பிரான்சு நாட்டில், குறிப்பாக பாரீஸ் நகரத்து சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள், அதனை அடுத்து நடக்கின்ற விஷயங்கள், உலகம் முழுவ தும் உள்ள இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகளுக்கு பெரும் கவலை அளிக்கின்றன. அய்எஸ்அய்எஸ் உருவானதும் அது நிகழ்த்தி வரும் கொடூரமான படுகொலைகளும், பெஷாவர் படுகொலை, சிட்னி ஆக்கிரமிப்பு ஆகியவற்றை அடுத்து பாரீசில் நடந்த தாக்குதல்கள், உலகம் முழுவதும் பயங்கரவாதத்திற்கு எதிரான சீற்றத்தைப் புதுப்பித்துள்ளன.
அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகம், இஸ்ரேல், சங்பரிவார் ஆகியோர் இந்தச் சீற்றத்தை, இசுலாத்தை சாத்தான்மயமாக்கும் தம் செயல்களை நியாயப்படுத்திக் கொள்ளப் பயன்படுத்துகின்றனர். பரந்த செல்வாக்கை, வீச்செல்லையை, கொண்டுள்ள ஊடகங்கள், பெஷாவர், சிரியா, இராக், ஆப்கானிஸ்தான் நைஜீரியாவில் இதுவரை அய்எஸ்அய்எஸ் தலிபான், போக்கோ ஹரம் போன்ற அமைப்புக்களின் வன்முறையாலும், அய்க்கிய அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் ஏவியவன் முறையாலும் பலியானவர்களில் ஏகப் பெரும்பான்மையினர் இசுலாமியர்களே என்ற உண்மையைத் திட்டமிட்டு மூடி மறைக்கின்றனர்.
சார்லி ஹெப்டோ மீதான தாக்குதல்
கம்யூனிஸ்ட்களை மதச்சார்பற்ற ஜனநாயக சக்திகளை நோக்கி ஒரு கேள்வி எழுப்பப்படுகிறது. ‘கருத்துச் சுதந்திரம்’‘கருத்துச் சுதந்திரம்’ எனக் கூப்பாடு போடும் நீங்கள், இசுலாமிய அடிப்படைவாத/பயங்கரவாத கருத்துக்களின் செல்வாக்கின் கீழ் இசுலாமியர் சிலர் சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது நடத்திய தாக்குதல் பற்றி என்ன பதில் சொல்கிறீர்கள்? விளக்கம் தராமல் சுற்றி வளைக்காமல், தாக்குதலைக் கண்டனம் செய்கிறீர்களா இல்லையா எனப் பதில் சொல்லுமாறு கேட்கிறார்கள். நாம் சார்லி ஹெப்டோ பத்திரிகை மீதான தாக்குதல்களை வன்மையாகக் கண்டனம் செய்கிறோம். நபிகள் நாயகம் பற்றிய சர்ச்சைக்குரிய கேலிச் சித்திரங்கள், விடாப்பிடியான இசுலாமிய எதிர்ப்பு ஆகிய எல்லாவற்றிற்கும் பிறகு, சார்லி ஹெப்டோ பத்திரிகைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, படுகொலை என்ற வழிமுறையைத் தேர்வு செய்ததை, நாம், வன்மையாகக் கண்டனம் செய்கிறோம்.
(அய் அம் சார்லி) நான்தான் சார்லி என நாமும் சொல்ல முடியுமா?
சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது நடத்தப்பட்ட படுகொலைகளுக்குப் பிறகு, பிரான்சில் பல நாட்டுத் தலைவர்கள் கலந்து கொண்ட நினைவு அஞ்சலிப் பேரணியில், பல லட்சம் பேர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில், (அய் அம் சார்லி) நான்தான் சார்லி என்ற பதாகைகள் பிடிக்கப்பட்டன. நான்தான் சார்லி என நாம் ஏன் சொல்ல முடியாது? படுகொலைக்கெதிரான நமது கண்டனம், சார்லி ஹெப்டோவின் (அரபு எதிர்ப்பு) இனவெறி, ஆணாதிக்க, இசுலாமியர் விரோத வெறுப்பைத் தூண்டும் கேலிச் சித்திரங்களுக்கு ஆதரவு தருவதாக, அவற்றை மன்னிப்பதாக மாறிவிடக் கூடாது. 1960களில் மாணவர் எழுச்சியில் இடதுசாரி எழுச்சியில் சார்லி ஹெப்டோ வேர் கொண்டுள்ளது என்பது உண்மைதான். ஆனால், அது பெரும்பான்மை மதத்தையும் சிறுபான்மை மதத்தையும் ஒரே நேரத்தில் கேலி செய்கிறேன் என வாதாடுவதில் நியாயமில்லை. சமமற்றவர்களை சமமாக நடத்துவது சமத்துவமின்மைக்கு உரமூட்டுவதாகும்.
