COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, December 16, 2015

கடலூர் பெருமழை வெள்ளம்: இகக மாலெ குழு ஆய்வு
சந்திரமோகன்

கடலூர் மாவட்டத்தில் வெள்ளம் பேரிடர் ஏற்படுத்திய பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக, மாவட்டப் பொறுப்பாளர் ஜி.தனவேல் தலைமையில், இகக மாலெ குழு டிசம்பர் 9 அன்று, பயணம் மேற்கொண்டது. மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், அகில இந்திய மக்கள் மேடை தேசிய பிரச்சாரக்குழு உறுப்பினர் தோழர் சந்திரமோகன், விழுப்புரம் மாவட்ட கட்சிச் செயலாளர் தோழர் வெங்கடேசன், மாநிலக் குழு உறுப்பினர் தோழர் இளங்கோவன், மாவட்டக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ராஜசங்கர், புலவேந்திரன், புரட்சிகர இளைஞர் கழக முன்னோடிகள் ரமேஷ், திலகர், விக்னேஷ், ரகுவரன் மற்றும் பலர் என 25 பேர் கொண்ட குழு ஆய்வு மேற்கொண்டது.
விருத்தாச்சலம்குறிஞ்சிப்பாடி, கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்குடி, ஆகிய பகுதிகளில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டது. என்எல்சி சுரங்கத்தை ஒட்டிய கரிவெட்டி, முத்துகிருஷ்ணாபுரம், பெருமாள் ஏரிப்பகுதி, பூவாணிக்குப்பம், அய்யந்தூர், காட்டுமன்னார்குடி, வீராணம் ஏரிப்பகுதி, திருநாரையூர், வீரநத்தம் ஆகிய கிராமங்களில் மக்களிடம் கருத்துக்களைக் கேட்டறிந்தது.
270 கி.மீ.க்கும் கூடுதலான பயணத்தில் விருதாச்சலம் - கடலூர் சாலை, கடலூர் - சிதம்பரம் சாலை, கடலூர் - பண்ருட்டி சாலை, பண்ருட்டி -சேத்தியாதோப்பு சாலை என வழி நெடுக, நிவாரணப் பொருட்கள் எதிர்பார்த்து மக்கள் கும்பல் கும்பலாய் காத்திருந்தனர்; வாகனங்களை மறித்து உதவிகளைக் கோரினர். நவம்பர் 9 முதல் பெய்யும் மழை, வெள்ளப் பாதிப்பால், ஒரு மாதத்திற்கும் மேல் வேலை, கூலி இல்லாததால், ரேசன் அரிசியை மட்டும் வைத்துக் கொண்டு, உணவிற்கும் வழியின்றி இருப்பதாக தெரிவித்தனர். பள்ளிகள், கிராம நிர்வாக அலுவலகங்களில் நிவாரணத்திற்குப் பதிவு செய்ய, ஆங்காங்கு மழையில் நனைந்து கொண்டு மக்கள் காத்திருந்தனர். சாலைகள் உடைந்து போயிருந்தன. கடலூர் .டி., சிப்காட், காரைக்காடு நீரில் மூழ்கியிருந்தது.
மதம் கடந்த மனித நேயம்
அரசு சார்ந்த நிவாரண முகாம்கள் (உணவுப் பொருள் மற்றும் மருத்துவம்) 10% பாதிக்கப்பட்ட மக்களை கூட சென்றடைய வில்லை. பல்வேறு இடங்களிலிருந்து வந்து நிவாரணங்களை வழங்கிய தன்னார்வலர்கள், நிறுவனங்கள், சேவை அமைப்புகள் மட்டுமே கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக மக்களின் தேவைகளை வழங்குவதாகவும் தெரிவித்தனர். நெடுஞ்சாலைகளில், சாலைத் தடுப்புகளை அமைத்து நிவாரணப் பொருட்கள் வந்த வண்டிகளை, மாநில அரசின் நிவாரண முகாமிற்கு அனுப்பி வைக்கும் முயற்சியில், காவல்துறையினர் கெடுபிடி செய்து கொண்டிருந்தனர். இந்த கெடுபிடிகளை எல்லாம் மீறி, பத்துக்கும் மேற்பட்ட இடங்களில், தவ்ஹித் ஜமாத் மற்றும் இசுலாமிய அமைப்புகளைச் சார்ந்த இளைஞர் கள் நேரடியாக நிவாரணங்களை வழங்கிக் கொண்டிருந்தனர். கடலூர் நகரில் இருந்த நிவாரண முகாமில், காவல்துறை, ராணுவம் இருந்தன. வாயிலுக்கு வெளியில், மழையில் மக்கள் காத்திருந்தனர். ஒரேயொரு வருவாய் துறை அதிகாரிகள் வாகனத்தையும், பாதுகாப்புக்கு ராணுவ வாகனத்தையும் பார்க்க முடிந்தது. அரசு வாகனத்தை மறித்து அய்யந்தூர் மக்கள் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டனர். அரசு இயந்திரம் முற்றிலுமாக நிவாரண நடவடிக்கைகளை புறக்கணித்த நிலையையே அனைத்து இடங்களிலும் காண முடிந்தது.
