அமீர்கான்,
திப்புசுல்தான் மற்றும்
பாரிஸ் தாக்குதல்கள்
எஸ்.குமாரசாமி
மாட்டுக்கறி
- ஷாருக்கான் - அமீர்கான்
- பாகிஸ்தான்
அமீர்கான்,
பிகே என்ற அற்புதமான திரைப்படத்தைத்
தந்த பிரபல நடிகர். நாட்டு
நடப்புகளில், இசுலாமிய வெறுப்புத் தாக்குதல்களில், சகிப்புத்தன்மை மதச்சார்பின்மை மீதான தாக்குதல்களில், அமீர்கானும்
அவர் மனைவி கிரண் ராவும்
கவலை அடைந்தனர். தங்களது குழந்தைக்கு எதிர்கால
இந்தியா பாதுகாப்பானதாக இருக்குமா என எழுந்த சந்தேகத்தை,
அவர்கள் வெளிப்படுத்தினர். உடனே, அமீர்கான் பாகிஸ்தான்
செல்லட்டும் என இந்துத்வா சக்திகள்
கூறுகிறார்கள். சகிப்புத்தன்மையின்மை பற்றிய தமது கவலையைச்
சொன்ன ஷாருக்கானையும், பாகிஸ்தான் போகச் சொன்னார்கள். மாட்டுக்கறி
சாப்பிட விரும்புபவர்கள் பாகிஸ்தான் போக வேண்டும் என்கிறார்கள்.
கேரளாவுக்குப்
போனாலே மாட்டுக்கறி சாப்பிடலாம். கேரள பிஜேபி மாட்டுக்கறி
பற்றி வாயைத் திறப்பதில்லை. அங்கு
பெரும்பாலான மக்களின் சாதாரண உணவு மாட்டுக்கறி.
மாட்டுக்கறி சாப்பிட விரும்புபவர்களை, சகிப்பின்மை,
பன்மைத்துவ மீறல் பற்றி கேள்வி
எழுப்புபவர்களை, இந்துத்துவா சக்திகள், ஏன் சிங்கப்பூருக்கு, ஜப்பானுக்கு,
கொரியாவுக்கு, கனடாவுக்கு, அய்ரோப்பாவுக்கு, அய்க்கிய அமெரிக்காவுக்கு, பக்கத்தில் உள்ள மியான்மாருக்கு, பூட்டானுக்கு
ஓடுங்கள் என விரட்டுவதில்லை? ஏன்,
பாகிஸ்தான் போகுமாறு குறிப்பாகச் சொல்கிறார்கள்?
பாகிஸ்தான்
போகச் சொல்வதற்கு, ஒரு சிறப்புக் காரணம்
உள்ளது. சங் பரிவார், பிரிட்டிஷ்
ஆட்சி நடந்த போதே, அதற்கு
விசுவாசமாக இருந்த கூட்டம். பிரிட்டிஷ்
அரசுக்கு எதிராக எதுவும் செய்ய
மாட்டோம், விசுவாசமாக இருப்போம் என, சிறையிலிருந்து வெளியே
வர எழுதிக் கொடுத்த சாவர்க்கரின்
பாரம்பரியமே, சங் பரிவார் பாரம்பரியம்.
சங் பரிவார் மரபணுப்படி, தேசபக்தி
என்பது இந்து இந்தியா, அகண்ட
இந்து இந்தியா, பாகிஸ்தான் எதிர்ப்பு, இசுலாமியர் மீது வெறுப்பு என்பவையே.
மோடி பரிவாரத்திற்கு, அய்க்கிய அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியத்தை, அதன் தலையீடுகளை எதிர்ப்பதல்ல
தேசபக்தி; அவர்களோடு மோதுவதல்ல நாட்டுப்பற்று. சங் பரிவார், ஏகாதிபத்திய
விசுவாச அமைப்பு. அய்க்கிய அமெரிக்கா
தலைமையிலான ஏகாதிபத்திய உலகம் தொடுத்துள்ள, (இசுலாமிய)
பயங்கரவாத எதிர்ப்புப் போரில், இந்தியாவை இளைய
கூட்டாளியாக மாற்றுவதில், காங்கிரசைக் காட்டிலும் மோடி அரசாங்கம் கூடுதல்
வேகமும் அக்கறையும் காட்டுகிறது. இன்றைய உலகின் கொடிய
போர்களுக்கு முக்கிய காரணமான, இஸ்ரேலின்
ஜியானிச ஆக்கிரமிப்பு ஆதிக்கத்துக்கு, இந்திய அரசுகள் துணை
போகின்றன.
இந்தப்
பின்னணியில்தான், இந்தியாவில், இசுலாமியர்
மீது வெறுப்பைக் கக்கும், பாகிஸ்தான் மீது பகைமையை விசிறிவிடும்
கருத்துக்கள், எப்போதும் முன் வைக்கப்படுகின்றன. சொந்த
நாட்டு, இசுலாமியரை, இடதுசாரிகளை, அறிவாளிகளை, கலைஞர்களை நாட்டை விட்டு வெளியேறி
பாகிஸ்தான் போகச் சொல்லும் சங்
பரிவார், அந்நிய மூலதனத்தை மட்டும்
தலைவணங்கி இந்தியாவிற்கு வருமாறு கேட்டுக் கொள்கிறது.
தமிழ்நாட்டில், டாஸ்மாக்கை மூடச் சொன்னால், அது
தேச விரோதம். டாஸ்மாக் வேண்டும் என்றால் தேசபக்தி! இந்தியாவில்,
அந்நிய மூலதன அடிவருடிகள் தேசத்தைக்
காப்பவர்களாம்! பன்மைத்துவமும், மாற்றுக் கருத்துச் சொல்லும் சுதந்திரமும் கொண்ட ஜனநாயகம் வேண்டும்
என்று கேட்பவர்கள், பாகிஸ்தான் செல்ல வேண்டிய தேச
விரோதிகளாம்!
