COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Wednesday, December 2, 2015

சாதியாதிக்க சக்திகளை ஊக்குவிக்கும் ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவு கட்டுவோம்!
சுதந்திரம் எனது பிறப்புரிமை என்று சொன்னவர்களை, தொண்டு செய்யும் அடிமை உனக்கு சுதந்திர நினைவோடா என்று வெள்ளையன் கேட்டதாக, பாரதி எழுதினான். அன்று வெள்ளையன் கேட்டதாக அவன் சொன்ன கேள்வியை, இன்று தமிழகத்தின் எல்லாத் திசைகளிலும் ஆதிக்க சாதியினர் தலித் மக்களிடம் கேட்கிறார்கள். சாதிச் சண்டை போச்சோ, உங்கள் சமயச் சண்டை போச்சோ என்றும் வெள்ளையன் கேட்டானாம். இல்லை என்று இன்று நாம் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.
நாமக்கல்லைச் சேர்ந்த அந்த ஆசிரியருக்கு எந்த அளவுக்கு சாதித் துவேஷம் இருந்திருக்க வேண்டும்? ஏழு வயது சிறுவன். அவன் மனத்தில் அந்த பாகுபாடு, அந்த ஒடுக்குமுறை எந்த அளவுக்கு ஆறாக்காயத்தை ஏற்படுத்தும் என்று நன்றாகத் தெரிந்துதான் அந்த ஆசிரியர் செய்ததாகத் தெரிகிறது. தலித் சிறுவன் கல்வி கற்க வருவது அந்த ஆசிரியருக்கு அந்த அளவுக்கு பொறுத்துக் கொள்ள முடியாததாக இருந்துள்ளது. அந்த அரசுப் பள்ளியில் அதே ஆசிரியர் இதற்கு முன்பும் சாதி வெறியுடன் நடந்துகொண்டுள்ளதாக அந்தப் பள்ளியில் படிக்கும் தலித் மாணவர்களின் பெற்றோர் சொல்கின்றனர். சென்ற ஆண்டு பள்ளியில் நடந்த கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்க தலித் மாணவர்கள் அனுமதிக்கப்படவில்லை என்றும் செய்திகள் சொல்கின்றன. தலித் மாணவனை மலம் அள்ளச் சொன்ன அந்த ஆசிரியர், அவரே ஏன் அதை செய்திருக்கக் கூடாது? அல்லது மலம் கழித்த மாணவனை அழைத்து சுத்தமும் செய்யச் சொல்லியிருக்கலாமே. தூய்மை யாராவது செய்வார்கள், அதில், தூய்மை செய்தவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, ‘தூய்மையாக’ இருப்பது குற்றம் இல்லை என்று சாதியாதிக்க திமிர் இன்னமும் கருதுகிறது.
வெண்மணியில் குழந்தைகளை உயிரோடு தீயிலிட்டுக் கொளுத்தியதற்கும் இதற்கும் சாதியாதிக்க தீவிரத்தில் பெரிதும் வித்தியாசம் இல்லை. அன்று அந்தக் குழந்தைகள் உயிரிழந்தன. இன்று அந்தப் பள்ளியில் படிக்கும் தலித் குழந்தைகள் உளவியல் ரீதியாக காலத்துக்கும் பாதிக்கப்பட்டுவிட்டன. சக மாணவர்கள் கேலி செய்ததால் அந்த தலித் மாணவன் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிவிட்டதாக பெற்றோரும் மற்றோரும் சொல்கின்றனர். எந்த விலையில்லா பொருள் கொடுத்து இந்த பாதிப்பை ஜெயலலிதா ஆட்சி ஈடு கட்டும்? வன்கொடுமைச் சட்டம் நீக்கப்பட வேண்டும் கூச்சல் போடும் ராமதாசும் அன்புமணியும் இந்தக் கொடுமைக்கு என்ன பதில் சொல்வார்கள்?
கம்யூனிஸ்டுகளும் மற்றவர்களும் படாதபாடுபட்டு உயிர்த் தியாகம் செய்து முற்போக்கு விழுமியங்களை வளர்த்தெடுத்த மண் இது. அந்த தலித் குழந்தைகள் எதிர்கொண்ட பாதிப்பில் இருந்து மீள்வதற்கான சூழல் நிச்சயம் உருவாக்கப்பட்டுவிடும். நடந்திருப்பது அரசியல் சாசன உரிமை மீறல். அந்த ஆசிரியரை கைது செய்தாகிவிட்டது. அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். அத்துடன் பிரச்சனை முடிந்துவிடாது. கொடுங்குற்றம் செய்ததோடு, பாதிக்கப்பட்ட மாணவனுக்கு டிசி கொடுத்து அனுப்பச் சொல்லி அந்த ஆசிரியர் ஆணவத்துடன் பேசியுள்ளார். தலித் மக்களின் அரசியல் சாசன உரிமைகளை பாதுகாக்கும் கடமையை நிறைவேற்றத் தவறிய ஜெயலலிதா அரசு இந்த சாதிய கொடுமைக்கு பொறுப்பேற்க வேண்டும். எழுத்தறிவிக்கும் வேலையை விட்டுவிட்டு சாதி பாகுபாடு அறியச் செய்த அந்த ஆசிரியரை, காலம் தாழ்த்தாமல் பொருத்தமான தண்டனைக்கு உட்படுத்த வேண்டும். அந்தப் பகுதியின் தலித் மாணவர்கள் அச்சமின்றி, தயக்கமின்றி சுதந்திரமாக பள்ளிக்குச் செல்லும் சூழல் உருவாக்கப்பட இது முதல் நிபந்தனையாக இருக்கும். கல்வி வியாபாரமாகிவிட்ட சூழலில், பாதிக்கப்பட்ட மாணவன் கல்லூரிப் படிப்பு முடிக்கும் வரை அவனது மொத்த கல்விச் செலவையும் தமிழக அரசு ஏற்க வேண்டும்.
அந்தப் பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பப் போவதில்லை என்று அந்தப் பகுதியின் தலித் பெற்றோர்கள் முடிவு செய்துள்ளதாகச் சொல்லப்படுகிறது. தலித் மாணவர்கள் ஏன் அந்தப் பள்ளிக்குச் செல்லாமல் இருக்க வேண்டும்? பிரச்சைனையை மூடி மறைக்கப் பார்த்த தலைமை ஆசிரியர், சாதியாதிக்க வெறியுடன் அந்தப் பள்ளியில் திரியும் மற்றவர்கள் யார் என்று பார்த்து அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். இந்த குறைந்தபட்ச நடவடிக்கைகள் கூட எடுக்காவிட்டால் மக்கள் ஜெயலலிதா அரசை மன்னிக்க மாட்டார்கள்.
வசதி படைத்தவர்கள் வசதியில்லாதவர்கள் என்று ஏற்கனவே கல்விச் சூழல் கடுமையான பாகுபாட்டுக்கு உள்ளாக்கப்பட்டுவிட்டது. தனியார் பள்ளிகளில் குறித்த காலத்தில் கட்டணம் செலுத்த முடியாத மாணவர்கள், தலித் மக்களை ஊருக்கு வெளியே நிற்க வைத்ததைப் போல, வகுப்புக்கு வெளியே நிற்க வைக்கப்படுகிறார்கள். உலகமய கல்விச் சூழல் வருணாசிரம முறையை திணித்துவிட்டது. இப்போது சாதி நச்சு நேரடியாக திட்டமிட்டு கலக்கப்படுகிறது. நெல்லை மாவட்ட ஆட்சியருக்கும் தமிழக அரசின் சமூகநலத் துறைக்கும் தேசிய மனித உரிமை ஆணையம் அனுப்பியுள்ள அறிவிப்பாணை, கல்விச் சூழலில் சாதி வெறி நச்சைக் கலக்கும் முயற்சிகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வந்துள்ளது. நெல்லை மாவட்டப் பள்ளிகளில் கையில், கழுத்தில் கயிறு அணிவது, குறிப்பிட்ட நிறத்தில் நெற்றியில் கீற்று என சாதிய அடையாளத்துடன் மாணவர்கள் காணப்படுவதாகவும் இது பற்றி அறிக்கை வேண்டும் என்றும் தேசிய மனித உரிமை ஆணையம் தமிழக அரசிடம் கேட்டுள்ளது.
