COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, January 14, 2016

சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவு போற்றுவோம்!

சின்னியம்பாளையம் தியாகிகள், சின்னய்யன், ரெங்கண்ணன், வெங்கடாசலம், ராமய்யன் ஆகியோர் தூக்கிலேற்றப்பட்ட ஜனவரி 8, 1946க்குப் பிறகு, 70 ஆண்டுகள் உருண்டோடி விட்டன. தூக்கிலேற்றப்பட்டபோது, சின்னய்யனுக்கு 20 வயது, ரெங்கண்ணனுக்கு 30 வயது, வெங்கடாசலத்துக்கு  36 வயது, ராமையனுக்கு 22 வயது. நான்கு பேரும் ஜவுளி மில் தொழிலாளர்கள்.
எதற்காக தூக்கு தண்டனை?
அன்று, கொலை குற்றம் என்றால் மரண தண்டனை மட்டுமே வழங்கப்படும். உச்சநீதிமன்றம், நீண்டபல பத்தாண்டுகளுக்குப் பிறகுதான், அரிதிலும் அரிதான வழக்குகளில் மட்டுமே மரண தண்டனை எனத் தீர்ப்பளித்தது. உலகம் முழுவதும் மரண தண்டனை வேண்டாம் என்ற குரல் வலுக்கிறது. இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கூட, இகக மாலெ உட்பட, பல கட்சிகள், மரண தண்டனை கூடாது என வலியுறுத்துகின்றன. 1946ல் பொன்னான் என்ற ஒரு ரவுடியை, மூலதனக் கூட்ட அடியாளை தோழர்கள் கொன்று விட்டார்கள் என்பதுதான் வழக்கு. அப்போது முதலாளிகள், காவல்துறை கொண்டு போராட்டங்களை நசுக்கியதோடு, போராட்ட, சங்க முன்னணிகளை செயல்வீரர்களை, ஆதரவாளர்களைத் தாக்க பெரும் எண்ணிக்கையில் கூலிக்கு அமர்த்தப்பட்ட ரவுடிகளை வாடிக்கையாக ஏவினார்கள். அவர்களும் கொடூரமான ஆயுதங்களோடு அச்சமூட்டும் வகையில், காவல்துறை பற்றிய எந்தக் கவலையும் இல்லாமல் சகஜமாக பட்டப்பகலில் நடமாடினார்கள். வீடுகள் புகுந்தும் சங்க அலுவலகங்கள் புகுந்தும் தாக்குதலில் ஈடுபட்டனர். பெண் தொழிலாளர்களைச் சிறுமைப்படுத்தி இம்சைப்படுத்தி பாலியல் துன்புறுத்தல் தந்தனர்.
ராஜ÷ என்ற பெண் தொழிலாளியை, பொன்னான் என்கிற முதலாளித்துவ அடியாள், பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கிய செய்தி, தோழர்களை எட்டியது. பொன்னான் மற்றும் பொன்னானின் கூட்டாளிகளை தோழர்கள் நால்வரும் நேருக்கு நேர் சந்தித்து நியாயம் கேட்கும்போது, கைகலப்பு நடந்து மோதல் வெடித்தது. ரவுடி பொன்னான் தரையில் விழ, பாதிக்கப்பட்ட பெண் தொழிலாளர்களும் நய்யப் புடைத்தார்கள். தோழர்கள் ரவுத்திரம் பழகியதால், பொன்னானின் மூச்சு அடங்கியது. பாதகம் செய்பவரைக் கண்டால் நாம் பயம் கொள்ளல் ஆகாது பாப்பா, மோதி மிதித்துவிடு பாப்பா, அவர் முகத்தில் உமிழ்ந்து விடுபாப்பா என்ற பாரதியின் கவிதை வரிகளுக்கு ஏற்ப, அன்று கோவையில் ஆண் பெண் தொழிலாளர்கள் செயல்பட்டனர். அவர்களுக்கு நாட்டு விடுதலைப் போராட்டத்தில் நம்பிக்கையும் பெருவிருப்பமும் இருந்த அதே நேரத்தில், சுதந்திரத்துக்கு முன்பிருந்தே, காங்கிரஸ் அரசாங்கம் முதலாளிகள் நலன் காப்பதற்காகத்தான் செயல்படுகிறது என்ற புரிதலும் கொண்டிருந்தனர். ஆகவே எப்போதும் போராட்டங்களில் ஊன்றி நின்றனர்.
அந்த நாட்கள்
மேற்கு தொடர்ச்சி மலையடிவாரத்தில் இருந்த கோவை ஜவுளி மில்களின் தொழிலாளர்கள், சமவெளிகளில் இருந்த சென்னைத் தொழிலாளர்கள், திருச்சி பொன்மலை ரயில்வே தொழிலாளர்கள், போராட்டங்களில் திரும்பத்திரும்ப எழுந்தனர். முக்கியமான பல போராட்டங்களை, செங்கொடியே வழி நடத்தியது. டெல்டா பகுதியிலும், நிலப்பிரபுத்துவத்தின் நெஞ்சுக்குழியில் கால் வைத்து மிதித்து, சவுக்கடிக்கும் சாணிப்பாலுக்கும் முடிவு கட்டியது. ஏழை நிலமற்ற தலித் விவசாயிகளையும், கடும் சுரண்டலுக்கு உள்ளான மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குத்தகை விவசாயிகளையும், செங்கொடி இணைத்தது. குடிமனையும், குடியிருப்பில் இருந்து வெளியேற்றப்படுவது தடுக்கப்படுவதும் உறுதியானதுதமிழ் மொழிக்காக குரல் கொடுப்பதில், சாதி ஆதிக்கத்தோடு சமர் புரிவதில், சுரண்டலுக்கு எதிராகப் போராடுவதில், காவல்துறை - ரவுடிகள் கூட்டை நேருக்கு நேர் எதிர்கொண்டு மோதுவதில், அன்று உழைக்கும் மக்களும் கம்யூனிஸ்ட் இயக்கமும் துணிச்சலுடன் முன் நின்றனர். காங்கிரசுக்கு மாற்றான, காங்கிரசுக்கு அடுத்த பெரிய அரசியல் இயக்கமாக 1950கள் வரை கம்யூனிஸ்ட்களே இருந்தனர். 1960களில்தான் திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கத்தைத் தாண்டி முன் சென்றது.
