COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

 

தன்னிறைவு 3.0 அறிவிப்புகள்

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கானவை

தன்னிறைவு பதிப்பு 3.0 என்று அடுத்தச் சுற்று ஏமாற்று அறிவிப்புகள் தந்தார் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன். முதல் இரண்டு பதிப்புகளால் பொருளாதாரம் மீளவில்லை. சாமான்யர் வாழ்வும் மாறவில்லை. முதலாளிகளின் கருவூலங்கள் நிறைந்தன.

அம்பானியின் சொத்து மதிப்பு பல மடங்கு அதிகரித்து அவர் ஆசியாவின் முதல் பணக்காரரானார். அதானியின் சொத்து மதிப்பும் அதிகரித்தது. தன்னிறைவு பதிப்பு 3.0  என்ன வைத்திருக்கிறது?

வேலை வாய்ப்பை பெருக்குகிறார்களாம். அதற்காக, அக்டோபர் 1க்குப் பிறகு பணிக்கமர்த்தப்படும், ரூ.15,000க்கும் குறைவாக கூலி பெறும் தொழிலாளிக்கு நிறுவனம் செலுத்த வேண்டிய வருங்கால வைப்பு நிதி 12% மற்றும் தொழிலாளி செலுத்த வேண்டிய பங்கு 12% சேர்த்து அரசு செலுத்தும். அதாவது தொழிலா ளிக்கு நிறுவனம் தர வேண்டிய ஊதியத்தில் 24% அரசு தந்து விடுகிறது. 1000 பேர் வரை தொழிலாளர்கள் கொண்ட ஒரு தொழில் நிறுவனத்துக்கு ஒரு தொழிலாளிக்கு தர வேண்டிய ஊதியத்தில் 24% மிச்சம். 1000 பேருக்கு மேல் பணிக்கமர்த்தப்பட்டுள்ள நிறுவனம் என்றால் தொழிலாளி தர வேண்டிய பிஎஃப் பங்கை அரசு தரும். முதலாளி தர வேண்டியது என்று சொன்னால்தானே முதலாளி ஆதரவு அரசு என்பார்கள், அதனால் தொழிலாளி பங்கு என்று சொல்லும் நிதியமைச்சகத்துக்கு ஒரு விசயத்தை தெளிவுபடுத்தலாம். முதலாளி தரும் 12%, தொழிலாளிக்குத் தருவதாக முதலாளி ஒப்புக் கொண்ட கூலிக்கு அப்பாற்பட்டது. தொழிலாளிக்கு தருவதாகச் சொல்லும் 12% முதலாளி தொழிலாளிக்குத் தர வேண்டியது. எப்படியாயினும் தொழிலாளியின் கையில் எதுவும் மிஞ்சாது. ஆனால் முதலாளியின் கைகளில் 24% மிஞ்சும். இது இரண்டாண்டுகளுக்கு மாதா மாதம் தரப்படும். திட்டம் 2021 ஜுன் 31 வரை அமலில் இருக்கும்.

இந்தச் சலுகையைப் பெறுவதற்கான நிபந்தனை மிகவும் கடினமானது. 50 பேர் வரை வேலை செய்யும் நிறுவனம் புதிதாக இரண்டு பேருக்கும், 50 பேருக்கு மேல் வேலைக்கமர்த்தியிருக்கும் நிறுவனம் புதிதாக 5 பேருக்கும் வேலை தந்திருக்க வேண்டும். இப்படியாக வேலை வாய்ப்பு உருவாக்கத்தான் முதலாளிகளுக்கு பெரும்தொகை தரும் இந்தத் திட்டம் அறிவிக்கப்படுகிறது. கார்ப்பரேட் முதலாளிகள் தன்னிறைவு பெறுவார்கள்.

உற்பத்தியோடு இணைக்கப்பட்ட ஊக்கம் என்ற வகையில் 10 முன்னணி துறைகளுக்கு, வரும் அய்ந்து ஆண்டுகளுக்கு ரூ.1.46 லட்சம் கோடி தரப்படும். தன்னிறைவு மூன்றாம் பதிப்பின் மொத்த மதிப்பே ரூ.2.65 லட்சம் கோடிதான். இதில் பாதிக்கும் மேல் பெருநிறுவனங்களுக்குப் போய்விட்டது.

