தலையங்கம்
யாருடைய தோழர்? யாருடைய தொண்டர்?
யாருடைய தோழர்? யாருடைய தொண்டர்?
கருணாநிதி ரொம்பவே கவலைப்படுகிறார். மீண்டும் ஆரியராட்சி வராமல் இருக்க ஒற்றுமையாய் இருக்குமாறு கட்சிக் கூட்டங்களில் உருக்கமாய் பேசுகிறார். ஜெயலலிதாவுக்கு கூடும் கூட்டங்களை வைத்து தேர்தல் வெற்றி தோல்விகளை கணிக்க முடியாது என்கிறார்.
கலைஞருக்கு நாடகங்கள் என்றால் சலிக்கவே சலிக்காது. கலைஞரின் கதை வசனத்தில், கலைஞர் தயாரிப்பில், கட்டுமான தொழிலாளர் நலவாரிய தலைவர் பொன் குமார் இயக்கத்தில், சென்னையில் அக்டோபர் 30 அன்று கட்டுமானத் தொழிலாளர், அமைப்புசாரா தொழிலாளர் நடத்திய நன்றி அறிவிப்பு மாநாடு என்ற நாடகம் நடத்தப்பட்டது. கட்டாயமாய் நாடகம் காண அமைப்புசாரா தொழிலாளர்களை திரட்டி வரும் பணி தொழிலாளர் துறை அதிகாரிகளுக்குத் தரப்பட்டது.
உருக்கமான, உணர்ச்சிமயமான நடிப்பால் காண்போரை, கேட்போரை, ‘மெய்’ மறக்கச் செய்ய முயற்சித்தபோது முத்தமிழ் அறிஞர் நடிப்பின் சிகரங்களை தொட்டுவிட்டார். 33 நல வாரியங்களில் உள்ள 2 கோடியே 9 லட்சத்து 89 ஆயிரம் உறுப்பினர்களின் வாக்குகள் தன்னை விட்டு வெகுதூரம் போய்விட்டதே என்ற கவலையில் எப்படியாவது அவற்றைப் பிடிக்க முடியுமா என இந்த நாடகத்தை நடத்தி உள்ளார்.
தேர்ந்த அனுபவம் வாய்ந்த நடிகர் என்பதால், அவைக் கூச்சமின்றி தமிழ்நாட்டு உழைக்கும் மக்களிடம் நான் உங்கள் தோழன், உங்கள் தொண்டன், உங்கள் உறவினன், உங்கள் உடன்பிறப்பு என்ற வசனங்களை தடுமாறாமல் பேசினார். வசனம் நன்றாகத்தான் பேசுவோம், இருந்தாலும் எடுபடுமா என்பதற்காக, ராஜராஜ சோழ மகாராஜா வேஷத்தை கழட்டி வைத்துவிட்டு, சாமான்யர் வேஷம் கட்டினார்.
‘நான் ஒன்றும் பிறக்கும்போதே வாயில் தங்கக் கரண்டியோடு பிறந்தவன் அல்ல; வைர மாலை, முத்து மாலையை கழுத்திலே அணிந்துகொண்டு பிறந்தவன் அல்ல; நான் சீமான் வீட்டுப் பிள்ளை அல்ல; பணக்கார வீட்டுத் தாழ்வாரத்தில் தவழ்ந்தவன் அல்ல; சாதாரண மனிதன். என்னுடைய தந்தையும் தாயும் திருக்குவளை கிராமத்தில், எங்களுடைய வீட்டைச் சுற்றியுள்ள நிலபுலங்களிலே நடவு நட்டு, உழுது, பயிரிட்டு, களை எடுத்து, நெல்லை உருவாக்கி, அறுவடை செய்து அப்படிச் சாப்பிட்டவர்கள்தான். அப்படி வாழ்ந்தவர்கள்தான் என் தாயும் தந்தையும்.’
இது நிச்சயம் உண்மைதான். அவரே சொன்னபடி, அது பிறக்கும்போது இருந்த கதை. இன்றைய நிலை என்ன? கருணாநிதி குடும்பம் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பெரும்தொழில் குழுமக் குடும்பம். அவர்கள் மட்டும் தமது உண்மையான சொத்துக் கணக்கைக் காட்ட முன்வந்தால், பில் கேட்சும், அம்பானியும் பயந்துபோய் விடுவார்கள். பில் கேட்சும், அம்பானியும் பயப்படும் எதையும் கருணாநிதி கனவிலும் நினைக்க மாட்டார்.