சாதியம்
1946ல் தூக்கிலிடப்படுவதற்கு முன்பு, சின்னியம்பாளையம் தியாகிகள், தமது தலைவர்களிடம் கண்ணீர் சிந்தவேண்டாம், களப் பணியாற்ற கருத்துப்பணியாற்ற கவனத்தைத்  திருப்புங்கள் எனப் பேசி அனுப்பி வைத்த விசயம், பரவலாக அறியப்படுகிற ஒரு விசயமாகும். அவர்கள், சாதி கடந்து, தம் நான்கு உடல்களையும் ஒரே சமாதிக்குள் புதைக்கச் சொன்னதாகவும் கூறப்படுகிறது. நாட்டு விடுதலைப் போராட்ட வீரர்களுக்கெல்லாம் கூட, குறுகிய சாதிய அடையாளம் வழங்கப்படும் தமிழகச் சூழலில், சின்னியம்பாளையம் தியாகிகள், தொழிலாளிவர்க்க முன்னோடிகள் என்று மட்டுமே அறியப்படுகிறார்கள்.
தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலி எப்படி அமைய வேண்டும்?
அஞ்சலி, சடங்கு சம்பிரதாயமாக, வெறும் நீத்தார் நினைவாக, உயிர்ச்சாரம் உருவப்பட்ட ஒப்பனை மேற்பூச்சாக மட்டுமே இருந்தால் எந்தப் பயனும் இல்லை. எதிர்காலக் கடமைகளைக் கணக்கில் கொண்டு, நிகழ்கால கடமைகளை நிறைவேற்ற திட்டமிட, கடந்த கால வரலாறு வலுவும் உரமும் உற்சாகமும் தர வேண்டும். வலியையும் வேதனையையும் மட்டுமல்லாமல், வீரமிக்க எதிர்ப்பு, தியாகம், அர்ப்பணிப்பு, போர்க்குணமிக்க ஒற்றுமை ஆகியவற்றையும், மக்கள் காலாகாலமாக வெளிப்படுத்தியதை, வரலாறு, தன் வழி நெடுக சொல்லிச் செல்கிறது.
சின்னியம்பாளையம் தியாகிகள், சாதி கடந்து வாழ்விலும் சாவிலும் அதனைத் தாண்டியும் வர்க்கமாய் இணைந்து நின்று ஊக்கப்படுத் துகின்றனர். பெரியார், பல பத்தாண்டுகள் கருத்தாலும் களங்களிலும் போராடிய தமிழகத்தில், கம்யூனிஸ்ட்கள் உயிர்களைத் தந்து சாதி ஆதிக்கத்தை எதிர்த்த தமிழகத்தில், இன்று சாதி ஆதிக்கம் வடக்கே தெற்கே மேற்கே என எங்கும் வெறியாட்டம் போடுகிறது.
சாதியாதிக்கம் டெல்டா மாவட்டங்களை மட்டும் விட்டுவைக்குமா என்ன? நாகை மாவட்டத்தில், ஜனவரி 3 அன்று 100 வயது நிரம்பிய தலித் முதியவர் ஒருவர் இறந்துவிட்டார். அவர் உடலை தங்கள் தெரு வழியாக எடுத்துச் செல்லக்கூடாது என, சாதி இந்துக்கள் தடுத்தனர். தலித் மக்கள் உயர்நீதிமன்றம் செல்ல, மாட்சிமை மிகுந்த நீதிமன்றமோ காவல் துறையும் அரசு அதிகாரிகளும் சாதி இந்துக்கள் மறித்த தெரு வழியாக உடலை எடுத்துச் செல்ல ஒத்துழைப்பு தர உத்தரவிட்டது.
ஆனால், சாதி ஆதிக்கம் தன்னிடம் நீதிமன்ற உத்தரவுகள் செல்லாது என்பதுபோல் நடந்து கொண்டது. சில தினங்கள் கழிந்த நிலையில், காவல்துறையினர், தலித்துகளிடம் இருந்து இறந்த உடலையும் அதனை வைக்கும் பாடையையும் பறித்தெடுத்துக் கொண்டு, சாதி இந்துக்கள் தெரு வழியாகச் செல்லாமல் மாற்றுப் பாதையில் சென்று இறுதிச் சடங்கை முடித்துவிட்டனர். இவ்வாறாக, சாதி ஆதிக்கம், 2016 துவக்கத்திலேயே, தான் தமிழ்நாட்டில் பலமாக இருப்பதை எடுத்துச் சொல்லியுள்ளது.
சாதி ஆதிக்கத்தின் மீது, சமரசமற்ற போர் தொடுக்க, சின்னியம்பாளையம் தியாகிகள் நினைவால் உறுதி ஏற்போம்.
தேவை, உழைக்கும் மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்கள்
நவம்பர் 11, 1946. அதே கோவையின் ஸ்டேன்ஸ் மில் வேறொரு போராட்ட எழுச்சியைக் கண்டது. மில் முதலாளி தரப்பில், அவர்கள் திணித்த கதவடைப்பை அவர்களே விலக்கிக் கொண்டு, வெளி ஆட்களையும், கருங்காலிகளையும் கொண்டு ஆலையைத் திறக்க முடிவெடுத்து முயற்சி செய்தனர். காவல் துறை அச்சுறுத்தல்களைப் பொருட்படுத்தாமல், பெண் தொழிலாளர்கள் ஆலை வாயிலில் தரையில் படுத்து மறியல் செய்தனர். காவல்துறையினர் தமது துப்பாக்கிகளின் முனைகளில் இணைக்கப்பட்டுள்ள பயனட்டுகளால் (கத்திகளால்), பாப்பம்மாள், அம்மு என்ற இரண்டு பெண் தொழிலாளர்களைக் குத்தி குதறி கொன்றனர். தொழிலாளர்கள் சினந்தெழுந்து மோதினார்கள். போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் 11 பேர் செத்து மடிந்தனர். அன்று தொழிலாளர்களை போலீசும் ரவுடிகளும் தாக்கியபோதெல்லாம், தொழிலாளர்கள் சில நேரங்களில் பின்வாங்கினாலும், பிறகு திரும்ப வந்து விடாப்பிடியாக மோதினார்கள். நீதிமன்றங்களில் வழக்குகள் நடக்கும்போது தீர்ப்பு தினங்களின்போது பல்லாயிரக்கணக்கில் எழுச்சியோடு திரண்டார்கள். சட்ட நடவடிக்கைகள், தற்காப்பு நடவடிக்கைகள், அரசியல் நடவடிக்கைகள் என சகல வடிவங்களையும் இணைத்தார்கள். சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு, இந்தியா வில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் பிரிட்டனில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சியும் இணைந்து, லண்டன் பிரிவி கவுன்சிலில் வழக்காட பிட் என்ற வழக்கறிஞரை ஏற்பாடு செய்தனர். அன்றைய தொழிலாளர்கள் போராட, சிறை செல்ல, ரத்தம் சிந்த, உயிரைத் தர தயாராக இருந்தனர். அதே நேரம் எதிரிகளை முறியடிக்க தேவைப்படுகிற தகுந்த நடவடிக்கை எடுக்கவும் தயாராக இருந்தனர். வெள்ளை பயங்கரம் நிலவும்போது, சிவப்பு பயங்கரம் இல்லாமல் முடியாது என்பதைப் புரிந்து வைத்திருந்தனர்.
