COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 5, 2020

 கல்வி  உரிமையை மறுக்கும்
தேசிய கல்வி கொள்கை 2020

ஆர்.வித்யாசாகர்


புதிய 'தேசிய கல்வி கொள்கையை' திணிப்பதன் மூலம், வகுப்புவாத பாசிச பாஜக  சாதி ஆதிக்க மனுவாத பார்ப்பனீய சமூகத்தை மீண்டும் கட்டமைப்பதற்கு வித்திட்டுள்ளது. வேடுவனாகிய ஏகலைவன் எப்படி வில் வித்தை கற்கலாம் என்று அவனுடைய பெருவிரலை குரு காணிக்கையாகப் பெற்றதாக   மஹாபாரத புராணம் நமக்கு கூறுகிறது.

இன்று சாதி ஆதிக்க சமூகத்தை பழைய நிலைக்கே மீட்டெடுக்க, சமூக நீதிக்கு சமாதி கட்ட வந்து விட்டது பாஜகவின் புதிய கல்வி கொள்கை. தனது இந்துராஷ்டிரா கனவுக்கும், கார்ப்பரேட்டுகளின்  கொள்ளைக்கும் ஏதுவாக கல்வி முறையை மாற்றும் திட்டம்தான் புதிய கல்வி கொள்கை. 23 பாகங்களும், 450 பக்கங்களும் கொண்ட இந்த கல்விக் கொள்கை, சாமான்ய மக்களின், சமூக அடித்தட்டு மக்களின் குழந்தைகளை கல்வி கற்பதிலிருந்து படிப்படியாக வெளியேற்றி, கூலிப் பட்டாளமாக மாற்றுவதற்கான திட்டமாகும்.
பழைய சமூக அமைப்பை மீளுருவாக்கம் செய்ய முயல்வது இந்த கல்வி கொள்கையின் அறிமுகத்திலேயே தெளிவாக விளங்குகிறது. அதில் கூறப்பட்டிருப்பது: 'பழமையான, நிரந்தரமான இந்திய ஞானம் மற்றும் சிந்தனை, இந்தக் கொள்கையின் வழிகாட்டும் விளக்காக இருக்கிறது. இந்திய சிந்தனை மற்றும் தத்துவத்தில் அறிவின் நாட்டம் (ஞான்), ஞானம் (ப்ரக்யா), மற்றும் உண்மை (சத்ய) ஆகியவையே எப்போதும் உயர்ந்த நோக்கங்களாக கருதப்பட்டு வருகிறது. பண்டைய இந்தியாவில் கல்வியின் நோக்கமானது, இந்த உலக வாழ்க்கைக்கான அறிவுக் கொள்முதலோ, அல்லது பள்ளிக் கல்விக்குப் பிறகான வாழ்க்கைக்கு தேவையான விஷயமோ மட்டுமல்ல. மாறாக முழுமையாக தன்னை உணர்தலும், சுய விடுதலையும் ஆகும்' (தேசிய கல்வி கொள்கை 2020 அறிமுகத்திலிருந்து). அக்காலத் திய சில பல்கலைக்கழகங்களை, அவை உருவாக்கிய அறிஞர்கள் (சாணக்கியர் முதல் திருவள்ளுவர் உட்பட) பெயர்களையும் குறிப்பிட்டு, 'உலகப் பாரம்பரியத்திற்கு இந்தியா அளித்த இந்த வளமான மரபுகள், புதிய கல்வி திட்டத்தின் மூலம், வருங்காலச் சந்ததியினருக்காக பேணி பாதுகாக்கப்படுவதோடு, புதிய பயன்பாட்டிற்கு வர வேண்டும்' என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த கல்வி கொள்கையில், 'பாரம்பரியத்தின் பங்கும், இந்திய விழுமி யங்களும்' எவ்வாறு பங்களிக்கிறது என்று மீண்டும் மீண்டும் சொல்லப்பட்டுள்ளது. இதன் உள்ளர்த்தம் மிகவும் ஆபத்தானது. சமீப காலங்களில் நாம் சந்தித்துக்கொண்டிருக்கும் விஞ்ஞானரீதியான சிந்தனைக்கு எதிரான பழமைவாத  போக்கை இது பறைசாற்றுகிறது.  