வெளிவராத உண்மைகளும், பிரச்சனைக்கு காரணமும்
பயணத்தில் சந்தித்த மக்கள், அமைப்புகளின் முன்னோடிகள் தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு: நவம்பர் முதல் வாரத்தில் கடலூர் மாவட்டத்தை தாக்கிய வரலாறு காணாத மூன்று நாட்கள் நீடித்த புயல் மழை நவம்பர் 9 அன்று பெரும் சேதத்தை விளைவித் துள்ளது. கடலூர் நகரம், புறநகர், பண்ருட்டி தாலுக்கா, காட்டுமன்னார்குடி, சிதம்பரம் தாலுக்காக்கள் கடும் நாசத்திற்கும் உயிரிழப்புகளுக்கும் உள்ளாயின. 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். நவம்பரில் உயிரிழப்பு நிவாரணம் கோரியவர்களின் பட்டியல் சாதிவாரியாக தலித்துகள் 41 (தலித் கிறிஸ்தவர்கள் 22 உட்பட) வன்னியர் 18, முதலியார் 1, நாடார் 1, என முதல் சுற்றில் தெரிவிக்கப்பட்டது. ஏரிகளில் இருந்து வெள்ள நீர் திடீரென திறந்து விடப்பட்டதால், கிராமம் கிராமமாக வெள்ளத்தில் மூழ்கின. பரவனாறு, மணிமுத்தாறு, வெள்ளாறு, கெடிலம் போன்ற ஆறுகள் கரைகளை மீறிச் சென்றன. வீராணம் ஏரி, பெருமாள் ஏரி, பரவனாறு ஏரி, வாலாஜா ஏரிகள் நிரம்பியதும், முன் கூட்டிய திட்டமில்லாமல் திடீரென திறந்து விடப்பட்டு 300க்கும் மேற்பட்ட கிராமங்களே வெள்ள நீரில் மூழ்கியது. மாவட்டத்தில் உள்ள மொத்த 1.75 இலட்சம் ஏக்கர் நிலங்களில் இருந்த பயிர்களும் வெள்ளத்தில் மூழ்கின. குடிசைகள், கால்நடைகள் ஆயிரக்கணக்கில் அடித்துச் செல்லப்பட்டன. மாவட்ட நிர்வாகம் இதுவரையிலும் சேதம் பற்றிய கணக்கெடுப்பு நடத்தவில்லை. வரலாறு காணாத புயல் மழை போன்ற பேரிடரை எதிர்கொள்ள எந்தவொரு பொறியமைவும் இல்லாத கடலூர் மாவட்ட நிர்வாகம் (ஏற்கனவே சுனாமியில் பாதிக்கப்பட்ட மாவட்டம் கடலூர்), பொதுப்பணித் துறையின் குற்றமய அலட்சியத்தால் வீராணம் ஏரி, பெருமாள் ஏரிகள் திடீரென திறந்து விடப்பட்டதும் நெய்வேலி நிலக்கரி நிறுவனமும், தனது கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள இயந்திரங்களை பாதுகாப்பதாக அறிவித்து, சுரங்கங்களின் தண்ணீரை ராட்சத பம்புகள் மூலம் இறைத்து, பரவனாற்றை வெள்ளத்தில் மூழ்கடித்ததும் முக்கிய காரணங்களாகும்.
மூழ்கியது கரிவெட்டி கிராமம்
குறிஞ்சிப்பாடி தாலுகா, கரிவெட்டி கிராமத்திலுள்ள நூற்றுக்கணக்கான மக்களை ஆய்வுக் குழு சந்தித்தது; அழிந்து போன வீடுகளை, சேதங்களை பார்வையிட்டது. நெய்வேலி நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கம் பகுதியில் வலையமாதேவிக்கு அருகில் உள்ள, 183 வன்னியர் சாதி ஏழை விவசாயி குடும்பங்களும், முத்துக்கிருஷ்ணாபுரத்தில் 16 தலித் குடும்பங்களும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. 1500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பு நீரில் மூழ்கியது. வெள்ள நீர் பகலில் நுழைந்ததால் உயிரிழப்பைத் தவிர்க்க முடிந்தது எனவும், என்எல்சி நிறுவன நில ஆர்ஜித அதிகாரிகள் அலெக்ஸ், சங்கரபாண்டியன் திட்டமிட்டு, வாய்க்கால் கரையை உடைத்தனர் என்றும், தங்களது நிலங்களை கையகப்படுத்த சதி செய்தனர் என்றும் மக்கள் புகார் தெரிவித்தனர்.
பெருமாள் ஏரி நிரம்பியதால் சேதம்
வீராணம் ஏரிக்கு அடுத்த பெரிய ஏரியான பெருமாள் ஏரி 545 ஏக்கருக்கு குள்ளஞ்சாவடி முதல் புவனகிரி வரை பரந்து விரிந்து இருக்கிறது. பூரணிகுப்பம் மற்றும் அய்யந்தூரில் மக்களை சந்தித்தபோது அவர்கள் தெரிவித்த கருத்துக்கள் மாவட்ட நிர்வாகத்தின் குற்றமய அலட்சியத்தை சுட்டிக்காட்டியது. வீராணம் ஏரியில் இருந்து பெருமாள் ஏரிக்கு தண்ணீர் பணம் கட்டித்தான் பெற்று வருகிறோம்; பெருமாள் ஏரி பல ஆண்டுகளாக தூர் வாரப்பட வில்லை; ஆழப்படுத்தப்படவுமில்லை. திடீரென ஒரே நாளில் வெள்ள நீரை திறந்துவிட்டு கிராமங்களை மூழ்கடித்துவிட்டனர்; ஆயிரக்கணக்கான விவசாயத் தொழிலாளர்களுக்கு இந்த ஏரியை தூர்வாரும் பணியைக் கொடுத்திருந்தால் கூட, இவ்வளவு பெரிய சேதத்தை தவிர்த்திருக்க முடியும் என்று கூறினர்.
