பிரசாந்த் பூஷணை தண்டிப்பது
கருத்துரிமையை, நீதித்துறை சுதந்திரத்தை,
ஜனநாயகத்தை தண்டிப்பதாகும்
எஸ்.குமாரசாமி
பிரசாந்த் பூஷண் நீதிமன்ற அவமதிப்பு குற்றம் புரிந்தார் என ஆகஸ்ட் 14 அன்று முடிவுக்கு வந்த நீதிபதி அருண் மிஷ்ரா தலைமையிலான உச்சநீதிமன்ற அமர்வம், ஆகஸ்ட் 20, 24, 25 விசாரணை நாட்களில் தண்டனை பற்றி முடிவெடுக்காமல், நாள் குறிப்பிடாமல் வழக்கை ஒத்தி வைத்துள்ளது. அவருக்கு எதிரான வேறு ஒரு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு, வேறு ஓர் அமர்வத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. நீதிபதி அருண் மிஷ்ரா செப்டம்பர் 2, 2020ல் ஓய்வு பெறுகிறார்.
ஊடகச் செய்திப்படி 25.08.2020 அன்று உச்சநீதிமன்ற விசாரணையில் நடந்த விசயங்கள் கவனிக்கத்தக்கவை. நீதிபதி அருண் மிஷ்ரா, மன்னிப்பு கேட்பதில் என்ன தவறு, மன்னிப்பு கேட்பது ஒரு பாவமா, மன்னிப்பு கேட்பது குற்றத்தை ஒப்புக்கொண்டதாகுமா, மன்னிப்பு என்ற மந்திரச் சொல் குணப்படுத்தும், உங்களால் மன்னிப்பு கேட்க முடியும் என்றால், நீங்கள் மகாத்மா காந்தி வகைப்பட்டவர் ஆகிவிடுவீர்கள் என்று சொல்லியுள்ளார். நீதிபதி பி.ஆர்.கவாய், மகாத்மா காந்தி அடிக்கடி உண்ணாவிரதம் இருந்தார், அவர் தம் பாவங்களுக்காக அல்லாமல் பிறர் பாவங்களுக்காகவே உண்ணாவிரதம் இருந்தார் என்று சொல்லியுள்ளார். நீதிபதி முராரி எதுவும் சொல்லவில்லை.
மன்னிப்பு கேட்டு பிரச்சனையை முடித்துக் கொள்ளச் சொல்லி, மன்னிப்பின் உன்னதத் தன்மையை நீதிபதிகள் ஏற்றிப் போற்றியுள்ளனர். விவாதத்தில், 'அவமதிப்பு குற்றம்' பின்னுக்குச் சென்று, மன்னிப்புடன், நீதிமன்றமும் பிரசாந்த் பூஷணும் பிரச்சனையில் இருந்து செப்டம்பர் 2க்கு முன் வெளியே வர வழி ஏதும் உண்டா என காணும் முயற்சி தெரிகிறது. பிரசாந்த் பூஷண் கருத்துரிமையை விட்டுத்தர முடியாது என்றும் தான் நீதித்துறையின் சுதந்திரத்துக்காக, நீதித்துறையை வலுப்படுத்த வேண்டும் என்பதற்காக போராடும்போது, கருணை, மன்னிப்பு போன்ற விசயங்கள் வேண்டாமே என்றும் சொல்லியுள்ளார். அவர் சார்பாக வாதாடிய மூத்த வழக்கறிஞர் ராஜீவ் தவான், குற்றத்தை ஒப்புக்கொள்ளாத ஒருவரை மன்னிப்பு கேட்குமாறு நிர்ப்பந்திக்க வேண்டாம் என்று சொல்லியுள்ளார்.
இரண்டு சுட்டுரை பதிவுகளால் உச்சநீதிமன்ற ஆளுமையும் மாண்பும் கவுரவமும் மக்கள் மனங்களில் சரிந்துவிட்டதா?
