COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, December 2, 2015

மழை பாதிப்பு: குற்றவாளிக் கூண்டில் ஜெயலலிதா அரசு

ஜி.ரமேஷ்

மழை பாதிப்புக்களை முதலமைச்சர் பார்வையிடவில்லை என்று எதிர்க்கட்சிகள் சொன்ன பிறகுதான் ஜெயலலிதா ஆர்.கே.நகருக்கு வந்தார். வெள்ளத்தால் வேதனையில் வாடுபவர்களை, வாக்காளப் பெருமக்களே என்று அழைத்தார். போர் என்றால் பொதுமக்கள் சாவது தவிர்க்க முடியாது என்று ஈழத் தமிழ்மக்களைப் பார்த்துச் சொன்னவர், வாகனத்தில் அமர்ந்தபடியே, முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டாலும் மழைநீர் தேங்குவதை, சேதங்கள் விளைவதை தவிர்க்க முடியாது என்று ஆணவம் பொங்கச் சொன்னார். நீரால் சூழ்ந்த பல பகுதிகளை இன்னும் அதிகாரிகள் யாரும் பார்க்க வரவில்லை என்று மக்கள் சொல்கிறார்கள்.
வடகிழக்குப் பருவ மழை வலுவாக இருக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மய்யம் முன்னரே அறிவித்த பின்னரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஏதும் எடுக்கப்படவில்லை என்பதை தமிழக மக்கள் அனுபவித்து தெரிந்துகொண்டார்கள். வீணாகப் போகும் நீரை சேமித்தால் கர்நாடகா, கேரளா என யாருடனும் எந்த சச்சரவும் இருக்க வேண்டிய அவசியமில்லை என்பதையும், காவிரி மீதான தமிழர் உரிமைகளை பாதுகாப்பதாக முதலாளித் துவ கட்சிகள் நடத்தும் காவிரி அரசியல் ஏமாற்று  என்பதையும் பெருமழை காட்டிவிட்டது.  
தமிழ்நாடு தண்ணீர் பற்றாக்குறை உள்ள மாநிலம். பாசன வசதிக்கு முற்றிலும் பருவமழையை நம்பித்தான் இருக்கிறது தமிழ்நாடு. எனவே ஆற்று வடிநிலத் திட்டமிடல் மூலம் நீரைத் திறம்படப் பயன்படுத்துவதும் மழை நீரைச் சேகரிப்பதன் மூலம் நிலத்தடி நீரைப் பெருக்குவதும்  அவசியமானதாகும். இந்த அரசு அணைக்கட்டு புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டம் ஒன்றை உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்த உள்ளது. இதன் மூலம் 104 அணைக்கட்டுகள் புனரமைக்கப்படும். 2011ம் ஆண்டு தொடங்கி ஆறு ஆண்டுகளுக்கு 745.49 கோடி ரூபாய் செலவிடப்படும். பாரம்பரிய நீர் ஆதாரங்களைப் பெருக்க 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. அதில் 50 கோடி ரூபாய் 2011-12ம் ஆண்டிலேயே செலவிடப்படும். 67 கோடி ரூபாய் செலவில் ஏரிகளின் கொள்ளளவு நீர் உபயோகத்திறன் ஆகியவை அதிகரிக்கப்படும். 761 ஏரிகள், அய்ந்து அணைக்கட்டுகள், 1056 கி.மீ. நீளமுள்ள துணைக் கால்வாய் பணிகளுக்கென 2011-12ம் ஆண்டு திருத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் 367 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது’. இவை ஜெயலலிதா 2011ல் பதவியேற்றவுடன் முன்வைக்கப்பட்ட பட்ஜெட்டில் சொல்லப்பட்ட திட்டங்கள்; ஒதுக்கப்பட்ட நிதி.
ஒவ்வொரு ஆண்டு பட்ஜெட் உரையிலும் இது போன்ற அம்சங்களை தவறாமல் சொல்லியுள்ள நிதியமைச்சர் ஓபிஎஸ் ஒரு முறையாவது இந்தத் திட்டங்களில் ஏதாவது ஒன்றாவது முழுமை பெற்றுவிட்டதாக மட்டும் சொல்லவேயில்லை. மாறாக, கூடுதல் நிதியை  இது போன்ற திட்டங்களுக்கு ஒதுக்கிக் கொண்டே போனார். 2012-13 ஆண்டிற்காக வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில், நீர் வள மேலாளுமைப் பணிகளுக்கென இதுவரை இல்லாத அளவிற்கு உயர் ஒதுக்கீடாக 3,624.73 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன் என்கிறார். 2012ல் ஒதுக்கப்பட்ட மூவாயிரம் கோடி ரூபாய் முறையாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால் இன்று தமிழகம் வெள்ளத்தில் தத்தளித்துக் கொண்டிருக்காது. இந்த 3000 கோடி ரூபாய் பற்றி அடுத்தடுத்த பட்ஜெட்களில் சத்தம் இல்லை. 