COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

 

டிசம்பர் 25, 2020

ஆதிக்க எதிர்ப்பு நாள்

ராமையாவின் குடிசையில் வைக்கப்பட்ட தீ

இன்னும்  எரிந்து கொண்டிருக்கிறது

தீபாவளிக்கு அடுத்த நாட்களில் பெய்த மழையில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்லை பாதுகாப்பாக வைக்காத அதிகாரிகளின் குற்றமய அலட்சியத்தால் 10,000 மூட்டைகள் நெல் நனைந்து நாசமானது.

தேனியில் வெண்டைக்காய் அதிகமாக விளைந்து கிலோ 1 ரூபாய் விற்றதால் தேங்கிப் போன காயை வண்டி வண்டியாக ஆற்றில் கொட்டினார்கள். வீணாக்கப்பட்ட அந்தக் காய்களில், மழையில் நனைந்து நாசமாகிப் போன அந்த அரிசியில் பசித்திருப்போர் பெயர்களை எழுதாத கடவுள் என்ன கடவுள்? சந்தையில் விலை இல்லை என்றால் உற்பத்தி சக்திகள் அழிக்கப்படும். லாபத்தை அதிகரிக்கும் வழிகளில் ஒன்று உற்பத்தி சக்திகளை அழிப்பது. உற்பத்தி செய்யப்பட்ட பொருளும் உற்பத்தி சக்திகளின் ஒரு பகுதி. இல்லை என்போர் இருக்கையில், மூட்டை மூட்டையாக நெல் நனைந்து கிடந்ததையும் வெண்டைக்காய் ஆற்றில் வீணாகக் கொட்டப்பட்டதையும் பார்த்த இயலாமையில் கருத்துமுதல் வாதம், பொருள்முதல் வாதம் எல்லாம் ஒரே நேரத்தில் பேச வருகிறது.

விவசாய உற்பத்தியை இருமடங்காக்கி, விவசாயிகளின் வருமானத்தை மும்மடங்காக்கும் குறிக்கோளுடன் கொள்கை வகுத்திருப்பதாக தமிழ்நாடு அரசின் விவசாய கொள்கை குறிப்பு சொல்கிறது. இவைதான் விவசாயிகள் வருமானத்தை மும்மடங்காக்கும் வழிகளா? நானும் ரவுடிதான் நானும் ரவுடிதான் என்று சொல்வதைப் போல், நானும் விவசாயிதான் நானும் விவசாயிதான் என்று முதலமைச்சர் போகும் இடமெங்கும் சொல்கிறார். கொள்முதல் செய்யப்பட்ட அரிசி மூட்டைகளை பாதுகாக்க, வருமானம் இழந்த வெண்டைக்காய் விவசாயிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லி இழப்பீடு வழங்க முதலமைச்சர் விவசாயி எந்த முயற்சியும் இன்னும் எடுக்கவில்லை. இந்த நிலைமைகளில் விவசாய உற்பத்தி இலக்கை ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்துக் கொண்டே இருப்பதாக சொல்லிக் கொள்கிறார்கள். சென்ற ஆண்டை விட விளைச்சல் கூடுதல் என்றும் சொல்கிறார்கள். விவசாய உற்பத்திக்கு கூடுதல் இலக்கு நிர்ணயிப்பவர்கள் விளைவித்த பொருளை சேமித்து வைக்க, விற்க போதுமான ஏற்பாடுகள் இருப்பதை உறுதி செய்யாததால்தான் மலை போல் உணவுப் பொருட்கள் குவிந்திருக்க கடல் போல் பசி பரவிக்கிடக்கிறது. இதற்கு மேல் இந்த கையாலாகாத ஆட்சியாளர்கள் உணவுப் பாதுகாப்பு பற்றி அளப்பதை வேறு நாம் கேட்டுக் கொண்டிருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் உள்ள 79.38 லட்சம் நில உடைமையாளர்களில் 93% பேர் சிறு மற்றும் குறு விவசாயிகள். இவர்களிடம் 62% சாகுபடி பரப்பும் மீதமுள்ள 38% சாகுபடி பரப்பு 7% பெருவீத விவசாயிகளிடமும் உள்ளது. இவர்களுடன் விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் கொண்ட விவசாய சமூகம் எப்படி வாழ்கிறது, அதன் விருப்பங்கள், தேவைகள், கோரிக்கைகள் என்ன, அவற்றை நிறைவேற்றும் நடவடிக்கைகள் என்ன என்பவை பற்றி முதலமைச்சர் அறிவாரா?

