COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 17, 2012

2

தலையங்கம்

தற்காலிநடவடிக்கைகள்

தமிழக மக்கள் சீற்றத்தைத் தணிக்காது

மக்கள் சந்திக்கும் எந்தப் பிரச்சனையிலும் அரசாங்கங்கள் ஏதாவது நடவடிக்கை எடுக்க வேண்டுமானால் சாமான்ய மக்கள் சிலர் சாக வேண்டும். பள்ளிக்கூடம் எரிந்தால், கட்டிட விதிகள் வரும். பேருந்தின் கீழ் நசுங்கிப் போனால் வாகன விதிகள் வரும். கட்டிடம் இடிந்து தலையில் விழுந்தால் கைது நடக்கும். இப்படி இன்னும் பலப்பல. ஆனால், எல்லாம் தற்காலிக நடவடிக்கைகள். அந்தப் பிரச்சனையில் அந்த நேரத்தில் மக்களின் சீற்றத்துக்கு பதில் சொல்ல உள்ளீடற்ற சில அடையாள நடவடிக்கைகள். பிறகு மீண்டும் பிரச்சனை, மீண்டும் உயிரிழப்பு, மீண்டும் கண்துடைப்பு அறிவிப்பு... இந்தத் தற்காலிக மாதிரிக்குள்தான் தமிழ்நாட்டிலும் ஆட்சி நடக்கிறது. இந்த முறை தமிழ்நாட்டின் வறிய விவசாயிகள் சிலர் தற்கொலை செய்துகொண்டார்கள்.

மழை பொய்த்தது. காவிரியில் நீர் இல்லை. கர்நாடகம் தரவில்லை. தங்களுக்கும் தண்ணீர் இல்லை என்று அங்குள்ள விவசாயிகள் சொன்னார்கள். ஒரு பக்கம் மத்திய அய்முகூ, கர்நாடக, தமிழக அரசுகள் வசதியாக காவிரி அரசியல் நடத்திக் கொண்டிருக்க, தமிழ்நாட்டின் நெற்களஞ்சியப் பகுதி தற்கொலைக் களமாகக் காத்திருந்தது. அடுத்தடுத்து நான்கு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டார்கள்.

நாகையில், கீழ்வேளூர் அருகில் உள்ள கூரத்தான்குடியில் ஆறு ஏக்கர் நிலத்தில் நெல் பயிரிட்டிருந்த ராஜாங்கம், தண்ணீர் இல்லாமல் பயிர் கருகிப் போனதால் மனமுடைந்து, பூச்சியைக் கொல்ல வைத்திருந்த மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். ரூ.1 லட்சத்துக்கும் மேல் கடன் பட்டிருந்தார். கீழையூர் அருகில் உள்ள மகிழி கிராமத்தில், ஓர் ஏக்கர் குத்தகை நிலத்திலும் ஓர் ஏக்கர் சொந்த நிலத்திலும், ரூ.50,000 செலவழித்து பயிரிட்டு, தண்ணீருக்காக காத்திருந்து கிடைக்காமல், வாடகைக்கு டீசல் எஞ்சின் வாங்கக் காசில்லாமல், கடனும் கிடைக்காமல் கலங்கிப் போய், தூக்குப் போட்டு செத்துப் போனார் செல்வராஜ் என்ற வறிய விவசாயி. இந்த இரண்டு தற்கொலைகளும் நவம்பர் மாதத்தின் இறுதி வாரத்தில் நடந்தன. ஜூன் மாதத்தில் மயிலாடுதுறை அருகில் உள்ள மாப்படுகையைச் சேர்ந்த முருகையன் என்ற கரும்பு விவசாயி, விளைபொருள் விலை போகாததால் மனமுடைந்துபோய் முதலமைச்சருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்துகொண்டார். தனது உடலை மருத்துவமனைக்குத் தந்து விட வேண்டும் என்று தனது கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். டிசம்பர் 8 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைபூண்டி அருகில் உள்ள ஆந்தாங்கரையைச் சேர்ந்த அப்துல் ரகீம் என்ற விவசாயி பயிர் கருகுவதைக் காணச் சகிக்காமல் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டார். திருவாரூர் மாவட்டத்தில் நெகமம் கிராமத்தில் நாகூரான் என்ற விவசாயி தான் வைத்த பயிர் வாடியதைக் கண்டு பூச்சி மருந்து குடித்து ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக 11.12.2012 அன்று தினகரன் மின்னணு ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