2013-14 வரவுசெலவுத் திட்டத்தில் நீர்ப் பாசனத்திற்கு 3,314.50 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2013-14 பட்ஜெட் 36,000 பாசன ஏரிகள், நீர் நிலைகள் புனரமைப்பதற்கான பணிகள் ஏற்கனவே துவங்கிவிட்டன, பொதுப் பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள 13699 ஏரிகளில் 5894 ஏரிகள் சீரமைக்கப்பட்டு அவற்றின் கொள்ளளவு உயர்த்தப்பட்டுள்ளது, பாரம்பரிய நீர் நிலைகளைச் சீரமைக்க ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறது. 2014-15ல் நீர்ப் பாசனம் மற்றும் நீர்ப் பயன்பாட்டுத் திறனை உயர்த்த ரூ.4,160 கோடி ஒதுக்கப்பட்டது. சேத்துப்பட்டு ஏரியை புனரமைக்க, சுற்றுச் சூழல் பாதுகாக்க, 2013-14ல் 62 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டது. அடுத்த ஆண்டு 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு சேத்துப்பட்டுக்கு 30 கோடி ரூபாய் போக மீதமுள்ள தொகை, சென்னையைச் சுற்றியுள்ள மற்ற ஏரி, நீர்நிலைகளைச் சீரமைக்கப் பயன்படுத்தப்படும் என்றார்கள். கூவம் நதியை மீட்டெடுக்க என ஒவ்வொரு அரசும் பணம் ஒதுக்கியது. 2014-15ல் ரூ.500 கோடி ஒதுக்கினார்கள். இந்தக் கோடிகள் எல்லாம் எங்கே போயின? வீராணம் ஏரியைத் தூர்வார ஒதுக்கப்பட்ட 50 கோடி ரூபாய் என்னவாயிற்று? ஏரிக்கரையை உயர்த்தினார்களோ இல்லையோ கரை வேட்டிகள் தங்கள் கரன்சி இருப்பை உயர்த்திக் கொண்டார்கள்.
தானே புயலால் பாதிக்கப்பட்ட கடலூர் விழுப்புரம் மாவட்டங்களில் குடிசைகளுக்கு மாற்றாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டுவதற்காக 2012-13 பட்ஜெட்டில் ரூபாய் 1,000 கோடி ஒதுக்கப்பட்டது. விவசாயிகள் வாழ்வாதாரத்திற்காக 790.18 கோடி ரூபாயில் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. ஒதுக்கப்பட்ட பணம் உண்மையிலேயே அதற்காகச் செலவிடப்பட்டிருந்தால் இன்று கடலூரில் ஏற்பட்ட பெரும்சேதத்தை தடுத்திருக்க முடியும். மாநிலப் பேரிடர் மீட்புப்படை ஏற்படுத்தப் போவதாக அப்போதே அறிவித்தார்கள். அந்தப் படை என்ன செய்கிறது?
தாமிரபரணியில் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. ஓடுகிற தண்ணீரை சேமிக்க வழியில்லை. திருவைகுண்டம் அணை ஒழுங்காகத் தூர்வாரப்பட்டிருந்தால், இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு பல ஆயிரக்கணக்கான ஏக்கர் பயிர்களுக்கு தண்ணீர் பஞ்சம் இருந்திருக்காது. நம்பியாறு தாமிரபரணியாறு கருமேனியாறு இணைப்புத் திட்டம் 369 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது, 2011-12ல் இப்பணிக்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனச் சொல்லப்பட்டது. 2012-13 பட்ஜெட்டில்  100 கோடி ரூபாய். 2013-14ல் 156.44 கோடி, 2014-15ல் ரூ.119.98 நதி நீர் இணைப்புக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அறிவிக்கப்பட்டது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தால் வெள்ளம் வீடுகளுக்குள் புகுந்திருக்காது. இந்தியா ஒளிர்கிறது என்று நாடெங்கும் தங்க நாற்கரச் சாலை அமைத்தார்கள். அந்தச் சாலைகள் ஆறுகளாய், கால்வாய்களாய் காட்சியளிக்கின்றன. நீரின் பாதையை வழிமறித்து, வருமானம் பார்க்க சாலை அமைத்தனர். தரைப் பாலங்கள் கட்டுவதாகச் சொல்லி குறுகலான குழாய்களைப் பதித்து பாலம் கட்டியதாக கணக்கு காட்டினார்கள். இப்போது அந்தப் பாலங்கள் நாசமாகி நீருக்கு வழிவிட்டுவிட்டன.
