COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Friday, January 1, 2016

மனிதக் கழிவுகளை மனிதரே அகற்றுவதற்கு
முடிவு கட்டுவது எப்போது?

எஸ்.குமாரசாமி

இந்திய அரசியலமைப்புச் சட்டம், தீண்டாமையைத் தடை செய்யப்பட்ட குற்றமாக்கி 65 வருடங்கள் ஆகிவிட்டது. இந்து மத சடங்காச்சாராங்கள்படியானசுத்தக் கோட்பாட்டின்படிஉடலில் உள்ள அசுத்தத்தை வெளியேற்றுவதை, மலம், சிறுநீர் கழிப்பதை, வீட்டுக்கு வெளியேதான் செய்ய வேண்டும். மலம் சிறுநீர் கழித்த பிறகு உடலைச் சுத்தப்படுத்திக் கொண்டுதான் வீட்டிற்குள் நுழைய வேண்டும். அம்பேத்கர் வாதப்படிஊருக்கு வெளியே உள்ள சேரியில் உள்ளோரை தீண்டத்தகாதோர் ஆக்கியதும், இந்து மதத்தின் ஒரு கட்டத்தில், கி.பி. மூன்றாம் () நான்காம் நூற்றாண்டு வாக்கில்தான் நடந்தது. இதன் தொடர்ச்சியாக, அசுத்தத்தோடு தொடர்பு கொண்டு, அவற்றை அகற்றும் பணியைச் செய்ய, தீண்டாதோரில் ஒரு பகுதியை, பார்ப்பனீய இந்து சமூகம் நிர்ப்பந்தித்தது.
இந்தியாவில் சமூகத்தின் வளர்ச்சிப் போக்கில், உலர் கழிப்பறைகள் வந்தன. கழிவுகளை, கழிவு நீரை அகற்ற சாக்கடைகள் வந்தன. சாக்கடை என்ன முன்னேறினாலும், கழிவுப் பொருள் கழிவுப் பொருளாகத்தானே இருக்கும். நாகரிக வளர்ச்சியால் வந்த அந்த கழிப்பறைகளோடு, அந்த சாக்கடைகளோடு, மனிதரே கழிவகற்றும் அநாகரிகமும் சேர்ந்தே வந்தது. உலர் கழிப்பறைகளில் இருந்து கைகளால் மலத்தை அகற்றி கூடைகளில் தலையில் சுமப்பது இன்று பெருமளவுக்குக் குறைந்தாலும், தொடரவே செய்கிறது.
வீட்டில் கழிப்பறைகள் இல்லாதவர்கள் இந்தியாவில் 77 கோடியே 42 லட்சத்து 22 ஆயிரத்து 300 பேர். அரியானா சங்பரிவார் அரசு, வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள், கல்வியறிவு இல்லாதவர்கள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடக்கூடாது எனத் தடை விதித்துச் சட்டம் போட்டது. ‘வலுவான’ ‘சுதந்திரமானஉச்சநீதிமன்றம், இந்தச் சட்டம் அரசியலமைப்புச் சட்டப்படி சரிதான் என்று சொல்லிவிட்டது. அடுத்து, உச்சநீதிமன்றத்தின் ஆட்சியாளர்களின் கவனமும் பார்வையும், வீட்டில் கழிப்பறை இல்லாத 77,42,22,000 இந்தியர்களின் வாக்குரிமை, தேர்ந்தெடுக்கப்படும் உரிமை ஆகியவற்றின் மீது, விழாமல் இருக்க வேண்டும்!
மனிதரை மலம் எடுக்கச் சொல்வதையும், உலர் கழிப்பறைகளைக் கட்டுவதையும் தடுக்கும்  சட்டம் 1993ல் போடப்பட்டது. ஆனால், சட்டம் அமலுக்கு வரும் அறிவிப்பாணை 1997ல்தான் வெளியிடப்பட்டது. இந்தச் சட்டம், 2013ல் ஒரு மாற்றுச் சட்டம் வரும் வரை 16 வருடங்கள் அமலில் இருந்தது. இந்தச் சட்டம் அமலில் இருந்த காலம் நெடுக, ஒருவர் கூட, இதன்படி தண்டிக்கப்படவில்லை.
÷ன் 1, 2008ல் உச்சநீதிமன்ற நீதிபதி எச்.கே.சீமா, மலத்தைக் கையால் அள்ளுபவர்/கையாள்பவர் என்று ஒருவரும் இல்லை என்ற நிலை வரும் வரைதூய்மைப் பணியாளர் தொடுத்த (சஃபாய் கரம்சாரி) வழக்கை முடிக்க மாட்டோம் என ஆரவாரமாகத் தெரிவித்தார். 2013ல் மனிதர் மலம் அள்ளும் வேலையில் ஈடுபடுத்தப்படுவதை தடுப்பது மற்றும் அவர்கள் மறுவாழ்வுச் சட்டம் மத்திய அரசால் போடப்பட்டது. இந்தச் சட்டம் வந்ததையே காரண மாகக் காட்டி, தலைமை நீதிபதி சதாசிவம் உள்ளிட்ட அமர்வம் 27.03.2014 அன்று தூய்மைப் பணியாளர் தொடர்ந்த வழக்கை முடித்து வைத்துவிட்டது.
