அரியானா
பஞ்சாயத்து ராஜ் திருத்தச் சட்டம்
2015: வறியவர்கள்பால் பாஜக அரசு காட்டும்
சகிப்பின்மை
உலகின்
மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று
வெளிநாடுகளுக்குச் செல்லும் இந்திய ஆட்சியாளர்கள் இந்தியாவை
அடையாளப் படுத்துகிறார்கள். வெளிநாட்டில் இருந்து இங்கு வரும்
ஆட்சியாளர்களும் அப்படி ஒன்றைச் சொல்லி
வைக்கிறார்கள். இந்திய ஜனநாயகம் மிகப்பெரிய
கேலிக்கூத்து என 10.12.2015 அன்று வெளியான உச்சநீதிமன்றத்
தீர்ப்பு காட்டுகிறது.
அரியானா
மாநில பாஜக அரசாங்கம் உள்ளாட்சித்
தேர்தல்களில் போட்டியிட விதித்த, நாட்டு நடப்புகளை கணக்கில்
கொள்ளாத, மேட்டுக்குடி தன்மை கொண்ட நிபந்தனைகள்
அரசியல்சாசனத்துக்கு விரோதமானவை என்று உச்சநீதிமன்றத்தில் கேள்விக்குள்ளாக்கப்பட்ட
போது, அரியானா அரசாங்கம் சொல்வது
சரியே என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட்டது.
அரியானா
பஞ்சாயத்து ராஜ் திருத்தச் சட்டம்
2015, ஏற்கனவே இருக்கிற நிபந்தனை களோடு கூடுதலாக அய்ந்து
நிபந்தனைகளை விதிக்கிறது. ஏற்கனவே இருந்த நிபந்தனைகள்
படி குற்றவாளிகள், மன நலம் குன்றியவர்கள்
போட்டியிட முடியாது. கூடுதல் நிபந்தனைகள், நேரடியாக
இல்லாவிட்டாலும் மறைமுகமாக, வறியவர்கள் போட்டியிட முடியாது என்கிறது.
விவசாய
கடன் பாக்கி வைத்துள்ளவர்கள், மின்கட்டண
பாக்கி வைத்துள்ளவர்கள், வீட்டில் செயல்படுகிற கழிப்பறை இல்லாதவர்கள், பள்ளிக் கல்வி முடிக்காதவர்கள்,
குற்றம் சுமத்தப்பட்டோர் போட்டியிட முடியாது என இந்த நிபந்தனைகள்
சொல்கின்றன. தலித் மற்றும் பெண்களுக்கு
கல்வித் தகுதியில் சில விதிவிலக்குகள் உள்ளனவே
தவிர பள்ளிக்குச் சென்று பாடம் படிக்காதவர்கள்
உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட முடியாது.
ஆண்கள்,
கால் வேலி நிலம், சொந்த
நிலத்தில் வீடு, கல்வியறிவு இருப்பவர்கள்தான்
வேட்பாளர்கள் என்ற குடவோலை முறையையெல்லாம்
கடந்து வெகுதூரம் வந்த பிறகு கிட்டத்தட்ட
அதுபோன்ற ஒன்றை வளர்ச்சி பெயரால்
ஆட்சிக்கு வந்த பாஜக ஆட்சியில் பார்க்கிறோம்.
அரியானா
சட்டத்தின் நிபந்தனைகள் 50% பேரின் போட்டியிடும் உரிமையைப்
பறித்து விடும் என்று உச்சநீதிமன்றமே
திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்தபோது சொன்னது.
இப்போது கல்வியறிவு இருந்தால்தான் நல்லது கெட்டது பிரித்துப்
பார்க்க முடியும் என்கிறது. நாடாளுமன்ற, சட்டமன்ற வேட்பாளர்களுக்கே கல்வித் தகுதி நிர்ணயிக்கப்படாதபோது
இந்தத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. பெரும்பாலான
தலித் மக்களின், வறிய பெண்களின் அரசியல்
சாசன உரிமைகளைப் பறிக்கிற இந்த ஜனநாயக விரோதத்
தீர்ப்பை எழுதியவர்கள் கற்றறிந்த உச்சநீதிமன்ற நீதிபதிகள்!
