COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 1, 2016

வெள்ள நிவாரணப் பணிகளில் இகக மாலெ

சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில்
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங் களில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பில் பாதிக்கப்பட்ட லட்சக்கணக்கானோரை மீட்கவும், துயர் துடைக்கவும் தட்டிக்கழித்த, அலட்சியப்படுத்திய ஆட்சியாளர்களை எதிர்த்து இயக்கம் நடத்திக் கொண்டே, தொழிலாளர்கள், உழைக்கும் மக்கள் கொடுத்த நிவாரணப் பொருட்களை பாதிக்கப்பட்ட மக்களுக்கு கொண்டு சேர்த்து, அவர்க ளையும் போராட்டக் களங்களுக்கு அழைத்தது மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் கட்சி.
இகக(மாலெ), ஏஅய்சிசிடியு உறுப்பினர்களும் பாதிப்புக்குள்ளாயினர். வீடு, உடைமைகள் இழந்து நின்றனர். கடும் மழையிலும் கட்சி ஊழியர்கள் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டனர். நிவாரண நிதி திரட்டல், பொருட்கள் சேகரிப்பு ஒரு புறமும் தேவைப்படுவோருக்கு விநியோகம் இன்னொரு புறமும் நடந்தது. இகக(மாலெ) தோழர்களிடம் அளிக்கும் நிவாரணம் உரியவர்களுக்கு உறுதியாக போய்ச் சேரும் என்ற உத்தரவாதத்தை மக்கள் புரிந்து கொண்டு உதவியளித்தார்கள்.
நிவாரண பொருட்கள் திரட்டும் இயக்கத்தைத் துவக்கவே மிகுந்த சிரமங்களை சந்திக்க நேர்ந்தது. பிரசுரமோ, சுவரொட்டியோ, கைபேசி அழைப்போ, எஸ்எம்எஸ் செய்தியோ அனுப்ப இயலவில்லை. பிரசுரங்கள், துண்டறிக்கைகள், போட முடியவில்லை. டிசம்பர் 5 அன்று இகக (மாலெ) சென்னை மாநகர கமிட்டி, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே, பிரிக்கால் தொழிலாளர்களுக்கு மறுக்கப்பட்ட நீதிக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியது. நிவாரண நடவடிக்கைகளில் அலட்சியம் காட்டும் ஜெயலலிதா ஆட்சியைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தில், தகவல் கிடைத்து வந்த முன்னணி தோழர்களிடம் ஜனநாயகத்தைக் காக்க, மக்கள் துயர் துடைக்க, ஆட்சியாளர்களின் அலட்சியத்துக்கு எதிராக மக்களைத் திரட்ட வேண்டும் என்ற கட்சி முடிவு அறிவிக்கப்பட்டது. கட்சி மாநிலக் குழு உறுப்பினர்கள் தோழர்கள் ஜவஹர், பாரதி, ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் தோழர்கள் மோகன், முனுசாமி, வழக்கறிஞர் சங்க தோழர்கள் கண்டன உரையாற்றினர்.
டிசம்பர் 6 அன்று, கொட்டும் மழையிலும் மினி வேனில் ஒலிபெருக்கியுடன் காலை 10 மணிக்கு நிவாரணப் பொருட்கள் வழங்க மக்களுக்கு அழைப்பு விடுத்து, தோழர்கள் பாரதி, மோகன், முனுசாமி, பசுபதி, ரஞ்சித், கோகுல், சுகுமார், வினீத், சூர்யா உட்பட 15 தோழர்கள் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். வரதராஜபுரம், கிருஷ்ணாபுரம், விஜயலட்சுமிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் வேன் செல்லும்போது, பல இடங்களில் பொருட்கள் குவிந்துவிட்டதால் உதவிக்கு இன்னொரு வாகனமும் ஏற்பாடு செய்யப்பட்டு, நிவாரணப் பொருட்கள் அலுவலகத்துக்கு கொண்டு வரப்பட்டன. சென்ற இடங்களில் எல்லாம், பிஸ்கட், பிரெட், காய்கறிகள், சேனிடரி நாப்கின்கள், நூடுல்ஸ், மருந்துகள், அரிசி மூட்டைகள் என வாகனத்தில் பொருட்கள் குவிந்தன. அம்பத்தூர் சந்தையில் வாகனம் சென்றபோது, காய்கறி வியாபாரிகள் சுமார் 500 கிலோ கொண்ட காய்கறிகள் கொண்டு வந்து வாகனத்தில் கொட்டினார்கள். அன்று மட்டும் ரூ.40,000 வரை பணமும், மதிப்பிட்டுச் சொல்ல முடியாத அளவுக்கு நிவாரண பொருட்களும் குவிந்துவிட்டன.