அடுத்தடுத்தும் பருவ மழை தொடர, தமிழகமே தண்ணீரில் மிதக்கிறது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத மழை இப்போது பெய்துவிட்டது, டிசம்பர் வரை 440.40 மி.மீ பெய்ய வேண்டிய வடகிழக்கு பருவமழை இப்போதே 483.6 மி.மீ பெய்துள்ளது என்கிறார் ஜெயலலிதாதமிழ்நாடு ஓராண்டில் 48% மழையை வடகிழக்கு பருவ மழை மூலமே பெறுகிறது. அக்காலத்தில் தமிழகத்தின் கடலோரப் பகுதிகள் 60% மழையை பெறும். இந்த ஆண்டு நவம்பர் 15, 16 தேதிகளில் சென்னையில் மட்டும் 24 மணி நேரத்தில் 24.6 செ.மீ. மழை பெய்துள்ளது. 2005 நவம்பர் மாதத்தில் 24 மணி நேரத்தில் சென்னையில் மட்டும் 14.2 செ.மீ. மழை பெய்துள்ளது. இரண்டு நாட்களில் 25 செ.மீ. மழை பெய்துள்ளது. 1976 நவம்பரில் சென்னையில் 24 மணி நேரத்தில் 45.2 செ.மீ. மழை பெய்துள்ளது. வழக்கமான வடகிழக்கு பருவமழையின் அளவு 299.5 மி.மீ. இவ்வாண்டு அக்டோபர் 1 முதல் நவம்பர் 18 வரை 394.3 மி.மீ மழை பெய்துள்ளது. இது வழக்கமாகப் பெய்யும் அளவை விட 32% அதிகம்ஆக, 2015 மழை ஒப்பீட்டுரீதியில் பெருமழை என்று சொல்வதற்கில்லை. இது ஏற்கனவே தமிழ்நாடு பார்த்த மழை. ஆனால், இந்த முறை ஏற்பட்டுள்ள நாசமும் அழிவும் இதற்கு முன் இல்லை. குற்றவாளி மழையல்ல. குற்றமய அலட்சியம் காட்டுகிற, அறிவித்த திட்டங்களை நிறைவேற்றாத, அடிப்படை கட்டமைப்பு வசதிகளை உருவாக்காத, மேம்படுத்தாத ஜெயலலிதா அரசுதான் குற்றவாளி.
காவிரி அரசியலில் குளிர் காய்கிற ஜெயலலிதா, எதிர்க்கட்சிகள் மழை வெள்ளத்தை அரசியல் ஆக்கப் பார்க்கிறார்கள் என்கிறார். சென்னை முதல் குமரி வரை எங்கும் வெள்ளம். பல மாவட்டங்களில் ஊருக்குள் புகுந்த வெள்ள நீர் வடிய வழியில்லை. தண்ணீர் தாங்கிகளையும் தண்ணீர்ப் பாதைகளையும் தடுத்து நிறுத்தியது யார்? சென்னை மாநகரைக் கட்டமைக்க உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் அதிகாரிகள் அவர்களை இயக்கிய அமைச்சர்கள் கூட்டு சேர்ந்து அடுக்குமாடி வீடுகள், தொழிற்சாலைகள், கல்லூரிகள், ஷாப்பிங் மால்கள் கட்ட கட்டுப்பாடுகளை தளர்த்தியதால் இன்று சென்னை தண்ணீரில் மிதக்கிறது.
வெள்ள நிவாரணத்திற்காக வெறும் ரூ. 50 லட்சம் அறிவித்த ஜெயலலிதா, வெள்ளம் வேகம் எடுத்தவுடன் ரூ.500 கோடி ரூபாய் என்றார். பாஜக குழுவினரும் மத்திய அரசின் குழுவினரும் பாதிப்புகளைப் பார்வையிட்டுள்ளனர். வெள்ளச் சேதம் பற்றி தமிழக அரசு அறிக்கை தந்த பிறகு மத்திய அரசு பதில் சொல்லும் என்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் சொல்லிச் சென்ற பிறகு மத்திய அரசு முதல் தவணையாக ரூ.940 கோடி வெள்ள நிவாரண நிதி அறிவித்துள்ளது. மக்கள் தவிக்கிறார்கள். நிவாரணங்கள் கிடைக்கவில்லை என்று மறியலில் ஈடுபடுகிறார்கள். இரக்கமற்ற ஜெயலலிதா அரசின் காவல்துறை அவர்களைத் தடி கொண்டு தாக்குகிறது
தமிழ்நாடு பேரிடர் பாதித்த மாநிலமாக அறிவிக்கப்பட வேண்டும். மத்திய அரசு வெள்ள நிவாரண நிதியாக ரூ.10,000 கோடி தரவேண்டும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமப்புற மாவட்டங்களில் நூறு நாள் வேலைத் திட்டம் பெரிய அளவில் விரிவுபடுத்தப்பட வேண்டும். 2011 -2015ல் நீர் பாசன திட்டத்திற்கும், நீர் நிலைகள் சீரமைப்புக்கும் நகர மேம்பாட்டிற்கும் மழை வெள்ளச் சேதத் தடுப்பிற்கும் ஒதுக்கப்பட்ட நிதி, அந்தத் திட்டங்கள் நிறைவேற்றப்பட்டது, தற்போதைய வெள்ள நிவாரண நடவடிக்கைகள் ஆகியவை பற்றி ஜெயலலிதா அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்வெள்ளத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு உடனடியாக 25 லட்ச ரூபாய் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பத்திற்கும் தலா 20 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு போதுமான அளவு நிவாரணமும் வீடிழந்தவர்களுக்கு அரசே கான்கிரீட் வீடு கட்டியும் கொடுக்க வேண்டும். நிவாரண முகாம்களில் உள்ளவர்களுக்கு உரிய அனைத்து வசதிகளும் அரசு ஏற்படுத்தித் தர வேண்டும். நீர் நிலைகள் ஆக்கிரமிப்பு கள் தடுத்து நிறுத்தப்பட்டு, ஏரி, குளங்கள், ஆறுகள், கண்மாய்கள், ஓடைகள் தூர்வாரப்பட்டு புனரமைக்கப் பட்டு, நீர்ப் போக்குவரத்திற்கு சரியான பாதையை முறையாக ஏற்படுத்தி, வரும் காலத்தில் வெள்ளம், வறட்சி தமிழகத்தை தாக்காமல் இருக்க நீண்ட கால நோக்கில் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.

