COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

 பன்னாட்டு இந்நாட்டு நிறுவன தொழிலாளர்களை ஒன்றிணைக்கும் 

மேக்னா தொழிலாளர்களின் போராட்டம்

- ராஜேஷ்


கொரோனாவை காரணம் காட்டி ஜனநாயகத்தை மதிக்காமல், நாடாளுமன்ற மாண்புகளை குழி தோண்டி புதைத்து தொழிலாளர் விரோத, விவசாய விரோத, மக்கள் விரோத சட்டங்களை கொண்டு வருவது என பிரதமர் மோடி

நாட்டை தனியாரிடம் தாரை வார்த்து வருகிறார். இந்தச் சூழலில் காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடம் மேக்னா தொழிலாளர்கள் தொழிற்சங்க உரிமைக்காக 17.09.2020 முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேக்னா தொழிலாளர்கள் தங்களின் நியாயமான போராட்டத்திற்கு ஆதரவாக இந்த பகுதியில் உள்ள தோழர்களிடம் ஆதரவு கேட்டு சென்றனர். 30.10.2020 அன்று வேலைநிறுத்தப் போராட்டத்தின் 44வது நாளில் பல்வேறு தொழிற்சாலைகளில் இருந்து சுமார் 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மேக்னா தொழிலாளர்களின் போராட்ட பந்தலில் ஒன்று திரண்டனர். மேக்னா தொழிலாளர்களின் போராட்டத்தின் மூலம் இந்த பகுதியில் உள்ள தொழிலாளர்களுக்கு, இந்த கொரோனா காலத்திலும் போராட முடியும் என்றும், போராட்டத்தின் மீதான நம்பிக்கையையும், தொழிலாளர் ஒற்றுமையும் கட்டமைக்க முடியும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது.
மேக்னா தொôழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறும் பணி இடமாற்றத்தை ரத்து செய்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டுமென்றும் ஹ÷ண்டாய், நிசான், ஃபோர்டு போன்ற பல்வேறு தொழிற்சாலை தொழிற்சங்கங்கள், பணியாளர் பணி குழுக்களிடமிருந்து தொழிலாளர் துறை செயலருக்கும் தொழிலாளர் ஆணையருக்கும் கடிதம் அனுப்பியுள்ளனர்   
மேக்னா தொழிலாளர்களின் கோரிக்கையை நிறைவேற்றுமாறும் பணி இடமாற்றத்தை ரத்து செய்து வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்றும் பகுதி மக்களின் கோரிக்கை மனுவில் 15000க்கும் மேற்பட்டோர் கையொப்பம் இட்டுள்ளனர். 30.11.2020 அன்று போராட்டம் 75வது நாளை எட்டியது. மேக்னா நிறுவனத்தின் தொடர்ச்சியான  ஆணவப் போக்குக்கு எதிராகவும் தொழிலாளர் போராட்டத்துக்கு ஆதரவாகவும் நிசான் ஹ÷ண்டாய் கேட்டர்பில்லர் சான்மினா, மதர்சன், ரானே, ரானே மெட்ராஸ், யமஹா, ஏசியன் பெயிண்ட், ஆக்சில் இந்தியா, பிபிஜி ஏசியன் பெயிண்ட், சியோன் இ அவா, பின்ஸ்டார், விப்ரோ, நிப்கோ, மேகல் டெக், கப்பாரோ, ஆகிய ஆலைகளின் தொழிற்சங்க நிர்வாகிகள், தொழிலாளர்கள், தமிழ்நாடு டாஸ்மாக் விற்பனையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் என 500 பேர் கலந்து கொண்ட கூட்டத்தில் மேக்னா தொழிலாளர் போராட்டத்துக்கு ஒருமைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
நிசான் தொழிலாளர்கள் பெரும் எண்ணிக்கையில் பேரணியாக வந்து கலந்து கொண்டனர். கற்பி, அமைப்பாகு, புரட்சி செய் என்று அம்பேத்கர் சொன்னது போல் நாம் போராட்டங்களில் கற்றுவிட்டோம், இப்போது தொழிற்சாலை கடந்து ஒன்றினைந்து உள்ளோம், இனி புரட்சி செய்ய வேண்டும் என்று வலியுறுத்தி நிசான் தொழிற் சங்கத்தின் பொருளாளர் தோழர் ஜேம்ஸ் ராஜ் உரையாற்றினார்.
இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநிலச் செயலாளர் தோழர் ஜேம்ஸ், மக்களுக்கான இளைஞர்கள் தோழர் வே.சீதா கண்டன உரையாற்றினர். உழைக்கும் மக்கள் மாமன்றத்தின் மாநிலத் துணைத் தலைவர் சம்பத், மேக்னா போராட்டத்தை பார்க்கும் போது, 1970களில், 1980களில் நடைபெற்ற தொழிலாளர்கள் போராட்டங்கள் போல் உள்ளது, நீண்ட இடைவெளிக்குப் பின்பு தொழிலாளர்கள் தொழிற்சாலையை கடந்து ஒன்று கூடியுள்ளனர். இது மேலும் பலப்படவேண்டும் என்றார்.
 இறுதியாக சிறப்புரையாற்றிய எல்டியுசி மாநிலச் செயலாளரும் ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் மாநிலச் செயலாளருமான தோழர் கே.பாரதி, மேக்னா போராட்டத்திற்கு ஆதரவு தந்து தொழிலாளர் வர்க்கம் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்துடன் இங்கு தொழிலாளர்கள் ஒன்று கூடியுள்ளனர் என்றார்.
எல்டியுசி சார்பாகவும் மேக்னா போராட்ட ஆதரவு கூட்டத்தின் சார்பாகவும் பாசிச மோடி அரசு கொண்டு வந்துள்ள விவசாய விரோத மசோதாக்களுக்கு எதிராக டெல்லியில் நடைபெறும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கப்பட்டது.
ஏழு தமிழர் விடுதலைக்கான சட்டமன்ற தீர்மானத்திற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்க கோரி, கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக சென்னை அம்பத்தூரில்,  28.11.2020 முதல் காலவரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்திய, பிரிக்கால் தொழிலாளர் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனை பெற்று உயர் நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட போராளி தோழர் மா.சம்பத்குமார் மற்றும் ஏசியன் பெயிண்ட் நிர்வாகத்தால் பழிவாங்கப்பட்டு பணி நீக்கம் செய்யப்பட்ட, மக்களுக்கான இளைஞர்கள் தோழர் ஜே.ஆண்டனி தினகரன் இருவரையும், கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி மற்றும் தோழர்கள் கே.சுரேஷ், ஆர்.மோகன் ஆகியோரையும் காவல்துறை கைது செய்ததற்கு எதிராக அனைத்து தொழிலாளர்கள் சார்பாகவும் கூட்டத்தின் சார்பாகவும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்டு காவல் துறை காவலில் வைக்கப்பட்ட கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் குமாரசாமி தொலைபேசி மூலம் கூட்டத்தில் உரையாற்றினார். நவீன கொத்தடிமை கூடாரமான திருபெரும்புதூரில்தான் பன்னாட்டு இந்நாட்டு முதலாளிகள் கொள்ளையடிக்கிறார்கள், இம்மென்றால் சிறை வாசம் ஏனென்றால் வனவாசம் என்று பிரிட்டிஷ் காலத்தில் இருந்த நிலை இன்று அம்பானி, அதானி, ஹ÷ன்டாய் ராஜ்ஜியத்திலும் நடந்து கொண்டிருக்கிறது, தமிழ்நாட்டை தாக்கும் புயல்கள் கரையில் இருந்து தரையை நோக்கி வீசும், திருபெரும்புதூர், இருங்காட்டுகோட்டை, ஒரகடம் பகுதி தொழிலாளர்களின் போராட்டப் புயல் நிச்சயம் வலுக்கும், இந்த போராட்டப் புயல் வலுக்கும்போது, குறுக்கே நிற்கிற முதலாளித்துவ ஆதிக்கத்தை நிலை நிறுத்தப் பார்க்கிற, தூக்கி நிறுத்தப் பார்க்கிற அத்தனை சக்திகளும் வங்க கடலில் வீசி எறியப்படுவார்கள் என்றார். கடந்த காலம் முதலாளிகளுடையது, மூலதன கூட்டத்தினருடையது, வருங்காலம் தொழிலாளர்களுடையது என்று சொன்ன தோழர் குமாரசாமி, தொழிலாளர் ஒற்றுமை வெல்ல போராட்டம் வெல்ல வாழ்த்துகள் தெரிவித்தார். 

Search