COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 5, 2020

சங் பரிவார், ஜியோ, பேஸ்புக்
நச்சுக் கலவையையும் முறியடிப்போம்!


முதலாளித்துவம் தனது லாப விகிதத்தை அதிகரிக்க புதிய தொழில்நுட்பத்தை புகுத்தும் என்றால், அதே தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பாட்டாளி வர்க்கம் தனது அறுதியிடலையும் அறிவிக்கும்.

பேஸ்புக் மற்றும் வாட்சப் சமகால உதாரணங்கள். அரபு வசந்தம், வால் ஸ்ட்ரீட் ஆக்கிரமிப்பு என உலகளாவிய போராட்டங்கள்,  குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் என நாடு தழுவிய போராட்டங்கள், காவிரி உரிமை வலியுறுத்தி கோ பேக் மோடி என மாநிலம் தழுவிய போராட்டங்கள் ஆகியவற்றில் சமூக ஊடகங்கள், குறிப்பாக பேஸ்புக் மற்றும் வாட்சப் நிச்சயம் முக்கிய பங்காற்றியுள்ளன. நாட்டில் பாசிசம் இரண்டு முறை ஆட்சியைப் பிடிப்பதில் பேஸ்புக் மற்றும் வாட்சப் முக்கிய பங்காற்றியுள்ளன என்றால், தமிழ்நாட்டில் இரு முறையும் பாசிசத்தை ஓரஞ்சாரத்தில் வைப்ப தில் பேஸ்புக் மற்றும் வாட்சப்புக்கு பங்குண்டு.
எல்லாவற்றுக்கும் பிறகு பேஸ்புக் லாப நோக்கம் கொண்ட நிறுவனம். மக்கள் பயன்படுத்தட்டும் என்ற பரந்த நோக்கத்துடன் அது தனது செயல்பாடுகளை கட்டமைப்பதில்லை. லாபம், இன்னும் லாபம், கொள்ளை லாபம்... இதுதான் பேஸ்புக் என்ற நிறுவனத்துக்கும் தெரிந்த, மிகவும் பிடித்த வாசகம். அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.
வகைமாதிரி அய்க்கிய அமெரிக்க தொழில் நிறுவனங்கள் முன்வைக்கும் அதே அதிஉயர் ஜனநாயக கோட்பாடுகளை பின்பற்றுவதாக பேஸ்புக் பகிரங்கமாக அறிவிக்கிறது. வகை மாதிரி அய்க்கிய அமெரிக்க தொழில் நிறுவனங்கள் அந்தக் கோட்பாடுகளை திரைமறைவில் மீறுவது போல் பேஸ்புக்கும் மீறுகிறது. எப்போதும்போல், குட்டு வெளிப்பட்டதும் சற்று பின் வாங்கியது போல் தோரணை காட்டுகிறது.
அய்க்கிய அமெரிக்காவின் அலெக்ஸ் ஜோன்ஸ், பிரிட்டனைச் சேர்ந்த மைலோ இன்னோபவுலோஸ், கனடாவைச் சேர்ந்த கவின் மெக்கின்ஸ் போன்ற பிரபலங்களை அவர்களது வெறுப்புப் பதிவுகளுக்காக பேஸ்புக் நீக்கியிருக்கிறது. இதற்காக பாராட்டுகளையும் பெற்றிருக்கிறது. அந்த பேஸ்புக் இந்தியாவில் காவிகள் விசயத்தில் அதுபோன்ற தரக் கட்டுப்பாடுகளை பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வால் ஸ்ட்ரீட் ஜர்னல் பத்திரிகை ஆகஸ்ட் 14 அன்று ஒரு கட்டுரை வெளியிட்டது. இந்திய அரசியல்வாதி டி.ராஜா சிங் வெறுப்பு பதிவுகள்  போடுவதாகவும் இது நிறுவனத்தின் விதிகளை மீறுவதாக உள்ளது எனவும் மார்ச் மாதமே சம்பந்தப்பட்ட பிரிவுக்கு பொறுப்பான பேஸ்புக் ஊழியர்கள் முடிவுக்கு வந்ததாகவும் அந்த கட்டுரையில் சொல்லப்படுகிறது. ராஜா சிங் ரோஹிங்யா இசுலாமியர்கள் சுட்டுக் கொல்லப்பட வேண்டும் என்றும் மசூதிகளை இடிக்கப் போவதாக மிரட்டல்கள் விடுத்தும் வெளியிட்ட பதிவுகளால் அவர்கள் அப்படி ஒரு முடிவுக்கு வந்தனர்.  