எஃகு மற்றும் சிமென்ட் உற்பத்தியை, விற்பனையை ஊக்கப்படுத்தி புதிதாக 78 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்க பிரதமர் நகர்ப்புற வீடு கட்டும் திட்டத்தில் ரூ.18,000 கோடி தரப்படவுள்ளது. 78 லட்சம் வேலை வாய்ப்புகள் என்பது எத்தனை நாட்கள் வேலை வாய்ப்பு என்று சொல்லப்படவில்லை. 78 லட்சம் பேருக்கு ஆளுக்கு ஒரு நாள் வேலை தந்தால் கூட வேலை வாய்ப்பு கணக்கில் வந்துவிடும். இந்த ஆண்டு முடிவதற்குள் கூட இதைச் செய்துவிட முடியும். வேலையிழந்த கோடிக்கணக்கானவர்களில் இருந்து பலரும் இந்த 78 லட்சத்துக்குள் மாறிமாறி கூட வேலை வாய்ப்பு பெறலாம். வேலை ஒரு நாள் இருந்தால் நிதியமைச்சருக்கு அது கணக்கு. வேலை ஒரு நாள் இருந்தால் அது தொழிலாளிக்கு, அவன் குடும்பத்துக்கு பிழைப்பு. அடுத்த நாளும் அவனுக்கு வேலை இருக்க வேண்டும் என்பது மேட்டுக்குடி நிதியமைச்சருக்கு புரியப் போவதே இல்லை.

நகர்ப்புறத்தில் வீட்டு வசதித் திட்டத்தின் மூலம் 78 லட்சம் வேலை வாய்ப்பு என்று சொன்னதுபோல், கிராமப்புறங்களில் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் வேலை வாய்ப்புக்கு ரூ.10,000 கோடி அறிவிக்கப்பட்டுள்து. ஊரக வேலை வாய்ப்பு வகையில் இதுவரை ரூ.73,504 கோடி செலவிடப்பட்டு 251 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக நிதியமைச் சர் சொல்கிறார். ரூ.70,000 கோடிக்கும் மேல் செலவு செய்து 251 கோடி வேலை நாட்கள்தான் உருவாக்க முடிந்தது என்றால், ரூ.10,000 கோடியில் தோராயமாக 30 கோடி வேலை நாட்கள் உருவாக்கப்படலாம். மீண்டும் ஒருவருக்கு ஒரு நாள் வேலை வாய்ப்பு என்பதாக அது நிற்கும் வாய்ப்புகள்தான் உள்ளன.

தன்னிறைவு பதிப்பு 3.0ல், அரசுப் பணிகள் மேற்கொள்ள ஒப்பந்தப் புள்ளிகள் (டென்டர்) எடுப்பவர்கள் செலுத்த வேண்டிய காப்புத் தொகை 5% - 10%ல் இருந்து 3% என குறைக்கப்படுகிறது. அவர்கள் பணம் வங்கியில் தேவையில்லாமல் முடங்கி விடுகிறது, அதனால் அவர்களுக்கு புழக்கத்துக்கு பணம் இல்லாமல் போய் விடுகிறது என்று காரணம் சொல்லப்படுகிறது. சாமான்ய மக்கள் மீது பணமதிப்பிழப்பு நடவடிக்கையை திணித்தவர்கள் பெரும்பணக்காரர்கள் பணம் வங்கிகளில் முடங்கிவிடுவது பற்றி கவலைப்படுகிறார்கள். மக்கள் கையில் பணம் புழங்கினால்தான் பொருளாதாரத்தை மீட்க முடியும் என்று பொருளாதார அறிஞர்கள் எல்லாரும் சொல்லிவிட்டார்கள். மக்கள் என்பது மோடி ஆட்சியாளர்களைப் பொறுத்த வரை பெரும்பணக்காரர்கள்தான். அதனால் அவர்கள் கையில் பணம் புழங்குவதை உறுதி செய்து தன்னிறைவுக்கு வழிவகுக்கிறார்கள். இருக்கிற நிலைமைகளிலேயே டென்டர் எடுப்பவர்கள் அவர்கள் ஒப்புக்கொண்ட பணியை சரி வர முடிப்பதில்லை. இனி காப்புத் தொகையும் பாதியாகக் குறைந்து விடும்.

தேசிய முதலீடு மற்றும் உள்கட்டுமான நிதியத்தில் ரூ.6,000 கோடி அரசு முதலீடு செய்யும். இதன் மூலம் 2025க்குள் இந்த நிதியத்தில் இருந்து ரூ.1.1 லட்சம் கோடி கடன் தரப்படும். கடனைத் திருப்பிச் செலுத்தாத கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மீண்டும் கடன் தருவதில் கார்ப்பரேட் விசுவாசத்தைத் தவிர வேறு தர்க்கம் இல்லை.