இந்தப் பின்னணியில் உருவாகியிருக்கும் கல்வி கொள்கையின் முக்கிய அம்சங்கள்,  சமூகரீதியாக இன்னும் ஒடுக்கப்பட்டுள்ள பிரிவினரின் குழந்தைகளும், இதர சாமான்ய மக்களின் குழந்தைகளும், உயர் கல்வியை அடைய விடாமல் ஆரம்பத்திலேயே வடிகட்டுவது, தொழிற் கல்வி திணிக்கப்படுவது, உயர்கல்வியை முழுதும் தனியார்மயமாக்குவது, தாய்மொழி என்பதற்கு மாறாக இந்தியை திணிப்பது, எல்லாவற்றிக்கும் மேலாக கல்வி பற்றிய அனைத்து முடிவுகளையும் மய்யப்படுத்தப்பட்ட அதிகாரத்தின் கீழ் கொண்டுவரும் பாசிசக் கொள்கையை மக்கள் மீது திணிப்பது போன்றவை ஆகும்.
தற்போதைய கல்வி முறையில் உள்ள குறைபாடுகளை சரியாகக் குறிப்பிட்டிருக்கும் இந்த கல்வி கொள்கை, அந்த குறைபாடுகளை களைவதற்கு மாறாக, கல்வி முறையில் உள்ள ஏற்றதாழ்வுகளை களையும் வண்ணம், சமூகத்தில் அனைவரும் உயர்கல்வி வரை பெற வழிவகைகள் செய்வதற்கும், அனைவரும் சமமான கல்வி பெறும் வாய்ப்புகளை ஏற்படுத்துவதற்கும் மாறாக கல்வி முறையில் சமத்துவமின்மையை ஏற்படுத்தி, சமூகத்தில் மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கல்வியில் முன்னேற, வாய்ப்புகளை ஏற்படுத்தும் வகையில்  உருவாக்கப்பட்டிருக்கிறது.
கல்வி உரிமையை மறுக்கும் பள்ளிக்கல்வி முறை
நாடு விடுதலை அடைந்து 62 ஆண்டுகளுக்குப் பிறகு, 2009ல் கொண்டு வரப்பட்ட கல்வி உரிமை சட்டத்தில் அளிக்கப்பட்டுள்ள உரிமைகளுக்கு நேர்மாறான கொள்கைகள் மூலம், கல்வி உரிமை என்பதையே கேள்விக்குறியாக்கும் வண்ணம் கல்வி கொள்கை 2020 உருவாக்கப்பட்டிருக்கிறது.
தற்போதுள்ள 10+2 பள்ளி கல்வி முறை 5+3+3+4 வருடங்கள் என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. ஆரம்ப கால குழந்தை பராமரிப்பு மற்றும் கல்வி அனைத்து குழந்தைகளுக்கும் கிடைக்க வேண்டும், எனவே 3 முதல் 6 வயது வரை உள்ள அனைத்து குழந்தைகளுக்கும் இந்த வாய்ப்பை 2030க்குள் ஏற்படுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. இதற்கு நிபுணத்துவம் மிகுந்த ஆசிரியர்கள் தேவை என்பதுடன் பள்ளிக்கூட அமைப்புகளை விரிவாக்க வேண்டியிருக்கும். உண்மை என்னவெனில், அங்கன்வாடி பணியாளர்கள் தங்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டும் என்று பல வருடங்களாக போராடி வருகிறார்கள். அவர்களை அரசு ஊழியர்களாக அங்கீகரிக்க வேண்டுமெனில், 7ஆவது ஊதிய ஆணையத்தின் அறிக்கைபடி அவர்களுக்கு ரூ.18,000 மாதச் சம்பளம் தர வேண்டும். ஆனால், நிரந்தர ஊழியர்களைவிட அதிகமாகப் பணியாற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் இன்னும் பல மாநிலங்களில் தன்னார்வலர்களாகவே நடத்தப்படுகின்றனர். அங்கன் வாடி நடக்கும் இடங்களின் நிலைமைகளோ, குறிப்பாக நகர்ப்புறங்களில், சொல்லவே வேண்டாம். அங்கன்வாடிப் பணியாளர்களுக்கு பயிற்சி, கவுரவமான வேலை நிலைமைகள் போன்றவற்றை உருவாக்காமல் இதை சாதிப்பது என்பது நடவாது. கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கும் கல்வி கற்பிக்கும் கடமைகளை, கர்ப்பிணிப் பெண்கள் முதல், குழந்தைகள் பிறந்ததிலிருந்து அவர்களை பராமரிக்கும் வேலைகளையும் செய்து கொண்டிருக்கும் அங்கன்வாடி பணியாளர்கள் மீது சுமத்துவது என்பது மிகவும் கொடுமையான விஷயம்.