ராஜாங்கம், செல்வராஜ் மற்றும் அப்துல் ரகீம் சாவுகளுக்கு, காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்தை காரணம் காட்டி தப்பிக்கலாம். பெய்யாத மழை மீது பழி போடலாம். விளைபொருளுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய தமிழக அரசாங்கத்தின் அலட்சியமே முருகையன் சாவுக்கு நேரடி காரணம் என்பதை மறைப்பது கடினம்.

செல்வராஜ் தற்கொலையைக் கூட தடுத்திருக்க முடியும் என்கிறார் கருன்கணி ஊராட்சித் தலைவர் ரவிச்சந்திரன். வெள்ளையாற்றில் தடுப்பணை கட்டி மழை காலத்தில் வீணாகும் வெள்ள நீரை சேமித்தாலே விவசாயத்துக்குப் போதும், அதைச் செய்ய அரசுகள் தவறுகின்றன என்கிறார். முற்றிப் போயிருக்கும் விவசாய நெருக்கடிக்குத் தீர்வு காண, தமிழக அரசு தயாராக இல்லை என்பதை இந்த தற்கொலைச் சாவுகள் மீண்டும் மெய்ப்பித்துள்ளன. தமிழக விவசாயிகள் சந்திக்கும் அத்தனை பிரச்சனை களுக்கும் வராத காவிரிதான் காரணம் என்று காட்டி தப்பிக்கப் பார்க்கிறது ஜெயலலிதா அரசாங்கம். காவிரிப் பிரச்சனை 2012 நவம்பரில் வந்துவிடவில்லை. 45 ஆண்டுகளாக இருக்கிற பிரச்சனை, மழை பொய்க்கும்போது, வலுத்து வெடிக்கும் என்பது ஆட்சி நடத்துபவர்களுக்கு சொல்லித் தெரிய வேண்டியதில்லை. 2023க்கு கனவுத் திட்டம் வைத்திருக்கும் ஜெயலலிதா இன்று விவசாயிகள் சாவின் எல்லைக்குச் செல்கிற வரை வேடிக்கைப் பார்க்கிறார்.

தற்கொலைகளில் சில விவசாயிகள் உயிர்விட்ட பிறகு, காவிரி விசயத்தில் கர்நாடகத்தை போதுமான அளவுக்கு வில்லனாகச் சித்தரித்த பிறகு, இரண்டு மாநிலங்களிலும் உள்ள உழைக்கும் மக்கள் இடையில் அடுத்த ஆண்டு வரைக்கும் போதுமான அளவு விரோதத்தை உருவாக்கிவிட்ட பிறகு, நிவாரண முடிப்பு அறிவிக்கிறார் ஜெயலலிதா. இந்த அறிவிப்பு சில வாரங்கள் முன்பு வந்திருந்தால், நிவாரணம் கிடைக்கிறதோ இல்லையோ, ஏதாவது உதவி கிடைக்கும் என்ற சிறு நம்பிக்கையாவது தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளைக் காப்பாற்றி இருக்கும்.

மறுபுறம், தமிழகத்தின் தொழில் வளர்ச்சி என ஆட்சியாளர்கள் சிலாகிக்கிற ஒடுக்குமுறை மற்றும் சுரண்டல்மிக்க வேலை நிலைமைகளின் விளைவால் ஃபோர்டு, சிதார் கெமிக்கல்ஸ் போன்ற ஆலைகளில் வேலை மறுக்கப்பட்ட தொழிலாளர்கள் தற்கொலை செய்துகொள்கிறார்கள். இன்று வரை ஜெயலலிதா அந்தத் தற்கொலைகள் பற்றி வாய் திறக்கவில்லை.

