COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Sunday, February 1, 2015

மதமாற்றம் தொடர்பான விவாதங்கள் - பகுதி 1

சங் பரிவார், பாஜக ஆட்சிக்கு வந்தபிறகு, கர் வாப்சி என இந்து மதத்திற்கு இசுலாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் திரும்பக் கொண்டுவரும் ஓர் இயக்கத்தை மூர்க்கத்துடன் துவக்கியது. ஒரு பக்கம் மோடி மூலதனத்திற்கு முதலீட்டாளர்களுக்கு சாதகமாக நடவடிக்கைகளை விடாப்பிடியாக தொடர்ந்து கொண்டிருந்தபோது, சங் பரிவாரைச் சேர்ந்தவர்கள், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சர்கள், மதவாத நெருப்பை அவ்வப்போது கொளுத்திப் போட்டுக் கொண்டே இருந்தார்கள்.

வேறு வேறு அம்சங்களை துவக்கி வைத்து விட்டு, அடுத்தடுத்த விஷயங்களுக்கு சென்று விடுவார்கள். நாடாளுமன்ற அவைகளில் விவாதங்கள் சூடு பிடித்தன. இந்து ராஷ்ட்ரா, இந்து பெண்கள் ஆளுக்கு நான்கு பிள்ளைகள் பெற வேண்டும், இந்தியா இந்து நாடு என்ற சங் பரிவார் கருத்துக்கள், விவாதத்தைக் கொண்டு வந்தன.

சிலர், இதுபோன்ற ஆபத்தான விளிம்பு நிலை இந்துத்துவா சக்திகளை மோடி அடக்கி வைக்க வேண்டும் என்ற எண்ணத்தை வெளிப்படுத்தினர். விவாதங்கள் இல்லாமல் அவசரச் சட்டங்கள் போட வேண்டிய நிலைமையே, சங் பரிவார் தீவிரப் பிரிவினரால் ஏற்பட்டது என்றும், இது அரசின் பெருந்தொழில் குழும (கார்ப்பரேட்) ஆதரவு வளர்ச்சிப் பாதையை தடம் புரள வைக்கும் என்றும் கூட தொழில் சில வர்த்தக ஏடுகளும் தொலைக்காட்சி நிபுணர்கள் சிலரும் கருத்து சொன்னார்கள். இந்தப் பின்னணியில் இப்போது, குடியரசு தினத்தை ஒட்டி இந்தியா வந்திருந்த ஒபாமா சொன்ன கருத்துக்கள், மீண்டும் மதமாற்றம் தொடர்பான விவாதத்தை முன்னுக்குக் கொண்டுவந்துள்ளன.

ஒபாமா தமது இந்திய வருகையின் மூன்றாவது நாளில், சிறி போர்ட் அரங்கத்தில் ஏறத்தாழ 2,000 பேர் மத்தியில் உரையாற்றினார். அவரது 33 நிமிடங்கள் உரையில் 41 முறை இடையிடையே கைத்தட்டல்கள்  இருந்தனவாம், சிரித்தார்களாம். இந்தியில் வணக்கம் எனத் துவங்கி நன்றி ஜெய்ஹிந்த் என முடித்த உரையில், ஷாருக்கான் திரைப்பட பாடல் ஒன்றையும் நினைவுபடுத்தினார். 5 நிமிடங்கள் அவர் மதச் சுதந்திரம் மற்றும் வேற்றுமையில் ஒற்றுமை பற்றிப் பேசினார்.

‘எந்த துன்புறுத்தலோ அச்சமோ பாகுபாடோ இல்லாமல் தமது மதத்தை பின்பற்றும் உரிமை ஒவ்வொரு மனிதருக்கும் உண்டு. இந்தியா மதவாத வழிகளில் பிளவுறாத வரை, அது வெற்றி பெற முடியும்’. ‘உங்கள் (அரசியலமைப்புச் சட்ட) ஷரத்து 25, மனச்சாட்சி சுதந்திரத்தையும், சுதந்திரமாக மதத்தை வழி பட பின்பற்ற பிரச்சாரம் செய்ய  அனைவருக்கும் சமமான உரிமையையும் வழங்குகிறது. நம் இரு நாடுகளிலும் எல்லா நாடுகளிலும் வழிபாட்டுச் சுதந்திரத்தை உயர்த்திப் பிடிப்பது, அரசாங்கத்தினுடைய கடமை என்பதோடு ஒவ்வொருவருடைய கடமையுமாகும்’.