இந்த திருத்தங்கள் அனைத்துமே, வறிய மக்கள்தான் தவறு
செய்பவர்கள், ஏமாற்றுக்காரர்கள், கல்வியறிவு இருந்துவிட்டால் தவறு செய்யமாட்டார்கள், கடன்,
கட்டணம் பாக்கி வைக்கமாட்டார்கள், நேர்மையாக
நடந்துகொள்வார்கள் என்ற மேட்டுக்குடி கருத்துக்களையே
மறுஉறுதி செய்கின்றன.
ஆட்சியைப்
பிடிக்க விவசாயக் கடன் தள்ளுபடி அறிவிக்கிற
மாநில அரசாங்கங்கள் இருக்கிற போது, விவசாயக் கடன்
செலுத்தியிருக்க வேண்டும் என நிபந்தனை போடும்
அரியானா பாஜக அரசாங்கம், விவசாயக்
கடன் வாங்க வேண்டிய அவசியம்,
செலுத்த முடியாமல் போவதற்குக் காரணம் ஆகியவை மத்திய
மாநில அரசுகளின் விவசாய விரோத நவதாராளவாதக்
கொள்கைகளே என்பதை மறைத்து விவசாய
நெருக்கடிக்கு ஏழை விவசாயிகள் மீது
பழி போடுகிறது.
வளைத்து
வளைத்து ஆங்கிலம் பேசுபவர்கள், கோட் சூட் அணிந்த
கனவான்கள், சொந்த கழிப்பறை என்ன,
சொந்தமாக பல வீடுகள் வைத்திருப்பவர்கள்
நாட்டுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் பலப்பல ஆயிரம் கோடிகள்
கடன் பாக்கி வைத்து செலுத்தாமல்
ஆண்டுக் கணக்கில் போக்கு காட்டுகிறார்கள் என்பது
அரியானா பாஜக அரசாங்கத்துக்கு தெரியும்.
அவர்களுக்கு காவடி தூக்குபவர்களே இந்தத்
திருத்தங்களைக் கொண்டுவந்துள்ளார்கள்.
வீட்டில்
கழிப்பறை இல்லாமல் போவதற்கு யார் பொறுப்பு? தூய்மை
இந்தியா பற்றி பேசும் பாஜகவினர்
அவர்கள் ஆளுகிற மாநிலங்களில் கூட
வீடுதோறும் கழிப்பறையை உறுதி செய்ய அக்கறையற்றவர்கள்
என்பதையே இந்தத் திருத்தம் காட்டுகிறது.
குஜராத்தின் முன்னாள் அவைத் தலைவரும் கர்நாடகாவின்
இந்நாள் ஆளுநருமான பாஜகவைச் சேர்ந்த வாஜ÷பாய்
வாலா, தனது கழிப்பறை, சமையலறை,
உணவு உண்ணும் அறை ஆகியவற்றைச்
செப்பனிட ரூ.50 லட்சம் செலவழித்தாராம்.
சொந்தப் பணத்தில் அல்ல. மக்கள் பணத்தில்.
சாமான்ய மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரத்தான் ஆட்சியாளர்களுக்கு
நேரமிருப்பதில்லை. கடமையை நிறைவேற்றத் தவறிவிட்டு
அதற்கு மக்கள் மீதே குற்றம்
சுமத்துகிறார்கள். அதற்கு கூட்டம்போட்டு விவாதித்து
சட்டம் போட்டு மக்கள் உரிமைகளைப்
பறிக்கிறார்கள்.
உள்ளாட்சித்
தேர்தலில் தலைவராக வெற்றி பெற்றதற்காக
மேலவளவில் தலித் தலைவரும் அவருடன்
இன்னும் அய்ந்து தலித்துகளும் ஓடும்
பேருந்தில் வெட்டிக் கொல்லப்பட்டதை தமிழ்நாடு பார்த்தது.
உள்ளாட்சி
அமைப்புகள் தேர்ந்தெடுக்கப்பட்டு நடந்தபோதும் பெயரளவில் அதிகாரமும் நிதியும் கட்டுப்பாடும் மேல்மட்டங்களில் இருக்கும் யதார்த்தமே இன்றும் உள்ளது. இருப்பினும்
அரசியல்சாசனப்படி கிராமப்புறங்கள் வரை அதிகாரப் பரவல்
இருப்பதும் யதார்த்தம். அரசியல்சாசன உரிமை இருக்கிற நிலைமைகளிலேயே
தலித் மக்களை உள்ளூர் அதிகாரத்தில்
இருந்து விலக்கி வைக்க தமிழ்நாட்டில்
மேலவளவு படுகொலை நிகழ்த்தப்பட்டது.
