COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, December 17, 2012

6

கண்டனம்

மாலெ கட்சித் தலைவர்கள் மீது பொய் வழக்குப் போட்டு கைது செய்த காவல்துறையினர் மீது நடவடிக்கை எடு!

மாநில உள்துறைச் செயலர், மாநில பெண்கள் ஆணையத் தலைவர், மாநில மனித உரிமை ஆணையத் தலைவர் ஆகியோருக்கு மாலெ கட்சி இந்தக் கடிதத்தை 05.12.12 அன்று தந்துள்ளது. 07.12.12 அன்று தோழர் சுசீலா பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். 11.02.12 அன்று குமரி தோழர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.

அய்யா/அம்மையீர்

பொருள்: செஞ்சி, குளச்சல் காவல்நிலையங்கள் எமது தோழர்கள் மீது அநியாயமாக ஏவியுள்ள ஒடுக்குமுறை மற்றும் சித்தரவதை தொடர்பாக நடவடிக்கைக் கோருதல்

எமது கட்சி அகில இந்திய அளவில் பதிவு செய்யப்பட்ட ஓர் அரசியல் கட்சி. பீகாரில் 7 சட்டமன்ற உறுப்பினர்களுடன், மாநிலத்தில் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றிருந்தது.

எமது வெகுமக்கள் அமைப்புக்களில் ஏஅய்சிசிடியு தொழிற்சங்க மய்யம் மத்திய அரசின் அங்கீகாரம் பெற்ற அமைப்பாகும். எமது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகம் அசாம் மற்றும் பீகார் மாநிலங்களில் பெண்கள் ஆணையங்களில் இடம் பெற்றிருந்தது. எமது விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள் அமைப்புக்கள், பல லட்சக்கணக்கான உறுப்பினர்களுடன் செயல்படுகின்றன.

ஜனநாயக அரசியலில் ஈடுபட்டுள்ள மக்கள் பணியாற்றுகிற எமது தோழர்கள் மீது, விழுப்புரம் மாவட்ட செஞ்சி காவல்நிலையமும் கன்னியாகுமரி மாவட்ட குளச்சல் காவல்நிலையமும் ஒடுக்குமுறைகளை ஏவிவிட்டுள்ளன. இவை பற்றி தமிழ்நாடு காவல்துறை தலைவருக்கு 27.11.2012 அன்று நாங்கள் கொடுத்த புகார் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாகத் தெரியவில்லை. இந்தப் பின்னணியில்தான் தங்களிடம் இந்தப் புகாரைத் தருகிறோம்.

விழுப்புரம் மாவட்டத்தில் எங்களது அகில இந்திய முற்போக்கு பெண்கள் கழகத்தின் மாவட்டத் தலைவராக தோழர் சுசீலா பணியாற்றி வருகிறார். தலித்துகள், ஒடுக்கப்பட்டோர், வறியவர்கள் உரிமைகளுக்காக பாடுபடும் எமது கட்சியும் அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமும் 23.11.2012 அன்று செஞ்சி தாலுகா அலுவலகம் முன்பு அனுமதி பெற்று ஆர்ப்பாட்டம் நடத்தினர். தலித்துகள், தலித் அல்லாதவர்கள் என உழைக்கிற வறிய மக்கள் கலந்துகொண்ட இந்த ஆர்ப்பாட்டத்தில், திருநாம்பூண்டியைச் சேர்ந்த திரு.பிரபாகரன் என்பவரை தலித் சாதிப் பெயர் சொல்லி ஏசியதாக எங்கள் தோழர் சுசீலா மீது செஞ்சி காவல்ஆய்வாளர் பொய் வழக்குப் போட்டு 24.11.2012 அன்று விடியற்காலை அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளார். திரு.பிரபாகரன் பல மக்கள் விரோதச் செயல்களில் ஈடுபடுவதாகப் புகார்கள் வந்ததால் அவர் எங்கள் கட்சியிலும் புரட்சிகர இளைஞர் கழகத்திலும் தொடர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டு அவரும் வெளியேறிவிட்டார். அவர் தந்த பொய் புகார் அடிப்படையில் எந்த ஆதாரமும் இல்லாமல், அனுமதி பெற்று நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தில், தலித் மக்கள் கலந்துகொண்ட ஆர்ப்பாட்டத்தில் வன்கொடுமை குற்றம் செய்ததாக தோழர் சுசீலா மீது பொய்யாக வழக்கை ஜோடித்துள்ளனர்.

