COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, November 8, 2010

திருப்பூர் என்கிற தற்கொலை நகரம்

திருப்பூர் சமீபத்தில் மூன்று பிரச்சனைகளில் முன்வந்து நின்று கொண்டது. ஒன்று மின்சாரத் தட்டுப்பாடு. இதனால் பெரிதும் பாதிக்கப்படுவது முதலாளிகள். ஜெயலலிதா அவர்களுக்காகவும், திமுகவுடனான கணக்கை தீர்ப்பதில் ஒரு பகுதியாகவும் திருப்பூரைப் பற்றி பேசிக் கொண்டிருந்தார்.

அவர் ஒரு புறமும், விஜயகாந்த் இன்னொரு புறமுமாக பஞ்சு ஏற்றுமதி தடை செய்யப்பட வேண்டும் என்று பேசிக் கொண்டிருந்தார்கள். இதுவும் முதன்மையாக திருப்பூர் முதலாளிகள் பிரச்சனை. உழைக்கும் மக்களின் உடனடிப் பிரச்சனை இல்லை. தொழிலாளர்களுக்கு கூலி உழைப்பை எங்கும் விற்றுக் கொள்ளும் சுதந்திரம் உள்ளது.

இவர்கள் இருவருமே திருப்பூரை சிங்கப்பூராக மாற்றிய திருமாங்கல்யத் திட்ட தொழிலாளர்கள் பற்றியோ, கேம்ப் கூலி தொழிலாளர்கள் பற்றியோ பேசவில்லை.

அடுத்த பிரச்சனை, திருப்பூரை தாக்கும் தற்கொலைகள். திருப்பூர் முதலாளிகள் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. அங்குள்ள மேட்டுக் குடியினர் யாரும் தற்கொலை செய்து கொள்ளவில்லை. உழைக்கும் மக்கள்தான், திருப்பூரை உலகெங்கும் பிரசித்தி பெற்ற நகரமாக மாற்றிய, மாற்றிக் கொண்டிருக்கிற தொழிலாளர்கள்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள். அதனால் ஜெயலலிதாவுக்கோ, விஜயகாந்துக்கோ இதிலும் பேச ஒன்றுமில்லை.

ஊரக வேலை உறுதித் திட்டத்தில் இரண்டு மணி நேரம் வேலை செய்து ரூ.100 முதல் ரூ.110 வரை சம்பாதித்து விடுவதால் திருப்பூரில் தொழிலாளர் தட்டுப்பாடு என்று திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கம் கவலைப்படுகிறது. இந்தக் கவலையை தங்கள் கவலையாக மாற்றிக்கொண்டு ஜெயலலிதா அறிக்கை விடவில்லை. கனிமொழி அதைப் பார்த்துக் கொள்வார் என்று நம்புகிறார் போலும்.

தமிழகம் இந்தியாவின் வளர்ச்சி நட்சத்திரமாக உள்ளது என்று தமிழக அரசின் தொழிற் கொள்கை சொல்கிறது. இந்த வளர்ச்சி நட்சத்திரத்தின் ஒளிக்கு திருப்பூரும் தன் பங்கை தருகிறது. இந்த ஒளியைத் தரும் தொழிலாளர்கள் இருளில் இருப்பதை கண்டும் காணாமல் இருக்கிறது திமுக அரசு. இப்போது பிரச்சனைகள் முற்றிப்போய் தற்கொலைகளாக வெடித்து பத்திரிகைகளை ஆக்கிரமிக்கின்றன.

2010 ஆகஸ்ட் வரை மட்டும் 405 பேர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இவற்றில் 215 தற்கொலைகள் ஜ÷ன் முதல் ஆகஸ்ட் வரை நடந்தவை. (ட்ற்ற்ல்://ற்ண்ம்ங்ள்ர்ச்ண்ய்க்ண்ஹ. ண்ய்க்ண்ஹற்ண்ம்ங்ள்.ஸ்ரீர்ம்/ண்ய்க்ண்ஹ/405-க்ங்ஹற்ட்ள்-ண்ய்-8-ம்ர்ய்ற்ட்ள்-பண்ழ்ன்ல்ன்ழ்-ற்ன்ழ்ய்ண்ய்ஞ்-ள்ன்ண்ஸ்ரீண்க்ங்-ஸ்ரீஹல்ண்ற்ஹப்-ர்ச்-பச/ஹழ்ற்ண்ஸ்ரீப்ங்ள்ட்ர்ஜ்/6604039.ஸ்ரீம்ள், செப்டம்பர் 22, 2010).

