கொண்டாட்டமாய் போராட்டம்! போராட்டமே கொண்டாட்டம்!!
தமிழக தொழிற்சங்க இயக்க வரலாற்றில், பிரிக்கால் தொழிலாளர் போராட்டம் ஒரு திருப்புமுனை. 2007ல் மார்ச் 3 அன்று துவங்கிய போராட்டம், 1315 பகல்களை, 1315 இரவுகளைத் தாண்டி, 10.10.2010 அன்று ஒரு திருவிழாவைக் கொண்டாடியது. அது ஒரு பேரதிசயம்தான். ஆனாலும் நிஜமானது. பிரிக்கால் தொழிலாளர்கள் ரத்தத்தால் சதையால் ஆன மனிதர்கள். அவர்களுக்கும் சுகதுக்கங்கள் உண்டு. வலிகள் உண்டு. ஆனால் அவற்றை எல்லாம் கடந்து வரலாறு படைக்கிறார்கள்.
பிரிக்கால் தொழிலாளர்கள் மீது வெள்ளை பயங்கரம் ஏவப்பட்டபோது, சில மய்ய தொழிற்சங்கங்கள், முதலாளிகள் பக்கத்தில் இருந்து பேட்டி கொடுத்தார்கள். இடதுசாரி சங்கங்களும் கூடத்தான்.
பிரிக்கால் தொழிற்சங்கங்களின், ஏஅய்சிசிடியுவின் போராட்டத்தை நாங்கள் ஆதரிக்கிறோம் என்று இன்று வரை இடதுசாரி மய்ய தொழிற்சங்கங்கள் வாய் திறந்ததில்லை. இப்போதும் அவர்கள் நிர்வாகத்துக்கு ஆதரவாகவே இருக்கின்றனர். நிர்வாகம் ஒருதலைபட்சமாகப் போட்ட 18(1) ஒப்பந்தத்தில் கப்சிப்பென கையெழுத்து போட்டுவிட்டனர்.
கோவையில் கோவிந்தசாமி பாணி இடதுசாரி சங்கங்களின் செயல்பாடு, கசப்பானதுதான். ஆனபோதும், பிரிக்கால் தொழிலாளர்கள்தான் 2008 பொது வேலைநிறுத்தத்துக்கு உயிர் கொடுத்தார்கள்.
2010ல் கோவையில் மற்ற மய்ய தொழிற்சங்கங்கள் செப்டம்பர் 7 வேலை நிறுத்ததுக்கு ஏஅய்சிசிடியுவை அணுகியாக வேண்டும் என்ற நிலையை பிரிக்கால் தொழிலாளர்களே உருவாக்கினார்கள். செப்டம்பர் 7அய் சிறக்கவும் சிவக்கவும் வைத்தார்கள்.
என்எல்சி, ஹ÷ண்டாய் நோக்கியா, ஃபாக்ஸ்கான் என எங்கே தொழிலாளி மீது தொழிற்சங்கம் மீது அடிவிழுந்தாலும், அது தம் மேல் விழுந்த அடி என பிரிக்கால் தொழிலாளர்கள் கருதுகிறார்கள். எந்த சங்கம், எந்தத் தலைவர் என சின்னத்தனமாய் யோசிக்க அவர்களால் இயலாது. முடியாது.
பிரிக்கால் தொழிலாளியின் மனஉறுதி, தியாகம், அர்ப்பணிப்பு, நீண்ட கால, தாக்குப்பிடிக்கும் தன்மை, வெற்றியை நோக்கிய வைராக்கியம், தொடர் நடவடிக்கைகள் ஆகியவற்றால், தமிழகமெங்கும் உள்ள தொழிலாளர்கள், கட்சி, சங்கத் தலைமைகள் தாண்டி பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் மீது பற்றும் நேசமும் கொண்டுள்ளனர்.