'முகக்கவசம் இல்லாமல், தலைக்கவசம் இல்லாமல் நாக்பூர் ராஜ்பவனில் பாஜககாரர் ஒருவரின் ரூ.50 லட்சம் மதிப்புடைய ஹார்லி டேவிட்சன் இரு சக்கர வாகனத்தை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி போப்டே ஓட்டுகிறார். நீதிமன்றம் முடக்கப்பட்டுள்ளதால், நீதி கேட்டு அடிப்படை உரிமைகளுக்காக குடிமக்கள் நீதிமன்றத்தை அணுக முடியாத நிலையில் இவ்வாறு செய்துள்ளார்'.
'வரலாற்றாளர்கள் கடந்த ஆறு ஆண்டுகளை காணும்போது, முறைப்படி நெருக்கடி நிலை அறிவிக்கப்படாமலே இந்தியாவில் ஜனநாயகம் எப்படி அழிக்கப்பட்டது என்பதையும், அதில் உச்சநீதிமன்றத்தின், குறிப்பாக, கடைசியாக பதவியில் இருந்த நான்கு தலைமை நீதிபதிகளின் பங்கையும் குறித்துக்காட்டுவார்கள்'.
பிரசாந்த் பூஷணின் இந்த சுட்டுரை பதிவுகள் நீதிபரிபாலன முறைக்கு இழுக்கு ஏற்படுத்தியுள்ளன, உச்சநீதிமன்றம் என்ற நிறுவனத்தின், குறிப்பாக, தலைமை நீதிபதி என்ற பதவியின் கவுரவத்தை, ஆளுமையை சீர்குலைத்துள்ளன என்றும் பிரசாந்த் பூஷண் மீதான நீதிமன்ற அவமதிப்பு குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது என்றும் ஆகஸ்ட் 14 அன்று தீர்ப்பளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்பின் பத்தி 73ல் நீதித்துறை மீதான நம்பிக்கையை சேதப்படுத்துவது, வெறுப்பு தாக்குதல் மூலம் நீதிபதிகளை சோர்வுறச் செய்வது என்ற திட்டமும் சதியும் இருப்பதாகக் குறிப்பிடப்பட்டது.
தீர்ப்பின் மீது மறுஆய்வு மனுவை செப்டம் பர் 14 வரை தாம் தாக்கல் செய்ய சட்டத்தில் இடம் உண்டு என்பதால் அது வரை தண்டனை விசயத்துக்கு செல்ல வேண்டாம் என்ற பிரசாந்த் பூஷணின் கோரிக்கை ஏற்கப்படாமல்தான், ஆகஸ்ட் 20, 24, 25 தேதிகளிலான விசாரணை நடந்தது.
உச்சநீதிமன்றம் சரியாக முடிவு செய்துள்ளதா? இப்போது இந்த வழக்கு விசாரணை தேவைதானா? உச்சநீதிமன்றம் மிகவும் அவசரப்பட்டுவிட்டதா?
இந்த கேள்விகள் ஒன்றோடொன்று தொடர்புடையவை. இப்போது அவசரஅவசரமாக எதற்கு இந்த விசாரணை, என்ன அவமதிப்பு நடந்துவிட்டது, எதற்கு தண்டனை என உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் பத்துக்கும் மேற்பட்டவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். முன்னாள் தலைமை நீதிபதி லோதா, வேண்டாம் இந்த அவசரம், திறந்த நீதிமன்றங்கள் செயல்படும்போது இந்த விசாரணையை பார்த்துக் கொள்ளலாம் என்றார். இந்திய ஒன்றியத்தின் தற்போதைய தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், முன்னாள் தலைமை வழக்கறிஞர் சோலி சொராப்ஜி ஆகி யோரும் தண்டனை வேண்டாம் என்று சொல்லியுள்ளார்கள். உச்சநீதிமன்றம் தமது முந்தைய தீர்ப்புகளில், தலைமை வழக்கறிஞர்கள் தமது நண்பர்கள், மெய்ஞானிகள் மற்றும் வழிகாட்டிகள் என்று குறிப்பிட்டுள்ளது.
