தமிழ்நாட்டில் 2021 சட்டமன்றத் தேர்தலில் பாஜக கனவு நனவாகுமா?
விருப்பப்படுகிற உரிமையை, முட்டாள்களின் கற்பனை சொர்க்கத்தில் வாழும் உரிமையை பாரதிய ஜனதா கட்சிக்கு எவராவது மறுக்க முடியுமா?
2016ல் பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் 232 சட்டமன்றத் தொகுதிகளில் போட்டியிட்டது. அப்போது மோடிதான் இந்தியாவின் பிரதமர். அவரும் தமிழ்நாட்டுக்கு வந்து பாஜகவுக்கு வாக்குகள் கேட்டார். 2.8% வாக்குகளுடன், போட்டியிட்ட 232 தொகுதிகளிலும் தோல்வியுற்ற பாஜக, 230 தொகுதிகளில் வைப்புத் தொகையை இழந்தது. 2019 நாடாளுமன்றத் தேர்தலில் மோடி நாடெங்கும் வெற்றி பெற்றார். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அஇஅதிமுக - பாஜக - பாமக - தேமுதிக - புதிய தமிழகம் கூட்டணி, வேலூர் நீங்கலாக போட்டியிட்ட 39 தொகுதிகளில் தேனி தவிர 38 தொகுதிகளில் தோல்வியுற்றது. 31 தொகுதிகளில் 1,92,000 வாக்குகள் வித்தியாசம், 7 தொகுதிகளில் 3 லட்சம் வாக்கு வித்தியாசம் இருந்தது.
நாங்களே கூட்டணிக்கு தலைமை தாங்குவோம், நாங்கள் கைகாட்டுபவர்தான் முதலமைச்சர் என்றெல்லாம் சொல்லும் பாஜக, 2016ல், 2019ல் தோல்வியுற்ற எந்த இடங்களில் இப்போது வெற்றி பெற வாய்ப்புள்ளது? 2.8% வாக்குகள், 5% ஆவதற்குக் கூட அவர்களுக்குச் சாதகமாக புதிதாக ஏதும் நடந்துள்ளதா?
இந்தியாவில் 28.12.1855 முதல் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. 06.04.1980 முதல் பாஜக செயல்படுகிறது. திமுக 17.09.1949 முதலும், அஇஅதிமுக 17.10.1972 முதலும் செயல்படுகின்றன. தமிழ்நாட்டில் கடைசியாக விழுப்புரம், விக்கிரவாண்டி வரை நடந்த சட்டமன்ற இடைத்தேர்தல்களில் திமுகவும் அதிமுகவும்தான் நேருக்குநேர் மோதிக் கொண்டன. காங்கிரஸ் தனித்துப் போட்டியிட்டால் இரட்டை இலக்க இடங்களில் கூட வெற்றி பெற முடியாது. பாஜக தனித்துப் போட்டியிட்டு இரண்டு இடங்களாவது வெற்றி பெற முடியுமா? தமிழ்நாட்டில் திமுக, அஇஅதிமுக இருதுருவ அரசியலை காங்கிரசும் பாஜகவும் தாண்டிச் செல்ல முடியாது.
மனித உடலுக்கு சில ஒவ்வாமைகள் உண்டு. அதுபோல் தமிழ்நாட்டு மக்களுக்கு, சமூகத்துக்கு காவியின் பிற்போக்கு அரசியல் ஒவ்வாததாகும். இரண்டு தெய்வீக சகோதரர்களை பாஜக தன் வளர்ச்சிக்கு பயன்படுத்த முயற்சி செய்கிறது. தம்பி முருகன் துணை கொண்டு காக்க காக்க எனக் கதறியது. வீடு தோறும் வேல் என்றது. அண்ணன் விநாயகனை முன்னிறுத்தி தமிழ்நாடே போர்க்களமாகும் என சவால் விட்டது. தன் பிற்போக்கு குணத்துக்கு ஏற்ப, அரசுக்கு ஆண்மை உள்ளதா, புடவையின் பின்னால் ஒளிந்துகொண்டவர்கள்தானே என, சாலையோரங்களில் சுற்றும் ரவுடிகள் போல் அதன் தலைவர்கள் சிலர் வக்கிரமாக பேசினார்கள். ஆனால், நீதித்துறை காட்டிய பக்குவத்தால், தமிழ்நாட்டு மக்கள் காட்டிய நிதானத்தால், முதிர்ச்சியால், விநாயகர் சதுர்த்தியும் அமைதியாகச் சென்றுவிட்டது.