சாமான்ய மக்களின் குழந்தைகளை பள்ளியிலிருந்து வெளியேற்றும் கொள்கை
திட்டம் 1:  பள்ளிகளுக்கு மூடு விழா  
பள்ளிகளை திறன் மிக்கவைகளாக ஆக்க வேண்டுமெனில், குறைந்த எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள பள்ளிகளை ஒன்றி ணைக்க வேண்டும் என்று கல்விக் கொள்கையில் கூறப்பட்டுள்ளது. 2009 கல்வி உரிமை சட்டத்தில் ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் ஆரம்பக்கல்வி நிலையங்கள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. கல்விக் கொள்கையின் நோக்கம் இதற்கு நேர் மாறாக இருக்கிறது. 2016 - 17 கல்வித்துறை புள்ளி விவரப்படி இந்தியாவில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளிகளில் 28% பள்ளிகளிலும், இடை நிலை பள்ளிகளில் (8ம் வகுப்பு வரை உள்ள) 14.8% பள்ளிகளிலும், 30க்கும் குறைவான மாணவர்களே இருக்கின்றனர். புதிய கல்வி கொள்கை யின்படி இப்பள்ளிகள் திறன் வாய்ந்தவை அல்ல. இப்பள்ளிகளை அந்தந்த பகுதிகளில் இணைக்க வேண்டும். நாட்டில் உள்ள பல்வேறு மலையக மக்கள் வாழும் இடங்களில் இந்த பள்ளிகள் மூடப்பட்டு வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டால் குழந்தைகளுக்கு கல்வி எட்டாக்கனியாகிவிடும். ஜார்க்கன்ட் மாநிலத்தில் 2019ல் 6000 பள்ளிகளை ஒன்றிணைக்கிறோம் என்ற பெயரில் 4600 பள்ளிகள் மூடப்பட்டன. இது கல்வி  உரிமை சட்டத்திற்கு புறம்பாக செய்யப்பட்டது. இதனால், தலித், மலையக மக்கள், இதர பிற்படுத்தப்பட்ட மக்கள் ஆகியோரின் குழந்தைகள் ஏரா ளமானோர் இடை விலக நேரிட்டது. பாஜக ஆண்டபோது, 2014 - 16 ஆண்டுகளில் ராஜஸ்தானில் இது போன்ற பள்ளி ஒன்றிணைப்பின் காரணமாக ஏராளமான குழந்தைகள் பள்ளியிலிருந்து இடை விலகினர்.
