COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 5, 2020

கம்யூனிஸ்டுகளும் நாட்டுப்பற்றும்


எஸ்.குமாரசாமி


பகத்சிங்கிற்கு கம்யூனிசத்தில் நம்பிக்கை இருந்தது. அவர் தேசபக்தர். நாட்டு விடுதலைக்காகப் போராடியதற்காகதான், தூக்கில் ஏற்றப்பட்டார். புன்னபுரா வயலாறு, தெபாகா, தெலுங்கானா, நக்சல்பாரி போராளிகள் தேச பக்தர்கள். கம்யூனிஸ்டுகளின் தேசபக்தி நாட்டுப்பற்று, ஏகாதிபத்திய எதிர்ப்பும் மக்கள்  சார்பும் கொண்டதாகும்.


இந்தியா இந்து ராஷ்ட்ரா நோக்கி தள்ளப்படும்போது கம்யூனிஸ்டுகள் குடியரசு தினத்தில் சுதந்திர தினத்தில் தேசியக் கொடியை கையில் எடுக்க வேண்டி உள்ளது, கார்ப்பரேட் ராஜ்ஜியத்திலிருந்து, இந்து ராஷ்ட்ராவில் இருந்து, நாட்டையும் மக்களையும் காக்க, தேசியக் கொடியை நாம் கையில் எடுத்தாக வேண்டும்.
புராண இதிகாசக் கதைகளுக்கு அப்பால் உள்ள, அறிவியல்பூர்வமான அரசியல் வரலாற்றில், மொகலாய சாம்ராஜ்யம் நீடித்த 19ஆம் நூற்றாண்டு வரை, ஒற்றை இந்திய நாடு, ஒற்றை இந்திய அரசு, ஒற்றை இந்திய பண்பாடு இருந்ததில்லை. மவுரியர் குப்தர் காலத்தில், ஹர்ஷர், அசோகர் காலத்தில், அக்பர், அவுரங்கசேப் காலத்தில், இன்று நாம் அறிந்துள்ள இந்தியா இருந்ததில்லை.
கிழக்கிந்திய கம்பெனியும் பிரிட்டிஷாருமே, கிட்டத்தட்ட மொத்த இந்தியா என இன்று அறியப்படுவதை, ஒரு ஆட்சி முறைக்குள் கொண்டு வந்தார்கள். இந்தியத் துணைக்கண்டம் நெடுக காலனிய சுரண்டலும் ஒடுக்கு முறையும் வெறியாட்டம் போட்டன. படிப்பாளிப் பிரிவினர், பாட்டாளிகள் எங்கும் எழுந்தனர். இந்திய சுதந்திர போராட்டம் எங்கும் பரவியது. வேலை, பதவி, புகழ், செல்வம், உறவுகள் எல்லாம் இழந்து வதைபட்டு சிறை சென்று உயிரையும் தியாகம் செய்ய, இந்தியர் என்ற கூட்டுணர்வும் இந்தியா என்ற அடையாளமும் உருவாகின.
சுதந்திரப் போராட்டம் நடக்கும்போதே, சுதந்திர இந்தியா பற்றிய வேறு வேறு கற்பனைகளும் கவலைகளும் எழுந்தன. மேலோங்கிய இசுலாமிய வெறுப்புடன் சாவர்க்கர் - கோட்சே கூட்டத்தினர் இந்து ராஜ்ஜியத்தை கனவு கண்டனர். வெள்ளையரோடு இணக்கமாய் இருப்பதில் இருந்து இந்தியா இசுலாமியருக்கும் இந்துக்களுக்கும் பொதுவான தேசமாக இருக்கும் என்று சொன்ன காந்தியை சுட்டுக் கொல்வது வரை, அவர்களுக்கு இயல்பாக இருந்தது.
அப்போது காந்தியும் நேருவும் வெள்ளையரை வெளியேற்றிய, இந்தியர் ஆளுகிற ஒரு சுதந்திர நாட்டை முன்வைத்தனர். பெரியார், சுதந்திர இந்தியா சாதி ஆதிக்கம் பேணி சூத்திர இழிவை நீட்டிக்கும் என கவலைப்பட்டார். அம்பேத்கர், சனாதனம் அழியாமல் ஜனநாயகம் உருவாகாமல் தீண்டாமை தொடரும் என கவலைப்பட்டார். என்ன விலை கொடுத்தாவது இந்துராஷ்டிரா உருவாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் என வலியுறுத்தினார். கம்யூனிஸ்டு முன்னோடி பகத்சிங், வெள்ளையர் இடத்தில் பழுப்பு நிற கொள்ளையர் வருவது சுதந்திரம் அல்ல, பகத்சிங், சுதந்திர இந்தியாவில் தொழிலாளர்கள் விவசாயிகள் சுரண்டப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்கள் அதிகாரத்தில் இருந்தால் மட்டுமே அது பொருளுள்ள சுதந்திரமாக இருக்கும் என்றார். பகத்சிங், மீண்டும் ஒரு சுதந்திர போராட்டம் தேவைப்படும் என முன்உணர்ந்தார்.
இறையாளுமை, மதச்சார்பின்மை, ஜனநாயகம் என்ற அனைத்தும் கேள்விக்கு உள்ளாக்கப் பட்டுள்ளபோது கம்யூனிஸ்டுகளுக்கு நாட்டையும் மக்களையும் காக்கும் கடமை உள்ளது. 1848ல் எழுதப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையின் சில பகுதிகளை காண்போம். அவை 2020ல் என்ன வெளிச்சம் தருகிறது என பார்ப்போம்.