விதர்பா விவசாயிகள் தற்கொலைகளை குடும்பப் பிரச்சனை என்று சொல்லி மறைக்கப் பார்த்தது போல் திருப்பூரில் நடந்து கொண்டிருக்கிற தற்கொலைகளுக்கு, குடும்ப, கலாச்சார பிரச்சனைகள் காரணம் என்று சொல்லி முதன்மையான பிரச்சனையை மூடி மறைக்கப் பார்க்கிறார்கள்.

திருப்பூர் இடம்பெயர்ந்த தொழிலாளர்களால் இயங்குகிறது. இங்குள்ள 6,200 ஆயத்த ஆடை நிறுவனங்களில் வேலை செய்யும் 4 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களில் 80% பேர் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள். தமிழ்நாட்டின் வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி, பீகார், அசாம் போன்ற மாநிலங்களில் இருந்தும் தொழிலாளர்கள் வருகிறார்கள்.

திருப்பூர் சென்றால் பிழைத்துக் கொள்ளலாம் என்று நம்பி வந்தவர்களால் இப்போது பிழைத்திருக்க முடியவில்லை. கோவையை விடவும் கூடுதலான வீட்டு வாடகை, விலைவாசியும் வந்த நாளில் இருந்து மாறாத சம்பளமும் முரண்பட்டு மோதிக்கொள்வதில் கடன் வாங்கி, பின் வட்டி ஏறி, பின் தர முடியாமல் மரண தேவதையிடம் சரணடைந்து விடுகிறார்கள்.

தொழிலாளர் நலன்களில் தமிழக அரசாங்கம் எந்த சமரசத்தையும் ஏற்றுக் கொள்ளாது என்று சொன்ன தொழிலாளர் அமைச்சர் கடைசியாக நடந்த மாநில தொழிலாளர் ஆலோசனை வாரியத்தின் கூட்டத்தில் கூட தொழிற்சங்கங்கள் இந்தப் பிரச்சனைகளை எழுப்பவில்லை என்றார். ‘ஊருக்கு ஒருவர்தான் இருக்கிறீர்கள், உங்களை நடமாட முடியாமல் செய்துவிடுவோம்’ என்று கம்யூனிஸ்டுகளைப் பார்த்துச் சொல்லும் அளவு தமது கட்சியின் வலுவான வலைப்பின்னல் மேல் நம்பிக்கை கொண்டுள்ள தொழிலாளர் அமைச்சர், தொழிலாளர் பிரச்சனைகளை மட்டும் தொழிற்சங்கங்கள் சொல்ல வேண்டும் என்று ஏன் காத்திருக்க வேண்டும்? திருப்பூரின் உள்ள கழகக் கண்மணிகள், கழக வலைப்பின்னல் தொழிலாளர் பிரச்சனைகளை அமைச்சருக்கு தெரிவிக்கவில்லையா?

இது ஒரு பக்கம் இருக்கட்டும். திருப்பூரில் உள்ள திருமாங்கல்யத் திட்ட பெண் தொழிலாளர்கள் பயிற்சியாளர்கள் என்ற பெயரால் கடுமையாக சுரண்டப்படுகிறார்கள் என்றும் அவர்கள் பிரச்சனைகளை கட்டுக்குள் கொண்டு வர பயிற்சிக் காலத்தை நிர்ணயித்து, பயிற்சியாளர் எண்ணிக்கையை, விகிதத்தை நிர்ணயித்து, நேரடி உற்பத்தியில் அவர்கள் ஈடுபடுத்தப்படுவதை தடுத்து, அவர்கள் நலன்களை பாதுகாக்கத்தான் தொழிலாளர் திருத்த மசோதா 42 கொண்டு வந்ததாகவும் அமைச்சர் சொல்கிறார்.

மசோதா கொண்டு வரப்பட்டதும் 14.05.2008 அன்று அது தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதும் உண்மைதான். ஆனால் இரண்டாண்டுகளுக்கு மேலாகியும் ஏன் அது உயிர் பெறாமல் குடியரசு தலைவர் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது? தமிழ்நாடு முழுவதும் உள்ள பயிற்சியாளர்களின் பிரச்சனையாயிற்றே. ஏன் முதலமைச்சர் குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதம் கூட எழுதவில்லை? முதலாளிகள் முட்டுக்கட்டை போடுகிறார்கள். கழகம் கட்டுப்படுகிறது.

திருமாங்கல்யத் திட்டமும் கேம்ப் கூலி முறையும் 21ம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தையும் 19ஆம் நூற்றாண்டு வேலை நிலைமைகளையும் இணைத்து, தொழிலாளர்களை அதில் கைதிகளாக்கி வைத்திருக்கின்றன. அந்த சிறைக் கூடங்களில் இருந்து சுவரேறி குதித்து தப்பித்துச் சென்று பெற்றோர்களிடம் சேர்ந்த பெண் தொழிலாளர்களை தமிழகம் கண்டது.

