COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

 

காதல் ஜிகாத் தடுப்புச் சட்டங்கள்

இந்து ராஷ்டிரா நிகழ்ச்சிநிரலை முன்னகர்த்தவே

2024 வரை நான் பிரதமராக இருப்பேன் என்று 2014ல் சொன்ன மோடி, இப்போது 2014 - 2029 காலகட்டம் இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானது என்று சொல்லியிருக்கிறார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான அடுக்கு மாடி குடியிருப்புகளை திறந்து வைத்து இப்படிச் சொன்ன மோடிக்கு புதிய நாடாளுமன்ற கட்டிடம் இன்னும் கட்டி முடிக்கப்படவில்லை என்று மனதில் இருந்திருக்கும். அல்லது கட்டி முடியும்போது தாம் பிரதமராக இல்லாமல் போய்விட்டால் என்ற கவலை இருந்திருக்கும். ரூ.8500 கோடியில் வாங்கப்பட்டுள்ள புதிய தனி விமானத்தில் பறக்கும் வாய்ப்பும் பறி போகும் என்று கூட கவலைப்பட்டிருக்கலாம்.

எப்படியாயினும், இந்து ராஷ்டிரா நிகழ்ச்சி நிரல் அவர்கள் திட்டமிட்டது போல் 2024ல் நிறைவேறும் சாத்தியமில்லை என்று கணித்திருக்கிறார்கள். ஜனநாயகம் விரும்பும் இந்திய மக்களின் விடாப்பிடியான போராட்டங்கள் அதற்குக் காரணமாகியிருக்கின்றன. அதனால் இன்னும் ஓர் ஆட்சிக் காலம் இந்துத்துவ சக்திகளுக்கு தேவைப்படுகிறது.

2020 இன்னும் மோசமான ஆண்டாக இந்தியாவுக்கு இருந்திருக்க வேண்டும். கொரோனா வந்து காப்பாற்றியது. அமித் ஷாவுக்கு தொற்று வந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, மீண்டு, மீண்டும் எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீண்டு, முற்றிலும் குணமாகிவிட்டார் என்று தெரிந்து கொண்டோம். மேற்குவங்கத்துக்குச் சென்று, கொரோனா கட்டுக்குள் வந்த பிறகு, குடியுரிமை திருத்தச் சட்டம் அமலாகும் என்று அறிவித்தபோது, அவர் முற்றிலும் குணமடைந்தார் என்பதை உறுதிசெய்து கொண்டோம்.

தமிழ்நாட்டில் வேலை தூக்கிக் கொண்டு திரிபவர்கள் மற்ற மாநிலங்களில் பலப்பல அடிகள் பாய்கிறார்கள். 'சாமியாரின்' ஆட்சியில் நேரடியாக இருக்கும் உத்தரபிரதேசம் 'சட்ட விரோத' மத மாற்றத்துக்கு சிறை தண்டனை மற்றும் அபராதம் என்கிறது. அவசரச் சட்டம் இயற்றப் போகிறார்களாம். பத்து ஆண்டுகள் சிறையாம். திருமணம் செய்து கொள்வதற்காக ஒரு பெண் மதம் மாறினால், அந்தத் திருமணம் செல்லாதாம். திருமணம் செய்துகொள்வதற்காக ஆணோ, பெண்ணோ மதம் மாறுவதும் அவர்களது அரசியல்சாசன உரிமைதான். இது எந்தச் சட்டத்துக்கு விரோதமானது? சட்ட விரோத மதமாற்றம் என்று ஆதித்யநாத் எதைச் சொல்லப் போகிறார்? தனிநபர் தான் விரும்பும் மதத்துக்கு மாறுவதைத் தடுப்பதுதான் சட்ட விரோதம். நூற்றுக்கணக்கான குழந்தைகள் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் உயிரிழந்ததையடுத்து அது போல் மீண்டும் நிகழாமல் இருக்க ஏதாவது அவசரச் சட்டம் வந்திருந்தால் நாம் மகிழ்ச்சியுற்றிருக்கலாம். தலைகீழ் நடவடிக்கைதான் மேற்கொள்ளப்பட்டது. தன் சொந்தப் பணத்தை செலவு செய்து குழந்தைகளை காப்பாற்றிய மருத்துவர் கபீல் கான் சிறையில் அடைக்கப்பட்டு இரண்டாண்டுகள் கழித்துதான் வெளியே வந்தார். வழக்குகள் நடக்கின்றன. உத்தரபிரதேசம் இது போன்ற பல விதங்களில் இந்துத்துவ கூடாரமாக, மடமாக படிப்படியாக மாற்றப்படுகிறது. வேறு சில மாநில பாஜக ஆட்சியாளர்களும் ஆதித்யநாத் அடியொற்றி நடக்கின்றனர்.