ஸ்    பாட்டாளி வர்க்கத்தை ஆளும் வர்க்கத்தின் நிலைக்கு உயர்த்துவதுதான், ஜனநாயகத்துக்கான போரில் வெற்றி பெறுவதுதான், தொழிலாளி வர்க்கம் நடத்தும் புரட்சியில் முதல் படியாகும்.
ஸ்    தொழிலாளர்களுக்கு தாய்நாடு இல்லை. அவர்களிடம் இல்லாத ஒன்றை அவர்களிடமிருந்து பிடுங்குவது முடியாத செயலாகும். பாட்டாளி வர்க்கம், யாவற்றுக்கும் முதலாய் அரசியல் மேலாளுமை பெற வேண்டும். தேசத்தின் தலைமை வர்க்கமாய் உயர்ந்தாக வேண்டும். தன்னையே தேசமாக்கிக் கொண்டாக வேண்டும். அது வரை பாட்டாளி வர்க்கம் தேசியத் தன்மை கொண்டதாகவே இருக்கும். ஆனால், இச்சொல்லுக்குரிய முதலாளித்துவ பொருளில் அல்ல.
ஸ்    தனி ஒருவர் பிறர் ஒருவரைச் சுரண்டுவது எந்த அளவுக்கு ஒழிக்கப்படுகிறதோ, அந்த அளவுக்கு ஒரு தேசம் மற்றொரு தேசத்தை சுரண்டுவதும் ஒழிக்கப்படும். தேசத்திற்குள், வர்க்கங்களுக்கு மத்தியிலான பகை நிலை எந்த அளவுக்கு மறைகிறதோ, அந்த அளவுக்கு தேசங்களுக்கு இடையிலான பகையும் இல்லாதொழியும்.
ஸ்    பாட்டாளிகள் தங்கள் அடிமைச் சங்கிலியைத் தவிர ஏதும் இல்லாதவர்கள். அவர்கள் வென்று பெறுவதற்கு அனைத்து உலகமும் இருக்கிறது.
ஸ்    உலகத் தொழிலாளர்களே, ஒன்று சேருங்கள்.
உலகெங்கும் பாட்டாளிகளும் கம்யூனிஸ்டுகளும் இருக்கின்றனர். குறுகிய தேசிய வெறிக்கு, போர் வெறிக்கு அந்தந்த நாட்டு முதலாளிகள், அந்தந்த நாட்டு பாட்டாளிகளை அழைப்பார்கள். எந்த நாட்டு மக்களும் நம் எதிரிகள் அல்ல. கெட்ட போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம் என்ற பாட்டாளி வர்க்க சர்வதேசியம் நிச்சயம் என்றும் தேவை.
இந்தியாவை ஆண்ட பிரிட்டனும் சோசலிச சோவியத் யூனியனும் இரண்டாம் உலகப் போரில் கூட்டாளிகள் என்பதால், பாசிச ஜெர்மனியின் படைகள் சோவியத் யூனியனை ஆக்கிரமித்ததால், இந்தியாவெங்கும் பரவிய வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் இருந்து விலகி நின்றது, பாட்டாளி வர்க்க சர்வதேசியத்தை பலவீனப்படுத்திய செயலாகும். சீனா ரஷ்யா கருத்துப் போர் நடந்த போது, சீனத்தில் கலாச்சாரப் புரட்சி நடந்த போது, சீனத்தின் தலைவர் நமது தலைவர் சீனத்தின் பாதை நமது பாதை என்றதும், பாட்டாளி வர்க்க சர்வ தேசியத்திற்கு சற்றும் பொருந்தாததாகும்.
புதிதாக உருவான சோசலிச சோவியத் யூனியனை முற்றுகையிட்டு அழிக்க ஏகாதிபத்தியம் முயன்றபோது, அய்க்கிய அமெரிக்க, பிரிட்டிஷ் தொழிலாளர்கள், அந்தப் போர் முயற்சிகளுக்கு  ஒத்துழைப்பு தராதது, சரியான சர்வதேசியமாகும். ஏகாதிபத்திய போரை உள்நாட்டுப் போராக்க துணிந்து லெனின் அறைகூவல் விடுத்ததும், உயிர்த்துடிப்புள்ள, காலச் சூழல் பொருத்தமுள்ள சர்வதேசியமாகும்.
எல்லா நாடுகளிலும், மக்கள் தொகையில் பாட்டாளிகளே பெரும் எண்ணிக்கையில் உள்ளனர். அவர்களால்தான்  உற்பத்தி நடக்கிறது. ஆனால் அவர்களிடம் சொத்து இல்லை. அவர்கள் அரசியல் அதிகாரத்தில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளனர். அதனால்தான், நாமின்றி நாடில்லை, நாடோ நமதில்லை, நாமே நாடாவோம், நாட்டை நமதாக்குவோம் என முழங்குகிறோம்.
கனிம வளங்கள் உள்ளிட்ட இயற்கை வளங்களை, கருவூலத்தை, மனித வளத்தை கார்ப்பரேட்டுகள் கட்டற்ற விதத்தில் சூறையாட மோடி அரசு வழிசெய்துள்ளது. முதலாளிகளின் அரசான மோடி அரசு, மக்களைப் பிளவுபடுத்தி இந்து ராஜ்ஜியம், இந்து பெருமிதம் என முன் நகர்கிறது.
மோடி, அம்பானி அதானிக்காக இந்து ராஷ்டிரா அமைக்க முயற்சிக்கிறார். கம்யூனிஸ்டுகளும் பாட்டாளிகளும், இந்தியாவில் மக்கள் ஆட்சிக்காக மக்கள் அரசியலை நாட்டுப் பற்றுடன் முன்நகர்த்துவோம்.

Search