அனைத்து தொழிற்சங்கங்களின் பத்திரிகை செய்தி
10.12.2015
கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் சந்திக்கிற பாதிப்புகள், 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
என அவர்கள் எதிர்கொள்கிற நீதிமன்ற
தீர்ப்பு குறித்த தமிழகத்தில் உள்ள
மத்திய தொழிற்சங்க அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் 10.12.2015 அன்று எழும்பூரில் உள்ள
ஹெச்எம்எஸ் தலைமை அலுவலகத்தில் காலை
10.00 மணிக்கு நடைபெற்றது.
கூட்டம்
ஹெச்எம்எஸ் அகில இந்திய தலைவர்
திரு.க.அ.ராஜாஸ்ரீதர்
தலைமையில் நடைபெற்றது. ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவர்
தோழர் எஸ்.குமாரசாமி, மாநிலத்
தலைவர் தோழர் என்.கே.நடராஜன், தொழிலாளர் முன்னேற்ற சங்கப் பேரவை பொதுச்
செயலாளர் திரு.மு.சண்முகம்,
சிஅய்டியுவின் தோழர் வி.குமார்,
ஏஅய்டியுசி மாநிலப் பொதுச் செயலாளர்
தோழர் டி.எம்.மூர்த்தி,
ஹெச்எம்எஸ். தலைவர்கள் மு.சுப்பிரமணியன், மா.சுப்பிரமணிய பிள்ளை, ஏஅய்யுடியுசியின் தோழர்
வி.சிவகுமார், அய்என்டியுசி செயலாளர் திரு.என்.கோபாலன்,
உழைக்கும் மக்கள் தொழிற்சங்க மாமன்றத்தின்
உதவித் தலைவர் தோழர் ஆர்.சம்பத் ஆகியோர் கலந்துகொண்டார்கள்.
தமிழக பாட்டாளி வர்க்கத்திற்கு மேற்கண்ட தொழிற்சங்க தலைவர்கள் பின்வரும் கூட்டு வேண்டுகோளை முன்வைக்கிறார்கள்.
பிரிக்கால்
தொழிலாளர்கள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நாடெங்கும் தொழிலாளர் விரோதச் சட்டத் திருத்தங்கள்
நடவடிக்கைகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. 37 மாருதி தொழிலாளர்கள் பல
ஆண்டுகளாக பிணையின்றி விசாரணைக் கைதிகளாய் உள்ளனர். அவர்கள் வழக்கில் விரைவில்
தீர்பபு வரவுள்ளது. இந்நிலையில் 03.12.2015 அன்று கோவை குண்டு
வழக்குகள் நீதி மன்றம் எஸ்.சி. 75/2011 வழக்கில் எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு
இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது.
20.09.2009
கொலைச் சதி என்ற அஸ்திவாரத்தின்
மீது 21.09.2009 கொலைச் சம்பவம் என்ற
கட்டிடம் நிற்பதாக வழக்கில் சொல்லப்பட்டது. இப்போது 03.12.2015 தீர்ப்பில் நீதிபதி கொலைச் சதி
நிரூபிக்கப்படவில்லை எனச் சொல்லிவிட்டார். ஆனால்
8 பேருக்கு கொலை மற்றும் அத்துமீறி
நுழைந்தது என்ற குற்றங்கள் நிரூபிக்கப்பட்டதாகச்
சொல்லி, இரட்டை ஆயுள் தண்டனை
வழங்கியுள்ளார். (ஏற்கனவே காவல் துறையினர்
துன்புறுத்தலுக்கு அஞ்சி தற்கொலை செய்து
கொண்ட மணிகண்டன், தீர்ப்பு எதிர்மறையாகச் செல்ல வாய்ப்பு உள்ளது
என்ற பேச்சுக்களைக் கேட்டு தற்கொலை செய்து
கொண்ட வழக்கில் 6ம் எதிரியான சம்பத்குமார்
என்பவரின் மனைவி ஆகிய இருவரின்
உயிர்களை இவ்வழக்கு பறித்துக் கொண்டுவிட்டது).
பிரிக்கால் தொழிலாளர்கள், தீர்ப்பு சாட்சியங்களுக்குப் புறம்பானது. இரட்டை ஆயுள் தண்டனை
என்ற அதீத தண்டனையே கூட
முதலாளித்துவ சமூகத்தின் வர்க்க விரோதத்தை பிரதிபலிக்கிறது
எனச் சொல்லி, தீர்ப்பிற்கெதிராக உயர்நீதி
மன்றத்தில் மேல் முறையீடு செய்வதாகவும்,
மக்கள் மன்றத்தில் நியாயம் கேட்கப் போவதாகவும்
சொல்லி உள்ளனர்.
8 தொழிலாளர்கள் இரட்டை ஆயுள் தண்டனைக்
கெதிராக நியாயம் கோரும் பிரிக்கால்
தொழிலாளர்களுக்கு அனைத்து தொழிற்சங்க மய்யங்களும்
ஒருமைப்பாட்டைத் தெரிவிக் கின்றோம். சிறை சென்றுள்ள எட்டு
தொழிலாளர் களின் ஜாமீன் மற்றும்
விடுதலைக்கு அனைத்து தொழிலாளர்களும் முற்போக்கு
ஜனநாயக சக்திகளும் உதவிடுமாறு கோருகிறோம்.
பேரழிவுக்குக் காரணம் தமிழக அரசே. மழையோ, புவிவெப்பமயமோ அல்ல
தமிழ்நாட்டு
மக்கள், பேரழிவு உருவாக்கிய இழப்புகளை
தாங்களாக ஈடுகட்ட முடியாத நிலைக்கு
தள்ளப்பட்டுவிட்டனர். வாழ்நாள் சேமிப்புகள், வாழ்வாதாரம் எல்லாம் இழந்து உயிர்
மட்டும் பிழைத்திருக்கிறார்கள். சென்னையின் மேல்நடுத்தரப் பிரிவினர் முதல் விளிம்புநிலை மக்கள்
வரை சகஜ வாழ்க்கைக்கு இன்னும்
யாரும் திரும்பவில்லை. தேங்கியுள்ள கழிவு நீர் கலந்த
மழை நீரை அகற்றுங்கள் போதும்,
வரக் கூடிய நோய்களில் இருந்து
எங்களுக்கு பாதுகாப்பு இருந்தால் போதும், மற்றவற்றை நாங்கள்
பார்த்துக் கொள்கிறோம், எங்களுக்கு நிவாரண உதவி தேவையில்லை
என்று நடுத்தரப் பிரிவு மக்கள் சொல்கின்றனர்.