திடீரென விவசாயத் தொழிலாளர், வறிய விவசாயி உள்ளிட்ட பல்வகைப்பட்ட அமைப்புசாரா தொழிலாளர்களிடம், உங்கள் தோழன், உங்கள் தொண்டன் என்று ஏன் பேசுகிறார்? கும்பிடும் கைகள் விஷம் தோய்ந்த குறுவாளை மறைக்கப் பார்க்கின்றன.
27.5 லட்சம் குடும்பங்களில் 26 லட்சம் குடும்பங்கள் எங்கே 2 ஏக்கர் நிலம் என்று கேட்கின்றன. தவணை முறையில் தருவதாகச் சொல்லும் கான்கிரீட் கூண்டு இருக்கட்டும், எங்கே 5 சென்ட் வீட்டுமனைப் பட்டா என்று நகர்ப்புற, நாட்டுப்புற வறியவர்கள் கேட்கிறார்கள்.
2006ல் இருந்து இது வரை, 19 லட்சத்து 42 ஆயிரத்து 575 அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்களுக்கு 909 கோடியே 40 லட்சத்து 98 ஆயிரத்து 845 ரூபாய் நலத்திட்ட நிதி வழங்கப்பட்டதாக மார்தட்டுகிறார். 20 லட்சம் பேருக்கு தலைக் கணக்கு சராசரி பார்த்தால் ஆளுக்கு ரூ.4,545. 2 கோடி வாரிய உறுப்பினர்களில் 20 லட்சம் பேர் மட்டும் நலநிதி பெற்றுள்ளனர். மீதி 180 லட்சம் பேருக்கு ஏதும் இல்லை. ஆளுக்கு ரூ.4,545 கிடைத்தால், தமிழ்நாட்டின் கோடிக்கணக்கான மக்களின் நிலம், வீட்டுமனைப் பட்டா, வேலை, கூலி பிரச்சனைகள் தீர்த்துவிடுமா? விலைஉயர்வால் தமிழக மக்களுக்கு பாதிப்பு இல்லை என்று தயங்காமல் சொல்லும் முதல்வர், நலநிதிப் பயன்களை அரசு வழங்கியதால், உழைப்பாளியின் தோழனாக, தொண்டனாக மாறிவிட முடியுமா?
தொழிலாளர் அமைச்சர் அன்பரசன், கம்யூனிஸ்டுகள் ஊரில் நடமாட முடியாது, கூட்டம் நடத்த முடியாது என வன்முறைக்கு தூபம் போடுவது, திடீரென நிகழ்ந்துவிட்டதா? டாஸ்மாக் தொழிலாளியும் சத்துணவு ஊழியரும் கருணாநிதியின் இரும்புக் கரத்தால் தாக்கப்பட்டனர். என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளர் எழுச்சியின் முதுகில் குத்தியது தொமுச. நோக்கியா, ஃபாக்ஸ்கானில் முதலாளிகளுக்கு ஆதரவாக, நயவஞ்சகமாக தொமுச நுழைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தின் காவல்துறை தலைவர், தொழிலாளர்கள் மூலமே இடதுசாரி தீவிரவாதம் ஊடுருவுவதாகச் சொல்கிறார். பிரிக்கால் தொழிலாளி போராட்டத்தை, இடதுசாரி தீவிரவாதம், மார்க்சியம் - லெனினியம் பரப்புதல், என்றெல்லாம் சொல்லியும் கொலை வழக்கு போட்டும் முடக்கப் பார்த்தவர்கள், வேறென்ன சொல்வார்கள்? சிஅய்டியுவின் பொதுச் செயலாளருக்கு கைவிலங்கு போட்ட தமிழக அரசு, இடதுசாரி என்றாலே மாவோயிஸ்ட் என்று கூட மிரட்டிப் பார்த்தது. காவல்துறை தலைவர், தொழிலாளர் அமைச்சர் இருவரும் கோவையில் இருந்து இருங்காட்டுக்கோட்டை வரை எழுகிற தொழிலாளர் போராட்டங்கள் கண்டு அஞ்சுகின்றனர்.
