COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Saturday, September 5, 2020

இந்து ராஷ்டிரா நோக்கிய பயணம்
தடுக்க முடியாததா?


எஸ்.குமாரசாமி


பட்டப்பகலில் நாடறிய பாப்ரி மசூதியை இடித்தவர்கள் ஒருவர் கூட தண்டிக்கப்படாத பின்னணியில், பாப்ரி மசூதியை இடித்தது கொடும் குற்றம் ஆனாலும் இடித்த தரப்புக்கே கோவில் கட்ட மசூதி இருந்த இடம் தரப்படும் என்று உச்சநீதிமன்றம் வெகுமதியாய் தந்த பின்னணியில், காஷ்மீர் என்ற இசுலாமிய சிறுபான்மையினர் பெரும்பான்மையாய் இருந்த ஒரே மாநிலம் துண்டாடப்பட்ட அதே ஆகஸ்ட் 5 அன்று, இந்தியப் பிரதமர், இந்து பிரதமராய் போய் கோவில் கட்ட அடிக்கல் நாட்டிய பிறகு, இந்து ராஷ்டிரா பயணத்தை இனி எவராலும் தடுக்க முடியாது என இந்துத்துவர்கள் சொல்கிறார்கள்.

மகரிஷி மோடி குழந்தை ராமனுக்கு வழிபிறக்க உதவியுள்ளார்.
கொரோனா பெருந்தொற்று காலத்தில், சர்ச்சைக்குரிய இடத்தில் கோவில் கட்ட அவசரப்பட வேண்டுமா என ஓர் எதிர்ப்பியக்கம் கட்டி எழுப்பக் கூட காங்கிரசால், சமாஜ்வாதி கட்சியால், பகுஜன் சமாஜ் கட்சியால் முடியவில்லை. மாறாக, காங்கிரசார் சிலர், கோவில் கட்ட அடித்தளம் அமைத்ததே ஷில்யானாஸ் பூஜைக்கு வழிவகுத்த ராஜீவ் காந்திதான் என பெருமையுடன் சொல்கிறார்கள். சமூக நீதி பேசும் கட்சிகளான சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள், ராமன் சிலையை விட சற்று உயரமான பரசுராமன் சிலை வைக்கப் போவதாகச் சொல்கிறார்கள். புராணக் கதைகள் படி பரசுராமர் சத்திரியர்கள் பலரைக் கொன்ற ஒரு பார்ப்பன மகரிஷி. உத்தர பிரதேசத்தில் மக்கள் தொகையில் சுமார் 10% உள்ள பார்ப்பனர் வாக்குகளை, ஆதரவை கவர, பாஜகவுக்கு வசதியான, பாஜகவை வெல்ல முடியாத ஒரு போட்டியில் சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் கட்சிகள் ஈடுபடுகின்றன.
சுதா பரத்வாஜ், வரவர ராவ், பேராசியர் சாய்பாபா போன்ற மக்களின் நண்பர்கள் எல்லாம் நகர்ப்புற நக்சல் என்று சொல்லப்பட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு இது வரை பிணை கிடைக்கவில்லை. குடியுரிமை திருத்தச் சட்ட எதிர்ப்புப் போராளிகள், ஜனநாயகத்துக்காக குரல் கொடுத்த மாணவர்கள், தொழிலாளர்களுக்காக போராடியவர்கள் சிறையில் இருக்கும்போது, வெறுப்புரைகளால் பேரிழப்புகளும் படுகொலைகளும் நிகழக் காரணமான சங் பரிவார் கூட்டத்தினர் சுதந்திரமாக நடமாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஒரு நாளில் பெருந்தொற்றுக்குள்ளானோர் எண்ணிக்கை உலகிலேயே இந்தியாவில்தான் அதிகம் என்ற நிலை இருந்தபோதும், அயலுறவுக் கொள்கையில் படுதோல்வி அடைந்துள்ளபோதும், இந்திய பொருளாதாரத்தை அதலபாதாளத்தில் தள்ளியுள்ளபோதும், அம்பானி, அதானிகளுக்கு சலுகைகளை அள்ளித்தர விமான நிலையம், விண்வெளி, ராணுவத் தளவாடம், ரயில்வே என நாட்டின் செல்வங்கள் குவிந்துள்ள துறைகளை தனியாரிடம் ஒப்படைக்க, மக்களுக்கு நிவாரணமும் மாநிலங்களுக்கு உரிய நிதியும் அதிகாரமும் மறுக்க, இந்தியைத் திணிக்க, சமஸ்கிருதத்தைப் புகுத்த, வேலைகளைப் பறிக்க, வருமானத்தைக் குறைக்க, தொழிலாளர் விரோத, ஜனநாயக விரோத சட்டங்களைப் போட மோடியின் பாஜக அரசால் முடிகிறது.