மோடி -
அமித் ஷா இரட்டையர் இந்த
நஞ்சை உமிழ்ந்ததால், பீகார் தேர்தலில் தோற்றார்கள்;
அவர்கள் சொன்னபடி பாகிஸ்தானில் இல்லாமல், இந்தியா எங்கும் பட்டாசு
வெடித்தது. சங் பரிவாருக்கு நாவடக்கம்
தேவை; சங் பரிவார் வாலைக்
கொஞ்சம் சுருட்டிக் கொள்வது நல்லது. டெல்லி,
பீகார் மக்கள் நேற்று செய்ததை,
நாளை இந்திய மக்கள் செய்வார்கள்.
திப்பு
சுல்தான்
அவுரங்கசீப்
வீதி, அப்துல் கலாம் வீதியானது.
அது, பீகார் தேர்தலுக்கு முன்பு.
சங் பரிவார் நல்ல முஸ்லிம்
தீய முஸ்லிம் விளையாட்டில் மற்றுமோர் காய் விளையாடியதால் நடந்தது.
எப்படியோ ஷாஜகான் கட்டிய தாஜ்
மகால் பற்றி இன்னமும் சங்
பரிவார் பேசாமல் இருக்கிறது. மொகலாய
ராஜ்யம் முஸ்லிம் ராஜ்யம், அவர்கள் நம்மவர்களும் அல்ல
நல்ல வர்களும் அல்ல என அவர்கள்
மீது சேற்றை இறைத்த சங்
பரிவார், இப்போது திப்பு சுல்தான்
மீது பாய்ந்துள்ளது.
தமிழ்நாட்டின்
காவல்துறைக்கு, சங் பரிவாருக்கு தமிழக
ஆட்சியாளர்களிடம் உள்ள அரசியல் கருத்தியல்
நெருக்கம் பற்றி, நன்கு தெரியும்.
அகில இந்திய மக்கள் மேடையின்
பிரச்சாரக் குழு உறுப்பினரான கே.எம்.ஷெரிப் தலைமையிலான
மக்கள் ஜனநாயகக் கட்சி, வேலூரில் நவம்பர்
20 அன்று, திப்புசுல்தான் பிறந்த தினத்தை அனுசரிக்கக்
கோரியபோது, தமிழகக் காவல்துறை அனுமதி
மறுத்தது. சென்னை உயர்நீதிமன்றம், ஜனவரி
9, 10 வாக்கில் நடத்திக் கொள்ள பல்வேறு நிபந்தனைகளுடன்
அனுமதி தந்துள்ளது. எந்த மதத்தையும் பற்றிப்
பேசக் கூடாது என்று சொன்ன
நீதிமன்றம், அரசாங்கத்தையோ, அரசாங்கத்தின் கொள்கைகளையோ விமர்சிக்கக் கூடாது என்றும் நிபந்தனைகள்
விதித்து அனுமதி தந்துள்ளதாக, 26.11.2015 தேதிய இந்து
நாளிதழ் செய்தி சொல்கிறது.
சமீப காலத்தில், வழக்கறிஞர்கள் உரிமைகள் உள்ளிட்ட ஜனநாயகத்தைக் காக்க, படாத பாடுபடும்
சென்னை உயர் நீதிமன்றம், திப்பு
சுல்தான் பிறந்த தினக் கூட்டத்தில்
ஒலி பெருக்கி முன் சும்மா நின்று
விட்டுப் போகலாமே தவிர எவரும்
எதுவும் பேசக் கூடாது என்றும்
ஒரு நிபந்தனை போட்டு, கருத்துச் சுதந்திரத்தைக்
காப்பாற்றி இருக்கலாம்! நல்ல வாய்ப்பை இழந்துவிட்டது.
அடுத்த முறை மேலான அதிர்ஷ்டம்
இருக்கட்டும் (ஆங்ற்ற்ங்ழ் ப்ன்ஸ்ரீந், ய்ங்ஷ்ற் ற்ண்ம்ங்). ரஜினிகாந்த்,
திப்புசுல்தான் படத்தில் நடிக்கக் கூடாது என சங்
பரிவார் மிரட்டி உள்ளது. அவர்களுக்கு,
மாநிலத்தில் தமக்கு ஆதரவான அரசு
நடக்கிறது என்ற துணிச்சல் உள்ளது.
கர்நாடகாவின்,
காங்கிரஸ் முதலமைச்சர் சித்தராமையா, இனி திப்பு சுல்தான்
பிறந்த நாள் ஒவ்வோர் ஆண்டும் அரசு விழாவாகக்
கொண்டாடப்படும் என்றார். பிரபல கன்னட இலக்கியவாதி
கிரிஷ் கர்நாட், பெங்களூரு கெம்பே கவுடா விமான
நிலையத்திற்கு திப்பு சுல்தான் பெயர்
வைத்திருக்கலாம் எனப் பேசினார். கிரிஷ்
கர்நாட்டிற்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
சங் பரிவாரங்கள், சித்தராமையா தலையை வைத்து கால்பந்து
ஆடப் போவதாக வெறிக் கூச்சல்
போட்டுள்ளன. திப்பு சுல்தான், தமிழர்
விரோதி, இந்துக்கள் விரோதி, குடகு மக்கள்
கேரள மக்கள் மீது கொடுங்கோன்மை
செலுத்தி இசுலாத்துக்கு மத மாற்றம் செய்த
கொடியவன் என சங் பரிவார்
கூப்பாடு போடுகிறது.
மாமன்னர்கள்,
அரசர்கள், சிற்றரசர்கள், அடிமை - பண்ணை அடிமை
சமூகங்களில், ஒடுக்குமுறை சுரண்டல் ஆட்சிகளுக்கே தலைமை தாங்கி இருப்பார்கள்.
ராஜராஜ சோழன், அசோகன், கட்டபொம்மன்
எல்லோர் கதையும் அப்படித்தான் இருக்க
முடியும். கட்டபொம்மன், திப்பு சுல்தான், அய்தராபாத்
நிஜாம், மராத்தா மன்னர்கள் காலத்தில்,
19, 20ஆம் நூற்றாண்டு முதலாளித்துவ காலத்திய தேச அரசுகளையோ, மதச்சார்பின்மையையோ
கற்பனை செய்து எதிர்பார்ப்பது, அப்படி
எதிர்பார்ப்பவர்களின் தவறே ஒழிய, அது
கட்டபொம்மன், திப்பு சுல்தான் ஆகியோரின்
தவறு ஆகாது.