இருங்காட்டுக்கோட்டையில்
ஹ÷ண்டாய், அதன்
துணையூனிட்டுகள், பிற ஆலைத் தொழிலாளர்கள்,
பன்னாட்டு நிறுவனங்களின் ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தங்கள் நியாயமான
போராட்டங்களில் பகுதி மக்களின் ஆதரவு
திரட்ட முயற்சி செய்யும்போது உள்ளாட்சி
அமைப்புகளில் அதிகாரத்தில் இருப்பவர்கள் நிர்வாகங்கள் பக்கம் நிற்பதை எதிர்கொள்ள
வேண்டியுள்ளது. தொழிலாளர்களின் நியாயமான போராட்டங்களை முறியடிக்க, நிர்வாகங்களுக்கு ஆதரவாக, வேலைக்கு ஆட்கள்
அனுப்புவது, அங்கு வேலை செய்யும்
தங்கள் வீட்டு பிள்ளைகளை கண்டிப்பது
போன்றவற்றில் அவர்கள் ஈடுபடுவதை பார்க்க
முடிகிறது. அரியானாவின் மாருதி தொழிலாளர்களும் இது
போன்ற சிக்கலை எதிர்கொண்டார்கள். உள்ளாட்சி
அதிகாரம் முழுக்கமுழுக்க மேட்டுக் குடியினர் கைகளில் இருப்பது இதுபோன்ற
சமயங்களில் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பாதுகாப்பாகவும் தொழிலாளர்களுக்கு எதிராகவுமே செயல்படும்.
கார்ப்பரேட்
நிலப்பறி நடவடிக்கைகளில், அவற்றுக்கு அனுமதி மறுப்பதில் உள்ளாட்சி
அமைப்புகள் ஒரு பங்காற்றும் நிலை
உள்ளது. நாட்டு மக்களின் எதிர்ப்பைச்
சந்திக்கிற நிலப் பறிச் சட்டத்திலும்
பெயரளவில் அந்த அதிகாரம் தரப்பட்டுள்ளது.
அந்த அதிகாரத்தில் ஏழை பாழைகள், நிலமற்றவர்கள்
இருப்பது அரியானா அரசுக்கு, பன்னாட்டு
நிறுவனங்களுக்கு இடையூறாக இருக்கும். தொலைநோக்குப் பார்வையு டன்தான் அரியானா அரசு
இந்தத் திருத்தங்களை கொண்டு வந்துள்ளது போல்
தெரிகிறது.
நாடு முழுவதும் பல்வேறு கார்ப்பரேட் நிலப்பறி
நடவடிக்கைகளை தடுப்பதில் அங்கு வாழும், பாதிக்கப்படும்
சாமான்ய மக்களே முன்நிற்கிறார்கள்; காவல்துறையினரின்
தடியடியையும் துப்பாக்கிச் சூட்டையும் எதிர்கொண்டு உயிர்த் தியாகம் செய்கிறார்கள்.
அவர்களிடம் உள்ளூர் மட்டத்தில் அதிகாரமும்
இருந்துவிடுவது பாஜக ஆட்சியாளர்களுக்கு சங்கடமே.
ராஜஸ்தானின்
பாஜக அரசாங்கமும் இது போன்ற திருத்தங்களை
கொண்டு வந்துள்ளது. தூய்மை இந்தியா, துவக்கு
இந்தியா போன்ற மேட்டுக்குடி, கார்ப்பரேட்
ஆதரவு கருத்துக் களை, நடவடிக்கைகளை மேலிருந்து
மத்திய அரசும் கீழிருந்து மாநில
அரசு முதல் உள்ளாட்சி அமைப்புகள்
வரையிலும் தடையின்றி திணிக்க, நிறைவேற்ற பாஜக அரசுகள் தேர்ந்தெடுத்துள்ள
நடைமுறையாக இது இருக்கக் கூடும்.
இசுலாமியர்கள்
மட்டுமின்றி வறியவர்கள் விசயத்திலும் பாஜகவினருக்கு சகிப்புத்தன்மை இல்லை என்பதையும் இந்தச்
சட்டத் திருத்தம் காட்டுகிறது. வறியவர்களை ஒழிப்பதன் மூலம் வறுமையை ஒழிக்கும்
நடவடிக்கைகைள காங்கிரஸ் அரசாங்கம் மேற்கொண்டது என்றால், வறியவர்களை குறைந்தபட்ச வேர்க்கால்மட்ட அதிகாரத்தில் இருந்தும் வெளியேற்றிவிட பாஜக அரசாங்கங்கள் முனைகின்றன.
