COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

 எழுவர் விடுதலைக்கான காலவரையற்ற பட்டினிப் போராட்டம் 


மக்கள் உரிமைகளுக்காக, ஜனநாயகத்துக்காக, நீதித்துறை சுதந்திரத்துக்காக கொரோனா காலத்திலும் தொடர்ந்து போராட்டங்கள் முன்னெடுத்த கம்யூனிஸ்ட் கட்சி, ஏழு தமிழர் விடுதலைகாக நவம்பர் மூன்றாவது வாரம் கால வரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்த முடிவு செய்தது.

நவம்பர் 25 அன்று முதலமைச்சரை சந்திக்க தொழிலாளர் உரிமை பேரணி நடத்தவும் ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப், மேக்னா ஆகிய நிறுவனங்களின் தொழிலாளர்கள் குடும்பங்களுடன் ஆயிரம் பேர் வரை அந்தப் பேரணியில் கலந்துகொள்ள திட்டமிட்டு பணியாற்றி வந்தது. நவம்பர் 26 பொது வேலை நிறுத்த மறியல் போராட்டத்தில் பெருந்திரளாக கலந்துகொள்ளவும் திட்டமிட்டிருந்தது. இந்த தொடர்ச்சியான கடுமையான பணிகள் இருந்தபோதும் நவம்பர் 28 முதல் எழுவர் விடுதலைக்காக கால வரையற்ற பட்டினிப் போராட்டம் நடத்தவும் முடிவு செய்தது.


புயல் மற்றும் கனமழையால் நவம்பர் 25, 26 நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் போனது. நவம்பர் 28 காலவரையற்ற பட்டினிப் போராட்டத்துக்கான தயாரிப்பும் கடும்சவாலாக மாறியது. 29 ஆண்டுகளாக சிறையில் இருக்கிற அந்த எழுவர் நிலையுடன் எண்ணும்போது, ஒரு புது வேகம் பிறந்து தோழர்கள் வேலைகளை முடுக்கிவிட்டனர். நவம்பர் 27 இரவே எழுவர் விடுதலை கோரும் பெரிய சுவரொட்டிகள் முக்கிய இடங்களில் ஒட்டப்பட்டன.


நவம்பர் 28 காலை, மக்களுக்கான இளைஞர்களின் தோழர் ஜே.ஆன்டனி தினகரனும் கோவை பிரிக்கால் போராளி மா.சம்பத்குமாரும் காலவரையற்ற பட்டினிப் போராட்டத்தை துவக்கினர். கம்யூனிஸ்ட் கட்சியின் ஆலோசனைக் குழு தலைவர் தோழர் எஸ்.குமாரசாமி போராட்டத்தை துவக்கி வைத்தார். ஆட்டுக்கு தாடியும் நாட்டுக்கு ஆளுநரும் தேவையில்லை என்று அண்ணாதுரை சொன்னது, பன்வாரிலால் புரோகித்துக்குப் பொருந்தும், அவர் பாஜகவின் தரகர், அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மதிக்காமல் மனுதர்மத்தை பின்பற்றுவதால், இந்து ராஷ்டிரா உருவாக்க பாடுபடுவதால், எழுவர் விடுதலைக்கான தமிழக சட்டமன்ற தீர்மானத்தை, அதற்கான அமைச்சரவை பரிந்துரையை ஏற்காமல் இழுத்தடிக்கிறார் என்று சாடிய தோழர் குமாரசாமி, எழுவர் விடுதலைக்கான போராட்டம் பன்வாரிலால் புரோகித்தை விரட்டுவதற்கான போராட்டமாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