திட்டம் 2: பொது தேர்வு முறை
3, 5, 8, 10, 12ஆம் வகுப்புகளில் பொது தேர்வு முறை அறிமுகப்படுத்தப்படுகிறது. உலகம் முழுவதும் பல நாடுகளின் அனுபவத்தையும், தேர்வு முறையில் உள்ள பிரச்சனைகளையும் கணக்கில் கொண்டுதான், கல்வி உரிமை சட்டத்தின்படி  8ஆம் வகுப்பு வரை தேர்வுகள் தேவை இல்லை என்ற முறை 2009லிருந்து கொண்டு வரப்பட்டது. ஆனால் கல்விக் கொள்கையில் பொதுத் தேர்வு 3ஆம் வகுப்பு முதலே நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 3, 5, 8, 10 மற்றும் 12ம் வகுப்புகளில் பொது தேர்வு மூலம் மாணவர்கள் அடுத்த கட்டத்திற்கு தேர்வு செய்யப்படுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளி குழந்தைகளுக்கு தேர்வு முறையால் ஒரு பயனும் இல்லை என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இதனால் குழந்தைகளுக்கு ஏற்படும் மன உளைச்சல் ஏராளம். தேர்வுகளுக்கு மாற்றான வழிமுறைகள் ஏற்கனவே பள்ளிக் கல்வி முறையில் இருக்கிறது. தற்சமயம் தேர்வுகளை மீண்டும் கொண்டு வருவது, சாமான்ய மக்களின் குழந்தைகளை பள்ளி கல்வி முறையிலிருந்து வெளியேற்றுவதற்கான திட்டமே.
திட்டம் 3: இந்தி திணிப்பு
குழந்தைகள் 4ஆம் வகுப்பு முதல் கட்டாயமாக 3 மொழிகளை கற்க வேண்டும். தமிழ்நாடு போன்ற மாநிலங்களில் தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர இந்தி கற்க நிர்பந்தம் ஏற்படும். இதர மாநிலங்களில் சமஸ்க்ருதம் திணிக்கப்படும். (சமஸ்க்ருத மொழியை மெச்சி பாராட்டி இந்த கொள்கையில் பல இடங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. (நான்காவது அத்தியாயம் 5ஆம் பகுதி). இந்தி தவிர இதர மொழிகளுக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. 4ஆம் வகுப்பிலிருந்து எந்த மொழியில் கல்வி கற்பிக்கப்படும் என்பதில் தெளிவில்லை. தமிழ்நாட்டில் இந்தி திணிப்பிற்கு எதிராக கடுமையான போராட்டங்கள் மூலம்தான் இந்தி விரட்டி அடிக்கப்பட்டது. இது மீண்டும் திணிக்கப்படுகிறது. இது பள்ளிகளிலிருந்து குழந்தைகளை வெளியேற்ற மற்றொரு திட்டமாகும். அத்துடன் உயிரற்ற சமஸ்க்ருதத்தை  உயர்த்தி பிடித்து, இந்தி தவிர்த்த மற்ற பிராந்திய மொழிகளை ஒன்றுமில்லாததுபோல் சித்த்தரிப்பது தேசிய ஒருமைப்பாட்டிற்கு உகந்ததல்ல. ஒரே தேசம்  ஒரே மொழி என்ற காவி பாசிச கொள்கையை நடைமுறைப்படுத்த கல்விக்கொள்கையை பயன்படுத்துகிறார்கள்.
திட்டம் 4: தொழிற்கல்வி (குலக்கல்வி முறை)
6ஆம் வகுப்பிலிருந்தே தொழிற்கல்வி தொடங்கிவிடும். 6ஆம் வகுப்பு படிக்கும் குழந்தைகள், குறிப்பிட்ட காலம் பயிற்சி தொழிலாளர்களாக இருக்க வேண்டும். இதற்கு கல்விக் கொள்கை பரிந்துரை செய்திருக்கும் தொழில்கள், தச்சு வேலை, உலோக வேலை, மற்றும் மின்சாரம் சார்ந்த தொழில்கள் போன்றவை. அதிக மதிப்பு கூட்டும், தகவல் தொடர்பு போன்ற தொழில்கள் இதில் இல்லை. 11 வயது குழந்தை எந்த பயிற்சியை தேர்ந்தெடுக்கும்?  குடும்ப சூழலுக்கேற்ப இடை விலக நேரிடும். அல்லது மேலே குறிப்பிட்ட தொழில்களில் பயிற்சி பெற்று அமைப்புசாரா தொழிலாளியாக மாறலாம். இதன் மூலம் அரசு பழைய குலக்கல்வி முறையை புகுத்தப் பார்க் கிறது. 6 முதல் 10 வகுப்பு வரை தங்கள் தொழில் திறன் வளர்ச்சியை குழந்தைகள் விரிவுபடுத்திக்கொள்ளலாம் என்று கூறப்படுகிறது. 10ஆம் வகுப்பில் விரும்பினால் கல்வியிலிருந்து வெளியேறி வேலைக்கு சென்று விட்டுக்கூட மீண்டும் படிப்பை தொடரலாம்.
