COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, December 16, 2015

மாலெ தீப்பொறி டிசம்பர் 16 – 30 2015

கோவை பிரிக்கால் கொலைச் சதி வழக்கில் தொழிலாளர் முன்னோடிகள் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை
நீதி கேட்டு மாநிலம் முழுவதும் எதிர்ப்பியக்கம்

2005க்குப் பிறகு தமிழகத்தில் ஆட்டோமொபைல் தொழிற்சாலைகளில் தொழிற்சங்கம் அமைக்க எதிர்ப்பு, அங்கீகாரம் மறுப்பு என்ற பின்னணியில் பல்வேறு போராட்டங்கள் பல்வேறு சங்கத் தலைமைகளின் கீழ் நடைபெற்று வந்தன. உரிமைகள் மறுக்கப்பட்டுக் கிடந்த கோவை பிரிக்கால் தொழிலாளர்கள் போராடும் புரட்சிகர தொழிற்சங்கமான ஏஅய்சிசிடியுவை துவக்குகிறார்கள். நிர்வாகத்தின் பாட்டுக்கு ஆடும் தொழிற்சங்கங்களையே பார்த்துப் பழகிய தொழிலாளர்கள், தொழிலாளர்களின் குரலை ஒலிக்கின்ற ஏஅய்சிசிடியுவைக் கண்டார்கள். நிர்வாகத்தின் எவ்வித தாக்குதலைûயும் முறியடித்து முன்னேற உறுதி பூண்டார்கள். பல்வேறு பெயர்களில் நிரந்தரம், யூனிட் தொழிலாளி, ஒப்பந்த தொழிலாளி என பிரிந்து கிடந்த தொழிலாளர்கள் 4,000  பேர் ஒரே சங்கம் எனத் திரண்டது நிர்வாகத்துக்கு அதிர்ச்சி  அளித்தது. ஆயிரக்கணக்கான வெண்டார் யூனிட் தொழிலாளர்கள் வெளியேற்றம், சம்பள வெட்டு, தற்காலிக பணி நீக்கம், கிரிமினல் வழக்குகள் மாதக் கணக்கில் சிறை, விசாரணைகள் என சகலத்தையும் தொழிற்சங்க இயக்கத்தை முடக்கிப் போட பயன்படுத்தியது. எல்லாவற்றையும் எதிர்கொண்டு 1,000 நாட்களுக்கும் மேலாக உறுதியாக பயணம் தொடர்ந்தது. சங்கம் பல்வேறு போராட்ட உத்திகளைக் கையாண்டது. தொழிற்சங்க எல்லைகளைத் தாண்டி பகுதி மக்களோடு இணைந்து நின்றது. தமிழக தொழிலாளர் வர்க்கத்துக்கு ஆதர்சமாக இருந்தது.
இந்தப் பின்னணியில் 2009 செப்டம்பரில் பிரிக்கால் நிறுவனத்தின் மனித வளமேம்பாட்டுத் துறையின் தலைவர் திரு.ராய் ஜார்ஜின் மரணம் நிகழ்கிறது. இதை பயன்படுத்திக் கொண்ட நிர்வாகம் கொலைச் சதி வழக்கைப் பின்னியது. இகக (மாலெ) அரசியல் தலைமைக் குழு உறுப்பினரும் ஏஅய்சிசிடியு அகில இந்திய தலைவருமான தோழர் எஸ்.குமாரசாமி உட்பட சதித் திட்டம், கொலை என 27 தொழிலாளர்கள் மீது பழி சுமத்தியது. அதை ஒட்டி காவல்துறை ஒடுக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது. காவல்துறை முதல் மத்திய அமைச்சர்கள் வரை தங்களது முதலாளித்துவ விசுவாசத்தைக் காட்டினர். ஆனால் எத்தகைய சூழலிலும் போராட்ட உணர்வுத் தீ அணையாமல் பாதுகாக்கப்பட்டது.
இப்போது டிசம்பர் 3, 2015 அன்று கோவை குண்டுவெடிப்பு சிறப்பு நீதிமன்றத்தில் கொலைச் சதி வழக்கின் தீர்ப்பு பகிரப்பட்டது. மொத்தம் 27 பேரில் 8 பேருக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியும், மற்றவர்களை விடுதலை செய்தும் தீர்ப்பளிக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி தரும், சாட்சியங்களுக்கு புறம்பான, முதலாளித்துவ வர்க்க நலனிலிருந்து வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக டிசம்பர் 3 அன்றே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. தீர்ப்பு பற்றி அறிந்த பிரிக்கால் பிளான்ட் 3 தொழிலாளர்கள் தீர்ப்பு பற்றி விவரம் தெரிந்து கொள்ள ஆலைக்குள் ஒரு மணி நேரம் கூடி நின்றனர்.
தீர்ப்பு அன்று காலை முதலே பிரிக்கால், சாந்தி கியர்ஸ் ஆலைகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான தொழிலாளர்களும் இகக மாலெ. ஏஅய்சிசிடியு தலைவர்களும் நீதிமன்ற வாயிலில் கூடியிருந்தனர். நீதிமன்றத்தில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