3 சென்ட் வீட்டு மனைப் பட்டா கேட்டு அமைச்சர் அலுவலகம் முற்றுகை

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் சட்டமன்றத் தொகுதியிலுள்ள விசைத்தறி, கைத்தறி, கட்டுமானம் போன்ற துறைகளில் பணி புரியும் அமைப்புசாரா தொழிலாளர்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்டோர், இகக (மாலெ), ஏஅய்சிசிடியு தலைமையில், முதலமைச்சரின் தேர்தல் வாக்குறுதிப்படி தங்களுக்கு 3 சென்ட் வீட்டுமனைப்பட்டா வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை மனுக்களுடன் 23.11.2015 அன்று தொகுதி சட்ட மன்ற உறுப்பினரும், தமிழக தொழிலாளர் துறை அமைச்சருமான திரு.தங்கமணி அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இகக (மாலெ) மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் கே.ஆர்.குமாரசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன், மாவட்டச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, பள்ளிப்பாளையம் நகரச் செயலாளர் தோழர் மாரியப்பன், தோழர் தண்டபாணி ஆகியோர் கலந்துகொண்டனர். பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்துகொண்டனர். அமைச்சர் அலுவலகத்தில் இல்லாததால் மனுக்கள் உதவியாளரிடம் தரப்பட்டன.