பிரான்சின் ‘மதச்சார்பின்மை’ யோக்கியமானதல்ல. பிரான்சின் முன்னாள் காலனி நாடுகளில் இருந்து வந்த அரபுகள் இசுலாமியர்கள், தமக்கே உரிய சமூக கலாச்சார மதரீதியான வெளிப்பாடுகளைக் கொண்டிருக்கிறார்கள். வேற்றுமையில் ஒற்றுமை, அந்த வேறுபட்ட வெளிப்பாடுகளை அங்கீகரிக்க வேண்டும். ஆனால் ‘வெள்ளை - கிறிஸ்தவ - நாம்’ எதிர் ‘அரபு - இசுலாமிய - முன்னாள் காலனிகளிலிருந்து வந்த உழைக்கும் வர்க்க வறியவர்களாகிய அவர்கள்’ என்ற சமன்பாடு கட்டமைக்கப்படுவதும், அது அரசாலேயே நியாயப்படுத்தப்படுவதும் பிரான்சில் நடக்கிறது. இசுலாமியப் பெண்கள் முகத்திரை அணிவதை பிரான்சு தடை செய்கிறது. பாலஸ்தீனத்துக்கு ஆதரவான ஆர்ப்பாட்டங்கள் பிரான்சில் தடை செய்யப்பட்டுள்ளன.
யூதர் மீது இனவாத வெறுப்பு உமிழக் கூடாது (ஆண்ட்டி செமிடிக்) என்ற பெயரில், இஸ்ரேலுக்கு வக்காலத்து வாங்குவதையும், பாலஸ்தீனப் போராட்டத்திற்கு எதிர் நிலை எடுப்பதையும் பிரான்சு நியாயப்படுத்துகிறது. பிரான்சு நாட்டு அரசியலின் ஓரஞ்சாரத்தில் இருந்த லீ பென்னின் நாஜி கட்சி, இப்போது கருத்துக் கணிப்புகளில் முதலிடம் பிடிக்கிறது. பிரான்சு நாட்டின் சிறைகளில் இருப்பவர்களில் 70% பேர் இசுலாமியர்கள்.
ஜீடேன், ஹென்றி போன்ற அரபு கருப்பு இன கால்பந்தாட்டக்காரர்கள் விதிவிலக்குகளாகவும், பெரும்பாலான அரபு கருப்பின வம்சாவழியினர் வறுமையில் மூழ்கியவர்களாகவும் இருக்கிற பிரான்சு நாட்டில், நபிகள் நாயகத்தை, அரபு களை, இசுலாமியர்களை ஆதிக்க - வெறுப்பு நிலையிலிருந்து விடாப்பிடியாய் தொடர்ச்சியாகக் கேலி செய்வது, கருத்துச் சுதந்திரம் ஆகாது.
நானும் சார்லிதான் எனச் சொல்லும் சர்வதேசத் தலைவர்கள் கபட வேடதாரிகளே
இசுலாத்தை சாத்தான்மயமாக்கி, ‘இசுலாமிய’ பயங்கரவாத எதிர்ப்புப் போர் என்ற ஆக்கிரமிப்பு - சூறையாடல் ஏகாதிபத்திய மறு பங்கீட்டில் ஈடுபடும் அய்க்கிய அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகள், உலகின் முதல் நிலை பயங்கரவாதிகள், ‘நானும் சார்லிதான்’ என பயங்கரவாத எதிர்ப்பு வேசம் போட்டால், உலகம், நீங்கள் கபட வேடதாரிகள் என அவர்களைத் தூற்ற வேண்டும். பாரீசில் இஸ்ரேல் பிரதமர் நெதன்யாஹு போன்றவர்கள், ‘நானும் சார்லிதான்’ என்ற பதாகையைப் பிடித்ததற்கு எதிராக, அவர்களை விமர்சிக்கும் விதம், “நாங்கள் கபட வேடதாரிகள்” என்ற பதாகை வைக்கப்பட்டது. பாலஸ்தீனத்தின் காசா திட்டில் கடந்த கோடை காலத்தில், 17 பத்திரிகையாளர்களைக் கொன்ற, 2,143 பாலஸ்தீனர்களைக் கொன்ற இஸ்ரேலின் பிரதமர், பயங்கரவாத எதிர்ப்பு பற்றிப் பேச எந்த யோக்யதையும் இல்லாதவர்தானே!