பிரதமர் பயிர் காப்பீட்டு திட்டத்தில் 2016 - 2017 முதல் 2019 - 2020 வரையிலான நான்கு ஆண்டுகளில் மாநில அரசின் பங்காக ரூ.1,994 கோடி காப்பீட்டு மானியம் செலுத்தப்பட்டு, 37,31,476 விவசாயிகளுக்கு ரூ.7,702.46 கோடி இழப்பீடு தந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது.  சராசரியாக ஒரு விவசாயி ரூ.20,000 பெற்றுள்ளார். நான்கு ஆண்டுகளில் ரூ.20,000 என்பது எவ்வளவு பெரிய தொகை? இதைப் பெற்ற விவசாயி இந்தத் தொகையில் நான்கைந்து மாளிகைகள் கட்டியிருக்க மாட்டாரா? அந்த வெண்டைக் காய் விவசாயிக்கும் இப்படி ஏதாவது பெரிய தொகை கிடைக்குமா?? விவசாயி முதலமைச்சருக்கு இந்த விவரம் தெரியுமா?

அங்கே ஒருவர் நான் தேநீர் விற்றேன் என்று சொல்லி வருகிறார். இங்கே இவர் நான் கிராமத்தில் இருந்து வந்தவன் என்று சொல்லிக் கொள்கிறார். விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவேன் என்றார் அவர். அதை மும்மடங்காக்குவேன் என்கிறார் இவர். இருவருமாகச் சேர்ந்து விளைவித்த பொருளுக்கு கட்டுப்படியாகும் விலையையும் கொள்முதல் செய்த பொருளுக்கு பாதுகாப்பும் கூட உறுதி செய்யவில்லை. உழுபவனுக்கு நிலம் வேண்டும் என்று கேட்கும் நிலமற்றோர் மத்தியில் இருக்கிற நிலத்தையும் விளைச்சலையும் காப்பாற்றிக் கொள்ள தினமும் ஒரு போராட்டம் நடத்த வேண்டிய விவசாயிகளை கொண்டு வந்து சேர்த்திருப்பதுதான் இந்த இரட்டையரின் சாதனை.

விவசாயிகளின் வாழ்க்கையே இந்த நிலையில் இருக்கும்போது, விவசாயத்தை ஒட்டிய பொருளாதாரத்தைச் சார்ந்து பிழைக்கும் விவசாயத் தொழிலாளர்கள், கிராமப்புற தொழிலாளர்கள் நிலை பற்றி அரசியல் அரங்கில் எங்கும் பேசப்படுவதில்லை. நூறு நாட்கள் வேலைத் திட்டத்தில் 01.04.2019ல் இருந்து ரூ.229 நாள் கூலி என்று சொல்லும் தமிழக அரசு, இதற்கான வேலை அளவை, இந்தக் கூலியை எட்ட முடியாத விதத்திலேயே நிர்ணயிக்கிறது.

அன்று நிலஉடைமையாளர்கள் கூலியை மிகக் குறைவாக நிர்ணயித்தார்கள். அதை மட்டுமே கொடுத்தார்கள். வறிய, நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை சுரண்டிக் கொழுத்தார்கள். சாதிய ஒடுக்குமுறை கொடி கட்டிப் பறந்தது. உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்பட்டவர்கள், சாணிப்பால், சவுக்கடி என மனிதத் தன்மையற்ற சாதியாதிக்க கொடுமைகளுக்கு உள்ளாக்கப்பட்டார்கள். எதிர்க்கத் துணிந்து சங்கம் அமைத்து உரிமை கேட்டபோதுதான், எங்களுக்கு எதிராக சங்கம் வைக்கும் அளவு துணிச்சல் வந்ததா, உரிமை கேட்க வந்துவிட்டாயா என்று கேட்டு அடித்தார்கள். அதையும் கடந்தபோது தீயிட்டு கொளுத்தினார்கள். 44 பேர் துடிக்கத்துடிக்க கொல்லப்பட்டார்கள்.