போராட்டங்களில் உத்தரவாதமான வெற்றியைக் கோருவது, போராட்டங்களே நடக்காது என்பதற்கான உத்தரவாதம் என்பதைப் புரிந்து கொண்டு, கொண்டாட்டமாய்ப் போராடினார்கள், போராட்டங்களைக் கொண்டாடினார்கள். இயக்கமும் அவர்களும் இரண்டறக் கலந்திருந்தனர். இந்தப் பின்னணியில்தான் சின்னியம்பாளையம் தியாகிகள் தூக்கிலிடப்பட்டபோது, சிறைச்சாலை முன்பு ஆயிரமாயிரமாய்த் திரண்ட மக்களை சமாளிக்க முடியாமல் காவல்துறை வேறு வழியாக அவர்கள் உடல்களை எடுத்துச் சென்றது. பின்னர் அவர்கள் ஒரே சமாதியில் புதைக்கப்பட்டனர். அவர்கள் புதைக்கப்பட்டபோதே விதைக்கப் பட்டனர். அதானல்தான், நாடெங்கும் மனேசர் மாருதியிலிருந்து கோவை பிரிக்கால் வரை, முளைத்து எழுந்துகொண்டே இருக்கிறார்கள்.
2007ல் தாம் விரும்பிய, தாம் கொண்டு வந்த சங்கத்தோடு நிர்வாகம் பேச வேண்டும் என வலியுறுத்தி போராடத் துவங்கிய பிரிக்கால் தொழிலாளர்களில் 35 பெண்கள் உள்ளிட்ட 253 பேர் மீது, 40க்கும் மேற்பட்ட வழக்குகள், இந்திய தண்டனைச் சட்டம் 109, 143, 147, 148, 290, 294 பி, 323, 332, 336, 341, 342, 353, 427, 449, 307 மற்றும் 120 பி, 302 பிரிவுகள் மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்துக்கள் (சேதம் மற்றும் இழப்பு தடுப்பு) சட்டத்தின் கீழான வழக்குகள் போடப்பட்டன. தோழர்கள் 40, 5, 15, 8, 40, 40, 60, 90 முதல் 120 நாட்கள் எனச் சிறையில் இருந்துள்ளனர். இப்போது 8 தோழர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
சிந்திக்கத் துணியாதே, சுயமரியாதை உள்ள சங்கம் வைக்கத் துணியாதே, போராடத் துணியாதே என்று, இரட்டை ஆயுள் தண்டனைத் தீர்ப்பு, நவதாராளவாத காலங்களில் செய்தி சொல்கிறது. ஆனபோதும், போராட, ரத்தம் சிந்த, சிறை செல்லத் தயார் என, தொழிலாளர் வர்க்கத்தின் சார்பாக செய்தி சொல்லி, சின்னியம்பாளையம் தியாகிகளின் 70வது நினைவு நாளில், பிரிக்கால் தொழிலாளர்கள் பொருத்தமான அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
ஆகப் பொருத்தமான அஞ்சலி இடது திசை பயணமே
லிக்கரிலிருந்து ஸ்டிக்கர் வரை அம்மாவின் ஆணைக்கிணங்க சாதனை படைத்துள்ள அஇஅதிமுக ஆட்சி, தமிழகம் சந்தித்துள்ள மிகப்பெரிய மானுடப் பேரிடராகும். அம்மாவின் ஆணைக்கிணங்க வேலை வாய்ப்பு முகாம்கள், பொங்கல் பரிசு கூத்துக்கள் என, தமிழக மக்களின் வெந்த புண்களில் வேல்கள் பாய்ச்சப்படுகின்றன. வாட்ஸ் அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்று சொன்ன அம்மா, வாட்ஸ் அப் மூலமே தாம் தமிழ்நாட்டு மக்களுக்காகவே வாழ்வதாகச் சொன்னார். மக்கள், வாட்ஸ் அப் செய்திகளை நம்ப வேண்டாம் என்று அம்மா சொன்னதை, இந்த விசயத்தில் ஏற்றுக் கொண்டுவிட்டனர். எல்லாம் உங்களுக்காக என்று சொல்கிற ஜெயலலிதாவிடம், அய்தராபாத் திராட்சைத் தோட்டங்கள், கொடநாடு எஸ்டேட், சிறுதாவூர் சொத்துக்கள், ஜாஸ் தியேட்டர் மால், மற்றமற்ற ஆயிரம் ஆயிரம் கோடி சொத்துக்களை தமிழ்நாட்டு மக்கள் பேரில் மாற்றுவதற்குத் தயாரா என்று கேள்வி எழுப்புகிறார்கள். ஜெயலலிதாவை முறியடிக்க தயாராகி வரும் தமிழக மக்கள், திமுக அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மறப்பதும் மன்னிப்பதும் கடினம் எனக் கருதுகிறார்கள். கழக ஆட்சிகள் முடியட்டும், இடதுசாரி பயணப்பாதை விடியட்டும் என்ற அழைப்புக்குச் செவிமடுக்கத் தயாராகி வருகிறார்கள்.