இப்படி இருந்தும் ராஜா சிங் முகநூலிலும் முகநூலின் இன்ஸ்டாகிராமிலும் தீவிரமான செயல்பாட்டிலேயே இருந்துள்ளார். அவரது கணக்கை நீக்காமல் பாதுகாப்பு அளித்தது, இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை நிர்வாகி அங்கி தாஸ் என்றும் அந்தக் கட்டுரை யில் சொல்லப்படுகிறது. அங்கி தாஸ் தலையீட்டால் ராஜா சிங் மட்டுமின்றி வேறு மூன்று பேர் கூட அவரால் பாதுகாக்கப்பட்டு முகநூலில் வெறுப்புப் பதிவுகளுடன் இன்னும் உலா வருகின்றனர் என்று அந்தக் கட்டுரை சொல்கிறது. (பேஸ்புக்கில் இருந்து ராஜா சிங் நீக்கப்பட்டதாக செப்டம்பர் 3 அன்று செய்தி வந்துள்ளது). இவர்களை, இதுபோன்ற பதிவுகளை தடை செய்தால், இந்தியாவில் பேஸ்புக் நிறுவனத்தின் வர்த்தகம் பாதிக்கப்படும் என்று அங்கி தாஸ் சொல்லியுள்ளார். நாட்டின் பெரிய கார்ப்பரேட் தொழில் நிறுவனங்கள் சங் பரி வாரை அனுசரித்தும் சங் பரிவார் அந்த நிறுவனங்களை அனுசரித்தும் செயல்படுவது இயல்பாக நடக்கும்போது, அங்கி தாஸ், ராஷ்மி தாஸ் என்ற இரட்டையர்கள் ஜேஎன்யுவில் படித்த போது, ராஷ்மி தாஸ் எபிவிபியின் பொதுச் செயலாளராக இருந்தவர் என்றால், இயல்பு தன்மை இன்னும் கூடுதலாக இருக்கும்.
இந்தக் கட்டுரை வெளியான பின்னணியில் தமிழ்நாட்டில் ஊடகவியலாளரும் சமூக செயல்பாட்டாளருமான கவின் மலர் படத்தை வெளியிட்டு அதில் பாலியல்ரீதியாக அவரை கொச்சைப்படுத்தும் வாசகத்துடன் காவிக்கூலி ஒருவர் ஒரு பதிவு போட்டிருந்தார். (விவரங்கள் அடுத்தடுத்த பக்கங்களில் உள்ளன). பேஸ் புக்குக்கு எதிராக பேஸ்புக்கில் நடந்த அந்த துரிதமான போராட்டத்தில் பேஸ்புக் தனது தவறை சரி செய்துகொள்ள நேர்ந்தது.
ஊடகவியலாளரும் சமூக செயல்பாட்டாளருமான கவின் மலர் தொடர்பாக போடப்பட்ட பாலியல்ரீதியாக துன்புறுத்தும் அவதூறு பரப்பும் பதிவு விசயத்தில் பேஸ்புக் நிறுவனம் பின்வாங்க நேர்ந்தது என்றாலும் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கட்டுரை சுட்டிக்காட்டியுள்ள, எழுப்பியுள்ள பிரச்சனைகளுக்கு முடிவு வரவில்லை. பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் பதிவுகளால் பெங்களூருவில் பிறமாநிலத் தொழிலாளர்கள் திடீரென வெளியேறியது முதல் மாட்டுக்கறி கும்பல் கொலைகள் வரை பல வன்முறைச் சம்பவங்களை நாடு கண்டுள்ளது. 2019 ஜ÷ன் 13 அன்று தி வயர் இணைய பத்திரிகை வெளியிட்ட கட்டுரை, தெற்காசிய அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பு ஒன்று நடத்திய ஆய்வில், பேஸ்புக்கில் இருந்த 1000 பதிவுகள் பேஸ்புக் சொல்கிற சமூக தரக்கட்டுப்பாடுகளுக்கு புறம்பாக இருந்ததாக, அவற்றில் 40% மட்டுமே நீக்கப்பட்டதாக சொல்கிறது.