இரவு முழுவதும் காய்கறிகளைப் பிரித்து பைகளில் போட்டு, உப்புக்காரமேடு, கல்யாணபுரம் பகுதிகளில்   பாதிக்கப்பட்ட 200 பேருக்கு தோழர்கள் கொடுத்தனர். பெரியார் நகர், மங்களபுரம், அன்னை சத்யா நகர் உள்ளிட்ட பகுதிகளில் பிஸ்கட், பிரெட் பாக்கெட்டுகள் விநியோகிக்கப்பட்டன.
டிசம்பர் 7 அன்று அம்பத்தூரில் விஜயலட்சுமிபுரம், புதூர், ஒரகடம், காமராஜபுரம் உள்ளிட்ட பகுதிகளில், அரசாங்கத்திடம் தலா ரூ.25,000 முதல் ரூ.25 லட்சம் வரை நிவாரணம் கோரி இயக்கம் நடத்தும் பிரசுரத்தையும், கோரிக்கை படிவத்தையும், விநியோகம் செய்து கொண்டே பொருட்கள் திரட்டப்பட்டன. அன்றும் சுமார் ஒரு டன் வரை துணிகளும், உணவுப் பொருட்களும், ரூ.10,000 நிதியும் திரட்டப்பட்டன.
10 நாட்களுக்குப் பிறகு அன்றுதான் தொழிற்சாலைகள் திறக்கப்பட்டதால் உணவு, தேநீர் இடைவேளைக ளில் தொழிலாளர்கள் துயர் துடைப்பு நிதியாக ஒரு நாள் ஊதியத்தை வழங்கிட வேண்டும் என தீர்மானித்து கிளை சங்கங்களில் பொதுப் பேரவைக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. நிவாரணம் கோரி நடைபெறும் போராட்டங்களில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கப்பட்டது. சில முன்னணி தோழர்களின் தொலைபேசியும் அன்று முதல் வேலை செய்ய ஆரம்பித்தது.
டிசம்பர் 8 அன்று, மக்களைக் காப்போம் ஜனநாயகம் காப்போம்இயக்கத்தின் ஒரு பகுதியாக மாநகராட்சி மண்டல அலுவலகம் முற்றுகையிடப்பட்டு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. நிவாரணம் கோரிய மனுக்களுடன் வந்த மக்களை அதிமுக கட்சிக்காரர்களும், அதிகாரிகளும் அம்மா அறிவித்துவிட்டார்கள், ரூ.5,000 வந்துவிடும், போய்விடுங்கள் எனவும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்ளாதீர்கள் என்று திசை திருப்பிய போதும், சுமார் 200 பேர் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்றனர்.
அன்று மாலை மக்களிடம் திரட்டிய மனுக்களை மாநகராட்சி அதிகாரிகளிடம் சேர்த்துவிட்டு நிவாரணப் பொருட்களை பிரித்து பாக்கெட் செய்யும் வேலைகளில் தோழர்கள் ஈடுபட்டனர்.