செஞ்சியில் விடாப்பிடியாக கிராமப்புற உழைக்கும் மக்களுக்காக குரல் கொடுத்துவரும் சாமான்யப் பெண்ணான தோழர் சுசீலா மீது போடப்பட்ட பொய் வழக்கு ரத்து செய்யப்படுவதற்கும் செஞ்சி காவல் ஆய்வாளர் மீது நடவடிக்கை எடுக்கவும் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

இன்று வரை தோழர் சுசீலா பிணையில் விடுதலை செய்யப்படவில்லை. சம்பந்தப்பட்ட டிஎஸ்பி, தோழர் சுசீலாவிடம் நீ பெரிய போராட்டக்காரியா? அரசாங்கத்தையே ஆண்டு முழுவதும் வேலை கொடுக்க வேண்டும் என்று கேட்கிறாயே, உன்னை ஒரு வழி செய்கிறோம் பார், என மிரட்டிய விவரத்தை, எமது தோழர்கள் சிறைக்குச் சென்று தோழர் சுசீலாவைச் சந்தித்தபோது அறிய வந்தோம்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் காவல்நிலையத்தினர் 24.11.2012 அன்று எமது கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் மாவட்டச் செயலாளருமான தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து மீது ஒரு பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்துள்ளனர். அவருடைய குடும்பத்தினருக்குள் இருந்த ஒரு சிக்கலில், தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து காவல்நிலையத்தில் புகார் செய்ய சென்றுள்ளார். புகார் செய்யச் சென்றவர் மீது முன்விரோதம் கொண்டு காவல்நிலையத்தினர் குற்றவியல் வழக்கு போட்டுள்ளனர்.

ஏற்கனவே டிஜிபிக்கு 09.10.2012 அன்று தந்த புகாரை மக்கள் பணியாற்றும் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து மற்றும் எமது கட்சியின் பெண் தலைவர்கள் மீது அவதூறாகவும் ஆபாசமாகவும் அனாமதேய சுவரொட்டி ஒட்டப்பட்டது பற்றி புகார் செய்துள்ளோம். உள்ளூர் ஆதிக்க அரசியல் சக்திகளும் பண பலம் கொண்டவர்களும் குளச்சல் நிலைய ஆய்வாளரோடு சேர்ந்து இச்செயலில் ஈடுபட்டுள்ளனர் என்ற எங்கள் சந்தேகத்தையும் வெளிப்படுத்தினோம். இதனை ஒட்டி, ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக அறிய வருகிறோம். இந்தப் பின்னணியில்தான், குளச்சல் காவல் ஆய்வாளர் காழ்ப்புணர்ச்சியுடன் தோழர் எஸ்.எம்.அந்தோணிமுத்து மீது பொய் வழக்கு ஜோடித்துள்ளார்.