சாவின் விளிம்பில் திருநாரையூர், வீரநத்தம், கீழ் வன்னியூர்
சென்னைக்கு குடிநீர் வழங்குகிற வீராணம் ஏரி நிரம்பினால், திறக்கப்படும் முதல் கதவணையின் பள்ளத்தில் உள்ள இக் கிராமங்கள் காட்டுமன்னார்குடி தாலுகாவில் உள்ளன. 2006க்கு பிந்தைய சுனாமி நிவாரணப் பணிகளின் போது திரு.ககன்தீப்சிங்பேடி எடுத்த சிறப்பு முயற்சியால் கட்டப்பட்ட தங்குமிடம் (ஷெல்டர்)தான், திருநாரையூர் சார்ந்த 363 தலித் குடும்பங்களையும் சாவிலிருந்து பாதுகாத்தது என மக்கள் தெரியப்படுத்தினர். அப்பகுதி முழுவதும் தண்ணீர் வடியாமல் இருந்தது; பாம்புகளும், பூச்சிகளும் சுற்றிக் கொண்டிருந்தன. தன்னார்வலர்கள் வழங்கிய நிவாரணங்கள் கூட முன்புறமுள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பு ஊருக்குத்தான் கிடைத்தது, தங்களை எட்டவில்லை எனவும், இன்னமும் நீர் ஒழுகிக் கொண்டிருந்த குடிசைகளையும், கான்கிரீட் வீடுகளையும் காட்டி பாதுகாக்க படுதாக்களை (தார்பாலின்/பிளாஸ்டிக் ஷீட்டுகளை) கெரசின் ஸ்டவ்களையும் வழங்கினால் கூட போதும் என்றனர். பாடப் புத்தகங்கள் மற்றும் மாற்றுத் துணிகளின் தேவையையும் எடுத்துரைத்தனர்.
வீரநத்தம் கிராமம் சென்றபோது, பகுதி சண்டை சச்சரவில் மூழ்கியிருந்தது. திருச்சியிலிருந்து தனியார் நிறுவனம் வழங்கிய பாத்திரங்கள், போர்வைகளை அதிமுக ஒன்றிய கவுன்சி லர் வாங்கி அபகரித்துக் கொண்டதன் மீது அடிதடி நடைபெற்றுக் கொண்டிருந்தது. இக் கிராமங்களுக்கு உணவுத் தவிர எந்த நிவாரணமும் போய்ச் சேரவில்லை. பாதிக்கப்பட்டு ஒரு மாத காலமான பிறகும் கூட அரசு செயலாற்றவில்லை என்று மக்கள் தெரிவித்தனர்.
நிவாரணங்களிலும் நீடிக்கிறது தீண்டாமை
நெடுஞ்சாலை ஓரங்களிலுள்ள பெரும்பான்மையான குடியிருப்புகள் பிற்பட்ட வகுப்பினருடையதாகவும், ஒரு சில சாலையோர காலனிகள் மட்டுமே தலித் குடியிருப்புகளாக உள்ளது. நிவாரணங்கள் வழங்கும் வாகனங்களை ஆளுங்கட்சியினர், காவல்துறை பறிப்பதை மீறியும், கிராமங்களுக்கு வந்து சேர்ந்தாலும் (மிக அதிகமான பாதிப்புகளைச் சந்தித்துள்ள, உட்கிராமங்களில், ஆறு, ஏரி, வாய்க்கால் ஓரங்களில் பள்ளப் பகுதிகளில் வசிக்கிற) தலித்துகளுக்கு வந்து சேரவில்லை, பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் தடுத்து வாங்கிக் கொள்கின்றனர் என பல்வேறு இடங்களிலும் தலித்துகள் வெளிப்படையாக புகார் தெரிவித்தனர். உணவு, மருத்துவ நிவாரண முகாம்களை பிற்படுத்தப்பட்ட சாதியினர் உள்ளப் பகுதிகளில் வைத்ததால், சென்று முறையான நிவாரணம் பெற முடியவில்லை என்றனர். சொட்டவனம், சுத்துக் குளம், ஓணான்குப்பம் மற்றும் பல தலித் குடியிருப்புகளிலும் இந்த நிலைமையே உள்ளது. பண்ருட்டி தாலுகா பெரியகாட்டுபாளையம் ஊரில் (10 தலித்துகள் ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்ட பகுதி) நிவாரணப் பொருட்களை வழங்கச் சென்ற அமைப்புகளை காவல் துறையினர் விரட்டினர்; மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று வந்த பின்னரே, அங்கு நிவாரணங்களை வழங்க முடிந்தது.
இறந்தவர்களில் பெரும்பான்மையானோர் தலித்துகள், அடித்துச் செல்லப்பட்ட குடிசைகளில் 80% பேர், உடமைகள் இழந்தவர்களில் 90% பேருக்கு மேல் தலித்துகள். எளிதில் வெள்ளத்திற்கு இரையாகும் பள்ளப்பகுதிகளில் வாழும் தலித்துகளே பெருத்த சேதத்தை சந்தித்துள்ளதாக ஒரு தலித் இயக்க நிர்வாகி தெரிவித்தார்.