பிரான்சின், அய்ரோப்பாவின், மேற்கு ஆசியாவின் வடக்கு ஆப்பிரிக்காவின் வறியவர்கள், அரபுகளாக கருப்பினத்தவர்களாக இசுலாமியர்களாக உள்ளனர். குவான்டநாமோ சித்திரவதைகள், முடிவே இல்லாத மத்திய கிழக்கு போர்கள், மிருகத்தனமான டிரோன் தாக்குதல்கள், அவர்கள் மத்தியிலிருந்து அய்எஸ்அய் எஸ்சிற்கு அல்கொய்தாவிற்கு ஆள் பிடிக்க வளமான விளைநிலத்தை தருகின்றன.
ஏகாதிபத்திய போர்கள் ஏகாதிபத்திய சூறையாடல் ஆக்கிரமிப்புக் கொள்கைகளால், பாதிப்புக்கு, பறிகொடுத்தலுக்கு, தங்கள் அடையாளத்திற்கே ஆபத்து என்ற நிலைக்கு ஆளாகிவிடுபவர்களில் வெகுசிலர், பயங்கரவாதம் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர். அவர்களது செயல்கள், அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான அச்சில் இடம் பெற்றுள்ள அனைத்து சக்திகளின் பயங்கரவாத, ஜனநாயக விரோத, கருத்துச் சுதந்திர மறுப்பு நடவடிக்கைகளையும் நியாயப்படுத்த உதவுகின்றன. உடனடியாக, இசுலாமியர் மீதான வெறுப்பிற்கெதிராகப் போராட வேண்டிய அதே நேரம், நீண்ட கால அடிப்படையில், உலகம் முழுவதும் உள்ள முற்போக்கு ஜனநாயக சக்திகள், ஓர் ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் சார்பு புதிய அரபு வசந்தத்திற்குப் பங்காற்ற வேண்டி உள்ளது.
ஒளிக்கீற்றாய் கிரேக்கம்
கிரேக்க நாட்டில் ஓர் இடதுசாரிக் கட்சி நாடாளுமன்றத் தேர்தலில் 300 இடங்களில் 149 இடங்களை வென்றுள்ளது. சோவியத் யூனியன் மற்றும் சோசலிச முகாம் சரிவிற்குப் பிறகு, முதலாளித்துவம், மாற்று ஏதும் இல்லை, THERE IS NO ALTERNATIVE (TINA) எனக் கொக்கரித்து வந்துள்ளது. மாற்று உண்டு என வீசிய இளம் சிவப்பு அலையில், பல லத்தீன் அமெரிக்க நாடுகள் ஏகாதிபத்திய எதிர்ப்பு - மக்கள் சார்பு பாதையைத் தேர்வு செய்தன. வெனிசுலா, பொலிவியா, ஈக்வடார் நாடுகளில் அடுத்தடுத்த தேர்தல்களில், முற்போக்கு சக்திகளே வெல்கின்றனர். இப்போது அய்ரோப்பாவில் உலக வங்கி -சர்வதேச நிதியம் - அய்ரோப்பிய மத்திய வங்கி முக்கூட்டின் திணிப்பான சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக கிரேக்க நாடு இடதுசாரி திசையில் திரும்பி உள்ளது. கிரேக்க நாடு பெரும் துன்பங்களை அனுபவித்து வந்தது. அய்ரோப்பா திணித்த மீட்புத் திட்டத்தால், கட்டற்ற தனியார் மயம், சம்பளம் ஓய்வூதியம் நல நடவடிக்கைகள் வெட்டு, பொதுச் செலவு வெட்டு என வறியவர் தலையில் இடி மேல் இடி விழுந்தது.