காழ்ப்புணர்ச்சி இல்லாமல், சொல்வது உண்மைதான் என்ற நம்பிக்கையுடன் முன்வைக்கப்படும் விமர்சனங்கள் நீதிமன்ற அவமதிப்பாகாது. விருப்பு வெறுப்பு இல்லாமல் மூன்று தலைமை நீதிபதிகளின் கால நடப்புகளை பரிசீலிப்போம்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா
இவர் காலத்தில், மருத்துவ கல்லூரி நடத்த, அந்த கல்லூரிக்கு கூடுதல் இடங்கள் ஒதுக்க, தலைமை நீதிபதி வரை சரிக்கட்டி விட்டோம் என்று சொல்லி சில பரிமாற்றங்கள் நடந்ததாக உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஒருவர் குற்றவியல் வழக்குக்கு ஆளாகவில்லையா?
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு அடுத்த பணிமூப்பு நிலையில் இருந்த நீதிபதிகள் செல்லமேஸ்வர், மதன் பி.லோகுர், குரியன் ஜோசப், ரஞ்சன் கோகாய் ஆகியோர் 12.01.2018 அன்று, அச்சு மின்னணு ஊடகங்கள் மூலம் இந்திய நாட்டு மக்களிடம் நேரடியாக தலைமை நீதிபதியால் நீதித்துறை சுதந்திரத்துக்கு ஆபத்து, அவர் அரசுக்கு சார்பாக அரசு தொடர்புடைய முக்கிய வழக்குகளை பணிமூப்பில் தங்களுக்கு இளையவரான அருண் மிஷ்ராவுக்கு ஒதுக்குவதாக குற்றம் சுமத்தவில்லையா? நீதிபதி செல்லமேஸ்வர் இதை சொல்லாமல் இருந்தால், பின்னாளில் தாம் தமது ஆன்மாக்களை விற்றுவிட்டோம் என்ற பேச்சுக்கு ஆளாவோம் என்று சொன்னார்தானே?
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, அருண் மிஷ்ரா ஆகியோர் மீது பதவியில் இருந்த மூன்று மூத்த உச்சநீதிமன்ற நீதிபதிகள் பகிரங்கமாக மக்கள் மன்றத்தில் புகார் சொன்ன போது நாடும் ஊடகங்களும் கொண்டாடின. நீதித்துறைக்குள்ளிருந்தே வந்த விமர்சனம், நீதித்துறையை வலுப்படுத்தும் என்ற நம்பிக்கையே முன்னிறுத்தப்பட்டது.
தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய்
இப்போது அவர் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர். அடுத்து அவரை பாஜக அசாம் முதலமைச்சர் வேட்பாளராக அறிவிக்குமா என ஊடகங்களில் விவாதங்கள் நடக்கின்றன. இவர் காலத்தில்தான் மூடிய உறை நீதிபரிபாலன முறை அமலுக்கு வந்தது. ரபேல் விமான பேர ஊழல், சிபிஅய் தலைவர் நியமன முறைகேடு என்ற முக்கிய வழக்குகளில் மூடிய உறை நீதிபரிபாலனத்தை இவர் பின்பற்றியது நாடெங்கும் விமர்சிக்கப்பட்டது.
இவரது தலைமையிலான ஓர் அமர்வம் சவும்யா என்ற ஒரு பெண்ணின் வழக்கில் வழங்கிய தீர்ப்பு பற்றி முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு கடுமையாக விமர்சித்தபோது, அவரை உதவ அழைத்து, தாம் தீர்ப்பளித்த வழக்கு தொடர்பாக தாம் அமர்ந்த அமர்வம் மூலமே நீதிமன்ற அவமதிப்பு வழக்கை இவர் தொடர்ந்தபோது, தமது வழக்கில் தாமே நீதிபதியாகக் கூடாது என்ற கோட்பாட்டை மீறிய விமர்சனம் எழவில்லையா?