இது குழந்தைகள் பள்ளியிலிருந்து வெளியேறுவதை ஏதோ தாங்களாகவே வெளியேறுவது போல் சித்தரிக்கும் முயற்சி ஆகும். இந்தியாவில், தற்போதைய நிலைமைகளில், ஒன்றாம் வகுப்பில் சேரும் தலித் குழந்தைகளில் வெறும் 8%, மலையக மக்கள் குழந்தைகளில் 6%, இதர பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை இஸ்லாமிய  குழந்தைகளில் 10% மட்டுமே 12ஆம் வகுப்பு வரை படிக்கிறார்கள். மீதமுள்ளோர் இடைவிலகி விடுகின்றனர். ஏற்கனவே இந்த அளவுக்கு மோசமான சூழலில், புதிய கல்விக்கொள்கை மேலும் பலரை  வெளியே தள்ளும். எந்தப் பிரிவை சார்ந்த குழந்தைகள் வெளியேறுவார்கள் என்பது நாம் அறிந்ததே. வாழ்நாள் முழுதும் கல்வி கற்பது என்ற உயர்ந்த சொற்றொடர்களை பயன்படுத்தும் கல்விக்கொள்கை முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு வேலையற்றோர் எண்ணிக்கை நாட்டில் பெருகி இருப்பதை பற்றி கவலைப்படவில்லை. நன்றாக தொழிற் திறன் உள்ளவர்களுக்கே வேலை இல்லை. தொழில் திறமை பெற்றாலும் அவர்களுக்கு வேலை எங்கே இருக்கிறது. மக்கள் சார்பு சமூக பொருளாதார மாற்றங்கள் நிகழாமல் வேலை அனைவருக்கும் கிடைக்குமா?
உயர் கல்வியை சாதாரண மக்களுக்கு எட்டாக்கனியாக்கும் திட்டம்
உயர்கல்வி ஒரு சிறிய எண்ணிக்கையிலான ஆராய்ச்சி பல்கலைக்கழகங்கள், ஆசிரியர்களை உருவாக்குவதற்கான ஓரளவிற்கு பெரிய அளவில் எண்ணிக்கைகளை கொண்ட பல்கலைக் கழகங்கள், சுயாட்சி கொண்ட பெரிய எண்ணிக்கையிலான திறன் பயிற்சி மற்றும் தொழிற்கல்வி கற்பதற்கான கல்லூரிகள் என  3 பகுதிகளாகப் பிரிக்கப்டுகின்றன. ஆராய்ச்சி பல்கலை கழகங்கள், நிறுவ, சுயநிதி பாட பிரிவுகள் அறிமுகப்படுத்த, வெளிநாடுகளிலிருந்து ஆசிரியர்களை அமர்த்த முழு சுதந்திரம் வழங்கப்படுகிறது. இவை தன் சொந்த நிதி ஆதாரங்களை உருவாக்கிக்கொள்ள வேண்டும். இவற்றுக்கு அரசு உதவி படிப்படியாக குறைக்கப்படும். இதன் மூலம் பட்டமேற்படிப்பு முழுமையாக தனியார்மயமாக்கப்படும். கல்லூரிகளும் சொந்த நிதியுடன் கூடிய சுய சார்பு நிறுவனங்களாக மாற்றப்படும். சுயநிதி பாட திட்டம் என்பது சந்தையின் தேவையை ஒட்டித்தான் இருக்கும். சுய நிதி பாட பிரிவுகள்  என்பது சந்தை சார்ந்ததாகத்தான் இருக்கும் என்பதால், உயர்கல்வியில், அரசியல், வரலாறு, மொழி