ஜனவரி 9 அன்று, கோவை பெரியநாயக்கன்பாளையத்தில் இகக(மாலெ) அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் தோழர் குமாரசாமி, மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமையில் கலந்து கொண்டு கருத்துரையாற்றிய மேடையில், தொழிலாளர்களும் பொதுமக்களும் திரளாகத் திரண்டிருந்த பொதுக் கூட்டத்தில் இகக(மா), இகக தலைவர்களும் கலந்துகொண்டனர்.
போராட்டத்தை ஒட்டி, போராட்டத்திற்காக, போராட்டத்தின் ஊடே அந்த மேடையில் வெளிப்பட்ட இடதுசாரி ஒற்றுமை, நிச்சயமாய் சின்னியம்பாளையம் தியாகிகளுக்கு பொருத்தமான அஞ்சலியே.

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட
8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்போம்!
கோவையில் இடதுசாரி தலைவர்கள் கலந்து கொண்ட பிரும்மாண்ட பொதுக் கூட்டம்

இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கோரி இகக (மாலெ) - ஏஅய்சிசிடியு இணைந்து நடத்தும் பிரச்சார இயக்கத்தின் பகுதியாக ஜனவரி 9 அன்று கோவையில் இடதுசாரி கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட பொதுக் கூட்டம் நடத்தப்பட்டது. கூட்டத்திற்கு இகக (மாலெ) மாவட்டச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தார்.
இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கேட்போம்புத்தகத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலச் செயலாளர் தோழர் இராமகிருஷ்ணன் வெளியிட அதை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நா.பெரியசாமி பெற்றுக் கொண்டார். தோழர் இராமகிருஷ்ணன் தனது உரையில், 8 பிரிக்கால் தொழிலாளர் முன்னணிகள் மீதான இரட்டை ஆயுள் தண்டன சாட்சியங்களுக்கு புறம்பாக வர்க்க குரோதத்திலிருந்து வழங்கப்பட்டதாகவே தெரிகிறது என்றும் இவ்விசயத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, இகக(மாலெ) - ஏஅய்சிசிடியு நடத்துகிற போராட்டங்களுக்கு துணை நிற்கும் என்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் தோழர் நா.பெரியசாமி, ஏஅய்சிசிடியுவின் அகில இந்திய தலைவர் தோழர் குமாரசாமி, இகக( மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம் ஆகியோர் உரையாற்றினர். சிறையிலிருக்கும் 8 பிரிக்கால் தொழிலாளர் குடும்பத்தினரும் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இரட்டை ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட 8 பிரிக்கால் தொழிலாளர்களுக்கு நியாயம் கோரி ஸ்டிக்கர் ஒட்டுவது, வெளியீடு விநியோகம், நிதி திரட்டுவது என கோவை தொழிலாளர்கள் ஊக்கமுடன் பிரச்சார இயக்கத்தைக் கொண்டு செல்கின்றனர்.

தமிழ்நாட்டு இளைஞர்களின் நிலைமைகள்

எஸ்.குமாரசாமி

இளைய இந்தியா
உலகிலேயே இன்று இந்தியாதான் பெரிய இளைய நாடு. உலகம் முழுவதும் 10 முதல் 24 வயது வரை உள்ள இளையவர்கள் 180 கோடி பேர். இந்தியாவில் 10 முதல் 24 வயது வரை உள்ள இளையவர்கள் 36.5 கோடி பேர். இந்தியாவில் உள்ள 121.08 கோடி மக்களில் 10 முதல் 24 வயது வரை உள்ள இளையவர்கள் 30% பேர். சீன மக்கள் தொகையில் 10 முதல் 24 வயது வரை உள்ளவர்கள் 26.9 கோடி பேர். அது, சீன மக்கள் தொகையில் 20% மட்டுமே. இந்தியாவில், இளையவர்கள் எண்ணிக்கை, வரும் ஆண்டுகளில் பெரிதாக மாற வாய்ப்பில்லை.
இந்தியாவில், தற்சமயம் 9 வயது வரை உள்ளவர்கள் 23.9 கோடி பேர். ஆக, 24 வயதுக்குள் உள்ளவர்கள் 60.5 கோடி பேர் ஆகும். ஏறத்தாழ 50% பேர் எனச் சொல்ல முடியும். இந்த இளையவர் எண்ணிக்கைதான் நாட்டில் மிகப் பெரிய பலம் எனவும், இவர்களுக்குப் பயிற்சி தந்து இவர்கள் திறன் வளர்த்து, இவர்கள் மூலம்  உற்பத்தி செய்து, இந்தியாவில் தயாரிப்போம் (மேக் இன் இந்தியா) முழக்கத்தைச்  செயல்படுத்தப் போவதாக மோடி அரசு சொல்கிறது. பெரும்தொழில் குழும (கார்ப்பரேட்) வட்டாரங்களும், மாநில அரசுகளும், ஊடகத்துறையில் கணிசமானோரும் ஓயாமல், இதனையே திரும்பத் திரும்பச் சொல்கின்றனர்.
இளம் இந்தியாவின் தமிழக இளைஞர்கள்
இந்தியாவில், தொழில்மயமாதலில் நகர்மயமாதலில் மகாராஷ்ட்ராகுஜராத் மாநிலங்களோடு தமிழ்நாடுதான் போட்டி போடுகிறது. 01.01.2016 அன்று கோவையில் நடந்த வேலை வாய்ப்பு முகாம் பற்றிய விவரங்களும், சென்னை பாடி லூகாஸ் டிவிஎஸ் மற்றும் கோவை பிரிக்கால் பயிற்சித் தொழிலாளர் பற்றிய சில விவரங்களும், தமிழ்நாடு சட்ட திருத்த மசோதா 47/2008ன் நிலைமையும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பு பற்றிய உண்மை நிலவரம் பற்றி, நமக்குப் புலப்படுத்துகிறது.
கோவை வேலை வாய்ப்பு முகாம்
11.01.2016 அன்று வெளியான தமிழ் மற்றும் ஆங்கில நாளேடுகளில் இருந்து தொகுக்கப்பட்ட விவரங்கள் செய்திகள், முகாம் பற்றிய உண்மையை விளக்கும்.
அம்மாவின் ஆணைக்கிணங்க கோவையில் தனியார் வேலை வாய்ப்பு முகாம் 11.01.2016 அன்று விடியற்காலை 4.30 மணிக்கே துவங்கி நடந்தது. அரசின் பல துறைகளும் இந்த முகாமிற்காக ஒரு மாதத்திற்கு மேல் பணியாற்றினர். கோவை எங்கும் அம்மா, டிஜிட்டல் பேனர்களிலும் கட் அவுட்களிலும் அருள் பாலித்து தமிழக இளைஞர்களுக்கு ஆசி வழங்கிக் கொண்டிருந்தார்.
