கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...
அன்று கீழ்சாதியைச் சேர்ந்தவர்களுக்கு ஒரு கல்வி, மேல் சாதியைச் சேர்ந்தவர்களுக்கு வேறு கல்வி என்று இருந்தது. இன்று காசுள்ளவர்களுக்கு ஒரு கல்வி, காசில்லாதவர்களுக்கு வேறு கல்வி, அல்லது கல்வி இல்லை என்றுள்ளது. உலகமயமும் தனியார்மயமும் வருணாசிரம தர்மத்தை பாதுகாக்கின்றன. பள்ளியில் உள்ள கழிப்பிடங்களை தலித் மாணவர்களை கொண்டு சுத்தம் செய்வது தமிழ்நாட்டில் நடக்கிறது.
பார்ப்பனிய எதிர்ப்பு, பகுத்தறிவு வளர்ப்பு என தீவிரமான ஜனநாயக இயக்கங்களுக்கு, முற்போக்கு விழுமியங்களுக்கு தமிழக மக்கள் சொந்தக்காரர்கள். இன்று கல்வியில் பிரிவினை, வேறுபாடு, மேல் கீழ் ஆகியவற்றுக்கு தமிழக ஆட்சியாளர்கள் வழிவகுத்துவிட்டார்கள்.
அன்று சாதியால் தாழ்ந்ததால் கல்விச்சாலைக்கு வெளியே சில மாணவர்கள் நிறுத்தப்பட்டார்கள். இன்று பள்ளி நிர்ணயித்த கட்டணத்தை செலுத்தவில்லை என்று சில மாணவர்கள் வெளியே நிறுத்தப்படுகிறார்கள்.
தமிழக அரசின் தவறான கல்விக் கொள்கையின் விளைவை அந்தப் பிஞ்சுகள் தலையிலும் நெஞ்சிலும் சுமக்கின்றன.
இலவச பஸ் பாஸ், இலவச புத்தகங்கள் என்று ஏமாற்றப் பார்த்தார் கருணாநிதி. அவர் சற்றும் எதிர்பாராத வகையில் தமிழகமெங்கும் பெற்றோர்கள் போராட்டங்கள் நடத்துகிறார்கள். பள்ளிகளை முற்றுகையிடுகிறார்கள்.
கும்பகோணத்தில் எரிந்து போன குழந்தைகள் கூட தனியார் கல்வி என்ற கொள்கையில் எந்த மாற்றமும் கொண்டு வரவில்லை. அடுத்தடுத்து தொடர்ச்சியாக நடந்த பள்ளி மாணவர்கள் வாகன விபத்துக்களில் உயிரிழந்த குழந்தைகளும் அவர்களுடன் உயிரிழந்த சில கனவுகளும் கூட ஆட்சியாளர்களை மாற்றவில்லை.
முளையிலேயே கிள்ளி எறியப்படாததால் இன்று அந்த விஷ விதை விருட்சமாக மாறியுள்ளது. தருமபுரியில் பள்ளி வாகன விபத்தில் பள்ளிக்குள்ளேயே ஒரு மாணவர் இறந்து போகிறார்கள். சீற்றமடைந்த மக்கள் பள்ளியை சூறையாடுகிறார்கள். வழக்கம் போல் மக்கள் கைது செய்யப்படுகிறார்கள். ஆனால் பள்ளி நிர்வாகம், அனைத்து தனியார் பள்ளி நிர்வாகங்களின் அமைப்பொன்றின் மூலம் தனியார் பள்ளிகளுக்கு பாதுகாப்பு கேட்கிறது. பாதிக்கப்பட்டவர்க்கு சிறை, பாதிப்புக்குக் காரணமானவர்களுக்கு பாதுகாப்பு. இது உலகமய நியாயம்.
இன்று இன்னும் ஒரு படி மேலே போய் தனியார் பள்ளி நிர்வாகங்கள் எல்லாம் சேர்ந்து தமக்கு விருப்பமான கட்டணத்தை வசூலிக்க உரிமை கேட்கின்றன. கருணாநிதியும் அவர்கள் கவலை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும் என்றும், அவர்கள் முறையிடலாம் என்றும் சொல்லிவிட்டார்.