அம்பத்தூர், கல்யாணபுரம், 23 எ, மாரியம்மன் கோயில் தெரு என்ற கம்யூனிஸ்ட் கட்சியின் புதிய முகவரியில், கட்சி அலுவலகத்தில் போராட்டம் நடப்பதால், தனிநபர் இடைவெளி, முகக்கவசம் அணிதல், கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவுதல் போன்றவற்றுக்கு ஏற்பாடுகள் இருந்ததால், காவல்துறை அனுமதி தேவையில்லை, காவல்துறைக்கு தகவல் தெரிவித்தால் போதும் என முடிவெடுக்கப்பட்டது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை பதிவேடு எதிர்ப்புப் போராட்டத்தின்போதும் காவல்துறைக்கு தகவல் தரப்பட்டது. அனுமதி கோரப்படவில்லை. ஆனால், அன்று காவல் துறை, கேட்காத அனுமதியை மறுத்து கடிதம் தந்தது. காவல்துறையின் அனுமதி மறுப்பு சட்டவிரோதம் என்பதால் போராட்டம் தொடர்ந்தது. இப்போதும் கொரோனா பேரிடர் காலம், மக்கள்தொகை அடர்த்தி அதிகம் உள்ள பகுதி என்று காரணங்கள் சொல்லி காவல்துறை 27.11.2020 அன்று அனுமதி மறுப்பு கடிதம் தந்தது. அனுமதி மறுப்புக்கு சட்டப்படி இடமில்லை என்று அவர்களுக்குச் சொல்லிவிட்டு போராட்டம் தொடர்ந்து நடத்தப்பட்டது.


போராட்டத்தை முடித்துக் கொள்ளுங்கள் என்று நச்சரிப்பதுடன் முதல் இரண்டு நாட்கள் காவல்துறை நிறுத்திக் கொண்டது. அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், குடியிருப்புப் பகுதி மக்கள் என போராட்டம் நடக்கும் இடத்துக்கு வந்து கொண்டிருந்தனர். மூன்றாம் நாள் தோழர்கள் பழனிவேல் மற்றும் சுரேஷ் ஆகியோரை காவல்துறையினர் துணை முதலமைச்சர் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்றது. அவர் ஊரில் இல்லாததால் புதன் அல்லது வியாழன் அவரைச் சந்திக்க ஏற்பாடு செய்தது. அங்கிருந்து திரும்பும்போதே, சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டதால், பட்டினிப் போராட்டத்தை முடித்துக் கொண்டாக வேண்டும் என்று அடாவடியாக மிரட்டினர். தோழர்கள் மறுத்தனர்.


30.11.2020 அன்று மதியம் அலுவலகத்தில் சுமார் 10 பேர் மட்டும் இருக்கும் நேரத்தில், பெரும் படையாக ஏதோ போருக்குப் புறப்படுவது போல், காவல்துறை வந்தது. அத்துமீறி அலுவலகத்தில் நுழைந்து, தோழர்கள் தினகரனையும் சம்பத்குமாரையும் அங்கிருந்து அப்புறபடுத்தியது. உடல்நிலை கருதி மருத்துவமனைக்கு கொண்டு செல்வதாக காரணம் சொன்னார்கள். போராட்ட செய்தியை மறைக்க, போராட்ட செய்தி பரவுவதைத் தடுக்க, காவல்துறை வீண் முயற்சி எடுத்தது. மெல்ல மெல்ல தோழர்கள் வரத் துவங்கினார்கள். ஒரகடத்தில் மேக்னா தொழிலாளர்கள் வேலை நிறுத்தப் போராட்டம் 75ஆம் நாளை எட்டியதை ஒட்டி திட்டமிடப்பட்டிருந்த போராட்டத்திற்கு தலைமை தோழர்கள் செல்ல வேண்டியிருந்தது. 

