கருணாநிதி 2011 சட்டமன்ற தேர்தல்களுக்கு தயாராகிறார் என்றால், சோனியா காந்தி 2014 நாடாளுமன்ற தேர்தல்களுக்கு தயாராகிறார். அவர் தலைமையிலான தேசிய ஆலோசனைக் குழு உணவுப் பாதுகாப்பு பற்றி தந்துள்ள முன்வைப்புக்களின் பின் இருக்கும் செய்தி இதுதான்.
தேசிய உணவுப் பாதுகாப்பு சட்டம் பற்றி விவாதித்த மத்திய அமைச்சர்கள் குழு, வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு பொது விநியோகத்தில் தரப்படும் உணவு தானியத்தின் அளவு 25 கிலோவுக்கு மிகக் கூடாது என்றும், வறுமைக் கோடு உச்சவரம்பு திட்டக் கமிஷன் சொல்லும் உச்சவரம்பாகவே, அதாவது, கிராமப்புறங்களில் ரூ.368 மாத வருவாய், நகர்ப்புறங்களில் ரூ.560 மாத வருவாய் என்றுதான் இருக்க வேண்டும் என்றும் நிபந்தனைகள் போட்டுள்ளது.
இந்த நிபந்தனைகளுக்கு அப்பால் அறிவிக்கப்பட்டுள்ள தேசிய ஆலோசனைக் குழுவின் முன்வைப்புக்கள், கேட்க மக்கள் ஆதரவு முன்வைப்புக்கள் போல் இருக்கின்றன என்றும் உண்மையில் அவை இருக்கும் நிலைமைகளில் கொஞ்சமும் மாற்றம் கொண்டு வர முடியாதவை என்றும் குழுவின் உறுப்பினரான ஜீன் ட்ரீஸ் சொல்கிறார்.
பொதுவிநியோக திட்டத்தில் இப்போது 18 கோடி பேர் மட்டுமே மான்ய விலையில் உணவு தானியங்கள் பெறுகின்றனர். மொத்த அரசாங்க செலவினங்களில் 5% மட்டுமே இதற்காக செலவிடப்படுகிறது.
தேசிய ஆலோசனைக் குழுவின் முன்வைப்புக்கள்படி மக்கள் தொகையில் 75% பேருக்கு உணவுப் பாதுகாப்பு தரப்படும். 90% கிராமப்புற மக்களும் 50% நகர்ப்புற மக்களும் இந்தத் திட்டத்தின் கீழ் வருவார்கள். ஒரு வழியாக அரசாங்கம் 80 கோடி இந்தியர்கள் பசித்திருக்கிறார்கள் என்று ஒப்புக்கொண்டுள்ளது.
ஆனால், இவர்களை இரண்டு பிரிவுகளாக பிரிக்கிறது. ஒரு பிரிவு முன்னுரிமை பிரிவு. இதில் 46% கிராமப்புற குடும்பங்களும் 28% நகர்ப்புற குடும்பங்களும் அடங்கும். 5 பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு 7 கிலோ என்ற கணக்கில், இவர்கள் மாதமொன்றில் 35 கிலோ உணவு தானியங்கள் பெறுவார்கள். அரிசி கிலோ ரூ.3 விலையிலும், கோதுமை கிலோ ரூ.2 விலையிலும் பிற தானியங்கள் கிலோ ரூ.1 விலையிலும் தரப்படும்.
இன்னொரு பிரிவு பொது பிரிவு. இதில் 44% கிராமப்புற குடும்பங்களும் 22% நகர்ப்புற குடும்பங்களும் அடங்கும். 5 பேர் கொண்ட குடும்பத்தில் ஒருவருக்கு 4 கிலோ என்ற கணக்கில், இந்த பிரிவுக்கு அரசு கொள்முதல் செய்யும் விலையில் பாதி விலைக்கு மாதமொன்றில் 20 கிலோ உணவு தானியங்கள் வழங்கப்படும். தற்போதைய நிலவரப்படி இது ரூ.5.50 அல்லது ரூ.6.
வறுமைக் கோட்டை அழித்து விட்டார்கள்!.
2014க்குள், அதாவது, அடுத்த நாடாளுமன்ற தேர்தல்களுக்குள் இவர்கள் அனைவரும் பாதுகாப்பு கொண்டு வரப்பட வேண்டும் என்று முன்வைப்புக்கள் சொல்கின்றன. மட்டுமின்றி 2017 வரை இந்த மான்யங்களில் எந்த மாற்றமும் இருக்கக் கூடாது என்றும் தேசிய ஆலோசனைக் குழு சொல்கிறது.
இந்த அறிவிப்புகள் முதல் கட்டத்தில் மிகவும் பின்தங்கிய 150 மாவட்டங்களில் அமலாகும்.