பிரிக்கால் அகில இந்திய கவனத்தைப் பெற்றதும், வால்ஸ்ட்ரீட் ஜர்னலின் செய்தியானதும், ஏதோ ஒரு துரதிர்ஷ்டவசமான மரணத்தால் மட்டுமல்ல. உலகமயத்தை, முதலாளித்துவ தாக்குதல்களை திறம்பட எதிர்கொள்ள முடியும், பதிலடி தர முடியும், தொழிலாளர் வர்க்க பலத்துடன் எல்லா மன்றங்களிலும் நுழைந்து நியாயம் கேட்க முடியும் என நிரூபித்துள்ளதால்தான், பிரிக்கால் தொழிலாளர் போராட்டம், பிரிக்க முடியாத பெயராய் தொழிலாளர் இயக்கத்தில் மாறியுள்ளது.
அவர்கள் மாறுகிறார்கள்; மாற்றுகிறார்கள். பயிற்சியாளர்கள், நிரந்தரமற்ற தொழிலாளர் நலன் காக்க ஏஅய்சிசிடியு நடத்திய இயக்கத்தில் முன்னணிப் பங்காற்றினார்கள். தமிழக அரசு 14.05.2008 அன்று சட்டமன்றத்தில், திருமாங்கல்யத் திட்ட கொத்தடிமை முறையின் ஆபத்தையும், அது ஜவுளியில் இருந்து தொழிலாளர் விரோத நடவடிக்கைகளாக மற்ற தொழில்களுக்கும் பரவுவதை ஒப்புக்கொண்டு, நிலைமைகளை மாற்ற எல்.எ. பில் 47/2008 என்ற திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற நேர்ந்தது.
தொழிற்சங்க அங்கீகார சட்டம் வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஏஅய்சிசிடியு 1 லட்சம் கையெழுத்துக்கள் திரட்டிய போது, பிரிக்கால் தொழிலாளர்கள் ஒரே நாளில் கோவை மாநகரில் 65,000 கையெழுத்துக்கள் பெற்றார்கள். ஹ÷ண்டாய் தொழிலாளர்களும் களமிறங்கினார்கள்.
ஏப்ரல், 2010ல் மீண்டும் மக்கள் கோரிக்கைகளோடு நெடும்பயணம் ஒன்றை துவக்கினார்கள். கொலை வழக்கு, கொலைகாரர்கள் என்று சொல்லி தடுக்க நினைத்த அரசு, நீதிமன்ற வழக்கால் வழிவிட நேர்ந்தது. நெடும்பயணத்தை அங்கீகரித்து தொழிலாளர் அமைச்சர், சட்டமன்றத்தில் 30.04.2010 அன்று தொழிலாளர் மானியக் கோரிக்கைகளில் பதில் சொல்லும்போது, தொழிற்சங்க அங்கீகார சட்டம் இயற்றுவது தொடர்பாக குழு ஒன்று அமைப்பதாக அறிவித்தார்.
வாடிக்கையாக மீறப்படும் வாக்குறுதியாக ஆகக் கூடாது என்பதற்காக, மீண்டும் தொழிற்சங்க அங்கீகார திருத்தச் சட்டம் கோரியும், விலை உயர்வு தடுப்பு உட்பட்ட மக்கள் கோரிக்கைகளுக்காகவும் ஏஅய்சிசிடியு நடத்திய 5 லட்சம் கையெழுத்து இயக்கத்தில் நான்கில் ஒரு பகுதி கையெழுத்துக்களை பிரிக்கால் தொழிலாளர்கள் பெற்றார்கள்.
நிர்வாகம், தனக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் உள்ள இடைவெளியைப் போக்க இருவர் குழு ஒன்றின் மூலம் போராடும் தொழிலாளர்களோடு, சங்கங்களோடு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது. ஒரு பக்கம் கைகுலுக்கலாமா என்று கேட்டுக்கொண்டே, இன்னொரு பக்கம் கையை, காலை வெட்டும் விஷயங்களையும் செய்கிறது.
ஒருதலைபட்சமான ஊதிய உயர்வு ஒப்பந்தம் போட்டு, தொழிலாளர்களை ஆத்திரப்படுத்தி, சிக்குவார்களா, காத்திருக்கும் காவல்துறை கொண்டு ஏதாவது செய்யலாம் என சதிவலை பின்னியது.