அலுவலகத்துக்குள் வந்து தோழர்களை கைது செய்த காவல்துறையின் நடவடிக்கை தவறு எனச் சுட்டிக்காட்டியதற்காக தோழர்கள் எஸ்.குமாரசாமி, ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் கே.சுரேஷ், கட்சியின் அம்பத்தூர் பகுதி செயலாளர் ஆர்.மோகன் ஆகியோரை மட்டும் காவல் துறை கைது செய்தது.
காவல்துறை நடவடிக்கைகள் போராட்டத்தை சூடு பிடிக்க வைத்தன. 30.11.2020 மாலை மேக்னா ஆலை வாயிலில் பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் மத்தியில், விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து உரையாற்றிய இடது தொழிற்சங்க மய்யத்தின் மாநிலச் செயலாளர் தோழர் பாரதி, எழுவர் விடுதலைக்கான பட்டினி போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவிக்கும் தீர்மானத்தை கூட்டத்தில் முன்வைத்தார். மேக்னா போராட்டம் பற்றி, திருபெரும்புதூர் பகுதியில் ஏற்பட உள்ள எழுச்சி பற்றி நம்பிக்கையோடு உரையாற்றும்போது, அறிதிறன் அலைபேசி மூலம் கூட்டத்தினரிடம் தோழர் குமாரசாமி காவலில் இருந்த இடத்தில் இருந்து உரையாற்ற ஏற்பாடு செய்தார்.
 தோழர்கள் எ.எஸ்.குமார், பழனிவேல், ஜானகிராமன் மூலம் தகவல் பரவ, தோழர்கள் காவலில் வைக்கப்பட்டிருந்த அம்பத்தூர் ராமு திருமண மண்டபம் முன் தோழர்கள் நூற்றுக் கணக்கில்  திரண்டனர். கூட்டம் கலைந்தால், உண்ணாநிலைப் போராட்டத்தை முடித்துக் கொண்டால் விடுதலை என, காவல்துறை பேரம் பேச, விடுதலை செய்தால் கலைகி றோம் என தோழர்கள் பதில் தெரிவித்தனர். போராட்ட செய்தியும் கோரிக்கையும் பரவியது. இரவு 8 மணி வாக்கில் காவல்துறை தோழர்களை விடுவிக்க, ஒரகடம் திருபெரும் புதூரில் இருந்து தொழிலாளர்கள், தோழர்கள் ராஜகுரு, ராஜேஷ் தலைமையில் வந்து சேர, தொழிலாளர்கள், சாமானிய மக்கள் புடைசூழ, விடுதலை செய்யப்பட்ட தோழர்கள் வீதி வீதியாய் சென்று அலுவலகம் அடைந்து, போராட்டம் தொடரும் என மக்களிடம் செய்தி சொன்னார்கள்.


 தோழர்கள் தினகரன், சம்பத்குமார் ஆகியோருடன் மருத்துவமனைக்குச் சென்ற ஜனநாயக வழக்கறிஞர் சங்கத்தின் தோழர் சங்கர், மக்களுக்கான மாணவர்களின் தோழர் சுகுமார் ஆகியோரையும் காவல்துறை கைது செய்யப்பட்டவர்களை போலவே நடத்தியது. மருத்துவர்கள் சிலர் காவல்துறை சொன்னபடி, ட்ரிப்ஸ் ஏற்றி உண்ணாநிலையைக்   கட்டாயமாய் முடிக்க முயற்சி செய்தனர். நைச்சியமாக பேசியும் மிரட்டியும் உண்ணா நிலையை முறியடிக்க எடுக்கப்பட்ட முயற்சிகளை தோழர்கள் தினகரனும் சம்பத்குமாரும் உறுதிபட முறியடித்தனர். காவல்துறையும் மருத்துவர்களும், தோழர்களை அப்படியே திரும்ப அனுப்புவதா, சிறைக்கு அனுப்புவதா, மருத்துவமனையிலேயே வைத்திருப்பதா என்று புரியாமல், குழம்பித் தவித்தார்கள்.