இந்தியாவில் ரெயில்கள் 1,11,500 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கின்றன. ரெயில்களில் 80,000 கழிப்பறைகள் உள்ளன. மகாராஷ்டிரா மாநிலத்தில் மட்டும் 63,000 வீடுகளில் உலர் கழிப்பறைகள் உள்ளன. நாடெங்கும் 96 லட்சம் உலர் கழிப்பறைகள் உள்ளன. 12 லட்சம் பேர் இன்னமும் மலம் அள்ளும் வேலை பார்ப்பதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மனிதக் கழிவுகளை மனிதர் அள்ளுவதை 2013 சட்டம் தடுக்கிறதா?
19.09.2013 அன்று அமலுக்கு வந்த Prohibition Of Employment As Manual Scavengers And Their Rehabilitaion Act  2013ல் ஒரு முன்னுரை உள்ளது.
மானுட கவுரவம் காப்பது, தலித்துகள் மீதான எல்லா வகை சமூக அநீதிக்கும் சுரண்டலுக்கும் முடிவு கட்டுவது என்ற லட்சியங்களை நம் அரசியல் அமைப்புச் சட்டம் சொல்கிறது. ஆனால், சுகாதாரமற்ற கழிவறைகளும், அநீதியான சாதிய அமைப்பும் நாட்டின் பல பகுதிகளில் நீடிப்பதால், மனிதர் மனிதக் கழிவகற்றும் மனிதத் தன்மையற்ற முறை நீடிக்கிறது. இருக்கும் சட்டங்கள் இந்தத் தீமைகளைப் போக்கப் பயனுள்ளயைவாக அமையவில்லை. வரலாற்றுரீதியான இந்த அநீதியை அகவுரவத்தை முடிவு கட்டவும், அவர்களுக்கு ஒரு கவுரவமான மறுவாழ்வு வழங்கவும், இந்தச் சட்டம் இயற்றப்படுகிறது’.
சட்டத்தின் 7ஆவது பிரிவு, சாக்கடையிலோ செப்டிக் டேங்கிலோ, ஆபத்தான சுத்தப்படுத்துதலில், நேரடியாகவோ, நேரடியாக அல்லாமலோ எவரையும் ஈடுபடுத்தக் கூடாது என்கிறது. பிரிவு 8 மீறுபவர்களுக்கான சிறை தண்டனை பற்றியும், பிரிவு 13 மறுவாழ்வு பற்றியும் ஒரு நேர பண உதவி, தொழில்கல்வி பயிற்சி, பயிற்சிகால உதவித்தொகை மாதம் ரூ.3000, வீட்டு வசதி, கல்வி உதவி, தொழில் துவங்கக் கடன் பற்றியும் பேசுகின்றன.
இந்தச் சட்டமே, இந்தச் சட்டத்திலிருந்து தப்பிப்பதற்கான சில முக்கியமான ஓட்டைகளையும் கொண்டுள்ளது. இந்தச் சட்டத்தின் 2 (டி) பிரிவுப்படி, ஆபத்தான சுத்தப்படுத்தல் என்பது விவரிக்கப்படுகிறது. வேலையளிப்பவர் பாதுகாப்பு கருவி, சுத்திகரிப்பு சாதனம் வழங்காமல், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனுசரிப்பதை உறுதிப்படுத்தாமல், சாக்கடையையோ செப்டிக் டேங்கையோ சுத்தப்படுத்தச் சொல்வதுதான் ஆபத்தான சுத்தப்படுத்துதல் என்கிறது. எது பாதுகாப்பு, எது பொருத்தமான சாதனம், எது பாதுகாப்பு வழிமுறை, முன்னெச்சரிக்கை என்பவை எல்லாம் மத்திய அரசின் விதிகள் மூலம் நிர்ணயிக்கப்படும் எனச் சொல்லப்பட்டுள்ளது. சட்டத்தின் பிரிவு 2(ஜி) விளக்கம் (பி)படி, மத்திய அரசு அறிவித்துள்ள சாதனம் மற்றும் பாதுகாப்பு உபகரணம் கொண்டு கையால் கழிவு அகற்றுபவர், சட்டப்படி கையால் கழிவு அகற்றுபவர் ஆக மாட்டார்.
சுத்திகரிப்பு - பாதுகாப்பு சாதனங்கள் தந்தோம், தொழிலாளர்கள் அவை இல்லாமலேயே இறங்கிவிட்டனர் என்று சொல்லித் தப்பிக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. இந்தச் சட்டப்படி மனிதர் மனித மலம் அள்ளுவது ஒழிக்கப்படாது; மாறாக ஒழுங்குபடுத்தப்பட்டு நீடிக்கப்படும்.