ஒபாமா, அய்க்கிய அமெரிக்காவின் விஸ்கான்சினில் 3 வருடங்களுக்கு முன்பாக ஒரு நபர் ஒரு சீக்கிய குருத்துவாராவுக்குள் நுழைந்து 6 அப்பாவிகளைக் கொன்ற, படுமோசமான வன்முறைச் செயலை நினைவு கூர்ந்தார். ‘துயரத்தை பகிர்ந்து கொண்ட அந்த கணத்தில் இரு நாடுகளும் மறு உறுதி செய்த அடிப்படை உண்மையை இப்போதும் மறு உறுதி செய்திட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர் தேர்ந்தெடுத்த மதத்தை பின்பற்றவும் மத நம்பிக்கையே இல்லாமல் இருப்பதற்கும், இவற்றை துன்புறுத்தலின்றி அச்சமின்றி பாகுபாடின்றி செய்யவும் உரிமை உண்டு. எல்லா இடங்களை விட இது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது. இந்த அடிப்படை மாண்பினை/விழுமியத்தை உயர்த்திப் பிடிக்க வேண்டியது இந்தியாவில் மிகவும் அவசியமானது.’

ஒபாமா, எல்லா சமூகங்களிலுமே மனிதர்களுடைய இருண்ட ஆழ்மன உந்துதல்களை தூண்டிவிட வாய்ப்புண்டு என்றும், பல நேரங்களில் இதற்காக மதம் பயன்படுத்தப்படுகிறது என்றும் எச்சரித்தார். வேற்றுமையில் ஒற்றுமை என்பதை சுட்டிக்காட்ட ஷாருக்கான், மில்கா சிங், மேரிகாம் போன்ற பெயர்களை பட்டியலிட்டார். (வேறுவேறு நேரங்களில் இசுலாமிய சீக்கிய கிறிஸ்துவ மக்கள் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதை ஒபாமா குறிப்பிடவில்லை).

விஷ்வ ஹிந்து பரிஷத்தின் இணைப் பொதுச் செயலாளர் சுரேந்திர ஜெயின், ஒபாமா பேசியது, கட்டாய மதமாற்றம் மூலம் சமூகத்தில் பதட்டம் உருவாக்கப் பார்க்கும் கிறிஸ்துவ பாதிரியார்கள் மற்றும் இசுலாமிய தலைவர்கள் தொடர்பானது என அறிவித்தார்! திருப்பதியில் தேவாலயங்கள் வைஷ்ணோ தேவி கோவில் இருக்கிற இடத்தில் (இசுலாமிய மக்கள் இல்லாத) இடத்தில் மசூதி கட்டுவது போன்றவை பற்றிய கரிசனத்தையே ஒபாமா வெளிப்படுத்தினார் என்கிறார் ஜெயின்!

இந்திய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி தமது குடியரசு தின செய்தியில், நாக்கின் வன்முறை மக்களின் இதயங்களை வெட்டிக் காயப்படுத்தும் என்றார். அவர், ‘இந்தியாவின் அறிவு, நமக்கு ஒற்றுமையே வலிமை ஆதிக்கம் பலவீனம் என உணர்த்தும், நாம் எப்போதும் வழிபாட்டுச் சமத்துவத்தில் நம்பிக்கை வைத்துள்ளோம், சட்டத்தின் முன்பு எல்லா மதங்களும் சமம்’ எனக் குறிப்பிட்டார்.

கிறிஸ்துவ சிறுபான்மையினர் மத்தியில் இயங்கும் செயல்பாட்டாளரான ஜான் தயாள், இரு குடியரசு தலைவர்களின் ஆலோசனைகள் படி மோடி அரசு நடக்க வேண்டும் என தெரிவித்த போது, இந்தியாவில் என்ன நடக்கிறது என்பதை உலகம் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறது என்ற செய்தியை மோடி அரசாங்கத்திற்கு ஒபாமா கவனப்படுத்தியதாக சொல்கிறார்.

வாசன் காங்கிரஸ் கட்சியில் தற்சமயம் இருக்கும் பீட்டர் அல்போன்ஸ், ஒரு தொலைக்காட்சி உரையாடலில், சங் பரிவார் அத்துமீறல்களை நேரடியாக அடக்குவதில் சிரமம் இருப்பதாலும், இது அரசாங்கம் நடத்துவதற்கு சிக்கல்கள் உண்டாக்குவதாலும், மோடி ஒபாமாவை, இப்படி பேசச் சொல்லியிருக்க வாய்ப்பிருக்கிறது என அதிகாரத் தாழ்வாரங்களோடு தொடர்புடைய தமக்கு படுகிறது என்ற சுவையான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