சோழனின் பேரன் சொல்லிவிட்ட பிறகு யாருக்காக அஞ்ச வேண்டும்? தான் நிர்ணயித்த கட்டணத்தை கட்டாத மாணவர்களை வெளியே நிறுத்தி அவமானப்படுத்தி மகிழ்கின்றன தனியார் பள்ளி நிர்வாகங்கள். சென்னையின் தனியார் பள்ளி ஒன்று அநியாயக் கட்டணத்தை எதிர்த்துப் போராடிய பெற்றோர்கள் மீது காவல்நிலையத்தில் புகார் கொடுத்தது.
நீதிமன்றம் கூட முதல் சுற்றில் தனியார் பள்ளிகளுக்கு ஆதரவாகவே இருந்தது.
பள்ளி மாணவர்கள் அவமானப்படுகிறார்கள். பெற்றோர்கள் அவர்களைப் பார்த்து துடித்துப் போகிறார்கள். இந்த அவமானமும் துன்பமும்தான் கருணாநிதி நடத்தும் நல்லாட்சி! தமிழகத்தின் வளர்ச்சி!
தனியார் பள்ளிக் கல்வி கட்டணங்களை முறைப்படுத்த புறப்பட்ட திமுக அரசு ஜ÷லை 16 அன்று தமிழ்நாடு பள்ளிகள் (கட்டண வசூல் முறைப்படுத்துதல்) மசோதா 2009 கொண்டு வந்து, ஜ÷லை 21 அன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றி, ஆகஸ்ட் 7 அன்று அறிவித்தது. சட்டத்தின் விதிகள் டிசம்பர் 7 அன்று வெளியாயின.
சட்டம் சொன்னதுபடி நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் தனியார் பள்ளிகள் கட்டண நிர்ணய கமிட்டி, 10934 தனியார் பள்ளிகளுக்கு கட்டணம் நிர்ணயிக்க 2009 டிசம்பரில் அமைக்கப்பட்டது.
10233 அரசு உதவி பெறாத பள்ளிகளுக்கான கட்டணங்கள் வெளியிடப்பட்டன. 701 பள்ளிகள் குழுவின் கேள்வித்தாளுக்கு பதில் தரவில்லை.
சட்டமும் கமிட்டியும் தனியார் பள்ளிகள் இருப்பதை, இயங்குவதை, தொடர்வதை அங்கீகரிக்கின்றன. தங்களுக்கு விருப்பமான கட்டணத்தை நிர்ணயிக்கும் அவற்றின் உரிமையை அங்கீகரிக்கின்றன. இந்த எல்லைகளுக்குள்தான் கோவிந்தராஜன் குழு கட்டணங்கள் வெளியிடப்பட்டன.
துரதிர்ஷ்டவசமாக, மத்திய அரசு திட்டத்தில் கல்விக் கட்டணம் எதுவும் வசூலிக்காத கேந்திரிய வித்யாலயா பள்ளிகளுக்குக் கூட கோவிந்தராஜன் குழு கட்டணம் நிர்ணயித்திருக்கிறது. இந்தப் பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டணம் ஏதும் வசூல் செய்வதில்லை. பெண் மாணவர்களுக்கும் அட்டவணை சாதியினர் மற்றும் அட்டவணை பழங்குடியினர்க்கும் 12ஆம் வகுப்பு வரை எந்தக் கட்டணமும் வசூல் செய்வதில்லை என்று அவற்றின் கல்வி அதிகாரி சொல்கிறார்.
அந்தந்த பள்ளியில் உள்ள உள்கட்டுமான வசதிகளை, வேறு பல வசதிகளை கணக்கில் எடுத்துக்கொண்டு அவற்றுக்கேற்ப கட்டணம் நிர்ணயிக்கப்பட்டதாக கோவிந்தராஜன் குழு சொல்கிறது.
குழுவின் எழுத்துபூர்வமான அனுமதியின்றி கூடுதல் கட்டணம் வசூல் செய்யக் கூடாது என்று குழு சொன்னால் அனுமதி பெறுவது தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தமிழ்நாட்டில் ஒரு விசயமா?