பசு வரி போட்டு பசுக்களைப் பாதுகாக்கப் போவதாகச் சொல்லும் மத்தியபிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுஹான் பசு அமைச்சரவை உருவாக்கியுள்ளார். திருமணத்தை ஒட்டி மதம் மாறினால் திருமணம் ரத்து என்று ஒரு சட்டத்தை கொண்டு வர ஆதித்யநாத் தயாராகும்போது, 'ரோமியோ தடுப்பு குழுக்களை' உருவாக்கி ஏற்கனவே ஓர் ஓட்டம் பார்த்திருக்கும்போது, சவுஹான் காதல் ஜிகாத் தடுப்புச் சட்டம் கொண்டு வருகிறார். அரியானா, அசாம், கர்நாடக அரசாங்கங்களும், கொரோனாவை கட்டுப்படுத்தாவிட்டாலும் காதல் ஜிகாத்தை கட்டுப்படுத்த புறப்பட்டுவிட்டன. அந்த மாநிலங்களிலும் இதற்கான சட்டங்கள் பிறப்பிக்கப்படவுள்ளன. பஞ்சாப் கூட ஓர் அவசரச் சட்டம் பிறப்பித்தது. ஒன்றிய அரசு கொண்டு வந்த விவசாய விரோத சட்டங்களில் இருந்து மாநிலத்தைப் பாதுகாக்க அந்தச் சட்டங்கள் உதவும். பக்கத்து அரியானாவிலும் விவசாய விரோதச் சட்டங்கள் பாதிப்புகளை உருவாக்கும். அசாமும் கர்நாடகமும் தொலைவில் இருந்தாலும் அவை தப்ப முடியாது. அது போன்ற வாழ்வாதாரப் பிரச்சனைகள் மண்டியிருக்கும்போது, இந்துத்துவ சக்திகள் காதல் ஜிகாத் என்கிற இல்லாத பூதத்தை கிளப்புகிறார்கள்.

மதத்தை பின்பற்றுவது தனிப்பட்ட விசயம். மதம் மாறுவது தனிப்பட்ட விசயம். மதம் மாறாமலோ, மாறியோ மணம் செய்துகொள்வது தனிப்பட்ட விசயம். இதில் ஏன் அரசாங்கங்கள் தலையிட வேண்டும்? வேறு யாரும் இதில் ஏன் தலையிட வேண்டும். நாகரிக வளர்ச்சி அடைந்துவிட்ட ஒரு சமூகம் ஆணும் பெண்ணும் தனிப்பட்ட விருப்பத்தில் சேர்ந்து இருப்பதில் நிச்சயம் தலையிடாது. வல்லரசு ஆவதை விட நல்லரசு ஆவது மிக முக்கியம்.