 இந்த நிலையில் நான்காம் நாள் வந்தது. காலையிலேயே (01.12.2020), தோழர்கள் மாண்புமிகு துணை முதலமைச்சரை சந்திக்க காவல் துறை ஏற்பாடு செய்தது. தோழர்கள் குமாரசாமி, எ.எஸ்.குமார், பாரதி தலைமையில் துணை முதலமைச்சரை சந்திக்க கட்சி குழு சென்றது. முதலமைச்சரும் துணை முதலமைச்சரும், பாட்டாளி மக்கள் கட்சியோடு ஒரு சந்திப்பில் இருந்தனர். அங்கிருந்து வந்த துணை முதலமைச்சர் கம்யூனிஸ்ட் கட்சி பிரதிநிதிகளை சந்தித்து, கோரிக்கைகள் பற்றி, போராட்டம் பற்றி கேட்டறிந்தார். கம்யூனிஸ்ட் கட்சி முன்வைத்துள்ள கோரிக்கையே அரசின் முடிவு என்றும், கோரிக்கையை முதல்வரிடம் உடனே தெரிவித்து, ஆளுநர் உரிய நடவடிக்கை  எடுக்க ஆவன செய்யப்படும் என்றும், உண்ணாநிலைப் போராட்டம் மூலம் உடலை வருத்திக் கொள்ள வேண்டாம் என்றும், அன்போடு தெரிவித்துக் கொண்டார். உச்சநீதிமன்றம் தமிழர் திருநாளை விடுமுறையாக அறிவித்துள்ள பின்னணியில், 2021 தமிழர் திருநாள் எழுவர் விடுதலையை தமிழ்நாடு கொண்டாடுவதாக அமைவதை, அரசு பார்த்துக் கொள்ள வேண்டும் என தோழர் குமாரசாமி கேட்டுக் கொண்டார்.


ஜிம்கானா கிளப், மெட்ராஸ் கிளப், மேக்னா தொழிலாளர் போராட்டங்களில் துணைமுதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண வேண்டும் எனவும், அவரோடு பேச வேண்டும் எனவும் தோழர்கள் குமாரசாமி, குமார், பாரதி வலியுறுத்தினார்கள். சில நாட்களிலேயே தேதி ஒதுக்கி தர, அவரது உதவியாளரிடம் அவர் தெரிவித்தார்.


தலைமை தோழர்கள் அங்கிருந்து கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வந்து தோழர்கள் தினகரன், சம்பத்குமார் ஆகியோரை அழைத்துக்கொண்டு, கட்சியின் பழைய அலுவலகம் அருகில் சென்றனர். அங்கிருந்து தோழர்கள் சூழ தினகரனும் சம்பத்குமாரும் புறப்பட, புதிய அலுவலகத்தில் இருந்து தோழர்கள் மலர் தூவி வாழ்த்தி வரவேற்க, புதிய அலுவலகம் வாயிலில் உண்ணாநிலைப் போராட்டம் தோழர் எ.எஸ்.குமாரால் முடித்து வைக்கப்பட்டது. போராட்டக்காரர்களுக்கு, போராட்டத்துக்கு வலுசேர்த்தவர்களுக்கு மரியாதை செய்யப்பட்டது. தோழர்கள் பழனிவேல், ஜானகிராமன், கோபால், மோகன், முனுசாமி, அன்புராஜ், ஜேம்ஸ், மணிகன்டன், சீதா, சாந்தி முன்னிலையில் தோழர் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துவக்கம் முதல் இறுதி வரை நடந்த விஷயங்களை தோழர் பாரதி எடுத்துரைத்தார். புதிய அலுவலகம், 'தோழர் கூடம்' என அழைக்கப்படும் என்றும், வர்க்கப் போராட்டப் பாசறையாக போராட்டங்களால், போராட்டங்களுக்காக, போராட்டங்களின் மத்தியில் திறக்கப்பட்டு உள்ளது என்றும், எழுவர் விடுதலைக்காக அவசியம் இருந்தால் சிறைகளை நிரப்புவோம் என்றும், உடனடியாக டெல்லி விவசாயிகள் போராட்டத்திற்கு ஒருமைப்பாடு தெரிவித்து, மேக்னா, ஜிம்கானா கிளப், மெட்ராஸ் போட் கிளப் தொழிலாளர் போராட்டங்களைத் தீவிரப்படுத்துவோம் என்றும், சனாதனம் வீழ்த்த, ஜனநாயகம் வெல்ல, முதலாளித்துவம் வீழ, சோசலிசம் படைக்க உறுதி ஏற்போம் என்றும், கொடியேற்றி வைத்து தோழர் குமாரசாமி உரையாற்றினார். கொள்கை வகுப்பதிலிருந்து  கொடி பிடிப்பது வரை, தோழர் பாரதி துவங்கி தோழர் சுகுமார் வரை, புதிய தலைமுறையினரின்  பங்கு போராட்டத்தின் மீது அழுத்தமான முத்திரையை பதித்திருந்தது.

Search