பரிந்துரைகள்
பின்வரும் உடனடி, நீண்டகால/நிரந்தர தீர்வுகள் பற்றி ஆய்வுக்குழு உணர்ந்தது. உடனடி உதவிகளாக பாரபட்சமற்ற முறையில் உணவு, உடைகள், மருத்துவ உதவிகளை மாவட்டம் முழுமைக்கும் ஏற்பாடு செய்தல்; 1 மாதத்திற்கும் மேலாக வேலையில்லாமல் இருக்கிற அனைத்து விவசாய, கிராமப்புறத் தொழிலாளர்களுக்கும் நிவாரணத் தொகை, உணவு, துணிமணிகள் தருவது, இறந்தவர்கள் பற்றிய முழுமையான கணக்கெடுப்பு, குடும்பத்திற்கு தலா ரூ.25 லட்சம் நிவாரணம்; ரேசன் கார்டு உட்பட சான்றிதழ்களை வழங்குவதற்கான உடனடி முகாம்கள், இழப்புகளைப் பற்றிய முழுமையான ஆய்வு, மதிப்பீடு, நிவாரணம் வழங்குதல், நீண்ட கால நடவடிக்கைகளாக கடலூர் மாவட்ட ஏரிகளை தூர் வாருதல், பலப்படுத்துதல், பேரிடர் அலுவலகம், நிதி ஒதுக்குதல், என்எல்சி நிர்வாகம், சிப்காட் தொழிற்சாலைகளின் மக்கள் விரோத செயல்பாடுகளை தடுத்தல் போன்றவை அவசியம் என ஆய்வுக் குழு உணர்ந்தது.
துயர் துடைக்கும் பணிகளில் தோழர்கள்
கரிவெட்டி கிராமத்திலுள்ள 180 மாணவர்களுக்கு சுமார் ரூ.50,000 மதிப்புள்ள பாடப் புத்தகங்கள் மற்றும் பைகள் வழங்கப்பட்டன. இகக மாலெ கடலூர் மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தனவேல் தலைமையில் மாநிலக் குழு உறுப்பினர்கள் சந்திரமோகன், வெங்கடேசன் உதவிகளை வழங்கினர். பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர். விழுப்புரத்தை ஒட்டிய கடலூர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்ட மணலூர், நாச்சியார்பேட்டை மற்றும் சில கிராமங்களுக்கு உணவு, உடைகள் வழங்குவதில் தோழர் வெங்கடேசன் தலைமையில் விழுப்புரம் கட்சி கமிட்டி இறங்கியுள்ளது. மின்வாரிய டாக்டர் அம்பேத்கர் பணியாளர், பொறியாளர் சங்கம் சார்பில், தேவனாம்பட்டினம், நெல்லிக்குப்பம், குறிஞ்சிப்பாடி டி.வி.நல்லூர் தலித் குடியிருப்புகளுக்கு உணவு, உடைகள் வழங்கிடும் பணியில் ஆலோசகர் மகான் தலைமையில் ஈடுபட்டு உள்ளனர். பெரிதும் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்று சேர்வதற்கான முயற்சிகளில் தோழர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

படித்ததில் பார்த்ததில் சிந்தனையைத் தூண்டியவை
காம்ரேட்

நிலம் நீர் நீதி என்ற அட்டைப்படத் தலைப்புகள் வந்த 16.12.2015 தேதிய ஆனந்த விகடன் வலைப் பதிவுகள், ஆங்கிலம் மற்றும் தமிழ் தி இந்து நாளேடுகளில் வந்த இரண்டு கருத்துப் படங்கள், பேரிடர் கால அரசியல் தொடர்பான கூர்மையான விமர்சனங்களாய் அமைந்துள்ளன.
தமிழ்நாட்டில் எந்தச் சிறிய நிகழ்வுக்கும் நாம் கருணாநிதியை விமர்சிப்பவர்களாக இருப்போம். ஆனால், ஜெயலலிதாவை அந்த அளவுக்கு விமர்சிக்கவோ, அவரிடமிருந்து எதிர்வினையை எதிர்பார்ப்பவர்களாகவோ இருக்க மாட்டோம். ஏனென்றால்கருணாநிதியைப் போல்  ஜெயலலிதா எல்லாவற்றுக்கும் கருத்து சொல்பவராக எதிரிவினையாற்றுபவராக தன்னைக் காட்டிக் கொள்ள மாட்டார்.
அவர் சத்தமில்லாமல் செயல்படுபவராக தனது எதிர்வினையை எப்போதும் செயலில் மட்டுமே காட்டும் முதல்வராக நம்ப வைக்கப்பட்டார். இத்தகைய ஒரு இமேஜை அவருக்கு உருவாக்கிக் கொடுத்ததில் சில குறிப்பிட்ட ஊடகங்களுக்கும், சில அறிவுஜீவிகளுக்கும், ஒரு பகுதி சிவில் சமூகத்துக்கும் பங்கு உண்டு. ஜெயலலிதாவின் இந்த இமேஜ் இப்போது பலூனைப் போல வெடித்துச் சிதறியிருக்கிறது.
அவரது தலைமையிலான அரசாங்கம் செயல்படாத அரசாங்கம்தான் என்பதும், அது முழுக்க முழுக்க அடிமைகளால் மட்டுமே நிறைந்திருக்கிறது என்பதும் வெளிப்படையாகத் தெரிகிறது. இந்தப் பேரிடரை எதிர்கொள்வதில் அவரது அரசாங்கம் முழுக்கவும் தோற்றிருக்கிறது.
அவரது மந்திரிகள் மக்களைச் சந்திக்கவோ, மீடியாவுக்கு முகம் கொடுக்கவோ அலறுகிறார்கள். இந்த மழையை விட அவர்களுக்கு ஜெயாதான் பேரிடர். தாமாக ஒரு கருத்தைச் சொல்ல அஞ்சுகிறார்கள். வெறுப்பில் இருக்கும் மக்களிடம் அடிவாங்குவது ஒரு பக்கம் என்றால், சுயமாக செயல்பட்டு ஜெயாவிடம் உதை வாங்குவது இன்னொரு பக்கம் என்று தவிக்கிறார்கள். நிவாரணப் பொருட்களோடு சிறிய கட்அவுட் ஒன்றையும் தூக்கிக் கொண்டு திரிகிறார்கள்.