நவீன விவசாய கருவிகளை நவீன
வரி வசூல் ஆட்சி முறையைப்
புகுத்திய திப்பு சுல்தான், அய்தராபாத்
நிஜாம் மற்றும் மராத்தா மன்னர்கள்
காலத்தைச் சேர்ந்த ஒரு மன்னன்.
1750ல் பிறந்த திப்பு சுல்தான்,
தமது 17 ஆவது வயதில், வெள்ளையரின்
கிழக்கிந்திய கம்பெனிக்கு எதிரான போரில் பங்கேற்றவர்.
தந்தை அய்தர் அலி இறந்த
பிறகு, 1782ல் மைசூர் ராஜ்யத்தின்
மன்னர் ஆனவர். இவரும், அரசியல்
சதுரங்கத்தில், வெள்ளையர்களுக்கு எதிரான காய்களை நகர்த்திய
ஒரு மன்னர். இந்து மராத்திய
மன்னர்களும், இசுலாமிய அய்தராபாத் நிஜாமும், அந்நிய கிழக்கிந்திய கம்பெனியுடன்
கை கோர்த்த போது, இவர்கள்
அனைவரையும் எதிர்த்துப் போரிட்டவர் திப்பு சுல்தான். தேவைக்கேற்ப
பிரஞ்சுக்காரர்களுடன் கூட்டு சேர்ந்தவர். குடகு
மலபார் பகுதிகளுக்கு தம் ஆட்சியை விரிவுபடுத்தியபோது,
அங்கே திப்பு சுல்தானும் ஓர்
ஆக்கிமிப்பு அரசனாகவே செயல்பட்டதும், அதன் ஒரு பகுதியாக
மத மாற்றத்தில் ஈடுபட்டதும் நடந்துள்ளன என, குடகு மக்கள்
மலபார் மக்கள் நினைக்க, நிச்சயம்
நியாயம் உண்டு. ஆனால், திப்பு
சுல்தான் தன் மைசூர் ராஜ்யத்தின்
இந்துக்களை மத மாற்றம் செய்யவில்லை
என்பதும், மராத்தா மன்னர்கள் தாக்கி
சூறையாடிய சிருங்கேரி சங்கராச்சார்யா மடத்திற்கு திப்பு சுல்தான் மான்யங்கள்
தந்ததும், நஞ்சன் கூடு காஞ்சி
கலாலே இந்து ஆலயங்களுக்கு நிதி
வழங்கியதும் கூட, மறுக்கவோ மறைக்கவோ
முடியாத வரலாறுதானே! திப்பு சுல்தான் ஆங்கிலேயருக்கு
எதிரான நான்கு போர்களில் பங்கேற்றவர்,
ஆங்கிலேய கவர்னர் ஜெனரல்களான காரன்
வாலிஸ், வெல்லஸ்லி பிரபுக்களின் தூக்கத்தை தொலைக்க வைத்தவர், ஆங்கிலேயர்
தாக்குதலிலிருந்து தமது தலைநகரான ஸ்ரீரங்கப்பட்டனத்தைக்
காக்கும் போரில் உயிர் துறந்தார்
என்ற வரலாற்றை எவரும் மாற்ற முடியாது.
வானம் பொழிகிறது, பூமி நனைகிறது உனக்கேன்
கட்ட வேண்டும் கிஸ்தி எனச் சொல்லி
ஆங்கிலேய கிழக்கிந்திய கம்பெனியை எதிர்த்த கட்டபொம்மனை, மக்கள் தேச பக்தனாகப்
பார்க்கிறார்கள். பல ஆண்டுகள், பல
இடங்களில், வெள்ளையருக்கு எதிராகப் பல போர்களை
நடத்திய திப்பு சுல்தானை, தமிழ்நாட்டு
மக்களும் கர்நாடக மக்களும் தேசபக்த
மாவீரனாகவே பார்ப்பார்கள். சங் பரிவாரின் இந்துத்துவா
காமாலைக் கண் பார்வையை, நோய்
கொண்ட பார்வையை, மதவெறி நஞ்சை நோயைத்
திணிக்கும் சங் பரிவார் முயற்சிகளை,
தமிழ்நாட்டு மக்களும் கர்நாடகா மக்களும் நிச்சயம் முறியடிப்பார்கள்.
பாரீஸ்
தாக்குதல்கள்
நவம்பர்
13, 14, 2015ல் பாரீஸ் தாக்கப்பட்டது. கலையரங்கத்தில்,
உணவு விடுதியில், கால்பந்து மைதானத்தில் நடந்த கொடூரமான தற்கொலை
குண்டு வெடிப்புகளிலும் துப்பாக்கிச் சூடுகளிலும், 130 பேர் கொலையானார்கள். 400 பேர்
காயமடைந்தனர். தாக்குதலுக்கு, இராக் சிரியா இசுலாமிய
அரசு (அய்எஸ்அய்எஸ்) பொறுப்பேற்றது. இந்த தாக்குதல், வன்மையான
கண்டனத்துக்குரியது.
ஆனால்,
இந்தத் தாக்குதலை மட்டும் தனித்து கண்டனம்
செய்து, இதே கால கட்டத்தில்
நடந்த மற்ற தாக்குதல் நிகழ்ச்சிகளைக்
காணத் தவறுவதோ, அய்எஸ்அய்எஸ் உதயமாக யார் காரணம்
எனக் காணத் தவறுவதோ, ஏகாதிபத்திய
கருத்துக்களுக்கு இரையாவதாக முடிந்து விடும். (சமகால முதலாளித்துவம், பண்டங்களையும்
சேவைகளையும் போல, பிரும்மாண்டமாய் கருத்துக்களையும்
மறு உற்பத்தி செய்கிறது).