யார் இந்த 75% மக்கள், இவர்களில் முன்னுரிமை பிரிவு எது, பொதுப்பிரிவு எது என்பதை இந்திய அரசாங்கம் முடிவு செய்ய வேண்டும். இதுதான் இப்போது மிகப் பெரிய கேள்வி.
ஜீன் ட்ரீஸ் சொல்வதுபடி தேசிய ஆலோசனை குழு அறிவித்துள்ள முன்வைப்புக்கள் இப்போதுள்ள நிலைமைகளை தொடரச் செய்யும்; எந்த மாற்றமும் ஏற்படுத்தாது; உணவுப் பாதுகாப்பின் முக்கியமான கூறுகளை இந்த முன்வைப்புக்கள் கணக்கில் கொள்ள தவறிவிட்டன; பொது விநியோகம் பற்றிய வரையறைகள் வறுமைக் கோட்டுக்குக் கீழ், மேல் உள்ளவர்கள் என்ற செயற்கையான பிரிவினைகளை நீக்கவில்லை. பொதுவிநியோகம் மூலம் அல்லாமல் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யக்கூடிய முதியோர் ஓய்வூதியம், குழந்தைகள் நலத் திட்டங்கள் ஆகியவற்றில் இருந்த பாதுகாப்புக்கள் இறுதி முன்வைப்புக்களில் கைவிடப்பட்டுவிட்டன.
கிட்டங்கிகளில் உணவு தானியங்கள் அழுகிப் போகின்றன. பசித்த மக்கள் வற்றிய வயிற்றுடன் வாடிக் கிடக்கிறார்கள். அழுகிப் போனால் போகட்டும், பசித்தவர்களுக்கு தரமுடியாது என்று பிரதமரும் உணவு அமைச்சரும் சொன்னதால் ஏற்பட்ட தோற்ற இழப்பை ஈடு செய்ய தியாகத் திருவுரு சோனியா காந்தி உணவுப் பாதுகாப்புச் சட்டம் ஏற்பாடு செய்கிறார்.
இந்திய கிராமப்புறங்களில் வறுமைக்கோட்டுக்குக் கீழ் இருப்பவர்கள் 28% என்று திட்ட கமிஷனும், 50% என்று சக்சேனா கமிட்டியும், 42% என்று டெண்டுல்கர் கமிட்டியும், 80% என்று அமைப்புசாரா துறை தேசிய ஆணையமும் சொல்கின்றன. நான்கையும் விட்டுவிட்டு புதுக் கணக்கு ஒன்று எடுக்க வேண்டும் என்று சோனியா சொல்கிறார்.
வறுமைக் கோட்டை நிர்ணயிக்கும் நிபந்தனைகள் என்ன, எது வறுமைக் கோடு, அதன் மேலும் கீழும் இருப்பவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில் இன்னும் முடிவுக்கு வராத அய்முகூ அரசு இனி முன்னுரிமை பிரிவு எது, பொதுப்பிரிவு எது, இவர்களை பிரிக்கும் கோடு எது என்று தீர்மானிக்க வேண்டும்.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற வாய்வீச்சின் அருகில் கூட செல்ல அய்முகூ அரசு தயாராக இல்லை என்பதை இந்த ஆலோசனைகள் உறுதி செய்கின்றன. இப்போதும் அனைவரையும் உள்ளடக்கிய பொது விநியோகம் பற்றி பேச மறுக்கின்றன.
மத்திய உணவு அமைச்சர் சரத் பவார், தேசிய ஆலோசனை குழுவின் பரிந்துரைகளை செய்தித்தாள்களில்தான் படித்தாராம். இந்தப் பரிந்துரைகள்படி இருப்பு, வெளிச்சந்தை, பிற நல்வாழ்வு திட்டங்கள் எல்லாம் போக, முன்னுரிமை பிரிவில் உள்ள 9.70 கோடி குடும்பங்களுக்கும், பொதுப் பிரிவில் 8.90 கோடி குடும்பங்களுக்கும் 6 கோடியே 21 லட்சம் டன் உணவு தானியங்கள் தேவைப்படும் என்றும், இந்த ஆண்டு 5.74 கோடி டன்தான் கொள்முதல் செய்யப்பட்டது என்றும், இதில் 4.38 கோடி டன் பொது விநியோகத் திட்டத்திற்கே போய் விடுகிறது என்றும் புலம்புகிறார்.