மூன்று மரணங்கள் சொல்லும் செய்திகள்
மதுரையில் அக்டோபர் 2015ல் விஸ்வநாதன், முனியாண்டி என்ற இரண்டு தொழிலாளர்கள் கழிவுகளைச் சாக்கடையில் இருந்து அகற்ற கீழே இறங்கியபோது, விஷவாயு தாக்கி இறந்தனர். 26.11.2015 அன்று கோழிக்கோடு கந்தப்பாக்கம் கிராஸ்ரோடில் நரசிம்மன், பாஸ்கர்ராவ் என்ற ஆந்திராவைச் சேர்ந்த இரண்டு தொழிலாளர்கள், 7, 8 அடி ஆழமுள்ள மேன்ஹோலில் இறங்கினர். விஷவாயு தாக்கி மயக்கமடைந்து இறந்தனர். காப்பாற்றச் சென்ற நவுஷத் என்ற இசுலாமிய ஆட்டோ ஓட்டுனரும் இறந்தார். (சாவிலும் இசுலாமிய - இந்து  பாட்டாளி ஒற்றுமை வெளிப்பட்டுள்ளது)
2015 தீபாவளி அன்று தலைநகர் டெல்லியில், டெல்லி ஜல் போர்டால் ஒப்பந்தக்காரராக நியமிக்கப்பட்ட பன்னாட்டு நிறுவனமான விஏ டெக் லாபாக் லிமிடெட்டின் தொழிலாளி, 22 வயது வினய் சிரோஹி, சாக்கடையில் உயிரிழந்தார். இவரது தந்தையும், இதே போல் உயிரிழந்தவராம். வினய் சிரோஹி, ஒப்பந்த வால்வ் ஆபரேட்டர். அவருக்குத் திருமணமாகி ஏழு மாதங்கள்தான் ஆகிறது. டெல்லி ஜல் போர்ட், தான் குற்றவாளியல்ல என்று சொல்லி, செத்து மடிந்த வினய் சிரோஹி தாமாக மரணத்தைத் தேடிக் கொண்டார் எனக் குற்றம் சுமத்தியது. வினய் சிரோஹி இந்த வேலையைச் செய்திருக்கக் கூடாது, அவர் தனியாகப் போயிருக்கக் கூடாது, அவர் பாதுகாப்பு உபகரணங்கள் அணியவில்லை என வாதாடியது. வினய் சிரோஹிகொல்லப்பட்டகேஷோபூர் கழிவு சுத்திகரிப்பு பிளாண்டில் ஒரு நாளில் 40 மில்லியன் கேலன் திரவக் கழிவு சுத்தப்படுத்தப்படுகிறது. இங்கு பணியில் ஒரு நிரந்தரத் துப்புரவுத் தொழிலாளி கூட இல்லை. இந்த டெல்லியில் இப்போது ஆட்சியில் இருப்பவர்கள், துடைப்ப சின்னத்தில் வெற்றி பெற்றவர்கள்! ஆளை ஜீரணித்து விடும் இந்தக் கழிவு சுத்திகரிப்பில் ஓர் ஆண்டில் டெல்லி ஜல் போர்டில் 100 பேர் சாகிறார்கள். துப்புரவுத் தொழிலாளியின் சராசரி வயது 43. சிரோஹியின் உடலை மீட்கச் சென்றவர்களுக்கு, புதிதாக வரவழைத்து கையுறைகளும் பாதுகாப்பு உபகரணங்களும் தந்தார்களாம். மதுரை, கொச்சி, டெல்லியில் நடந்த 3 மரணங்களும், 2013 சட்டம் வந்த பிறகுதான் நிகழ்ந்தன. இந்தச் சட்டம், மேலை நாட்டவர் மலம் கழித்த பிறகு உபயோகப்படுத்தும் காகிதம் அளவுக்குக் கூட பயனில்லாதது என்பது, கசப்பான உண்மை. இந்தியாவில் சுத்திகரிப்புப் பணிகளில் ஓராண்டில் சுமார் 22,327 பேர் சாகிறார்கள். இவர்கள் அனைவருமே தலித்துகளாகவும், அதிலும் குறிப்பிட்ட உட்பிரிவைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதற்கு மட்டுமே வாய்ப்புண்டு. இவர்களுக்கு அளிக்கப்படுகிற அதிகபட்ச பாதுகாப்பு இடுப்பில் கட்டப்படும் கயிறாகும். சாக்கடையில் இறங்கிய பின்விஷவாயுவில்  கரப்பான் பூச்சி செத்துள்ளதா என்று பார்க்கத் தெரிந்திருக்கும் அனுபவ அறிவுதான், அதிகபட்ச பாதுகாப்பு முன்னெச்சரிக்கையாகும்.