நிர்வாகம் கூப்பிடும் நேரம், கூப்பிடும் இடத்தில் சண்டையிட, நிர்வாகம் விரும்புவதுபோல் சிக்கிக்கொள்ள பிரிக்கால் தொழிலாளர்கள் வாய்ப்பு தரவில்லை.
தம் பலத்தை, தம் சமூக செல்வாக்கை, நண்பர்களுக்கும் எதிரிகளுக்கும் உணர்த்த, பிரிக்கால் தொழிலாளர்கள் குடும்பத் திருவிழா நடத்த தீர்மானித்தனர். மார்ச் 2007, துவக்ககால எழுச்சியை, வேறு விதத்தில், உயர்ந்த வடிவத்தில் வெளிக்காட்ட விரும்பினர்.
தொழிலாளர்களின், தொழிலாளர் குடும்பங்களின், வேலை மறுக்கப்பட்ட துணை யூனிட் தொழிலாளர்கள் என்றழைக்கப்படுபவர்கள் உள்ளிட்ட அனைவரையும் திரட்ட முடிவெடுத்தனர். ஆயிரக்கணக்கானவர்கள் நிதி தருவது உட்பட பங்காற்றினர். சில நூறு பேர் பல நாட்கள் அயராது பாடுபட்டனர்.
லோகோ போட்டி, விளையாட்டு போட்டிகள், கட்டுரை, பேச்சு, ஓவியப் போட்டிகள் நடந்தன. எதிர்பார்த்ததை தாண்டிக் கூட்டம், கட்டுக்கடங்காத கூட்டம் என அனைவரும் பேச வேண்டும் என அனைவரும் எதிர்பார்த்தனர்.
எதிர்பார்ப்பு நிறைவேறியது. 5000 பேருக்கு மேல் அணிதிரண்டனர். வினாடி - வினா, நாடகம், நாட்டியம் எல்லாமே பாட்டாளி வர்க்க அரசியலைப் பறைசாற்றின.
கருணாநிதி அரசை குற்றவாளிக் கூண்டில் நிறுத்தும் மாலெ கட்சியின் செப்டம்பர் 10 - அக்டோபர் 10 பிரச்சார இயக்கத்தின் எழுச்சியூட்டும் நிறைவு நாளாக மாறியது பிரிக்கால் தொழிலாளர் குடும்பத் திருவிழா.
தலைவர் போராட்ட அறிவிப்பை வெளியிடவில்லையே என்ற ஏக்கம் தொழிலாளர் மத்தியில் நிலவியது. திருவிழாவே ஒரு போராட்ட அறிவிப்புதான் எனப் போகப்போக புரிந்து கொண்டனர்.
திருவிழாவின் ஒரு பகுதியாக அக்கம்பக்கம் உள்ள வார்டுகளின் சமூக, பொருளாதார நிலைமைகளை கள ஆய்வு செய்துள்ளனர்.
தம் தரப்பு நியாயங்களை, பொறுமையை தொழிலாளர்கள் நிரூபித்துவிட்டனர். நிர்வாகத்தின் அராஜக அணுகுமுறையை அரசின் கவனத்திற்கு, மக்கள் மாமன்றத்தில் திரும்பத்திரும்ப எடுத்துச் சொல்லியுள்ளனர்.
உரிய நேரம், உரிய வாய்ப்புக்காக காத்திருக்கின்றனர். மக்கள் பேராதரவுடன் அடுத்த போராட்டத்தைக் கொண்டாட, கொண்டாட்டமாய் போராட தயாராகி உள்ளனர்.
பாட்டாளி வர்க்கத்தின் சுதந்திர அரசியல் ஒளி வீசும் செங்கொடியோடு எழும். அந்த அரசியல் போராட்டம் முதலாளித்துவத்திற்கு, முதலாளித்துவ அரசியலுக்கு திண்டாட்டமாய் மாறும்.