சாதியை அடையாளப்படுத்தும் நிறத்தில் கயிறு அணியும் பழக்கம் பள்ளி மாணவர் மத்தியில் இருப்பதாக, நாயக்கன்கொட்டாய் பற்றியெரிந்த பின்னணியில் பரவலாகப் பேசப்பட்டது. தலித் சாதியைச் சேர்ந்த இளைஞனை காதலித்த மேல்சாதி பெண்ணை கொன்று சாதி கவுரவத்தை காப்பாற்ற வேண்டும் என்று மேல் சாதிக்காரர்கள் ‘பெத்தவனை’ நிர்ப்பந்திப்பது போல், மேல்சாதி அடையாள கயிறோ, நிறமோ அணியாத மாணவர்களை சக மாணவர்கள் நிர்ப்பந்தப்படுத்துவதாகவும் சொல்லப்படுகிறது. (யுவராஜ்கள் இப்படித்தான் முளைக்கிறார்கள். களம் அமைத்துக் கொள்கிறார்கள்). சாதிகள் இல்லையடி பாப்பா என்று சொல்லித் தர வேண்டிய பள்ளிகளில் சாதிகள் பல உண்டு என்று சொல்லித் தரப்படுகிறது.
நாமக்கல்லில் பாதிக்கப்பட்ட மாணவனின் குடும்பத்தை இகக மாலெ மாநிலக் குழு உறுப்பினர் தோழர் எ.கோவிந்தராஜ் தலைமையிலான குழு சந்தித்தது. அந்த மாணவனின் தந்தை அஇஅதிமுகவைச் சேர்ந்தவர். அவர் ஆளும் கட்சியினரிடம் இந்தப் பிரச்சனை பற்றி பேசியபோது, அப்படியே விட்டுவிடுங்கள் என்று அவருக்கு அறிவுறுத்தப்பட்டதாம். அதன் பிறகுதான் பகுதி மக்கள் ஆதரவுடன் காவல்துறை புகார், போராட்டம் என்று சென்றிருக்கிறார். தேர்தல் சமயத்தில் தங்கள் சாதி வாக்குகளுக்கு பாதிப்பு வந்துவிடக் கூடாது என்று அஇஅதிமுக காரர்கள் எச்சரிக்கையாக இருக்கிறார்கள். தலித் மக்கள் மீது நடக்கும் வன்முறைகளை மறைக்க, குறைத்துக் காட்ட, சாதியாதிக்க சக்திகளை ஊக்குவிக்க, முனைப்பு காட்டுகிறார்கள். அதன் மூலம் வாக்கு வங்கியை மேலும் விரிவாக்கலாம் என்று கணக்குப் போடுகிறார்கள். சாதிக் கணக்குகளுக்கு அப்பாலும் மக்கள் வேறு கணக்குகள் போடுவார்கள் என்பதை பீகார் தேர்தல்களில் இகக மாலெ மூன்று தொகுதிகளில் பெற்றுள்ள வெற்றி காட்டுகிறது. சாதியாதிக்க சக்திகளை ஊக்குவிப்பது எப்போதும் தேர்தல்ரீதியாக பலன் தராது, சில சமயங்களில் எதிர்விளைவுகளையும் உருவாக்கும் என்று ஜெயலலிதாவுக்கு உணர்த்த தமிழக மக்கள் தயாராக வேண்டும். ஊழல், ஒடுக்குமுறை, ஜனநாயகம் பறிப்பு, மறுப்பு, எதேச்சதிகார ஜெயலலிதா ஆட்சிக்கு முடிவு கட்டுவதைத் தவிர வேறு வழி ஏதும் இருப்பதாகத் தெரியவில்லை.
பீகார் தேர்தல்கள் 2015: சில குறிப்புகள்
திபங்கர் பட்டாச்சார்யா
பீகார் சட்டமன்ற தேர்தல்கள், இதுவரை இல்லாத அளவுக்கு மொத்த தேசத்தின் கவனத்தையும் ஈர்த்தன. இப்போது அங்கு வெளிப்பட்டுள்ள திகைப்பூட்டும் தீர்ப்பு மோடி – ஷா இரட்டையரை இன்னும் நீண்ட நாட்களுக்கு விரட்டக் கூடும். இந்திரா – சஞ்சய் நெருக்கடிகால நுகத்தடியை இந்தியா தூக்கி எறிந்த வரலாற்றுச் சிறப்புமிக்க 1977 தேர்தல் தீர்ப்பு போல், 2015 பீகார் தீர்ப்பும் இந்திய தேர்தல் வரலாற்றில் இடம்பெறும். ஒடுக்குகிற, பேரழிவுமிக்க 17 மாத கால மோடியின் ஆட்சிக்குப் பிறகு, பாஜகவுக்கு ஆர்ப்பரிப்புடனான பதிலடி தந்து, மோடியின் எதேச்சதிகார ஆளுகையை முழுவதுமாக தாக்குதலுக்கு உள்ளாக்கி, சிறுத்துப் போகச் செய்து, பீகார் மொத்த இந்தியாவுக்குமாக பேசியிருக்கிறது.
மோடி அரசாங்கம் பற்றி வளர்ந்து வரும் ஏமாற்றம், ஆர்எஸ்எஸ்ஸின் தீய நிகழ்ச்சிநிரல் திட்டமிட்ட விதத்தில் கட்டவிழ்த்துவிடப்படுவதை நிராகரிப்பது ஆகியவற்றின் நிச்சயமான அறிகுறியாக, பாஜகவின் தோல்வி நாடு முழுவதும் அதிர்வலைகளை உருவாக்கி யிருக்கிறது. மோடியின் சமீபத்திய லண்டன் பயணத்தையும் பின்னுக்குத் தள்ளிய, இங்கிலாந்தில் வாழும் முற்போக்கு இந்தியர்கள், தெற்காசிய வம்சாவளியினர், ஜனநாயகம், மனித உரிமைகள், மதநல்லிணக்கம் ஆகியவை பற்றி அக்கறை கொண்ட பிற குடிமக்கள் நடத்திய போராட்டங்கள், லண்டன் செல்வதற்கு முன்பு மோடிக்கு பீகார் மக்கள் வழங்கிய கடுமையான தோல்வியால் உத்வேகம் பெற்றவையே. ஆனால், பாஜகவின் இந்த தீர்மானகரமான தோல்வி பீகாரின் சமூக யதார்த்தத்திலும் அரசியல் வரலாற்றிலும் வடிவமைக்கப்பட்டது; இது மே 2014ல் மோடி வெற்றி பெற்ற பிறகு, கடந்த 18 மாதங்களில் மட்டும் உருவானது அல்ல; கடந்த 25 ஆண்டு காலத்தில் காங்கிரசுக்குப் பிந்தைய சமூக – அரசியல் சேர்க்கைகளினூடே உருவானது.
பிற மாநிலங்களில் நடந்தது போலவே, பீகாரிலும் 1980களின் இறுதிப் பகுதியில் மூர்க்கத்தனமான அயோத்தி இயக்கத்தின் ஊடே பாஜக வளர்ந்தது. பாகல்பூர் தாக்குதல்களை தொடர்ந்து காங்கிரஸ் கூர்மையான சரிவை எதிர்கொண்ட பின்னணியில் ஜனதா தளம் ஆட்சியைப் பிடித்தபோது, காங்கிரஸ் அடித்தளத்தின் கணிசமான பிரிவினர் பாஜக நோக்கி நகர்ந்தனர். நிலப்பிரபுத்துவ பிற்போக்கின், மூர்க்கமான மதவெறி கட்சியான பாஜக, காங்கிரசின் பாரம்பரியமான மேல்சாதி அடித்தளத்தின் பிரதான கட்சியாக எழுந்தது; இகக ஆளும் கட்சியுடன் அணி அமைத்துக் கொண்டது; பாஜகவும் பீகாரில் மேலோங்கிய எதிர்க்கட்சி வெளியை கைப்பற்றியது. குற்றங்கள் அதிகரித்தன; ஊழல் பெருகியது; போராடுகிற கிராமப்புற வறிய மக்கள் மீது நிலப்பிரபுத்துவ வன்முறையை ஏவியவர்கள், அவர்களை படுகொலை செய்தவர்கள் தண்டனை பற்றிய அச்சம் இன்றி வலம் வந்தனர்; இவையனைத்தும் பாஜக வளர்ச்சிக்கு கணிசமான வாய்ப்புக்கள் தந்தன. 1990களின் பிற்பகுதியில் நிதிஷ் குமார் பாஜகவுடன் கரம் சேர்க்க, டில்லியில் தேஜமு ஆட்சி அமைக்க, பீகாரில் பாஜக கூடுதல் முக்கியத்துவம் பெற்றது; அதைத் தொடர்ந்து 2005 முதல் 2013 வரை நீண்ட ஒரு காலத்துக்கு ஆட்சியிலும் பங்கேற்றது. 2014 மோடி அலையில், கட்சி அதன் கூட்டாளிகளுடன் இது வரை இல்லாத அளவுக்கு பீகாரின் 40 மக்களவை தொகுதிகளில் 31 இடங்களைக் கைப்பற்றியது; உத்தரபிரதேசத் தில் இன்னும் அமோக வெற்றி பெற்றதால், முதல் முறையாக மத்தியில் பெரும்பான்மை பெற்றது.