ஏஅய்சிசிடியு உறுப்பினர்கள் ஜனநாயக தொழிலாளர் சங்கத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் தங்கள் ஒரு நாள் ஊதியத்தை அளித்தனர். ஆன்லோடு கியர்ஸ், சாய்மீரா, இன்னோவேட்டர், மெர்க்குரி பிட்டிங், ஜெஇ இன்ஜினியரிங், ஸ்டான்டார்ட் கெமிக்கல்ஸ் தொழிலாளர்கள் ஒரு நாள் ஊதியம் அளித்தனர். டைமண்ட் செயின் தொழிலாளர் மத்தியில் வசூல் நடந்தது. அம்பத்தூர் மதுரவாயல் பகுதிகளில் சுமார் 650 குடும்பங்களுக்கு ரூ.800 - 900 மதிப்புள்ள பொருட்கள் தரப்பட்டுள்ளன.
திருபெரும்புதூரில் ரூ.20,000 நிதி திரட்டப்பட்டது. பொருட்கள், துணிமணிகள் சேகரிக்கப்பட்டு தாம்பரம், வெங்கம்பாக்கத்தில் அனைத்தையும் இழந்துவிட்ட 18 பேருக்கும், காரனைப்புதூர், பெரியார் நகரில் கட்டுமானப் பணிபுரியும் 20 தொழிலாளர்களுக்கும், வண்டலூர் இந்திரா நகரில் அனைத்தையும் இழந்து நிற்கும் சாலையோர வியாபாரிகள் 20 பேருக்கும், நிர்வாகத்துக்கு எதிரான போராட்டத்தில் ஏற்கனவே வேலையிழந்து, வருமானம் இழந்து வெள்ளத்திலும் உடைமைகள் இழந்து நிற்கும் டைமன்ட் என்ஜினியரிங் தொழிலாளர்களுக்கும் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
திருவள்ளூரில் டிசம்பர் 17 அன்று ஞாயிறு, பசுவம்பாளையத்திலும், டிசம்பர் 27 அன்று அழிஞ்சிவாக்கத்திலும் நிவாரணப் பொருட்கள், பள்ளி மாணவர்களுக்கு நோட்டு, புத்தகங்கள் வழங்கப்பட்டன.
டிசம்பர் 9 அன்று, புளியந்தோப்பு சிவராஜபுரம் பகுதியில் பக்கிங்காம் கால்வாய் பெருக்கெடுத்து அனைத்துப் பொருட்களும் அடித்துச் செல்லப்பட்டதோடு, யாரும் வந்து பார்க்கவில்லை என்று தவித்த மக்களுக்கு சுமார் 200 பாக்கெட் உடைகள், பிஸ்கெட், பிரெட்கள் தரப்பட்டன.
வில்லிவாக்கத்தில் ஏரி உடைபட்டதால், அன்னை சத்யா நகரில் பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு உணவுப் பொருட்கள் தரப்பட்டன. மங்களபுரத்தில் 80 குடும்பங்களுக்கு சேலைகள், பெட்ஷீட்டுகள், பிஸ்கட் பாக்கெட்டுகள், பேஸ்ட், பிரஷ், கொசுவர்த்திச் சுருள் ஆகியவை விநியோகிக்கப்பட்டன.
டிசம்பர் 9 அன்று சென்னையில் திரட்டப்பட்ட ரூ.1 லட்சத்துக்கும் மேற்பட்ட நிதியையும், பிற மாவட்டங்களில் இருந்து அனுப்பப்பட்ட நிதியையும் கணக்கிட்டு, சுமார் 600 குடும்பங்கள் வரை பயன்பெறும் வகையில், பாய், பெட்ஷீட், டவல், அரிசி, பக்கெட், பிளாஸ்டிக் மக் போன்ற சுமார் ரூ.4 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் வாங்கி வரப்பட்டு பேக் செய்யப்பட்டு ஒழுங்கமைக்கப்பட்டன.
டிசம்பர் 10, 17 தேதிகளில் வண்டலூர் ஊரப்பாக்கம், பெருங்களத்தூர் பகுதிகளில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கட்டுமான, அமைப்புசாரா தொழிலாளர்களிடம் நிவாரணப் பொருட்கள் கொண்டு சேர்க்கப்பட்டன.