செப்டம்பர்
அக்டோபர் நவம்பர் மாதங்களில் அய்எஸ்அய்எஸ்,
தலிபான், அல்கொய்தா, பொக்கோ ஹராம் ஆகிய
அமைப்புகள், ஆப்பிரிக்காவிலும் ஆசியாவிலும் பல தாக்குதல்களை நடத்தி
உள்ளன. எகிப்தில் ரஷ்ய பயணிகள் விமானம்
மீதான தாக்குதலில் 224 பேர் மடிந்தனர். துருக்கியின்
அங்காராவில் நடந்த பேரணியில் 102 பேர்
கொல்லப்பட்டனர். பெய்ரூட்டில் 32 பேர் கொல்லப்பட்டனர். இப்போது
சில தினங்கள் முன்பு மாலியின் தலைநகரான
பமாகோவில் ஹோட்டல் மீதான தாக்குதலில்
20 பேர் பலியாகி உள்ளனர். 100க்கும்
மேற்பட்டவர்கள் பிணைக் கைதி களாகி
உள்ளனர். பாகிஸ்தானில், வாரா வாரம் கொத்து
கொத்தாக ஷியா முஸ்லிம்கள் கொல்லப்படுகிறார்கள்.
ஆப்பிரிக்கா கொலைக் களமாக மாறி
வருகிறது. அய்எஸ்அய்எஸ், தலிபான், அல்கொய்தா, பொக்கோ ஹராம் மற்றும்
இவர்களின் கூட்டாளிகள், அய்ரோப்பியர்களை அய்க்கிய அமெரிக்கர்களைக் காட்டிலும், இசுலாமிய நாடுகளைச் சேர்ந்தவர்களையே அதிகம் கொன்றுள்ளார்கள் என்ற
விவரத்தை, வசதியாக மறைக்கப் பார்ப்பது
அவ்வளவு சுலபம் அல்ல.
வன்முறை
படுகொலைகள் என்பது, இசுலாம் மதத்தின்
பிரிக்க முடியாத ஒரு கலாச்சாரப்
பகுதி எனச் சொல்வது, அபாயகரமான
குற்றச் செயலாகும். போப்பாண்டவர், நவதாராளவாதத்தை சாத்தானின் சாணி(ஈன்ய்ஞ் ர்ச்
ற்ட்ங் க்ங்ஸ்ண்ப்) என்கிறார். நவதாராளவாதத்தை முன் செலுத்தும் அய்ரோப்பா,
அய்க்கிய அமெரிக்கா, கனடா நாடுகள் கிறிஸ்துவ
நாடுகள் என்பதாலேயே, நவதாராளவாத முதலாளித்துவத்தை,
கிறிஸ்துவ மதக் கலாச்சாரத்தின் ஒரு
பகுதி எனச் சொல்ல முடியுமா?
இல்லாத
பேரழிவு ஆயுதங்கள் இருந்ததாகச் சொல்லி ஜார்ஜ் புஷ்ஷோடு
சேர்ந்து தாம் இராக் மீது
போர் தொடுக்க அன்று துணை
போனதால்தான், இன்று அய்எஸ் அய்எஸ்
உருவானது எனப் புலம்புகிறார், முன்னாள்
பிரிட்டிஷ் பிரதமர் டோனி பிளேர்.
உலகம் இன்று ஏகாதிபத்திய தலையீடுகள்
மற்றும் அதன் விளைவான பயங்கரவாதம்,
திரும்பவும் மூர்க்கமான தலையீடு திரும்பவும் பயங்கரவாதம்
என்ற ஆபத்தான சுழலேணியைச் சந்திக்கிறது. (ஏகாதிபத்தியம்)
கிணறு வெட்ட, (பயங்கரவாத) பூதம்
புறப்பட்டது மறக்கவோ மறுக்கவோ மறைக்கவோ
முடியாது. அல்கொய்தா தலிபான் அமைப்புக்கள் அய்க்கிய
அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்திய உலகால் ஊட்டி வளர்க்கப்பட்ட
அமைப்புக்களாகும். அய்க்கிய அமெரிக்காவின் கூட்டாளிகளான சவுதி அரேபியா க்வெத்தார்
துருக்கி ஆகியவைதான் சிரியாவில் ஆசாதுக்கு எதிராகச் சண்டையிடும்
பயங்கரவாத அமைப்புக்களுக்கு நிதியும் ஆயுதங்களும் தருகின்றன.
அய்க்கிய
அமெரிக்கா தொடுத்த (இசுலாமிய) பயங்கரவாத எதிர்ப்புப் போரில், இது வரை
பாகிஸ்தான் ஆப்கனிஸ்தான் ஈராக்கில் மட்டும் 40 லட்சம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்த போரின் விளைவாக, பாகிஸ்தானில்
ஜோர்டானில் துருக்கியில் பல லட்சம் அகதிகள்
நிரம்பி வழிகின்றனர். அவர்களின் ஒரு சிறு பகுதிதான்
அய்ரோப்பா செல்லும் முயற்சியில் கடலிலும், அய்ரோப்பாவுக்குள் கண்டெய்னர்களிலும் செத்து மடிகிறார்கள்.
பிரான்ஸ்
அதிபர் பிராங்குவா ஹாலண்டே, பயங்கரவாதத்துக்கு எதிராக ஈவிரக்கமற்ற போர்
என கொக்கரிக்கிறார். அய்ரோப்பாவில் அகதிகளுக்கு திறந்து வந்த கதவுகள்
மூடத் தயாராகின்றன. இசுலாமிய வெறுப்பும் இனவெறியும் விசிறி விடப்படுகிறது. அய்க்கிய
அமெரிக்காவில், ராணுவ தளவாட மற்றும்
ஆயுதங்கள் தயாரிப்பு தொழில்களின் பங்கு மதிப்பு சமீபத்தில்
வெகுவாக உயர்ந்து விட்டது. அய்க்கிய அமெரிக்காவின் குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியிட
தயாராகி வரும் குயடிரசுக் கட்சி
வேட்பாளர் டொனால்ட் ட்ரம்ப், தான் வெற்றி பெற்றால்,
இசுலாமியர்களைத் தனியாகப் பட்டியலிட்டு அடையாளம் காண ஏற்பாடு செய்யப்படும்
என்கிறார். இதனை, வதை முகாம்களில்
பல லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிப்பதற்கு முன்பாக,
ஹிட்லர் அவர்கள் கட்டாயமாக தாம்
யூதர்கள் எனக் காட்டும் அடையாளங்களை
அணியச் சொன்னதுடன் பொருத்திக் காண வேண்டியுள்ளது.