(அதுவும் செய்யப்படாமல் அவர்கள் தத்தளிப்பது யதார்த்தம்).
மற்றவர்கள் வாழ்க்கையைத் தொலைத்துவிட்டார்கள். அவர்கள் வீட்டுக் குழந்தைகள்
எதிர்காலத்தைத் தொலைத்துவிட்டன. வீட்டில் உள்ள பெரியவர்கள் வாழ்வின்
மீதிருந்த நம்பிக்கையை தொலைத்துவிட்டார்கள். இந்த பேரிழப்புகளுக்கு, மனிதத்
துயரத்துக்கு யார் காரணம்?
தலித்துகள்
கொல்லப்பட்டது உண்மை, ஆனால் அவர்களை
யாரும் கொல்லவில்லை என்று நீதிமன்றங்கள் சொல்கின்றன.
சாமான்ய மக்கள் வாழ்விழந்து நிற்பது
உண்மைதான், ஆனால், அதற்கு காரணம்
மழை என்று ஆட்சியாளர்கள் சொல்கிறார்கள்.
மழை என்று சொல்ல முடிகிறது
என்பதைத் தவிர வஞ்சகத்தில் வேறுபாடு
இல்லை. வஞ்சித்தது மழையல்ல. அஇஅதிமுக ஆட்சி.
யாரையும்
குறை சொல்ல வேண்டாம் என்று
கருணாநிதி சொல்கிறார். இதை பெரும்போக்கு என்று
தமிழக மக்கள் கருத வாய்ப்புகள்
மிகக்குறைவு. அடுத்து அவரை குறை
சொல்வதற்கு இட்டுச் செல்லும் என்பதால்தான்
ஜெயலலிதா அரசாங்கத்தை குறை சொல்ல வேண்டாம்
என்று கருணாநிதி சொல்கிறார் என்று தமிழக மக்களுக்குத்
தெரியும். இன்று சென்னை மக்கள்
எதிர்கொள்ளும் கொடுமையான துன்பத்துக்கு செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டது முக்கியக்
காரணம். செம்பரம்பாக்கம் ஏரியின் கொள்ளளவு கடைசியாக
உயர்த்தப்பட்டது 1996ல். அதற்குப் பிறகு
அதன் கொள்ளளவு உயர்த்தப்படவில்லை. 1996க்குப் பிறகு கருணாநிதி
ஆட்சியில் இருந்திருக்கிறார். சென்னையின் மக்கள் தொகை அதிகரித்துக்
கொண்டிருக்க குடிநீர் ஆதாரத்தை மேம்படுத்துவதில், செம்பரம்பாக்கம் ஏரியை பல விதங்களிலும்
மேம்படுத்துவதில் கருணாநிதி ஆட்சிக்கும் அன்று அக்கறை இல்லை.
அவரது ஆட்சிக் காலத்திலும் நிலவர்த்தக
மாஃபியாக்கள் சென்னையிலும் அதன் புறநகர் பகுதிகளிலும்
நில வேட்டையாடினார்கள். கருணாநிதி ஆட்சி போன பிறகு
கருப்பு சிவப்பு கரை வேட்டி
அணிந்தவர்கள் அப்படிச் செய்வதை நிறுத்திவிட்டார்கள் என்று
சொல்ல முடியாது. வரிப் பணம் என்னாயிற்று
என்ற கேள்விக்கு அவரும் பதில் சொல்ல
கடமைப்பட்டவர். இன்று சென்னை மக்கள்
சந்திக்கும் அழிவை உருவாக்கியதில் அவருக்கும்
பெரும்பங்கு உண்டு. யாரையும் குறை
கூற வேண்டாம் என்று சொல்லி அரசியல்
ஆதாயம் தேடுவதே இன்றைய துன்பச்சூழலிலும்
அவரது நோக்கம்.
எனவே, கிடைத்த வாய்ப்பில் எல்லாம்
ஜெயலலிதாவை விமர்சிக்கும் கருணாநிதியே சொல்லிவிட்டார் என்பதால் ஜெயலலிதா தலைமையில் நடக்கிற குற்றமய அலட்சிய
ஆட்சியின் முகத்திரையை கிழிப்பதில், இந்தப் பிரச்சனையில் நமக்கு
நாமே தடை ஏதும் விதித்துக்
கொள்ள வேண்டியதில்லை. இதை களம் உணர்த்துகிறது.
எங்களுக்கு
உணவு, குடிநீர் என எந்த நிவாரண
உதவியும் வரவில்லை என்று தவித்து நின்றது
முதல், வந்த நிவாரணத்தை வாங்க
முடியாமல் அஇஅதிமுகவினரின் அராஜகத்துக்கு ஆளானது வரை, மக்கள்
அனுபவித்து வரும் கொடுமைகளை நாம்
நேரில் பார்க்கிறோம். இந்த நிலைமைக்கும் பெய்த
மழைக்கும் என்ன தொடர்பு? நிவாரணப்
பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்ப்பதைக் கூட
முறையாக செய்யாத அரசுதானே குற்றவாளி?
முதல் சுற்று மழையில் வீடுகளை
இழந்து, அரசுப் பள்ளிகளில் தங்க
வைக்கப்பட்டவர் களை, பள்ளி திறக்க
வேண்டும் என்பதற்காக அரசுப் பள்ளிகளே வெளியேறச்
சொன்ன செய்திகள் வந்தன. இரண்டாவது முறையும்
அது நடந்தது. கலைந்த தலையும் கசங்கிய
துணியும் வாடிய முகமும் வற்றிய
வயிறுமாக நாங்கள் எங்கு போவது
என்று அவர்கள் கேட்ட காட்சிகள்,
இந்த அரசாங்கத்தின் குற்றமய அலட்சியத்துக்கு சாட்சிகள்.