பாதுகாப்பு உபகரணங்கள் வாங்க, மேன் ஹோலுக்குக் கீழே உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய, போதிய நிதி ஒதுக்க மத்திய, மாநில அரசுகளோ, உள்ளாட்சி அமைப்புக்களோ தயாரில்லை. 2012 - 2013ல் இந்தப் பணியில் ஈடுபடுபவர்கள் மறுவாழ்வுக்காக மத்திய அரசு ஒதுக்கிய ரூ.100 கோடியில், ஒரு ரூபாய் கூட ஒருவர் மறுவாழ்வுக்காகவும் செலவழிக்கப்படவில்லை. நாடாளுமன்றத்தில் தரப்பட்ட தகவல்படி 30.06.2015 வரை, 2013 சட்டப்படி மறுவாழ்வுக்காக அடையாளம் காணப்பட்டு, மறு வாழ்வு நிதி பெற்றவர்கள் விவரம் அட்டவணையில் தரப்பட்டுள்ளது. (ஒருவருக்கு ரூ.40,000). சென்னை மாநகராட்சிப் பகுதியில் உள்ள 252 பேர் உட்பட தமிழ்நாடு முழுவதும் 462 பேர் இந்த வகையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் யாருக்கும் இதுவரை எந்தப் பயனும் வழங்கப்படவில்லை என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
2013 சட்டப்படி, 30.06.2015 வரை 5,846 பேர் மறுவாழ்வுத் தொகை ஆளுக்கு ரூ.40,000 பெற்றுள்ளனர். இந்தியாவின் நீதி பரிபாலன முறையும் நாடாளுமன்ற ஜனநாயகமும் நீடூழி வாழ்க! தமிழ்நாட்டில்அம்மாவின் ஆணைக்கு இணங்க’, மறுவாழ்வுப் பணி ஏதும் நடக்கவில்லை போல் உள்ளது!
இப்போது தூய்மை இந்தியா திட்டத்தைத் துவக்கி உள்ள நரேந்திரமோடி அரசாங்கம், 5 வருடங்களில் 6 கோடி கழிப்பறைகள் கட்டப் போவதாகவும் அதற்கு ரூ.62,009 கோடி தேவை எனவும், மத்திய அசு ரூ.14,620 கோடி ஒதுக்கும் என்றும், மீதத்தொகை கார்ப்பரேட் மற்றும் இதர துறைகளால் போடப்படும் என்றும் சொல்கிறது. நாடு, மோடி புண்ணியத்தில் கார்ப்பரேட் கழிப்பறைகளைக் காணப் போகிறது!
குடிநீர் மற்றும் தூய்மைப்படுத்துதல் என்ற வகையினத்தில் மத்திய அரசால், 2014 - 2015ல் ரூ.12,096 கோடி நிதி ஒதுக்கப்பட்டது. இது 2015 - 2016க்கு ரூ.6,231 கோடி ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. கிராமப்புற இந்தியா தூய்மை பெற்று விட்டதாக மோடி - ஷா - ஜேட்லி மும்மூர்த்திகள் சொல்லப் போகிறார்களா?
காந்தி முதல் மோடி வரை தூய்மைப் பணியாளர்கள் தொடர்பாகப் பேசிய எழுதிய கருத்துக்கள், தீண்டாமையை மறுஉறுதி செய்யும் பார்ப்பனீய இந்துத்துவா கருத்துக்களே. பவநகர் கத்தியவார் அரசியல் மாநாட்டைத் துவக்கி வைத்த காந்தி 08.01.1925 அன்று பேசினார்: ‘எனக்கு ஏதாவது ஓர் இடம், பதவி வேண்டுமென்றால், அது பங்கியின் (வால்மீகி) இடமே. அசுத்தத்தை சுத்தம் செய்யும் பணியை ஒரு பார்ப்பனரும் செய்ய முடியும். ஒரு பங்கியும் செய்ய முடியும். பார்ப்பனருக்கு, அதன் புனிதத் தன்மை தெரியும். பங்கிகளுக்கு அதன் புனிதத் தன்மை தெரியாது. நான் இருவரையும் மதிக்கிறேன். போற்றுகிறேன். இருவரில் ஒருவர் இல்லாவிட்டாலும் இந்துயிசம் அழிந்துவிடும். எனக்கு சேவையின் பாதை பிடிக்கும். அதனால் பங்கிகளைப் பிடிக்கும். எனக்கு அவர்களோடு சேர்ந்து உணவு உண்ண எந்த எதிர்ப்பும் இல்லை. ஆனால் அவர்களோடு திருமண உறவு கொள்ளுமாறு, சமபந்தி போஜனம் செய்யுமாறு, உங்களிடம் சொல்லவில்லை. எப்படி அப்படி ஆலோசனைகளை சொல்ல முடியும்?’
07.11.1936ல் ஹரிஜன் இதழில் காந்தி எழுதினார்: ‘ஹரிஜன் லட்சியத்துக்காகப் பாடுபடுபவர்கள், முற்றிலும் எந்த நுட்பமும் இல்லாத அப்பாவித்தனமான புத்தி மட்டான, குழந்தைகள் அறிவுமட்ட அளவிலேயே உள்ள ஆண்களோடும் பெண்களோடும் நெருங்கிய தொடர்பு கொள்ள வேண்டும்’.