தம் மீது உச்சநீதிமன்ற பெண் ஊழியர் பாலியல் துன்புறுத்தல் புகார் தந்தபோது, விடு முறை நாளான ஒரு சனிக்கிழமை, தலைமை நீதிபதி அமரும் நீதிமன்றத்தில் இருந்து புகார் கொடுத்தவரை குற்றவாளி என இவர் முத்திரை குத்தினார். உச்சநீதிமன்றத்துக்கு, பாதிக்கப்பட்டவர் மீது பழி சுமத்தும் அவப் பெயர் வந்தது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதி அருண் மிஷ்ரா, உச்சநீதிமன்றத்துக்கு எதிராக பெரிய சதி நடக்கிறது, கொலை பாதகத்திலும் ஈடுபடுவார்கள், சதியின் அடியாழம் வரை சென்று உண்மையை நாட்டுக்கு தெரிவிப்போம் என்று பகிரங்கமாக சூளுரைத்தார். கடைசியில் புலி அல்ல, எலி கூட இன்று வரை பிடிபடவில்லை. அந்தப் பெண் ஊழியர் பின் சம்பளத்துடன் மீண்டும் வேலைக்கு எடுக்கப் படுவதும் அவர் மீது போடப்பட்ட குற்றவியல் வழக்குகள் தள்ளுபடி செய்யப்படுவதும்தானே நடந்தது? மனிதர்கள் பொய் சொல்லலாம், சூழ் நிலைகள் பொய் சொல்லாது என்ற கோட்பாடுபடி, இந்த விசயத்தில் என்ன முடிவுக்கு வருவது? அந்தப் பெண் ஊழியர் தந்த புகார் மீது, உச்சநீதிமன்றம் ஒரு பணியிடம் என்ற விதத்தில், விசாகா தீர்ப்பை மீறிதானே விசாரணை நடந்தது?
தலைமை நீதிபதி போப்டே
இவரது பதவி காலத்தில், உச்சநீதிமன்றம் உயிர்வாழும் உரிமை தொடர்பான ஆட்கொணர்வு மனுக்கள் கருத்து சுதந்திரம் அடிப்படை உரிமைகள் அரசியல் சாசன அடிப்படை இயல்பு தொடர்பான வழக்குகள் ஆகியவற்றுக்கு உரிய அவசரமோ அக்கறையோ காட்டவில்லை என்ற பகிரங்கமான விமர்சனங்கள் எழுந்துள்ளனதானே? இடம்பெயர் தொழிலாளர்கள் கண்ணீர் தட நீண்ட பயணம், காஷ் மீர் துண்டாடப்பட்டது, குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பான வழக்கு ஆகியவற்றுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படவில்லை என்ற வலுவான விமர்சனமும் எழுந்துள்ளதுதானே?
மோடி அரசு அரசியலமைப்புச் சட்டத்தை, ஜனநாயகத்தை அழிக்கிறது, உச்சநீதிமன்றம் அதனை தடுக்காமல் வேடிக்கை பார்ப்பது அதற்கு துணைபோவதுதானே என்ற கருத்து ஜனநாயகபூர்வமான அரசியல் விமர்சனமே.
நீதித்துறைக்கு, நீதித்துறை சுதந்திரத்தை விரும்புவர்களின் பரிசீலனைக்காக
அமர்வங்களுக்கு வழக்குகளை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ஒதுக்கியதிலேயே, நீதிபதி அருண் மிஷ்ரா சர்ச்சைக்குள்ளானவர். அப்போதே சர்ச்சைக்குரிய வழக்குகளை நடத்தியவர் பிரசாந்த் பூஷண்.