கடன் வாங்கி, வாயை வயிற்றைக்
கட்டி தவணைகள் செலுத்தி வாங்கிய
வீடுகளை, கொஞ்சம்கொஞ்சமாக சேர்த்த உடைமைகளை இழந்து
மாற்றுத் துணிக்குக் கூட வழியில்லாமல் பரிதவிக்கும்
மக்களுக்கு பரிவு காட்டுவதற்கு பதிலாக
அவர்கள் மீதே குற்றம் சுமத்தும்
கொடுமையும் நடக்கிறது. ஏரியில் வீடு கட்டிவிட்டதாக
எங்களை குறை சொல்வது என்ன
நியாயம், நாங்கள் புறம்போக்கு நிலத்தை
ஆக்கிரமித்து வீடு கட்டவில்லை, பிளாட்
போட்டு விற்கப்பட்டதைத்தான் வாங்கினோம், கடன் வாங்கி வீடு
கட்டியுள்ளோம், இதில் எங்கள் தவறு
என்ன இருக்கிறது என்று கேட்கிறார்கள். எங்களை
இங்கிருந்து போகச் சொல்கிறீர்களே, நாங்கள்
எங்கு போவது, வெளிநாட்டு கம்பெனிக்காரன்
இங்கு கட்டிடம் கட்டி குடியிருப்பான், இந்த
நாட்டுக்காரர்கள் வெளியேற வேண்டுமா, எங்களை
வெளியேற்றிவிட்டு, இந்த இடங்களை பிளாட்
போட்டு விற்பது திட்டமா என்று
கேட்கிறார்கள். சைதாப்பேட்டையில் இருப்பவர்கள் ஓக்கியம் துரைப்பாக்கம் செல்ல வேண்டும் என்று
முதலமைச்சர் சொல்வது அவர்களை நகர்ப்புறத்தில்
இருந்து வெளியேற்ற மழையை பயன்படுத்திக் கொண்ட
நடவடிக்கையே. ஆவணங்கள் அழிந்துவிட்டன. ஓக்கியம் துரைப்பாக்கம் செல்ல வேண்டுமானால் கூட
அந்த நகர்ப்புற பாட்டாளி அவர் அவர்தான் என்று
மெய்ப்பிக்க படாதபாடு பட வேண்டியிருக்கும்.
மழை நின்றும் கழிவுநீரை அகற்றுவதில் போதுமான உள்கட்டுமான ஏற்பாடுகள்
இல்லாதது யார் தவறு? மழையின்
தவறா? எல் நினோ விளைவா?
மழை வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகளுக்கு
தயாராகும்படி அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும்
நவம்பர் 13 அன்றே சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருந்தும்
அந்த சுற்றறிக்கையின் மீது அமர்ந்து கொண்ட
அதிகாரிகளின் குற்றமய அலட்சியம்தான் மக்களை
மழை வெள்ளத்தில் தவிக்கவிட்டது.
கிராமம்
கிராமமாக மொத்தமாக அழிந்து போனது கடலூர்
மாவட்டம். யார் காரணம்? ஒவ்வோர்
ஆண்டும் நாங்கள் வெள்ளத்தில் சிக்கிக்
கொள்கிறோம், எங்களுக்கு நிரந்தரத் தீர்வு தேவை என்று
அனைத்தையும் இழந்த மக்கள் கேட்கிறார்கள்.
ஏரிக்கரைகளை வலுப்படுத்துவது போன்ற சாதாரண அடிப்படை
நடவடிக்கைகள் கூட மேற்கொள்ளப்படாதது, கடலுக்குள்
செல்லும் நீருக்கு முறையாக வழி ஏற்படுத்தாதது,
இருக்கிற வழிகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அனுமதித்தது,
அகற்றாதது ஆகியவையே எங்கள் துன்பத்துக்குக் காரணம்
என்கிறார்கள். இவற்றைச் செய்யத் தவறியது, செய்ய
வேண்டியது அரசுதானே? மழையோ புவிவெப்பமயமோ வரி
கேட்கவில்லை. வாக்கு கேட்கவில்லை. கேட்டது
ஆட்சியாளர்கள். பொறுப்பேற்க வேண்டியவர்களும் அவர்களே.
மீட்பு,
நிவாரணம் என்றுதான் இன்று வரை பேசப்படுகிறது.
அனைத்தையும் இழந்த மக்கள், மறுவாழ்வுக்கு
என்ன உத்தரவாதம் என்று கேட்கிறார்கள். ரூ.5,000
முதல் ரூ.4 லட்சம் வரை
வெவ்வேறு வகைகளில் அறிவிக்கப்பட்டுள்ள இழப்பீடு எந்த இழப்பையும் ஈடு
செய்துவிட முடியாது. தொலைந்துவிட்ட வாழ்வாதாரத்தை மீட்க எந்த பதிலும்
அந்த அறிவிப்பில் இல்லை. எத்தனை உயிர்கள்
போயின என்று இன்னும் அரசிடம்
கணக்கில்லை. வெள்ளம் வடிந்த வீடுகளில்
பிணங்கள் இருக்கின்றன. காணாமல் போனவர்கள் பற்றி
இந்த அரசு இன்னும் யோசிக்கவே
துவங்கவில்லை. ஆர்.கே.நகரில்
வாக்கு கேட்க வந்த அமைச்சர்கள்,
சட்டமன்ற உறுப்பினர்கள், வட்ட, மாவட்டங்கள், அதிகாரிகள்
இப்போது எங்கே போய் ஒளிந்துகொண்டார்கள்,
யாரோ கொண்டு வந்த நிவாரணப்
பொருட்களில் ஜெயலலிதா படம் ஒட்ட வந்தவர்கள்
எங்களை மீட்க ஏன் வரவில்லை
என்று எட்டுத் திசைகளிலும் கேள்விகள்
எழுகின்றன. வெள்ளம் கொண்டுபோன பிணங்கள்
மீது ஏன் ஸ்டிக்கர் ஒட்டப்படவில்லை
என்பது மக்கள் மனதுக்குள் இருக்கும்
கேள்வி. இந்தக் கேள்விகள் நிவாரணப்
பணிகள் நன்கு நடக்கின்றன என்பதையா
சொல்கின்றன? பெரும்பா லான நிவாரணப் பணிகளை
சக மனிதர்கள்தான் மேற்கொண்டிருக்கிறார்கள். அவற்றை முறைப்படுத்தும் பணியைக்
கூட அரசு செய்யவில்லை. மீட்பு
நிவாரண நடவடிக்கைகளுக்காக எங்கிருந்தோ வந்த ராணுவத்தினருக்குக் கூட
அரசு முறையாக முழுமையாக வேலை
தரவில்லை. அவர்களுக்கான வேலைகளை ஒருங்கிணைக்கவில்லை. இந்த
அரசை குறை சொல்லாமல் வாழ்த்துப்
பாவா பாட முடியும்?
இதற்கு
மேலும், நூறு ஆண்டுகள் பெய்யாத
மழை என்று ஜெயலலிதா சொல்வதையோ,
புவிவெப்பமயம்தான் தமிழ்நாட்டு மழைக்குக் காரணம் என்று மோடி
சொல்வதையோ வழிமொழிந்து கொண்டிருந்தோமானால் நாம் மனச்சாட்சியற்றவர்கள். தமிழகம் எங்கும்
பாதிக்கப்பட்ட, பாதிப்பை பார்க்கிற மக்கள், அரசாங்கத்தை குறை
சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். குற்றவாளிக் கூண்டில் ஏற்றுகிறார்கள். அரசாங்கத்தின் மீது கடுமையான சீற்றம்
கொண்டிருக்கிறார்கள். கடுமையான பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிற மக்கள் சீற்றம் கொண்டிருக்கிற
நேரத்தில் குறை சொல்ல வேண்டாம்
என்று சொல்வது பொருத்தமற்றது.