அரூர் தாலுகா அலுவலகம் முன் தலித், பழங்குடி மக்கள் ஆர்ப்பாட்டம்

குரும்பன்ஸ், மலைவேடன், மலைக்குரவன், காட்டுநாயக்கன் என தருமபுரி மாவட்டத்தில் புழக்கத்திலுள்ள போலி பழங்குடியின சான்றிதழ்களை திரும்பப் பெறக் கோரியும் அரூர் வருவாய் கோட்டாட்சியர், பழங்குடியினர் நல துணை இயக்குனர் போன்ற நேர்மையான அதிகாரிகளுக்கு பாதுகாப்பு கோரியும் ஆந்திர சிறைகளிலுள்ள மரம் வெட்டும் தொழிலாளர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கைகள் எடுக்கக் கோரியும் நவம்பர் 22 அன்று இருநூற்றுக்கும் மேற்பட்ட தலித்துகளும் பழங்குடியினரும் அரூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தலித் ஆய்வு மய்யத்தின் தோழர் அறிவழகன் தலைமை வகித்தார். அகில இந்திய மக்கள் மேடையின் மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், சமூக செயற்பாட்டாளர் வேடியப்பன், பழங்குடியின கூட்டமைப்பின் தலைவர் தோழர் ஸ்டான்லி முருகேசன், தென்னிந்திய பழங்குடியினர் சங்கத்தின் தலைவர் கே..குணசேகரன் ஆகியோர் உரையாற்றினர். தமிழ்நாடு பட்டியல் இன மலையாளி பேரவை போன்ற அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

ஆந்திர சிறையில் இருந்த தமிழக பழங்குடியினர் மரணம், நீதி கேட்டுப் போராட்டம்

செம்மரக்கட்டை கடத்தல் வழக்கில் ஆந்திர சிறையில் 23 மாதங்களாக இருந்த திருவண்ணாமலை மாவட்டம், இருளர் காலனி, நீப்பத்துறையை சேர்ந்த 27 வயது ரத்தினம் மர்மமான முறையில் நவம்பர் 18 அன்று உயிரிழந்தார். அவரது உடல் நீப்பத்துறை வந்தபோது அவரது குடும்பத்துக்கு இழப்பீடு கோரி, ரத்தினம் குடும்பத்தினர், அம்பேத்கார் மக்கள் சங்கம், அகில இந்திய மக்கள் மேடையினர் நவம்பர் 19 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல் துறையினருடன் சமரச பேச்சுவார்த்தை நடைபெற்றது. ஆனால், போராட்டத்தில் முன்னணியில் நின்ற, உயிரிழந்தவரின் குடும்பத்தினர் 3 பேர் மீதும், அகில இந்திய மக்கள் மேடையின் மாநில பிரச்சாரக் குழு உறுப்பினர் தோழர் அறிவழகன் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் நினைவேந்தல் கூட்டம்

அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாநிலத் தலைவரும், இகக (மாலெ) மாநில கமிட்டி உறுப்பினருமான தோழர் டி.கே.எஸ்.ஜனார்த்தனன் நினைவேந்தல் கூட்டம் திண்டுக்கல்லில் 22.11.2015 அன்று இகக(மாலெ) திண்டுக்கல் மாவட்ட அமைப்பாளர் தோழர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் திண்டுக்கல், மதுரை, கரூர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் மற்றும் தோழர்கள் ராமச்சந்திரன், மணிவேல், ஜெயவீரன், பொன்னுதுரை, பால்ராஜ், மதிவாணன் ஆகியோர் தோழர் டி.கே.எஸ் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சி(மாலெ) மக்கள் விடுதலையின் தோழர் பிச்சமுத்து, மற்றும் சுகுந்தன், நிக்கோலஸ், அசோகன், தர்மராஜ் ஆகியோரும் பேசினர்.