மீடியாவின் கேமரா தெரியும் போதெல்லாம், ஜெயாவின் புகைப்படம் ஒட்டப்பட்ட தட்டியை அசைத்துக் கொண்டே இருக்கிறார்கள். இடுப்பு வரை இருக்கும் தண்ணீரில் நின்றுகொண்டு குடிநீருக்காக கையேந்தும் மக்களுக்கு தனது தலைவியின் முகம் பதித்த தட்டியை அசைக்க ஒரு மனம் வேண்டும். கொஞ்சமும் சொரணை உணர்வற்றசுய மரியாதையின் சாரமற்ற, தனிமனிதத் துதியில் திளைக்கும் ஆபாச மனம் அது. அதை உருவாக்கியதில் எம்ஜியாரின் பங்கு அதிகம். ஜெயாவின் காலத்தில் இது ஆபாசத்தின் உச்சத்தை அடைந்திருக்கிறது.
அதிமுக என்பது ஏழைகளின் கட்சி என்ற போலி இமேஜைக் கூட ஜெயாவால் தக்க வைத்துக் கொள்ள முடியவில்லை. கட்சிக்காரர்கள் அனைவரும் கைவிடப்பட்ட மக்களின் முன்னால் புழுவைப் போல் நெளிந்து கொண்டிருக்கிறார்கள். என்ன செய்ய வேண்டும் என்று அவர்களுக்கு தெரியும். ஆனால் செய்ய முடியாது.
நிலைமை கையை மீறிப் போகிறது. மக்களே தெருவில் இறங்கி தங்களைக் காத்துக் கொள்ள முயல்கிறார்கள். ஒரு பண்பட்ட சிவில் சமூகமாக ஒன்றிணைகிறார்கள். அதை அனுமதிப்பது என்பது கிட்டத்தட்ட அரசு மக்களிடமிருந்து அப்புறப்படுத்தப்படுவதுதான். அதையும் சகிக்க முடியவில்லை. அதனால்தான் அந்த நிவாரணத்துக்கு உரிமை கொண்டாடி, அதில் ஆபாசமாக இணைகிறார்கள். உணவுப் பொட்டலங்கள் மீது தங்கள் தலைவியின் ஸ்டிக்கர்களை ஒட்டுகிறார்கள்.
மக்கள் காரி உமிழ்வார்கள் எனத் தெரியும் என்றாலும் சில நாட்களில் அது மறக்கும். ஸ்டிக்கர்கள்தான் நிலைக்கும் என்று நம்புகிறார்கள். அவர்கள் மக்களின் நனவிலியை நம்புகிறார்கள். இப்போது களத்தில் இருப்பவர்களெல்லாம் வீடு திரும்பினாலும், இந்தக் கேடுகெட்ட அரசாங்கத்தைத்தான்  மக்கள் நம்ப வேண்டும் என்று அவர்களுக்கு  தெரியும்.
ஜெயலலிதாவுக்கு எங்கிருந்து இவ்வளவு நம்பிக்கை வருகிறது? அவர் யாரை நம்பி இவ்வளவு அலட்சியமாக இருக்கிறார்? நம் எல்லோரையும்தான், அவருக்கு நிறைய ஆதரவாளர்கள் உண்டு. ஆனால், பொது வெளியில் அவர்கள் கருணாநிதி எதிர்ப்பாளர்கள் என்று அறியப்பட்டிருப்பார்கள். அரசின் தவறை மிக லாவகமாக சிவில் சமூகத்தின் அற வீழ்ச்சியாக சித்தரிப்பார்கள். அரசியல் பேச இது நேரம் இல்லையென்று பசப்புவார்கள். தனிமனித தாக்குதல் தவறு என்று மாண்பு காப்பார்கள். எல்லாவற்றையும் பயன்படுத்தி ஜெயலலிதாவைக் காப்பாற்றுவார்கள். அந்த பிம்பத்தை நிலைநிறுத்தப் படாதபாடு படுவார்கள்.
                ஏனெனில் இது ஸ்டிக்கர்களின் காலம்.
பொம்பளைப் பொறுக்கி, தண்டச் சோறு, ஒருமாதிரிப் பய...’ என்று யாரையெல்லாம் இந்த சமூகம் விளித்ததோ, அவர்கள்தான் இன்று கயிற்றைக் கட்டிக் கொண்டு கழுத்தளவு நீரில் கர்ப்பிணியைக் காப்பாற்ற உயிரைப் பணயம் வைக்கிறார்கள்; தான் சாப்பிடாமல் பசியில் இருப்பவர்களுக்கு உணவுப் பொட்டலங்களைச் சுமந்து செல்கிறார்கள்; அவசரச் செய்திகளை கண்ணிமைக்காமல் பகிர்கிறார்கள். பேரிடர் காலங்களில் சோ கால்டுரொம்ப நல்லவர்களைவைத்து ஒண்ணும் பண்ண முடியாது. ஒரு மாதிரிப் பசங்கதான் உயிரைக் கொடுத்து பல உயிர்களைக் காப்பாற்றிக் கொண்டிருக்கிறார்கள் வெளியிலும் பேஸ்புக்கிலும். வாழ்த்துக்கள் தம்பிகளா!