டிசம்பர்
8 அன்று தி இந்து நாளிதழின்
இணையதள பதிப்பிலும் அச்சு பதிப்பிலும் வெளியான
இரண்டு வெவ்வேறு கட்டுரைகள் நடந்துகொண்டிருக்கிற
பேரழிவுகளுக்கு, மக்கள் சந்திக்கிற துன்பங்களுக்கு
தமிழக அரசாங்கமே பொறுப்பு என்று திட்டவட்டமாக தெளிவாகச்
சொல்கின்றன. சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்
திரு.சுஹ்ரித் பார்த்தசாரதி, ‘தார்மீக உணர்வு கொண்ட
ஓர் அரசாங்கத்துக்காக’ என்ற தலைப்பில் எழுதியுள்ள
கட்டுரை, தமிழ்நாட்டின் அடுத்தடுத்த அரசாங்கங்களின் தார்மீக திவாலாத்தனத்தில் இருந்து
அவை தப்பிவிட மழையை சாக்காக பயன்படுத்திக்
கொள்ள அனுமதிக்கக் கூடாது என்கிறது. மக்களுக்கு
ஏற்பட்டுள்ள இழப்பு, அரசு சட்டவிரோதமாக
செய்த கையாடல் என்று கருதப்பட
வேண்டும் என்றும், மீட்பு நிவாரணம் என்பதுடன்
அரசின் நடவடிக்கைகள் முடிந்துவிடாமல் தமிழக மக்களுக்கு நேர்ந்துள்ள
இழப்புகளை அரசு ஈடு செய்ய
வேண்டும் என்றும் அதிகாரத்தில் இருப்பவர்கள்தான்
கூடுதல் பொறுப்பேற்க வேண்டும் என்பதற்காக நாம் போராட வேண்டும்
என்றும் வலியுறுத்துகிறது.
‘சென்னை
மற்றும் இந்தியாவின் நகர்ப்புற கொடுங்கனவுகள்’ என்ற தலைப்பில் ஜோசி
ஜோசப் எழுதியுள்ள கட்டுரையில் சென்னையையும் பிற நகரங்களையும் முறைகேடாக
நிர்வகிப்பதில் அரசு நிறுவனங்களின், அரசியல்
தலைவர்களின் முக்கியத்துவம் வாய்ந்த பங்கை காண
மறுத்து, பெருமழை, முறைப்படுத்தப்படாத கட்டிடங்கள்தான் இந்த பேரழிவுக்குக் காரணம்
என்று சொல்வது மிகவும் சோம்பேறித்தனமான
ஆய்வு என்று சொல்கிறார். சென்னை
பேரழிவு பற்றிய எந்த விவாதமும்
சில அடிப்படை கேள்விகளில் இருந்து துவங்க வேண்டும்
என்று சொல்கிற அவர், சென்னையின்
காணாமல் போன வடிகால்களும் சுருங்கி
வருகிற நீர் நிலைகளும் நமது
ஊழல் அரசியல்வாதிகளால் உருவானவையா, சென்னையின் நகரமயமாக்கலை நிர்வகிப்பதில் அரசு கண்டுள்ள தோல்வியால்
சென்னையின் துன்பம் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதா, வரும் நாட்களில்
சென்னை இன்று எதிர்கொள்கிற துன்பம்,
நாட்டின் பிற பகுதிகளும் மீண்டும்
மீண்டும் எதிர்கொள்ளப் போகும் துன்பத்தின் ஒரு
காட்சியா என்ற கேள்விகளை எழுப்புகிறார்.
இகக மாலெ குழு உட்பட
சென்னையிலும் கடலூரிலும் நிவாரணப் பணிகள் செய்கிற பலர்
மக்கள் மத்தியில் இது போன்ற கேள்விகளையே
எதிர்கொள்கிறார்கள். நல்லவர்கள், பாரபட்சமற்றவர்கள் என்று காட்டிக் கொள்ள
வேண்டிய அவசியம் கருணாநிதிக்கு இருக்கலாம்.
மற்றவர்களுக்கு இல்லை. ஜெயலலிதா அரசாங்கத்தை
குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி பேரழிவுக்கு முழுமையாகப் பொறுப்பேற்க வைப்பதும் அதன் மூலம் இதுபோன்ற
பெருநாசம் மீண்டும் நிகழ்வதை தடுக்கும் குறைந்தபட்ச நடவடிக்கைகள் மேற்கொள்ள அரசை நிர்ப்பந்திப்பதும் தற்போதைய
கட்டத்தில் நமது கடமை.
எட்டு பிரிக்கால் தொழிலாளர்களின் இரட்டை ஆயுள் தண்டனைக்கெதிராக
நியாயம் கேட்போம்!
எஸ்.குமாரசாமி
பாப்ரி
மசூதி இடிக்கப்பட்ட டிசம்பர் 6 அன்று, அம்பேத்கார் நினைவு
நாளான டிசம்பர் 6 அன்று, பிரிக்கால் தொழிலாளர்கள்
தமது பொதுப் பேரவையைக் கூட்டினர்.
கூட்டம் 2007 - 2009 காலகட்ட எழுச்சியும் உணர்ச்சியும்
நிறைந்ததாக இருந்தது. சின்னியம்பாளையம் தியாகிகள் தந்த கோவை, எட்டு
பிரிக்கால் போராளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை
என்ற தீர்ப்பை, 03.12.2015 அன்று சந்தித்தது. பிரிக்கால்
கொலைச் சதி வழக்கு என
முதலாளிகள் நலன்களுக்காக, அரசாலும் காவல் துறையாலும் ஜோடிக்கப்பட்ட
செஷன்ஸ் கேஸ் 75/2011ல், குற்றச் சதி
நிரூபணமாகவில்லை என 10 முதல் 27 எதிரிகளும்,
பெயர் செயற்கையாக வழக்கில் செருகப்பட்டுள்ளது என ஏழாம் எதிரியும்
விடுதலை செய்யப்பட்டனர். 10ஆம் எதிரியாக இகக
மாலெ அரசியல் தலைமைக் குழு
உறுப்பினரும் ஏஅய்சிசிடியு தேசியத் தலைவருமான தோழர்
எஸ்.குமாரசாமி, 7, 11, 12, 13, 14ஆம் எதிரிகளாக கோவை
மாவட்ட இகக மாலெ, ஏஅய்சிசிடியு
தலைமைத் தோழர்களான தோழர்கள் குருசாமி, கிருஷ்ணமூர்த்தி, ஜானகிராமன்,
பாலசுப்பிரமணியன், தாமோதரன் 24 முதல் 27 வரையிலான எதிரிகள் பெண் தொழிலாளர்கள் ஆவார்கள்.
