்டனக் கூட்டம் நடத்தின. பெண்கள் கழக தேசியக்குழு உறுப்பினர் தோழர் லில்லி தலைமை தாங்கினார். முற்போக்கு பெண்கள் கழக மாநிலத் தலைவர் தோழர் தேன்மொழி, மாவட்டத் தலைவர் தோழர் தேவகி, நிர்வாகிகள் தோழர்கள் குப்பாபாய், ரேவதி, மாலெ கட்சி மாநிலக்குழு உறுப்பினர் தோழர் ஜவஹர், மாவட்டச் செயலாளர் தோழர் சேகர், மாணவர் கழக மாநிலத் தலைவர் தோழர் மலர்விழி, தமிழ்நாடு ஜனநாயக கட்டுமான தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் முனுசாமி, உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர் தோழர் மோகன், வேணுகோபால் ஆகியோர் உரையாற்றினர்.

களச்செய்திகள் தொகுப்பு: எஸ்.சேகர்

குறைந்தபட்ச அடிப்படை வசதிகள் கோரி

அம்பத்தூர் கல்யாணபுரத்தில் 81, 82, 85 வார்டுகளின் பொதுக் கழிப்பிடம் மின் மோட்டார் விசை பம்பு பழுது பார்த்து புதிய மோட்டார் பொறுத்துவது 2 வருடங்களாக தொடர் பிரச்சனையாக உள்ளது. அம்பத்தூர் மாநகராட்சியில் கல்யாணபுரம் பிரபு, விஜய், ஜான், பீட்டர்,அந்தோணி, சாம்சன், ஏகாத்தம்மாள், பத்மா, நாகம்மாள், அன்பு ஆகிய தோழர்கள் கோரிக்கை மனுவுடன் அதிகாரிகளை முற்றுகையிட்டனர். உடனே கல்யாணபுரம் பகுதிக்குள் அதிகாரிகள் வந்து துரித நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். வரதராஜபுரம் பகுதியில் நடேசன் தெருவில் உள்ள சாலையில் பாதாள சாக்கடை மூடி போடாமல் சாலையில் நடப்பதற்கு சமன் செய்யாமல்  இருந்ததை சீர்செய்யக் கோரி மனு கொடுத்து அடுத்த நாளே சாலை சரி செய்துள்ளார்கள். ராஜீவ்காந்தி தெருவில் சிபிஅய் (எம்.எல்), உழைப்போர் உரிமை இயக்க உறுப்பினர்கள் சதாசிவம், முருகன், மாணிக்கம், கலாவதி, உழைப்போர் உரிமை இயக்க மாவட்டத் தலைவர்கள் தோழர்கள் மோகன், பசுபதி, புகழ் ஆகியோர் மாநகராட்சி அதிகாரிகளைச் சந்தித்து கோரிக்கை மனு  கொடுத்ததன் அடிப்படையில் பொது மக்கள் சொன்ன இடத்தில் குடிநீர் டேங்க் வைக்கப்பட்டுள்ளது. குண்டும் குழியுமான சாலையை உடனே சீரமைக்க வேண்டும் எனவும் மாநகராட்சி அதிகாரிகளிடம் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டுள்ளது. கல்யாணபுரம் பகுதியில், மாரியம்மன் கோயில் 3வது தெருவில் குடிநீர் குழாய் இணைப்பு இல்லை. இங்கு உடனடியாக குடிநீர் டேங்க் அமைத்து தர வேண்டும் என கோரிக்கை மனு தரப்பட்டுள்ளது. மாநகராட்சி குடிநீர் பிரச்சனையைத் தீர்க்கவில்லை என்றால் பெண்களும் இளைஞர்களும் கோரிக்கை மனுவுடன் ரிப்பன் மாளிகையை முற்றுகையிடுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Search