ஜனநாயக
விரோத சட்டத் திருத்தங்கள் செய்துள்ள
அரியானா அரசாங்கம், பஞ்சாப் கிராமப் பொது
நிலங்கள் (முறைப்படுத்துதல்) சட்டம் 1961, அரியானா விவசாய விளைபொருள்
சந்தைகள் சட்டம் 1961 ஆகியவற்றை திருத்தப் போவதாக செய்திகள் வந்துள்ளன.
இந்தத் திருத்தங்களில் அரியானா சாமான்ய மக்களுக்கு
என்ன ஆபத்துகள் காத்திருக்கின்றன என்று பொறுத்திருந்து பார்க்க
வேண்டும். ஆனால், வறிய மக்களின்
அரசியல்சாசன உரிமைகளைப் பறிக்கிற அரியானா பஞ்சாயத்து ராஜ்
திருத்தச் சட்டம் 2015, அரசியல் சாசனத்துக்கு புறம்பானது
அல்ல என்ற தீர்ப்பு திருத்தப்படுவதற்கான
நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது ஜனநாயகத்தைப் பாதுகாக்கும் முக்கிய கடமையாகும்.
சுதந்திரமான
இடதுசாரி அரசியல்
எதிர்கொள்ளும்
சவால்கள்
காம்ரேட்
தமிழ்நாடு
அரசியல் கட்சிகளும் கூட, பீகார் தேர்தல்
முடிவுகள் பற்றிப் பேசுகிறார்கள். தமிழ்நாடு
காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனும்
திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதியும்,
பீகாரில் அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய
ஜனதா தளம், காங்கிரஸ் இணைந்து
உருவாக்கிய மகா கூட்டணி பாஜக
அணியைத் தோற்கடித்ததை மனதில் கொண்டு, தமிழகத்தில்
ஜெயலலிதாவை முறியடிக்க ஒரு மகா கூட்டணி
உருவாக வேண்டும் என்று சொல்கிறார்கள். அவர்கள்
இருவரும் கூட்டு சேர்வதற்கும், தேமுதிக
உள்ளிட்ட கட்சிகளை கொண்ட ஒரு கூட்டணி
அமைக்கவும், தயாராக உள்ளனர். கருணாநிதியின்
ஒரே கவலை, விஜய்காந்த் ஏற்க
முடியாத கடுமையான நிபந்தனைகள் போடுவாரா என்பது மட்டுமே.
மக்கள்
நலக் கூட்டியக்கத் தலைவர்கள், விஜய்காந்தை டிசம்பர் 23 அன்று சந்தித்தனர். கருணாநிதி
அன்றே அவசரமாகக் கட்சிக்காரர்களைக் கூட்டினார். மழை வெள்ள சேதத்திற்கு
அஇஅதிமுக அரசு பொறுப்பேற்க வேண்டும்
என வலியுறுத்தி ஜனவரி 5 அன்று கருணாநிதி
தலைமையில் ஆர்ப்பாட்டம் நடக்கும் என முடிவானது. தீர்மானத்தை
நிருபர்களிடம் வெளியிடும்போது நிருபர்கள் விஜய்காந்த் தொடர்பாக கேள்வி கேட்பார்கள் எனத்
தெரிந்தே, கருணாநிதி நிரூபர்களைச் சந்தித்தார். ‘திமுக சார்பில் கூட்டணி
உருவாக்கும்போது அதில் விஜய்காந்தும் இருக்க
வேண்டும் என்ற விருப்பம் எங்களுக்கு
உண்டு’ என்று சொல்லி, தாம்
சொன்னதையே விஜய்காந்திற்கு அழைப்பாக கருதலாம் எனவும், கருணாநிதி தெரிவித்தார்.
மக்கள்
நலக் கூட்டணியில் இடம் பெற்றுள்ள விடுதலைச்
சிறுத்தைகள் கட்சியின் தொல்.திருமாவளவன் தினமலர்
நாளிதழுக்கு 25.12.2015 அளித்த பேட்டியின் சில
பகுதிகள் கவனிக்கத்தக்கவை ஆகும்.