நீதிபதி அருண் மிஷ்ரா உச்சநீதிமன்ற நீதிபதியாக இருக்கும்போதே மோடியை ஒரு நாயகனாக பொது வெளியில் வானளாவ புகழ்ந்துள்ளார். பிரசாந்த் பூஷண், மோடி மற்றும் மோடி அரசின் கடுமையான விமர்சகர். அவரது இரண்டாவது சுட்டுரையின் முதல் பகுதி, இந்தியாவில் மோடி ஆட்சியின்போது அறிவிக்கப்படாத அவசரநிலை உள்ளதாகச் சொல்கிறது. அதன் இரண்டாம் பகுதி இந்த ஜனநாயகப் பறிப்பு நடக்கும்போது, உச்சநீதிமன்றம் கையறு நிலையில் இருப்பதற்காக வருத்தப்படுவதன் வெளிப்பாடாக உள்ளது. பிரசாந்த் பூஷண் விசயத்தில் நீதிபதி அருண் மிஷ்ராவுக்கு ஒரு சார்பு தன்மை இருப்பதாக மற்றவர் நம்ப வாய்ப்பு இருப்பதாலேயே, அவர் இந்த வழக்கை விசாரிக்காமல் தவிர்த்திருக்க வேண்டும். செப்டம்பர் 2 பணி ஓய்வுக்கு முன் அவசரஅவசரமாய் தண்டனையா என்ற பேச்சு எழாமல் தவிர்த்திருக்க வேண்டும். தீர்ப்பில் பிரசாந்த் பூஷணின் வாதங்களை கணக்கில் கொண்டு பதில் சொல்லியிருக்க வேண்டும். இந்தப் பின்னணியில் மறுபரிசீலனை மனு, தண்டனை ஆகியவை நீதிபதி அருண் மிஷ்ரா இடம்பெறாத அமர்வால் விசாரிக்கப்படுவது தான் நல்லது.
உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் முன்வைக்கிற ஒரு கருத்து முக்கியமானது. குடிமக்கள் அனைவருக்கும் குற்றம், தண்டனை என்று வரும்போது, மேல்முறையீடு செய்யும் உரிமை உள்ளது. உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை உச்சநீதிமன்றமே விசாரித்து குற்றம் நிரூபிக்கப்பட்டதாகச் சொல்லி தண்டனை வழங்கும்போது, மேல்முறையீடு வாய்ப்பு இல்லாமல் போகிறது. இது அரசியலமைப்புச் சட்ட அடிப்படைக்கு உகந்ததா என்பதை ஓர் அரசியலமைப்புச் சட்ட அமர்வம் தீர்மானிக்க வேண்டும்.
கடந்தகால வெளிச்சத்தில்
1951
இடஒதுக்கீடு தொடர்பான முதல் அரசியலமைப்புச் சட்ட திருத்த மசோதா மீது 18.05.1951ல் நாடாளுமன்றத்தில் விவாதம் வந்தது. அப்போது சம்பகம் தொரைராஜன், வெங்கட்ரமணா வழக்குகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் முழுமையாக திருப்தியில்லாதவை (அட்டர்லி அன்சேடிஸ்பேக்ட்ரி) என்று டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டார். உச்சநீதிமன்றம் பற்றி இப்படிச் சொல்வது தவறு என அந்த அவை அவரை விமர்சித்தது. டாக்டர் அம்பேத்கர் பதில் சொன்னார்: 'நான் வழக்கறிஞராக பணியாற்றிய காலத்தில், நீதிபதிகளிடம் உங்க ளின் தீர்ப்புகள் என்னைக் கட்டுப்படுத்தும் என்பதாலேயே நான் உங்கள் தீர்ப்புகளை மதிப்புக்குரியவையாக கருத வேண்டும் என்பது கிடையாது. நீதிபதியின் தீர்ப்பு தவறு என்று நீதிபதியிடம் சொல்லும் உரிமை ஒவ்வொரு வழக்கறிஞருக்கும் உண்டு. நான் அந்த உரிமையை விட்டுக் கொடுக்க முடியாது'.