8 தொழிலாளர்களும் மாலை சிறைச் சாலைக்கு கொண்டு செல்லப்பட்டபோதுபிரிக்கால் போராட்ட வீரர்களே, உங்களை நாங்கள் விடமாட்டோம், உங்களை நாங்கள் பாதுகாப்போம்என காலையிலிருந்து காத்துக் கிடந்த தொழிலாளர்கள் முழுக்கமிட்டனர். தெற்குத் தாலுகா அலுவலகம் முன் நடைபெற இருந்த ஆர்ப்பாட்டத்துக்கு அனுமதி மறுத்து காவல்துறை கடிதம் கொடுத்திருந்தது. ஆனாலும், தடையை மீறி ஆண்களும் பெண்களுமான 500க்கும் மேற்பட்டோர் அணி திரண்டனர். ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர் குமாரசாமி உரையாற்றினார். “தீர்ப்புக்கு எதிராக உயர்நீதிமன்றத்துக்கு செல்கிற அதே வேளை, இந்த மக்கள் மன்றத்திலும் எடுத்துச் செல்வோம். அஞ்ச வேண்டாம் நமக்கு புரட்சிகர தொழிற்சங்கமும் செங்கொடியும் என்றென்றும் பாதுகாப்பாக இருக்கும்என்று எழுச்சிமிகு உரையாற்றினார். ஏஅய்சிசிடியு அகில இந்திய துணைத் தலைவர் தோழர் ஸ்வப்பன் முகர்ஜி, இகக (மாலெ) மத்திய கமிட்டி உறுப்பினர் தோழர் வீ.சங்கர், இகக மாலெ மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் கோவையில் முகாமிட்டிருந்தனர். டிசம்பர் 4 அன்று கோவையில்  பத்திரிகையாளர்களையும் சந்தித்தனர்.
நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் ஏஅய்சிசிடியு மாநிலச் செயலாளர் தோழர் கோவிந்தராஜ் தலைமையில் டிசம்பர் 3 அன்றே தோழர்கள் கே.ஆர்.குமாரசாமி, சுப்பிரமணி, மேகநாதன், மாரியப்பன், தண்டபாணி உட்பட மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். 17 பேரை கைது செய்த காவல்துறை பின்னர் விடுதலை செய்தது.
சென்னை அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வெள்ளச் சேதம், பாதிப்பு, கொட்டும் மழைக்கிடையில் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் முனுசாமி தலைமையில் எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை முழுவதும் கண்டன சுவரொட்டிகள் ஒட்டப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் சேகர், மோகன், தேவகி, வழக்குரைஞர்கள் சங்கர், புகழ்வேந்தன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
தீர்ப்பு வெளியான அன்று மாலையே திருநெல்வேலியில் ஏஅய்சிசிடியு மாநிலப் பொதுச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் கணேசன், சுந்தர்ராஜன், கருப்பசாமி, தமிழ்ச்செல்வி, திலகவதி ஆகியோர் கலந்து கொண்டனர்.
டிசம்பர் 4 அன்று செங்குன்றத்தில் ஏஅய்சிசிடியு மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் அன்புராஜ் தலைமையில் 75 பேர் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இகக மாலெ திருவள்ளூர் மாவட்டச் செயலாளர் தோழர் ஜானகிராமன், அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர் தோழர் சீதா மற்றும் கார்க்கி வேலன் உரையாற்றினர்.
டிசம்பர் 3, பிரிக்கால் தீர்ப்பு அன்று புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டையில் இகக மாலெ மாவட்டக் குழு உறுப்பினர் தோழர் தங்கராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் தோழர் பழ.ஆசைத்தம்பி, மாநிலக் குழு உறுப்பினர் தோழர் வளத்தான் உட்பட பலர் கலந்து கொண்டனர்
கரூரில் தோழர் இராமச்சந்திரன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தோழர்கள் பால்ராஜ், சந்திரசேகர், ரகுமான் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கரூர் ஆகிய மய்யங்களில் உடனடியாக சுவரொட்டி வெளியிடப்பட்டது.
மாநிலத்தின் பல பகுதிகளிலும் இரட்டை ஆயுள் தண்டனையில் சிறைக்கு அனுப்பப்பட்ட எட்டு பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்டு சுவரொட்டிகள், துண்டுப் பிரசுரங்கள் மூலம் மக்கள் மன்றத்தில் பிரச்சாரம் எடுத்துச் செல்லப்படுகிறது.

பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து டெல்லியில் ஆர்ப்பாட்டம்

சிறை சென்ற பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்து
தலைநகர் டெல்லியில் டிசம்பர் 8 அன்று ஏஅய்சிசிடியு ஆர்ப்பாட்டம் நடத்தியது.
பிரிக்கால், மாருதி, கிராசியானோ, ரீஜெண்ட் செராமிக் சம்பவங்கள்
தொழிற்சாலை ஜனநாயகம் மறுக்கப்பட்டதன் விளைவுகளே எனவும்,
பிரிக்கால் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாடு தெரிவித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஏஅய்சிசிடியு தேசியச் செயலாளர் தோழர் சந்தோஷ்ராய் உட்பட பலரும் கலந்து கொண்டனர்

Search