இவ்வளவுதான் தன்னிறைவு 3.0. இதில் சாமான்ய மக்களுக்கு என்ன இருக்கிறது? இப்படி தொழில் நிறுவனங்களுக்குத் தருவதையே பொருளாதார மீட்சி, வளர்ச்சி என்று நம்மை ஒப்புக்கொள்ளச் சொல்கிறார்கள்.

இன்று இன்னும் ஒரு படி மேலே போய் தொழில் நிறுவனங்கள் வங்கிகள் நடத்த உரிமம் வழங்கலாம் என்று ரிசர்வ் வங்கி அறிக்கை ஒன்று சொல்கிறது. எதற்கு இடையில் அரசுக்கு சங்கடம்? அவர்களாகவே வங்கிகள் நடத்தி, அதில் போடப்படும் மக்கள் பணத்தை அவர்கள் தொழிலுக்கு திருப்பிவிட்டு, பின் அதை வாராக்கடன் என்று அறிவித்து, வங்கி மூழ்கிப் போய், மக்கள் பணம் காற்றாகி..... எல்லாம் நாசமாய்ப் போகும்.

கொரோனாவை வாய்ப்பாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று மோடி சொன்னார். இந்த பெருந்தொற்று காலத்தில் கூட மக்கள் பணம் அவர்களுக்குச் சேராமல் எங்கோ போய் குவிந்துவிடுகிறது. ஒரு வறட்சியை அனைவரும் விரும்புகிறார்கள் என்ற தலைப்பில் பி.சாய்நாத் ஒரு கட்டுரை எழுதினார். வறட்சிக்கு தீர்வு காண்பது என்ற பெயரில் மக்கள் பணம் எப்படி கொள்ளையடிக்கப்படுகிறது என்பதை விவரித்திருந்தார். மோடியின் ஆட்சியில் ஒரு பெரும் தொற்றை அனைவரும் விரும்புகிறார்கள் என அது மாறியிருக்கிறது. சிலபல ஆயிரம் கோடிகள் மிகச் சிலரின் கைகளுக்குச் சென்று விடுகிறது.

எல்லாம் மக்கள் பணம். கார்ப்பரேட்டுகளுக்கு இன்னும் தந்து கொண்டே இருக்க வேண்டும் அல்லவா? இது பறித்தெடுத்தலின் மூலம் லாபம் குவிக்கும் காலம். அதனால் இந்த நெருக்கடியான காலகட்டத்தில் பஞ்சப்படியை தற்காலிகமாக நிறுத்தி வைத்தவர்கள், அதற்கான கணக்கை மாற்றியமைத்து, தொழிலாளிக்கு சட்டப்படி சேர வேண்டிய பணம் கார்ப்பரேட்டுகள் கைகளிலேயே நின்றுவிட வழிவகுத்து விட்டார்கள். 8 மணி நேர வேலையை 12 மணி நேர வேலையாக்கி முழுமுற்றான லாபம் வருவதையும் உறுதி செய்துவிட்டார்கள். இந்த தொழிலாளர் விரோத நடவடிக்கைகள் மக்கள் வாழ்நிலையை மேலும் கீழ்நிலைக்குத் தள்ளும். வேலையில்லா சேமப்பட்டாளம் என்ற குண்டு காலில் கட்டப்பட்டிருப்பதால் தொழிலாளியும் இதற்கு மேல் ஓட முடியாது என்று கருதுவான்.

கைக்கும் வாய்க்குமான வாழ்க்கைக் கூட கடினம் என்றாகிவிட்ட பிறகு, சந்தைக்கு வரும் பொருட்களை வாங்க யாரும் வர மாட்டார்கள். உற்பத்தி செய்யப்பட்ட பொருட்கள் தேங்கும். சந்தை சரியும். பொருளாதாரம் மேலும் ஆழமான நெருக்கடிக்குள் தள்ளப்படும். ரகுராம் ராஜன் உள்ளிட்டோரே எச்சரிக்கை செய்தும், இந்த எளிய சுழற்சிப் போக்கை புரிந்துகொள்ளாத பிரதமரும் நிதியமைச்சரும் பொருளாதாரத்தை, மக்கள் வாழ்க்கையை பெரும்பள்ளத்தில் தள்ளாமல் ஓயமாட்டார்கள்.

Search