பாஜக கூட்டாளிகளை தக்க வைத்துக் கொள்ளும்போது, காங்கிரஸ் உள்ளுக்குள் சிதைகிறது. இந்திப் பகுதி எதிர்க்கட்சிகள் தேங்கி நிற்கின்றன. இந்த விவரங்கள் இந்து ராஷ்டிராவின் பயணம் தடையில்லாமல் முன் செல்கிறது என்ற உண்மையை காட்டவில்லையா என சிலர் ஆதங்கத்துடன் கேட்கின்றனர்.
மனித சமூகம் புராதனப் பொதுவுடைமை தாண்டி, ஆண்டான் அடிமை சமூகமானதில் இருந்து அரசு ஓர் ஒடுக்குமுறை கருவியாகவே இருந்துள்ளது. ஆனாலும் அதற்கு ஒரு மறுபக்கம் உண்டு. மிகச் சிறிய சிறுபான்மை, மிகப் பெரிய பெரும்பான்மையை ஆள, ஒடுக்குமுறை மட்டும், சிறைகள், ஆயுதங்கள், படைகள் மட்டும் போதாது. ஏதோ ஒரு விதத்தில் தமது ஆட்சிக்கு மக்களின் சம்மதத்தை, இசைவைப் பெற்றாக வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயகத்தில் ட்ரம்ப்பும் மோடியும் மக்களை துப் பாக்கி முனையில் மிரட்டாமலே, ரகசிய வாக்கெடுப்பு முறையில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஆட்சியில் உள்ளனர். மோடி 2014அய்க் காட்டிலும் பெரிய தேர்தல் வெற்றியை 2019ல் பெற்றார்.
2019ல் புல்வாமா, பாகிஸ்தான் மீது துல்லியத் தாக்குதல், தேசம் என்ற பெரும்கூச்சல் ஆகியவை, எதிர்க்கட்சிகளை தடுமாற வைத்து பின்னுக்குத் தள்ளி பாஜகவுக்கு வெற்றி தேடித் தந்தன. 2014, 2019 என்ற இரண்டு தேர்தல்களிலும் தலித், பிற பிற்படுத்தப்பட்டோரின் சில பிரிவினர் மத்தியில் மேல்நோக்கி நகர வாய்ப்பு, அதிகாரத்தில் பங்கு, அனைத்து பிரிவு மக்கள் மத்தியில் வளர்ச்சி என்ற நம்பிக்கைகளை பாஜகவால் விதைக்க முடிந்தது. பாப்ரி மசூதி இந்துக்களின் அடிமைத்தனத்தின், அவமானத்தின் சின்னம், அங்கே ராமன் கோவில் கட்டுவது, இந்து வீரத்தின் வெற்றி, காஷ்மீர் பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத தளம், அதனால் தேசத்துக்கு என்றும் ஆபத்து என்ற கருத்துகளையும் பாஜகவால் பரப்ப முடிந்தது. இவற்றின் சேர்க்கை பாஜகவுக்கு வெற்றி தேடித் தந்தது. மோடி, அம்பானி, அதானிகளின் ஆதரவைப் பெறுவதோடு, மக்கள் மத்தியில் எதிர்ப்பார்ப்புகளை உருவாக்கி ஒரு நம்பிக்கையை பெறுவதிலும் மோடி வெற்றி பெற்றிருந்தார்.