பாஜகவின் தேசிய பொறுப்பாளர் முரளிதர் ராவ், வெற்றி வேலுக்கு எதிரானவர்களை அவனே பார்த்துக் கொள்வான் என்றும் பாஜகவை எதிர்க்கும் எவரும் கடவுள் முருகனை எதிர்ப்பவர்கள் என்றும் ஆன்மீக அரசியல் பேசினார். தேர்தல் நெருங்கும்போது, ராஜா வகையறாக்கள், பாஜகவுக்கு ஆதரவாக வாக்களிக்காவிட்டால், அது, முருகனுக்கு, விநாயகனுக்கு, முப்பத்து முக்கோடி இந்து தெய்வங்ககளுக்கு விரோதமாக வாக்களிப்பதாகும் என்று சொல்லக் கூடும்.
இந்தித் திணிப்புக்கு எதிராக போராடிய ஒரு மாபெரும் வரலாறு இருக்கிற தமிழ்நாட்டு மக்கள் மத்தியில், இந்தியைத் திணிக்கிற பாஜக எப்படி செல்வாக்கு பெற முடியும்? மக்களவை உறுப்பினர் கனிமொழியிடம் விமான நிலைய காவல் படையினர், இந்தியில் பேசாவிட்டால், இந்தியர் இல்லை என்று சொல்லும் நிலைதான் இன்றும் உள்ளது. இந்திய ஒன்றியத்தின் ஆயுஷ் துறை செயலர் வைத்திய ராஜேஷ் கொடேசா, தமிழ்நாட்டு மருத்துவர்களும் கலந்துகொண்ட பயிற்சி நிகழ்ச்சியில், இந்தி தெரியாவிட்டால் வெளியேறுங்கள் என்று சொன்னதோடு எதிர்த்து நியாயம் கேட்டவர்களை குண்டர்கள் (ஹ÷லிகன்ஸ்) என்று இழிவுபடுத்துவதும் இப்போதும் நடக்கிறது. இந்தி, இந்தியாவில் உள்ள பல மொழிகளில் ஒன்றாகும். அது பெரும்பான்மை மக்கள் மொழி அல்ல. இந்தியாவில் மொழி சமத்துவம் கிடையாது என இந்தியாவும் இந்திய நிறுவனங்களும் சொல்லி, இந்தியை ஏற்று அடிபணியாதவர்கள் பிரிந்து செல்லுங்கள் என்றால், அது இந்தியாவுக்குத்தான் நஷ்டம். தமிழ்நாடு கடற்கரைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள், தொழில் வளம், இயற்கை வளம், திறன்மிக்க மனிதவளம் நிறைந்தது. தமிழ்நாட்டில் இருந்து இந்திய ஒன்றியம் கூடுதலாக எடுத்துக் கொண்டு, தமிழ்நாட்டுக்கு எப்போதும் குறைவாகவே தருகிறது. தமிழ்நாடு தனி நாடாகி விடு என்று தெரிவிப்பதுபோல், இந்திய ஒன்றியம் நடந்து கொண்டால், அது இந்தியாவுக்குத்தான் நஷ்டம்.
பாஜக, இடஒதுக்கீட்டையும் பெரியாரையும் சீண்டிப் பார்க்கிறது. ராமசாமி பெயர் சொல்லி, அநியாயம் பல செய்து, ஆட்சியைப் பிடித்த பாஜகவுக்கு தமிழ்நாட்டு ஈ.வெ.ராமசாமி பெரியார் பெயரைக் கேட்டாலே கசக்கிறது. அது மிகமிக இயல்பானது. பார்ப்பனியத்துக்கு, மனுதர்மத்துக்கு, இந்து ராஷ்டிராவுக்கு மிகவும் அடிப்படையான சவாலை எழுப்பி சூத்திர இழிவுக்கு முடிவு கட்டி தமிழ்நாட்டின் சாமான்யர்கள், எளிய சாதியினர் கல்வியில், வேலை வாய்ப்பில், பொருளாதாரத்தில், அரசியலில் மேலே எழுந்துள்ளதில் பெரியாரின் பங்கை நினைக்க நினைக்க பாஜகவுக்கு ஆத்திரம் வருவது புரிந்துகொள்ளக் கூடியதுதான். அரசியல் அமைப்புச் சட்டத்துக்கும் சமூக நீதிக்கும் புறம்பாக பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு இடஒதுக்கீடு என நடைமுறைப்படுத்தி, இடஒதுக்கீட்டின் அடிப்படைகளையே சிதைத்தவர்களிடம் இருந்து வேறென்ன எதிர்ப்பார்க்க முடியும்?