பாஜகவிடம் இருந்து விலகியதால் 
நிதிஷ் தோல்வியில் இருந்து தப்பினார்
மத்தியில் அதிகாரத்தில் புதுப்பிக்கப்பட்ட பிடி இருந்ததாலும் பீகாரில் பெற்ற மக்களவை வெற்றியால் துணிச்சல் பெற்றதாலும், மோடி சில பேரணிகளில் பேசினால் பீகாரில் ஆட்சியைப் பிடித்து விடலாம் என பாஜக கருதியிருக்கக் கூடும். ஆனால், அது பீகாரைப் படிக்க, புரிந்துகொள்ளத் தவறிவிட்டது. அதிகரித்த அளவிலான நிலப்பிரபுத்துவ மதவெறி தாக்குதல் என்ற விதத்தில் பாஜக வளர்ச்சியின் விளைவுகளை பீகார் மக்கள் நீண்ட காலமாகவே எதிர்கொண்டு வருகின்றனர். கொலைகார ரன்வீர் சேனாவுக்கு ஆதரவு அளித்து வந்தவர்களை காப்பாற்ற அமீர் தாஸ் ஆணையம் கலைக்கப்பட்டதும் பெரும்பாலும் பாஜகவால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிற நிலவுடைமையாளர்கள் நலன்களை திருப்திப்படுத்த நிலச்சீர்திருத்த ஆணையத்தின் பரிந்துரைகள் கிடப்பில் போடப்பட்டதும், பீகாரின் கிராமப்புற வறியவர் மத்தியில், சிறுகுறு விவசாயிகள் மத்தியில், ஜனநாயக பிரிவினர் மத்தியில் நிதிஷ÷க்கு எந்த நல்ல பெயரையும் பெற்றுத் தரவில்லை. படுகொலைகளைச் செய்தவர்கள் அடுத்தடுத்து தொடர்ச்சியாக பாட்னா உயர்நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுவிக்கப்பட்டதும், காவல்துறை ஒடுக்குமுறையும் அதிகார வர்க்கத்தின் மேலாதிக்கமும் அதிகரித்து வந்ததும், பொதுச் சொத்துக்கள் கொள்ளையடிக்கப்படுவது அதிகரித்ததும், மிகப்பெரிய சக்தி வாய்ந்த விதத்தில் ஒப்பந்ததாரர் – குற்றவாளிகள் கூட்டு உருவானதும், கடுமையான அதிருப்தியை உருவாக்கின. நிதிஷ் குமார் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகாமல், நல்லாளுகை, நீதியுடனான வளர்ச்சி என்ற பெயரில், பாஜக ஆதரவு கொண்ட கார்ப்பரேட் மூர்க்கத்தை, மதவெறி துருவச் சேர்க்கையை, நிலப்பிரபுத்துவ வன்முறையை, தொடர்ந்து நியாயப்படுத்திக் கொண்டிருந்தால், இந்தத் தேர்தல்களில் நிதிஷ் குமாரும் கடுமையான தோல்வியை எதிர்கொண்டிருக்கக் கூடும்.
நரேந்திர மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு நிதிஷ் குமார் பாஜகவுடனான கூட்டணியில் இருந்து விலகியது, தனிப்பட்ட நோக்கங்களையோ, தனிநபர் மோதலையோ பிரதிபலிக்கவில்லை. நிதிஷ் குமாரின் போலி சமூக நீதி, மதச்சார்பின்மை என்ற அடிப்படைகளில் கூட, அந்தக் கூட்டணி சமூகரீதியாக நீடிக்க முடியாமல் போனதை, அரசியல்ரீதியாக நியாயப்படுத்த முடியாமல் போனதை குறிக்கிறது. நிதிஷின் மதிப்பீடுகளில் மோடி மற்றும் ஷா தலைமையிலான பாஜக கட்டுப்படியாகாத சுமையாகிப் போனது. அதனால்தான் புத்திசாலி அரசியல்வாதியான நிதிஷ் குமார், மக்களவை தேர்தல்கள் முடிந்த உடன், லாலுவுடன் கரம் கோர்க்கும் ஆபத்தான நகர்வையும் கையிலெடுத்தார். அவரது கணிப்பு சரியாகிப் போனது. எதிர்க்கட்சிகள் பிரிந்து இருந்ததால், பீகாரில் மக்களவை தேர்தல்களில் பாஜக பெருவெற்றி பெற்று பெரும்பான்மை ஆட்சியும் அமைத்தது; ஆனால், மாநிலத்தில் பாஜக தலைமையிலான அரசாங்கத்தை எதிர்கொள்ள பீகார் விரும்பவில்லை. பீகாரின் சமூக யதார்த்தத்தை, அரசியல் மனநிலையை பாஜக கணிக்கத் தவறியதால் அடுத்தடுத்து தவறுகள் செய்து, கடைசியில் கடுமையான தோல்வியை தழுவியது. ஆனால் 25% வாக்குகள், 50க்கும் மேற்பட்ட இடங்கள் பெற்றுள்ள பாஜக, (ஒரு சாதகமான கூட்டணியின் உதவியில்லாமல் தானே சொந்தமாக பாஜக பெற்ற வாக்குகள், இடங்களில் இது கூடுதல்), பீகாரில் இன்னமும் வலுவானதொரு சக்தியாகவே இருக்கிறது என்பதையும் கவனிக்க வேண்டும்.
சாதிக் கணக்கு என்கிற கட்டுக்கதை
லாலு – நிதிஷ் கூட்டணியின் மிகச்சிறப்பான சாதி கணக்குதான் தங்கள் தோல்விக்குக் காரணம் என்று பாஜக தலைவர்கள் இப்போது சொல்கின்றனர். இது அப்பட்டமான, ஆணவம் பிடித்த பொய். அய்க்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணியின் சாதி சமன்பாடு என்று சொல்லப்படுவதை முறியடிக்க பாஜக ஆனதெல்லாம் செய்தது. மக்களவை தேர்தல்களில் பெற்ற வாக்குகளைப் பொறுத்தவரை, அய்க்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரிய ஜனதா தளம், காங்கிரஸ் கட்சிகள் மூன்றுமாகச் சேர்ந்து பெற்ற வாக்குகளை விட பாஜக பெற்ற வாக்குகள் 4%தான் குறைவு. ஜிதன்ராம் மாஜி தனிக்கட்சி துவங்கி தேஜமுவில் இணைந்த பிறகு, இந்த பற்றாக்குறையை சரி செய்து விடலாம் என்று பாஜக கருதியிருக்கக் கூடும். எச்.டி.தேவே கவுடாதான் பிற பிற்படுத்தப்பட்ட சாதியில் இருந்து வந்த முதல் இந்திய பிரதமர் என்பது நன்கறியப்பட்ட உண்மை எனும்போதும், மோடிதான் அப்படிப்பட்டவர் என்பதை முன்னிறுத்த அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. மல்லா சமூகத்தைச் சேர்ந்த முகேஷ் சஹானியுடன் உடன்பாடு எட்டப்பட்டு அவர் பெயரில் முழுபக்க விளம்பரங்கள் வெளியிடப்பட்டன; அவற்றின் மூலம் அவரது சாதியினருக்கும் பிற இணைப்பு 1 சாதியினருக்கும், அவர்கள் முன்னேற்றத்துக்கு பாஜகவை நம்பலாம் என்ற வெளிப்படையான வேண்டுகோள் விடுக்கப்பட்டது. ஒரு மேல் சாதி முதலமைச்சரை தாங்கள் ஆட்சியில் அமர்த்தப் போவதில்லை என்று பாஜக தலைவர்கள் வெளிப்படையாகச் சொன்னார்கள். ஒரு யாதவ் முதலமைச்சரை அமர்த்துவது பற்றிய கருத்து கூட பாஜகவின் தேர்தல் கூட்டங்களில் முன்வைக்கப்பட்டது.