இந்து மதத்தை முன்னிலைப்படுத்துவது, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் பிரிட்டிஷ் ராஜ்ஜியத்தின் காலத்திலேயே இருந்தது. சாவர்க்கர், கோட்சே போன்ற இந்துத்துவர்கள் மட்டுமல்லாமல், காங்கிரசிலேயே இந்து இந்தியாவுக்கு வலுவான ஆதரவு இருந்தது. இன்று இந்தியாவில், சமஸ்கிருதம் தங்கள் தாய்மொழி என்று சொல்பவர்கள் 2,482 பேர்தான். சமஸ்கிருதம் இந்து மதத்தின் தேவபாஷை. மற்ற மொழிகள் எல்லாம் நீச்ச பாஷைகள். அதனால்தான் இன்று வரை 130 கோடி மக்கள் வாழும் இந்தியாவில் 2,482 பேர் மட்டுமே தாய்மொழியாகக் கொண்டுள்ள சமஸ்கிருதத்தில்தான் சத்யமேவ ஜெயதே என இந்தியக் குடியரசின் குறிக்கோள் எழுதப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் அடையாளச் சின்னமாக (லோகோ) மகாபாரதத்தில் பல இடங்களில் வருகிற, யதோ தர்ம ஸ்ததோ ஜெயஹ (எங்கே தர்மம் உள்ளதோ அங்கே வெற்றி இருக்கும்) என்ற சமஸ்கிருத வாக்கியம் உள்ளது. பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக்கான தேசியக் குழு (என்சிஆர்டி), ரா, அய்பி, தூர்தர்ஷன், எல்அய்சி, வானிலை மய்யம், இந்திய கடலோரக் காவல்படை, இந்திய கடற்படை, இந்திய விமானப் படை ஆகிய அனைத்து அமைப்புகளும் சமஸ்கிருத மொழியில்தான் தங்கள் குறிக்கோள்களைச் சொல்கின் றன. இப்படியாக, பல விசயங்களிலும் ஒரு குறுகிய அடித்தளத்துக்கு இருக்கிற, பொருந்தாத அளவுக்கு அதிகமான செல்வாக்கு, இறுதியில், இந்து ராஷ்டிராவுக்கு எதிராகவே அமையும்.
இந்து ராஷ்டிராவை முன்னகர்த்துபவர்களுக்கு எதிர்ப்பே இல்லை என்று காண்பது தவறு. கொரோனாவுக்கு முன்பு இந்தியாவின் லட்சக்கணக்கான இசுலாமிய பெண்களும் ஆண்களும் இந்திய தேசியக் கொடியுடன் இசுலாமியரை வெறுத்து ஒதுக்கி விலக்கி வைக்கும் குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகப் போராடினர். இந்துக்கள் பலரும் அவர்களோடு கை கோர்த்தனர். ஷாஹின்பாக் நாடெங்கும் மோடி ஆட்சிக்கு எதிர்ப்பு என்பதன் அடையாளம் ஆனது.