பாஜக, முக்கிய முடிவுகள் எடுக்கும் இடங்களில், கலந்துகொள்ளும் விவாதங்களில், உயர் சாதியினரை, வர்த்தக தொழில்துறையில் முன்னேறிய சாதியினரை ஈடுபடுத்துகிறது. கீழே சண்டையிடும் ஆபத்தான இடங்களில் தலித்துகளை, சேவை சாதியினரை, விவசாய சாதியினரை நிறுத்தப் பார்க்கிறது. ஆக்ஸ்ஃபோர்ட் அகராதி ரைட்டிஸ்ட், வலதுசாரி என்றால், பழமைவாதி, பிற்போக்காளர் என்று விவரிக்கிறது. பிற்போக்காளர் என்றால், பணக்காரர்களுக்கு ஆதரவாக, ஏழைகளுக்கு எதிராக நிற்பவர். பிற்போக்காளர் என்றால், சனாதனத்துக்கு ஆதரவாக, ஜனநாயகத்துக்கு எதிராக நிற்பவர். பிற்போக்காளர் என்றால் சாதியாதிக்கம், ஆணாதிக்கம், மொழியாதிக்கம், வெறுப்பரசியல், ஒற்றைத் தன்மை திணிப்பு என்ற அனைத்து வீசியெறியப்பட வேண்டிய சமூக கழிவுகளையும் கசடுகளையும் முகர்ந்து நுகர்ந்து மகிழ்ந்து அவற்றை மக்கள் சமூகத்தின் மீதும் திணிப்பவர்கள். இன்று, கிட்டத்தட்ட தமிழ் நாட்டு தொலைக்காட்சி விவாதங்கள் அனைத்திலும் வலதுசாரி பொருளாதார அறிஞர், வலதுசாரி சிந்தனையாளர், வலதுசாரி செயல்பாட்டாளர், வலதுசாரி பத்திரிகையாளர் என்பவர்கள் இடம் பெறுகிறார்கள். இந்த சங் பரிவார் கூட்டத்தினர் தங்களை வலதுசாரிகள் என்று அழைக்க வேண்டாம் என பெயரளவுக்குக் கூட சொல்லாமல், அப்படி அழைக்கப்படுவதில் அக மகிழ்ந்து போகிறார்கள். தமிழ்நாட்டில் வலதுசாரி என பகிரங்கமாக சொல்லிக் கொள்பவர்கள் நிச்சயமாக காலூன்ற முடியாது. மோடி திரும்பப் போ என தமிழ்நாடு தொடர்ந்து சொல்லும்.
அப்படியானால், சங் பரிவார் முயற்சிகள் பற்றி நாம் கணக்கில் கொண்டு செயல்படுவது அவசியமே இல்லை என்றாகுமா? நிச்சயமாக இல்லை. பாஜக பெரும்பான்மை இல்லாமல் ஆளுநர் துணைகொண்டு கோவாவில், மணிப்பூரில் ஆட்சியைப் பிடித்ததை மறந்துவிட முடியாது. தேர்தலில் வெற்றி பெற்று அமைக்கப்பட்ட காங்கிரஸ் ஆட்சியை, கொரோனா காலத்தில் பண பலத்தாலும் அதிகார பலத்தாலும் மத்தியபிரதேசத்தில் கவிழ்த்து, பாஜக தானே ஆட்சியமைத்ததையும் அந்த முயற்சியை ராஜஸ்தானிலும் செய்ததையும் நினைவில் கொண்டாக வேண்டும். அஇஅதிமுக அரசு, என்னதான் அடிபணிந்தாலும், அஇஅதிமுகவுக்கென ஒரு சமூக அடித்தளமும் அரசியல் இடமும் நிச்சயம் இருக்கிறது. ஜெயலலிதா இறந்த பிறகும் எல்லா எதிர்ப்புகள் தாண்டியும் ஆட்சி நீடிக்கிறது. இடைத்தேர்தல்களில் எதிர்க்கட்சிகளால் அஇஅதிமுகவை தோற்கடிக்க முடியவில்லை. பாஜக அஇஅதிமுகவை பிளவுபடுத்தி உடைத்து கைப்பற்ற முயற்சி செய்யும் வாய்ப்பு இருக்கிறது. ஆறு மாத காலத்தில் அரசியல் மாற்றம் என்று சொல்லும்போது, இத்தகைய கயமைகளைதான் முன்வைக்கிறார்கள்.