முன்னாள் காவல்துறை கூடுதல் துணைக் கண்காணிப்பாளர் தோட்டத்தில் கஞ்சாப் பயிர்கள். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வழிப்பறிக் கொள்ளை மோசடி மன்னர். வீரபாண்டி ஆறுமுகத்தின் சகோதரர் மகன், கோடிக்கணக்கான சொத்துக்களை வளைத்துப்போட, முன்னாள் காவல்துறை ஆய்வாளரையும் சேர்த்து 6 பேரை கொடூரமாகக் கொன்ற வழக்கில் சிக்கியுள்ளார். ஸ்பெக்ட்ரம் ஊழல் ராஜா இன்னும் அமைச்சராக தொடர்வது எப்படி என்று உச்சநீதிமன்றம் கேட்கிறது.
முதல்வர், மூத்த அதிகாரிகளைக் கூட்டி, மணல் கொள்ளையர் போன்ற சமூக விரோதிகளைக் குண்டர் சட்டத்தில் உள்ளே தள்ளுங்கள் எனச் சொன்னதாக செய்தி வந்தது. காவல்துறையினர் கரை வேட்டிகள் போல் செயல்படாமல், சட்டப்படி கொஞ்சம் நடந்துகொள்ளப் பார்த்தால், கழகத்தின் முதல் வரிசையில் பலர் கம்பி எண்ணிக் கொண்டிருக்க மாட்டார்களா? அமைச்சர் அன்பரசன் மேல் வன்முறையைத் தூண்டும் வழக்கு பதிவாகி இருக்குமே? பிரச்சனை இடதுசாரி தீவிரவாதமல்ல. உண்மையான பிரச்சனை வலதுசாரி பயங்கரவாதமே. முதலாளித்துவ பயங்கரவாதமே.
தண்ணீர் இல்லாத தமிழகத்தால் தமிழ்மக்கள் கண்ணீர் சிந்துகிறார்கள். திருநெல்வேலி தொகுதிக்குள் மட்டும் 40,000 ஏக்கர் விளைநிலத்தில், 4,600 ஏக்கர் நிலம் ரியல் எஸ்டேட் (நிலவர்த்தக) நிலமாகிவிட்டது. வள்ளியூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3000 நிலத்தரகர்கள் உள்ளனர். தமிழக நகர்மயமும் தொழில்மயமும் முதலாளித்துவ வளர்ச்சிப் பாதையும், விவசாயத்தையும் உழைக்கும் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் வாழ்க்கையையும் வேகவேகமாக நாசமாக்கிக் கொண்டிருக்கின்றன. முன்னேறிப் பாயும் மூலதனத்திற்கு ராஜபாட்டை போட்டுத் தருகிறது திமுக அரசு. தமிழக கிராமப்புறங்களில் 25 வயதுக்குக் குறைவான இளைஞர்கள் விவசாயத்தை நம்பிப் பயனில்லை என வெளியேறுகின்றனர். விவசாயக் கூலிகளில் ஏகப்பெரும்பான்மையினர் பெண்களே. விவசாய நெருக்கடி, மூலதனம் சுரண்ட மலிவான கூலி அடிமைகளைத் தாராளமாகத் தருகிறது.
எல்லா துறைகளிலும் அரங்கங்களிலும் சூறையாடல். எங்கெங்கும் கொள்ளை. கல்வியும் மருத்துவமும் சாமான்யர்க்கு இல்லை. மூலதன விசுவாசம் கொடிகட்டிப் பறக்கிறது. கருணாநிதி முதலாளிகளின், பணக்காரர்களின் தோழர். மூலதனத்தின் தொண்டர். மக்கள் மனதில் பசுமரத்தாணி போல் பதிந்துவரும் இந்த உண்மையை கருணாநிதி ஏற்பாடு செய்த நாடகம் மறைத்துவிடாது.