நீதிமன்றம்,
மணிவண்ணன், ராமமூர்த்தி, ராஜேந்திரன், சிவக்குமார், வேல்முருகன், சம்பத்குமார், சரவணக்குமார், குணபாலன் ஆகிய தோழர்களுக்கு, கொலைக்காக
ஓர் ஆயுள் தண்டனை, கொலை
செய்யும் நோக்கத்துடன் அத்துமீறி நுழைந்ததற்கு ஓர் ஆயுள் தண்டனை,
கொடும் ஆயுதங்களுடன் கலகம் செய்ததற்கு மூன்று
ஆண்டுகள் தண்டனை, ரூ.50 மதிப்பு
வரையிலான சொத்து சேத தீங்கிற்கு
இரண்டாண்டுகள் தண்டனை, சேதம் நஷ்டம்
உண்டாக்கியதற்கு 3 ஆண்டுகள் தண்டனை என்ற அதீத
தண்டனைகளை விதித்தது. நல்ல வேளையாக, ஏக
காலத்தில் தண்டனை எனச் சொல்லிவிட்டது!
(தலா மூன்று ரூ.1,000 அபராதம்
கட்டத் தவறினால் தலா மூன்று 6 மாத
தண்டனை, எதிரிகள் 1, 3, 4, 2, 8க்கு கொசுறு தண்டனைகளும்
உண்டு.)
கார்ல்
மார்க்ஸ் புரட்சியை, ஆயுதம் கொண்டு விமர்சனம்
செய்தல் (க்ரிட்டிசிசம் பை ஆர்ம்ஸ்) என
விவரிக்கிறார். நீதிமன்றத் தீர்ப்புக்கள் விமர்சனத்துக்குட்பட்டவையே. அருண் ஜேட்லி முதல்
நீதிபதி சந்துரு வரை, நீதிபதிகள்
நியமனம் தொடர்பான தீர்ப்பை, நீதிபதிகளே நீதிபதிகளுக்காக எழுதிய தீர்ப்பு என்ற
கூட சொற்களால் விமர்சனம் செய்ய முடியும்போது, எட்டு
பேர் இரட்டை ஆயுள் தண்டனைத்
தீர்ப்பை, மக்கள் இயக்கங்களும் தொழிலாளர்
இயக்கங்களும் நியாயமான விமர்சனம் செய்ய, சட்டம் வாய்ப்பு
தருவதாக மாட்சிமை மிகுந்த நீதிபதிகள் எல்லாம்
தீர்ப்பளித்துள்ளனர்.
இரட்டை
ஆயுள் தண்டனைக்கெதிரான, 06.02.2015 பிரிக்கால் தொழிலாளர்கள் முழக்கங்கள், தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் கவனத்தைக்
கோரும் முழக்கங்களாகும்.
கோவை சிறை சென்றனரே
எட்டு தோழர்கள் சென்றனரே
கோவை சிறை சென்றனரே
சதிகாரர்
செயலாலே
முதலாளிகள்
சதியாலே
கோவை சிறை சென்றனரே
எட்டு தோழர்கள் சென்றனரே
கோவை சிறை சென்றனரே
தோழர்களே
வீரர்களே
வீர வணக்கம் வீர வணக்கம்
உங்களுக்கெங்கள்
வீர வணக்கம்
அநியாயம்
இது அநியாயம்
இரட்டை
ஆயுள் தண்டனையாம்
அநியாயம்
இது அநியாயம்
அநியாயம்
இது அநியாயம்
இரட்டை
ஆயுள் தண்டனையாம்
அநியாயம்
இது அநியாயம்
செக்கிழுத்த
செம்மல் இருந்த
கோவை சிறை சென்றனரே
எட்டு தோழர்கள் சென்றனரே
பிரிக்கால்
தோழர்கள் சென்றனரே
தோழர்களே
வீரர்களே
செவ்வணக்கம்
செவ்வணக்கம்
ஒலிக்குது
பார் ஒலிக்குது பார்
நாடெங்கும்
ஒலிக்குது பார்
உலகெங்கும்
ஒலிக்குது பார்
கேட்குது
பார் கேட்குது பார்
தொழிலாளி
குரல் கேட்குது பார்
பிரிக்கால்
தொழிலாளர் போராட்டம்
எங்கள்
வர்க்கப் போராட்டம்
எட்டு பேருக்கு ஆதரவாக
எல்லா திசையும் கேட்குது பார்
தொழிலாளி
குரல் கேட்குது பார்
எட்டுத்
திக்கும் கேட்குது பார்
முடியாது
முடியாது
முதலாளித்துவக்
கூட்டங்களே
போராட்டங்களை
ஒழித்திடவோ
வர்க்க
உணர்வை அழித்திடவோ
முடியாது
முடியாது
உங்களால்
நிச்சயம் முடியாது
பார் பார் கேள் கேள்
பார் பார் கேள் கேள்
தூள் தூள் ஆகும் பார்
தூள் தூள் ஆகும் கேள்
இரட்டை
ஆயுள் தண்டனையெல்லாம்
நீதி மன்றம் முன்னாலே
மக்கள்
மன்றம் முன்னாலே
தூள் தூள் தூளாகும்
தூள் தூள் தூளாகும்
செய்தி
நாமும் சொல்லிடுவோம்
மூலதனக்
கூட்டத்திற்கு
செய்தி
ஒன்று சொல்லிடுவோம்
போராட்டத்தின்
முன்னாலே
சிறைக்கதவும்
திறந்திடுமே
எங்கள்
தோழர்கள் எட்டு தோழர்கள்
வெளியே
வருவார் புகழுடனே
வெளியே
வருவார் வீரர்களாய்
முதலாளிகள்
நலன் காக்க அரசும் காவல்
துறையும், செய்த கூட்டுச் சதியில்,
கொலை வழக்கு ஜோடிக்கப்பட்டு, அதன்
முடிவில் எட்டு தோழர்கள் தண்டிக்கப்பட்டுள்ளனர்
என்ற உள்ளக் குமுறலிலிருந்தே தோழர்களின்
முழக்கங்கள் எழுந்தன. கற்றறிந்த செஷன்ஸ் நீதிபதி, கொலைச்
சதி நிரூபிக்கப்படவில்லை எனத் திட்டவட்டமாகச் சொல்லி
10 முதல் 27 எதிரிகளை விடுதலை செய்துவிட்டார்; தோழர்
குருசாமி மீது செயற்கையாக வழக்கு
போடப்பட்டுள்ளது என்ற அடிப்படையிலேயே அவரையும்
விடுதலை செய்துவிட்டார். கொலைச் சதி என்ற
அஸ்திவாரம் தகர்ந்துவிட்ட பின்னர், கொலைச் சம்பவம் என்ற
கட்டிடம் எப்படி நிற்கும் என்பதே
தொழிலாளர்களுடைய கேள்வியாகும்.