விவசாயிகள் சாவை நோக்கிச் செல்லும் வரை அவர்களைக் காப்பாற்றும் நடவடிக்கை ஏதும் எடுக்காமல் காவிரி அரசியலில் குளிர் காய்ந்து கொண்டிருந்த இந்த ஜெயலலிதாதான் தமிழக மக்களை நல்மேய்ப்பராகக் காப்பார் என்று சமீபத்தில் நடந்த கிறிஸ்துமஸ் விழா ஒன்றில் சொல்லப்பட்டது. ஜெயலலிதா என்கிற நல்மேய்ப்பர் மத்திய அதிகாரத்தை நோக்கி வழிநடத்துவார் என்றும் அந்த விழாவில் எதிர்ப்பார்ப்பு தெரிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவைப் பொறுத்தவரை அனைத்து சாலைகளும் 2014 நோக்கிச் செல்ல வேண்டும்.

சாவுகளை வைத்து அரசியல் நடத்துவதில் சற்றும் சளைக்காத திமுக தலைவர் கருணாநிதி காவிரிப் பிரச்சனையில் கர்நாடக அரசு போல், தமிழக அரசு, அனைத்துக் கட்சிக் கூட்டம் நடத்தி தமிழக மக்களின் ஒற்றுமையைக் காட்டியிருக்க வேண்டும் என்று இல்லாத ஊருக்கு போகாத வழி சொன்னார். கருணாநிதி நடத்தும் அரசியல் நாடகங்கள் எல்லையற்ற துன்பத்தில் உழலுகிற தமிழகத்தின் சாமான்ய மக்களுக்கு அவ்வப்போது சில நகைச்சுவை பக்கங்களை தந்து செல்கின்றன. அவர் கடைசியாக நடத்திய அந்நிய நேரடி முதலீட்டு நாடகத்தின் கடைசி காட்சியில், நாடாளுமன்றத்தில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீட்டுக்கு ஆதரவாக வாக்களித்துவிட்டு, தமிழ்நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு ரகசியமாக நடந்தேறுகிறது என்று கூப்பாடு போட்டார். அது பற்றி விசாரணை வேண்டும் என்றார். தமிழ்நாட்டில் சில்லறை வர்த்தகத்தில் அந்நிய நேரடி முதலீடு இருக்காது என்று ஜெயலலிதா சொன்னதை நம்பித்தான் நாடாளுமன்றத்தில் அய்முகூவுக்கு ஆதரவாக வாக்களித்தாராம். வெகுவிரைவில் மற்றுமொரு நாடகத்துடன் மக்களைச் சந்திக்கும் வரை, ஸ்டாலின், வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஜெயலலிதாவுக்குப் பாடம் புகட்டுவார்கள் என்று விளம்பர இடைவேளை நிகழ்ச்சிகள் நடத்துவார்.

தான் எந்த மக்களை பிரதிநிதித்துவப் படுத்துவதாகச் சொன்னாரோ, அதே மக்களால் புறக்கணிக்கப்பட்டு, தனிமைப்படுத்தப்பட்ட ராமதாஸ், தான் இழந்த அடித்தளத்தை மீட்க, தமிழக மக்களை பிளவுபடுத்தும் ஆபத்தான அரசியலை கையில் எடுத்திருக்கிறார். தருமபுரியில் அவர் பற்ற வைத்த சாதித் தீ அணையாமல் பார்த்துக் கொள்கிறார். தமிழகத்தின் தலித் மக்கள் மீதான ஒடுக்குமுறையின் அடிப்படையில் பிற சாதிகள் ஒற்றுமை கட்டப் பார்க்கிறார்.