பாஜக ஆதரவு பெற்ற ரன்வீர் சேனா நடத்திய படுகொலைகளால் பெரிய அளவில் பாதிப்புக்களுக்கு உள்ளான தலித்/மகாதலித் வாக்காளர்களை ஈர்க்க, முஷாஹர் இளம்பெண்கள் கூட்டு பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட குர்முரி சம்பவம், 2012 சுதந்திர தினத்தன்று பட்டி கிராமத்தில் ராம் விலாஸ் ராம் கொல்லப்பட்டு ரவிதாஸ் கோயில் தாக்கப்பட்ட சம்பவம், ரோதாஸ் மாவட்டம் மோகன்பூர் கிராமத்தில் ஒரு சக்திவாய்ந்த நில உடைமையாளரின் நிலத்தில் சாய்ராமின் மாடுகள் சென்றுவிட்டதால் அவர் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் போன்றவற்றை குறிப்பிட்டு, நிதிஷ் குமாரின் ‘சுயமரியாதை’ முழக்கம் பற்றி கேள்வியெழுப்பி பாஜக தேர்தல் விளம்பரம் வெளியிட்டது. இந்தச் சம்பவங்கள் எல்லாம் உண்மைதான். ஆனால் இவற்றைச் செய்தவர்கள் நன்கறியப்பட்ட பாஜக ஆதரவாளர்கள்; இகக மாலெ இந்தத் தாக்குதல்களுக்கு எதிராக நீடித்த போராட்டம் நடத்திய போது, இகக மாலெ தலைமையிலான போராட்டங்களுக்கு எதிராக முன்னணியில் நின்றுகொண்டு, போராட்டத்தில் திரண்டவர்களை அச்சுறுத்தியவர்கள் உள்ளூர் பாஜக தலைவர்களே. உண்மையில், கலவரங்களை, பல்வேறு நிலப்பிரபுத்துவ – மதவெறி வன்முறைச் செயல்களை தூண்டுவது, நடத்துவது, அதன் பிறகு, மாநில அரசு ‘சட்டம் ஒழுங்கை’ பராமரிக்கவில்லை என்று குரல் எழுப்புவது சங் – பாஜகவின் நிலையான செயல்தந்திரமாக மாறியுள்ளது.
மதவெறி, வெறுப்பு, ஆணவம்
பாஜகவின் சாதிக் கணக்குகளும் மதவெறி மதிப்பீடுகளும் ஓர் எல்லைக்கு மேல் செயல்படாமல் போனதற்குக் காரணம், மக்கள் பாஜகவின் உண்மையான அரசியல் நிகழ்ச்சி நிரலை புரிந்துகொண்டதுதான். கிராமப்புற வறியவர்களை தொடர்ச்சியாக படுகொலை செய்தவர்களின், அந்தப் படுகொலைகளுக்கு ஆதரவு தந்தவர்களின், தலித் ஒடுக்குமுறையை பாகுபாட்டை கடைபிடிப்பவர்களின் கட்சியான பாஜக, பாஜக தலைமையிலான கூட்டணியின் மகாதலித் முகமாக, ஜிதன்ராம் மாஜியை முன்னிறுத்தியபோது, அந்த அடையாள அம்சம் பாஜகவுக்கு ஆதரவாக திரும்பவில்லை. இடஒதுக்கீட்டை பரிசீலனை செய்ய வேண்டும் என்று மோகன் பகவத் சொல்லும்போது, (அவர் அதைச் சொல்கிறார் என்றால் இடஒதுக்கீடு கொள்கைக்கு முடிவு கட்டச் சொல்கிறார் என்பதே பொருள்), பாஜக ஆட்சி நடக்கிற அரியானாவில் இரண்டு தலித் குழந்தைகள் கொடூரமாகக் கொல்லப்பட்டது பற்றி பேசிய வி.கே.சிங் நாய்களுடன் ஒப்பிட்டு பேசும்போது, எந்த ராம் விலாஸ் பாஸ்வானும் பாஜகவுக்கு தலித் வாக்குகளைப் பெற்றுத் தர முடியாது. மாட்டுக் கறி சாப்பிட்டார் என்ற வதந்தியின் அடிப்படையில் முகமது அக்லாக் கும்பலால் அடித்துக் கொல்லப்பட்ட தாத்ரி சம்பவத்தால் நாடே அதிர்ச்சிக்கு உள்ளாகியிருந்தபோது, எப்போதும் சத்தமாக பேசும் பிரதமர் அது பற்றி மவுனம் காத்த போது, ஆனால், மாட்டுக் கறி உண்ணும் உரிமையை நியாயப்படுத்தும் தலைவர்களுக்கு எதிராக யாதவர்கள் வாக்களிக்க வேண்டும் என்று சொன்னபோது, மாட்டுக் கறி உண்பவர்களுக்கும் மாட்டுக் கறி உண்பதற்கு தடை வேண்டும் என்று கோருபவர்களுக்கும் இடையிலான போராட்டம் என்று சுசீல் மோடி பீகார் தேர்தல்களை சுருக்கத் துவங்கியபோது, அமைதியை விரும்பும், நல்லிணக்கத்தை விரும்பும் சாதாரண குடிமக்களுக்கு, நடக்கிற சதி மிகத் தெளிவாகத் தெரிந்தது. மாநிலத்தில் நடக்கும் ஒரு தேர்தலில், பாகிஸ்தான் பற்றியும் சீனா பற்றியும் பாஜக தலைவர்கள் பேசியபோது, ஏற்கனவே பிளவுவாத நச்சுத்தன்மை கொண்ட இரண்டு விளம்பரங்களுக்காக தேர்தல் ஆணையத்தின் கண்டனத்துக்கு உள்ளாகியிருந்த பாஜக பசு விளம்பரத்தை வெளியிட்டது; பீகார் மக்கள் அனைவரும் கட்சியின் ஆபத்தான மூர்க்கத்தனத்தை, மறைமுகமான சதியை பார்க்க முடிந்தது.
உள்ளீடற்ற, ஏமாற்றுகிற வளர்ச்சி வாய்வீச்சுக்குப் பின்னால், படுமோசமான மதவெறி நிகழ்ச்சிநிரல் முன்னகர்த்தப்படுவதில் கையும் களவுமாக பிடிபட்டதுடன் வாக்காளர்களால் தண்டிக்கப்பட்டபோதும், பாஜக, அதன் வளர்ச்சி இயக்கம் ‘தடம் புரண்டுபோவதற்கு’ மற்றவர்கள் மீது பழிபோடவே பார்க்கிறது. வளர்ச்சி நோக்கிய இயக்கம் என்ற பெயரில் பாஜக தந்தது எல்லாம், பீகாரின் நிலைமைகளுக்கு கட்சியும் பொறுப்பு என்பதை மறந்து, மக்களின் நிலைமைகளை கணக்கில் கொள்ளாமல், ஒரு கூட்டாட்சி அமைப்பில் மக்களின் ஜனநாயக தேர்வின் மீது தாக்குதல் நடத்தி, துரித வளர்ச்சியால் கூடுதல் மய்யப்படுத்துதலை மறைக்கும் ஓர் ஆணவம் மிக்க உயர்ந்த நிலை கலவையே. நரேந்திர மோடி அறிவித்த பீகார் சிறப்பு நிதி என்று அறியப்படுவதும், பல நடந்து கொண்டிருக்கிற திட்டங்களை தெளிவற்ற நீண்டகால உறுதிப்பாடுகளுடன் இணைக்கும் புள்ளிவிவர ஜாலமே. ஆனால், ஒரு பேரரசன் தனது குடிமக்களுக்கு ஏதோ சலுகைகள் வழங்குவதுபோல் மோடி அதை அறிவித்த விதம் உண்மையில் இழிவுபடுத்துவதாக இருந்தது. நிதிஷ் குமாரின் மரபணு பற்றி மோடி துவக்கத்தில் பேசியதுடன், மோடியின் ஒவ்வொரு உரையிலும் வெளிப்பட்ட இறுமாப்பும் வெறுப்பும் வளர்ச்சி பற்றிய எந்த தொலைநோக்கு பார்வையும் இருப்பதை காட்டவில்லை. பீகாரில் சமஅளவில் ஆட்சிப் பொறுப்பில் பாஜக இருந்த எட்டு ஆண்டு காலத்துக்கு எந்த பொறுப்பும் எடுத்துக் கொள்ளாமல், மோடி, மத்தியிலும் மாநிலத்திலும் ஒரே கட்சி ஆட்சியில் இருந்தால்தான் பீகார் போன்ற ஒரு மாநிலம் வளர்ச்சி பெற முடியும் என்று சொல்லி, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சி உணர்வின் மீது தாக்குதல் தொடுத்தார்.
நீதியுடனான வளர்ச்சி என்ற வாக்குறுதிக்கு இழைக்கப்பட்ட துரோகம்
பீகார் தீர்ப்பு, நிதிஷ் குமார் மாதிரி ஆளுகையும் வளர்ச்சியும் சரியென மெய்ப்பிக்கப்பட்டதன், வெகு மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் வெளிப்பாடு என சில அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். ராஷ்ட்ரிய ஜனதா தளத்தின் பதினைந்து ஆண்டு கால ஆட்சியின் பிற்பாதியில் மக்கள் எதிர்கொண்ட சமூக மற்றும் நிர்வாக அராஜகம், முழுமையான பொருளாதாரத் தேக்கம், சீர்குலைவு ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது, நிதிஷ் குமார் சற்று மேலாகவே மதிப்பிடப்படுவார். ஆனால், அவருடைய நல்லாட்சி மாதிரி பீகாரில் ஆனந்த் சிங், சுனில் பாண்டே, அவர்களது சகாக்கள் போன்ற புதிய வகை மாஃபியா எழுச்சிக்கு இட்டுச் சென்றது. வளர்ச்சி என்ற வாக்குறுதி, அனைத்தும் தழுவிய ஊழல், நிலம் மற்றும் விவசாய சீர்திருத்தங்கள் தொடர்பான நிகழ்ச்சி நிரல் முற்றிலும் கைவிடப்படுவது ஆகியவற்றால்தான் குறிக்கப்பட்டது. பல்வேறு பிரிவு மக்களின் போராட்டங்கள் அதிகார வர்க்கப் பிரிவினரின் அலட்சியம், காவல் துறை ஒடுக்குமுறை ஆகியவற்றால்தான் எதிர்கொள்ளப்பட்டன. படுகொலைகளை செய்தவர்கள் தொடர்ச்சியாக விடுதலை செய்யப்பட்டது, மக்கள் இயக்கங்களின் தலைவர்கள் மீது பொய் வழக்குகள் போடப்படுவது என நீதி பற்றிய வாக்குறுதி, திட்டமிடப்பட்ட அநீதியால் பின்னுக்குத் தள்ளப்பட்டது.
