COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Monday, November 8, 2010

ஆணாதிக்கக் கருத்துக்களைப் பரப்பும் உச்சநீதிமன்ற தீர்ப்பு

உச்சநீதிமன்றத்தில், சில தினங்கள் முன்னால், நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜø மற்றும் தாகீர் முன்பு, மத்திய அரசின் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் இந்திரா ஜெய்சிங் குமுறினார். 26.10.2006 முதல் அமலுக்கு வந்த குடும்ப வன்முறைச் சட்டத்தை வடிவமைப்பதில் பெரும் பங்காற்றியவர் இந்திரா ஜெய்சிங். தாம் ஒரு ஜீவனாம்ச வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி நீதிபதி மார்க்கண்டேய கட்ஜø இந்திரா ஜெய்சிங்கிடம் கருத்து கேட்டார்.


நீதிபதிகள் விக்கிபீடியா, கூகுள் ஆகியவற்றுள் நுழைந்து ஒரு வழக்கில் தீர்ப்பளித்தனர். உயர்நீதிமன்ற நீதிபதிகள் நம்பிக்கைகள் அடிப்படையில் தீர்ப்பு தரும்போது, உலகமயக் காலங்களில், உச்சநீதிமன்ற நீதிபதிகள், விக்கிபீடியாவையும் கூகுளையும் கூப்பிட்டுக் கொள்கிறார்கள்.

பச்சையம்மாள் என்ற பெண்ணுக்கு வேலுசாமி என்பவர் மாதம் ரூ.500 ஜீவனாம்சம் தரவேண்டும் என்ற கோவை நீதிமன்றத் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. வேலுசாமி உச்சநீதிமன்றம் சென்றார். நீதிபதிகள் தமது தீர்ப்பின் பாரா 33ல் பின்வருமாறு எழுதினார்:

‘எங்கள் கருத்துப்படி, திருமண இயல்பில் உள்ள ஓர் உறவும், பொதுச் சட்ட திருமணம் போன்றதே. முறைப்படி திருமணம் செய்து கொள்ளாவிட்டாலும், பொதுச்சட்ட திருமணத்திற்கும் பின்வருவன தேவை:

அ) அந்த இருவரும் தம்மை சமூகத்தின் பார்வையில் தம்பதிகளாகக் காட்டி இருக்க வேண்டும்.

ஆ) அவர்கள் திருமணத்திற்குத் தகுதியான வயது வந்தவர்களாக இருக்க வேண்டும்.

இ) திருமணம் ஆகாவிட்டாலும், மற்றபடி திருமண உறவில் நுழையத் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

ஈ) அவர்கள் சுயவிருப்பத்தில் உறவு கொண்டு இருக்க வேண்டும். ஒரு கணிசமான காலத்திற்கு தம்பதியினராய் சமூகத்தின் கவனத்திற்குத் தம்மை வெளிப்படுத்தி இருக்க வேண்டும்.

(காண்க: பொதுச் சட்டத் திருமணம் பற்றி விக்கிபீடியா, கூகுள்)

எமது கருத்தில் 2005 சட்டப்படியான திருமணத்தின் இயல்பு கொண்ட ஓர் உறவு என்பது மேலே சொன்ன தேவைகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேற்படி சட்டத்தின் பிரிவு 2(எஸ்) படி, ஓரே வீட்டில் பங்கு கொண்டு வாழ்ந்திருக்க வேண்டும்.’

நாடாளுமன்றம் சேர்ந்து வாழும் உறவு என்று சொல்லாமல், திருமணத்தை ஒத்த உறவு என்று சொல்லி உள்ளதால், சேர்ந்து வாழும் உறவில் உள்ள பல பெண்களை எங்கள் கருத்து பயன் பெறுவதில் இருந்து விலக்கத்தான் செய்யும் என்று குறிப்பிட்டார்கள்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் அல்லவா? அதனால் மேலே சொன்னதையும் தாண்டிச் சென்று எழுதினார்கள்.

‘வார விடுமுறைகளில் சேர்ந்திருப்பதோ, ஓரிரவு உறவுகளோ, குடும்ப உறவுகளாகாது.’

