COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 1, 2016

மாலெ தீப்பொறி ஜனவரி 01 – 15 2016
சென்னை பாரதி மகளிர் கல்லூரி மாணவர் பேரவைத் தேர்தலில்
அகில இந்திய மாணவர் கழக மாநிலச் செயலாளர்
தோழர் சீதா தலைவர் பதவியில் வெற்றி

சென்னையில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியில் 4,500 மாணவிகள் படிக்கின்றனர். இந்த 50 ஆண்டு கால கல்லூரியில் மாணவர்களுக்கு சுகாதாரமான குடிநீர், உணவகம், கழிப்பறை கிடையாது. இதுபோன்ற மாணவர்களின் பிரச்சனைக்காக தோழர் சீதாவும் அகில இந்திய மாணவர் கழகமும் தொடர்ந்து மாணவர்கள் மத்தியில் துண்டறிக்கை விநியோகித்து பிரச்சாரம் செய்து வந்தனர். கையெழுத்து இயக்கம் நடத்தப்பட்டது. நிர்வாகம் பிரச்சனைகளை நிரந்தரமாக தீர்ப்பதற்குப் பதில் அவ்வப்போது தற்காலிகமாக தீர்வுகளை எடுத்து வந்தது. நிரந்தரத் தீர்வு கோரி கல்லூரி முதல்வர் அலுவலகம் முன்பு 2015 ஆகஸ்ட்டில் தோழர் சீதா ஒரு நாள் பட்டினிப் போராட்டம் நடத்தினார்.
கல்லூரி நிர்வாகம் மாணவர் பேரவைத் தேர்தலுக்கு ஜனநாயகத்துக்குப் புறம்பான விதிகளை உருவாக்கியுள்ளது. இளங்கலை இறுதி ஆண்டு படிக்கும் மாணவர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிட முடியும், போட்டியிடும் மாணவர்கள் முடிந்த தேர்வுகள் அனைத்திலும் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், 90% வருகை இருக்க வேண்டும் என விதிகள் சொல்கின்றனநாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர் தேர்தலுக்குக் கூட இல்லாத விதிகளை கல்லூரி நிர்வாகம் கடைப்பிடித்து வருகிறது. தோழர் சீதா தலைவராக போட்டியிட இந்த முறை மனு தாக்கல் செய்தபோது, தேர்தல் விதிகளைக் காரணம் காட்டி அவரது மனு நிராகரிக்கப்பட்டது. இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக தோழர் சீதா, சென்னை உயர்நீதிமன்றத்தை நாடினார். உயர்நீதிமன்றம் அவரது மனுவை ஏற்றுக் கொள்ளச் சொல்லி நிர்வாகத்துக்கு கட்டளையிட்டது.
ஆகஸ்ட் 20 அன்று நடைபெற இருந்த தேர்தலுக்கு முந்தைய நாள் ஆகஸ்ட் 19 அன்றுதான் நீதிமன்ற உத்தரவு கைக்கு கிடைத்தது. தோழர் சீதா மாணவர்கள் மத்தியில் பிரச்சாரம் செய்ய கால அவகாசம் இல்லாமல் போனது. கல்லூரி நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவுப்படி தோழர் சீதா மனுவை ஏற்று தேர்தல் நடத்த அனுமதி அளித்துவிட்டு தலைவர் பதவிக்கான முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்தி வைத்தது. மீண்டும் தோழர் சீதா நீதிமன்றம் சென்று உத்தரவு பெற்ற பிறகே அவர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. கல்லூரியில் மாணவர்களின் வகுப்புப் பிரதிநிதிகள் மூலமே நிர்வாகிகளை தேர்ந்தெடுக்கும் முறை உள்ளது. அந்த வகையில் தோழர் சீதா 56 வாக்குகளும் அவரை அடுத்து வந்தவர் 38 வாக்குகளும் பெற்றனர்.
அகில இந்திய மாணவர் கழகத்தின், தோழர் சீதாவின் போராட்ட மரபுக்கு மாணவர்கள் மத்தியில் பலத்த ஆதரவு இருப்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன.