கொசஸ்தலை ஆற்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கிராமத்தில் 60 குடும்பங்களுக்கு திருவள்ளூர் மாவட்ட கட்சித் தலைவர்கள் முன்னிலையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
அம்பத்தூரில் ஒரகடம், எஸ்வி நகர், ஏகேஏ நகர், விஜயலட்சுமிபுரம், அபிராமி நகர், கல்யாணபுரம், ராஜீவ் காந்தி தெரு, இந்திரா நகர், திருவள்ளூர் நகர், மகாகவி பாரதி நகர், சிவானந்த நகர், ஆசிரியர் காலனி, வரதராஜபுரம், ராமாபுரம், கேகேநகர், டிஜி அண்ணா நகர், அய்சிஎப் காலனி, அன்னை சத்யா நகர், கேகே நகர், தினேஷ்நகர், கொரட்டூர் பெரியார் நகர் பகுதிகளில்  400 நிவாரண தொகுப்புகள் விநியோகிக்கப்பட்டன.
சுமார் 200 முன்னணித் தோழர்கள், கடந்த இருபது நாட்களில் சுமார் மூன்றாயிரம் பேருக்கு நிவாரணப் பொருட்கள் விநியோகத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மின்வாரியத் தொழிலாளர்கள் தோழர் பால்ராஜ் தலைமையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மதுராந்தகம் பகுதியில் 100 கொசு வலைகள், 125 பாய், 500 கிலோ அரிசி ஆகியவற்றை பாதிக்கப்பட்ட மக்களுக்கு நேரடியாக விநியோகம் செய்தனர். மின்வாரிய ஊழியர்களிடம் நிவாரணப் பொருட்கள் திரட்டினர்.
கடலூர், விழுப்புரம் மாவட்டங்களில்
மாலெ கட்சியின் கடலூர் மாவட்ட தலைமைக்குழு, டிசம்பர் முதல் வாரத்திலிருந்து நிவாரணப் பணிகளைத் துவங்கியது. குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார்குடி, விருத்தாச்சலம் தாலுக்காக்களில் வெள்ளம் சூழ்ந்த பகுதிகளையும், தொடர்ந்து வேலை இழப்பைச் சந்திக்கிற கிராமங்களையும் தேர்ந்தெடுத்து அரிசி, உணவுப் பொருட்கள், துணிகள், பிளாஸ்டிக் ஷீட்டுகள், போர்வைகள், பள்ளி/கல்லூரி புத்தகப்பைகள், எழுது பொருட்கள் என ரூ.5 இலட்சம் மதிப்புள்ள பொருட்களை வழங்கியது. காட்டுமன்னார்குடி, திருநாரையூர், கரிவெட்டி, கச்சிராய நத்தம், சொட்டவனம், சி.என்.பாளையம், கார்கூடல், காந்தி நகர் எனப் பல்வேறு பகுதிகளிலும் வழங்கப்பட்டது. தோழர்கள் தனவேல், ராஜசங்கர், சிகாமணி, புகழேந்தி, புலவேந்திரன், ஆறுமுகம் ஆகியோரோடு, விருத்தாச்சலம் நகரைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்ட இளைஞர்கள், மாணவர்கள் சிறப்பாக பணியாற்றினர்.
புதுக்கோட்டையில் நிவாரண நிதி, பொருட்கள் ஒலிபெருக்கியுடன் பிரச்சாரம் செய்து திரட்டப்பட்டன. அரிசி, துணிமணிகள், மருந்து, சேனிட்டரி நாப்கின்கள் என திரட்டி லாரிகளில் கடலூர் கொண்டு சேர்க்கப்பட்டு. கட்சி ஊழியர்கள் மூலம் தேவைப்படுவோருக்கு  விநியோகம் செய்யப்பட்டன. கந்தர்வகோட்டை பகுதியில் ஆசிரியர்கள் திரட்டிய நிவாரணப் பொருட்களும் கடலூர் கட்சி மூலம் விநியோகம் செய்யப்பட்டது.