கே: மக்கள் நலக் கூட்டணி
சார்பில், விஜய்காந்தை சந்தித்து என்ன பேசினீர்கள்?
ப: மக்கள் நலக் கூட்டணியில்
இடம் பெற்றுள்ள கட்சிகளின் செல்வாக்கு, வாக்கு வங்கி குறித்தெல்லாம்
விஜய்காந்த் விளக்கமாகக்
கேட்டறிந்தார். ‘திமுக, அதிமுக பெரும்
பொருளாதாரத்துடன் தேர்தலைச் சந்திக்கும் போது, மக்கள் நலக்
கூட்டணியால், பொருளாதாரம் இல்லாமல் தேர்தலை எப்படி எதிர்கொள்ள
முடியும்’ எனக் கேட்டார்.
அதற்கு,
‘பீகாரிலும், டில்லியிலும், பாஜக, பெரும் பொருளாதாரத்துடன்
தேர்தலை எதிர்கொண்டது. ஆனாலும், மக்கள் மாற்றம் வேண்டும்
என விரும்பிவிட்டால், பணம் ஒரு பொருட்டே
அல்ல’ என, எடுத்து சொன்னதும்,
அந்தக் கருத்தை அவர் ஏற்றுக்
கொண்டார்.
கே: தனக்கு முதல்வர் வேட்பாளர்
அந்தஸ்து வேண்டும் என விஜய்காந்த் கோரிக்கை
விடுத்தாரா?
ப: கூட்டணியில் இணையும் பட்சத்தில், அவர்தான்
பெரிய கட்சியாக இருப்பார். அந்த வகையில், அவர்
கேட்டால், மறுப்பு இருக்கப் போவதில்லை.
தமிழகத்தில், திமுக, அதிமுகவை வீழ்த்த
வேண்டும் என்பதில், விஜய்காந்த் உறுதியாக உள்ளார்; அதனால் மக்கள் நலக்
கூட்டணிக்கு விஜய்காந்த் வருவார்; கூட்டணி பலம் பெறும்.
கே: விஜய்காந்த், திமுக கூட்டணிக்கு வர
வேண்டும் என, அந்தக் கட்சித்
தலைவர் கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளாரே?
ப: அதை மற்றவர்கள் எப்படிப்
பார்க்கின்றனர் எனத் தெரியாது. ஆனால்
நாங்கள், விஜய்காந்தை சந்தித்த, இரண்டு மணி நேரத்தில்,
கருணாநிதி அழைப்பு விடுக்கிறார் என்றால்,
மக்கள் நலக் கூட்டணியின் பலம்
புரியும். இந்த
தேர்தலைப் பொறுத்தவரையில், விஜய்காந்தை சுற்றித்தான் மொத்த அரசியலும் உள்ளது
என்பதை, கருணாநிதியும் உறுதி செய்துள்ளார்.
எட்டிலிருந்து
பத்து சதம் வாக்கு வங்கி
உள்ள ஒருவரை மய்யமாகக் கொண்டு
தமிழக அரசியல் சுழல்கிறது என்பது,
திருமாவளவனின் கருத்து. அதனோடு சேர்த்து, மக்கள்
நலக் கூட்டணியின் பலம் கண்டு கலங்கியே,
கருணாநிதி விஜய்காந்துக்கு அழைப்பு விடுத்துள்ளார் எனவும்
சொல்கிறார். திருமாவளவன், கற்பனைகளுக்கு, கனவுகளுக்கு எவரும் தடை போட
முடியாது. ஆனால் இடதுசாரி அரசியலோடு,
சமூக மாற்ற அரசியலோடு சிறிதளவாவது
பரிச்சயம் உடையவர்கள், தமிழக அரசியல் களம்
(தேர்தல் களம்) விஜய்காந்தைச் சுற்றிச்
சுழல்கிறது என்பதை ஏற்க மாட்டார்கள்.
தமிழ்நாட்டு அரசியலில், அஇஅதிமுக, திமுக என்ற இரண்டு
பெரிய கட்சிகளுக்கும் எதிர்ப்பு வலுவாக உள்ளது என்பதுதான்
அடிப்படை என்பதையும், அந்த வெளியை அந்த
தேடுதலை ஒரு குறிப்பிட்ட கட்டத்தில்
விஜய்காந்த் அறுவடை செய்துள்ளார் என்பதும்தான்
உண்மை என்பதையும் உணர்வார்கள்.