ஆராய்ச்சி போன்ற  கலைப் பாடங்கள் முற்றாக ஒழிந்து போகும் (ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியைப்பிடித்தவுடன் பல்கலை கழகங்களிலிருந்து கலை பாடங்களை முதலில் ஒழித்ததாக வரலாறு கூறுகிறது). சஅஅஇ (சஹற்ண்ர்ய்ஹப் அள்ள்ங்ள்ள்ம்ங்ய்ற் ஹய்க் அஸ்ரீஸ்ரீழ்ங்க்ண்ற்ஹற்ண்ர்ய் இர்ன்ய்ஸ்ரீண்ப்) மதிப்பீட்டின்படி தற்போதுள்ள பல்கலை கழகங்களும் கல்லூரிகளும் தர வரிசை பட்டியல் மூலம் மதிப்பீடு செய்யப்படும். இதன் மூலம், தரம் இல்லை என்ற காரணம் கட்டி படிப்படியாக பொதுத்துறையிலுள்ள கல்வி நிறுவனங்களுக்கு நிதி குறைக்கப்பட்டு இறுதியில் மூடப்படும். கல்லூரிகளுக்குத் தரத்தின் அடிப்படையில் நிதி உதவி என்ற பெயரில், பின்தங்கிய பகுதிகளில் உள்ள கல்லூரிகள் புறக்கணிக்கப்படும்.
உயர்கல்விக்கு செல்ல, அனைத்து பாடப் பிரிவுகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும். (எல்லா பாடப்பிரிவுகளுக்கும் நீட் போன்ற நுழைவுத் தேர்வின் மூலம் மாணவ மாணவியர் வடிகட்டப்படுவர்). தனியார்மயமான உயர் கல்வி நிறுவனங்களில் சாதாரண மக்களின் குழந்தைகள் சேருவது என்பது கானல் நீராகிப் போகும். பட்டப்படிப்பு நான்காண்டு   படிப்பாக மாற்றப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டிலும் விலகி மீண்டும் சேருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. இதில் இடை விலகும் நிலையில் யார் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இது போன்ற வாய்ப்புகள் பலர் நிரந்தரமாக இடை விலகும் சூழலை உருவாக்கும். பட்ட மேல் படிப்பு என்பது சாதாரண மக்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாத நிலை ஏற்படும். இதற்கு முக்கிய காரணம், பள்ளி கல்வி முதல் மேல் படிப்பு வரை, திறன் மிக்க மாணவர்கள் ஊக்குவிக்கப்படுவர் என்று கல்விக்கொள்கையில் அதிக அழுத்தத்துடன் சொல்லப்பட்டிருக்கிறது. சமூக நீதி, இடஒதுக்கீடு போன்ற வார்த்தைகள் மறந்தும் கூட இந்த கொள்கையில் பயன்படுத்தப்படவில்லை. எனவே இது நிச்சயமாக மேட்டுக்குடி மக்களின் குழந்தைகளுக்கான கல்வியாக மட்டும் இருக்கும் என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.
