மதச்சார்பற்ற முற்போக்கு சக்திகள், அயோத்யா தீர்ப்பு மீண்டும் ஒரு முறை பாப்ரி மசூதியையும் மதச்சார்பின்மை யையும் தகர்த்துவிட்டது என்கின்றனர். சாட்சியங்கள், சான்றுகள் அடிப்படையில் இல்லாமல், இந்துக்களின் நம்பிக்கையின் அடிப்படையில் மசூதி இடிக்கப்பட்ட இடத்தை ராமன் பிறந்த இடம் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது தவறு என்கின்றனர்.
ஜெயலலிதா தீர்ப்பை வரவேற்றார். அவர் மசூதி இடிப்பிற்கு முன்னோட்டமான கரசேவையை ஆதரித்தவர்.
ஆர்யத்துக்கு எதிரான திராவிடப் போராளி, மதச்சார் பின்மை தளபதி கருணாநிதியின் கட்சி என்ன சொல்கிறது?
மசூதி இடிக்கப்பட்ட இடத்தில் கோயில் கட்ட, சங் பரிவார், கையெழுத்து வாங்கியபோது திமுகவின் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர், வரவேற்று உபசரித்து மகிழ்ச்சியோடு புகைப்படம் எடுத்துக்கொண்டு கையெழுத்து போடுகிறார்.
பின்னர், விவகாரம் பெரிதான பிறகு, சங் பரிவார் வழங்கிய ஆவணங்களைப் பெற்றுக் கொண்டதற்குத்தான் கையொப்ப மிட்டேன் என பல்டி அடித்தார். சரி. இவராவது புதியவர். முதுபெரும் தலைவர் என்ன செய்தார்?
முரசொலியில் உடன்பிறப்புக்கு கடிதம் எழுதும்போது, திரேதா யுக ராமன் பிறந்த இடம் தெரிகிறது, கி.பி. 1000க்குப் பின் வாழ்ந்து மறைந்த ராஜராஜ சோழன் சமாதி தெரியவில்லையே என எழுதுகிறார். இந்துத்துவாவிடமும் பிரச்சனை வரக்கூடாது; இசுலாமியரையும் ஏமாற்றலாம்.
லயோலா கல்லூரியில் 29.10.2010 அன்று கருணாநிதி பேசியதாக முரசொலி செய்தி வெளியிடுகிறது:
‘பொதுவாக இந்தியத் திருநாட்டில் மதநல்லிணக்கம் தேவை என்பதற்காக, மத வேறுபாடுகள் களைந்த மனித நேயம் தேவை என்பதற்காக பாடுபடுபவர்கள் நாங்கள். அதை நீங்கள் அறிவீர்கள்.’
‘அது திருவரங்கத்திலே கட்டப்பட்டிருக்கும் கோயில் ஆனாலும், அல்லது அயோத்தியில் கட்டப்பட வேண்டிய ராமர் ஆலயம் ஆனாலும், இவைகளுக்கெல்லாம் சரித்திரத்திலே சில வேர்கள் இருக்கின்றன. ஆனால், சரித்திரம் என்றைக்கும் மாற முடியாத, மாற்ற முடியாத ஒன்று.’
கருணாநிதி என்னதான் சொல்கிறார் என்று புரிகிறதா? மசூதி இடிக்கப்பட்டது மாற முடியாத, மாற்ற முடியாத வரலாறு, அயோத்தியில் ராமர் ஆலயம் கட்டப்பட வேண்டியது மாற முடியாத, மாற்ற முடியாத வரலாறு என்கிறாரா? நேரடியாக, துணிச்சலாக கருணாநிதி தம் கருத்தைச் சொல்வாரா?