கருணாநிதி,
இளங்கோவன் இருவரும், பீகாரில் நிதிஷ் லாலு காங்கிரஸ்
அல்லாத, இடது சாரிகளின் ஒரு
மாற்று மதச்சார்பற்ற அணி இருந்தது என்பதையும்,
அந்த அணியே பீகாரில் மூன்றாம்
அணியாக அமைந்தது என்பதையும், அந்த அணியில் இகக
(மாலெ) மூன்று இடங்களை வென்றது
என்பதையும், மூன்று இடங்களிலும் பாஜக
தோற்றது என்பதையும், இடதுசாரி மாற்று மதச்சார்பற்ற
அணியில் இகக(மாலெ) பாஜக
கூட்டாளிகளான மத்திய அமைச்சர்கள் குஷ்வாஹா,
பஸ்வான் பீகார் முன்னாள் முதல்வர்
மாஜி ஆகியோர் தனித்தனியாகப் பெற்ற
இடங்களை விடக் கூடுதலான இடங்களைப்
பெற்றது என்பதையும், இந்த வெற்றி மேல்சாதி
ஆதிக்க மற்றும் நிலப்பிரபுத்துவ சக்திகளின்
மீட்சிக்கு எதிரான கிராமப்புற வறியவர்கள்
அறுதியிடலின் வெளிப்பாடு என்பதையும் சுட்டிக்காட்ட மாட்டார்கள் என்பதில் ஆச்சரியப்பட ஏதுமில்லை. ஆனால், இந்த விஷயங்கள்,
நண்பர் திருமாவளவனுக்கு நேரடியாகவோ அல்லது அவரது இடதுசாரி
நண்பர்கள் மூலமாகவோ தெரியாமல் போய்விட்டது போல் தெரிகிறது.
எது எப்படி இருப்பினும், பார்த்த
மாத்திரத்தில் ஒரு விஷயம், வினோதமான
முரணாகத் தெரிகிறது. பாஜக திமுக என்ற
இரண்டு கட்சிகளாலும் நாடப்படும் ஒருவர், ஒரு கட்சி,
கார்ப்பரேட் மதவெறி மற்றும் ஊழல்
கட்சிகளால் உகந்த கூட்டாளி எனக்
கருதப்படும் ஒருவர், இடதுசாரி கட்சிகளும்
இடம் பெற்றுள்ள ஒரு மாற்றணிக்கும் உகந்தவராக
இருப்பது, வினோதமான முரண்தான். எங்கேயோ இடிக்கிறது! எங்கேயும்
எப்போதும் இடிப்பதாக, இடதுசாரி அணுகுமுறை இருக்க முடியாது!
செப்டம்பர்
2015ல், சிபிஎம் முன்னாள் பொதுச்
செயலாளர் தோழர் பிரகாஷ் காரத்
எழுதிய கட்டுரையின் மொழி பெயர்ப்பை தீக்கதிர்
வெளியிட்டிருந்தது. (தாமதமாக ஆனாலும்) மிகச்
சரியாகவே அந்தக் கட்டுரையில் தோழர்
பிரகாஷ் காரத் குறிப்பிட்டார். ‘திமுக
அதிமுக இரண்டு கட்சிகளுமே முதலாளிகளின்
நலன்களைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பெரியாரால் பிரச்சாரம் செய்யப்பட்ட முற்போக்கு சமூக கருத்துக்களைக் கைவிட்டுவிட்டன.’
தோழர் பிரகாஷ்காரத் மேலும் குறிப்பிட்டார்: ‘தமிழகத்தின்
அரசியலில் காங்கிரஸ் பாஜக இடையிலான இருமுனைப்
போட்டியோ அல்லது காங்கிரஸ், மாநிலக்
கட்சி இடையிலான இருமுனைப் போட்டியோ ஆதிக்கம் செலுத்தவில்லை. இந்த நிலையில் இடது
ஜனநாயக மாற்றைக் கட்டமைப்பதற்கான போராட்டம் இன்னும் சிக்கலாகிறது. இரண்டு
திராவிடக் கட்சிகளும், அரசியல் களத்தில் பிரதான
இடத்தைப் பிடித்துள்ளன. அகில இந்திய முதலாளித்துவக்
கட்சிகள் உள்ளிட்டு மற்ற கட்சிகள், தேர்தல்
கூட்டணியில் அவர்களின் இளைய பங்காளிகளாகவே, இணைந்து
கொள்கின்றனர். எனவே இடது ஜனநாயக
அணியையும் மாற்றையும் கட்டமைப்பதற்கு, காங்கிரஸ் பாஜகவை எதிர்த்து மட்டும்
அல்லாமல், பிரதான மாநிலக் கட்சிகள்
இரண்டின் அரசியல் மற்றும் சித்தாந்தத்தையும்
எதிர்த்த அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது.’
