COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, February 1, 2015

குடியரசு தின நிகழ்ச்சியில் குற்றவாளியைக் கொண்டாடிய அரசு குற்றவாளியை தண்டிக்குமா?

ஒபாமா மீது இந்திய தூசி கூட பட்டுவிடாத அளவுக்கு டில்லியில் செய்யப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் போல் அவர் டில்லிக்கு வருவதை ஒட்டி, அவர் வருவதற்கு ஒரு நாள் முன்பிருந்தே தமிழ்நாட்டிலும் மாநிலம் முழுவதும் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தமிழக காவல் துறையினர், மோடியை விட மோடிக்கு விசுவாசமாக நடந்து கொண்டனர். அய்க்கிய அமெரிக்க தூதரகத்தின் புனிதத்தை பாதுகாத்தனர்.
பல்வேறு உலக நாடுகளின் இறையாளுமை மீது தாக்குதல் தொடுக்கும் அய்க்கிய அமெரிக்க அதிபர் ஒபாமா, நாட்டின் குடியரசு தினத்தன்று சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருப்பதைக் கண்டித்து ஜனவரி 24 அன்று இடதுசாரிக் கட்சியினர் நாடு முழுவதும் எதிர்ப்பு நிகழ்ச்சிகள் நடத்தினர்.

தமிழ்நாட்டி லும்நடத்தினர். சிறை நிரப்பும் போராட்டம் என்று அவர்கள் திட்டமிடவில்லை. அறிவிக்கவும் இல்லை. தமிழ்நாட்டின் பல மய்யங்களில் அனுமதியும் கேட்டிருந்தனர். ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்ட ஜனவரி 24 அன்று ஒபாமா இந்தியாவில் இல்லை. மறுநாள்தான் வந்தார். வந்தாலும் அவர் பயணத் திட்டத்தில் தமிழ்நாடு இல்லை.எனவே, தமிழ்நாட்டில் நடக்கும் எந்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டமும் அவருக்கு எந்த அச்சுறுத்தலையும் உருவாக்கப் போவதில்லை. ஆயினும் மாநிலத்தின் பல மய்யங்களில் அனுமதி மறுக்கப்பட்டு ஒபாமாவே திரும்பிப் போ என்ற முழக்கத்துடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். மாலை நேரத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் கைது செய்து இரவு ஒன்பது மணிக்குப் பிறகு விடுதலை செய்தனர்.

ஒபாமா வருகைக்கு அடையாள எதிர்ப்பு கூட இருக்கக் கூடாது என்று தமிழ்நாடு அரசாங்கம் கவனமாகப் பார்த்துக் கொண்டது. தடையை மீறி எதிர்ப்பு தெரிவித்தவர்களை கைது செய்து ஒபாமா வருகையின் மேல் மிகப்பெரிய அரசியல் கோட்டை கட்டிக் கொண்டிருந்த மோடி அரசாங்கத்துக்கு, தமிழ்நாட்டின் அஇஅதிமுக தலைமையிலான ஆட்சி அவர் பக்கம்தான், ஏகாதிபத்திய நலன், கார்ப்பரேட் நலன் பக்கம்தான் என உறுதிப்படுத்தியது.

மத்திய பாஜக அரசு, உலக நாடுகள் மீது போர் தொடுக்கும் ஒபாமாவை அழைத்து குடியரசு தினத்தை கேலிக்கூத்தாக்கியது என்றால், தமிழக அஇஅதிமுக அரசு, ஊழல் குற்றம் செய்து தண்டனைக்குள்ளாகி சிறை சென்று பிணையில் திரும்பியுள்ள முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்துடனான அலங்கார ஊர்திகளை குடியரசு தின அணிவகுப்பின் முக்கிய பகுதியாக்கி குடியரசு தின நிகழ்ச்சியை கேலிக்கூத்தாக்கி தமிழ்நாட்டை தலைகுனிய வைத்திருக்கிறது. ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான மாநில அரசு தொடர்வதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதை அஇஅதிமுகவினரின், அரசாங்கத்தின் இதுபோன்ற கண்ணியமற்ற நடவடிக்கைகளே காட்டிவிடுகின்றன.