கருணாநிதியும், இடதுசாரிகள் இடம் பெற்றுள்ள மக்கள் நலக் கூட்டியக்கமும், ‘நாகரிக விசாரணைஅரசியல் நடத்தி வீணாய்ப் போன நாடாளுமன்ற ஜனநாயக விழுமியங்களை உயர்த்திப் பிடித்துக் கொண்டிருந்தபோது, விகடன் வலைப்பதிவுகளும் இந்து கருத்துப் படங்களும் கூடுதல் சொரணையுடன் இருந்தன. கருணாநிதி வெறும் ரூ.1000 கோடி நிவாரணம் அறிவித்து பறந்து போன மோடியைப் பாராட்டி, தமது பெரிய மனிதத்தனத்தை (!) நிறுவிக் கொண்டார். ஜெயலலிதா மீதான விமர்சனங்கள் கருணாநிதி நோக்கி நீளாமல் போய்விடுமா? சில இடதுசாரிக் கட்சிகள், இழவு வீட்டில் அரசியல் செய்யக் கூடாது என்ற உயர்ந்த நல்லெண்ணத்தை(!) புவி வெப்பமயமாதலால் நேர்ந்த இயற்கைப் பேரிடர் எனச் சொல்வது வரை எடுத்துச் சென்றனர். ஜெயலலிதா அரசு தப்பிக்க துணை போகும் இவர்கள், நரகத்துக்கான பாதை நல்லெண்ணங்களால் போடப்படுகிறது என்று லெனின் சொன்னதை மறந்து விடுகிறார்கள். (இது போன்ற நல்லெண்ணங்கள் நாடாளுமன்ற முடக்குவாதத்தில் ஊறிப் போனதால் ஏற்படுகிற குட்டி முதலாளித்துவ தப்பெண்ணங்களே).
ஜெயலலிதா அரசாங்கமும் அஇஅதிமுகவினரும்தான் தமிழ்நாட்டுக்கு நேர்ந்த மானுடப் பேரிடர்கள், மாபெரும் அவலம் சோகம் என்பதை தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்துள்ளனர். போக்குவரத்து, மின்சாரம், சாதாரண காவலர்கள், தீயணைப்புத் துறையினர், அரசு மருத்துவர்கள், மருத்துவமனை ஊழியர்கள், துப்புரவு தொழிலாளர்கள் உள்ளிட்ட பொதுத்துறை அரசு ஊழியர்கள், சமூக ஊடகத்தினரின் செயல்பாடு, அதிநவீன மூளையும் ஈரமில்லாத இதயமும் கொண்ட தனியார்மயத்துக்கு நேரெதிராகப் புலப்பட்டது. அரசாங்கத்தின் குற்றமய அலட்சியம் ஆளும் கட்சியினர் அராஜகம் ஆகியவற்றின் முன், இளையவர்களின், சாமான்ய மக்களின், குடிமை சமூகத்தின் மீட்பு/நிவாரண நடவடிக்கைகள் உயிர்த் துடிப்புடைய மக்கள் சார்பு மனித நேயத்துக்கு சான்று கூறி நின்றன.

நரவேட்டைக்காரர் அரசில் மெல்லச் சாகடிக்கப்படும் நூறு நாள் வேலைத் திட்டம்

2013ல் நாட்டை விட்டு சட்டவிரோதமாக வெளியே போன கருப்புப் பணம் 83.01 பில்லியன் டாலர் (ரூ.5,39,565 கோடி). கடந்த பத்து ஆண்டுகளில் ஒவ்வோர் ஆண்டும் சராசரியாக 51.02 பில்லியன் டாலர் (ரூ.3,31,630 கோடி) கருப்புப் பணம் இந்தி
யாவை விட்டு வெளியேறுவதாக வாஷிங்டனில் உள்ள ஓர் ஆய்வு நிறுவனம் சொல்கிறது. இந்த ஆய்வு குறிப்பிடும் கால கட்டத்தில் மோடி ஆட்சி நடக்கும் காலமும் உண்டு. கருப்புப் பணத்தை திரும்பக் கொண்டு வருவதற்கான மோடி ஆட்சியின் போர்த்தந்திரம் பயனற்றது என்று இன்போசிஸ் நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர் மோகன் தாஸ் பாய் சொல்கிறார்.
ஆண்டுக்கு ரூ.5 லட்சம் கோடிக்கும் மேல் அரசு கருவூலத்துக்கு வர வேண்டிய நிதியை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விட்டுக்கொடுப்பது மட்டுமின்றி ரூ.3 லட்சம் கோடிக்கும் மேல் சட்டவிரோதமாக நாட்டை விட்டு வெளியே போவதையும் வேடிக்கைப் பார்க்க எதற்கு ஓர் அரசு, அமைச்சர்கள், துறைகள், அதிகாரிகள், அலுவலகங்கள், சிறப்புச் சலுகைகள், ராணுவம், காவல்துறை, நுண்ணறிவு பிரிவு, பாதுகாப்பு இத்யாதி... இத்யாதி...? (வாயில நல்லா வருது...)
கருப்புப் பணத்தை மீட்டுக்கொண்டு வந்து கட்டிப் போடுகிறேன் பார் என்று வாய்ச்சவடால் அடித்தவர்கள் அதில் எள்முனையைப் பார்த்து விட்டோம் என்று சொல்லி ஏமாற்றுகிறார்கள். மறுபுறம், ஏழைபாழை மக்களுக்கென்று ஏதோ கொஞ்சம் இருப்பதை திட்டம் போட்டு வெட்டுகிறார்கள். அவர்களால் வெட்டப்பட்டு சிதைந்துபோய் கிடப்பதில் ஒன்று தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம். மோடியின் ஆட்சி புதிய இந்தியாவை உருவாக்கப் போவதாகச் சொல்வதற்கு, குத்து (பஞ்ச்) வசனமாக பேசுவதற்கு பின்னால் அவரது ஆட்சி மக்கள் விரோத நடவடிக்கைகளை எந்த அளவுக்கு லாவகமாக செலுத்துகிறது என்பதற்கு நூறு நாள் வேலைத் திட்டம் எடுத்துக்காட்டு.