நிவாரணத்திற்காகப் போராட்டங்கள்
கடலூர் மாவட்டத்தை ஒட்டிய விழுப்புரம் மாவட்டத்தின் பல பகுதிகளும் வெள்ள சேதத்தை எதிர்கொண்டன. தமிழக அரசின் பேரிடர் பாதித்த மாவட்டங்களின் பட்டியலில் விழுப்புரம் மாவட்டம் இல்லாததால் எந்தவொரு நிவாரணமும் மேற்கொள்ளப்படவில்லை. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நவம்பர் 9 முதல், மாலெ கட்சியின் மாவட்டக் குழு தொடர் போராட்டங்கள் நடத்தி வருகிறது. முதற்கட்டமாக, ஊராட்சி மட்ட முற்றுகைகள், உளுந்தூர்பேட்டை தாலுகாவைச் சேர்ந்த திருநாவலூர், நாச்சியார்பேட்டை, வானாம்பட்டு, சேந்தநாடு, ஆரிநத்தம், கு.கள்ளக்குரிச்சி, திம்மிரெட்டி, மாரனோடை ஆகிய இடங்களில் மேற்கொள்ளப்பட்டன. விழுப்புரம் தாலுகா ஒட்டன் காடுவெட்டி, கழிஞ்சிகுப்பம், வழுதரெட்டியிலும், செஞ்சி தாலுகா மேல்ஒலக்கூரிலும் மறியல்கள் நடை பெற்றன. இரண்டாவது கட்டமாக உளுந்தூர்பேட்டை, விழுப்புரம் தாலுகா அலுவலகங்களை, பாதிக்கப்பட்ட பலநூறு பேர் முற்றுகையிட்டு கடும்எதிர்ப்பை கட்டமைத்தனர். அதற்குப் பிறகுதான் கணக்கெடுப்புத் துவங்கியுள்ளது. குடிசைகள்/வீடுகளுக்கு நிவாரணம், பயிர் இழப்பீடு, ஏரிவாய்க்கால் தூர் வாருதல் ஆகியவை கோரிக்கைகளாக போராட்டங்களில் எழுப்பப்பட்டன.
16.12.2015 அன்று வெள்ள நிவாரணம் கேட்டு விழுப்புரம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்பு இகக மாலெ விழுப்புரம் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் செண்பகவள்ளி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வீடு இழந்தவர்களுக்கு, ரூ.1 லட்சம் நிவாரணம், நிவாரண நடவடிக்கைகளில் அரசியல் குறுக்கீடு, பாரபட்சம் கூடாது, மாத அளவீடு என்றில் லாமல் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேவையான ரேஷன் பொருட்கள் வழங்க வேண்டும், நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் கூலி பாக்கி உடனடியாக வழங்கப்பட வேண்டும், சேதமடைந்த பயிர்களுக்கு நிவாரணம் வழங்கப்பட வேண்டும், கண்டம்பாக்கம் ஊராட்சியில் சர்வே எண்.334/6(பி)யில் 120 குடும்பங்களுக்கான பட்டா முறைப்படி வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகள் முன்வைக்கப்பட்டன. நிகழ்ச்சியில் புதுச்சேரி மாநிலச் செயலாளர் தோழர் பாலசுப்பிரமணியன், விழுப்புரம் மாவட்டச் செயலாளர் தோழர் வெங்கடேசன், ஏஅய்சிசிடியு மாவட்டச் செயலாளர் தோழர் கணேசன், அகில இந்திய விவசாய மற்றும் கிராமப்புற தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தோழர் கஜேந்திரன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துகொண்டனர்.
பிற மாவட்டங்களில் நிவாரணம் திரட்டும் பணி
நிவாரணம் திரட்டும் பணிகளில் கோவை, நாமக்கல் கரூர், திண்டுக்கல், மதுரை ஆகிய மாவட்டங்களின் தோழர்கள் ஈடுபட்டனர்.