கோவையில் பிரிக்கால் தொழிலாளர்கள் பயிற்சியாளர் நிலைமைகளில் மாற்றம் கோரி நடத்திய இயக்கத்தினூடே, கோவையில் உள்ள திருமாங்கல்யத் திட்ட தொழிலாளர்களை, கேம்ப் கூலி தொழிலாளர்களை சந்திக்க முடியுமா என்று ஆலைகள் இருந்த பகுதிகளில் வீதிவீதியாக தேடினார்கள்.

‘அதோ, அதுதான் அவர்கள் தங்கியிருக்கும் இடம்’ என்று பகுதியில் உள்ள சிலர் காட்டிய ஒரு கட்டிடத்திற்கு சிறைச்சாலையில் இருப்பதுபோல் உயரமான சுற்றுச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. ‘அவர்களை பார்க்க முடியாது. மாதத்தில் ஒரு நாள் சந்தைக்கு வருவார்கள். அப்போது வேண்டுமானால் பார்க்கலாம். அப்போதும் அவர்களுடன் பேச முடியாது. அவர்களுடன் நிறுவனத்தை சேர்ந்த மேற்பார்வையாளர் யாராவது வருவார்கள்’ என்றார்கள்.

அந்த ஒரு வார கால இயக்கத்தில் பிரிக்கால் தொழிலாளர்களால் திருமாங்கல்யத் திட்ட, கேம்ப் கூலி தொழிலாளர்கள் ஒருவரைக் கூட சந்திக்க முடியவில்லை.

இவ்வளவு கடுமையான கண்காணிப்பிற்கு ஆளாக அவர்கள் என்ன குற்றம் செய்தார்கள்? 12 மணி நேரம் முதல் 14 மணி நேரம் வரை ஓயாமல் உழைத்து மூலதனத்தை பெருக்குவது தவிர அவர்கள் செய்த குற்றம்தான் என்ன?

திருமாங்கல்யத் திட்ட, கேம்ப் கூலி முறைகளில் இல்லாதவர்கள்தான் கிட்டத்தட்ட இப்போது நடக்கிற தற்கொலை பட்டியலில் வருகிறார்கள். இந்த கொத்தடிமை முறைகளில் இருப்பவர்களுக்கு என்ன நடக்கிறது? பிரச்சனை வெளியே வருகிறதா? உள்ளேயே புதைக்கப்படுகிறதா? மாண்புமிகு அமைச்சர் தா.மோ.அன்பரசன் அவர்களின் வலைப்பின்னலிடம் பதில் இருக்குமா?

அவர்கள் சொல்லட்டும். சொல்லாமல் இருக்கட்டும். திருப்பூர் தற்கொலைகள் தொழிலாளர் படும் துன்பங்களின் சொல்ல முடியாமல் தவிக்கும் பிரச்சனைகளின் வெளிப்பாடுகளே. சங்கம் நுழைய முடியாது, சட்டம் அமலாகாது, சலுகைகள் கிடையாது, சம்பளம் ஏறாது, கவுரவம் கிடைக்காது, வாழ்க்கை மாறாது என்றாகிவிட்ட பிறகு, தங்கள் பிரச்சனைகளை வெளி உலகுக்குச் சொல்ல திருப்பூர் தொழிலாளர்கள் இந்த தீவிரமான வழியை கையாளத் துவங்கியிருக்கிறார்கள்.

ஏப்ரல் 29, 2010 அன்று, வாணியம்பாடியில், ஒரு தோல்பொருள் ஆலையில் விஷக்கழிவை சுத்தம் செய்துகொண்டிருந்த தொழிலாளர்கள் இரண்டு பேர் விஷவாயு தாக்கி மூச்சுவிடப் போராடுகிறார்கள். பார்த்துக் கொண்டிருந்த இன்னும் 3 தொழிலாளர்கள் தங்கள் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்தும் அவர்களைக் காப்பாற்ற குழிக்குள் இறங்குகிறார்கள். செய்வோம், அல்லது செத்து மடிவோம் என்று முடிவெடுக்கிறார்கள். திருப்பூர் தொழிலாளர்கள் செத்துக் கொண்டிருக்கிறார்கள். அந்த வர்க்கச் சகோதரர்களை பாதுகாக்க வேண்டிய கடமை தமிழக தொழிலாளர் வர்க்க இயக்கத்திற்கு காத்திருக்கிறது.

Search