ஒபாமா இப்போதும் இசுலாமியர் மீதான வெறுப்புக்குத் தீனி
போடுகிறார். ‘உலகெங்கும் உள்ள இசுலாமியர்கள் அய்எஸ்அய்எஸ்
நடவடிக்கைகளை மன்னிக்க மாட்டார்கள் எனக் கருத வாய்ப்புள்ளது;
ஆனால், அவர்கள் இன்னமும் சில
தீவிரவாத சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்குவதில்லை; அவர்கள், இசுலாமியர்களை ஒடுக்கப்பட்டவர்களாகக் கருதும் தர்க்கங்களையும் கேள்விக்குள்ளாக்குவதில்லை’
என்கிறார். ஒபாமா கூற்றுப்படி, இசுலாமியர்கள்
ஒடுக்கப்படுவதில்லை. அவர்கள் தம்மை ஒடுக்கப்பட்டவர்களாகக்
கருதக் கூடாது. அவர்கள் தீவிரவாதச்
சிந்தனைகளைக் கேள்விக்குள்ளாக்காமல், அவை பலம் பெற
துணை போகிறார்கள்.
பாரிஸ்
தாக்குதல்களும் ஒபாமா கருத்துரையும், கருப்பு
உயிர்களுக்கும் பொருள் உண்டு (ஆப்ஹஸ்ரீந்
ப்ண்ஸ்ங்ள் ம்ஹற்ற்ங்ழ்) இயக்கத்தால் பின்னுக்குத் தள்ளப்பட்ட நிறவெறி கொண்ட காவல்துறை,
அய்க்கிய அமெரிக்காவில், மீண்டும், உள்நாட்டுப் பாதுகாப்பு என்ற போர்வையில் வெறியாட்டத்தைப்
போடும் வாய்ப்பை அதிகரித்துள்ளன.
ஒபாமா,
பிராங்குவா ஹாலண்டே, டேவிட் கேமரூன், நரேந்திர
மோடி போன்றோர், ஒவ்வோர் இசுலாமியரும் ஓர்
உள்ளார்ந்த பயங்கரவாதியே என்றும், தாம் பயங்கரவாதிகள் இல்லை
என்பதை நிரூபிக்க வேண்டியது ஒவ்வோர் இசுலாமியரின் கடமை
என்றும் சொல்கிறார்கள்.
ஹாலண்டே
போன்றோருக்கு, பிரான்சு நாட்டின் டூலே நகர் ஆர்ப்பாட்டத்தில்
உயர்த்திப் பிடிக்கப்பட்ட பதாகைகள் தக்க பதிலடி தருகின்றன.
‘போர்கள் அவர்களுடையவை, மரணங்கள் நம்முடையவை’ ‘சுதந்திரம் வேண்டும் அமைதி வேண்டும்’, ‘(அய்க்கிய
அமெரிக்க அய்ரோப்பிய) கூட்டணி காட்டுமிராண்டித்தனம் வேண்டவே வேண்டாம்’
‘அவசர நிலைக்கு
எதிரான போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம்’
டூலே நகர ஆர்ப்பாட்டக்காரர்களுடன், உலகமே கை
கோர்க்க வேண்டும்.
ஏழாவது
ஊதியக் குழு பரிந்துரைகள்:
சில எதிர்ப்புக் கூக்குரல்களும் உண்மைகளும்
ஓரளவாவது
முகத்தைக் காப்பாற்றிக் கொள்ள ஆட்சி முடிகிற
நேரத்தில் அய்முகூ அரசாங்கம் அவசர
அவசரமாக அமைத்த ஏழாவது ஊதிய
ஆணையம் நவம்பர் 19 அன்று தனது பரிந்துரைகளை
முன்வைத்துள்ளது. 300% உயர்வு அநியாயம், நாடு
பொருளாதார சிக்கல்களை சந்திக்கும் நேரம் இந்த உயர்வு
கூடாது, வேலை செய்யாத அரசு
ஊழியர்களுக்கு எதற்கு இந்த உயர்வு,
இந்தச் செலவை வேறு நலத்
திட்டங்களுக்குத் திருப்பி விடலாம் என வழக்கம்
போல் குட்டி முதலாளித்துவக் கருத்துகள்
குதிக்கின்றன.
மத்திய
அரசுக்கு ரூ.1,02,100 கோடி ஆண்டு செலவு
என்று சொல்லப்படுகிறது. இது உண்மையல்ல. பொது
நிதிநிலை அறிக்கையில் ரூ.73,650 கோடியும் ரயில்வே நிதிநிலை அறிக்கையில்
ரூ.28,450 கோடியும் செலவாகும் என்று பரிந்துரை ஓர்
அட்டவணை போட்டு பிரித்துக் கணக்கு
காட்டுகிறது. அப்படியே ரூ.1,02,100 கோடியாக இருந்தாலும் அது
33.02 லட்சம் பேருக்கு ஓர் ஆண்டில் தரப்படவுள்ள
தொகை. மிகச்சில தொழில் நிறுவனங்களுக்கு ஓராண்டில்
ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல்
வர வேண்டிய வருவாயை விட்டுத்
தருகிற அரசு நாட்டுக்கு வருமானம்
உருவாக்குகிற 33.02 லட்சம் பேருக்கு இந்தத்
தொகையை தருவதில் அநியாயம் என்ன இருக்க முடியும்?
இந்தியாவில்
1 லட்சம் பேருக்கு 139 மத்திய அரசு ஊழியர்கள்தான்
இருக்கின்றனர். அய்க்கிய அமெரிக்காவில் இந்த எண்ணிக்கை 668. 01.01.2014 நிலவரப்படி ஏழரை
லட்சம் காலிப் பணியிடங்கள் உள்ளன.