திட்டத்தை அறிமுகப்படுத்திய அய்முகூ ஆட்சிக் காலத்திலேயே அது முழுமையாக அமலாகவில்லை. அமலானதும் நாட்டு மக்களின் விடாப்பிடியான போராட்டங்களால்தான்மோடி ஆட்சியில் வறிய மக்கள் கையில் இருக்கும் ஓரளவு வாழ்வாதாரமான இந்தத் திட்டம் குழிதோண்டி புதைக்கப்படுகிறது. திட்டத்தில் மோடி ஆட்சியில் கூலி பாக்கி ரூ.3,200 கோடி என்று சமீபத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கு, திட்டத்தின் கொடுமையான நிலைமை பற்றி நாட்டு மக்களுக்குச் சொல்கிறது.
பொது விநியோகத் திட்ட முறைகேடுகளை தடுக்க பொது விநியோகத் திட்டத்தை முடக்கும் அறிவாளிகள் நிறைந்த நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தை மிகவும் வறிய மக்கள் இருக்கும் இடங்களில் கவனம் குவித்து அமலாக்குவது என்ற பெயரில் வேலை நாட்கள் ஒதுக்கீடு வெட்டப்பட்டது. தனது வாகன ஓட்டுநர் முதல் பலர் பெயரில் போலி நிறுவனங்களை நடத்தும் திறன் பெற்ற நிதின் கட்கரி ஊரக வளர்ச்சி அமைச்சராக பொறுப்பேற்றிருந்த போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு திட்டம் மேலும் சிக்கலுக்குரியதாக்கப்பட்டது. தேவைக்கு ஏற்ப சில மாவட்டங்களில் கூடுதல் நாட்கள் வேலை, சில மாவட்டங்களில் குறைவு நாட்கள் வேலை என்பது கேட்பதற்கு நியாயம் போல் இருந்தாலும் அமல்படுத்தப்பட்டபோது கூடுதல் வேலை நாட்கள் ஒதுக்கப்பட்ட மாவட்டங்களுக்கு கூடுதல் நிதி தேவைப்பட மற்ற மாவட்டங்களில் வேலை பாதித்தது. கூடுதல் வேலை நாட்கள் தரப்பட்ட மாவட்டங்களிலும் ஒதுக்கப்பட்ட நிதி, குறித்த காலத்தில் வராமல் கூலி கொடுப்பது பாதிக்கப்பட்டது.
நிதி ஒதுக்கீடு: 2015 - 2016 நிதிநிலை அறிக்கையில் திட்டத்துக்காக ஒதுக்கப்பட்ட நிதி ரூ.34,699 கோடி. இது முந்தைய நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டதை விட ரூ.699 கோடி கூடுதல். இதற்கு மேல் வருவாய் வந்தால் கூடுதலாக ரூ.5,000 கோடி ஒதுக்கப்படும் என்று அருண் ஜெட்லி சொன்னார். ஆனால், 2014 - 2015ல் திட்டத்தின் கீழ் மத்திய அரசு மாநில அரசுகளுக்கு தர வேண்டிய நிலுவைத் தொகை ரூ.5,374.21 கோடி. கூடுதலாக ஒதுக்கப் பட்டாலும் நிலுவைத் தொகைக்கு சரியாகப் போய், ஒதுக்கீடு துவங்கிய இடத்தில் நிற்கும். திட்டத்தையே வெட்டிச் சுருக்கிவிட்டால் நிதி ஒதுக்கீடு பற்றி யார் கேள்வி கேட்க முடியும்? இந்த முறையையே மோடி அரசு கைக்கொண்டிருப்பதாகத் தெரிகிறது. ஏனென்றால், 2015 - 2016ல் இது வரை ரூ.27,146.68 கோடிதான் செலவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் மூன்று மாதங்களில் ரூ.7,000 கோடிக்கு வேலைகளை சுருக்கி நிறுத்திவிடுவார்கள்.
வேலை நாட்கள்: 2015 ஜனவரி முதல் மார்ச் வரை திட்டத்தின் கீழ் தரப்பட்ட வேலைகள் இதே கால கட்டத்தில் 2014ல் தரப்பட்ட வேலைகளை விட பாதிக்கும் மேல் குறைவு. 2014 ஏப்ரலில் தரப்பட்ட வேலைகளை விட 2015 ஏப்ரலில் தரப்பட்ட வேலைகளும் குறைவு. 2013 - 2014ல் 259 கோடி வேலை நாட்களுக்கான திட்டம் இருந்தது. 2014 - 2015ல் அது 221 கோடி வேலை நாட்களாக குறைக்கப்பட்டுவிட்டது. இதற்கேற்றாற்போல், 2014 - 2015ல் இருந்த வேலை நாட்கள் 166 கோடியில் நின்றுவிட்டது. 2015 - 2016ல் இது வரை 122 கோடி வேலை நாட்கள் மட்டுமே உருவாகியுள்ளன. நூறு நாள் வேலைத் திட்ட வேலைகளைக் கூட கூடுதலாக உருவாக்க முடியாதவர்கள் மேக் இன் இந்தியா என்று பேசுகிறார்கள். நூறு நாள் வேலைத் திட்ட வேலைகள் நம் நாட்டில் அரசின் கட்டுப்பாட்டில் உருவாக்கப்பட வேண்டியவை. அந்த தளத்திலேயே இந்த அளவுக்குத் தோல்வி என்றால், வெளிநாட்டு மூலதனம் வந்து செய்யப் போகிற மேக் இன் இந்தியா, வேலை வாய்ப்பு என மோடி சொல்வது வெற்றுப் பேச்சு.