1981
நீதித்துறை சீர்திருத்தங்களின் அணுகுமுறை தொடர்பாக என்ற கருத்தரங்கில் 1981ல் பேசிய நீதிபதி கிருஷ்ணய்யர் நம் நாட்டில் ஏசுநாதர்கள் சிறையில் அடைக்கப்படுவதும் நீதித்துறையின் மூலமே கூட நடக்கலாம், எல்லா நாகரிக நடத்தையில் இருந்தும் சுதந்திரமாக நம் நீதித்துறையின் அணுகுமுறை உள்ளது, வெளிப்படையாக சொல்ல வேண்டும் என்றால் இந்தியாவில் நீதித்துறை என ஒன்றே இல்லை எனக் குறிப்பிட்டார். (உயர்மட்ட நீதிபதி எவரும் இதுவரை பிடிக்கப்பட்டு தண்டிக்கப்படவில்லை என்பதையும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார்).
நீதிபதி கிருஷ்ணய்யர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு விசாரணை கேரள உயர்நீதிமன்றம் முன்பு நடைபெற்றது. 'அனுமதிக்கத்தக்க வரம்புகளுக்குள் நீதிமன்றங்களை விமர் சிப்பது, நீதிமன்றங்களின் ஆளுமையை தாழ்த்தாது. ஜனநாயக சகாப்தத்தில் எந்த நிறுவனமும் நேர்மையான விமர்சனத்துக்கு அப்பாற் பட்டதல்ல. இதற்கு நீதிமன்றமும் விதிவிலக்கல்ல. நீதிமன்றங்களின் செயல்பாடு பற்றி நீதி பரிபாலன முறை பற்றி கருத்துகள் சொல்லப்படும்போது, சற்றும் சகிக்க முடியாத விமர்சனங்களும் வரும், சிறப்பான செயல்பாடுகளுக்காக பூங்கொத்துகளும் வரும். புகழ்ச்சி கண்டு பேரானந்தம் அடைவதோ, பாதகமான விமர்சனம் கண்டு தர்மசங்கடப்படுவதோ தேவை இல்லை'.
'அந்த மனிதரின் மகத்துவம் பற்றி பிரமித்து நின்று தீர்ப்பு வழங்க வேண்டியதில்லை. அதே நேரம் பேசியவரின் பின்னணியில் இருந்து பேசியதை பிரித்தும் பார்க்க முடியாது'.
கேரள உயர்நீதிமன்றம் அவர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கை நிதானத்துடனும் முதிர்ச்சியுடனும் நிராகரித்தது.