மேலான உள்கட்டுமானம் மட்டுமின்றி, ஓரளவுக்கான சமூக மாற்றம், அதிகாரப் பரவல் ஆகியவற்றையும் உறுதிப்படுத்தும் ஒருவிதமான அனைத்தும் தழுவிய வளர்ச்சி பற்றி நிதிஷ் குமார் துவக்கத்தில் திட்டமிட்டார். உடனடி நிலச்சீர்திருத்தங்கள், கல்வி மறுகட்டமைப்பு ஆகியவற்றுக்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்க இரண்டு ஆணையங்கள் அமைத்ததும், விவசாய வளர்ச்சிக்கான திட்டம் ஒன்றை அறிவித்ததும் பரந்துபட்ட சமூக வளர்ச்சி, அதிகாரப் பரவல் ஆகியவை பற்றிய எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கின. ஆனால், நிலம் மற்றும் குத்தகைதாரர் சீர்திருத்தங்கள், ஒரு பொதுப் பள்ளி முறையை அறிமுகப்படுத்துவது போன்ற முக்கியமான பரிந்துரைகள் கொண்ட, நிலச்சீர்த்திருத்த, கல்வி சீர்த்திருத்த ஆணையங்களின் அறிக்கைகள் குப்பை கூடைகளுக்குச் சென்றன; விவசாய வளர்ச்சிக்கான திட்டம், பாசனம், குறிப்பிட்ட காலத்தில் தேவையான அளவு இடுபொருட்கள் கிடைப்பது, கடன் வசதி, உறுதியான கொள்முதல் போன்ற அடிப்படை தேவைகளை நிராகரித்துவிட்டு, பீகார் விவசாயத்தை, ஒப்பந்த முறையிலான விவசாயம், சந்தேகத்துக்குரிய மரபணு சோதனைகள் ஆகியவற்றின் ஏற்றஇறக்கங்களுக்கு உட்படுத்த ஒரு சாக்காகிப் போனது. வேலைவாய்ப்பு என்ற முக்கியமான பிரச்சனைக்கு பதில் ஏதும் சொல்லப்படவில்லை; தொழில்மயமாக்கம் பற்றிய எந்த நீடிக்கத்தக்க மாதிரியோ, பொருளுள்ள கவுரவமான சேவைத் துறை வேலைகளோ இல்லை. பீகார் இளைஞர்களின் ஆக்கபூர்வமான ஆற்றலும் துடிப்பும் பாதுகாப்பற்ற குறைவான கூலி பெறுகிற ஒப்பந்த வேலை வாய்ப்பில் சிக்கவைக்கப்பட்டுள்ளது.
இடதுசாரி பிரச்சாரமும் இடதுசாரி போர்த்தந்திரமும்
இந்த அனைத்துப் பிரச்சனைகளும் மீண்டும் மீண்டும் எழுப்பப்பட்டுள்ளன. நீடித்த போராட்டங்களுக்கு இட்டுச் சென்றுள்ளன. தேர்தல் சமயத்தில் அவற்றின் உச்சத்தை எட்டின. தேர்தல்களில் அவை அதிர்வலைகளை உருவாக்கவில்லை; தேர்தல் முடிவுகளில் அவை போதுமான அளவு பிரதிபலிக்கவில்லை; ஏனென்றால், ஆட்சியைப் பிடிக்கும் பாஜகவின் முயற்சியை முறியடிப்பது முக்கிய வெகுமக்கள் பிரச்சனையாக இருந்தது. பீகாரின் இடதுசாரி சக்திகள் இந்தத் தேர்தல்களில் ஓர் ஒன்றுபட்ட சுதந்திரமான முகாமாக தேர்தலில் போட்டியிட்டன. இடதுசாரி கட்சிகளின் கூட்டு வேண்டுகோள், நிலம் மற்றும் குத்தகைதாரர் சீர்திருத்தங்கள், விவசாய வளர்ச்சி, நீடித்து இருக்கக் கூடிய தொழில்மயமாக்கம், பெருமளவிலான வேலை வாய்ப்பு, அனைவருக்கும் வீட்டு வசதி, அனைவருக்கும் மருத்துவம், கல்வி ஆகிய முக்கியமான நிகழ்ச்சிநிரலைச் சுற்றியே இருந்தது. இடதுசாரி பிரச்சாரம், ஜனநாயகம், நீதி, மக்கள் ஒற்றுமையின் பதாகையை உயர்த்திப் பிடித்தது; உண்மையான மக்கள் ஆதரவு வளர்ச்சி மற்றும் மாற்றத்துக்கான மாற்று திசைவழியையும் முன்னுரிமைகளையும் துணிச்சலுடன் முன்வைத்தது. கிட்டத்தட்ட 4% வாக்குகளும் மூன்று இடங்களில் வெற்றியும் பெற்று (பாஜகவின் கூட்டணி கட்சிகள் பெற்றதை விட கூடுதலான இடங்கள்), இடதுசாரிகளும் இகக மாலெயும் பீகாரில் கணக்கில் கொள்ளத்தக்க மூன்றாவது அணியாக எழுந்துள்ளனர். பீகார் தேர்தல்களில் இடதுசாரிகளின் இருத்தலை ஊடகங்கள் திறன்மிக்க விதத்தில் புறக்கணித்தன; மாறாக, தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாதி கட்சி, பப்பு யாதவின் மக்கள் அதிகாரக் கட்சி மற்றும் சில கட்சிகளின் அப்போதைய கூட்டணியை மூன்றாவது அணி என்று முன்னிறுத்தின. தேர்தல்கள் நடக்கும்போது இந்த அணி உடைந்து போனது. ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை.
பீகாரில் ஒரு சுதந்திரமான முகாமாக போட்டியிடுவது என்ற இடதுசாரி போர்த்தந்திரம், பாஜக எதிர்ப்பு வாக்குகள் பிளவுபடுவது தவிர்க்கப்பட வேண்டும் என்று கருதிய சில நண்பர்களாலும் விமர்சனத்துக்குள்ளானது. மகாகூட்டணி, தேஜமுவை தோற்கடிப்பதை இடதுசாரிகள் பங்கேற்பு எந்த விதத்திலும் தடுக்கவில்லை என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவாகக் காட்டுகின்றன. மாறாக, இடதுசாரிகளும் தங்கள் ஆற்றலுக்கேற்ப பங்காற்றியுள்ளனர். இகக மாலெ பெற்ற மூன்று இடங்களும் தேஜமு வேட்பாளர்களை தோற்கடித்து வந்தவையே. வாக்குகள், வெற்றி பெற்ற இடங்கள் பற்றிய நேரடியான புள்ளிவிவரங்களுக்கு அப்பால், கருத்தியல் – அரசியல் அணிதிரட்டல் என்ற பொருளில் இடதுசாரிகளின் பிரச்சாரத்தின் முக்கியத்துவம் இருக்கிறது; பாஜகவை அதன் மூர்க்கமான மதவெறி பிரச்சாரத்தை எதிர்ப்பதில் பெருமளவில் நிச்சயம் அது உதவியிருக்கிறது. பீகாரில் பாஜக வெற்றி பெற்றுவிடுவதன் விளைவுகள் பற்றிய தாராளவாத, முற்போக்கு அறிவாளிப் பிரிவினரின் கவலை புரிந்துகொள்ளக் கூடியதே; ஆனால், இடதுசாரிகள் மகாகூட்டணியில் இணைவதோ, அல்லது போட்டியில் இருந்து விலகுவதோ, இடதுசாரி கண்ணோட்டத்தில் இருந்து மட்டுமின்றி, பாஜகவை எதிர்கொள்வது என்ற முக்கியமான பரந்த பின்னணியிலும், தோல்விவாத, தற்கொலை நடவடிக்கையாகவே இருந்திருக்கும் என்பதும் புரிந்துகொள்ளப்பட வேண்டும். உண்மை எளிமையானது: பாஜகவை தடுப்பது என்ற பெயரில் இடதுசாரிகள் தங்கள் வளர்ச்சிக்கு, அறுதியிடலுக்கு தாமாகவே வரம்பு போட்டுக் கொள்வது, பாஜகவுக்கு விசயங்களை இன்னும் எளிதாக்குவதாகவே இருக்கும்.
