பேஸ்புக்கில் பேஸ்புக்குக்கு நடந்த 'சம்பவம்'
(ஊடகவியலாளர், சமூக செயல்பாட்டாளர் கவின்மலர் முகநூல் பதிவு, 17.08.2020)
என்ன நடந்ததென்று எழுதி விடுகிறேன். முகநூலில் என் படத்தின்மீது 'என் விலை 1000 ரூபாய்' என எழுதி சசிகுமார் என்கிற நபர் என் படத்தை போட்டோ கமெண்ட்டாக பா.ஜ.க.வினரின் திடீர் முருக வழிபாடு குறித்து எழுதிய என் பதிவில் போட்டிருந்தார்.
அந்த கமெண்ட்டை ரிப்போர்ட் செய்தேன். என் இன்னொரு புகைப்படமும் இவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்ததை வேறொரு பதிவில் பார்த்தேன் (என் கண்ணுக்குப் பட்டவை இவை. வேறெங்கும் உள்ளதா என தெரியாது).
ரிப்போர்ட் செய்தவுடன் நடவடிக்கை எடுக்க மறுத்தது முகநூல். அதை நீக்க முடியாது என்றதுடன் அவர்களின் Community Standardsபடி அதில் தவறில்லை என்றது. இதுதான் என்னை கோபமுற வைத்தது. மீண்டும் ஒரு முறை கோரிக்கை வைக்க வழி இருந்தது. வைத்தபோது 'நீங்கள் வேண்டுமானால் அந்த நபரின் கமெண்ட்டை ட்ண்க்ங் செய்யலாம் அல்லது நீக்கலாம் அல்லது அவரை ப்ளாக் செய்யலாம்' என்றது. இது எனக்குத் தெரியாமலா நான் முகநூலில் முறையிடுகிறேன்? உதவியை நாடினேன்? இன்னும் இந்த போட்டோ யார் யாருடைய பக்கங்களில் எங்கெல்லாம் உள்ளன என அறியாமல் நான் ஒவ்வொன்றாய் தேடிக்கொண்டிருக்க முடியுமா? பல நண்பர்களும் அதை நானே நீக்கிவிடவேண்டும் எனக் கேட்டனர். இப்படியான வாசகத்துடன் என் படம் இணையத்தில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. என் மீதான அக்கறையில் அவர்கள் சொன்னார்கள் என்றாலும் நான் அதை ஏற்கவில்லை. இதைச் செய்யவேண்டியது முகநூல்தான். முகநூல் முன்வந்து அதை நீக்கவைக்கவேண்டும் இல்லை எனில் எத்தனை நாட்களானாலும் முகநூலுக்கும் வலதுசாரிகளுக்குமான ஒப்பந்தத்தின் சாட்சியாய் அது இருக்கட்டும் என்றே நினைத்தேன்.
இதைப் பற்றி எழுத முடிவெடுத்தேன். அதை ஆங்கிலத்தில் எழுதினேன் என்பதால் அது இந்திய அளவில் உள்ள பல பத்திரிகையாளர்களை, செயற்பாட்டாளர்களைச் சென்றடைந்துவிட்டது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட விருப்பக்குறிகளும் ஏராளமான பகிர்தலுமாக வைரல் ஆனது.
பின்னர் ட்விட்டரிலும் இதை நேற்று முன் தினம் எழுதவும், அதுவும் வைரல் ஆனது. ஏறத்தாழ 3000 லைக்குகளும், 1700 க்கும் மேற்பட்ட ரீட்வீட்களும் என அங்கும் வைரல் ஆனது. அங்கே மக்கள் மார்க்கையும், இந்திய பேஸ்புக்கின் தலைமைப்பொறுப்பிலுள்ள அங்கிடாவையும் டேக் செய்தனர். சிலர் ராகுல் காந்தியையும் டேக் செய்தனர்.
இதற்கு நடுவில் நியூஸ் மினிட் தன்யா பேஸ் புக் குழுவை தொடர்புகொண்டு அந்த போட்டோவை நீக்கக் கோரியவுடன் நான் ரிப்போர்ட் செய்த குறிப்பிட்ட அந்த போட்டோ கமெண்ட் மட்டும் நீக்கப்பட்டது. ஆனால் வேறு பதிவுகளில் அவை இருந்தன.
வால் ஸ்ட்ரீட் ஜர்னலில் இந்தியாவில் பேஸ்புக் எப்படி ஆளுங்கட்சிக்கு சேகவம் செய்கிறதென நீண்ட கட்டுரை வந்திருந்தது. அங்கிடாவின் தங்கை பா.ஜ.க.வின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பியோடு தொடர்புடையவர் எனவும் செய்திகள் வரத் தொடங்கி இருந்த சமயத்தில் எனக்கு நிகழ்ந்த இந்த விஷயம் இந்தக் கட்டுரைகளுக்கான சாட்சியாகவே இருந்தது. பலர் இந்தத் தொடர்பை சுட்டிக்காட்டி ட்வீட் செய்தனர்.