நூறு நாட்கள் வேலை பெற்ற குடும்பங்கள்: 2013 - 2014ல் 46,58,234 குடும்பங்களுக்கு 100 நாட்கள் வேலை தரப்பட்டது. 2014 - 2015ல் இந்த எண்ணிக்கை 24,91,509 மட்டுமே. 2015 - 2016ல் இது வரை நூறு நாட்கள் வேலைகள் பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை 10,48,069. நூறு நாட்கள் வேலை பெற்ற குடும்பங்களின் எண்ணிக்கை அடுத்தடுத்து 50%க்கும் மேல் குறைந்து வந்துள்ளது.
கூலி, கூலி பாக்கி: 2013 - 2014ல் தரப்பட்ட கூலி ரூ.26,491.21 கோடி. 2014 - 2015ல் ரூ.24,196.63 கோடி. 2015 - 2016ல் இன்னும் மூன்று மாதங்களே மீதமுள்ள நிலையில் இதுவரை தரப்பட்ட கூலி ரூ.20,000 கோடியை எட்டவில்லை. கூலி பாக்கி ரூ.2,476.64 கோடி. முந்தைய ஆண்டுகளிலும் ரூ.320 கோடி, ரூ.470 கோடி, ரூ.552 கோடி என கூலி பாக்கி உள்ளது. தந்து விட்டார்களா என்று அந்த இணையப் பக்கத்தில் தகவல் இல்லை. 2014ன் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் ரூ.1,323 கோடி கூலி பாக்கி இருந்ததாகச் செய்திகள் உள்ளன. சமூக செயல்பாட்டாளர் அருணா ராய் தொடுத்துள்ள பொது நல வழக்கு, ரூ.3,200 கோடி கூலி பாக்கி இருப்பதாகச் சொல்கிறது என்றால், முந்தைய ஆண்டுகள் கூலி பாக்கியும் இன்னும் தரப்படவில்லை என்றுதான் தெரிகிறது. மார்ச் 31, 2015ல் இருந்து ரூ.241 முதல் ரூ.159 வரை குறைந்தபட்ச கூலி மாற்றியமைக்கப்பட்டுள்ள நிலையில், ஒரு தொழிலாளிக்கு சராசரியாக ரூ.160 கூலி தரப்பட்டுள்ளது. அதாவது குறைந்தபட்சக் கூலி கிட்டத்தட்ட தரப்படவில்லை என்று நாம் சொல்ல முடியும்.
தமிழ்நாடு: நூறுநாட்கள் வேலைத் திட்ட அமலாக்கத்தில் சிறந்து விளங்கும் மாநிலம் என்று சொல்லப்பட்டதாக தமிழக ஆட்சியாளர்கள் பெருமை பேசிக் கொண்டாலும், திட்டமிடப்பட்ட வேலை நாட்கள், அவற்றில் உருவாக்கப்பட்ட வேலை நாட்கள், நூறு நாட்கள் வேலை பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை என எல்லா விதங்களிலும் நாடு முழுவதும் உள்ள படுபாதக நிலையே தமிழ்நாட்டிலும் உள்ளது.
மார்ச் 31, 2015ல் இருந்து தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டத்தில் குறைந்த பட்சக் கூலி ரூ.183. இந்த கால கட்டம் தமிழ்நாட்டில் நூறு நாள் வேலைத் திட்டம் முடங்கிப் போன காலகட்டம். திட்டத்தில் வேலை கிடைத்து யாரும் இந்தக் கூலி வாங்கியதாகத் தெரியவில்லை. அரசு தரும் கணக்குப்படி சராசரியாக ஒரு தொழிலாளி ரூ.131 கூலி பெற்றுள்ளார். 2015 - 2016ல் இது வரை கூலி பாக்கி ரூ.94 கோடி.
2014 ஏப்ரல் முதல் 2015 நவம்பர் வரை திட்டமிடப்பட்ட வேலை நாட்களை விட உருவாக்கப்பட்ட வேலை நாட்கள் 6 கோடி முதல் 13 கோடி வரை குறைவு.
2013 - 2014ல் 9,20,784 குடும்பங்களுக்கு நூறு நாட்கள் வேலை கிடைத்தது என்றால், 2014 - 2015ல் இது 3,33,005 என மூன்று மடங்கு குறைந்துவிட்டது. 2015 மார்ச்சுக்குப் பிறகு இது வரை 1,71,347 குடும்பங்கள் மட்டும் நூறு நாட்கள் வேலை பெற்றுள்ளன. இதுவும் முந்தைய ஆண்டை விட மூன்று மடங்கு குறைவு.

மனிதப் படுகொலைக்கு துணை போனவர் ஒருவர்; பெரும் மனிதத் துயரம் நடக்க காரணமாக இருந்தவர் இன்னொருவர். இருவருமே, இந்தப் படுகொலைகளையும் துயரங்களையும் ஒரு பொருட்டாகக் கருதாமல் கடந்து செல்லப் பார்ப்பவர்கள். இவர்களிடம் நாட்டு மக்கள் நல்வாழ்வு காக்கும் நடவடிக்கைகளை, அவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் நடவடிக்கை களை நாம் எதிர்ப்பார்க்க முடியாது.

Search