இப்போது இங்கு என்ன தினமும் இசுலாமிய இளைஞர்கள் இந்துப் பெண்களை மணம் செய்து கொண்டா இருக்கிறார்கள்? இப்படிச் சட்டம் கொண்டு வர வேண்டிய அளவுக்கு சமூகத்தில் பதட்டம் எதுவும் வரவில்லையே. உண்மையில் இந்தச் சட்டங்கள்தான் பதட்டம் உருவாக்கும் நோக்கம் கொண்டவை. இந்தச் சட்டங்கள் தேவையில்லாத ஆணிகள் என்றுதான் மக்கள் கருதுகிறார்கள். அரசியல்சாசனத்தில், பல்வேறு வழக்குகளின் தீர்ப்புகளில், விரும்பும் மதத்தில் இருப்பது, விரும்பும் கடவுளை வழிபடுவது, மனம் விரும்பியவர்கள் மணம் முடிப்பது, சேர்ந்து வாழ்வது ஆகிய உரிமைகள் உறுதி செய்யப்பட்டுள்ளன. விருப்பத்தின் பேரில் நடந்த ஒரு திருமணத்தை, சங்கிகள் விருப்பத்தின் பேரில் உருவாக்கப்பட்ட ஒரு சட்டத்தின் மூலம் தடுத்து என்ன சாதிக்கப் போகிறார்கள்? யாரைப் பாதுகாக்கப் போகிறார்கள்? இந்து பெண்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படும்போது, ஆலைகளிலும் வயல்வெளிகளிலும் கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படும்போது, இவர்கள் எல்லாம் எங்கே இருந்தார்கள்? பிள்ளையை சூட்கேஸ் மேல் பாதி நிற்கவும் பாதி படுக்கவும் வைத்து, இழுத்துக் கொண்டு போனாளே ஒரு பெண்.... எங்கே ஒளிந்து கொண்டார்கள் இவர்கள்?

இசுலாமிய பெண்களின் உரிமைகளைப் பாதுகாப்பது என்ற பெயரில் முத்தலாக்கை குற்றமாக்கும் சட்டம் இசுலாமிய ஆண்களை குறிவைத்து, சமூகத்தில் பதட்டத்தை, பிளவை உருவாக்க கொண்டு வரப்பட்டதைப் போல இந்தச் சட்டங்களும் பெண்களைப் பாதுகாக்கும் நோக்கம் கொண்டவையல்ல. மாறாக, இசுலாமிய ஆண்களை துன்புறுத்தும் நோக்கம் கொண்டவை. காதல் ஜிகாத் பிரச்சனை பெரிதாக எழுப்பப்பட்ட கேரள ஹடியா வழக்கில் ஹடியாவும் அவரது குடும்பத்தினரும் கடுமையான காவல்துறை கண்காணிப்புக்கு, கட்டுப்பாடுகளுக்கு துன்பங்களுக்கு உள்ளாக்கப்பட்டதை நாடறியும்.

இந்து பெண்கள், இசுலாமிய பெண்கள் யார் மீதும் இவர்களுக்கு அக்கறை கிடையாது. பொதுவாக பெண்கள் அனைவரும் அடிமைகளாக இருக்கும் இந்து ராஷ்டிரா உருவாக்குவதுதான் அவர்கள் அக்கறை. இசுலாமிய மக்களை துன்புறுத்த வேண்டும். சமூகத்தை பதட்டத்தில் வைத்திருக்க வேண்டும். அதுதான் நோக்கம்.

370 முடிந்தது. ராமர் கோயில் முடிந்தது. இப்போது காதல் ஜிகாத்தை தூக்கிக்கொண்டு கலவரம் செய்ய புறப்பட்டுவிட்டார்கள். நீதி மன்றத்துக்குப் போனால் இந்தச் சட்டங்கள் நிற்காது என்று தெரிந்தும், இவை அரசியல் சாசனத்துக்கு முரணானவை என்று தெரிந்தும் கொண்டு வரப்படுகின்றன. முதல் திருமணம் சட்டரீதியாக முறியாத நிலையில், இரண்டாம் திருமணம் செய்துகொள்ள, இந்து ஆண்கள் இசுலாத்துக்கு மாறுவதை தடுக்கும் தீர்ப்புகள் உள்ளன. சரளா முத்கல் வழக்கில் இப்படி நடந்தது. சட்டத்தில் இருந்து தப்பிக்க இப்படி மதம் மாறி திருமணம் செய்வதும், வேறு வேறு மதத்தைச் சேர்ந்த ஆணும் பெண்ணும் மணம் முடிக்க, பெற்றோர், உற்றார் விருப்பத்துக்கோ, விரும்பும் ஆண், பெண் விருப்பத்துக்கோ, மதம் மாறி திருமணம் செய்வதும் முற்றிலும் வேறு வேறு பிரச்சனைகள். இந்துப் பெண்கள் மதம் மாறி திருமணம் செய்வது மட்டும்தான் சங்கிகளுக்குப் பிரச்சனை. இந்து ஆண்கள் அப்படிச் செய்தால் அது அவர்கள் உரிமை.