சுவாமிநாதன் எஸ்.அங்லேசரியா அய்யர், டைம்ஸ் ஆஃப் இந்தியாவில், தாராளவாத கோணத்தில், இந்து ராஷ்டிரா முயற்சிகளுக்கு எதிராக எழுதும்போது, சாவர்க்கர் பற்றி சொல்கிறார். அ) விக்கிபீடியா வெளியிட்டுள்ள பிரபல இந்திய நாத்திகர் பட்டியலில் சாவர்க்கர் இடம் பெற்றுள்ளார். ஆ) சாவர்க்கரின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய தனஞ்சய் கீரின் கூற்றுப்படி, சாவர்க்கரின் மனைவி இறந்தபோது, பலரும் மன்றாடிக் கேட்ட பிறகும், அவர் இந்து மதச் சடங்கு எதையும் அனுமதிக்கவில்லை. இ) பசு அவருக்கு புனிதமானதல்ல. இந்துக்கள் இறைச்சி உண்டு உடல் வலுப்பெற வலியுறுத்துகிறார். ஆக, சாவர்க்கரின் இந்து ராஷ்டிரா, இசுலாமியரை வெறுப்புடன், பகையுடன் விலக்கி நிறுத்தும் இந்துத்துவ அரசியல் நிகழ்ச்சிநிரலின் இறுதி இலக்கு ஆகும். இந்த இந்து ராஷ்டிரா, எல்லா இந்துக்களும் ஏற்றுக்கொள்வது அல்ல. இந்து மதப் பற்று, பக்தி உள்ள எல்லா இந்துக்களும், இசுலாமிய வேட்டையை ஏற்பவர்கள் அல்ல. இந்தியாவில் எல்லா மதத்தவருக்கும் சமஉரிமை உண்டு என்ற வகைப்பட்ட மதச்சார்பின்மையில், இறைபக்தியுள்ள இந்துக்கள் பலருக்கும் நம்பிக்கை உண்டு. இந்துக்கள் அனைவரும் இந்து ராஷ்டிராவை முன்னகர்த்தும் இந்துத்துவர்கள் அல்ல. ராமன் கோவில் கட்டத் துவங்கிய பிறகு, அதன் மீது உருவாக்கப்பட்ட அந்த அரசியல் ஈர்ப்பு வடிந்து விடும். டைம்ஸ் ஆஃப் இந்தியா கட்டுரையாளரின் இந்தக் கருத்துகள் கவனிக்கத்தக்கவையே.
இடஒதுக்கீடும் இடம்பெயர்ந்தோர் பிரச்சனையும் இடிபாடுகளில் சிக்கியுள்ள இந்திய பொருளாதாரமும் மோடி ஆட்சியின் காலைப் பிடித்து இழுக்கும். தலித்துகள் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மத்தியில் இருந்து ஒரு பிரிவினர் மேல்நோக்கி நகரலாம், அதிகாரத்தில் பங்கு பெறலாம் என்று மோடி தந்த நம்பிக்கை தகர்ந்துள்ளது. இடஒதுக்கீட்டை ஒழிக்கும் முயற்சி துவங்கிவிட்டது. பொருளாதாரரீதியாக பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு மற்றும் கல்வியில் பிற பிற்படுத்தப்பட்டோர் உரிமைகளை மறுத்துள்ளதும் அடித்தட்டு பிரிவினருக்கு பாதகமான நீட் தேர்வை வலியுறுத்துவதும் மோடி அரசை நிச்சயம் பலவீனப்படுத்தும். சங் பரிவாரின் தூதுவரான, பிரச்சாரகரான கங்கனா ரவாத் சொல்கிறார்: 'நவீனகால இந்தியர்கள் சாதி முறையை நிராகரித்துவிட்டார்கள். இட ஒதுக்கீடு என்று பேசிக்கொண்டு, நமது அரசியல் சாசனம்தான் அதைப் பிடித்துக் கொண்டு தொங்குகிறது. அதை விட்டுவிடுவோம். அதை விட்டுவிடுவது பற்றி பேசுவோம். மருத்துவர்கள், பொறியாளர்கள், விமான ஓட்டிகள் போன்ற பணிகளில் மிகவும் தகுதியுடையவர்கள் துன்பப்படுகின்றனர். நம் தேசம் அறிவாற்றலும் திறமையும் இல்லாதவர்களால் துன்பப்படுகிறது. அப்படி அறிவாற்றலும் திறமையும் உள்ளவர்கள், அவர்களுக்கு விருப்பம் இல்லாமலே, அய்க்கிய அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுவிடுகிறார்கள். வெட்கக் கேடு'. ஏகப்பெரும்பான்மை மக்களை திறமையற்றவர்கள் என்று காண்கிற, இடஒதுக்கீட்டுக்கு எதிரான சங் பார்வை, அதற்கு நிச்சயம் பலத்த அடி தரும்.