மக்கள் நலப்பணியாளர்கள் முதல் துப்புரவுத் தொழிலாளர்கள் வரை

சந்திர மண்டலத்தியல் கண்டு தெளிவோம்
சந்தித் தெருப் பெருக்கும் சாத்திரம் கற்போம்
என்றான் பாரதி. சந்திர மண்டலத்தியலும் சந்தித் தெருப் பெருக்குவதும் அவனுக்கு சமமான சாதனைகளாகப் பட்டன. சந்தித் தெருப் பெருக்குவதை சாத்திரம் என்று சொன்னான். அந்த சாத்திரத்தை தமிழக அரசு இன்னும் கற்கவில்லை. அந்தப் பொறுப்பை தனியார் கருணைக்கு விட்டுவிட்டது. ஸ்டிக்கர் ஒட்டவும் அவமதிப்பு வழக்கு தொடுக்கவுமே ஆட்சியின் பெரும் பகுதி நேரம் கழிந்துவிடுகிறது. எனவே, தமிழக மக்கள் வாழ்வை பாதுகாக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள், மழைக்குப் பிறகான துப்புரவுப் பணிகளில் ஜெயலலிதா அரசாங்கத்தின் குற்றமய அலட்சியத்தின் இலக்காக்கப்பட்டார்கள். இந்த நெருக்கடியான நேரத்தில், தூய்மை இந்தியா என்று சொல்லி துடைப்பத்துடன் போஸ் கொடுத்த கனவான்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று கண்டுபிடிக்க முடியவில்லை.
சொந்தச் சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டு சிந்தை இரங்கி தாமாக முன்வந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்ட சென்னை மக்கள் பசியாற்றினார்கள். பிணியாற்றினார்கள். இருக்க இடம் தந்தார்கள். தங்கள் சமூகக் கடமையை யாரும் சொல்லாமல் தாமே இயல்பாக நிறைவேற்றினார்கள். இப்போது அவர்கள் அடுத்து தங்கள் பிழைப்பைப் பார்க்க வேண்டும். அங்கு இங்கு நகர வேண்டும். இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப வேண்டும்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நோய்கள் தாக்கத் துவங்கிவிட்டன. தியாகராய நகரில் இரண்டு பேர் வாந்தி, பேதி வந்து இறந்துவிட்டனர். ஒருவரால் இறக்கும் தறுவாயில் பேச முடியாமல் போனது என்று உறவினர் சொல்கின்றனர். என்ன நோய் வந்தது என்று அவர்களுக்குச் சொல்லப்படவில்லை. பல சாவுகள் பதிவாகாமல் இருக்க வாய்ப்புகள் உள்ளன. நகரம் குப்பைக் காடாகியுள்ளது. குப்பைகளை அகற்றும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளதாகச் சொல்லப்படுகிறது. குப்பையின் அளவு பற்றி சில லட்சம் டன் என விதவிதமாக விவரங்கள் வெளியாகின்றன. இந்த விசயத்திலும் அரசிடம் இருந்து அதிகாரபூர்வ விவரம் வரவில்லை. அகற்றப்பட்ட குப்பையின் அளவு பற்றிய சென்னை மாநகராட்சியின் 13.12.2015 தேதிய செய்திக் குறிப்பில் வெளியிட்டுள்ள விவரங்கள்படி, அதற்கு முந்தைய ஏழு நாட்களில் 64,177 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன. அதிகபட்சமாக ஒரே நாளில் 14,000 மெட்ரிக் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ளன.
உண்மைதான். குப்பை அகற்றும் பணி நடக்கிறது. ஸ்டிக்கர் ஒட்டுவதில் முனைப்பும் கண்டிப்புமாக நடந்துகொண்ட அம்மா பக்தர்களா அந்த வேலைகளைச் செய்தார்கள்? இந்தப் பணிகளில் 34,000 துப்புரவுப் பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டதாக அந்த செய்தி குறிப்பு சொல்கிறது. பிற மாவட்டங்களில் இருந்து துப்புரவுப் பணியாளர்கள் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனர்.
பெருவெள்ளம் அடித்துக் கொண்டு வந்து சேர்த்த குப்பைகளை அகற்றி நகரை சுத்தம் செய்து வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நகரை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வர, எங்கிருந்தோ வந்த அந்தத் தொழிலாளர்கள், அந்தப் பணிகளைச் செய்யும் போக்கில் கடுமையான துன்பங்களைச் சந்தித்தார்கள். மழை வெள்ளம் உருவாக்கிய பெரும்காயத்தில், துன்பப்பட்ட சக மனிதர்கள் மீது சென்னை மக்கள் காட்டிய பரிவு ஓரளவு களிம்பு பூசியது என்றால், கழிவகற்ற வந்த பிற மாவட்ட துப்புரவுத் தொழிலாளர்கள் பட்ட துன்பம் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியது.