அஇஅதிமுக
திமுகவுக்கு மாற்றாக நின்று மக்கள்
நலன் காக்க வேண்டிய எந்த
கட்சியும் இயக்கமும், பெரும் தொழில்குழும எதிர்ப்புப்
பாதையில் செல்ல வேண்டும்; மதவெறியை
சாதியாதிக்கத்தை எதிர்த்திட வேண்டும். பெரும் தொழில்குழும ஆதரவு
மதவெறி ஆதரவு பாஜகவுடன், சாதி
ஆதிக்க பாமகவுடன் சேர்ந்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக, அஇஅதிமுக திமுகவுக்கு மாற்றாக எப்படி சட்டமன்றத்
தேர்தலில் மாறிவிடும் என்பது சங்கடமான கேள்வியானாலும்,
இடதுசாரிகள் சந்தித்தாக வேண்டிய கேள்வி.
24.12.2015 அன்று
அஇஅதிமுகவினர், அம்மாவின் ஆட்சியை அடுத்த தேர்தலில்
திரும்பவும் கொண்டுவர உறுதியேற்றுள்ளனர். தமிழ்நாட்டின் மீது மிகப்பெரிய மானிடப்
பேரிடரைத் திணிக்க அவர்கள் தயாராகிறார்கள்.
டிசம்பர்
25 கீழ்வெண்மணி நினைவு நாள். ஜனவரி
8 சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு நாள். கிராமப்புற
வறியவர் எழுச்சி நகர்ப்புற தொழிலாளர்
விருப்பங்களோடு கை கோர்த்து காங்கிரஸ்
ஆட்சிக்கு முடிவு கட்டியதில் வெளிப்பட்ட,
விவசாயத் தொழிலாளர் கிராமப்புற வறியவர் அரசியல் அறுதியிடலை
சகித்துக் கொள்ளாமல் தண்டிக்கவே, வெண்மணியை, நிகழ்த்தினார்கள். பிரிட்டிஷ் இந்தியா வஉசியை கோவை
சிறையில் செக்கிழுக்க வைத்தது என்றால், நாடு
சுதந்திரம் அடைவதற்கு சிறிது காலம் முன்பாக
சின்னியம்பாளையம் தோழர்கள் தூக்கிலேற்றப்பட்டனர்.
நவதாராளவாதக்
காலங்களில் மூலதன ஆதிக்கத்திற்கு எதிராக
சமர் புரிந்து, முற்றுகைகளை முறியடித்து, செங்கொடியோடு வர்க்கப் போராட்டத்தில் முன்னேறுகிற பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தை இரட்டை ஆயுள் தண்டனையால்
தண்டிப்பதன் மூலம் இந்தியத் தொழிலாளர்
வர்க்கத்தைப் போராடாதே என எச்சரிக்கிறார்கள்.
தமிழ்நாட்டின்
கிராமப்புறங்களும் நகர்ப் புறங்களும், உழைக்கும்
மக்களின் சீற்றம் வெடிக்க காத்திருக்கிற
எரிமலைகளாகும். மக்கள் மத்தியில் மாற்றத்திற்கான
தணியாத தாகம் உள்ளது.
இந்தத்
தருணத்தைக் கைப்பற்றி, மக்களைக் காக்க ஜனநாயகம் காக்க,
நகர்ப்புற கிராமப்புற தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களைத் தீவிரப்படுத்தி விரிவுபடுத்துவதன் மூலம், தமிழ்நாட்டின் இடதுசாரி
ஜனநாயக மாற்றணியை முன்னுக்குக் கொண்டு வருவோம். இந்தப்
போராட்டத்தின் ஒரு பகுதியாக, இந்தப்
போராட்டத்துக்கு உதவுவதாக, சட்டமன்றத் தேர்தல் குறித்த சுதந்திர
இடதுசாரி அணுகுமுறை அமைய வேண்டும்.