இப்படிச் செய்வதன் மூலம் ஆளும் கட்சியினர் எதை நிறுவ முயற்சி செய்கிறார்கள்? ஜெயலலிதா குற்றமற்றவர் என்றா? அவர் மீது தொடுக்கப்பட்ட வழக்கே பழிவாங்கும் நோக்கம் கொண்டது என்றா? ஜெயலலிதா குற்றவாளியாக இருந்தாலும் தமிழக மக்கள் அவர் மீது நம்பிக்கை கொண்டுள்ளனர் என்று காட்டவா? ஜெயலலிதாவிடம் தங்களுக்கு இருக்கும் விசுவாசத்தைக் காட்டவா? அல்லது, தமிழக அரசின் குற்றமய அலட்சியத்தால் வாழ்வுரிமை இழந்து கொண்டிருக்கும் தமிழக மக்களின் பல்வேறு பிரிவினர் மத்தியிலும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சீற்றத்தில் இருந்து தப்பிக்க, இருட்டில் தனியாக நடப்பவர் பயமில்லாமல் இருக்க பாட்டுப் பாடிக் கொள்வதுபோல், தமக்குத் தாமே தைரியம் சொல்லிக் கொள்ளவா? இது எதுவுமே அவர்களுக்கு கைகூட வாய்ப்பு குறைவு. எதில் தப்பினாலும் மக்கள் சீற்றத்தில் இருந்து தப்பிவிட முடியாது.

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதாவின் மேல்முறையீடு மீது விசாரணை நடந்து கொண்டிருக்கிறது. ஜெயலலிதா இல்லாத நேரம் அவர் வீட்டில் எப்படி சோதனையிடலாம், சொத்துப் பட்டியல் தந்துள்ள லஞ்ச ஒழிப்புத் துறையினர் நீதிமன்றத்தில் இருக்கிறார்களா என நீதிபதி கேட்கும் கேள்விகள், அரசு வழக்கறிஞர் பவானி சிங்கை திக்குமுக்காடச் செய்வதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

பவானி சிங் அரசு வழக்கறிஞராக ஆஜராகக் கூடாது என்று வழக்குகள் ஒருபுறம் நடக்க பவானி சிங் தமிழக அரசை திக்குமுக்காட வைக்கிறார். ஜனவரி 23 அன்று அவர் அரசு வழக்கறிஞர் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டதாக செய்தி வெளியானது. ஜனவரி 25 அன்று அந்த செய்திக்கு அவரது மறுப்பு வெளியானது.

அரசு வழக்கறிஞர் என்றால், அவர் குற்றவாளி குற்றம் செய்ததை நிரூபிக்க வேண்டும். அப்படி ஒரு பொறுப்பில் இருக்கும் ஒருவரது பதவி விலகலுக்கு குற்றவாளியின் வழக்கறிஞரும் லஞ்ச ஒழிப்புத் துறை தலைமை அதிகாரியும் பதறிப் போனார்கள் என்றும் அவரை சமாதானம் செய்தார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது, யார் யாருக்காக வாதாடுகிறார்கள் என்ற கேள்வியை எழுப்புகிறது.

பவானி சிங் தனக்கு தரப்படும் சம்பளம் குறைவு என்றும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாளொன்றுக்கு அவருக்கு தரப்படும் ரூ.65,000 குறைவு என்றும், சில வழக்கறிஞர்களுக்கு நாளொன்றுக்கு ரூ.25 லட்சம் வரை தந்ததாக தான் அறிந்ததாகவும், தனக்கும் தனது உதவியாளருக்குமாகச் சேர்த்து நாளொன்றுக்கு ரூ.3 லட்சம் தர வேண்டும் என்றும் நிபந்தனை விதித்திருக்கிறார். பிறகு ரூ.1.8 லட்சத்துக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார்.

பவானி சிங்குக்கு இந்தச் சம்பளத்தை தமிழக லஞ்ச ஒழிப்புத் துறை தர வேண்டும். அதாவது தமிழக அரசு தர வேண்டும். தமிழக அரசு, அரசாங்க நிகழ்வுகளிலும் எந்தக் குற்றவாளியைக் கொண்டாடுகிறதோ, அதே குற்றவாளியைத் தண்டிக்க, தமிழக அரசு நாளொன்றுக்கு ரூ.1.8 லட்சம் சம்பளம் தர ஒப்புக்கொண்டுள்ளது. தமிழக அரசிடம் சம்பளம் பெறும் அரசு வழக்கறிஞர் தமிழக அரசின் வழக்கை, அதாவது குற்றவாளியை குற்றவாளி என்று நிரூபிக்கும் வழக்கை நடத்த வேண்டும்.