6,400 பள்ளிகள் கட்டண உயர்வுக்காக மனு கொடுத்துள்ளன.
சில பள்ளிகளை அனுமதிக்கலாம் என்று கோவிந்தராஜன் 21.10.10 அன்று சொன்னார். (டெக்கான் கிரானிக்கிள்).
கூடுதல் கட்டணத்தை எதிர்த்து போராட்டங்கள் எழுந்தன. இந்த நிலை தொடர்ந்தால் 1 கோடி மாணவர்கள், 1 லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் - இவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று தனியார் பள்ளி நிர்வாகங்கள் என்று கவலைப்படுகின்றன. வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், மிரட்டுகின்றன.
குழு நிர்ணயிக்கப்பட்ட கட்டணம் என்ன என்று பொது மக்களுக்கு தெரியப்படுத்தவே திமுக அரசுக்கு மக்கள் போராட்டங்கள் நிர்ப்பந்தம் தர வேண்டியிருந்தது. துவக்கத்தில் தலைமை கல்வி அதிகாரி அலுவலகத்தில் கூட விவரங்கள் கிடைக்கவில்லை. நேராக பள்ளிகளுக்கு அனுப்பிவிட்டதாக சொன்னார்கள்.
கோவிந்தராஜன் குழு நிர்ணயித்த கட்டணத்தை அமலாக்க நீதிமன்ற தடைக்கு எதிராக பெற்றோர் நடத்திய போராட்டங்களைப் பார்த்து, முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த திமுக அரசு வேறு வழியின்றி நீதிமன்ற தடை பெற்றது.
இந்தத் தீர்ப்பும் குழு நிர்ணயித்த கட்டணத்துக்கு மேல் வசூல் செய்யப்பட்ட கட்டணம் இருப்பாக கணக்கில் கொள்ளப்பட வேண்டும் என்றும், பள்ளியின் மீதான புகார் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்டால் திருப்பித் தர வேண்டும் என்றும் சொல்கிறது. ஆக, இப்போதைக்கு கூடுதல் கட்டணம் செலுத்தியவர்களுக்கு கோவிந்தாதான்.
முறையீடு செய்த பள்ளிகளிடம் நேரில் கருத்து கேட்டு தனிப்பட்ட ஆணைகள் வழங்கப்பட வேண்டும் என்று இந்த தீர்ப்பு சொன்னது. 6,400 பள்ளிகள், 4 மாத கால அவகாசம். என்ன செய்வது? கோவிந்தராஜன் பதவி விலகிவிட்டார்.
தனியார் பள்ளிகளில் தங்கள் குழந்தைகளை சேர்த்துவிட்டு ஏனிப்படி பெற்றோர் துன்பப்பட வேண்டும்? சென்ற ஆண்டு கல்லூரிகளில் கட்டணக் கொள்ளை நடந்தபோது பெற்றோர்கள் பேராசைக்காரர்கள் என்றார்கள்.
தங்கள் குழந்தைகள் மேலான கல்வி பெற வேண்டும் என்று பெற்றோர்கள் ஏன் பேராசைப்படக் கூடாது?
அரசுப் பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் போதுமான, தேவையான உள்கட்டுமான வசதிகளும், கல்வியில் தரமும் இருந்துவிட்டால் பெற்றோர் ஏன் அவற்றை தேடி வேறு இடங்களில் அலைய வேண்டும்?
கல்வி மொத்தமும் அரசின் கைகளிலேயே இருந்துவிட்டால், கல்வியில் தனியாருக்கு இடம் என்றால் பெற்றோர் ஏன் வேறு இடம் செல்ல வேண்டும்?
தனியார் கல்வி நிறுவனங்கள் வளர அரசு பள்ளிகளை, கல்லூரிகளை தாழ்ந்த தரத்தில் வைத்திருப்பது அரசின் அறிவிக்கப்படாத கொள்கையாக இருக்கும்போது பெற்றோருக்கு வேறு போக்கிடம்தான் எது?
தனியார் பள்ளிகளில் 40 - 50 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்றால், அரசுப் பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்பதுதானே நிலைமை?