இத்தனை வைரலாக இந்தப் பதிவு ஆகுமென நான் நினைத்திருக்கவில்லை.
பலர் மார்க்கின் வீட்டுப் பெண்களையோ அல்லது பேஸ் புக்கின் இந்தியத் தலைமை அங்கிடாவையோ அவரது வீட்டுப் பெண்களையோ இப்படி ரேட் வைத்து போட்டோ வெளியிட்டால் பேஸ்புக் நிர்வாகம் எனக்குச் சொன்ன பதிலைச் சொல்லிவிட்டு அந்தப் படம் பேஸ்புக்கில் இருக்கட் டும் என்று விட்டிருக்குமா என்கிற கேள்வியை ஆவேசமாகக் கேட்டிருந்தனர். இத்தனை பேர் கேள்வி கேட்டு, பலர் பேஸ்புக் அக்கவுண்ட்டை நிரந்தரமாக மூடப்போவதாகவும் சொல்லி #DeleteFacebook என்கிற பரப்புரையையும் முன்னெடுத்தனர்.
இன்று பேஸ்புக் நிர்வாகம் நான் விஷயத்தை அம்பலப்படுத்தி எழுதிய பதிவில் உள்ள படம் (சசிகுமார் உருவாக்கிய படம்) பேஸ்புக்கின் Community Standardsபடி தவறு என்றும் அது harassment and bullyingஇல் வரும் என்று சொல்லி நீக்கி இருக்கிறது. இதைத்தானே முன்னமே செய்யச் சொல்லி கரடியாய் கத்தினேன். அப்போது செய்யாமல் விளைவுகள் வேறு மாதிரி ஆகி, ஆளும் பாஜகவுக்கும் பேஸ்புக் நிர்வாகத்துக்குமான ரகசிய ஒப்பந்தத்தின் உதாரணமாக என் விஷயம் பார்க்கப்படுவதை உணர்ந்ததும் அவசரமாக அந்தப் படத்தை நீக்குகிறது. கொஞ்சமும் வெட்கம் இல்லையா பேஸ்புக் நிர்வாகத்துக்கு? எவனோ உருவாக்கி போஸ்ட் செய்தபோது அது தவறில்லை என்றது பேஸ்புக். அதைச் சுட்டிக்காட்டி நான் எழுதிய பதிவில் இருக்கும் படம் தவறு என்று இரட்டை நிலை எடுத்தது பேஸ்புக் எனக் கொள்வதா? அல்லது விளைவுகளை உணர்ந்து காலதாமதமாக செயல்பாட்டில் இறங்கியதா பேஸ்புக்?
இன்னொரு பதிவில் சென்று சற்றுமுன் பார்த்தேன். அதிலிருந்தும் அந்தப் படம் நீக்கப்பட்டிருக்குறது.
ஆக! பேஸ்புக் நிர்வாகத்தின் சங்கி தொடர்புகளை அம்பலப்படுத்தி தேசிய அளவிலும் பேஸ்புக்கின் உரிமையாளர் வரையிலும் சென்று மக்கள் சமூக ஊடகங்களில் ஒருமித்த குரலெழுப்பினால் மட்டுமே நம்மைப் போன்றவர்களுக்கு பேஸ்புக் இறங்கிவரும்.
ஆனால் வலதுசாரிகள் நம் தரப்பில் 'பார்ப்பனியம்' என்கிற வார்த்தையை பயன்படுத்தியதற்காகவே ரிப்போர்ட் செய்து பலரது ஐடியை காலி செய்திருக்கிறது பேஸ்புக். நண்பர்கள் புது ஐடி உருவாக்கி பயன்படுத்துகின்றனர். பல நண்பர்கள் ஒரு மாத காலம் உள்ளே வர முடியாதபடி முடக்கப்படுகிறார்கள். பல பதிவுகள் நீக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் புகார்களுக்கு எல்லாம் மட்டும் எப்படி உடனடியாக செயல்படுகிறது பேஸ்புக்? நாம் யார் மீதாவது புகார் தந்தால், அது நியாயமாகவே இருந்தாலும் எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது!
பேஸ்புக்கில் உலவும் சங்கிகளை எதிர்ப்பது ஒருபுறம் என்றால் நாம் பேஸ்புக்கையும் எதிர்த்து ஒரு பெரும்போராட்டத்துக்குத் தயாராகவேண்டும்!
அந்த சசிகுமாருக்கு எதிராக காவல்துறையில் புகார் அளித்துள்ளேன். சசிகுமாருக்கு தண்டனை கிடைப்பதற்கான வேலைகளையும் பார்க்க வேண்டும்.
இவ்விஷயத்தில் உடன் நின்ற அத்தனை தோழர்களுக்கும் நன்றியும் அன்பும்.