அப்படியானால், குற்றவாளியைக் கொண்டாடும் தமிழக அரசு வழக்கு நடத்த பவானி சிங்குக்கு சம்பளம் தருகிறதா? அல்லது வழக்கு நடத்தாமல் இருக்க சம்பளம் தருகிறதா? இந்த விடுகதைக்கு ஓ.பன்னீர்செல்வம் பதில் சொல்வாரா? பவானி சிங்தான் பதில் சொல்வாரா? நீதிபதிக்காவது இதை விளக்க முடியுமா? நாளொன்றுக்கு தரப்படும் இந்த ரூ.1.8 லட்சமும் மக்கள் பணம். ஊழல் குற்றவாளி ஜெயலலிதாவை பாதுகாக்க தமிழக அரசு இந்தப் பணத்தை செலவு செய்கிறது. எவ்வளவு பெரிய அநியாயம்? அநீதி?

சுப்பிரமணியன் சுவாமி தன்னையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என்று கேட்டு மனு போட்டிருக்கிறார். சொத்து குவிப்பு வழக்கைத் தொடுத்த பெருமை தனக்கே என்று சொந்தம்  கொண்டாடுகிற சுவாமி, அத்துடன், ஜெயலலிதாவுக்கு பிணை கிடைத்த விவகாரத்தில் இருந்து மோடியை விலக்கி வைத்த பெருமையையும் சேர்த்துக் கொள்ளலாம். ஜெயலலிதாவின் பிணை மனு மீது விசாரணை நடந்தபோது மிகவும் துவக்கத்திலேயே எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றார். யாரும் எந்தக் கேள்வியும் எழுப்பாத போதே, மோடி இந்த விசயத்தில் தலையிடப் போவதில்லை என்று தன்னிடம் சொல்லியுள்ளார் என்றார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்றே நாமும் நம்புவோம்.ஆனால், சுப்பிரமணியம் சுவாமி இந்த வழக்கில் குற்றவாளியின் தண்டனையை உறுதி செய்ய எந்த விதத்தில் அவர் உதவப் போகிறார் என்று நாம் பொறுத்திருந்து பார்க்கலாம்.

குற்றம் செய்து தண்டனைக்கு உள்ளாகி சிறைக்குச் சென்றவர் படம் குடியரசு தின ஊர் வலத்தில் வருவது, தமிழக அரசு எந்திரத்தின் வெவ்வேறு மட்டங்களில் ஊழலுக்கு, ஊழல் செய்பவர்களுக்கு நிச்சயம் துணிச்சலே தரும். திண்டிவனம் போக்குவரத்து காவல்நிலையத்தில் வேலை செய்த, இரண்டு உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட காவல்நிலையத்தில் பணிபுரிந்த 15 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர்.

 லஞ்சம் வாங்கும் வீடியோக்கள் அடிப்படையில் அவர்கள் மீது புகார் எழுப்பப்பட்டது. இரண்டு மாதங்களுக்கு முன்பு இந்த இரண்டு உதவி ஆய்வாளர்களில் ஒருவர் லஞ்சப் புகாரில் பணியிட மாற்றம் செய்யப்பட்டார். ஆனால் செல்வாக்கை பயன்படுத்தி மீண்டும் அதே இடத்துக்கு வேலைக்கு வந்து அதே போல் லஞ்ச நடவடிக்கைகளைத் தொடர்ந்தார். சில நாட்களுக்கு முன் அவர் சென்னை பைபாஸ் சாலையில் வாகன ஓட்டி ஒருவரிடம் லஞ்சம் வாங்குவதை அலைபேசியில் படம் பிடித்த ஒருவர் அதை வாட்ஸ்அப் மூலம் காவல்துறை கண்காணிப்பாளருக்கு அனுப்பிய பிறகே, காவல்துறை கண்காணிப்பாளர் அந்த உதவி ஆய்வாளரையும் அங்கு பணியில் இருந்த 14 காவல் ஊழியர்களையும் பணியிட மாற்றம் செய்தார். அந்த காவல் நிலையம் இப்போது பூட்டப்பட்டுள்ளது. இது பத்திரிகையில் வெளியான செய்தி.

காவல்துறையின் வெவ்வேறு பிரிவுகளில், அரசு எந்திரத்தின் வெவ்வேறு பிரிவுகளில் வெவ்வேறு அடுக்குகளில் வெளியே வராமல் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கும் முறைகேடுகளை, குற்றவாளியைக் கொண்டாடும் ஓர் அரசாங்கம்களையும் என்று தமிழக மக்கள் எதிர்ப்பார்க்க முடியாது. குடியரசு தின நிகழ்ச்சியில் குற்றவாளியைக் கொண்டாடிய அரசு, குற்றவாளிகளை தண்டிக்காது.

Search