முதலமைச்சருக்கு வேலை செய்ய தனியாக பெரிய அறை ஒன்று இருக்கிறது. அதில் சகல வசதிகளும் செய்யப்பட்டுள்ளன. அந்த அறையை ஒட்டி பார்வையாளர்களை, விருந்தினர்களை சந்திக்க பிரத்யேக அறைகள் இருக்கின்றன. (ஒவ்வொரு அமைச்சருக்கும் தனித்தனியாக கழிப்பறை உள்ளது). வாகனம், வாகன ஓட்டுனர், தனிஉதவியாளர், மெய்க்காப்பாளர், தனிச்செயலாளர் இத்யாதி.... என அவர் பணியை இலகுவாக்க பலப்பல வசதிகள் உள்ளன. இதற்கு மேல் சம்பளம். இவ்வளவும் இருந்தும் அவர் தலைமைச் செயலகத்துக்கு தினமும் வருவதில்லை. கோப்பில் கையெழுத்து போடும், சில கூட்டங்களில் கலந்துகொள்ளும் வேலை செய்யும் ஒருவருக்கே இந்த வசதிகள் இருக்கும்போது ஆபத்தில் இருக்கும் லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்ற நகரை சுத்தம் செய்யும் தொழிலாளியை பட்டு விரித்தல்லவா தாங்க வேண்டும்? ஆனால் இங்கு நடந்தது வஞ்சகம். துரோகம்.
அவர்களுக்கு தங்குவதற்கு இடம், உணவு, தங்குமிடத்தில் கழிப்பிட வசதி, தண்ணீர் வசதி, குடிநீர், நோய் தொற்றுத் தடுப்பு மருத்துவம், பாதுகாப்பு உபகரணங்கள் எவையும் முறையாக ஏற்பாடு செய்யப்படாமல் வேலையில் இருந்தபோதே விபத்தில் ஒருவரும் வேலை முடிந்து திரும்பிய இரண்டு பேர் நோயிலும் உயிரிழந்தனர். மீண்டும் கடுமையான எதிர்ப்புக்களைச் சந்தித்த அரசு, மீண்டும் சென்னை மாநகராட்சி மூலம் ஒரு பொய்ச் செய்தி வெளியிட்டது. டிசம்பர் 20 தேதி வெளியிடப்பட்ட அந்தச் செய்தி அம்மாவின் ஆணைக்கிணங்க அவர்களுக்கு எல்லா வசதிகளும் செய்துத் தரப்பட்டதாகவும் 100% டிடி தடுப்பூசி போடப்பட்டதாகவும் பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட்டதாகவும் அம்மா அவர்களால் அறிவிக்கப்பட்ட ஊக்கத் தொகையான ரூ.2,000 தரப்பட்டதாகவும்........... தாங்கலடா சாமி!
அந்த வெளி மாவட்ட தொழிலாளர்கள் தரையில் படுத்துக் கிடப்பதும் கையுறை கூட இல்லாமல் குப்பைகளை அகற்றுவதும் பூட்சுகள் இல்லாமல் குப்பைக் குவியலுக்குள் இறங்குவதும் நிழற்படங்களாக தமிழ்நாட்டின் திக்கெட்டும் தெரிகின்றன. தமிழக மக்கள் தினம்தினம் பல பத்திரிகைகளில் பார்க்கிறார்கள். பலருக்கு ஊர் திரும்பக் கூட பணம் தரப்படவில்லை என்பது அந்தத் தொழிலாளர்களின் குற்றச்சாட்டு என்று பல பத்திரிகைகள் சொல்லி வருகின்றன. தமிழக ஆட்சியாளர்களும் அவர்கள் இட்டதை மட்டும் செய்யும் உயரதிகாரிகளும் முட்டாள்களின் சொர்க்கத்தில் வாழ்வதின்பம் என்கிறார்கள்.