நாட்டின் மூன்றில் ஒரு பகுதியினர் வறுமைக் கோட்டிற்குக் கீழ் தள்ளப்பட்டனர். நான்கில் ஒரு பகுதியினர்க்கு வேலை இல்லை. இந்தப் பின்னணியில் 2015 தேர்தல் வந்தது. சைரிசா கட்சியும் அதன் பிரதமர் வேட்பாளரான அலெக்சிஸ் சிப்ராசும், கிரேக்க மக்களிடம், 1. அடித்தட்டு மக்கள் வாழ்க்கையைப் பறிக்கும் நவதாராளவாத நிகழ்ச்சி நிரலிலிருந்து சமூக விடுதலை பெறும் திட்டம், 2. அய்ரோப்பிய ஒன்றியத்திடமும் சர்வதேச நிதியத்திடமும் கடனைப் பற்றி மீண்டும் பேச்சுவார்த்தைகள் நடத்தி, கிரேக்கத்திற்கு சாதகமாக மாற்றி அமைத்தல் என்ற இரு அடிப்படையான விஷயங்களைச் சொன்னார்கள்.
கிரேக்க நாட்டின் உழைக்கும் மக்கள் அய்ரோப்பாவின் மிரட்டலுக்கு அடிபணியவில்லை. கடனில் கை வைப்பது, சிக்கன நடவடிக்கையைக் கைவிடுவது என எவர் பேசினாலும், கிரேக்கம் இருளில் மூழ்கும் என ஜெர்மனியின் அதிபர் ஏஞ்செலா மெர்கல் மிரட்டினார். கிரேக்க மக்கள் கலங்கவில்லை. வறியவர்கள், வேலை பறிபோனவர்கள், தொழிலாளர்கள், இடது திசையில் திரும்பினர். தேர்தலில் மட்டும் அல்ல; போராட்டக் களங்களிலும் கூட.
சைரிசா, ஜனநாயகவாதிகள், சோசலிஸ்ட்கள், மாவோயிஸ்ட்கள், டிராட்ஸ்கியவாதிகள், பசுமை இடதுசாரிகளின் ஒரு கூட்டணியாக இருந்தது. ஒரு கட்டத்தில் 4% வாக்குகள் பெற்ற சைரிசா 2011ல் 27% வாக்குகள் பெற்றது. 2013ல் வெவ்வேறு குழுக்களின் கூட்டணி என்ற நிலையிலிருந்து, வடிவ அளவில், ஒரே கட்சியாக மாறியது. இந்த முறை 36% வாக்குகளுடன் 149 இடங்கள் பெற்றுள்ளனர். சிக்கன கொள்கைகளை எதிர்க்கிற அதே நேரம் அகதிகள் எதிர்ப்பு போன்ற நிலைப்பாடுகள் கொண்ட கட்சியுடன் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைக்கப்பட்டுள்ளது. புதிய கிரேக்கப் பிரதமர், எந்தக் கடவுளின் பெயராலும், மதத்தின் பெயராலும், பிரதமராகப் பதவி ஏற்கவில்லை. எவ்வளவு ஆறுதலாக உள்ளது! அவரது முதல் பொது நடவடிக்கை, ஜெர்மானிய நாஜிக்களால் படுகொலை செய்யப்பட்ட கிரேக்க போராளிகளுக்கு அஞ்சலி செலுத்துவதாகவே இருந்தது.
ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கிரேக்கம் நிற்கும் என்ற அந்த சமிக்ஞையோடு, கிரேக்க பிரதமர் முதல் அமைச்சரவைக் கூட்டத்தில், அரசு பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயத்தை தடுத்து நிறுத்தவும், வேலை நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தரவும் முடிவெடுத்துள்ளதாக வந்துள்ள செய்திகள், சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக நவதாராளவாதத்திற்கு எதிராக போராடுகிற உலகெங்கும் உள்ள அரசியல் இயக்கங்களுக்கும் குறிப்பாக இந்திய இடதுசாரி இயக்கத்துக்கும் நம்பிக்கை தருவதாக அமைந்துள்ளது.