காந்திக்கு, பார்ப்பனர் மலம் அள்ள மாட்டார்கள் என்பது நன்கு தெரியும். தலித் உட்பிரிவான பங்கிகள், மலம் அள்ளுவதைத் தமக்கு ஒதுக்கப்பட்ட இந்துமதப் புனிதப் பணியாகக் கருத வேண்டும் எனவும், அவர்கள் சாதி இந்துக்களோடு சமபந்தி போஜனம் திருமண உறவு பற்றி யோசிக்கக் கூடாது எனவும் தெளிவாகச் சொல்கிறார். (காடுவெட்டி குரு, யுவராஜ் போன்றவர்கள், ‘அண்ணல் காந்தியடிகள் சொன்னபடிஎன பேசலாம்!) காந்தி, புத்தி மட்டானவர்களாக, சாதி இந்துக்கள் தயவு தேவைப்படும் பயனாளிகளாகவே, தலித் மக்களை பார்த்துள்ளார். 2007ல் நரேந்திர மோடி தூய்மைப் பணியாளர்கள் பற்றி ஆன்மிகம் சொட்டச் சொட்ட எழுதினார்: ‘அவர்கள், வெறுமனே பிழைப்புக்காக இந்த வேலையைச் செய்வதாக நான் கருதவில்லை. அப்படி இருந்தால், இந்த வேலையை அவர்கள் தலைமுறை தலைமுறையாகச் செய்திருக்க மாட்டார்கள். ஏதாவது ஒரு நோக்கில், அவர்களில் எவருக்காவது, மொத்த சமூகத்தின் மகிழ்ச்சிக்காக, கடவுளரின் மகிழ்ச்சிக்காக இந்த வேலையைச் செய்வது வால்மீகி சாதியினரின் கடமை, இந்த வேலை கடவுள்கள் தமக்குத் தந்த வேலை, இது நூற்றாண்டுகளாகத் தம் உள்வயமான ஆன்மிக நடவடிக்கையாகத் தொடர்கிறது என்ற அறிவொளி, அவர்களை எட்டியிருக்கும். அதனால்தான் இது தலைமுறை தலைமுறையாய்த் தொடர்கிறது. அவர்களது மூதாதையர்க்கு, அவர்கள் விரும்புகிற வேறு ஒரு தொழிலோ, வேலையோ கிடைத்திருக்காது என்பது  நம்பத்தகுந்ததல்ல.’ மோடியின் பார்வைப்படி, குறிப்பிட்ட தலித், சாதியினரே தலைமுறை தலைமுறையாக, கடவுள் தொண்டாக, ஆன்மிகப் பணியாக, தூய்மைப் பணியைப் பார்க்க வேண்டும்.
பார்ப்பனீய இந்துத்வா கருத்துக்களோடு, கன கச்சிதமாகப் பொருந்தும் ஒரு கார்ப்பரேட் (பெரும் தொழில் குழும) விளம்பரம் பற்றிக் காண்போம். அது ஒரு ரேடியோ மிர்ச்சி வர்த்தக விளம்பரம். ஒரு மேன் ஹோலுக்குள் (சாக்கடைக்குள்) இறங்கி உள்ள மனிதர் பாடுகிறார்: “என்ன அற்புதமான வானிலை, எவ்வளவு பரந்து விரிந்த ஆகாயம், நாம் இந்தப் பேரானந்தத்தில் மூழ்கி உள்ளோம். ஆனந்தம், பேரானந்தம்சாக்கடைக்கு வெளியே, சுத்தம் செய்பவரின் செருப்பும் பேண்டும் இருக்கும். அவ்வழியில் செல்லும், வாயில் பீடா குதப்பிக் கொண்டு சஃபாரி சூட் அணிந்திருக்கும் ஒருவர், இவர் எப்படி இவ்வளவு மகிழச்சியாக இருக் கிறார் என ஆச்சர்யப்படுவார். உடனே விளம்பரம் வரும். ‘மிர்ச்சி கேள், எப்போதும் குஷியாய் இரு’. தூய்மைப்பணி, ஆன்மிகப்பணி, கடவுள் தந்த பணி என இந்துத்துவாவும், குஷியான பணி என கார்ப்பரேட் கனவான்களும் கூட்டாகச் சொல்கிறார்கள்! இவர்கள் தீண்டாமையை ஒரு போதும் ஒழிக்க மாட்டார்கள்! மனிதர் மலம் அள்ளும் அவலத்திற்கு முடிவு கட்ட அக்கறை மிக்க முயற்சி எதுவும் எடுக்க மாட்டார்கள்.