‘ஒரு மனிதனுக்கு ஒரு வைப்பு இருந்தால் அந்த வைப்பை அவன் பணம் தந்து பராமரித்தால், அவன் பாலியல் தேவைக்கு மற்றும் அல்லது ஒரு வேலையாளாக அந்த வைப்பை உபயோகித்தால் அந்த உறவு எம் கருத்துப்படி, திருமணத்தை ஒத்த உறவல்ல.’

குதிரை குப்புறத் தள்ளியது. குழியும் பறித்தது.

‘வைப்பு’, ‘ஓரிரவு உறவு’ இவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் பயன்படுத்தும் மொழி. ஒரு நீதிபதி ஆறுதலாக, வைப்பாட்டி என்று சொன்னால் பரவாயில்லையா என வேறு கேட்கிறார். இந்திரா ஜெய்சிங் தீர்ப்பின் மொழியை மட்டும் அல்லாமல் தீர்ப்பு முடிவின் அடிப்படையையும் (ரேஷியோ) சரியாகவே கேள்விக்குள்ளாக்குகிறார். 21ஆம் நூற்றாண்டில் ஒரு பெண்ணை வைப்பு என எப்படி அழைக்கலாம்? இந்த அமர்வம் முன்பு நான் இனி வரமாட்டேன். உச்சநீதிமன்றத் தீர்ப்பு காலக் கடிகாரத்தைப் பின்னோக்கிச் சுழற்றுகிறது. இந்திரா ஜெய்சிங்கின் சீற்றம் நியாயமானது. பத்மாபட் என்ற வழக்கறிஞர் சொல்கிறார். ‘வைப்பு போன்ற வார்த்தைகள் ஒரு பாலுக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. அவற்றைப் பயன்படுத்தக் கூடாது. காகிதத்தில், நம்மிடம் முற்போக்கு சட்டங்கள் உள்ளன. ஆனால் யதார்த்த நடைமுறையில் எல்லாமே வேறுதான். ஏட்டில் உள்ளபடி நடக்கத் தயாரில்லை. அந்தப் பொருளில் நாம் பழைய கற்காலங்களில்தான் வாழ்கிறோம்.’

குடும்ப வன்முறைச் சட்டம் - நோக்கம் என்ன ஆனது?

21ஆம் நூற்றாண்டு, பெண்கள் அதிகாரம் பெறுதல் என்ற தம்பட்டங்களை அடித்துக் கொண்டு, அய்முகூ அரசு குடும்ப வன்முறைச் சட்டம் கொண்டு வந்தது. திருமணம் செய்து கொள்ளாமலே பெண்களோடு சேர்ந்து வாழ்கிற ஆண்களின் வன்முறையையும் சட்டம் கட்டுப்படுத்தும் என்று சொல்லப்பட்டது. திருமணம் போன்றதொரு உறவு பற்றிய உறவு பற்றிப் பேசிய சட்டம், விக்கிபீடியா, கூகுள் விளக்கங்களைக் காணவில்லை. அப்படி எந்த விதிவிலக்குகளையும் சேர்க்கவில்லை. கூகுளும் விக்கிபீடியாவும், இந்திய நாடாளுமன்றத்தை இந்திய உச்சநீதிமன்றத்தை வழிநடத்துமா? சட்டப்படியான திருமணமா இல்லை என்றெல்லாம் பார்த்து, ஆணோடு பெண் சேர்ந்து வாழ இந்தியாவில் வாய்ப்பு உண்டா? தெரிவு செய்து உறவு கொள்ளும் சுதந்திரம் பெண்களுக்கு உண்டா? பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிவாரணம் என்ற கண்ணோட்டம் காணாமல் போய், புனிதமான குடும்ப உறவுக்குக் களங்கமா என்ற கேள்வியே மேலேழுந்துள்ளது.