தமிழ்நாடு முழுவதும் உள்ள துப்புரவுத் தொழிலாளர் பிரச்சனைகள் அவ்வப்போது பத்திரிகை பத்திகளில் இடம்பெற்றுள்ளன. பெருமழையால் ஏற்பட்ட பாதிப்பால் அவர்கள் எதிர் கொள்கிற பிரச்சனைகள் ஓரளவுக்கு இப்போது தமிழ்நாட்டு அரசியலில் பேசுபொருளாக மாறியிருக்கின்றன. அவர்களுக்கு தக்க சன்மானம் தர வேண்டும் என்று ஸ்டாலின் கூடச் சொல்லும் நிலை வந்துள்ளது. முன்னாள் மேயருக்கு அவர்கள் பிரச்சனைகள் பற்றி இன்னும் கூட கூடுதலாக தெரிந்திருந்தும் சன்மானத்துடன் நின்றுகொண்டார்.
தலித் மக்கள் இடஒதுக்கீடு கேட்க வேண்டிய அவசியம் இல்லாத பணி இது. இதில் எல்லாம் உங்களுக்கே என்கிறது சாதிய சமூகம். ஆனால், விவசாயம் பொய்த்துவிட்ட காலத்தில் வேறு சில சாதியினரும் கணவனும் மனைவியுமாக மாவட்டம் விட்டு மாவட்டம் வந்து துப்புரவுப் பணிகளில் ஈடுபடுவதை நாம் காண முடிகிறது.
பெருமழை பின்னணியில் இன்று நாம் காண்பது மட்டும்தான் தமிழ்நாட்டு துப்பரவுத் தொழிலாளர் பிரச்சனையா? பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படவில்லை என்று இன்று குற்றச் சாட்டு எழுகிறதென்றால், இதுவரை தரப்படவில்லை என்று பொருள். பாதுகாப்பு உபகரணங்கள் தரப்பட்டதாக டிசம்பர் 20 தேதிய மாநகராட்சி செய்திக் குறிப்பு சொல்லுமானால் அது வரை தரப்படவில்லை என்று பொருள். பாதுகாப்பு உபகரணங்கள் தருவது அவர்கள் செய்யும் பணிக்கு மிகவும் அடிப்படையானது. ஜெயலலிதாவிடம் பேனா தராமல் கோப்பில் கையெழுத்து போடச் சொல்லி கேட்க முடியுமா? ஆனால் துப்புரவுத் தொழிலாளர்களை, அது போன்ற ஒரு அடிப்படை கருவியைக் கூட தராமல்தான் தமிழக அரசும் ஒப்பந்ததாரர்களும் பல ஆண்டுகளாக சுரண்டி வருகிறார்கள். அடிப்படையே பிரச்சனை என்றால் மற்றவை அனைத்தும் பிரச்சனை என்று நாம் எளிதாக புரிந்து கொள்ள முடியும். அந்த செய்திக் குறிப்பும் ஒரு முகாமில் தங்க வைக்கப்பட்ட 1,000 தொழிலாளர்கள் தொடர்பானது. மற்ற 33,000 தொழிலாளர்கள் நிலை கேள்விக்குரியதுதான். மலக்குழிகளுக்குள் இறங்கி வேலை செய்ய வேண்டியிருக்கும் தொழிலாளர்களுக்கே இந்த அரசாங்கம் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை. குப்பை அள்ளுபவர்களுக்கு தந்து விட்டது என்று சொன்னால் நம்மால் நம்ப முடியவில்லை. மலக்குழிகளுக்குள் மனிதரை இறக்குவது பற்றி சென்னை மாநகராட்சி நீதி மன்றத்தில் 2015 ஆகஸ்டில் பதில் சொல்ல நேர்ந்தபோது, அதிஉறிஞ்சு திறன் கொண்ட 10 எந்திரங்கள் வாங்க இருப்பதாகவும் தற்போது டில்லியில் இருந்து ஓர் எந்திரம் வரவழைத்து அதன் மூலம் அடைப்பு நீக்கும் பணி மேற்கொள்ளப்படுவதாகவும் சொல்லப்பட்டது. மொத்த சென்னை கழிவுநீர் குழாய் அடைப்பையும் நீக்க ஒரே ஓர் எந்திரம். பிரமாதம்!
தமிழ்நாட்டில் உள்ள மொத்த துப்புரவுத் தொழிலாளர்களின் அதிகாரபூர்வ எண்ணிக்கை என்னவென தெரிந்துகொள்ள தகவல் அறியும் சட்டம் போன்ற பெருமுயற்சி தேவைப்படும் போல் தெரிகிறது. அவர்களில் ஒப்பந்தத் தொழிலாளர்கள், நிரந்தரத் தொழிலாளர்கள் என்ற தனித்தனி விவரம் பெறுவது இன்னும் சிரமமாக இருக்கலாம். தனித்தனி மாநகராட்சி விவரங்கள் கூட வெளிப்படையாக இல்லை.
சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் 12 மண்டலங்கள் சென்னை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் இயங்குகின்றன. மற்றவை தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளனஇந்த 12 மண்டலங்களில் 30,000 தொழிலாளர்கள் தேவை என்றும் ஆனால் இருப்பது வெறும் 9,700 என்றும் தொழிற்சங்கங்கள் சொல்கின்றன. மூன்று மடங்குக்கும் மேலான வேலைப் பளுவை அந்தத் தொழிலாளர்கள் சுமக்கின்றனர்.
கோவை மாநகராட்சியில் 55% தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள். நிரந்தரத் தொழிலாளர்கள் மாத ஊதியம் ரூ.22,000 பெறும் போது, இவர்கள் வெறும் ரூ.4,500 பெறுகிறார்கள். சேலம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் 21 வார்டுகளில் ஒப்பந்ததாரர்கள் மூலம்தான் வேலை நடக்கிறது. நாளொன்றுக்கு ரூ.165 கூலி பெற்ற அவர்கள் சட்டப்படியான குறைந்தபட்ச கூலி ரூ.246க்காக தொழிலாளர் அலுவலகத்தை நாட வேண்டியிருந்தது. ஒப்பந்ததாரர்களிடம் சிக்கியிருக்கும் துப்புரவுத் தொழிலாளர்கள் துன்பங்கள் மூடி மறைக்கப்பட்டுவிடுகின்றன.
2011 மே மாதம் ஜெயலலிதா ஆட்சியில் அமர்ந்த உடன் முதல் தாக்குதல் மக்கள் நலப் பணியாளர் மீது தொடுக்கப்பட்டது. 30,000 பேர் வரை நடுவீதிக்கு விரட்டப்பட்டனர். அதன் பிறகு சமச்சீர் கல்வி, கல்வி கட்டணம் ஆகியவை தொடர்பாக கல்விச் சூழலில் மிகப் பெரும் குழப்பம் உருவாக்கப்பட்டது. அதன் பிறகு இன்று வரை ஒவ்வொரு பிரிவாக தமிழக மக்கள் அனைவரும் அம்மாவின் ஆணைக்கிணங்க வஞ்சிக்கப்படுகிறார்கள். இன்று சென்னையின் பெருந்துயர் துடைக்க வந்த துப்பரவுத் தொழிலாளர் பிரச்சனை ஜெயலலிதா ஆட்சியின் குற்ற மய அலட்சியத்தை, மக்கள் விரோத, எதேச்சதிகார ஆட்சியை போதுமான அளவு அம்பலத்துக்குக் கொண்டு வந்துள்ளது. மக்கள் நலப் பணியாளர்கள் முதல் துப்புரவுப் பணியாளர்கள் வரை தமிழக சாமான்ய மக்கள் அனைவரும் இந்த நான்கரை ஆண்டுகாலத்தில் ஜெயலலிதா அரசாங்கத்தால் வஞ்சிக்கப்பட்டவர்களே.
ஜெயலலிதாவின் வாட்ஸ்அப் செய்தியை கேட்டவுடன் உங்களுக்கு என்ன தோன்றியது என்று ஒருவரிடம் கேட்க, வாட்ஸ்அப் செய்திகளை நம்பாதீர்கள் என்று அம்மா சொன்னது நினைவுக்கு வந்தது என்றாராம். சமூக வலை தளங்களில் ஜெயலலிதா கேலி செய்யப்படுவது கடந்த நான்கரை ஆண்டுகளில் நடக்காத ஒன்று. இப்போது நடக்கிறது.

பெருமழை பெய்தபோது கள்ளச்சந்தைக்காரர்கள் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை ஏற்றி விற்றார்கள். இப்போது மழையைக் காரணம் காட்டி உணவுப் பொருட்கள் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி விலை உயரலாம் என்று அபாய அறிவிப்புகள் வருகின்றன. எல்லாவற்றையும் விட பெரிய அபாயம் ஜெயலலிதாவின் ஆட்சி என்பதையும் அனைத்துத் தரப்பு மக்களும் பட்டுணர்ந்துவிட்டார்கள்.

Search