மழை வெள்ளம்  மறு உறுதி செய்த தீண்டாமை
கடலூர் மாவட்டத்தில் மழை/வெள்ள நிவாரணம் வந்து சேருவதில், தாம் புறக்கணிக்கப்பட்டதாக, தலித் மக்கள் சொல்கிறார்கள். அந்தக் குரல்கள், தலைநகர் சென்னையிலும் ஒலித்தன. ஆனால், மழை நின்று வெள்ளம் வடியும் போது, நவீன கால தீண்டாமை அரங்கேறியது. மூன்று லட்சம் டன் முதல் 5 லட்சம் டன் வரை குப்பை சேர்ந்தது. மாநகரின் 11,700 துப்புரவுப் பணியாளர்களோடு, மற்ற 9 மாநகராட்சிகள் 23 பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி ஒன்றியங்களிலிருந்து 8,000 துப்புரவுப் பணியாளர்கள் வரவழைக்கப்பட்டனர். ஆந்திராவிலிருந்து 700 பேர் வரவழைக்கப்பட்டனர். இவர்களுக்கு நல்ல உணவு, நல்ல குடிநீர், நல்ல தங்குமிடம் தரப்படவில்லை. பாதுகாப்பு சாதனங்கள் தரப்படவில்லை. சொற்பத் தொகைக்கு கடுமையாக வேலை வாங்கப்பட்டனர்.
மழை நின்று வெள்ளம் வடிந்த பிறகு, மீண்டும் தீண்டாமை தலை தூக்கியது. ஆட்சியாளர்கள் அணுகுமுறையில் தீண்டாமை வெளிப்படுவதில் வியப்படைய ஏதுமில்லை. எல்லையற்ற மனித நேயத்தை வெளிப்படுத்திய மனித சமூகத்தில் இருந்து இப்படியும் சில விசயங்கள் இருந்தன. வெளியூரில் இருந்து சென்னைக்கு குப்பை அகற்றும் பணிக்கு வந்த பெண் துப்புரவுத் தொழிலாளர்கள், ஒரு டம்ளர் தண்ணீர் கூட வாங்க முடியவில்லை எனப் புகார் செய்தனர். அவர்கள்பால் அனுசரணை காட்டப்படவில்லை. மாறாக வர்க்க - சாதி பேதம் காட்டப்பட்டது. இந்த பேதம், அவர்கள் சுத்தப்படுத்திய குப்பையை/கழிவுகளைக் காட்டிலும் சகிக்க முடியாததாக இருந்தது. இது போன்ற ஒரு சூழலில், தூய்மைப் பணியில் சில இசுலாமிய அமைப்புக்கள் ஈடுபட்டதும், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்க உறுப்பினர்கள் கழிவு/மலம் அகற்றுவது உள்ளிட்ட தூய்மைப் பணிகளில் ஈடுபட்டதும், கவனத்தில் எடுத்துக் கொள்ளப்பட்டு மெச்சத் தக்க விஷயங்களாகும்.
மனிதர் மலத்தை மனிதர் அகற்றுவதை ஒழிக்க, நவீன தொழில் நுட்பம் தேவைஅதனோடு கூடவே தீண்டாமையும் சாதி அமைப்பும் வேரறுக்கப்பட்டாக வேண்டும்.

இரட்டை ஆயுள் தண்டனை வழங்கப்பட்ட
பிரிக்கால் தொழிலாளர்கள் எட்டு பேருக்கு நீதி வேண்டும்
அகில இந்திய மக்கள் மேடை வேண்டுகோள்

கோவை பிரிக்கால் நிறுவனத் தொழிலாளர்கள் தங்கள் உரிமைக்காக சங்கம் அமைத்தார்கள், ஏஅய்சிசிடியுவில் இணைத்துக் கொண்டார்கள். 2007ம் ஆண்டு முதல் நியாயமான தங்கள் கோரிக்கைகளுக்காக பல்வேறு போராடங்களை, இயக்கங்களை நடத்தினார்கள். அதன் விளைவாகபணி நீக்கம் உட்பட பல்வேறு தண்டனைக்குள்ளானார்கள். இருப்பினும் தொடர்ந்து போராடினார்கள். தொழிலாளர் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்ட நிர்வாகத்தின் மீது அரசாங்கம், ஆணை பிறப்பிக்கச் செய்தார்கள். ஒடுக்குமுறைக்கு அஞ்சாமல் அசராமல் 2007 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து போராடிய தொழிலாளர்களை அடக்குவதற்கு பிரிக்கால் நிர்வாகமும் அரசும் காவல்துறையும் கூட்டு சேர்ந்து 2009 ஆம் ஆண்டு செம்டம்பர் 22ம் தேதி பிரிக்கால் நிறுவன மனித வள மேம்பாட்டு அதிகாரி ராய் ஜார்ஜின் மரணத்திற்கு காரணம் என்று சொல்லி நான்கு பெண் தொழிலாளர்கள், ஏஅய்சிசிடியு தேசியத் தலைவர் தோழர் குமாரசாமி மற்றும் ஏஅய்சிசிடியு மாநில நிர்வாகிகள் உட்பட 27 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்தனர். அந்த வழக்கில் 3.12.2015 அன்று கோவை குண்டு வெடிப்பு நீதிமன்றம், கொலைச் சதி நிரூபிக்கப்பட வில்லை என்று சொல்லி 19 பேரை விடுதலை செய்த நீதிமன்றம், நிரூபிக்கப்படாத குற்றத்திற்கு மணிவண்ணன், சரவணக்குமார், சிவக்குமார், வேல்முருகன், ராஜேந்திரன், சம்பத்குமார், ராமமூர்த்தி, குணபாலன் ஆகிய 8 தொழிலாளர்களுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.
