COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, February 1, 2015

குடியரசு தினமும்‘நமோபாமாவும்’

சர்வதேச உறவுகளை எவ்வளவு மோசமாக சுருக்கி குறுக்கி நிறுத்திவிட்டார்கள்! இரு நாடுகள், உலகம், இரு நாடுகளின் நட்பு நாடுகள் பகை நாடுகள், இரு நாடுகளின் பொருளாதாரம் அயலுறவுக் கொள்கை ஆகியவை தாண்டி, இரு தலைவர்களின் வேதியியல் என ஊடகங்கள் பேசினார்கள். திரைப்படம் வெற்றி பெற கதாநாயகன் கதாநாயகி கெமிஸ்ட்ரி எடுபட வேண்டும் எனத் திரை உலகத்தினர் பேசுவார்கள்.

இந்தியப் பிரதமர் அய்க்கிய அமெரிக்க அதிபர் என்ற, நரேந்திர தாமோதர்தாஸ் மோடி மற்றும் பாரக் ஒபாமா ஆளுமைகள் இணைந்து வேதியியல் மாற்றம் பெற்ற ‘நமோபாமா’ என்ற மாற்றம் வந்துவிட்டதாம்! சமையல்காரர் பேரனின் தேநீர்க் கடைக்காரரின் வெற்றிக் கதைகள் என அய்க்கிய அமெரிக்கப் பொய்மைகளுக்கு இந்தியப் பொய்மைகளைச் சேர்த்து, உழைப்பால் உயர்ந்த உத்தமர்கள் கதைகள் பேசினார் ஒபாமா. ‘நமோபாமா’ அய்க்கிய அமெரிக்காவின் 99 சதம் மக்களை, இந்தியாவின் சாமான்ய நடுத்தர மக்களை உழைக்காத உன்மத்தர்கள் என அழைப்பார்களா?

மோடி லண்டனில் தைக்கப்பட்ட மில்லியன் ரூபாய் சூட் அணிந்தார். ஆடையெங்கும் அவர் பெயர். குடியரசு தினத்திலும், மலிவான உழைப்பு இருக்கிறது, அந்நிய மூலதனமே இந்தியா வந்து உற்பத்தி செய் என அழைப்பு விடுக்கப்பட்டது, அணு ஆற்றல் விபத்து நஷ்ட ஈடு விவகாரத்தில் இரு நாடுகளுக்கும் இடையில் என்ன உடன்பாடு ஏற்பட்டது, ஷரத்துக்கள் என்ன என்ற விவரங்கள் ஏதும் தரப்படவில்லை. ஒன்று மட்டும் தெளிவு.ஆட்சிப் பொறுப்பேற்ற முதல் நாளில் இருந்தே, மோடி, அய்க்கிய அமெரிக்காவிற்கு நற்செய்தி மேல் நற்செய்தியாய்த் தந்து கொண்டிருக்கிறார். அது குடியரசு தினம் வரை தொடர்ந்தது.

மருந்துகள் விலை கட்டுப்பாடுகள் அகற்றுதல், காப்புரிமைகளில் அய்க்கிய அமெரிக்க நலன்கள் காத்தல், காப்பீட்டில் அந்நிய முதலீடு அதிகரிப்பு, நிலப்பறிக் கொள்கை போன்றவற்றோடு, அய்க்கிய அமெரிக்க அணு ஆற்றல் மற்றும் ராணுவ நிறுவனங்களுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டுள்ளது. அணு விபத்து நஷ்ட ஈடு இந்திய வரி செலுத்துவோர் பணத்திலிருந்தென்றால், அய்க்கிய அமெரிக்க நிறுவனங்கள், அணு உலைகள் பாதுகாப்பிற்கு கூடுதலாகச் செலவழிக்க வேண்டியதில்லை தானே?

குடியரசு தின இராணுவ அணி வகுப்பில், ரஷ்ய ஆயுதங்கள் இராணுவ தளவாடங்கள்தான் அதிகம் இருந்தன. ஆர்எஸ்எஸ் காரரும் பாஜக பொதுச் செயலாளருமான ராம் மாதவ், ரஷிய ஆயுதங்கள் தளவாடங்களைப் பார்த்த பிறகு, ஒபாமா, அவசரமாக அய்க்கிய அமெரிக்காவின் இந்தியாவிற்கான இராணுவ ஏற்றுமதியை அதிகரிப்பார் என்கிறார். அய்க்கிய அமெரிக்காவின் சான்றிதழ்கள்படி ‘தேச கவுரவத்தை’, அய்க்கிய அமெரிக்காவோடு ‘இயற்கையான’ கூட்டாளி என்ற நிறப்பிரிகை ஊடாக மட்டுமே ‘தேச நலன்களை’ மறு விவரிப்பு செய்யும், ‘இந்தியாவில் உற்பத்தி செய்யுங்கள்’ முழக்கத்தின் பின்னால் உள்ள, தரகர் மனோபாவம் அம்பலம் ஆகிறது.

அதானி ஆஸ்திரேலியா போய் சுரங்கத் தொழிலில் ஈடுபடுவதும், டாடா சீனாவில் போய் கார் தயாரிப்பதும், இந்தியா தன் சொந்த ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சிக்கு அழுத்தம் தராமல் பாதுகாப்புத் துறை உள்ளிட்ட தொழில்களில் கண்மண் தெரியாமல் மூலதனத்தை வரவேற்பதும், மேக் இன் இந்தியா முழக்கத்தை கேலிக்குரியனவாக ஆக்குகின்றன.

அரசியலமைப்புச் சட்ட முன்னுரை தொடர்பான விளம்பரத்தில், குடியரசு என்பதற்கு முன்பாக, ‘மதச்சார்பற்ற சோசலிச’ என்ற சொற்கள் இடம்பெறவில்லை என்ற விமர்சனம் எழுந்தது; இது 50தில் வந்த முன்னுரை, 76 திருத்தத்தின்படிதான் ‘மதச்சார் பற்ற சோசலிச’ குடியரசு என்றானது என ஒரு விளக்கம் தரப்பட்டது; ஆனபோதும் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் இச்சொற்களை எடுத்துவிடலாம் என்கிறார்; தண்டிக்கப்பட்ட, மக்கள் முதல்வர் ஜெயலலிதாவின் நண்பரும் சட்ட அமைச்சருமான ரவிசங்கர் பிரசாத், மதச் சார்பற்ற சோஷலிச குடியரசு என இந்தியாவை இனியும் அழைக்க வேண்டுமா என நாடு விவாதிக்கட்டும் என்கிறார்.

உழைக்கும் மக்கள் உரிமைகள் மீது அதிகரிக்கப்பட்ட தாக்குதல்கள், மாற்றுக் கருத்தை முறைசார்ந்த விதத்தில் நசுக்குவது, இந்தியாவின் பன்மைக் கலாச்சார வழிமரபை அழித்தொழித்து ஒற்றை அடையாளம் நிறுவுவது என, இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரகடனம் செய்த மதச்சார்பற்ற ஜனநாயக குடியரசுக்கு, கடுமையான அச்சுறுத்தல்கள் உள்ளன. ‘நமோபாமா’ வேதியியல் கூப்பாடு கட்டுக்கதைகள் தாண்டி, மதப்பிளவு, கார்ப்பரேட் சூறையாடல், தரகு சரணாகதி சக்திகளைத் தோற்கடித்து, இந்தியக் குடியரசின் சாரத்தை, இடதுசாரி முற்போக்கு ஜனநாயக சக்திகள் ஒன்றுபட்டு வென்றெடுக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது.

Search