மகா கூட்டணியின் அமோக வெற்றி பற்றி பல்வேறு விசயங்கள் சொல்லப்படுவதுபோல், நிதிஷ் குமார் ஆட்சிப் பொறுப்பேற்ற விழாவில் பல்வேறு அரசியல் சக்திகள் கலந்துகொண்டது சுட்டிக்காட்டுவது போல், பாஜகவுக்கு எதிராக செயல்படக்கூடிய ஒரே தேசிய அளவிலான மாற்று மகாகூட்டணிதான் என்று முன்னிறுத்தும் முயற்சிகளுக்கு பஞ்சம் இருக்காது. ஆனால், அதுபோன்ற ஆட்சிகளும், அவற்றின் கொள்கைகளும் அரசியலும் எந்த நிலையான நம்பகத்தன்மை கொண்ட மாற்றையும் உருவாக்கவில்லை என்பதையும் பல வழிகளில் பாஜக வளர்வதற்கே உதவின என்பதையும் 1996 – 1998 அய்க்கிய முன்னணி ஆட்சி, 2004 – 2014 அய்முகூ ஆட்சி ஆகியவற்றின் அனுபவம் நமக்குத் தெளிவாகக் காட்டுகிறது. காங்கிரஸ் சீரான மிகப்பெரிய சரிவை சந்திக்கிறபோது, முதல் தேசிய கட்சியாக பாஜக ஒரு பெரிய இடத்தை பிடிக்கிறது; அய்க்கிய ஜனதா தளம் போன்ற லோஹியா வகை கட்சிகள் உட்பட, – பகுஜன் சமாஜ் கட்சி கூட – பல பிராந்திய கட்சிகள், பாஜகவுடன் எந்த சிரமமும் இன்றி கூட்டு சேர்கின்றன. கருத்தியல் சூழலிலும் அரசியல் சமன்பாட்டிலும் ஓர் ஆக்கபூர்வமான மாற்றம் ஏற்படுவதற்கும் நம்பகத் தன்மை கொண்ட மக்கள் ஆதரவு அரசியல் மாற்று ஒன்று எழுவதற்கும் சக்திவாய்ந்த தேசிய அளவிலான ஒரு சக்தியாக இடதுசாரிகள் புத்தெழுச்சி பெறுவது அவசியமாகும். இந்தப் பின்னணியில் இந்திப் பகுதியில் இடதுசாரிகள் எழுச்சி பெற்றுள்ளது முக்கியத்துவம் வாய்ந்தது; இந்திப் பகுதியில் இடதுசாரிகளின் விளைநிலமாக இருப்பது பீகார் என்பது சமீபத்திய தேர்தல்களில் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டுள்ளது. எனவே பீகாரில் புதிதாக உருவாகியுள்ள இடதுசாரி ஒற்றுமையை தக்க வைக்க, பேணி வளர்க்க, இடதுசாரிகள் தலைமையிலான வர்க்க மற்றும் வெகுமக்கள் போராட்டங்களை விரிவுபடுத்த, தீவிரப்படுத்த, பீகார் அரசியலில் இடதுசாரி அறுதியிடலின் தலையீட்டின் மட்டத்தை உயர்த்த, அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்.
உறுதியேற்பு தினம், 2015 
மத்திய கமிட்டியின் அறைகூவல்
தருணத்தைக் கைப்பற்றுவோம்! 
கட்சியை விரிவுபடுத்துவோம்! 
கம்யூனிச இயக்கத்தை வலுப்படுத்துவோம்!
17 ஆண்டுகளுக்கு முன்பு, டிசம்பர் 18, 1998 அன்று, லக்னோவில் கட்சியின் மத்திய கமிட்டி கூட்டம் நடந்துகொண்டிருந்தபோது தோழர் விஎம்மை நாம் இழந்தோம். அதன் பிறகு ஒவ்வோர் ஆண்டும் இந்த நாளை உறுதியேற்பு தினமாக கடைபிடித்து வருகிறோம். வருடாந்திர உறுப்பினர் புதுப்பித்தல் இயக்கத்தை இந்த நாளில் துவங்குகிறோம். கட்சியின் புரட்சிகர லட்சியத்தை நிறைவேற்றும் உறுதியையும் புதுப்பித்துக் கொள்கிறோம்.
17 ஆண்டுகளுக்கு முன்பு, தோழர் விஎம் நம்மை விட்டு பிரிந்தபோது, நாடு அப்போதுதான் முதல் தேஜமு அரசாங்கத்தையும் மத்தியில் பாஜக தலைமையிலான அரசு இருப்பதன் கருத்தியல் – அரசியல் விளைவுகளையும் எதிர்கொள்ளத் துவங்கியிருந்தது. தோழர் விஎம் தலைமையில், பாஜகவின் காவிமய நிகழ்ச்சிநிரலுக்கு எதிராக ஒரு தீர்மானகரமான கருத்தியல் தாக்குதலையும், ‘காவியை வெளியேற்றுவோம்; நாட்டை பாதுகாப்போம்’ என்ற சக்திவாய்ந்த வெகுமக்கள் இயக்கத்தையும் கட்சி துவக்கியது. முதல் தேஜமு அரசாங்கம் நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை. ஆனால், 1999ல் இன்னும் பெரிய கூட்டணியுடன் ஆட்சியைப் பிடித்தது. ஆயினும் 2002 குஜராத் மனிதப் படுகொலைக்குப் பிறகு கிடைத்த முதல் வாய்ப்பில், நாடு பேரழிவுமிக்க தேஜமு அரசாங்கத்தை தூக்கியெறிந்தது.
இப்போது 17 ஆண்டுகள் கழித்து, இன்னும் கூடுதல் பெரும்பான்மையுடன் மீண்டும் அமைக்கப்பட்டிருக்கிற பாஜக அரசாங்கம் கட்டவிழ்த்துவிட்டுள்ள ஒரு முழுமையான கார்ப்பரேட் மதவெறி தாக்குதலின் வெளிக்கோடுகளை நம்மால் பார்க்க முடிகிறது. ஆனால், ஒரு சக்திவாய்ந்த புரட்சிகர – ஜனநாயக எதிர்ப்பு பற்றிய தோழர் விஎம் கொண்டிருந்த லட்சியப் பார்வையின் உள்ளாற்றலையும் நாம் பார்க்கிறோம் என்று சொல்ல முடியும்.
பிப்ரவரியில் டில்லியில் பாஜக விரட்டியடிக்கப்பட்டது முதல் நவம்பரில் பீகாரில் தூக்கியெறியப்பட்டது வரை, உண்மையில் ஒவ்வோர் அரங்கிலும் மகத்தான போராட்டங்கள் நடந்தன. விவசாயிகளின் அமைப்புகள், சாமான்ய மக்கள் மத்தியில் எழுந்த எதிர்ப்பால், மீண்டும் மீண்டும் அவசரச் சட்டமாக கொண்டு வரப்பட்ட நிலப்பறி மசோதாவை மோடி அரசாங்கம் கைவிட நேர்ந்தது. அமைப்புசாரா தொழிலாளர்களும் ஒப்பந்தத் தொழிலாளர்களும் பெருமளவில் பங்கேற்ற தொழிற்சங்கங்களின் செப்டம்பர் 2 பொது வேலை நிறுத்தம், தொழிலாளர் சட்டங்களை சீர்குலைக்கும், தொழில்/பணியிட ஜனநாயகத்தை ஒழிக்கப் பார்க்கும் மோடி அரசாங்கத்தின் முயற்சிகளை முறியடிக்கும் தீர்மானகரமான போராட்டத்தின் அறிகுறியாக அமைந்தது.
சென்னை அய்அய்டியில் அம்பேத்கர் – பெரியார் படிப்பு மய்யம் மீண்டும் செயல்படுவதை உறுதிசெய்த வெற்றிகரமான போராட்டம், எப்டிஅய்அய் வேலை நிறுத்தம், இப்போது நடக்கும் யுஜிசி ஆக்கிரமிப்புப் போராட்டம் ஆகியவை, படித்த நகர்ப்புற இளைஞர்கள் மத்தியில் மோடி அலை என்ற கட்டுக்கதையை அம்பலப்படுத்தியுள்ளன. இந்தியாவின் பன்முக இயல்புணர்வையும் ஜனநாயக மனச்சாட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் அறிவாளிப் பிரிவினரின் பாத்திரத்தை உண்மையில் நிறைவேற்றும் விதம், நாட்டின் பிரபலமான எழுத்தாளர்கள், திரைப்பட இயக்குநர்கள், விஞ்ஞானிகள், தங்கள் விருதுகளை திருப்பித் தந்தும், தாங்கள் வகித்த பதவிகளில் இருந்து விலகியும் நடத்திய போராட்டம், அறிவாளிப் பிரிவினரின் கூட்டு அறுதியிடலின் புதிய உச்சத்தைக் காட்டியது.