20 அரசுப் பேருந்துகள் உள்ளிட்ட 1,600 பேருந்துகள் முகாமிற்கு வரவழைக்க பயன் படுத்தப்பட்டனகூட்ட நெரிசலைச் சமாளிக்க 2,500 போலீசார் பணியிலிருந்தனர். முகாமில் கூடுதலானவர்கள் இருந்ததால் செல்போன்கள் சிக்னல் முற்றிலுமாக செயலிழந்துவிட்டது. இலவச வைஃபை வசதி இருந்தும் பயன்படுத்த முடியாமல் போனது. முகாமிற்கு வர போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்பட்டது. முகாமில் இருந்து திரும்ப போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்யப்படவில்லை.
முகாமில் கோவை மேயர் ராஜ்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்கள் .கே.செல்வராஜ், சி.மகேந்திரன், .பி.நாகராஜன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாமோதரன், மலரவன், சின்னச்சாமி, சின்னராஜ், சேலஞ்சர் துரை, ஆறுகுட்டி, முத்துகருப்பண்ணசாமி, கருப்புசாமி, எம்.ஆறு முகம், மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சித்துறை, சட்டம் மற்றும் சிறைகள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தொழில் அமைச்சர் தங்கமணி, தொழிலாளர் அமைச்சர் மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முகாம், கோவை ஸ்ரீகிருஷ்ணா இன்ஜினியரிங் கல்லூரியில் நடைபெற்றது.
முகாமிற்கு, கோவை, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், திருப்பூர், அவினாசி, ஈரோடு, சேலம், நாமக்கல் மற்றும் சென்னையிலிருந்து இளைஞர்கள் கலந்து கொண்டனர். சதர்ன் இன்டஸ்ட்ரியல் மில்ஸ் அசோசியேசஷன் (சைமா) சிஸ்பா, கோயம்புத்தூர் டிஸ்டிரிக்ட் ஸ்மால் இன்டஸ்ட்ரீஸ் அசோசியேஷன் (கொடிஷியா), டிவிஎஸ், ஏபிடி, இன்ஃபோசிஸ், கோவை லக்ஷ்மி மிஷின் ஒர்க்ஸ், பிரிக்கால் போன்ற நிறுவனங்கள், மும்பை, பெங்களூரு, சென்னை, கோவை திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், ஒசூர் மற்றும் மற்ற பகுதிகளிலிருந்து பல்வேறு நிறுவனங்கள் கலந்துகொண்டதாக சொல்லப்படுகிறது.
அமைச்சர் வேலுமணி கூற்றுப்படி, இந்த தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் பெரும் வெற்றி பெற்றுள்ளன. திருச்சி, விழுப்புரம், தூத்துக்குடி, மதுரை, வேலூர், தஞ்சாவூர், நாமக்கல், சேலம், தர்மபுரி, என 9 இடங்களில் நடந்த முகாம்களில் 4,600 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டுள்ளனர். இந்த முகாமிற்கு 2.6 லட்சம் பேர் பதிவு செய்து கொண்டதாகவும், 50,000 பேர் முகாம் நடந்த இடத்தில் பதிவு செய்து கொண்டதாகவும் அவர் தெரிவித்தார். முகாமிற்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் வருகை தந்தனர் எனச் சொல்லப்பட்டது.
முகாமில் 14 மாற்றுத் திரனாளிகள் உள்ளிட்ட 10,155 பேருக்கு உடனடியாக பணி நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டன. முகாமில் கலந்து கொண்டவர்களில் 938 பேர் வெளிநாட்டு வேலைகளுக்காக பதிவு செய்துள்ளனர். 14,500 பேருக்கு திறன் வளர்ப்பு பயிற்சி தர முடிவாகி உள்ளது. அம்மா உருவ பேட்ஜ் அணிந்த அமைச்சர்கள், அம்மா உருவ ஃபோல்டர்களில் வைத்து, நியமன ஆணைகள் வழங்கும் புகைப்படம் ஊடகங்களுக்குத் தரப்பட்டது. நியமன உத்தரவுகளில் அம்மா ஸ்டிக்கர்கள் இருந்ததா எனத் தெரியவில்லை!
அம்மா ஆட்சிக்கு வந்த பிறகு 5.29 லட்சம் பேருக்கு வேலை கிடைத்துள்ளது, 2.04 லட்சம் பேருக்கு அரசுத் துறைகளில் வேலை கிடைத்துள்ளது என அமைச்சர் மோகன் சொல்கிறார். பெரும்பாலான வேலைகள் குறை சம்பள தனியார் வேலைகளும், தொகுப்பூதிய அரசு சார் வேலைகளுமே என்பதை அமைச்சர் சொல்லாமல் மறைக்கிறார். வேலை வாய்ப்பகங்களில் தமிழ்நாட்டில் 83.35 லட்சம் பேர் பதிவு செய்துள்ளதாகவும், அவர்களில் 61 லட்சம் பேர் +1 மற்றும் +2 படித்தவர்கள் என்பதால் அவர்களில் பெரும்பான்மையானவர்கள் மேற்படிப்பு தொடர வாய்ப்புள்ளதாகவும், சொல்கிறார். அதாவது 61 லட்சம் பேர் மேல்படிப்பு படித்துக் கொண்டிருக்க வாய்ப்புள்ளது என்பதால் வேலை கிடைக்காதவர்கள் 20 லட்சம் பேர்தான் என அமைச்சர் சொல்லப்பார்க்கிறார். இதனையும், அம்மாவின் ஆணைக்கிணங்க சொல்லியிருக்கவே வாய்ப்புள்ளது.