யார் கருத்து சொல்லியுள்ளார்கள் என்பதைக் காட்டிலும் எந்த நேரத்தில் எத்தகைய கருத்துக்கள் முன்வந்துள்ளன என்பது மிகமிக முக்கியமானது. இந்த 2015 குடியரசு தினத்தை ஒட்டி, அரசியலமைப்பு சட்டத்தின் முன்னுரை யில், ‘மதச் சார்பற்ற’,‘சோசலிச’ என்ற வார்த்தைகளை விட்டுவிட்டு மத்திய அரசு ஒரு விளம்பரம் வெளியிட்டது. விமர்சனம் எழுந்த போது, 1976க்குப் பிறகுதான் மதச்சார்பற்ற சோசலிச குடியரசு என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன என்றும் அரசு வெளியிட்டது. 1950 அரசியலமைப்பு சட்ட முன்னுரையே என்றும் அரசு தரப்பில் பதில் சொல்லி சமாளிக்கப்பட்டது. ஆனால் சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர், மதச்சார்பற்ற என்ற வார்த்தையையே எடுத்துவிட வேண்டும் என்கிறார். சட்ட அமைச்சர் இவற்றை நீக்குவது பற்றி நாடு முழுவதும் விவாதம் நடக்கட்டும் என்கிறார்.

இது, சங் பரிவாரின் வகைமாதிரி அணுகு முறையை வெளிப்படுத்துகிறது. ராமனுக்குப் பிறந்தவர்கள், முறை தவறி பிறந்தவர்கள் என்றெல்லாம் பாகுபடுத்திப் பேசிய அமைச்சர் சாதாரண கிராமத்து பெண்மணி என்பதால் அவரை மன்னித்து அடுத்துப் போகலாம் எனச் சொல்லப்பட்டது. சாக்ஷி மகராஜ் இந்து பெண்கள் ஆளுக்கு நான்கு பிள்ளைகள் பெற வேண்டும் என்று சொன்னதற்கு, காரணம் கோரும் குறிப்பாணை தந்தார்களாம். ஆனால் இந்த கண் துடைப்புகளைத் தாண்டி, சங் பரிவார் வகையறாக்கள், கிடைக்கிற எல்லா சந்தர்ப்பங்களையும் பயன்படுத்திக் கொண்டு மதவெறி நஞ்சை பரப்புகிறார்கள்.

பிரணாப் முகர்ஜி மதச்சார்பின்மை பற்றி பேச எந்த தகுதியும் இல்லாதவர். டெல்லியில் இந்திரா படுகொலைக்குப் பிறகு சீக்கியர்கள் படுகொலை செய்யப்பட்ட போது ராஜீவ் காந்தி பெரிய மரம் ஒன்று விழுந்தால் பூமி அதிரத்தானே செய்யும் என அதனை நியாயப்படுத்திய போது, பிரணாப் முகர்ஜி வாயைப் பொத்திக் கொண்டு சும்மா இருந்தவர்தான். பாப்ரி மசூதி இடிக்கப்பட்டபோது மவுனமாக வேடிக்கை பார்த்த காங்கிரஸ் தலைவர்தான் பிரணாப் முகர்ஜி.

ஒபாமா, சகிப்புத் தன்மை பற்றிப் பேசுவது சாத்தான் வேதம் ஓதுவதற்கு ஒப்பானதாகும். அவர் கருப்பினத்தவர்களுக்கோ மற்ற மதத்தினருக்கோ அவரது பதவிக் காலத்தில் நியாயம் வழங்கவில்லை. அவர் விரும்பினாலும் அதற்கு வாய்ப்பு இல்லை என்பது வேறு விஷயம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பிறகு, ஜார்ஜ் புஷ் இஸ்லாத்துக்கு எதிரான பயங்கரவாத எதிர்ப்புப் போரை உலகளாவிய அளவில் துவங்கினார். இஸ்லாத்தை சாத்தானாக சித்தரித்தார். புஷ் துவங்கியதை ஒபாமா சளைக்காமல் தொடர்ந்தார். ஒபாமா ஆட்சிக் காலத்தில் தான் படுமோசமான டிரோன் தாக்குதல்கள் நடக்கின்றன. ஒபாமா ஆட்சிக் காலத்தில்தான் பாகிஸ்தானின் இறையாளுமை அத்துமீறப்படுகிறது. அய்க்கிய அமெரிக்காவில் திரும்பத் திரும்ப கருப்பின இளைஞர்கள் காவல்துறையினரால் கொல்லப்படுகின்றனர். இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு எதிராக வெறியாட்டம் போட்டுக் கொண்டிருக்கிறது.

முதலாளித்துவ கருத்தியலாளரான ஹண் டிங்டன் ‘நாகரிகங்களின் மோதல்’ என்ற ஒரு நூலை எழுதினார். அந்த நூலின் மய்யக் கரு, நாம் எதிர் அவர்கள் என்பதே ஆகும். கிறிஸ்துவம் நாகரிகத்தின் அடையாளம் எனவும், இசுலாம் காட்டுமிராண்டித்தனத்தின் அடையாளம் எனவும் சித்தரித்த ஹண்டிங்டன், கிறிஸ்துவத்திற்கு இயல்பான கூட்டாளி இந்து மதம் என்று எழுதினார். இதில் உலகளாவிய புவிசார் அரசியல் (ஜீயோ பாலிடிக்ஸ்) அடங்கியுள்ளது.