அரசியல்சாசன கோட்பாடுகளை, உரிமைகளை, ஜனநாயக உரிமைகளை சீர்குலைக்கும் நோக்கம் கொண்ட, இசுலாமிய சமூகத்தை பதட்டத்தில் தள்ளி மகிழ்ச்சி காணும் நோக்கம் கொண்ட இந்தச் சட்டங்களை, நாட்டு மக்களை மதரீதியாகப் பிளவுபடுத்தி இந்துராஷ் டிரா நிகழ்ச்சிநிரலை முன்தள்ள முனையும் இந்த சதியை நாட்டு மக்கள் ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.

உத்தர்கண்டிலும் இமாச்சலபிரதேசத்திலும் இதற்கான சட்டங்கள் ஏற்கனவே அமலில் உள்ளன. அவற்றையும் முடிவுக்குக் கொண்டு வர போராடும் அதேநேரம், இந்தச் சட்டங்களைப் பயன்படுத்தி, இந்தச் சட்டங்களைச் சுற்றி எழவிருக்கும் விவாதங்களை பயன்படுத்தி, மோதல்களை உருவாக்கி மக்களை பிளவுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிராகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.

 

2014ல் நூர்ஜஹான் பேகம் என்கிற அஞ்சலி மிஸ்ரா வழக்கிலும் 2020 செப்டம்பரில் பிரியன்ஷி என்கிற ஷம்ரின் வழக்கிலும் இந்து பெண்கள் மதம் மாறி இசுலாமிய ஆண்களை திருமணம் (நிக்காஹ்) செய்தபோது, அலகாபாத் உயர்நீதிமன்றம் அவர்களுக்கு காவல்துறை பாதுகாப்பு தர மறுத்தது. திருமணம் செய்ய மதம் மாறியது ஏற்புடையதல்ல என்றும் சொன்னது. யோகியின் காதல் போருக்கு எதிரான சட்டத்துக்கு ஆதாரமாக இந்தத் தீர்ப்பும் அமைந்தது.

இந்துப் பெண்கள் மதம் மாறி இசுலாமிய ஆண்களை திருமணம் செய்தது தொடர்பாக போடப்பட்ட வழக்கில், 2020 நவம்பர் நான்காம் வாரம் அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதிகள் பங்கஜ் நக்வி, விவேக் அகர்வால் அமர்வம், முதல் தகவல் அறிக்கையை ரத்து செய்தது. அரசியலமைப்புச் சட்டம் குடிமக்களுக்கு வழங்கியுள்ள வாழ்வுரிமை தனிநபர் சுதந்திரத்தை உயர்த்திப் பிடித்து பாதுகாக்க வேண்டியது அரசியலமைப்புச் சட்ட நீதிமன்றங்களின் கடமை என்று குறிப்பிட்டது.

'பிரியங்கா கர்வாரையும் சலாமத்தையும் நாங்கள் இந்துவாக, இசுலாமியராக காணவில்லை. வயது வந்த இரண்டு தனிநபர்கள் என்ற விதத்தில் சொந்த மனவிருப்பம் மற்றும் தேர்வின் அடிப்படையில் அமைதியாக மகிழ்ச்சியாக சேர்ந்து வாழ்கிறார்கள் என்று காண்கிறோம்'.

'ஒரே பாலினத்தைச் சேர்ந்த இரண்டு பேர் சேர்ந்து வாழ சட்டம் இடம் தரும்போது, தனிநபர்களுக்கோ, அரசுக்கோ, வயது வந்த இரண்டு பேர் சொந்த விருப்பத்தில் உறவு கொண்டு சேர்ந்து வாழ்வதில் என்ன எதிர்ப்பு இருக்க முடியும் என்பதை எங்களால் புரிந்துகொள்ள முடியவில்லை'.

Search