பீகாரின் இகக மாலெவுக்கும் பிற இடதுசாரி சக்திகளுக்கும், பீகார் தேர்தல் ஒரு முக்கியமான போராட்டம். மக்கள் போராட்டங்களுக்கு தலைமை தாங்கும் மய்யமாக, இடதுசாரி அரசியலின் மய்யமாக இகக மாலெ விடாப்பிடியாக நிறைவேற்றி வந்த பாத்திரம், இந்த முக்கியமான போராட்டத்தில் இடதுசாரிகளை ஓர் ஒன்றுபட்ட, சுதந்திரமான முகாமாக கொண்டு வருவதில் உதவியது. எல்லாவிதமான இடையூறுகளையும் நாம் எதிர்கொள்ள வேண்டிய ஒரு போராட்டமாக அது இருந்தது. இருபது ஆண்டுகாலமாக தொடர்ச்சியாக சட்டமன்றத்தில் பங்கேற்றதற்குப் பிறகு, 2010ல் கட்சி ஓர் இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. ஊடகங்களும் வெளியில் இருக்கும் அரசியல் உலகமும் நம் கதை முடிந்துவிட்டதாகக் கருதின. ஆனால், பீகார் கட்சி நமது அனைத்து வலிமையையும் ஒன்று திரட்டி 2015 தேர்தல்களை வெற்றிகரமாக எதிர்கொண்டது.
2010ல் ஏற்பட்ட பின்னடைவுக்குப் பிறகு, மக்களுடனான தனது பிணைப்புக்களை வலுப்படுத்தவும் கட்சி அமைப்பை ஒழுங்குபடுத்தவும், கட்சி புதுப்பிக்கப்பட்ட கவனம் செலுத்தியது. ஆயினும் 2014 மக்களவை தேர்தல்களில் கட்சியின் தேர்தல் செயல்பாட்டில் முன்னேற்றம் ஏற்படவில்லை; முதல்முறையாக, பீகார் மக்களவை தொகுதி ஒன்றில் கூட ஒரு லட்சம் வாக்குகள் பெற முடியாமல் போனது. கட்சி அமைப்பு இந்த சவாலை கையிலெடுத்தது; மிகப் பெரிய சமூக – பொருளாதார ஆய்வு நடத்தியது; உள்ளூர் மட்ட போராட்டங்களை கட்டமைத்தது; களத்தில் கட்சியின் வலைப்பின்னலை விரிவாக்க, ஒழுங்குபடுத்த காத்திரமான முயற்சிகள் மேற்கொண்டது.
இந்த முயற்சிகளின் விளைவுகளை இப்போது நாம் பார்க்கிறோம். கடுமையான இரு துருவச் சேர்க்கை நிகழ்ந்த பீகார் தேர்தல்களில் கட்சி தனது அடித்தளத்தை வெற்றிகரமாக தக்க வைத்துக் கொண்டது; கிட்டத்தட்ட நமது அனைத்து முக்கிய தொகுதிகளிலும் கட்சியின் செயல்பாட்டில் முன்னேற்றம் காணப்படுகிறது; கடுமையான போட்டிகளுக்கிடையில் மூன்று இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. 16 தொகுதிகளில் 10,000க்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்றுள்ளோம்; போஜ்பூரிலும் சிவானிலும் மீண்டும் ஒரு லட்சம் வாக்குகளுக்கும் மேல் பெற்றுள்ளோம்.
பீகாரில் முன்னணி இடதுசாரி சக்தியாக, கட்சியை பீகார் தேர்தல்கள் மீண்டும் முன்னிறுத்தியுள்ளன. ஜார்க்கண்டிலும் உத்தரபிரதேசத்திலும் உள்ள நமது அடித்தளத்துடன், மொத்த இந்தி பகுதியிலும், மக்கள் போராட்டங்களின், இடதுசாரி அரசியலின் வளர்ந்து வரும் மய்யமாக நமது பாத்திரத்தை வலுப்படுத்தவும் மோடி அரசாங்கத்தின் கார்ப்பரேட் மதவெறி பாசிச தாக்குதலுக்கு எதிராக நடந்து வரும் எதிர்ப்புக்களிலும் போராட்டங்களிலும் தலையீடு செய்யவும் இது நிச்சயம் உதவும்.
அந்நிய மூலதனத்தையும் கார்ப்பரேட் அதிகாரத்தையும் திருப்திப்படுத்துவதும் மேற்கத்திய ஏகாதிபத்திய சக்திகள் முன் போர்த்தந்திரரீதியாக சரணடைவதும், ஆர்எஸ்எஸ்ஸின் ஒட்டுமொத்த நிகழ்ச்சிநிரலையும் கட்டவிழ்த்துவிடுவதுடன் ஒத்திசைந்து செயல்பட்டு, பாசிச பூதத்தை ஒரு வளர்ந்து வரும் உண்மையான அச்சுறுத்தலாக ஆக்கியுள்ளன. ஆனால், இந்தச் சூழல் பற்றிய எந்த தேவையற்ற பீதியூட்டும் புரிதலுக்கும் நாம் செல்ல வேண்டியது இல்லை; தோல்விவாத கருத்துக்களுக்கும் போர்த்தந்திரத்துக்கும் நாம் இரையாகி விடக் கூடாது. வெகுமக்கள் பங்கேற்புடன் நடக்கிற, பரந்து வருகிற போராட்டங்கள், இந்த அச்சுறுத்தலை எதிர்கொள்ள மக்கள் தயாராக இருப்பதையே, பாஜக நாட்டை தன்வயப்படுத்தி அழித்து விட மக்கள் அனுமதிக்கப் போவதில்லை என்பதையே காட்டுகின்றன. பாசிச ஆபத்தை எதிர்கொள்ள, அதற்கெதிரான போராட்டங்களை முன்னெடுக்க, எதிர்ப்புக்களை வலுப்படுத்த அனைத்து ஜனநாயக வழிகளையும் நாம் பயன்படுத்த வேண்டும்; அனைத்து ஆக்கபூர்வமான முன்முயற்சிகளுடனும் போராட்டங்களுடனும் ஒன்றுபட வேண்டும்; அவற்றுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
காங்கிரஸ் சரிவால் பாஜக ஆதாயம் பெறும் என்றால், டில்லியில் ஆட்சியில் உள்ள ஆம் ஆத்மி கட்சி போன்ற முற்றிலும் புதிய ஒரு சக்தி பஞ்சாபிலும் வலுப்பெறும் என்றால், கம்யூனிஸ்டுகள் முன்உள்ள முதல் முக்கியமான சவால், கருத்தியல்ரீதியாக, அரசியல்ரீதியாக, அமைப்புரீதியாக, வர்க்கப் போராட்டத்தின் ஒவ்வொரு முக்கிய தளத்திலும், சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் புத்தெழுச்சியை வடிவமைப்பதே ஆகும். இந்த முக்கியமான சவாலை எதிர்கொள்வதற்கு மாறாக, பாசிச அபாயத்துக்கு எதிரான போராட்டத்தை, இருக்கிற நிலைமைகளை நியாயப்படுத்தும் திவாலாத்தனத்திற்கு சுருக்கப் பார்க்கும் தோல்விவாத தாராளவாத கருத்தை, நாம் எதிர்கொண்டாக வேண்டும்.
அதே நேரம், தற்போதைய கட்டத்தில், கட்சி அமைப்பை விரிவாக்குவது, அதன் பாத்திரத்தை வலுப்படுத்துவது என்ற சவாலை நாம் ஸ்தூலமாகப் பற்றிக் கொள்ள வேண்டும். ராஞ்சி காங்கிரசும் லக்னோ பயிற்சி பட்டறையும், பொருத்தமான கொள்கை வரையறையையும் மய்யமான அமைப்பு கடமைகளையும் இலக்குகளையும் முன்வைத்துள்ளன. மொத்த கட்சியும், அனைத்து அரங்குகளிலும் சக்தி வாய்ந்த முன்னேற்றங்களை நிகழ்த்தி, நிலைமைகளை எதிர்கொள்ள எழ வேண்டும். நமது அன்புக்குரிய லட்சியத் தலைவர் நம்மை விட்டுப் பிரிந்த பதினேழாவது ஆண்டு தினத்தில், இகக மாலெயை இந்தியாவின் மிகப் பெரிய கம்யூனிஸ்ட் கட்சியாக்க வேண்டும், கம்யூனிச இயக்கத்தை ஒரு சக்திவாய்ந்த தேசிய அரசியல் சக்தியாக்க வேண்டும் என்ற தோழர் விஎம் கனவுக்கு நாம் நம்மை மறு அர்ப்பணிப்பு செய்துகொள்ள வேண்டும்.