நிறைய சத்தம் குறைய சாரம் என்பதே அம்மாவின் ஆட்சி. இதற்கு ஜால்ரா தட்ட, சமீபத்தில் யுஜிசி துணைத் தலைவர் எச்.தேவராஜ் உதகையில், முயற்சி எடுத்துள்ளார். கிராஸ் எம்ப்ளாய்மென்ட் ரேஷியோ வளர்ந்த நாடுகளில் 30%தான் எனவும் அகில இந்திய அளவில் 21%தான் என்றும் தமிழ்நாட்டில் 42% எனவும் தேவராஜ் சொல்கிறார். அதாவது 18 முதல் 23 வயதுள்ளவர்களில், மேல்படிப்பு சேர்ந்துள்ளவர்கள் சதவீதமே கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ. வேலை கிடைக்காததால் படிப்பவர்கள், படித்த பின் வேலை கிடைக்காதவர்கள் பற்றி, என்ன வேலை எவ்வளவு சம்பள வேலை போன்றவை பற்றி, மோகன் தேவராஜ் வகையறாக்கள் எந்த விவரமும் தரமாட்டார்கள்.
தங்கமணியும், வேலுமணியும் செப்டம்பர் 2015 முதலீட்டாளர் மாநாடு நடந்ததை அடுத்து ரூ.2.42 கோடி முதலீடு வரும் எனவும் அதன் முலம் 5 லட்சம் வேலைவாய்ப்பு வரும் எனவும் சொல்லி உள்ளனர்.
அமைச்சர் வேலுமணி சென்னை முதலீட்டாளர் மாநாட்டில் கோவை மாவட்டத்தில் 1,806 குறு சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் ரூ.3184 கோடி முதலீடு செய்ய புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளன என்றும் மேட்டுப்பாளையத்தை அடுத்த வெள்ளேபாளையத்தில் சுமார் 13 ஏக்கர் பரப்பளவில் தேயிலைக் குழுமம் அமைக்கப்பட உள்ளதாகவும், கோவை மோப்பேரிபாளையம் கள்ளப்பாளையத்தில் 313 ஏக்கர் பரப்பளவில் தொழில் பூங்கா அமைக்கப்பட உள்ளது எனவும் இதன் மூலம் 11,000 பேருக்கு வேலை கிடைக்கும் எனவும் சொல்லி உள்ளார். மழை வெள்ள பாதிப்புக்கள், அம்மாவின் 110 அறிவிப்புக்களின் உண்மை நிலையை நன்றாகவே உணர்த்தின. அறிவிப்புக்கள் அறிவிப்புக்கள் அறிவிப்புக்கள் தாண்டி 2016 ஏப்ரல் மே தேர்தல்கள் முன்பு வேறு என்ன எதிர்பார்க்க முடியும்?
பெத்த பேரு ஒகிட்டி லேது
வேலை வாய்ப்பு முகாம் பெரிதாக ஏதும் சாதித்ததா? கலந்துக்கொண்டவர்கள் என்ன சொல்கிறார்கள்? கோவை வடவள்ளியைச் சேர்ந்த சரவணகுமார் என்ற மாற்றுத் திறனாளி பி.எட். மற்றும் சட்டம் படித்துள்ளார். பி. (ஆங்கிலம்) வேறு படிக்கிறார். இரண்டாண்டுகள் வேலை கிடைக்காமல் வீட்டில் டியுஷன் எடுத்து மாதம் ரூ.5,000 சம்பாதித்தவருக்கு இந்த முகாம் மூலம் ரூ.8,500 மாதச் சம்பளத்தில் பயிற்சியாளர் வேலை கிடைத்துள்ளது. ஜீன்ஸ், .கோத்தாரி என்ற பிபிஏ (சிஏ) இறுதியாண்டு மாணவி. தமக்கும் தம் நண்பர்களுக்கும் கேம்பஸ் பிளேஸ்மென்டில் மாதம் ரூ.12,000 சம்பளம் தரும் வேலை கிடைத்துள்ளது என்றும், தன்னம்பிக்கை பெற இந்த முகாமுக்கு வந்ததாகவும், இங்கு திருப்பூர் பிபிஓ ஒன்றில் மாதம் ரூ.7,000 சம்பளத்திற்கு வேலை கிடைத்துள்ளதாகவும் சொல்கிறார்.
டிப்ளமோ எலக்ட்ரிக்கல் படித்து முடித்து விட்டு, கோவை சாய்பாபா காலனியில் சப்பாத்தி தயாரிக்கும் வேலையில் தற்போது ஈடுபடும் திருநெல்வேலி எஸ்.பரமசிவனுக்கு, முகாம் மூலம் காளப்பட்டி தனியார் நிறுவனத்தில் மாதம் ரூ.7,000 சம்பளத்தில் சி அண் சி ஆப்பரேட்டர் வேலை கிடைத்துள்ளது. பொள்ளாச்சியைச் சேர்ந்த தேவி நிரஞ்சனா ஃபேஷன் டிசைன் படித்துள்ளார். அவருக்கு திருப்பூரில் மாதம் ரூ.8,000 வேலை கிடைத்துள்ளது. போளுவாம்பட்டியைச் சேர்ந்த கிருத்திகாவிற்கு, 7 நிறுவன நேர்காணல்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இறுதியாகக் கிடைத்த வேலையில், பயிற்சிக் காலத்தில் மாதம் ரூ.5,500 அதன்பின பணிக் காலத்தில் ரூ.7,000 சம்பளம் தருவதாகத் தெரிவித்துள்ளனர். கோவை இப்ராகிம் 3 நிறுவனங் களின் அரங்குகளுக்குச் சென்றார். விவரங்கள் பெற்றுக் கொண்டு பிறகு வரச் சொன்னார்களாம். கோவை முஜிப்பிடமும் விவரங்களை வாங்கிக் கொண்டு அழைப்பதாகச் சொல்லி உள்ளனர். வீட்டிலிருந்து இங்கு வந்து சேர ஒன்றரை மணி நேரம் ஆனதுதான் மிச்சம், எதற்கு இது போல் நடத்துகிறார்கள் என்றார்.
வேலை வாய்ப்பு முகாமில் வழங்கப்பட்ட பணி ஆணைகள் பலவற்றில் ஊதியம் மற்றும் நேர்காணல் பற்றிய இறுதி முடிவுகள் சொல்லப்படவில்லை. வேறு ஒரு நாளில் இறுதி நேர்காணல் நடத்தி, அதன் பிறகே, வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும் எனப் பல தனியார் நிறுவனங்கள் வெளிப்படையாக பணி ஆணையிலேயே எழுதிக் கொடுத்துள்ளனர். மற்றொரு முறை நேர்காணல் சென்றால், அதில் உறுதியாக வேலை கிடைக்குமா என்று தெரியவில்லை. நீண்ட வரிசைகளைச் சமாளிக்க முடியாத பல நிறுவனங்கள், விவரம் தந்துவிட்டுச் செல்லுமாறு அனுப்பி விட்டார்கள்.