கீறிப்பார் - ஆணாதிக்கம் தெரியும்

தோழர் லெனின் கம்யூனிஸ்ட்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்:

‘ஒரு கம்யூனிஸ்டைக் (ஆணை) கீறிப் பாருங்கள். நீங்கள் ஓர் அற்பவாதியைக் காணலாம். கூருணர்வுக்குரிய இடத்தைச் கீறிப்பார்த்தால், பெண்கள் பற்றிய அவர்கள் மனோபாவத்தை அறிந்து கொள்ளலாம்’. சமூகத்தின் முன்னணி வர்க்கம் பாட்டாளி வர்க்கம். அந்தப் பாட்டாளி வர்க்கத்தின் முன்னணிப் படை கம்யூனிஸ்ட் கட்சி. கம்யூனிஸ்ட் கட்சி தோழர்களே, ஆணாதிக்க ஆபத்துக்குப் பலியாகிறார்கள். நம் உச்சநீதிமன்ற நீதிபதிகள் எம்மாத்திரம்? ஆனால் சகிக்க முடியாத அளவுக்கு ஊருக்கு உபதேசம் செய்பவர்கள், எவ்வளவு பழமைக் குப்பைகளைச் சுமக்கிறார்கள்?

‘பெண் ஏன் அடிமையானாள்?’ என்ற பிரசுரத்தின் 10ஆவது அத்தியாத்திற்கு பெரியார், ‘பெண் விடுதலைக்கு ஆண்மை அழிய வேண்டும்’ எனத் தலைப்பிட்டு எழுதுகிறார். ‘ஆண்மை எனும் பதமே (சொல்லே) பெண்களை இழிவுபடுத்தும் வகையில் உலக வழக்கில் உபயோகப்படுத்தப்பட்டு வருகிறது என்பதைப் பெண்கள் மறந்து விடக்கூடாது. அந்த ஆண்மை உலகில் உள்ள வரையிலும் பெண்களுக்கு மதிப்பு இல்லை என்பதைப் பெணகள் ஞாபகத்தில் கொள்ள வேண்டும். உலகத்தில் ஆண்மை நீடிக்கும் வரையில் பெண்கள் அடிமையும் வளர்ந்தே வரும். பெண்களால் ஆண்மை என்ற தத்துவம் அழிக்கப்பட்டால் ஒழிய, பெண்களுக்கு விடுதலை இல்லை என்பது உறுதி.’ (கழங்களுக்கும் பெரியாருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது, இருக்க முடியாது என்பதற்கு இந்த ஒரு மேற்கோளே சான்று கூறும்)

பெரியாரின் அறச் சீற்றம் தாண்டி

மார்க்சீயப் பேராசான் எங்கல்ஸ், குடும்பம், தனிச்சொத்து, அரசு ஆகியவற்றின் தோற்றம் நூலில், ஒருதார மணக் குடும்பம் பிறந்து வளர்ந்த கதையை விளக்குகிறார். ‘ஒற்றைத் தனி நபர், அதுவும் ஓர் ஆண் கைகளில் கணிசமான செல்வம் குவிந்ததிலிருந்து, வேறு யாருக்கும் இல்லாமல் அந்த ஆணின் குழந்தைகளுக்கு அந்தச் செல்வத்தை விட்டுச் செல்லும் தேûயிலிருந்து ஒரு தார மணமுறை தோன்றியது.’

புராதன பொது உடைமை போய், தனிச் சொத்து பிறந்தவுடன், புனிதமான ஒரு தார மணக் குடும்பமும், அரசும் பிறந்தன.

புனிதத் குடும்பத்தின் புனித ஒரு தார மணமுறையின் எதிர்காலம்

எங்கல்ஸ் சொல்வதையே பார்ப்போம்.