பல்வேறு குற்றவியல் வழக்குகளை சந்திக்கின்ற, ஆணும்பெண்ணுமாய் பல நாட்கள் சிறையில் இருந்த பிரிக்கால் தொழிலாளர்களின், மே தினத்தில் சிறை வைக்கப்பட்ட ஹ÷ண்டாய் தொழிலாளர்களின் தோழராக கருணாநிதி மாற முடியுமா? விரைவாகக் கட்டி முடி, பாதுகாப்பு ஒரு பொருட்டல்ல என விரட்டப்பட்டதால் சட்டமன்ற உறுப்பினர் விடுதி வளாகத்தில் கட்டுமானப் பணிகளில், புதிய சட்டமன்ற கட்டுமானப் பணிகளில் 31.10.2010 வரை செத்து மடிந்த பல கட்டுமான தொழிலாளர்களின் தோழனாக, மனிதக் கழிவகற்றும் பணியில் மனிதர்களை ஈடுபடுத்தக் கூடாது என்ற உயர்நீதிமன்றத் தீர்ப்பு மீறப்படுவதால் தொடர்ந்து செத்து மடியும் மனிதக் கழிவகற்றும் தொழிலாளர்களின் தோழனாக, எந்திரத்தைக் காட்டிலும் தொழிலாளியின் உயிர் பெரிதல்ல எனக் கருதி விபத்தில் சிக்கிய பெண் தொழிலாளியின் உயிரைக் காக்கத் தவறியதாக நோக்கியாவில் குற்றச்சாட்டு எழுந்துள்ளதே, அந்த நோக்கியா தொழிலாளியின் தோழனாக கருணாநிதி ஒருபோதும் மாற முடியாது.
ராஜராஜ சோழன் காலத்தில் இருந்து கருணாநிதி வரையிலான ஆட்சியாளர்கள் பற்றி அவர்கள் சொல்வார்கள்:
சொல்வோம்.
ஆயிரம் ஆண்டுகளாக அழுகை
மொழி மாற்றிக் கொண்டதில்லை;
ஆத்திரமும் கூடத்தான்.
கண்ணீர் -
நிறம் மாற்றிக் கொண்டதில்லை;
ரத்தமும் கூடத்தான்.
தமிழகத்தின் திமுக கூட்டணி, அஇஅதிமுக கூட்டணி என்ற இருதுருவ அரசியல் ஆபத்தானது. ஜெயலலிதாதான் கருணாநிதிக்கு அரசியல் மறுவாழ்வு கொடுத்தார். அவர் ஆட்சியை சகிக்க முடியாத மக்கள், கருணாநிதிக்கு வாய்ப்பு தந்தனர். அரிசி, வண்ணத் தொலைக்காட்சிப் பெட்டி, இடைத் தேர்தல்கள் வரை வந்தன.
இன்று வாக்களித்த மக்களுக்கு துரோகம் செய்து, வசதி படைத்தவர்களுக்கு வாரித்தரும், அள்ளிச்சுருட்ட வாய்ப்பு தரும் கருணாநிதி, ஜெயலலிதாவுக்கு அரசியல் சாப விமோசனம் தரப் பார்க்கிறார். ஜெயலலிதா துல்லியமான கணக்குப் போட்டு வெற்றிக் கூட்டணி அமைப்பேன் என பேசி வருகிறார்.
திமுக அரசின் தொழிலாளர் விரோத நடவடிக்கை எதிர்ப்பு இடதுசாரி கூட்டங்களில் அதிமுகவினர், அடுத்து அம்மா ஆட்சிதான், நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று பேசி வருகின்றனர். கருணாநிதி பார்த்துக் கொண்டதை ஜெயலலிதா பார்த்துக் கொள்வார்! வேறு என்ற நடக்கும் தோழர்களே?
இந்த இருதுருவ அரசியல், முதலாளித்துவ வளர்ச்சிப் பாதை, தமிழக மக்களை பேராபத்துக்கு மட்டுமே இட்டுச் செல்லும்.
தமிழகத்திற்கு, மக்கள் வலிமையை போராட்டங்களை அடிப்படையாகக் கொண்ட சுதந்திரமான இடதுசாரி அரசியலும், மக்கள் சார்பு வளர்ச்சிப் பாதையும், அவசர, அவசியத் தேவையாகிவிட்டன. வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம், தமிழக உழைக்கும் மக்கள் மாற்றுப் பாதையில் போராட்டப் பாதையில் பயணம் செய்ய தாங்கள் தயார் என்று நிரூபிக்கிறார்கள். இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு சக்திகள் மக்கள் விருப்பங்களை நிறைவேற்றத் தயாராக வேண்டும்.