தீர்ப்பு தவறு என ஏன் சொல்கிறோம்?
நாம் நீதிபதிக்கு எந்த உள்நோக்கமும் கற்பிக்கவில்லை.
ஆனால் அவர் என்ன நினைத்தார்
என்பதை எல்லாம் தாண்டி, இன்றைய
நாட்டு நடப்பில், இரட்டை ஆயுள் தண்டனை
மற்றும் இதர தண்டனைகள் என்ற
அதீத தண்டனைகளே, போராட்டங்களின்பால் முதலாளித்துவ சமூக அமைப்புக்கு உள்ள
கோபத்தை வெறுப்பை பகைமையை வெளிப்படுத்துவதாகத்
தொழிலாளர்கள் கருதுகிறார்கள். தீர்ப்பு, சாட்சியங்களுக்குப் புறம்பானது; தீர்ப்பு தொழிலாளர் தரப்பு வாதங்களைத் தவறாக
நிராகரித்துவிட்டது. தொழிலாளர் தரப்பின் பல வாதங்களைப் பட்டியலிட்டுச்
சொல்லிவிட்டு, அந்த வாதங்களையோ, தொழிலாளர்
தரப்பில் சுட்டிக்காட்டப்பட்ட உச்சநீதிமன்ற உயர்நீதிமன்ற தீர்ப்புக்களையோ, விவாதிக்காமலேயே விட்டுவிட்டது. விவாதம், பரிசீலனை, ஏற்பு அல்லது மறுப்பு
என்ற சட்டப்படி தீர்ப்பு வழங்கும் இயக்கப் போக்கிற்கு பாதிப்பு
ஏற்பட்டுள்ளது. தொழிலாளர்கள் தாக்கல் செய்யும் மேல்
முறையீட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கும்
எனவும், எட்டு தோழர்களுக்கு விரைவில்
ஜாமீன் வழங்கும் எனவும் தோழர்கள் கருதுகிறார்கள்.
கரடிக்குத்
தொடும் இடமெல்லாம் முடி இருக்கும்; பிரிக்கால்
கொலைச் சதி வழக்கில், அரசுத்
தரப்பு வழக்கு நெடுக நீக்கமற
முரண்பாடுகள் நிறைந்துள்ளன. தொழிலாளர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட எழுத்துபூர்வ
வாதுரைகளின் பல வாதங்களுக்கு அரசுத்
தரப்பால் பதில் சொல்ல முடியாமல்
போனது. குற்றச்சாட்டுக்களை அரசுத் தரப்பு நிரூபிக்கத்
தவறியதோடு மட்டுமல்லாமல், தன் தரப்பு சாட்சியங்கள்
மூலம் வழக்கு ஜோடிக்கப்பட்டது என்பதைத்தான்
நிரூபித்துள்ளது.
19.09.2009 அன்று
மாலை முதல் அமலுக்கு வரும்
விதம் திரு ராய்ஜார்ஜ் என்ற
பிரிக்கால் மனிதவள மேம்பாட்டுத் துறை
துணைத் தலைவர் 42 தொழிலாளர்களை டிஸ்மிஸ் செய்தார்; ஆத்திரமடைந்து 20.09.2009 அன்று சதி செய்தனர்;
முறையிட்டபோது குமாரசாமி தீர்த்துக் கட்டச் சொன்னார்; கிருஷ்ணமூர்த்தி
ஜானகிராமன், பாலசுப்பிரமணியன் அடுத்த நாளே போட்டுத்
தள்ளலாம் என்றனர்; அனைவரும் சம்மதம் தெரிவித்தனர்; கொலைச்
சதியின் தொடர்ச்சியாக, மெட்ராஸ் தலைவர் குமாரசாமி உள்ளூர்
தலைவர்கள் கிருஷ்ணமூர்த்தி ஜானகிராமன் சொன்னபடி போட்டுத் தள்ளுகிறோம் எனச் சொல்லிக் கொண்டே
21.09.2009 அன்று திரு.ராய்ஜார்ஜையும் மூன்று
பேரையும் தாக்கினார்கள்; திரு.ராய்ஜார்ஜ், 22.09.2009 மரணம் அடைந்தார்
என்பதே அரசுத் தரப்பு வழக்காகும்.
19.09.2009 சனிக்கிழமை.
20.09.2009 அன்று ஞாயிற்றுக்கிழமை. 21.09.2009 அன்று திங்கள் கிழமை.
டிஸ்மிசல் பற்றித் தெரிந்து, அதனால்
சதி செய்து, அதன்படி கொலை
செய்தனர் என்பதே வழக்கு. அரசுத்
தரப்பு 19.09.2009 டிஸ்மிசல் கடிதம், 21.09.2009 வரை தொழிலாளர்களிடம் சென்று
சேர்ந்ததாகத் தான் வாதாடவில்லை என
வழக்கின் வாதுரை கட்டத்தில் தெரிவித்துவிட்டது.
நீதிமன்றமும் கொலைச் சதி நடக்கவில்லை
எனச் சொல்லிவிட்டது. குற்றச்சங்கிலியின், இரண்டு முக்கிய கண்ணிகள்
அறுந்து விழுந்தபிறகு, மூன்றாவது கண்ணியான சம்பவம் மட்டும் எப்படி
நிற்கும்? காவல் ஆய்வாளர் கோப்புகள்படி
சாட்சி சொல்லாமல், மனம் போன போக்கில்
சாட்சி சொன்னது பொறுப்பற்ற செயல்
என்றும், அந்தச் செயல் தனக்கு
வருத்தம் அளிப்பதாகவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது. அரசுத் தரப்பு வழக்கு
11.40 மணிக்கு 21.09.2009 அன்று சம்பவம் நடந்தது
என்பதாக உள்ளது. 6.30 மணிக்கு முதல் தகவல்
அறிக்கை பதிவானதாகச் சொல்கிறது. விசாரணை செய்து குற்றப்பத்திரிகை
தாக்கல் செய்த காவல் ஆய்வாளர்,
21.09.2009 காலை 11.41 முதல் 11.46 வரை சம்பவ இடம்
எனச் சொல்லப்படும் இடம் முன்பு தாம்
நின்று கொண்டிருந்ததாகவும், பிரிக்கால் நிறுவனத்தைச் சேர்ந்தவர்களோ, காவலுக்கு நின்ற ஆயுதப் படைப்
போலீசாரோ எந்த அசம்பாவிதமும் நடந்ததாகத்
தம்மிடம் சொல்லவில்லை என்றும் சொல்லி உள்ளார்.