இப்போது அந்த பேஸ்புக் நிறுவனத்துக்குச் சொந்தமான வாட்சப் தளம் முகேஷ் அம்பானியின் கட்டுப்பாட்டில் வந்தால் என்ன நடக்கும்? இந்தியாவில் நாற்பது கோடி பேர் வாட்சப் பயன்படுத்துகின்றனர். பேஸ்புக் நிறுவனம் ஜியோ இன்போகாம் நிறுவனத்தின் பங்குகளை வாங்கினால் அந்த நாற்பது கோடி வாட்சப் வாடிக்கையாளர்கள் ஜியோவின் வீச்செல்லைக்குள் வந்துவிடுவார்கள். ஜியோவின் நாற்பது கோடி வாடிக்கையாளர்கள் பேஸ்புக் வீச்செல்லைக்குள் வருவார்கள். இந்த பரிவர்த்தனையின் மதிப்பு ரூ.42,750 கோடி. வேலையிழந்து வருமானமிழந்து மக்கள் வாடும் கொரோனா காலத்தில் இவர்கள் கருவூலங்களில் மட்டும் பணம் பொங்கி வழிகிறது. முகேஷ் அம்பானி அலிபாபாவின் ஜேக் மாவை பின்னுக்குத் தள்ளி ஆசியாவின் முதல் பெரும்பணக்காரர் ஆகிவிட்டார்.
ஜியோ மார்ட் நிறுவனம் வாட்சப் மூலம் பணம் செலுத்தி வீட்டுக்கு பக்கத்தில் உள்ள கடைகளில் பொருட்களை வாங்கும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. இனி அந்த வசதி விரிவடைந்து உண்மையில் அனைத்தையும் ஆட்கொள்ளும். என்ன நடக்கிறது என புரிந்து கொள்வதற்குள் எல்லாம் நடந்து முடிந்து நாம் நம்மை அந்த மின்னணு வலைக்குள் காணும் நிலை உருவாகும்.
தொழில்நுட்பம் மக்கள் வாழ்க்கையை எளிதாக்குவது தொடர்ந்து நடந்துகொண்டுதான் இருக்கிறது. அது மக்களை ஒடுக்கும் கருவியாக மாறும்போது அதற்கெதிரான எழுச்சிகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. முகேஷ் அம்பானியின் நியூஸ் 18 தமிழ் அலைவரிசையில் இருந்து சில செய்தியாளர்கள் தமிழ்நாட்டு சங்கிகள் கிளப்பிய பொய்ச் செய்திகளால் அவதூறுகளால் வெளியேற்றப்பட்டார்கள். வெளியேறினார்கள். வெளியேறியவர்களை சந்தை உள்வாங்கிக் கொண்டது. நியூஸ் 18 தமிழ் அலைவரிசையைத்தான் ஏற்கனவே பார்த்த அலைவரிசை எண்ணில் பார்க்க முடியவில்லை. இங்கே அடித்தால் அடி திரும்ப கிடைக்கும் என்று சங் பரிவாருக்கு, முகேஷ் அம்பானிக்கு, பேஸ்புக்குக்கு போதுமான அளவு தெளிவுபடுத்தியுள்ளோம். இந்த நச்சுக் கலவை எந்த வடிவில் வந்தாலும் நாட்டின் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் திறம்பட எதிர்கொள்வார்கள்.

Search