‘ஆனால் உற்பத்தி சக்திகள் என்ற நிலையான, சுவீகரித்துவிடக் கூடிய செல்வத்தின் பெரும்பகுதியை சமூக சொத்தாக மாற்றுவதன் மூலம், விட்டுச்செல்வது, சுவீகரிப்பது ஆகியவை பற்றிய கலக்கங்களை எதிர்வருகிற சமூகப்புரட்சி குறைந்தபட்சமானதாக்கிவிடும்; உற்பத்தி சக்தியை சமூக சொத்தாக மாற்றும்போது, அதனுடன் கூடவே கூலியுழைப்பு, பாட்டாளி வர்க்கம், அவற்றுடன், ஒரு நிச்சயமான எண்ணிக்கையிலான பெண்களுக்கு பணத்துக்காக சரணடைய வேண்டியிருக்கிற தேவையும் மறைந்து போகும். பாலியல் தொழில் மறைந்து போகும்; ஒருதார மணமுறை வீழ்ந்துவிடுவதற்கு பதிலாக, இறுதியில் - ஆண்களுக்கும் கூட - ஒரு யதார்த்தமாகிவிடும்... ஒற்றை குடும்பம் சமூகத்தின் பொருளாதார அலகாக இனியும் தொடராது. தனிப்பட்ட வீட்டு பராமரிப்பு ஒரு சமூக தொழிலாக மாறிவிடும். குழந்தை பராமரிப்பும் கல்வியும் பொது விவகாரம் ஆகி விடுகின்றன. எல்லா குழந்தைகளையும் - அவர்கள் மண உறவில் பிறந்தவர்களானாலும் சரி, மண உறவுக்கு வெளியே பிறந்தவர்களானாலும் சரி, சமூகம் சமமாக கவனித்துக் கொள்கிறது. எனவே, ‘விளைவுகள்’ பற்றிய கவலை - இதுவே பெண் தான் காதலிக்கிற ஒருவனுக்கு தன்னை சுதந்திரமாகக் கொடுப்பதை தடுக்கிற தார்மீக பொருளாதாரரீதியான மிகவும் முக்கியமான சமூகக் காரணியாகும் - இது மறைந்துவிடும்.’

இந்த பாதகமான அம்சங்கள் போக்கப்பட்டுவிடும். நல்லது. ‘ஆனால் என்ன சேர்க்கப்படும்? ஒரு புதிய தலைமுறை வளர்ச்சியடைந்த பிறகு அது முடிவு கட்டப்படும். அந்தத் தலைமுறையைச் சேர்ந்த ஆண்களுக்கு பணத்தைக் கொண்டு அல்லது சமூகரீதியான இதர அதிகார சாதனங்களைக் கொண்டு ஒரு பெண்ணை இணங்கச் செய்யும்படி தம் வாழ்க்கையில் என்னென்றைக்குமே நேராது; பெண்கள் உண்மை காதலுக்காக மட்டுமின்றி வேறெந்த நோக்கத்துக்காகவும் எந்த ஆணுக்கும் என்றைக்குமே இணங்க மாட்டார்கள். அல்லது பொருளாதார விளைவுகளைப் பற்றி அஞ்சி தம்முடைய காதலனுக்கு தம்மை கொடுப்பதற்கு தயங்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்படாது. அப்படிப்பட்ட மக்கள் தோன்றியவுடனேயே அவர்கள் என்ன செய்ய வேண்டும் என்று இன்று நாம் நினைக்கிறோமோ அதை சிறிதும் பொருட்படுத்த மாட்டார்கள். அவர்கள் ஒவ்வொரு நபருடைய நடைமுறையை ஒட்டி தமது சொந்த நடைமுறையையும் அதற்குப் பொருத்தமான தமது சொந்த பொதுக் கருத்தையும் நிலை நாட்டுவார்கள். விசயம் அத்துடன் முடிந்துவிடும்.’

விபச்சாரி, விதவை, வைப்பு, வைப்பாட்டி, கற்பு என தம் செம்மொழி, ஒரு பாலுக்கு மறு பால் சொல் இல்லாமல் இருக்கிறது. இது ஏதோ யதேச்சையாய் நேர்ந்ததல்ல. பேயரசு செய்தால் பிணம் தின்னும் சாத்திரங்கள். தனிச் சொத்தும் ஆணாதிக்கமும் பிரிக்க முடியாதவை. இருபாலரும் இணைந்து இரட்டை நுகத்தடியை உடைக்க வேண்டியதை நோக்கி, கனம் கோர்ட்டார் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றனர்.

Search