             மாதம் ரூ.10,000 சம்பளத்தில் வேலை கிடைத்ததாக ஒருவர் கூட சொல்லவில்லை.
             கோவையில் 10,155 மற்ற 9 இடங்களில் 46,000 பேர் பணிக்கு அமர்த்தப்பட்டனர். சம்பளம் ரூ.6000 முதல் ரூ.8000 வரை.
             கோவையில் 14,500 பேர் திறன் வளர்ப்புக்கு அனுப்பப்பட்டுள்ளனர். இவர்களைப் பிறகு பயிற்சியாளர்களாக வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு, அரசு ஒரு கணிசமான பகுதி சம்பளத்தைப் போட்டுத் தந்துவிடும்.
             வேலை வாய்ப்பு முகாம்கள், தேர்தல் தயாரிப்பு நாடகங்களே. தமிழ்நாட்டு இளைஞர்களின் நிகழ்காலத்தைப் பாழாக்கி எதிர்காலத்தை இருளில் தள்ளுகிறார்கள்.
டிவிஎஸ் லூகாஸ் பயிற்சியாளர் கொந்தளிப்பு
டிவிஎஸ் தமிழ்நாட்டில் ஒரு பெரிய தொழில் சாம்ராஜ்யம். முதலமைச்சர் எம்.ஜி.ராமச்சந்திரன் முன்பு போடப்பட்ட உடன்பாட்டை மதிக்க முடியாது எனவும், தமிழக அரசு தனக்கு எதிராகக் காவல்துறையை ஏவினால், தாம் மத்திய அரசு மூலம் இராணுவத்தை அழைப்பேன் என்று சொன்னவர்கள்தான் டிவிஎஸ் முதலாளிகள். இங்கு அரசாங்கப் பணத்தைக் கணிசமாகப் பெற்றுக் கொண்டு பயிற்சியாளருக்கு மாதம் ரூ.7,500 தந்து ஒட்டச் சுரண்டினார்கள். ஜனவரி 7, 8, 9 தேதிகளில் 2000க்கும் மேற்பட்ட பயிற்சி தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் செய்தனர். அடுத்து என்ன நடக்கும் எனக் காண வேண்டியுள்ளது.
திருபெரும்புதூர் இருங்காட்டுக்கோட்டை ஒரகடம் போன்ற பகுதிகளில் ஹுண்டாய், ஹுண்டாய் துணை நிறுவனங்கள் இதர பன்னாட்டு நிறுனத் தொழிலாளர்கள் சர்வ சாதாரணமாக 5 முதல் 8 ஆண்டுகள் வரை கூட பயிற்சியாளர்களாக வேலைக்கு வைக்கப்பட்டுள்ளனர். பின்னர், 25 வயது ஆகிவிட்டதால் (வயது ஆகிவிட்டது) நிரந்தர வேலை இல்லை என்கிறார்கள்.
கோவை பிரிக்காலின் கதை
பிரிக்கால் அதிகாரி ஒருவர், கோவை காவல்உயர் அதிகாரி தமது துறையினரிடம் இன்ஜினியரிங் படித்தவர்களைத் தம்மால் பிரிக்காலில் வேலைக்குச் சேர்த்துவிட முடியும் எனச் சொன்ன விவரத்தை தொழிலாளர்களிடம் தெரிவித்து ரூ.10,000, ரூ.12,000 வேலைக்கு அவர் ஏன் அவ்வளவு தாழ்ந்து போகிறார் எனக் கேட்டுள்ளார். இப்போது பிரிக்காலில ஸ்பீட் லிமிட் டிவைசில் லாபம் மாமழையாய்ப் பொழிகிறது. டிப்ளமோ முடித்த ஆண் பெண் இளைஞர்களை மாதம் ரூ.8,000 சம்பளத்திற்கு வேலைக்கு அமர்த்துகிறார்கள். எந்த பயிற்சியும் கிடையாது. நிரந்தரத் தொழிலாளி தரும் உற்பத்தி தர வேண்டும். சம்பள வித்தியாசம் மாதம் ரூ.15,000. சரி இவ்வளவு குறைவான சம்பளத்தில் கூடுதலாக வேலை வாங்கப்படுபவர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?
             06.12.2015 பொதுப் பேரவையில் கலந்து கொண்டதற்காக சில பயிற்சியாளர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டனர்.
             ஜனவரி 2016ல் மனிதவளத் துறை அதிகாரி முன்பு உணவு இடைவேளை நேரத்தில் நடந்து சென்ற இரண்டு தொழிலாளர்கள், பேசிய விஷயம் பேசிய விதம் பிடிக்காததால், அவர்களை உடனே அழைத்து வேலை நீக்கம் செய்து விட்டார்.
             மழை வெள்ள நிவாரண நிதியை சங்கத்திடம் தந்ததற்காக சில தொழிலாளர்களை பிரிக்கால் நிர்வாகம் வேலை நீக்கம் செய்து, தனது வீரத்தையும் நெஞ்சின் ஈரத்தையும் பறைசாற்றியுள்ளது.
இவை அனைத்தும் தமிழக இளைஞர்களின் இன்றைய நிலைமைகளைக் காட்டும். பலரும் இன்று ஜல்லிக்கட்டு பற்றி பேசுகிறார்கள். தமிழகத்தில் ஜல்லிக்கட்டு விவாதப் பொருளானதில் ஜெயலலிதாவுக்கு நிம்மதி. பலரும் அவசரச் சட்டம் கேட்கிறார்கள். மத்திய அரசு அவசரச் சட்டம், மாநில அரசு அவசரச் சட்டம் என வேறுவேறு பிரித்துக் கேட்கிறார்கள். தமிழ்நாட்டில் திருத்தச் சட்ட மசோதா 47/2008ன் கதி பற்றி பேசப்பட வேண்டியுள்ளது.