1987
இந்திய ஒன்றியத்தின் சட்டம், நீதி, கம்பனி துறை அமைச்சராக இருந்த முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியுமான பி.வி.சிவசங்கர் அய்தராபாத் பார் கவுன்சிலில் 28.11.1987 அன்று பேசினார்: 'கேசவானந்தா பாரதி போன்ற மடாதிபதிகள், கோலக்நாத் போன்ற ஜமீன்தார்கள் அனுதாபம் பெறும் இடம் இந்தியாவில் எங்கு உள்ளது என்று கேட்டால் அது உச்சநீதிமன்றத்தில் உள்ளது. கூப்பர் வழக்கில், இந்த நாட்டின் மேட்டுக்குடி கலாச்சார பிரதிநிதிகள் மற்றும் சுதந்திரத்தின் பயனை அனுபவிக்கும் தொழிலதிபர்களால் ஆதரிக்கப்பட்ட வங்கி உடைமையாளர்களான கொழுத்த பணக்காரர்கள் உச்சநீதிமன்ற தலையீட்டால் கூடுதல் நஷ்ட ஈடு பெற்றனர். அந்நிய செலாவணி சட்ட மீறல் செய்பவர்கள், மனைவியை தீயிட்டு எரிப்பவர்கள், பிற்போக்காளர் கும்பல்கள் உச்சநீதிமன்றத்தில் புகலிடம் காண்கின்ற னர்'. இந்த உரை பற்றி உச்சநீதிமன்ற அவமதிப்பு வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி சப்யாச்சி முகர்ஜி, முன்னாள் சட்ட அமைச்சர் இன்னமும் நிதானமான மொழியில் பேசியிருக்கலாம், உச்சநீதிமன்றத் தீர்ப்பால் சமூகவிரோதிகளும் குற்றவாளிகளும் பயன் பெறுகிறார்கள் என்றால் அதற்கு சட்டங்களும் சட்டங்களில் உள்ள ஓட்டைகளுமே காரணம், இதுபோன்ற விமர்சனங்கள் எங்களை முடக்கிவிடாது என்று பதில் சொன்னார். 'நீதிமன்றங்களின் கவுரவத்திலும் சட்டத்தின் மாட்சிமையிலும் ஓர் அரிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை நாம் வெளிப்படையாகவும் நியாயமாகவும் ஒப்புக்கொள்ள வேண்டும். அது அரசியல்வாதிகளின், அமைச்சர்களின் அவதூறு கூற்றுகளால்தான் ஏற்பட்டது என்று சொல்ல முடியாது. அது தேவை உடையவர்களுக்கு நீதிமன்றங்கள் விரைந்தும் பொருளுள்ள விதத்திலும் நீதி வழங்காததால் ஏற்படுகிறது. பலர் இன்று தீர்வு இல்லாத தீமையால் துன்பப்படுகிறார்கள். இதற்கு தீர்ப்பு வழங்கும் நீதிமன்றங்களால் ஈடு கொடுக்க முடியவில்லை. நீதிமன்ற நடைமுறைச் சிக்கல்கள், நமது நீதி முறை மீதான நம்பிக்கையை அரிக்க வைக்கிறது. இந்த விமர்சனத்தை நீதிபதிகளும் வழக்கறிஞர்களும் தங்கள் மீதானதாக கருத வேண்டும். தேடும்போது, வெளிச்சத்தை நம்மை நோக்கி திருப்ப வேண்டும்'.
நம்பூதிரிபாட் வழக்கில், நீதிபதிகளின் இயல்பான மேல்தட்டு வர்க்க ஆதரவு பற்றிய விமர்சனத்தை நீதிமன்ற அவமதிப்பாகக் கருதி ரூ.1,000 அபராதம் என தண்டனை விதித்த நீதிமன்றம், திரு.சிவசங்கர் வழக்கில், அவர் தமது மொழியை மிதமாக்கி விவரங்களை கூடுதல் அழுத்தத்துடன் வலுவுடன் தந்திருக்கலாம் என்று சொல்லி முடித்துவிட்டார்கள். நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. (காண்க: பி.என்.தூதா எதிர் பி.வி.சிவசங்கர் மற்றும் இதரர். 15.04.1988. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சப்யாச்சி முகர்ஜி ரங்கநாதன் தீர்ப்பு).