தமிழ்நாடு அரசு தரும் விவரங்கள்படி இப்போது மாநிலத்தில் மொத்தம் 53,500 பள்ளிகள், நான்கரை லட்சம் ஆசிரியர்கள், 1 கோடியே 40 லட்சம் மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 40 லட்சம் மாணவர்கள் 10,934 தனியார் பள்ளிகளில் படிக்கின்றனர்.
2005 - 2006ல் 8,964 என்றிருந்த தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை 2010ல் 10,934ஆக உயர பெற்றோரின் பேராசையா காரணம்? சென்ற ஆண்டு பெய்த மழையில் திருவள்ளூர் மாவட்டத்தின் பல பள்ளிகள் தண்ணீரில் மூழ்கின. அடுத்த இரண்டு மூன்று மாதங்களுக்கு தண்ணீர் தேங்கி நின்ற பள்ளிகளில்தான் அந்தக் குழந்தைகள் படித்தன. பாம்புகள் அவ்வப்போது வகுப்பறைக்குள் வந்து சென்றன. தங்கள் குழந்தைகள் உயிருடன் இருக்க வேண்டும் என்று வறிய பெற்றோர்கள் நினைப்பது பேராசையா?
இப்போது பிரச்சனை அதன் எல்லைகளை கடந்த பிறகும் தும்பை விட்டு வாலைத்தானே அரசு பிடிக்கிறது?
தடைக்கு தடை வழங்கிய தீர்ப்பும் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்றுதான் சொல்கிறது. கருணாநிதி வேடிக்கைப் பார்க்கிறார். அந்தப் பள்ளிகளை அரசு ஏற்று நடத்தும் என்று சொல்ல நீதிபதிக்கோ கருணாநிதிக்கோ துணிச்சல் இல்லை.
பிரச்சனைக்கு தீர்வு தனியார் பள்ளி கல்வி கட்டணங்களை மாற்றி அமைப்பதில் இல்லை. கல்வி பற்றிய கொள்கையை மாற்றி அமைப்பதில் உள்ளது. சுதந்திரம் அடைந்து 63 ஆண்டுகளுக்குப் பிறகு அனைவருக்கும் கல்வி, அதற்கு சட்டம் என்று கபில் சிபலும், சமச்சீர் கல்வி என்று கருணாநிதியும் மாறிமாறி அறிக்கை விடுகின்றனர்.
தனியார் கைகளில் கல்வி, தனியார் கொள்ளைக்கு கல்வி ஆகியவற்றுக்கு அரணாக நின்றுகொண்டு அனைவருக்கும் கல்வி, சமச்சீர் கல்வி என்று பேசுவது பொருளற்றது. நடைமுறைக்கு ஒவ்வாதது.
அரசு, தனியார் கைகளில் இருந்து கல்வியை விடுவித்து, டாஸ்மாக் நடத்துவதற்கு பதிலாக கல்வி நிறுவனங்களை நடத்த வேண்டும். கழகங்களும் காங்கிரசும் இதைச் செய்யப் போவதில்லை.
எப்படியாயினும் இன்றைய நிலைமைகளில் தரப்படும் கல்வி முதலாளித்துவத்துக்கு விசுவாசமாக இருந்து, அதற்கு கட்டுப்பட்டு, அதன் எல்லைகளுக்குள் சுருங்கி நின்று, அதன் உற்பத்தியை உறுதிப்படுத்தி, லாபத்தை மேலும் மேலும் பெருக்கி, அதை வளர்ப்பதற்கேயன்றி வேறல்ல.
முதலாளித்துவம் தனது அடிமைகளுக்கு உண்டி கொடுக்கக்கூட தகுதியில்லாமல் போய்விட்டது என்று கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் சொன்னார். உண்டி கூட தர முடியாத முதலாளித்துவம் கல்வியா தரப்போகிறது?
முதலாளித்துவம் தனது சவக்குழியை தோண்டுபவர்களை தானே உருவாக்குகிறது என்றும் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்ஸ் சொன்னார். கருணாநிதி ஆட்சி தனது சவக்குழியை தானே தோண்டிக் கொண்டிருக்கிறது. கல்வி தனியார்மயத்தால் பாதிக்கப்பட்ட பெற்றோர்கள் அதற்கு உதவுகிறார்கள்.