தமிழக அரசின் குற்றமய அலட்சியத்தைக் கண்டித்து போர்க்கால அடிப்படையில் மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

மழை, வெள்ளதால் சென்னை மிகவும் மோசமாக பாதிப்புக்குள்ளாகி, கடந்த 15 நாட்களாக மக்கள் இயல்பு வாழ்க்கை நடத்த முடியவில்லை. அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலை, வருமானம் இழந்து நிற்கின்றனர். அவதிக்குள்ளான அமைப்புசாரா தொழிலாளர் குடும்பங்கள் ஒவ்வொன்றுக்கும் ரூ.20,000 நிவாரணம் கேட்டு ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் பழனிவேல் தலைமையில் அம்பத்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தை மனுக்களுடன் மக்கள் முற்றுகையிட்டனர். மின்சாரம் தாக்கி பலியான ஏஅய்சிசிடியு உறுப்பினர் தோழர் தர்மராஜ் உட்பட இறந்தவர் குடும்பங்களுக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும், வீடிழந்து தவிப்பவர்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என கோரிக்கைகள் வைத்தனர். போராட்டத்தில் தோழர்கள் குப்பாபாய், மோகன், முனுசாமி, தேவகி, வழக்குரைஞர் புகழ்வேந்தன் உட்பட அனைத்து மாவட்டக் கமிட்டி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கோவையில் ஆதிக்க சாதியின் அடக்குமுறைக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் சாதியாதிக்க சக்திகளின் அடக்குமுறை அதிகரித்து வருகிறது. காவல்துறை ஆதிக்க சாதிகள் பக்கம் நின்று தாக்குதலுக்கு ஆளானவர்களின் புகாரை திரும்பப் பெற நிர்ப்பந்திப்பதும், தாக்குதலுக்குள்ளான தலித் மக்கள் மீதே வழக்கு தொடுப்பதும் நடந்து வருகிறது. கோவை மாவட்டம் மயிலாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட கரையாம்பாளையத்தில் ஆதிக்க சாதியை சேர்ந்த சந்தோஷ்குமார் இரு சக்கர வாகனத்தில் வேகமாக சென்றிருக்கிறார். குழந்தைகள் நடமாடும் இடம் என்பதால் மெதுவாக செல்லும்படி அருந்ததியர் சமூகத்தைச் சேர்ந்த கணேசன் சொல்லியிருக்கிறார். ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார் கும்பலுடன் வந்து இரும்புத்தடி கொண்டு கணேசன் மீது தாக்குதல் நடத்தினார். கணேசன் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இகக (மாலெ) மாநிலக் கமிட்டி உறுப்பினர் தோழர் தாமோதரன் மாநகரக் கமிட்டி  உறுப்பினர் தோழர் வேல்முருகன் ஆகியோர் சம்பவம் நடைபெற்ற பகுதிக்குச் சென்று மக்களை சந்தித்தனர். குற்றவாளிகள் சிலர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதியப்பட்டிருந்தாலும் முக்கிய குற்றவாளி சந்தோஷ்குமார் கைது செய்யப்படவில்லை. அவரைக் கைது செய்ய வேண்டும் எனவும், அச்சத்திலிருக்கும் கரையாம்பாளையம் மக்களுக்கு காவல்துறை பாதுகாப்பு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி சமூக நீதி இயக்கத்தைச் சேர்ந்த வழக்குரைஞர் கார்த்தி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் தாமோதரன், வேல்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் தோழர் என்.கே.நடராஜன் கலந்துகொண்டார்தேசிய பட்டியல் சாதியினர் ஆணையம் பாதிக்கப்பட்டவரை சந்தித்து நிலைமைகளை கேட்டறிந்தது. குற்றவாளி இரண்டு நாட்களில் கைது செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பாதிக்கப்பட்டவருக்கு ரூ.1,80,000 இழப்பீடு வழங்கியுள்ளது.

மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இகக (மாலெ) குழு ஆய்வு

இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன் தலைமையில் இகக(மாலெ) மற்றும் அனைத்திந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர்கள் சங்கம் சார்பாக தோழர்கள் டி.கலியமூர்த்தி, எஸ்.பாபு, பி.சேகர், ஏழுமலை, கந்தசாமி, கொளஞ்சி, உத்திரமேரி, கலாமணி, பெரியான், சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய குழு நவம்பர் 11, 12, 13 ஆகிய தேதிகளில் மழை பாதித்த பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டது. ஆய்வறிக்கையின் விவரங்களும், கோரிக்கைகளும் தமிழக முதல்வருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து:
•             உளுந்தூர்பேட்டை தாலுகாவில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை என எதுவும் எடுக்கப்படவில்லை. கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் கூட கிராமத்தில் இல்லை.
•             தாலுகாவின் பிரதான சாலைகள் பலவும் சேதமடைந்துள்ளன.
•             ஏரி, குளங்கள் உடைப்பால் பாதிக்கப்பட்டுள்ள விவசாய நிலங்களை சீர்படுத்த ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000 வழங்கிட வேண்டும்.
•             விவசாய பயிர்கள், நெல், உளுந்து, வாழை, பருத்தி, மரவள்ளி, பச்சை பயறு என 1000 ஏக்கருக்கும் மேல் சேதமடைந்துள்ளது.
•             நெற்பயிர் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.25,000மும், உளுந்துக்கு ரூ.10,000மும் நிவாரணம் வழங்க வேண்டும்.
•             வீடுகள் இழந்தவர்களுக்கு ரூ.1 லட்மும், உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு ரூ.20 லட்சமும், கால்நடைகளை இழந்தவர்கள் குடும்பங்ளுக்கு சந்தை மதிப்பிலும் நிவாரணம் வழங்க வேண்டும்.
•             வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட வீடுகளை அரசு முன்னுரிமை அடிப்படையில் கட்டித் தர வேண்டும். வீட்டில் வைத்திருந்த வீட்டு உபயோகப் பொருள்கள், விதை, தானியங்கள் உட்பட அனைத்தும் கணக்கில் கொண்டு நிவாரணம் வழங்க வேண்டும். வீடு கட்டத் தேவையான மண், மணல் அள்ள இலவச முன்அனுமதி வழங்க வேண்டும்.
•             பாதிக்கப்பட்ட பகுதிகளில், மாதாந்திர அளவை கணக்கில் கொள்ளாமல் அரிசி, பருப்பு, மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக வழங்கிட வேண்டும்.
•             அரசியல் குறுக்கீடின்றியும், பாகுபாடின்றியும் சேதத்தை மனிதாபிமானத்தோடு கணக்கீடு செய்து நிவாரணத் தொகை கிடைத்திட அரசு அதிகாரிகள் வழிவகை செய்திட வேண்டும்.
•             உளுந்தூர்பேட்டை தாலுகாவிலுள்ள தரைப்பாலங்கள் கணக்கிடப்பட்டு மேம்பாலங்களாக மாற்றி அமைக்கப்பட வேண்டும். ஓடை, உபரிநீர் வாய்க்கால், ஏரி, குளங்களிலுள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு சீர் செய்யப்பட வேண்டும். இதை ஒவ்வொரு வருடமும் மழைக்காலத்துக்கு முன்னதாக செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
•             தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் மழையால் சேதமடைந்த பகுதிகளில் மீட்புப் பணிக்கு விவசாயத் தொழிலாளர்களை ஈடுபடுத்திட வேண்டும். அரசு அறிவித்துள்ள கூலி ரூ.187 முழுமையாக வழங்கப்பட வேண்டும்.

நிவாரணம் கோரி உளுந்தூர்பேட்டையில் ஆர்ப்பாட்டம்


உளுந்தூர்பேட்டை தாலுகாவில் மழை, வெள்ள நிவாரணப் பணிகளை விரைந்து முடுக்கி விடக் கோரியும், அரசு அறிவித்துள்ள நிவாரணங்களுக்கு மேல் கூடுதல் நிவாரணம் கேட்டும், 24.11.2015 அன்று கோரிக்கை மனுக்களுடன் இகக (மாலெ) தலைமையில் உளுந்தூர்பேட்டை  தாலுகா அலுவலகத்தை மக்கள் முற்றுகையிட்டனர். 500க்கும் மேற்பட்டோர் திரண்ட போராட்டத்தில் அனைத்திந்திய விவசாய கிராமப்புற தொழிலாளர் சங்க மாவட்டத் தலைவர் தோழர் கலியமூர்த்தி தலைமை வகித்தார். கட்சி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், முற்போக்கு பெண்கள் கழகத்தின் தோழர் செண்பகவள்ளி, தோழர் கணேசன், ஏஅய்சிசிடியு, புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர்கள் வெற்றிவேல், ஏழுமலை, பாபு, உத்திரமேரி கலந்து கொண்டனர். காவல்துறை கெடுபிடியால் தோழர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் வாக்குவாதம் நடைபெற்றது.

Search