கார்ப்பரேட் முதலாளிகளின் அநியாயங்களுக்கு எதிராகப் போராடும் தொழிலாளர்களை அடக்கி ஒடுக்கும் நோக்கத்துடன் முதலாளிகள் சார்பு அரசம் காவல்துறையும் அடிப்படை ஆதாரங்கள் ஏதும் இன்றி புனைந்த வழக்கில், முதலாளிகளின் விருப்பத்திற்கேற்ப தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மனித உரிமைகளுக்காக, தொழிலாளர்கள் நலன்களுக்காகப் போராடி வருபவர்கள் மீது கொடுமையான தாக்குதல்கள் தொடுகப்பட்டு வருகின்றன. மனித உரிமைப் போராளி, மாற்றுத் திறனாளியான பேராசியர் சாய்பாபாவிற்கு பல மாத சிறைவாசத்திற்குப் பின் வழங்கப்பட்ட பிணை ரத்து செய்யப்பட்டுள்ளது. மாருதித் தொழிலாளர்கள் 37 பேர் பல ஆண்டுகளாக விசாரணைக் கைதியாகவே பிணைகூட வழங்கப்படாமல் சிறையில் வாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொருபுறம் அரசாங்க கஜானாவைக் கொள்ளையடிக்கும் கார்ப்பரேட் முதலாளிகளும், பணம் படைத்தவர்களும், காவிப் பாசிச மதவெறிச் சக்திகளும் தங்கள் குற்றங்களில் இருந்து தப்பிக் கொண்டிருக்கிறார்கள். நீதிமன்றங்களால் விடுவிக்கப்படவும் செய்கிறார்கள். இப்படிப்பட்ட சூழலில்தான் பிரிக்கால் தொழிலாளர்கள் 8 பேருக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
அந்தத் தொழிலாளர்கள் 8 பேருக்கும் உடனடியாக பிணை வழங்கப்பட வேண்டும். தொடர்ந்து அவர்கள் 8 பேரும் சம்பந்தம் இல்லாத இந்தக் கொலை சதி வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட வேண்டும்.என அகில இந்திய மக்கள் மேடை வலியுறுத்துகிறது. அதற்காக மக்கள் மன்றத்திலும் நீதிமன்றத்திலும் போராடும் தொழிலாளர்களுடன் அகில இந்திய மக்கள் மேடை தோளோடு தோள் நிற்கும்.
ஒப்பம்: எஸ்.வி.ராஜதுரை எஸ்.பி.உதயகுமார் .மார்க்ஸ் ஆர்.வித்யாசாகர் சுஜாதா மோடி .சிம்சன் காஞ்சனை சீனிவாசன் திருமலைச்சாமி .சந்திரமோகன் ஜி.ரமேஷ் எஸ்.ஜவஹர் கே.ஜி.தேசிகன்

சிம்புவும் அனிருத்தும் தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டாக வேண்டும்

தெரியாமல் செய்த தவறுக்காக சாக வேண்டுமா, எங்களுக்கு தமிழ்நாடே வேண்டாம், நாங்கள் தமிழ்நாட்டை விட்டு வெளியேறுகிறோம் என்று சிம்புவின் தாயார் உஷா சொல்கிறார். வசதியும் வாய்ப்பும் உள்ளவர்கள். அவர்கள் விருப்பம். செய்யலாம். வசதி படைத்தவர்கள் இப்படிச் சொல்வது பாஷனாகிவிட்டது
ஆனால், முதலில் அவர் தனது மகனை சட்டத்தின் முன் சரணடையச் சொல்ல வேண்டும். சிம்பு அவரது பொறுப்பின்மைக்கு ஆணாதிக்க வக்கிரத்துக்கு கலைப் போர்வை போர்த்தி பொது வெளியில் பரவவிட்டதற்கு தண்டனைக்கு உள்ளாக்கப்பட்டாக வேண்டும். தன் மீது எழுந்த குற்றச்சாட்டை கருத்துச் சுதந்திரம் என்று சொல்லி சிம்பு எதிர்கொண்ட விதம் இறுமாப்பின் உச்சம். அவருடைய சீரழிந்து போன சிந்தனையின் அசிங்கமான, அருவருப்பான வெளிப்பாடு.