தமிழ்நாட்டின் அதிகாரபூர்வ எதிர்க்கட்சி திக்குத்தெரியாத காட்டில் சிக்கிக் கொண்டு தவிக்கிறது. தேமுதிக சட்டமன்ற உறுப்பினர்கள் ஒவ்வொருவராக அம்மா புகழ் பாடத் துவங்குகிறார்கள். அதிமுகவிடம் தஞ்சம் புகுகிறார்கள். நாடாளுமன்ற தேர்தல் வருமுன் கட்சியில் யார் மிஞ்சுவார்கள் என்ற கவலை பிடித்தாட்ட, தமிழக மக்களின் பிரச்சனைகளில் பொருளுள்ள தலையீடு செய்யாமல் தள்ளி நிற்கிறார்கள்.

அதிகாரபூர்வ இடதுகள் ஜெயலலிதாவின் மனம் கோணாமல் அரசியல் நடத்துவதில்தான் கவனமாக நடந்துகொள்கிறார்கள். 2014 கவலை அந்த எல்லைக் கோட்டை தாண்டிச் சென்று விடாமல் அவர்களை நிறுத்தி வைத்துள்ளது. மத்திய அரசு எதிர்ப்பு மட்டும் இப்போதைக்கு போதுமான அரசியல் நடவடிக்கை என்று சுருங்கி நிற்கிறார்கள்.

தமிழகத்தின் கட்சிகள் அனைத்தும் 2014 ஒன்றையே இலக்காகக் கொண்டு மக்கள் பிரச்சனைகளில் இருந்து விலகி நிற்கிற சூழலில் மாலெ கட்சியும் அதன் வெகுமக்கள் அமைப்புக்களும் தீவிரமான மக்கள் போராட்டங்களை கட்டமைத்து களம் காண்கின்றன. மன்மோகன் அரசை வெளியேற்றுவது மட்டும் போதாது,மன்மோகன் அரசு முன்னகர்த்துகிற பெரு முதலாளித்துவ ஆதரவு, நாசகர, மக்கள் விரோத நவதாராளவாதக் கொள்கைகள் பின்னோக்கித் திருப்பப்பட வேண்டும் என்று முழக்கத்துடன் 2012 பிப்ரவரி 20 - 21 அகில இந்திய பொது வேலைநிறுத்தத்துக்கு தயாராகின்றன. தமிழக உழைக்கும் மக்கள் பிரச்சனைகளை விவாதிக்க சிறப்பு சட்டமன்றத் தொடர் கூட்டு என்ற முழக்கத்துடன் 2013 பிப்ரவரி 2 முதல் 12 வரை குமரியில் இருந்தும் கோவையில் இருந்தும் நெடும்பயணப் பிரச்சாரம் நடத்த ஏஅய்சிசிடியு நடத்த தயாராகிறது. இந்தப் பின்னணியில் குமரி மற்றும் விழுப்புரம் மாவட்ட மாலெ கட்சித் தலைவர்கள் பொய் வழக்குகளில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகிறார்கள். அவர்கள் பிணையில் விடுவிக்கப்படுவதை தடுக்க குமரி மற்றும் விழுப்புரம் காவல்துறை முயற்சி எடுக்கிறது. இந்த நடவடிக்கைகள் மாலெ கட்சியின் ஏஅய்சிசிடியுவின் போராட்ட முன்முயற்சிகளை முடக்கிவிடப் போவதில்லை.

தமிழக சாமான்ய உழைக்கும் மக்களின் வாழ்வாதாரப் பிரச்சனைகளில் இருந்து விலகி நின்று தற்காலிக அறிவிப்புகளுக்கு அப்பால் செல்லாமல் வெற்று முழக்கமிடும் அரசியல் கட்சிகளுக்கு தமிழக மக்கள் தங்கள் தீவிரப்படுத்தப்பட்ட போராட்டங்கள் மூலம் பதிலடி தருவார்கள். அந்தப் போராட்டங்களில் முன்னணி சக்தியாக மாலெ கட்சி நிற்கும்

Search