அன்று இருந்தது போன்ற அடிமைத்தனம், ஒடுக்குமுறை வடிவங்கள் இன்று இல்லை. அந்த 44 பேர் எரிந்தபோது, கூடவே சேர்ந்து அந்த வடிவங்களும் எரிந்துபோயின. வேறு வடிவங்களில் ஒடுக்குமுறை தொடர்கிறது. அன்று சில நிலஉடைமையாளர்கள் செய்ததை இன்று ஒன்றிய மாநில அரசுகள் நேரடியாக செய்கின்றன. வேலை இருக்கிறதா என்று வேலை செய்யும் இடத்துக்குச் சென்றுதான் இன்றும் தெரிந்து கொள்ள வேண்டும். இல்லை என்றால் இன்றும் வாய் மூடித் திரும்பி விட வேண்டும். எழுத்தில் ஒரு கூலி அறிவித்துவிட்டு, அதற்கு வேலை அளவு என ஒன்றை நிர்ணயித்து அரசுகள் தரும் கூலியை அவர்கள் தரும்போது வங்கிக்குச் சென்று வாங்கிக் கொள்ள வேண்டும். கூலியை  நேரில் பெற்றுக் கொள்ள அன்றிருந்த வாய்ப்பும் இன்று இல்லை. அன்று ஒன்று அல்லது இரண்டு வேளை உணவுதான். இன்றும் அதேதான். இருக்க நல்ல வீடு, உடுத்த கவுரவமான உடை என எதுவும் நிறைவேறவில்லை.

கிராமப்புற தொழிலாளர்களின், உழைக்கும் மக்களின் கவுரவமான வாழ்க்கை இன்னும் உறுதி செய்யப்படாத நிகழ்ச்சிநிரலாகவே தொடர்கிறது. இன்று நூறு நாள் வேலைத் திட்டம் என்ற பொருளில், பொதுவிநியோகத் திட்டத்தில் பயனாளிகளாகவும் தேர்தல் நேரங்களில் வாக்காளர்களாகவும் மட்டுமே கிராமப்புற வறிய மக்களின் வாழ்க்கை தொடர்கிறது.

ராமையாவின் குடிசையில் வைக்கப்பட்ட தீ இன்னும் எரிந்துகொண்டிருக்கிறது. அதிகாரத்துக்கான நிலத்துக்கான, கூலிக்கான, கவுரவமான வாழ்க்கைக்கான கிராமப்புற வறிய மக்களின் போராட்டங்கள் முடிந்துவிடவில்லை. அந்தத் தீ அணைக்கப்பட வேண்டும்.

கொரோனா காலத்தில் தொழில் முடங்கி பொருளாதாரம் அடிவாங்கியுள்ளபோது, உணவு தானிய உற்பத்தி தடையின்றி நடந்துள்ளது. இந்த ஆண்டுக்கான நெல் கொள்முதல் இது வரை 295 லட்சம் டன் அளவுக்கு நடந்துள்ளது. சென்ற ஆண்டு இது 250 லட்சம் டன் என இருந்தது. பருப்பு வகைகள், எண்ணெய் வித்துகள் கொள்முதலிலும் முந்தைய ஆண்டை விட கூடுதல் கொள்முதல் நடந்துள்ளது. விவசாயிகளும் விவசாயத் தொழிலாளர்களும் இதை சாத்தியமாக்கியிருக்கிறார்கள். அவர்களுக்குரிய பங்கு அவர்களுக்கு கிடைப்பது உறுதி செய்யப்பட வேண்டும். வெண்மணி நாள் அதற்கான உறுதியேற்பு நாளாக, ஆதிக்க எதிர்ப்பு நாளாக அமையட்டும்.

Search