(அத்தியாயம் 3, இணைப்பு 1). இந்த ஏழரை லட்சம்
பேர் வேலையையும் சேர்த்துத்தான் இப்போதுள்ள 33.02 லட்சம் மத்திய அரசு
ஊழியர்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். (இதற்காக கூடுதல்
ஊதியம் ஏதும் தரப்படுவதில்லை).
01.01.2014 நிலவரப்படி
51.96 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். இவர்கள் ஏற்கனவே நாட்டின்
உள்கட்டுமானத்தைக் கட்டியெழுப்புவதில் பெரும் பங்காற்றிவிட்டு ஓய்வு
எடுப்பவர்கள். இவர்கள் அனைவருக்குமாகச் சேர்த்துத்தான்,
கிட்டத்தட்ட 85 லட்சம் பேருக்கு ரூ.1,02,100
கோடி செலவாகப் போகிறது. சராசரியாக ஒருவருக்கு ஆண்டுக்கு ரூ.1,20,117. மாதம் ரூ.10,000. நடிப்பு
சுதேசிகள் இதை ஒரு செலவு
என்று கூச்சல் போடுகிறார்கள்.
ஓய்வூதியதாரர்களை
கணக்கில் கொள்ளாமல், ஊதியம் பெறுபவர்களை மட்டும்
கணக்கில் கொண்டாலும் 33.02 லட்சம் ஊழியர்களுக்கு ஏழாவது
ஊதியக் குழு பரிந்துரைப்பது ரூ.68,400
கோடிதான். இதன்படி, சராசரியாக ஓர் ஊழியர் ஓர்
ஆண்டில் பெறுவது ரூ.2,07,147. இது
மாதம் ரூ.17,262 மட்டுமே. இது அதிகம்
என்று எப்படிச் சொல்ல முடியும்? 899 பக்க
அறிக்கையில் 33.02 லட்சம் ஊழியர்கள் சேர்ந்து
உருவாக்கும் செல்வத்தின் மதிப்பு என்ன என்று
எங்கும் சொல்லவில்லை.
உழைப்பவர்
எவரானலும் குறைந்தபட்ச ஊதியம் மாதம் ரூ.20,000
என்ற தொழிற்சங்கங்களின் குரலை உதாசீனப்படுத்தியிருக்கிற ஊதியக் குழு
மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச
ஊதியமாக மாதம் ரூ.18,000 என
பரிந்துரைத்துள்ளது. இந்த ஊதியம்தான் அதிகம்
என்று கூக்குரல் எழுப்பப்படுகிறது. இந்த ஊதியமும் நான்கு
பேர் இருக்கிற குடும்பத்தில் உண்ண, உடுக்க, இருக்க
என்ன தேவையோ அதற்கும் கல்வி,
மருத்துவம், திருவிழா, திருமணம் போன்ற செலவுகளுக்கும் மட்டும்தான்.
இதற்கு மேல் அந்த ஊழியர்,
தன்னை பெற்று படாதபாடு பட்டு
வளர்த்து ஓய்ந்துபோய்விட்ட பெற்றோரை கவனித்துக் கொள்ளக் கூட அந்த
ஊதிய நிர்ணயிப்பில் இடமில்லை. மத்திய அரசின் ஆணையம்
பரிந்துரைத்துள்ள படி உடன்பிறந்தோர் யாரையும்
ஓர் அரசு ஊழியர் பராமரிக்க
முடியாது. இந்த அளவில் ஊதியத்தை
நிர்ணயித்ததற்கு 40 பக்கத்துக்கும் மேல் அடிப்படை விளக்கம்
தருகிறது அறிக்கை.
தொழிலாளி
கூலியுழைப்பை மறுஉற்பத்தி செய்து கொள்ள மட்டுமே
கூலி தரப்படுகிறது என்று மார்க்சியம் சொல்கிறது.
மார்க்சியத்தை கம்யூனிஸ்டுகளை வெறுப்பவர்கள் கூட்டம் முன்வைத்துள்ள பரிந்துரை
மார்க்சியம் சொல்வதையே மீண்டும் மெய்ப்பித்துள்ளது. ஏழாவது ஊதிய ஆணையம்
பரிந்துரைத்துள்ள குறைந்தபட்ச ஊதியமான ரூ.18,000 என்பதை
நியாயப்படுத்த அது பின்வரும் விளக்கம்
சொல்கிறது.
ஒரு குடும்பத்தின் ஆண், பெண், 2 குழந்தைகள்
3 யூனிட்டுகள் என்று கணக்கிடப்படுகிறது. இந்த
மூன்று யூனிட்டுகளுக்கு மாதம் ஒன்றுக்கு அரிசி
அல்லது கோதுமைக்கு மாதத்துக்கு 42.75 கிலோவுக்கு ரூ.1108.30 என்று செலவு என்று
சொல்லப்படுகிறது. இவர்கள் வெளிச்சந்தையில் அரிசி
அல்லது கோதுமை வாங்க வேண்டும்.
குறைந்தபட்சம் கிலோ ரூ.40 விற்கிற
அரிசிதான் உண்ணத் தகுந்தது. 43 கிலோவுக்கு
இந்த வகையில் ரூ.1720 ஆகும்.
கிட்டத்தட்ட ரூ.600 இங்கு வெட்டப்பட்டு
விடுகிறது. (மத்திய அரசு ஊழியர்
குடும்பத்தில் நாளொன்றுக்கு ஒருவர் 350 கிராம் அரிசியோ கோதுமையோ
உட்கொண்டால் போதுமென ஏழாவது ஊதியக்
குழு முடிவு செய்கிறது).
மாதமொன்றுக்கு
எல்லாவிதமான பருப்பும் சேர்த்து ஏழேகால் கிலோ பருப்புக்கு
ரூ.704.44 என்று சொல்லப்படுகிறது. ஏ.கே.மாத்தூர் எந்த
கடையில் இந்த விலையில் பருப்பு
வாங்குகிறார் என்று அவர் மத்திய
அரசு ஊழியர்களுக்குச் சொல்ல வேண்டும். இங்கு
இன்னும் ஒரு ரூ.700 வெட்டப்படுகிறது.