1989
தலைமை நீதிபதி இ.எஸ்.வெங்கட்ராமய்யா பணி ஓய்வு பெறும் முன்பு குல்தீப் நய்யாருக்கு 17.12.1989ல் ஒரு பேட்டி தந்தார். 'ஒவ்வொரு உயர்நீதிமன்றத்திலும் ஒவ்வொரு மாலைப் பொழுதும் ஏதாவது வழக்கறிஞர் வீட்டிலோ அந்நிய தூதரகத்திலோ விருந்துண்ண மதுவருந்த நான்கு அல்லது அய்ந்து நீதிபதிகளாவது செல்கிறார்கள். இவர்கள் எண்ணிக்கை 90 வரை இருக்கும். 22 உயர்நீதிமன்றங்களிலும் நீதிபதிகளின் உறவினர்கள் நன்றாக சம்பாதிக்கின்றனர், அவர்கள் நேரடியாக நடத்தாத வழக்குகளிலும் தீர்ப்புகள் மீது செல்வாக்கு செலுத்துவதாக புகார்கள் உள்ளன'. உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி வெங்கட்ராமய்யா குல்தீப் நய்யார் மீதான நீதிமன்ற அவமதிப்பை மும்பை உயர்நீதிமன்றம் 02.03.1990ல் தள்ளுபடி செய்தது. நீதிபதிகள் பெயர் சொல்லாமல் பொதுவாகச் சொன்னதால் எல்லோர் பெயரிலும் சந்தேகம் வருமே என்ற வாதத்துக்கு அந்த நீதிமன்றம் ஒரு சீனப் பழமொழியை பதிலாக தந்தது. 'நீங்கள் நேராக இருந்தால் உங்கள் நிழல் கோணலாக இருப்பது பற்றி ஏன் கவலைப்படுகிறீர்கள்?'
2001
நவம்பர் 26, 2001 சட்ட நாள் அன்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பரூச்சா, உச்சநீதிமன்ற புல்வெளியில் இந்தியாவில் 20% நீதிபதிகள் ஊழலுக்கு ஆளானவர்கள் என்றார்.
சொன்னவர்கள் எல்லோருமே, நீதித்துறை சுதந்திரமாக வலுவாக துணிவோடு இருக்க வேண்டும் என்று கருதியே பேசியவர்கள். பிரசாந்த் பூஷண், அவருக்காக வழக்கு நடத்தும் துஷ்யந்த் தவே, ராஜீவ் தவான் ஆகியோர் சொல்வதுபோல் காரசாரமாக அறச்சீற்றத்தோடு வாதாடும்போது கருத்து சொல்லும்போது அவற்றில் காழ்ப்புணர்ச்சி ஏதுமில்லை. தனிப்பட்ட நீதிபதிகளை காயப்படுத்தும் முயற்சியும் இல்லை. நீதித்துறையின் சுதந்திரமான செயல்பாட்டுக்கான குரல்கள் தண்டிக்கப்படக் கூடாது.
இந்திய ஜனநாயகத்துக்கு அரசியலமைப்புச் சட்ட அடிப்படை உரிமைகளுக்கு இந்திய மக்களுக்கு கொடும்காயங்கள் ஏற்பட்டுள்ளன. நீதித்துறை இந்த காயங்களுக்கு மருந்து போட, அவசர சிகிச்சை தர கவனம் செலுத்த வேண்டும். ஸ்டெர்லைட் ஆலை மூடியது சரியே என்று சொன்ன சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, தப்ளிக் அமைப்பினர் மீதான வழக்குகளை கடும் கண்டனத்துடன் தள்ளுபடி செய்த மும்பை உயர்நீதிமன்றத் தீர்ப்பு, வதைபடும் இந்திய மக்களுக்கு மருந்து போல் அமைந்தன. மக்கள் மீது பரிவுடன் கூருணர்வுடன் நீதித்துறை விரைந்து செயல்பட வேண்டும்.
தேசத் துரோகம், அவதூறு பற்றிய இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள், நீதிமன்ற அவமதிப்பை குற்றமாக்கி தண்டிப்பது ஆகியவற்றுக்கு இனி அருங்காட்சியகத்தில் மட்டுமே இடமுண்டு என்ற நிலை வருவதுதான் நாட்டுக்கும் மக்களுக்கும் நல்லது.
பின்செய்தி: அந்த ஒரு ரூபாய் தண்டனையை தான் ஏற்றுக்கொள்வதாக பிரசாஷ்ந்த பூஷண் தெரிவித்துள்ளார்.