பாஜக, கடலோர கர்நாடகாவில் மதவெறி ரவுடித்தனங்கள் மூலம் செயல்பட்டு செல்வாக்கு பெற்றது. தமிழ்நாட்டு காவல்துறையில், அரசு நிர்வாகத்தில், ஊடகங்களில், சமூக ஊடகங்களில், கருத்து உலகத்தில் சங் பரிவார் நன்றாகவே ஊடுருவியுள்ளது. சமூக ஏற்றத்தாழ்வுகள் தீவிர மடைந்துள்ளதால் இந்த ஆபத்தும் நேர்ந்துள்ளது. இப்போது தமிழ்நாடெங்கும் காவல்துறையால் ஹிஸ்டரி ஷீட்டர்ஸ் என்றழைக்கப்படும் குற்றகும்பல் தலைவர்களை, ரவுடிகளை பாஜக மும்முரமாக கட்சியில் சேர்க்க ஆரம்பித்துள்ளது. வண்டலூரில் பட்டாக் கத்திகளுடன் கட்சியில் சேர வந்தவர்கள் காவல்துறையிடம் பிடிபட்டனர். அவர்களின் தலைவரான ஒருவர் பாஜகவின் வலதுசாரி விவாத மேதை ஒருவரின் மகிழுந்தில் ஏறி தப்பிச் சென்றதாக பத்திரிகைகளில் செய்தி வந்தது. கமலாலயத்தில் அரிவாளால் கேக் வெட்டும் கொண்டாட்டங்கள் விரைவில் நடைபெற்றால் வியப்பதற்கு எதுவும் இல்லை. இந்து மதத்தில், நதிமூலம் ரிஷிமூலம் பார்க்காதே என்று சாதாரணமாகச் சொல்வார்கள். பாஜக தலைவர் முருகன், ரவுடிமூலம் பார்க்காதே என்கிறார். நேற்று வரை ஒருவர் யாராக இருந்தார் என்பது தமக்கு பொருட்டல்ல என்கிறார். ஆனால், பாஜக எத்தகையவர்களை கட்சியில் சேர்க்கிறது என்று மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். போராட்டங்களுக்கு எதிர் போராட்டங்கள் என்று கட்டமைக்கத் துவங்கியுள்ள பாஜகவுக்கு ரவுடி பலம் தேவைப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், கொரோனா காலத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களுக்கு சேர வேண்டிய நிதியை மறுக்கும் நிலை உருவானதற்கு, நாடு சந்திக்கும் பொருளாதார நெருக்கடிக்கு கடவுளின் செயலே காரணம் என்கிறார். காத்திடும் முருகன், வினை தீர்த்திடும் விநாயகன் என்று அரசியல் ஆதாயம் அடைய பேசுபவர்கள் தங்களது அலட்சியத்தால், அகந்தையால், அறியாமையால், அக்கறையின்மையால் நாட்டுக்கும் மக்களுக்கும் வஞ்ச கம் செய்துவிட்டு, இப்போது கடவுள் மீது பழி போட்டு தப்பிக்கப் பார்ப்பதை அந்தக் கடவுள்களும் அவர்களை வழிபடுகிற, வழிபடாத மக்களும் நிச்சயம் மன்னிக்க மாட்டார்கள். 2021ல் பாஜகவின் பக்கத்தில் செல்பவர்கள் கூட தண்டிக்கப்படுவார்கள்.