வெள்ள நிவாரணப் பணிகளை துரிதப்படுத்த, நூறுநாள் வேலைத் திட்டத்தில் உடனடியாக வேலை வழங்க வலியுறுத்தி டிசம்பர் 19 அன்று தஞ்சை மணலூர் ஊராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தோழர்கள் கண்ணையன், மனோகரன், செல்லத்துரை, ரமேஷ்வர் பிரசாத் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் 05.12.2015 அன்று மக்களிடம் நிவாரணமாக திரட்டிய 22 மூட்டை அரிசி, மருந்து மற்றும் நிவாரணப் பொருட்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு ரசீது பெறப்பட்டது. 17.12.2015 அன்று சுமார் 4 டன் நிவாரணப் பொருட்கள் கடலூர் மாவட்டத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டு அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர்கள் மூலம் விநியோகம் செய்யப்பட்டது. கட்சி மாநில அலுவலகத்துக்கு ரூ.7,000 நிவாரண நிதி அனுப்பப்பட்டது.

தோழர் சங்கரநாராயணனுக்கு
செவ்வஞ்சலி

இகக (மாலெ) கட்சி அமைப்பை நெல்லையில் கட்டியதில் முக்கியமான பங்காற்றியமாலெ கட்சி, ஏஅய்சி சிடியு செயல்பாடுகளிலும் மனிதஉரிமைப் பாதுகாப்பு, சுற்றுப்புறச் சூழல் பாதுகாப்பு, முற்போக்கு கலை இலக்கியச் செயல்பாடுகளிலும் அர்ப்பணிப்போடு செயல்பட்டு வந்த தோழர் சங்கரநாராயணன் மனித உரிமை பாதுகாப்பு தினமான 10.12.2015 அன்று தன் மூச்சை நிறுத்திக் கொண்டார். சமூகப் பணியாற்றுவதற்காக தனது வங்கிப் பணியில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றார். இரண்டு ஆண்டுகளாக புற்றுநோயோடு போராடிக் கொண்டே பொதுப்பணி ஆற்றிக் கொண்டிருந்த அவருக்கு சிகிச்சையில் முன்னேற்றம் இருந்த வேளையில், சென்னையின் செயற்கை வெள்ளத்தால் ஏற்பட்ட தொற்றுநோய் அவரை நம்மிடம் இருந்து நிரந்தரமாகப் பிரித்துவிட்டது.
80களின் துவக்கத்தில் மாலெ இயக்கம் உருவானபோது திருநெல்வேலியில் பல்வேறு இளைஞர் கழகங்களை, இலக்கிய வட்டங்களை ஒன்றிணைத்தவர்; தோழர் சங்கரபாண்டியனுடன் இணைந்து, ‘தமிழக இளைஞர் இயக்கபதாகையின் கீழ் மூவாயிரத்திற்கும் மேற்பட்டவர்களை திரட்டி அரசுக்கெதிராக மாபெரும் பேரணி நடத்தியவர். கட்சியின் தலைமறைவுக் காலம் முதல், அவரின் 10, பாரதியார் தெரு, திருநெல்வேலி வீடு பல ஆண்டுகள் கட்சியின் அலுவலகமாக செயல்பட்டது. கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தம் போடப்பட்டபோதும் கொடியங்குளம் ஒடுக்குமுறையின்போதும் கட்சியின் சார்பாக போராட்ட இயக்கங்களைக் கட்டமைத்ததில் முக்கியப் பங்காற்றினார். தனது இறுதி நாட்களின்போதும் அகில இந்திய மக்கள் மேடை மாநாட்டுக்கு தாமாக முன்வந்து நிதியளித்தார். தனது இறுதிப் பயணம் ஒரு கம்யூனிஸ்டுக்குரிய மரியாதையுடன்தான் நடக்க வேண்டும் என்று கூறியிருந்தார். அதன்படியே 11.12.2015 அன்று நெல்லையில் ஒரு கம்யூனிசப் போராளிக்குரிய அனைத்து மரியாதைகளுடன் தோழர் சங்கரநாராயணனின் இறுதி நிகழ்ச்சி நடைபெற்றது. மயானத்தில் நடைபெற்ற அஞ்சலிக் கூட்டத்தில், அவரது மகன், மகள் உட்பட குடும்பத்தைச் சேர்ந்த பெண்களும் கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் பேசிய இகக(மாலெ) மத்தியக் கமிட்டி உறுப்பினர் தோழர் வீ.