எமது கட்சியைச் சேர்ந்த தோழர் நிம்மி மோள், அவரது தாயார், தந்தை, சகோதரர் ஆகியோருடன் காவல்நிலையம் சென்று 24.11.2012 அன்று தாம் திரு.கிருஷ்ணகுமார் மீது திரும்பத்திரும்ப புகார் கொடுத்தும் நடவடிக்கை எடுக்காமல் மக்கள் பணியாற்றும் எஸ்.எம்.அந்தோணிமுத்து மீது பொய் வழக்கு போடுவது நியாயமா எனக் கேட்டுள்ளார். ஆத்திரமடைந்த ஆய்வாளரும் காவல்நிலையத்தினரும் நிம்மியையும் அவரது தாய், தந்தை, சகோதரரையும் காவல்நிலையத்திலேயே தாக்கியுள்ளனர். தங்கள் சட்டவிரோதமான காவல் வன்முறையை மறைக்க தோழர் நிம்மி மோள் ஆய்வாளரை கன்னத்தில் அறைந்ததாக தவறான மற்றும் பரபரப்பான பத்திரிகைச் செய்தி கொடுத்தனர். தோழர் நிம்மி மோள் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது கொலை முயற்சி வழக்கு ஜோடித்து சிறையில் அடைத்துள்ளனர்.

எமது கட்சித் தலைவர்களில் ஒருவரான மேரி ஸ்டெல்லாவிற்கு 8300185793 என்ற தொலைபேசி எண்ணில் இருந்து ஆபாசக் குறுஞ்செய்திகள் வருவதாக 09.11.2012 அன்று குளச்சல் காவல்நிலையத்தில் தரப்பட்ட புகார் மீது இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தோழர் நிம்மி மோளையும் அவரது குடும்பத்தினரையும் கம்யூனிஸ்ட் ரவுடிகள் என அழைத்து, எங்கள் மீதே போஸ்டர் போட்டு, கூட்டம் நடத்துவதற்கு நல்ல பாடம் புகட்டுகிறோம் என்று சொல்லி தாக்கியுள்ளனர். தாங்கள், குளச்சல் காவல் ஆய்வாளர் எங்கள் கட்சியினருக்கு எதிராக எமது ஜனநாயக அரசியல் உரிமைகளுக்கு எதிராக தொடுத்துள்ள தாக்குதல்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்தக் காவல் ஆய்வாளரை தற்காலிக நீக்கம் செய்ய வேண்டும் அல்லது இடமாற்றம் செய்ய வேண்டும் எனவும் எமது கட்சியினரின் ஜனநாயக அரசியல் உரிமைகளுக்குப் பாதுகாப்பு தர வேண்டும் எனவும் கோருகிறோம்.

குளச்சல் காவல் ஆய்வாளர் மருத்துவமனைக்குச் சென்று தோழர் எஸ்.எம்.அந்தோணி முத்துவுக்கு எதிராக புகார் தந்தவரை டிஸ்சார்ஜ் செய்ய விடாமல் செல்வாக்கு செலுத்தியுள்ளார். தோழர் நிம்மி மோளை எமது கட்சியினர் சிறையில் சந்தித்தபோது, அவரது கைவிரல்கள் நசுக்கப்பட்டதையும் அவரது தாயார் தாக்கப்பட்டதையும் அவரது தந்தை மற்றும் சகோதரர் பிணைக்கப்பட்டு தாக்கப்பட்டதையும் சொல்லியுள்ளார்.

1. இச்செயல்கள் எமது தோழர்களின் அரசியலமைப்புச் சட்ட அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீது நிகழ்த்தப்பட்ட மீறல்களாகும்.

2. எமது கட்சியின் மீது, எமது கட்சி நடவடிக்கைகளை முடக்க தொடுக்கப்பட்ட தாக்குதல்களாகும்.

3. குளச்சல் காவல் ஆய்வாளர், எமது மாவட்ட கட்சி செயலர் மற்றும் பெண் தோழர்கள் மீது தொடுக்கப்பட்ட ஆபாச அவதூறுகளுக்கு துணை நின்றதோடு எமது பெண் தோழர்கள் மற்றும் ஆண் தோழர்களை காவல்நிலையத்தில் சித்தரவதை செய்துள்ளார்.

தாங்கள் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாகப் பிணை கிடைக்கவும், நஷ்டஈடு உள்ளிட்ட நிவாரணங்கள் கிடைக்கவும் ஆவன செய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Search