இன்றைய அய்க்கிய அமெரிக்கா இசுலாத்துக்கு எதிரான போரின் ஊடே எரிசக்தி மற்றும் எண்ணெய் வளங்களை குறி வைக்கிறது. அதே நேரம் ரஷ்யாவை ஒரு தட்டு தட்டி வைக்கப் பார்க்கிறது. (இந்தியா வந்த ஒபாமா ரஷ்யாவை சண்டியர் ரவுடி என்று சொன்னார்). சீனாவுக்கு எதிராக, சீனாவை சுற்றி வளைப்பதில் இந்தியாவை பயன்படுத்துகிறது. நமோபாமா சங்கதிக்குள், ஒரு போர்த்தந்திரக் கூட்டு நிச்சயமாய் இருக்கிறது. ஒபாமா மோடி நெருக்கம் என்பது, அய்க்கிய அமெரிக்காவின் பிடிக்குள் இந்தியா வலிய சென்று சிக்கிக் கொள்வதோடு சேர்த்துக் காணப்பட வேண்டிய ஒரு விசயமாகும். பெரிய அண்ணன்கள் எப்போதும் வசதியாக உபதேசம் செய்வார்கள். அப்படிப்பட்டதே ஒபாமாவின் கடைசி நாள் உபதேசம். அப்படி செய்ய வேண்டிய சில அவசியங்கள் அவருக்கு இருக்கின்றன. எது எப்படியானாலும், மோடி அரசுக்கு இந்தியாவுக்கு உள்ளேயும் வெளியேயும் மதவாத நிகழ்ச்சி நிரலை தொடர்வதில் நிச்சயம் சங்கடங்கள் இருக்கும் என்பதை, ஒபாமாவின் மதச் சுதந்திரம் தொடர்பான கருத்துக்கள் புலப்படுத்துகின்றன.

இந்தியாவுக்கு வெளியிலிருந்து வந்த அய்க்கிய அமெரிக்க அதிபர், மதச் சுதந்திரம் பற்றி பேசிய விஷயங்கள் ஒரு பக்கம் இருக்கட்டும். இந்தியாவுக்குள் மதமாற்றம் தொடர்பாக என்ன விவாதங்கள் நடக்கின்றன? நிகழ்ச்சி நிரலை யார் தீர்மானிக்கிறார்கள்? சங் பரிவார் சொல்வதற்கு செய்வதற்கு மற்றவர்கள் பதில் சொல்ல வேண்டும் என்ற நிலைமை இருக்கிறதா இல்லையா? சங் பரிவார் தற்காப்பு நிலைக்குச் செல்கிறதா அல்லது சவால் விடுகிறதா? இப்போதும் சங் பரிவார் நாடாளுமன்றத்தில், கட்டாய மதமாற்ற தடைச் சட்டம் போடலாமே, போலி மதச்சார்பற்ற சக்திகளே ஏன் பின்வாங்குகிறீர்கள் என்று தானே சீண்டுகிறது.

இப்போதும் சங் பரிவார் கூட்டம் இந்தியாவில் இசுலாமியர் எண்ணிக்கை பிரும்மாண்டமாக பெருகி வருவதாகவும், வெகு சீக்கிரம் இந்துக்கள் சிறுபான்மையாகி விடுவார்கள் என்றும் பரப்புரை செய்து வருகிறது. நம்மிடம் இருந்து திருடி விட்டார்கள்; திருடியதை திரும்ப எடுத்துக் கொள்வோம் என்று உணர்ச்சிகளை விசிறிவிடுகிறது. அதாவது இந்தியா இந்து நாடு, இந்துக்கள் கட்டாயமாக இசுலாத்துக்கும் கிறிஸ்தவத்துக்கும் மதமாற்றம் செய்யப்பட்டார்கள். நாம் அவர்களை திரும்ப நம் பக்கம் கொண்டு வருவோம் என்று சொல்கிறார்கள். இந்துக்களை கிறித்துவர்களாகவோ, இசுலாமியர்களாகவோ மாற்றக் கூடாது என்றும் இசுலாமியர்களும் கிறிஸ்தவர்களும் திரும்பவும் இந்துக்களாக மாற்றப்பட வேண்டும் என்றும் வாதாடுகிறார்கள்.

மதமாற்றம் தொடர்பான சமகால விவாதங்களை அடுத்தடுத்து காண்பதற்கு முன்பாக, முன்னோட்டமாக மதம் மற்றும் மதச்சார்பின்மை தொடர்பான மார்க்சிய நிலைப்பாடுகளையும் பார்ப்போம்.

Search