இந்தியாவில், தமிழ்நாட்டில், தொழிலாளர் பணிநிலைமைகள், நிலையாணைகளால் கட்டுப்படுத்தப்படுகின்றன. நிலையாணைகள் அட்டவணையில் உள்ளவை மட்டுமே பணிநிலைமைகளாக இருக்க முடியும். 14.05.2008 அன்று திருமாங்கல்யத் திட்டம் உள்ளிட்ட மோசடி பயிற்சியாளர் முறை. நிரந்தரமற்ற தொழிலாளர் முறைக்கு எதிராக, அனைத்து கட்சிகளின் ஒப்புதலுடன் தமிழக அரசு நிலையாணைகள் சட்ட அட்டவணையில் 10 , 10 பி என்ற இரண்டு புதிய அயிட்டங்களைச் சேர்த்தது.
பயிற்சியாளர்கள், தகுதிகாண் பருவநிலையினர், பதிலிகள், தற்காலிகத் தொழிலாளர்களின் வேலை வாய்ப்பு, மறு வேலைவாய்ப்பு மற்றும் பணிநிலைமைகள் பற்றி 10 பேசியது.
தொழிலகத்தில் வேலை செய்யும் மொத்தத் தொழிலாளர் எண்ணிக்கையில், பயிற்சியாளர்கள், தகுதிகாண் பருவநிலையினர், பதிலிகள், தற்காலிகத் தொழிலாளர்கள் எத்தனை சதவீதம் இருக்கலாம் என நிர்ணயிப்பது பற்றி 10 பி பேசியது.
கருணாநிதி அரசு மூன்று ஆண்டுகளும் ஜெயலலிதா அரசு நான்கு ஆண்டுகளும் திருத்தச் சட்டத்திற்கு ஒப்புதல் கேட்டும், அய்முகூ, தேஜமு அரசுகள் ஒப்புதல் தரவில்லை. கடைசி செய்திபடி, முன்பு சட்ட அமைச்சராக இருந்த முனுசாமி, முதலாளிகள் நலன்களுக்கேற்ப இந்தக் கோப்பில் பேசவும் (நல்ங்ஹந்) என்று எழுதி கிடப்பில் போட்டதாகத் தெரிகிறது. எஸ்.பி.வேலுமணி என்ன செய்யப்  போகிறார்?
கவுரவமான, பாதுகாப்பான வேலை மறுக்கும், நியாயமான சம்பளம் மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு, தமிழக இளைஞர்கள், தகுந்த பாடம் புகட்ட வேண்டும்.

லூகாஸ் டிவிஎஸ் பயிற்சித் தொழிலாளர்கள் 2,300 பேர் வேலை நீக்கம்  செய்யப்பட்டதற்கு எதிராக
புரட்சிகர இளைஞர் கழகம் - ஏஅய்சிசிடியு இயக்கம்

பயிற்சியாளர் என்ற பெயரில் குறைந்த கூலியில் நேரடி உற்பத்தியில் சட்டத்திற்குப் புறம்பாக சென்னை, பாடியிலுள்ள லூகாஸ் டிவிஎஸ் நிர்வாகம் 2,000க்கும் மேற்பட்டோரை பணியில் அமர்த்தியிருந்தது. அவர்களுக்கு எவ்வித சமூக பாதுகாப்போ, சட்டப் பாதுகாப்போ கிடையாது. அவர்கள் உணவகத்தில் இரண்டாம்தர குடிமக்களாக நடத்தப்பட்டனர். அதிகாரிகளால் மேற்பார்வையாளர்களால் மரியாதைக் குறைவாக நடத்தப்பட்டனர். மாதம் ரூ.35,000 சம்பளம் வாங்கும் நிரந்தரத் தொழிலாளர்களின் அதே வேலையை இவர்கள் ரூ.7,500 சம்பளத்தில் செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். சீற்றமுற்ற தொழிலாளர்கள் ஜனவரி 7 முதல் உள்ளிருப்பு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதே நிறுவனத்தின் நிரந்தரத் தொழிலாளர்களின் அங்கீகரிக்கப்படாத சிஅய்டியு சங்கத்தின் நிரந்தரத் தொழிலாளர்களும் இந்தத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக உணவு புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்கு ஆதரவாக புரட்சிகர இளைஞர் கழகத்தின் தேசியச் செயலாளர் தோழர் பாரதி மற்றும் ஏஅய்சிசிடியு தோழர்கள் ஆலை வாயிலுக்கு சென்று ஒருமைப்பாடு தெரிவித்தனர். பணியிலிருந்த தொழிலாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஆலைக்குள் குழுமியிருக்க, பணி நேரம் இல்லாத தொழிலாளர்கள் ஆலை வாயிலில் திரண்டிருந்தனர். அவர்கள் மத்தியில் தோழர் பாரதி உரையாற்றினார். நாம் தமிழர் கட்சியின் சீமான், இகக(மா) சட்டமன்ற உறுப்பினர் சவுந்தரராஜன், மதிமுக உள்ளூர் நிர்வாகிகள், புதிய ஜனநாயக தொழிலாளர் முன்னணியைச் சேர்ந்தவர்கள் எனப் பலரும் போராடும் தொழிலாளர்களை சந்தித்து வருகின்றனர்.
இதற்கிடையே போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் சுமார் 1,000 தொழிலாளர்களை காவல் துறை கைது செய்தது. புரட்சிகர இளைஞர் கழகம் மற்றும் ஏஅய்சிசிடியு சார்பில் காவல்துறை ஒடுக்குமுறையையும், நிர்வாகத்தின் அராஜகப் போக்கையும் கண்டித்து பகுதியெங்கும் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
தொழிலாளர் துறை முன் நடந்த பேச்சு வார்த்தையில் கலந்துகொண்ட நிறுவன மனிதவளத்துறை அதிகாரி முதலில் நிர்வாக இயக்குனர்தான் முடிவு செய்ய வேண்டும் என்று பதில் அளித்தார். பிறகு சிறிது நேரத்திலேயே தனக்கு அதிகாரம் இருப்பதாகவும் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கும் 2,300 பேரும் வேலை நீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறினார். தொழிலாளர்கள் தங்களது சான்றிதழ்களைப் பெற்றுச் செல்லலாம் என்றும் அறிவித்திருக்கிறார்.

10.01.2016 அன்று அடுத்த கட்ட திட்டமிடலுக்காக நடைபெற்றக் கூட்டத்தில் சுமார் 150 தொழிலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். அராஜக டிவிஎஸ் நிர்வாகத்துக்கு எதிராக அடுத்தடுத்து இயக்கம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

Search