சங்கர், ‘தோழர் சங்கரநாராயணன் வாழ்க்கையின் பிற்காலங்களில் கட்சியின் அரசியல் வழியை உயர்த்திப் பிடித்துக் கொண்டே சுற்றுச் சூழல் மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் அதிக ஆர்வம் காட்டி வந்தார். நெல்லையில் மீண்டும் பல்லாயிரக்கணக்கில் வெகுமக்களைத் திரட்டுவதுதான்மூவாயிரம் இளைஞர்களைத் திரட்டிய தோழர் சங்கரநாராயணனுக்கு நாம் செலுத்தும் உண்மையான அஞ்சலியாகும்என்றார். அஞ்சலிக் கூட்டத்தில், கர்நாடக மாநில ஏஅய்சிசிடியு தலைவர்களில் ஒருவரான தோழர் காந்திமதி, இகக (மாலெ) நெல்லை மாவட்டச் செயலாளர் தோழர் சங்கரபாண்டியன், மாநிலக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் தேசிகன், ஜி.ரமேஷ், மற்றும் தோழர்கள் கணபதி, சிவகாமிநாதன், காஞ்சனை மணி, எழுத்தாளர் சாளை பசீர், தோழரின் மகன் தீபன், மகள் சிந்து மற்றும் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் தோழர் சங்கரநாராயணனின் முற்றுப் பெறாத பணியினைத் தொடர உறுதியேற்றுப் பேசினார்கள்.

20.12.2015 அன்று தோழர் சங்கரநாராயணனின் நினைவேந்தல் நிகழ்ச்சி திருநெல்வேலியில் நடைபெற்றது. அவரைப் பற்றி எழுத்தாளர் நாறும்பூநாதன் எழுதிய பாடலை கரிசல்குயில் கிருஷ்ணசாமி பாடினார். தோழர் சங்கரநாராயணனின் படத்தை பண்பாட்டு ஆய்வாளர் பேராசிரியர் தொ.பரமசிவன் திறந்து வைத்து உரையாற்றினார். அதைத் தொடர்ந்து தோழர் சங்கரநாராயணன் பற்றிய சிறு வெளியீட்டை சூழலியலாளர், கோவை மருத்துவர் ரமேஷ் வெளியிட அதை சங்கரநாராயணனின் அண்ணன் சிவசுப்பிரமணியன் பெற்றுக் கொண்டார். கூட்டத்தில் நிறைவுரையாற்றிய இகக(மாலெ) மாநிலச் செயலாளர் தோழர் பாலசுந்தரம், 70கள் மற்றும் 80களில் ஆரம்பித்து 2015 வரையில் நடந்துள்ள புரட்சிர இயக்கங்கள், சுற்றுப்புறச் சூழல் செயல்பாடுகள், கலை இலக்கியச் செயல்பாடுகளில் தோழர் சங்கரநாராயணனின் பங்களிப்பு மிக முக்கியமானது. நிகழ்ச்சியில் மேலும், அகில இந்திய மக்கள் மேடையின் காஞ்சனை ஆர்.ஆர். சீனிவாசன், கவிஞர் குட்டி ரேவதி, சென்னை உமாமகேஷ்வரன், வழக்கறிஞர் தங்கசாமி, பேராசிரியர் வே.மாணிக்கம், பிரபா கிருஷ்ணன், வங்கி ஊழியர் சங்கத்தின் தோழர் மனோகர், காஞ்சிபுரம் மழை அமைப்பின் தோழர் சூரி, ஓய்வுபெற்ற பதிவாளர் சிதம்பரபாண்டியன் தோழர் சங்கரநாராயணனின் மருமகன் மகாராஷ்டிராவைச் சேர்ந்த நிகில் ஆகியோர் தங்கள் நினைவைப் பகிர்ந்து கொண்டனர்.

Search