பிரிக்காலில் இருந்து 10 நிமிட தூரத்திலுள்ள காவல்
நிலையத்தில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் நூற்றுக்கணக்கான அதிகாரிகள் சில பல இயக்குனர்கள்,
நினைவு தப்பாத காயமுற்ற மற்றும்
கண்ணுற்ற சாட்சிகள் ஒருவர் கூட மாலை
5.30 வரை புகார் செய்யவில்லை என்பது
சாதாரண மானுட இயல்புக்குப் புறம்பானதல்லவா?
இந்தப்
பின்னணியில் காவல் ஆய்வாளர் 11.41 முதல்
11.46 வரை சம்பவ இடம் சம்பவ
நேரம் என்று சொல்லப்படும் நேரத்தில்
எந்த அசம்பாவிதமும் நடக்கவில்லை என்று சொன்னதை நீதிமன்றம்
ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும். அரசு சாட்சியான நிறுவன
செவிலியர் ஒருவர் கூற்றுப்படியும் ஆம்புலன்ஸ்
பதிவேட்டின்படியும் 11.50 மணிக்குப் பிறகு கம்பெனியை விட்டு
புறப்பட்ட ஆம்புலன்ஸ் காயமுற்றவர்களை அட்மிட் செய்து அங்கே
15 நிமிடங்கள் இருந்து, 1 மணிக்கு கம்பனிக்கு திரும்பிவிட்டதாகச்
சொல்லப்பட்டுள்ளது. ஆனால் காய முற்றவர்கள்
1.22, 2.30, 3.30 மணி என மருத்துவமனையில் அட்மிட்
ஆனதாகச் சொல்லப்பட்டுள்ளது. இதற்கு ஏற்கத்தக்க விளக்கம்
இல்லை. சம்பவ நேர சிசிடிவி
பதிவு இருப்பதாகவும், எதிரிகளின் தாக்குதல் நடவடிக்கைகள் அடையாளம் பதிவாகி உள்ளதாகவும் எழுத்துபூர்வ
சாட்சியம் இருக்கும் போது, அரசு தரப்பின்
விடாப்பிடியான நிலைப்பாட்டுக்கு மாறாக, அன்று சிசிடிவி
பதிவு இல்லை என, ஒரே
ஒரு சாட்சி சொன்னதை, நீதிமன்றம்
ஏற்றிருக்கக் கூடாது. உரிய சிசிடிவி
பதிவை தாக்கல் செய்யாததால் அரசு
தரப்பு வழக்கு சந்தேகத்துக்குரியது என
தள்ளுபடி செய்திருக்க வேண்டும். எவ்வளவு காயங்கள் எங்கே
காயங்கள், யார் அட்மிட் செய்தனர்,
கைப்பற்றப்பட்டதாகச் சொல்லப்படும் ஆயுதத்தில் ரத்தக் கறை இருந்ததா,
கைரேகை சோதனை அடையாள அணிவகுப்பு
நடந்ததா என்ற எந்த விஷயத்திலும்,
நிச்சயம் இதுதான் உண்மை (மஸ்ட்
பி ட்ரூ) என்று சொல்லத்தக்க
சாட்சியமே இல்லாதபோது தண்டனை நியாயப்படி செல்லாது
எனக் கருதுகிறோம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு
செய்ய பல காரணங்கள் உள்ளன.
அவற்றை மக்கள் மன்றத்திலும் சொல்ல
வேண்டும்.
தண்டனையும் பிரிக்கால் தொழிலாளர்களும்
பிரிக்கால்
தொழிலாளர்கள் 2007 மார்ச் தொடங்கி, சம்பளப்
பறிப்பு, சம்பள வெட்டு, பிரேக்
இன் சர்வீஸ், ஊதிய உயர்வு முடக்கம்,
இன்சென்டிவ் பிடித்தம், பகுதிக் கதவடைப்பு மற்றும்
டிஸ்மிசல் என்ற பல தண்டனைகளைச்
சந்தித்துள்ளனர். 50க்கும் மேற்பட்டவர்கள் 20க்கும்
மேற்பட்ட வழக்குகளில், பெண்கள் உட்பட 8 நாட்களிலிருந்து
125 நாட்கள் வரை சிறையில் இருந்துள்ளனர்.
காவல்துறை ஒடுக்குமுறைக்கு அஞ்சி 2009ல் மணிகண்டன் என்ற
ஒரு தொழிலாளியும், 2015ல் வழக்கு பற்றிய
கவலையில், இப்போது தண்டனை வழங்கப்பட்டுள்ள
தோழர் சம்பத் குமார் மனைவியும்
தற்கொலை செய்து கொண்டனர். நிரந்தரத்
தொழிலாளி ஒப்பந்தத் தொழிலாளி யூனிட் தொழிலாளிகள் பல
தாக்குதல்களைச் சந்தித்தும் சரணடையவில்லை. போராட்டங்களைக் கொண்டாடி, கொண்டாட்டமாய்ப் போராடி உள்ளனர். போராட்டத்தில்
தமிழக அரசை பல அரசாணைகளை
தொழில்தகராறுகள் சட்டம் 1947ன் 10(1), 10(3), 10 பி பிரிவுகளின் கீழ்
போட வைக்க முடிந்தது. உயர்நீதிமன்றத்தில்
உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டுள்ளது. பல
கையெழுத்து இயக்கங்கள், இரண்டு பிரச்சார நெடும்பயணங்கள்,
பல மக்கள் சந்திப்பு இயக்கங்கள்,
புரட்சிகர கட்சி கட்டுதல், அரசியல்
செல்வாக்கு மற்றும் சங்க விரிவாக்கம்,
உள்ளாட்சி சட்டமன்ற நாடாளுமன்ற தேர்தல் பங்கேற்பு போன்ற
பல கடமைகளைச் சாதித்துள்ளனர். அமைப்புசாரா மற்றும் கிராமப்புற தொழிலாளர்களோடு
கரம் கோர்ப்பதில் அவர்களை அமைப்பாக்குவதில் முன்னணிப்
பங்காற்றியுள்ளனர். சிறையில் உள்ளவர்கள் உள்ளிட்ட பிரிக்கால் முன்னணிகள் ஜாமீன் நிபந்தனை காலத்தில்
கிராமப்புற வறியவர்களுடன் புதுக்கோட்டையில்தான் தங்கினார்கள். தமிழ்நாட்டில் இன்று அதிகம் பேசப்படும்
தொழிற்சங்க அங்கீகாரச் சட்டம், உழைப்பவர் எவரானாலும்
மாதம் ரூ.20,000 ஊதியம், பயிற்சியாளர் நலன்
காக்கும் திருத்தச் சட்டம் 47/2008 உருவாக்கம், தொழிலாளர் குடியிருப்பு, வீட்டுமனை போன்ற கோரிக்கைள் முன்வருவதில்
பிரிக்கால் தொழிலாளர்கள் பங்கு குறிப்பிடத்தக்கது. தனக்குச்
சம்பந்தமே இல்லை என நிர்வாகத்தால்
சொல்லப்பட்ட 230க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
நிரந்தர மாவதற்கும் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள்
ஓரளவுக்கு இழப்பீட்டுத் தொகை பெறவும் வழிவகுத்தனர்.