காய்கறிகளுக்கு
மாதமொன்றுக்கு கிட்டத்தட்ட 27 கிலோவுக்கு ஆகும் செலவு பரிந்துரை
சொல்வதுபடி ரூ.1,176.55. காய்கறிகள் சராசரியாக கிலோ ரூ.50 என்று
எடுத்துக் கொண்டால் கூட 27 கிலோ காய்கறிகளுக்கு
ரூ.1,350 வேண்டும். இந்தக் கணக்குப்படி 4 பேர்
கொண்ட ஒரு குடும்பம் நாளொன்றுக்கு
1 கிலோவுக்கும் குறைவான அளவு காய்கறிகள்தான்
உண்ண முடியும்.
இன்னும்
பழங்கள், பால், சர்க்கரை, மீன்,
எண்ணெய், முட்டை, கறி, சோப்புத்தூள்,
துணிகள் என இன்னும் 9 வகைகளில்
மாதம் ஒன்றுக்கு நான்கு பேர் கொண்ட
குடும்பத்துக்கு ஆகும் மொத்த செலவு
ரூ.6,228.70 என்கிறது அறிக்கை. துணிவகையில் மாதமொன்றுக்கு 4 பேர் உள்ள குடும்பத்துக்கு
5.5 மீட்டர் போதும் என்கிறது அறிக்கை.
ஒரு சேலையின் நீளம் 5.5 மீட்டர். சற்று பருமனான தேகத்துக்கு
6 மீட்டர் வேண்டும். குடும்பத்தில் மற்றவர்கள் உடுத்தத் தேவையில்லையா? பிரதமர் ரூ.10 லட்சத்துக்கு
சூட் போடும்போது மத்திய அரசு ஊழியருக்கு
தர வேண்டியதை குறைத்தால்தான் அந்தச் செலவை ஈடு
செய்ய முடியுமா?
மொத்தத்தில்
உண்ணும் வகை, உடுக்கும் வகைக்கு
என குறைந்தபட்சமாக ரூ.9,217.99 பரிந்துரைக்கப்படுகிறது. நான்கு பேர் கொண்ட
குடும்பத்துக்கு இன்று இது சாத்தியமே
இல்லை. இன்றைய விலைவாசி நிலைமைகளை
குழு கணக்கில் கொள்ளவே இல்லை.
வீட்டு
வசதிக்கு சொல்லப்பட்டுள்ள தொகை மாதம் ரூ.524.07.
இந்த வாடகையில் இன்றைய நிலைமைகளில் கிராமப்புறங்களில்
உள்ள மாட்டுக் கொட்டகையில் கூட மத்திய அரசு
ஊழியர் குடும்பத்துக்கு இடம் கிடைக்காது. வங்கியில்
கடன் வாங்கி வீடு கட்டி
மாதத் தவணை செலுத்துபவர்கள் குறைந்தபட்சம்
மாதம் ரூ.25,000 வட்டியும் அசலுமாக செலுத்த வேண்டிய
நிலை உள்ளது.
எரிபொருள்,
மின்சாரம், தண்ணீர், திருமணச் செலவு, பொழுதுபோக்கு, பண்டிகைகள்,
திறன் வளர்ப்பு ஆகியவை பிற செலவு
வகைகள். இவற்றுக்கு ரூ.7,726.85. அருண் ஜெட்லி வந்து
மாதாந்திர குடும்ப பட்ஜெட் போட்டால்
கூட இது போதாது.
இந்த விதத்தில் கணக்கிடப்பட்டு அந்த ரூ.18,000 எட்டப்பட்டுள்ளது.
இந்தக் கணக்கில் கல்வியும், மருத்துவமும் சேர்க்கப்படவில்லை. கல்விக்கும் மருத்துவத்துக்கும்தான் மக்கள் பெரிய அளவில்
கடன் வாங்குகிறார்கள். அரசு சொல்கிற கணக்குப்படியே
சற்றும் நியாயம் வழங்காத ஊதிய
விகிதத்தையே ஏழாவது ஊதிய ஆணையம்
பரிந்துரைத்துள்ளது.
இந்த ஊதிய உயர்வு அநியாயம்
என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொள்ளும் குறுமதியாளர்கள், ஆறாவது ஊதியக் குழு
பரிந்துரைகளால் மொத்த உள்நாட்டு உற்பத்தியில்
0.77% செலவானது, இப்போது 0.65%தான் செலவாகும் என்றும்
அறிக்கை சொல்வதையும் கவனிக்க வேண்டும். 2007 - 2008 முதல் 2012 - 2013 வரை,
மத்திய அரசு ஊழியர் ஊதியத்துக்கு
ஆகும் செலவு, 2008 - 2009ல் 1.42%, 2009 - 2010ல் 1.66% என்பது தவிர, மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் ஒவ்வோர் ஆண்டும் குறைந்து
வருவதையும் அட்டவணை 9ல் அறிக்கை எடுத்துக்
காட்டுகிறது. மட்டுமின்றி இது வரை பரிந்துரைக்கப்பட்டதில்
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைக்கும்
உயர்வு மிகக் குறைவு. அது
14.29% என்று அறிக்கையின் பத்தி 5.1.27 தெளிவாகச் சொல்கிறது.
இதற்கு
மேல் அகவிலைப்படி, வீட்டு வாடகைப் படி,
போக்குவரத்துப் படி என எந்த
படி இருந்தாலும் மத்திய அரசு ஊழியர்
குடும்பம் சமாளித்து நிற்பது கடினமானதுதான். இந்த
அகவிலைப் படியின் தலைக்கு மேல்
ஒரு கத்தி தொங்கவிடப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில், நியுசிலாந்தில்
இருப்பதுபோல், குறிப்பிட்ட கால அளவில் ஊதிய
மாற்றம் செய்ய நிரந்தர ஊதிய
மாற்ற ஆணையம் அமைக்கப்படலாம் என்றும்
இது இந்தியாவில் ஒவ்வோர் ஆண்டும் வேலை
மதிப்பீடு, அதே போன்ற வேலைகளுக்கு
பிற நிறுவனங்களில் தரப்படுகிற ஊதியம் தொடர்பான சந்தை
நிலைமைகள், நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார நிலை என நிகழ்கிற
மாற்றங்களுக்கு ஏற்ப ஊதியத்தை மாற்றியமைக்கலாம்
என்றும் ஒவ்வோர் ஆண்டும் இந்த
நடைமுறை பின்பற்றப்படும்போது அகவிலைப் படி என்பதே தேவையில்லை,
அதை நீக்கிவிடலாம் என்றும் பரிந்துரைக்கிறது.