இந்தப் புலம்பல் பின் அவருக்கு இருக்கும் அக்கறை உணவு தானிய ஏற்றுமதி பற்றியது என்பது அவர் அடுத்து சொன்னதில் தெரிய வருகிறது. நேரு ஆட்சியில் இருந்தபோது, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில், உணவு தானியங்களை தேசியமயமாக்குவது என்று ஒரு முடிவு எடுக்கப்பட்டது என்றும் 10 நாட்களில் அந்த முடிவு கைவிடப்பட்டது என்றும் சொல்கிறார். இப்போது கோதுமை, அரிசி, சர்க்கரை எல்லாம் போதுமான அளவு இருப்பதாகவும், அடுத்த கொள்முதலும் சிறப்பாகவே அமையும் என்றும், இவற்றை ஏற்றுமதி செய்ய வழிவிடும் வகையில் அரசு எந்த முடிவையும் கிடப்பில் போடும் என்றும் துணிச்சலாக சொல்கிறார். அழுகிப்போகும் தானியங்களை பசித்தவர்களுக்கு கொடுங்கள் என்று உச்சநீதிமன்றம் சொன்னபோது, அது முடியாது என்று மறுத்தவர் இப்போது, சொந்த நாட்டு மக்கள் பட்டினியில் செத்தாலும் ஏற்றுமதி வருவாய் முக்கியம் என்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக, நாற்றம் அடிக்கும் அரிசி, புழுத்துப்போன கோதுமை, எடை குறைந்த மண்ணெண்ணெய், கலப்படம் செய்யப்பட்ட சர்க்கரை, எண்ணெய், பருப்பு, வேறு வழியில்லை என்று அவற்றையும் வாங்கி உண்ணும் மக்கள், ஊழல், பதுக்கல், கடத்தல், கள்ளச்சந்தை என்று இருக்கும் தமிழக பொது விநியோகத் திட்டம்தான் முன்மாதிரி என்று சொல்லும் நிலை நாட்டில் உள்ளது. பித்தளையை ஈயத்துடன் ஒப்பிடுகிறார்கள்.
பித்தளையின் அழகைப் பற்றி தமிழக அரசு சில விவரங்கள் தருகிறது. 1997ல் லக்டாவாலா கமிட்டி பரிந்துரைகள்படி தமிழ்நாட்டில் மொத்த மக்கள் தொகையில் 35% பேர், 1991 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 48 லட்சத்து 62 ஆயிரம் குடும்பங்கள் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளன எனக் கணக்கிடப்பட்டது. அந்தக் கணக்கின் அடிப்படையில் தமிழகத்துக்கு வறுமைக் கோட்டுக்குக் கீழ், மேல் உள்ளவர்களுக்கு தானியங்கள் ஒதுக்கியது. ஆனால் தமிழ்நாடு அரசு வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளவர்களுக்கான ஒதுக்கீட்டை மட்டும் மத்திய அரசிடம் இருந்து பெற்றுக் கொள்கிறது.
மத்திய அரசிடம் வாங்கி, மாநில பொது விநியோகத்தில் விற்கும்போது, வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு அட்டைக்கும் மாதமொன்றில் ரூ.46.50 மானியமும், வறுமைக் கோட்டுக்குக் மேல் உள்ள ஒவ்வொரு அட்டைக்கும் மாதமொன்றில் ரூ.171.50 மானியமும் தரப்படுகிறது என்று தமிழக அரசு சொல்கிறது.
தமிழ்நாட்டில் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1.44 கோடி குடும்பங்கள் உள்ளன. ஆனால் 1.60 கோடி ரேசன் அட்டைகள் உள்ளன. கிட்டத்தட்ட 15 லட்சம் போலி அட்டைகள் எப்படி உலா வரும் என்று யாரையும் விட கருணாநிதிக்கு நன்றாகத் தெரியும்.
ஆனால் போலி அட்டை கணக்கையும், மான்யக் கணக்கையும் தொடர்புபடுத்துகிறது தமிழக அரசு. 10 லட்சம் போலி அட்டைகள் என்றால் கூட வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ள அட்டைகள் என்றால் ரூ.55.80 கோடியும், வறுமைக் கோட்டுக்குக் மேல் உள்ள அட்டைகள் என்றால் 205.80 கோடியும் அரசுக்கு நட்டம் ஏற்படுகிறதாம். ஒவ்வொரு மாதமும் இவ்வளவு பணம் தமிழ்நாட்டின் வறிய மக்கள் பைகளுக்கா போயிருக்கும்?
ஏன் மத்திய அரசு தரும் மொத்த ஒதுக்கீட்டையும் தமிழக அரசு பெற்றுக் கொள்ளக் கூடாது? வறுமைக் கோட்டுக்குக் கீழ் உள்ளோருக்கான விநியோகம் உறுதிப்படுத்தப்படவில்லை என்பதுதானே நிலைமை? அம்பத்தூரில் கல்யாணபுரத்தில் மாதம் 35 கிலோ அரிசி பெறும் 15 பேரை அடையாளம் கண்டு கொடுங்கள் என்று தோழர் மோகனிடம் அதிகாரிகள் கேட்கிறார்களே.