நிதி திரட்டுவது 10 ஆண்டுகளில் ஓயவில்லை. சிறையில் இருப்பவர்களுக்கு, டிஸ்மிஸ் ஆனவர்களுக்கு சங்கம் ஒருமைப்பாடு நிதி
வழங்குகிறது. 03.12.2015 அன்று தண்டனை வழங்கப்பட்ட
பிறகு, முதல் வசூல், மழையால்
பாதிக்கப்பட்ட மக்களுக்கு என ரூ.5 லட்சத்திற்கும்
மேல் திரட்டப்பட்டுள்ளது. சங்கமும் தொழிலாளர்களும் தம்மைப் புதுப்பித்துக் கொள்வது
முதல், தமக்கிடையிலான உறவுகளையும் பலப்படுத்தி வருகின்றனர். மார்ச் 5, 2016 முதல் மார்ச் 4, 2017 வரை,
பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தின் பத்தாவது ஆண்டை அனுசரிக்க உள்னர்.
ஏஅய்சிசிடியு சிபிஅய்(எம்எல்) உதவியுடன்,
நீதி மன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் உலகத்
தொழிலாளர்களிடமும் தேசமெங்கும் மாநிலமெங்கும் உள்ள தொழிலாளர்களிடம் நியாயம்
கோரி, தோழர்கள் விடுதலைக்கு அயராது பாடுபடுவார்கள். வீரர்களாய்
புகழுடன் சிறை மீண்டு விடுதலையாகி
வரும் தமது எட்டு தோழர்களை
வரவேற்க பிரிக்கால் தொழிலாளர்கள் தயாராகி வருகிறார்கள்.
தீர்ப்பின் தாக்கம் எப்படி இருக்கும் !
தீர்ப்பு,
அது வழங்கி உள்ள தண்டனையால்,
தொழிலாளர்களைப் போராடவிடாமல் தடுத்து விடும் எனக்
கருதுபவர்களுக்கு, அரசும் காவல்துறையும், அத்துமீறி
நுழைதல், தீங்கு விளைவித்தல், சொத்து
சேதம், சதி, கலகம், காயம்
கொடும் காயம் ஏற்படுத்துதல் எனப்
பல வழக்குகள் ஜோடிக்கும் என்ற பயத்தை உண்டாக்கும்
என எதிர்பார்க்கும் தீய சக்திகளுக்கு ஏஅய்சிசிடியு
சிபிஅய்(எம்எல்) தலைவர்களை சிறைக்கு
அனுப்ப முடியவில்லையே என்ற வருத்தம் உள்ளது.
எட்டு பேர் வழக்கை அவர்கள்
கவனித்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக,
அவர்களுக்குப் பல விதங்களில் பல
வழிகளில் பாதிப்புக்கள் உண்டாக்கலாம். தொழிலாளர்
மீது அவர்கள் உரிமைகள் மீது
மோடி அரசால் தொடுக்கப்பட்டுள்ள சட்டத்
திருத்த தாக்குதல்கள், தொழிலாளர் விரோத
நடவடிக்கைகள், 30க்கும் மேற்பட்ட மாருதி
தோழர்கள் ஆண்டுக் கணக்கில் சிறையில்
இருப்பது, இப்போது விரைவில் அவர்கள்
வழக்கிலும் தீர்ப்பு என்ற பின்னணியில் 03.12.2015 தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
முதலீட்டாளர்களுக்கு தரப்பட்டுள்ள சரியான சமிக்ஞை என,
மோடி ஜெயலலிதா அரசுகளால், இந்தத் தீர்ப்பு முன்னிறுத்தப்பட
எல்லா வாய்ப்பும் உள்ளது.
ஆனால்,
முதலாளித்துவம் நெருக்கடியில் மீள எடுக்கும் ஒவ்வொரு
முயற்சியிலும் மேலும் கூடுதல் நெருக்கடிக்குள்ளாவதுதான்
நடந்துள்ளது. சிகாகோவின் வேலை நிறுத்தப் போராட்டத்தில்
மே தினத்தியாகிகளுக்கு மரண தண்டனை வழங்கிய
நீதிமன்றம், சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு தண்டனை வழங்கிய நீதிமன்றம்,
பகத்சிங்கைத் தூக்கி லிட்ட நீதிமன்றம்,
நெல்சன் மண்டேலாவை சிறைக்கு அனுப்பிய நீதிமன்றம், பிடல் காஸ்ட்ரோவை விசாரித்த
நீதிமன்றம், இவர்கள் மீதெல்லாம் வழக்கு
ஜோடித்த அரசாங்க மற்றும் காவல்
அதிகாரிகள், மக்கள் மனதிலோ வரலாற்றிலோ
இடம் பெறுவதில்லை; மே தினம் தந்த
சிகாகோ தோழர்கள், சின்னியம்பாளையம் தியாகிகள், பகத்சிங், மண்டேலா, கேஸ்ட்ரோ தான் மக்கள் மனதிலும்
வரலாற்றிலும் இடம் பெற்றுள்ளனர்.
வரலாறு
பிரிக்கால் தோழர்களை நிச்சயம் விடுவிக்கும். எட்டு தோழர்களும் நிச்சயம்
புகழுடனே வீரர்களாய் சிறை மீள்வார்கள். இரட்டை
ஆயுள் தண்டனையால் தொழிலாளர் வர்க்கம் முடங்காது. மாறாக நிச்சயம் முன்னேறும்.