வீட்டு
வாடகைப்படி தற்போதுள்ள 30%, 20%, 10% என்பதில் இருந்து 24%, 16%, 8% என குறைக்கப்படுகிறது. இது
அகவிலைப்படி 50%அய் தாண்டும்போது 27%, 18%, 9% எனவும், அகவிலைப்படி
100%அய் தாண்டும்போது 30%, 20%, 10% எனவும் மாறும் என
பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் அகவிலைப்படி 10% வரை
உயரும் என்று கணக்கிட்டால், கிட்டத்தட்ட
முதல் அய்ந்து ஆண்டுகள் 24%, 16%, 8% எனவும் அடுத்த
அய்ந்து ஆண்டுகள் 27%, 18%, 9% எனவும், 10 ஆண்டுகள் கடக்கும் போது, அதாவது அடுத்த
ஊதியக் குழுவுக்கான காலம் நெருங்கும்போது 30%, 20%, 10% எனவும் மாறும். மொத்தத்தில்,
ஊழியர்கள் பெறும் வீட்டு வாடகைப்
படி 2% முதல் 6% வரை குறைக்கப்பட்டுவிடும்.
குறைந்தபட்ச
ஊதியத்துக்கும் அதிகபட்ச ஊதியத்துக்கும் (ரூ.2.50 லட்சம்) இடையில்
உள்ள மிகப்பெரிய இடைவெளி ஏற்புடையதல்ல.
வருடாந்திர ஊதிய உயர்வு 3% என்று
நிர்ணயிக்கப்படும்போது குறைவான ஊதியம் பெறுபவர்களுக்கு
இந்த இடைவெளி இன்னும் பாரபட்சமான
விளைவுகளை ஏற்படுத்தும்.
பணிஉயர்வுக்கு
தகுதி பெற நன்று என்பதாக
இப்போது இருக்கும் செயல்பாட்டு மதிப்பீடு மிக நன்று என்று
இருக்க வேண்டும். செயல்பாட்டு வரையறைகளை எட்ட முடியாத வர்களுக்கு
20 ஆண்டுகளுக்குப் பிறகு வருடாந்திர ஊதிய
உயர்வு இருக்காது. அவர்களுக்கு விருப்ப ஓய்வில் செல்லும்
உரிமை உண்டு. அந்த வரையறைகளை
நிர்ணயிக்க தேர்வுகள் நடத்தலாம் என்றும் பரிந்துரைக்கப்படுகிறது.
பல்வேறு
விதமான ஊழியர்களுக்கு அவர்களின் வேலைகளின் சிறப்பு தன்மைகளுக்கு ஏற்பவும்
பொதுவாக அனைத்து மத்திய அரசு
ஊழியர்களுக்கும் வழங்கப்பட்டு வந்த 196 படிகளில் 95 படிகள் மட்டுமே தக்கவைக்கப்பட்டுள்ளன.
52 படிகள் நீக்கப்பட்டு, மற்றவை வேறு படிகளுடன்
சேர்க்கப்பட்டுள்ளன.
பணிக்கொடை
உச்சவரம்பு தற்போதைய ரூ.10 லட்சத்தில் இருந்து
ரூ.20 லட்சமாக உயர்த்தப்படுகிறது. இதனால்
உயரதிகாரிகளே பெரும்பயன் பெறக் கூடும்.
மொத்தமுள்ள
33.02 லட்சம் ஊழியர்களில் 9.48 லட்சம் பேர் 50 முதல்
60 வயதுக்காரர்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் இன்னும் சில ஆண்டுகளில்
பணி மூப்பு அடைந்துவிடு வார்கள்.
அவர்கள் வேலையையும் சேர்த்து இருப்பவர்கள் செய்வார்கள். ஏழரை லட்சம் காலிப்
பணியிடங்களின் வேலையை ஏற்கனவே சேர்த்து
செய்துகொண்டிருக்கும் மத்திய அரசு ஊழியர்களுக்கு,
அடிப்படை ஊதியம் முதல் படிகள்
வரை உயர்வு தருகிற பரிந்துரையாக
இது இல்லை. மத்திய அரசு
ஊழியர்கள் தங்கள் அதிருப்தியை தெரிவிக்க
போராட்டங்கள் திட்டமிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
ஏழாவது
ஊதியக் குழுவின் பரிந்துரை அதிகம், அநியாயம் என்று
பேசுபவர்கள் பெரும்பாலும் பாஜகவுக்கு ஆதரவாக, அதன் பொரு
ளாதார கொள்கைகளுக்கு ஆதரவாகப் பேசுபவர்கள். ஆறாவது ஊதியக் குழு
20% உயர்வு பரிந்துரைத்தது. கால தாமதம், விலை
உயர்வு ஆகியவற்றால், அமலாக்கத்தின்போது 40% உயர்வு தரப்பட்டது. இன்றைய
தொழிலாளர் விரோத பாஜக அரசு,
ஊழியர்களின் கோரிக் கைகளை புறந்தள்ளி,
ஏழாவது ஊதியக் குழுவின் பரிந்துரையை
அப்படியே ஏற்றுக்கொண் டாலும் கூட வியப்புக்குரியதாகவே
இருக்கும். அரசு ஊழியர்களுக்கு ஊதியம்
தரவே 98% நிதி செலவாகி விடுகிறது
என்று சொல்லி ஆட்சியை இழந்தவர்
ஜெயலலிதா. 2016ல் பாஜக அய்ந்து
மாநிலங்களில் தேர்தல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. டில்லியிலும் பீகாரிலும் விட்டதைப் பிடிக்க வேண்டியிருக்கிறது. ஜெயலலிதாவின் 2006 பாஜகவின் 2016க்கு பாடங்கள் தருமா
என்று பார்க்க வேண்டும்.