அவரும் அனிருத்தும் சட்டத்தால் தண்டிக்கப்படுவது இன்றைய, நாளைய சமூக சூழலுக்கு நல்லது. அவசியம். வசதியும் வாய்ப்பும் இருப்பதாலேயே எப்படியும் நடந்துகொள்ளலாம் என்ற பணக்கார தறுதலைத்தனத்துக்கு, பின்புலம் இருக்கிறது எதுவும் செய்யலாம் யாரும் எதுவும் செய்துவிட முடியாது என்ற கருதுகிற இறுமாப்புக்கு, எவ்வித கவலையும் அக்கறையும் பொறுப்பும் இன்றி அவற்றை வெளிப்படுத்தியதற்கு அவர்கள் தண்டனை பெற்றாக வேண்டும். சமூகம் செக்ஸ் அன்ட் பேலன்சஸôல் (இட்ங்ஸ்ரீந்ள் ஹய்க் ஆஹப்ஹய்ஸ்ரீங்ள்), உள்வயக் கட்டுப்பாடுகளால் இயங்குகிறது என்ற பாடத்தை அவர்களும் அவர்களைப் போன்ற பணத்திமிருடன் சேர்ந்த ஆணாதிக்கத் திமிருடன் திரிகிற இளைஞர்களும் கற்றுக்கொண்டாக வேண்டும்.
சில விதிவிலக்குகள் தவிர, தமிழ் திரைப்பட துறையினர் அதிசயமாக புத்திசாலித்தனமான முடிவெடுத்து இந்த விசயத்தில் தங்கள் எதிர்ப்பு கருத்துக்களை, கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். சிம்புவின் வக்கிரத்துக்கு எழுந்துள்ள எதிர்ப்புகளின் துவக்க கட்ட வெற்றி என்று இதைச் சொல்லலாம். பெண்களை இழிவுபடுத்துவது, கொச்சையாகப் பேசுவது வெற்றிக்கு உறுதியான சூத்திரம் என்பது கண்ணாம்பாள் காலத்தில் இருந்து அவர்கள் கடைபிடித்து வருகிற நடைமுறை. வாரிசு நடிகர்கள் பெரிய இடத்தைப் பெறுகிற இன்றைய தமிழ் சினிமா சூழலில் தனுஷ் போன்றவர்கள் கூட நல்ல நடிகர் என்று பெயரெடுத்து விட முடிகிறது. அவரது அடிறா அவளையும் ஒய் திஸ் கொலை வெறிடியும் உலகளாவிய புகழ் பெற்ற நிலையை நாம் பார்த்தோம். எல்லாவற்றுக்குமாகச் சேர்த்து இன்று எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாம் கொள்ளலாம்.
கருணாநிதி முதல் கண்ணதாசன், வாலி ஊடாக இன்றைய கதாசிரியர்கள் பாடலாசிரியர்கள் வரை, பெண்களை கொச்சைப்படுத்தி எழுதி வந்ததை, பலவற்றையும் சகித்துக் கொள்ள நேர்ந்த பெண்கள் சகித்துக் கொண்டார்கள். ஆனால் இன்று சிம்பு அந்த சகிப்புதன்மையையும் சோதனைக்கு உட்படுத்திவிட்டார். வெள்ளையா இருக்கறவன் பொய் பேச மாட்டான் என்று ஒரு திரைப்படத்துக்கு தலைப்பிடப்பட்டுள்ளது. வெள்ளக்காரனுக்குக் கூட கக்கூசு வருமா என்றுதீண்டாத வசந்தம்நூலில் ஒரு தலித் கதாபாத்திரம் கேட்கும். பணக்காரர்கள், வெள்ளைத் தோல் கொண்டவர்கள் கெட்ட வார்த்தை பேச மாட்டார்கள், ‘லோக்கல்பேர்வழிகள்தான், ஏழைகள்தான் கெட்ட வார்த்தை பேசுவார்கள் என்று இன்னும் யாராவது கண்மூடித்தனமாக நம்பிக் கொண்டிருந்தால் அவர்கள் சிம்புவின் வக்கிர வரிகளை கேட்க வேண்டும்.
சிம்புவின் வக்கிரத்துக்கு இன்று எழுந்துள்ள இந்த எதிர்ப்பு, ஸ்ரேயாவை துவைத்து எடுத்த ரஜினிகாந்துக்கு பூஜா குமாரை புரட்டி எடுத்த கமலஹாசனுக்கு கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக பேசிய அஜித்துக்கு பெண்களுக்கு ஆடைக் கட்டுப்பாடுகள் முதல் பல்வேறு அறிவுரைகள் சொல்லத் துடிக்கும் விஜய்க்கு பிரம்மாண்ட செலவில் படம் எடுத்து பெண்களின் உடையில் சிக்கனம் காட்டி அரைநிர்வாணமாக்கும் இயக்குநர் சங்கர் போன்றவர்களுக்கு, பெண்களை தரக்குறைவாகப் பேசுவது யதார்த்தம் என்று சொல்ல முனையும் திரைப்பட இயக்குநர்களுக்கு, பழைமை கருத்துக்களுக்கு மெருகேற்றுகிற சின்னத்திரை தொடர்களுக்கு சீரழிவு கருத்துக்களுக்கு உரம் போடுகிற ரியாலிட்டி ஷோக்களுக்கு எச்சரிக்கை தரும் விதம் விரிவது அவசியமாகிறது.

(அந்தக் கண்றாவிப் பாடலைக் கேட்க வேண்டிய கெடுவாய்ப்பு எனக்கும் நேர்ந்தது).

Search