டைமண்ட் என்ஜினியரிங் தொழிலாளர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம்
காஞ்சிபுரம் மாவட்டம், மாம்பாக்கத்தில் உள்ள டைமண்ட் என்ஜினியரிங் கம்பெனியில் மிகக் குறைந்த ஊதியத்தில் மோசமான பணி நிலைமைகளில் பணி புரிந்து வந்த பிற மாநில தொழிலாளர்கள் உள்ளிட்டோர் 2015, மே 1 அன்று சங்கம் துவங்கி ஏஅய்சிசிடியுவில் இணைந்தனர். அன்று கொடியேற்ற தடையில் துவங்கிய போராட்டம் 200 நாட்கள் தாண்டியும் சோர்வின்றி ஊக்கமுடன் தொடர்கிறது. நிர்வாகம் தொழிலாளர்களை பட்டினி போட்டு பணிய வைக்கப் பார்க்கிறது. தொழிலாளர்களின் ஒற்றுமை, உறுதி, புரட்சிகர தொழிற்சங்கமான ஏஅய்சிசிடியுவின் தலைமை, வழிகாட்டுதலில் நிர்வாகத்தால் ஏவப்படும் அனைத்து ஆயுதங்களையும் எதிர்கொண்டு தாக்கு பிடித்து போராட்டம் தொடர்கிறது. போராட்டத்தில் தொழிலாளர்களும் அவர்களின் உறவினர்களும் போர்க்குணத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
29 ஆண்டுகளாக இயங்கும் ஆலையில் 1000க்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். சங்கம் துவங்கியதற்காக இன்று 345 தொழிலாளர்களும் அவர்கள் குடும்பங்களும் வீதியில் நிற்கின்றன. நீதி கேட்டு சாலை மறியல், தொழிலாளர் அலுவலகம் முற்றுகை, ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், சட்டமன்ற முற்றுகை என பல போராட்டங்களை டைமன்ட் என்ஜினியரிங் தொழிலாளர்கள் நடத்தியுள்ளனர். சட்டத்துக்கு புறம்பாக கூடுதல், கொலை மிரட்டல் விடுத்தல் என பல பிரிவுகளில் 27 தொழிலாளர்கள் மீது கிரிமினல் வழக்கு தொடுக்கப்பட்ட பின்பும் 12.11.2015 முதல் 21 தொழிலாளர்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தினர்.
பட்டினிப் போராட்டம் நடத்த காவல் துறையை அணுகியபோது காவல்துறை அனுமதி மறுத்தது. உயர்நீதிமன்றம் சென்று அனுமதி பெற்ற பின்பும் பொது இடத்தில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே பட்டினிப் போராட்டம் நடத்த அனுமதி என்று காவல்துறை சொன்னது. பிறகு இது இரவு 8 மணி வரை என நீட்டிக்கப்பட்டது. தொழிற்சங்கம் மீண்டும் நீதிமன்றம் சென்று காலவரையற்ற தொடர் உண்ணாவிரம் நடத்த அனுமதி பெற்றது. சென்னையில் கொட்டித் தீர்த்த கடும் மழை வெள்ளத்தையும் பொருட்படுத்தாமல் 21 தொழிலாளர்கள் பட்டினிப் போராட்டத்தில் பங்கெடுத்தனர். பட்டினிப் போராட்டப் பந்தலை மழை நீர் சூழ்ந்தது. அப்போதும் தொழிலாளர்கள் போராட்ட உணர்வை இழக்கவில்லை. 6 நாட்கள் நடைபெற்ற இந்தப் போராட்ட காலகட்டத்தில் முதலாளியின் பிறந்த நாளும் வந்தது. அவர் தனது பிறந்த நாளை படுவிமர்சையாக கொண்டாடிக் கொண்டிருந்தார். வேலையிழந்து வீதியில் நிற்கும் 345 தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை கொடுக்க வேண்டும், 27 பேர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகள் திரும்பப் பெறப்பட வேண்டும், சங்கத்துக்கு அங்கீகாரம் வேண்டும், வேலையில்லா காலத்துக்கு ஊதியம் வழங்க வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி பட்டினிப் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோது, தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் உட்பட பலரும் அன்று கம்பெனிக்குள் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டனர்.
போராட்டங்களால் வட்டாட்சியர், காவல்துறை ஆய்வாளர் தலையிட நேர்ந்தது. இப்போது தொழிலாளர் நீதிமன்றத்தில் வேலை நீக்க வழக்கு நடந்து வருகிறது. தொழிற்சங்கம் ஒரு புறம் போராட்டம் நடத்திக் கொண்டே தொழிலாளர் சமரச அலுவலர், தொழிலாளர் நீதிமன்றம் என நீதிமன்றக் கதவுகளையும் தட்டுகிறது. நிர்வாகம் தொழிற்சங்கத்தை முடக்க, திசை திருப்ப சிவில், கிரிமினல் நீதிமன்றங்களில் வழக்குகளை போட்டு இழுத்தடிக்கிறது.
டைமண்ட் என்ஜினியரிங் தொழிலாளர் சங்கத்தின் போராட்ட அமைப்பாளர் குமார், ஒருங்கிணைப்பாளர் ரமேஷ் ஆகியோர் போராட்டத்தை முன் நின்று நடத்துகின்றனர். போராட்டக் களத்தில் ஏஅய்சிசிடியுவின் மாநில துணைப் பொதுச் செயலாளர் தோழர் எ.எஸ்.குமார், மாநில நிர்வாகிகள் மோகன், முனுசாமி மற்றும் தோழர்கள் ஜான்பால், கோபால், பாஸ்கர் ஆகியோரும், புரட்சிகர இளைஞர் கழகத்தின் தோழர்கள் ராஜகுரு, கண்ணன், சீதா, ஜனநாயக வழக்குரைஞர் சங்கத்தின் செயல்வீரர்கள் அதியமான், சங்கர் மற்றும் சுரேஷ் ஆகியோரும் உடனிருக்கின்றனர். தோழர்கள் இரணியப்பன் மற்றும் பாரதி முன்னணியில் நின்று வழிகாட்டி வருகின்றனர்.
6 நாட்கள் நடைபெற்ற பட்டினி போராட்டத்தில் சிலர் மயங்கி விழுந்தனர். அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 17.11.2015 அன்று தற்காலிகமாக போராட்டம் முடிவுக்கு வந்தது. போராட்டத்தில் இருந்த தொழிலாளர் மத்தியில் பேசிய இகக (மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்தார்.
இந்நிலையிலும் தொழிலாளர்களும் அவர்கள் குடும்பத்தினரும் போராட்டத் தீயை அணைய விடுவதாய் இல்லை. தொழிலாளர்களின் அடிப்படை உரிமையான சங்கம் வைக்கும் உரிமைக்காக அடுத்த கட்ட போராட்டத்திற்கு திட்டமிட்டுள்ளனர். நவம்பர் 20 அன்று தொழிலாளர் நீதிமன்றத்தில் வழக்கு வரும்போது குடும்பத்துடன் நீதிமன்றத்தில் முறையிடவும், குடும்பத்துடன் சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை முற்றுகையிடவும் முடிவு செய்துள்ளனர்.
ஆர்ப்பாட்டம், பொதுக் கூட்டம், தொழிலாளர் அலுவலக முற்றுகை, சாலை மறியல், சட்டமன்ற முற்றுகை, கிரிமினர் வழக்குகள், காலவரையற்ற பட்டினிப் போராட்டம் என பல வடிவங்களில் போராட்டம் முன்னேறிச் செல்கிறது. தாக்குப் பிடித்து நிற்கும் தொழிலாளி வர்க்க உணர்வுக்கு சான்றாய் இருக்கிறது.
தோழர்கள் 1.சுரேஷ், 2.இளையராஜா, 3.சங்கர், 4.ஞானவேல், 5.குமார், 6.சதீஷ், 7.ரவீந்தர், 8.பசுபதி, 9.இளையரசன், 10.செந்தில்குமார், 11.சக்திவேல், 12.மோகன்பாபு, 13.அசோக்குமார் பார்தி (புலம் பெயர்ந்த தொழிலாளி), 14.சிவராமன், 15.செல்வராஜ், 16. உமாபதி, 17.ஏழுமலை, 18.சங்கர், 19.மூர்த்தி, 20.சண்முகம், 21.ஜான் மார்டின் ஆகிய 21 தொழிலாளர்கள், 6 நாட்கள் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தில் பங்கேற்றனர்.

Search