இசுலாமிய வெறுப்பு அரசியல் நடவடிக்கைகளை இந்திய நீதித்துறையும் கண்டிக்கத் துவங்கியுள்ளது. 21.08.2020 அன்று பதிவேற்றம் செய்யப்பட்ட கிரிமினல் ரிட் மனு எண் 548/2020 உள்ளிட்ட வழக்குகளில் மும்பை உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.வி.நலவாடே மற்றும் எம்.ஜி.செவில்கர் வழங்கிய தீர்ப்பு குறிப்பிடத்தக்கதாகும்.
தப்லீக் என்ற இசுலாமிய மதப்பிரிவினர் சிலர் மீது வழக்கு பதிவு செய்து, இசுலாமியர் இவர்கள் மூலம் கொரோனா பரப்பும் போரில் ஈடுபட்டுள்ளனர் என்ற செய்தி, ஊடகங்கள் மூலம் பரப்பப்பட்டது. இது பற்றி தீர்ப்பு சொல்கிறது: 'அச்சு மின்னணு ஊடகங்களில் மார்கஸ் டில்லிக்கு வந்த அயல்நாட்டினருக்கு எதிராகப் பெரிய பிரச்சாரம் நடந்தது. இந்தியாவில் இவர்களே கோவிட் 19அய் பரப்புகிறார்கள் என்ற சித்திரம் உருவாக்கப்பட்டது. இவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டனர். பெருந்தொற்றோ பேரிடரோ இருக்கும்போது, ஓர் அரசியல் கட்சி அரசாங்கம் சிலரை பலிகடாக்கள் ஆக்குகிறது. இந்த அயல்நாட்டவர் பலிகடாக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டதை சூழ்நிலை காட்டுகிறது. இவர்கள் மீதான கைது நடவடிக்கை இசுலாமியர் மத்தியில் அச்சத்தை உண்டாக்கும். எதற்காகவும் எந்த வடிவத்தில் செயல்பட்டாலும் ஆபத்து என்று இசுலாமியருக்கு மறைமுகமாக அச்சுறுத்தல் விடப்பட்டுள்ளது'. நீதிமன்றம், இப்படி வெறுப்பின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எல்லா முதல் தகவல் அறிக்கைகளையும் ரத்து செய்தது.
இந்தியாவில் மாநிலம் விட்டு மாநிலமும் மாநிலங்களுக்குள்ளும் இடம்பெயரும் கோடிக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்க்கையை கொரோனா வெளிச்சம் போட்டுக் காட்டியது. அவர்களது மறுவாழ்க்கையை உறுதி செய்வதில் மோடி அரசு படுதோல்வி கண்டுள்ளது. அவர்கள் மீண்டும் மாநிலம் விட்டு, மாவட்டம் விட்டு செல்கிறார்கள். சொந்த ஊரில் வாழ அவர்களுக்கு வழியில்லை. இதனை ஒப்புக்கொள்ளும் விதம், மோடி அரசு, மாவட்டம் விட்டு மாவட்டம், மாநிலம் விட்டு மாநிலம் மக்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்தக் கூடாது என்கிறது. மூலதனத்துக்கு உழைப்புச் சந்தையில் கூலி உழைப்பு மலிவாகக் கிடைக்க வேண்டும் என்பதில் மோடி அரசு கவனமாக உள்ளது.
இந்தியப் பொருளாதாரம் நிலைகுலைந்து போயுள்ளது, கடவுள் செயல் என்று சொல்லும் பூசாரிகளின் மோசடிகளை, கிராமங்களிலும் நகரங்களிலும் வாழும் அனைத்து பிரிவு மக்களும் நன்கு உணர்ந்து வருகிறார்கள். நியாயத் துக்கான போராட்டம் வெல்ல நம்பிக்கை அடிப்படையானது. கொரோனாவில் இருந்து மீண்டு வரும் இந்திய மக்கள், இந்து ராஷ்டிராவையும் கார்ப்பரேட் ராஜ்ஜியத்தையும் நிச்சயம் தடுத்து நிறுத்துவார்கள்.

Search