தமிழ்நாட்டில் இப்போது அனைவரையும் உள்ளடக்கிய பொதுவிநியோகம் இருந்தாலும், தமிழக அரசே சொல்வதுபோல் 10 லட்சம் போலி அட்டைகள் உலாவினாலும் உண்மையிலேயே வறுமைக் கோட்டுக் கீழ் இருப்பவரோ, மற்றவர்களோ ரேசன் அட்டை பெறுவது சாதாரண மனிதன் ஆற்றலுக்கு அப்பாற்பட்டதுதானே.
உணவுப்பாதுகாப்பு பற்றி உண்மையிலேயே அக்கறை காட்டும் அறிவாளிப் பிரிவினர் நாடு முழுதும் பொது விநியோக திட்டத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதால் தமிழ்நாட்டை முன்மாதிரி என்று சொல்லி விடுகிறார்கள். உண்மை நிலை தமிழக வறிய மக்களுக்கு தெரியும்.
மாதம் 20 கிலோ அரிசி எல்லா அட்டைகளுக்கும் கிடைத்து விடுகிறதா? 5 கிலோ அரிசி மட்டுமே பெற்றுக் கொண்டு திரும்பும் வறியவர்கள் இங்கு உண்டு.
உண்மையில் 35 கிலோ பெற வேண்டியவர்கள் கூட அதற்கான அட்டை தரப்படாமல் 20 கிலோ பெற வேண்டிய நிலைதான் தமிழகத்தில் உள்ளது. அனைவரையும் உள்ளடக்கியது என்பதற்கு அப்பால் சொல்லிக் கொள்ள இங்கு பெரிதாக ஏதும் இல்லை.
அனைவரையும் உள்ளடக்கிய பொது விநியோகம், அதில் பொது மக்கள் கண்காணிப்பு என்பதைத் தவிர வேறு மாற்று உணவுப் பாதுகாப்பில் இருக்க முடியாது. சோனியா காந்தி முன்வைத்துள்ள வகை பிரிப்பு உணவுப் பாதுகாப்பு வலைக்குள் மிகச்சிலரை உள்ளடக்கி மிகப்பலரை வெளியேற்றும். இப்போது குறைந்த விலையில் வாங்குபவர்களைக் கூட கூடுதல் விலை கொடுக்க வைக்கும்.
இங்கே இரண்டு தீர்ப்புக்களை, அவற்றில் இரண்டு அணுகுமுறைகளை கணக்கில் கொள்ள வேண்டியுள்ளது.
கருணாநிதி, ஜெயலலிதா, காங்கிரஸ், பாஜக அனைவருமே அயோத்யா தீர்ப்பைப் பாராட்டி, இசுலாமியர்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லி அறிவுறுத்துகின்றனர். சிலர் பெருந்தன்மையாக, உச்சநீதிமன்றம் போகலாம் என்கின்றனர். இவர்கள் யாருமே, ஒரு வித்தியாசமான உச்சநீதிமன்றத் தீர்ப்பை அமல்படுத்துமாறு, மத்திய அய்க்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்திடம் சொல்ல மறுக்கிறார்கள்.
‘கிட்டங்கிகளில் அரிசியையும் கோதுமையையும் எலிகள் தின்கின்றன. மழையில் நனைந்தும் புழுத்துப் போயும் வீணாகின்றன. பசித்திருப்பவர்களுக்கு இலவசமாகவோ, குறைந்த விலையிலோ தாருங்கள்.’ உச்சநீதிமன்றம்தான் சொன்னது. ஆலோசனை அல்ல, ஆணை என்று கூடச் கொஞ்சம் குரலை உயர்த்தியது.
கனவான் மன்மோகன், கொள்கை முடிவில் தலையிட வேண்டாம் என உச்சநீதிமன்றத்திற்கு, அதன் இடத்தைக் காட்டினார். விவசாயிகள் ஊக்கம் இழப்பார்கள் என மாய்மாலம் பேசி, உணவுப் பண்டங்களில் முன்பேர வர்த்தகத்தை, ஊக வணிகர்களை, விலை உயர்வை ஊக்குவிக்கிறார். எல்லா முக்கியக் கட்சிகளும், உச்சநீதிமன்ற ஆணையை ஏற்குமாறு மத்திய அரசாங்கத்திடம் சொல்லக் கூடாது என்பதில், கடமை கண்ணியம் கட்டுப்பாடு காக்கிறார்கள்.
ஜனநாயக விரோத தீர்ப்பை வரவேற்று ஏற்றுக்கொள்ளும் அதேநேரம், மக்கள் ஆதரவு தீர்ப்பை கடுமையாக எதிர்க்கிறார்கள் ஆட்சியாளர்கள். சோனியா காந்தியின் ஆலாசனைகளும் புகழாரங்கள் பெறுகின்றன. ஆனால் வறிய மக்கள், வேறு வழியில்லை, எதிர்த்து எழுவார்கள்.