கல்வி தொடர்பான மொத்த அதிகாரங்களையும் மத்தியில் குவிப்பது
மய்யப்படுத்தப்பட்ட அதிகாரம்  பாசிசத்தின் ஒரு முக்கிய அம்சம். கல்வி அமைப்பிலும் இதைக் கொண்டுவர இந்த கல்விக் கொள்கை வழிவகுத்திருக்கிறது. 1968ல் கொண்டு வரப்பட்ட முதல் தேசிய கல்விக்கொள்கையில் கல்வி மாநில அரசாங்கங்களின் முழு அதிகாரத்தில் இணைக்கப்பட்டது. 1986ல் கொண்டு வரப்பட்ட தேசிய கல்வி கொள்கையில் கல்வி பொதுப் பட்டியலுக்கு நகர்த்தப்பட்டு மய்ய அரசின் தலையீடு துவங்கியது. இந்த நிகழ்வுப் போக்கை பூர்த்தி செய்யும் வண்ணம் தற்போது பாஜக அரசு முழு அதிகாரங்களையும் மத்தியில் குவிக்கிறது. இந்த ஆட்சியின் கீழ் மாநில அரசாங்கங்களின் உரிமைகள் தொடர்ந்து பறிக்கப்படுவதை நாம் அன்றாடம் அனுமதித்துக் கொண்டிருக்கிறோம். தேசிய கல்விக் கொள்கை 2020, கூட்டாட்சி முறைக்கு மோசமான விளை வுகளை ஏற்படுத்தும் விதத்தில் அமைத்துள் ளது. மய்யப்படுத்தப்பட்ட அதிகாரங்களுடன் இரண்டு அமைப்புகள் இந்த கொள்கையில் முன்வைக்கப்பட்டிருக்கின்றன. ஒன்று தேசிய ஆராய்ச்சி  நிறுவனம். ஆராய்ச்சி கல்வி குறித்த மொத்த நிதி ஆதாரங்களும் இந்த அமைப்பின் கட்டுப்பாட்டில் வரும். இந்த நிறுவனத்தில் அதிகாரம் செலுத்துபவர்கள் மத்திய அரசால் பரிந்துரைக்கப்பட்ட அரசு அதிகாரிகளாக இருப்பர்.
இந்திய கல்வி கமிஷன் அமைக்கப்படும். தற்போது பல்கலைக்கழக கல்வி மானியக்குழு (யுஜிசி) மற்றும் ஏஅய்சிடிஇ உட்பட இதர அமைப்புகளின் அதிகாரங்கள் அனைத்தும் இந்த அமைப்பிற்கு மாற்றப்படும். இதற்கு மத்திய அரசே 12 பேரை நியமிக்கும். இதில் இருவர் மட்டுமே கல்வி துறையை சார்ந்தவர் களாக இருப்பர். காவி பாசிச கொள்கைகளுக்கு உகந்தவர்களாகவே இந்தியாவின் பல்வேறு முக்கிய நிறுவனங்களுக்கு ஆட்களை பா.ஜ.க. அரசு இதுவரை நியமித்து வருவதை நாம் கண்கூடாகப்பார்க்கிறோம். மேற்கூறிய அமைப்புகளுக்கும் இதே நிலைதான் ஏற்படும். ஒரே தேசம் ஒரே கல்வி என்று மத்திய அரசு கல்வியை முழுமையாக தங்கள் அதிகாரத்தின் கீழ் கொண்டுவந்து, மாநிலங்களை வஞ்சிக்கும் ஒரு ஏற்பாடுதான் இது.
இந்த கல்வி கொள்கையின் படி அடுத்த 15 ஆண்டுகளுக்குள் உயர் கல்வியில் சேர்வோரின் (17 முதல் 24 வயது வரை உள்ள) எண்ணிக்கை அவர்களின் மக்கள் தொகையில் 50% ஆக்கப்பட வேண்டும் என இலக்கு உள்ளது. ஆனால் தமிழ்நாட்டில் 2018ம் ஆண்டிலேயே இது 49.2%ஆக உயர்ந்துவிட்டது. இதற்கு முக்கிய காரணம் தமிழ்நாட்டின் சமூக நீதிக்கான சூழலும் கொள்கைகளும். நலிந்த பிரிவினருக்கு உள்ஒதுக்கீடு உட்பட 60% இட ஒதுக்கீடு ஒரு முக்கிய காரணம். அரசு நிதியோடு செயல்படும் 31 மருத்துவ கல்லூரிகள், இந்தியாவிலேயே அதிகமாக 550 பொறியியல் கல்லூரிகள், 450 பாலிடெக்னிக்குகள், 21 பல்கலைக் கழகங்கள், 1500க்கும் மேற்பட்ட கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் நிறுவப்பட்டிருக்கின்றன. துவக்கப் பள்ளி கல்வியில் பல மாநிலங்களில் இல்லாத அளவில் தமிழகத்தில் கிட்டத்தட்ட அனைத்து குழந்தைகளும் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இது போன்ற முன்னுதாரணமத் திகழும் மாநிலங்களோடு கலந்து கல்விக்கொள்கையை வகுப்பதற்கு பதிலாக இங்குள்ள நிலையை பின்னோக்கி நகர்த்தும் முயற்சியில் மாநில அரசாங்கத்தின் கல்வி உரிமைகளை பறிக்கிறது மத்திய அரசு.
மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் 6% கல்விக்காக ஒதுக்கப்படவேண்டும் என்று கல்விக் கொள்கையில் கூறப்பட்டிருக்கிறது. இது 1950களிலிருந்து, ஒவ்வொரு கல்வி கமிஷனும் முன்வைக்கும் விஷயம். கரோனாவை சமாளிக்க மோடி ஒதுக்கிய 20 லட்சம் கோடியின் உண்மை நிலை என்ன என்பது நாம் அறிந்ததே. கல்விக்கொள்கையை பொறுத்தவரை இந்த 6%ல் மத்திய அரசு எவ்வளவு கொடுக்கும் என்பது கூறப்படவில்லை. வருமான வரியில் 4% கல்வி செஸ் வாங்கும் மத்திய அரசு அதையாவது கல்விக்கு தருமா என்பது சந்தேகம்.
மேற்கூறிய அம்சங்கள் தேசிய கல்வி கொள்கை 2020ன் முக்கியமான மக்கள் விரோத அம்சங்களாகும். இது தவிர பல்வேறு இந்துத்துவா தொடர்பான அம்சங்கள் உள்ளன. உதாரணமாக தன்னார்வத் தொண்டர்கள் என்ற போர்வையில் ஆர்எஸ்எஸ் அமைப்பைச் சேர்ந்தவர்களும் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுப்பதற்கான வாய்ப்புகள் (ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் இது ஏற்கனவே நடந்து கொண்டிருக்கிறது), குருகுலக்கல்வி முறையை சில சூழல்களில் உருவாக்குவது போன்ற பல அம்சங்கள்.
கல்வி பற்றிய பல்வேறு விஷயங்கள், ஏதோ இவர்கள் அனைத்து குழந்தைகளுக்கும்  கல்வி அளிக்காமல் ஓய மாட்டார்கள் என்ற வகையில் தேன்  தடவிய தோட்டாவாக இந்த கொள்கையில் குறிப்பிடப்பட்டிருக்கின்றது. ஆனால் சாராம்சத்தில் இது பழைய கால,  சூத்திரர்களும் பெண்களும் கல்வி கற்க கூடாது (பஞ்சமர்கள் என்று குறிப்பிடப்பட்ட  தலித்து கள் கல்வி கூடத்திற்கு அருகில் கூட செல்ல முடியாது) என்ற மனு தர்ம பார்ப்பனீய கல்வி முறையை மீட்டெடுத்து, கல்வி அமைப்பிலிருந்து பெரும்பான்மை சாமான்ய மாணவர்களை வெளியேற்றி, முதலாளிகளுக்கு சேவை செய்யும் கூலி பட்டாளமாக மாற்ற எத்தனிக்கும் கொள்கையாகும். இதன் மூலம் சிறிதளவாவது சாமான்ய மக்களுக்கு கிடைக்கும் கல்வி வாய்ப்புக்கள் ஒழிக்கப்பட்டு, சமூகம் வெகு தூரத்திற்கு பின்னோக்கி நகர்த்தப்படும். இந்த கல்விக்கொள்கை வரலாற்றின் குப்பை தொட்டியில் வீசியெறியப்பட வேண்டிய ஒன்று

Search