COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

பாஜகவுடனான அஇஅதிமுக கூட்டணி
நாட்டுக்கும் வீட்டுக்கும் தீங்கு விளைவிக்கும்


எஸ்.குமாரசாமி


பாஜகவின், இந்திய ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கலந்துகொண்ட அரசு விழாவில், அஇஅதிமுகவின் பழனிச்சாமியும் பன்னீர்செல்வமும், உள்கட்சி விவாதங்கள் இல்லாமல், கூட்டணி பேச்சுவார்த்தைகள் இல்லாமல் பாஜக - அஇஅதிமுகவின் 2021 தேர்தல் கூட்டணியை அறிவித்தார்கள்.

அஇஅதிமுக ஒருங்கிணைப்பாளரும் தமிழ்நாட்டின் துணைமுதலமைச்சருமான பன்னீர்செல் வம் வெற்றிக் கூட்டணி தொடரும் என அறிவித்தார்.


அஇஅதிமுக - பாஜக கூட்டணி
வெற்றி கூட்டணியா?
 


1977 சட்டமன்றத் தேர்தலில் 200 தொகுதிகளில் போட்டியிட்டு 137 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது, 1980ல் 177 தொகுதிகளில் போட்டியிட்டு 139 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது, 1984ல் 155 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது, 2001ல் 141 தொகுதிகளில் போட்டியிட்டு 132 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது, 2011ல் 165 தொகுதிகளில் போட்டியிட்டு 150 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது, 2016ல் 234 தொகுதிகளில் போட்டியிட்டு 137 தொகுதிகளில் வெற்றி பெற்றபோது அஇஅதிமுகவுக்கு பாஜகவோடு கூட்டணி கிடையாது. 2016ல் 234 தொகுதிகளிலும் அஇஅதிமுக போட்டி போட்டபோது 40.88% வாக்குகள் பெற்றது. 2019 மக்களவைத் தேர்தல்களில் பாஜகவோடு கூட்டணி அமைத்து ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. 18% வாக்குகள் மட்டுமே பெற்றது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப்படி தமிழ்நாட்டு மக்கள் தொகையில் கிறித்துவ, இசுலாமிய சிறுபான்மையினர் 11.98% பேர் ஆவார்கள். அஇஅதிமுகவைப் பொறுத்தவரை, பாஜகவோடு கூட்டணி தோல்வி கூட்டணியே ஆகும். 


தலைநகர் டில்லியின் எல்லையில் 80 கி.மீ. வரை விவசாயிகள் முகாமிட்டுள்ளனர். விவசாய விரோத சட்டங்களை விலக்கிக் கொள்ள ஒன்றிய அரசு முடிவெடுக்கும் வரை முற்றுகை தொடரும் என அறிவித்துள்ளனர்.
டில்லி வந்திருக்கும் விவசாயி ஒருவரிடம் கொரோனா அச்சம் இல்லையா என்று கேட்டபோது, கார்ப்பரேட்டுகளால், விவசாயம், விளைநிலங்கள் சூறையாடப்படும் ஆபத்து உள்ளபோது, வருங்காலம் சாகடிக்கப்படும் என நிச்சயமாகத் தெரியும்போது, அதைவிட இந்த கொரோனா ஆபத்து பெரிதா என்று திருப்பிக் கேட்டார். விவசாயி, விவசாயி மகன் என வசனம் பேசும் பழனிச்சாமிக்கு மோடியை சுமப்பது, விவசாயிகளின் எதிர்ப்பை சுமப்பதாகாதா?


மோடி - பாஜக என்றால் தமிழ்நாட்டுக்கு, தமிழ்நாட்டு மக்களுக்கு எதிரானது என்று பெரும்எண்ணிக்கையிலான தமிழ்நாட்டு மக்கள் கருதும்போது, இந்தியைத் திணிக்கும் பாஜகவை, தமிழ்நாட்டு மக்களின் கல்வி, சமூகநீதி உரிமைகளைப் பறிக்கும் பாஜகவை, ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களில் தமிழக இளைஞர்களின் வேலைவாய்ப்பைப் பறிக்கும் பாஜகவை, அஇஅதிமுக சுமக்குமேயானால், வீடுதோறும், உள்ளந்தோறும், தாமரையும் மோடியும் கூடவே கூடாது என்ற கருத்து வலுவாகியுள்ளதால், அஇஅதிமுகவுக்கே அது ஆபத்தானதாகும். தமிழ் கடவுள் முருகன், வேல் யாத்திரை என்று அஇஅதிமுக வோடு கண்ணாமூச்சி ஆடும் பாஜகவிடம், உங்கள் ஏஜென்ட் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஜனநாயக நெறிமுறைகள்படியும் சட்டப்படியும் மக்கள் விருப்பப்படியும் எழுவர் விடுதலைக்கு ஏன் கையொப்பமிடவில்லை என தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள். ஆளுநர் உரிய நேரத்தில் முடிவு எடுப்பார் என்று பாஜக மாநிலத் தலைவர் முருகன் சொல்லும்போது, 29 ஆண்டுகளாக சிறையில் இருப்பவர்களை விடுதலை செய்ய இன்னுமா உரிய நேரம் வரவில்லை, உரிய முடிவு என்ன என ஆளுநரை இப்போதே அறிவிக்கச் சொல்லுங்கள் என தமிழ்நாட்டு மக்கள் கேட்பார்கள். அஇஅதிமுகவும் சேர்ந்து பதில் சொல்ல வேண்டியிருக்கும்.


எம்ஜிஆர், ஜெயலலிதா வழிமரபில், கூட்டணி அமைத்து போட்டியிட்டு, கடந்த காலம் போல் கூடுதல் இடங்களில் போட்டியிட்டு கழக ஆட்சியை அமைப்போம் என்று அஇஅதிமுகவின் ஜெயகுமார் சொல்கிறார். முருகன், வானதி சீனிவாசன், நயினார் நாகேந்திரன் ஆகியோர், தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமையும் என்கிறார்கள். 2019 தேர்தல் கூட்டணி உள்ளாட்சித் தேர்தல்களிலும் தொடர்ந்தது. ராமதாசுக்கும் விஜய காந்துக்கும், இன்றைய சூழலில், திமுக, அஇஅதிமுக இருதுருவம் தாண்டி போட்டியில்லை என்பது புரியும். அஇஅதிமுக அணியில் பரிதாபமான நிலை வரக் கூடாது என்பதற்காக, ராமதாஸ் வன்னியருக்கு 20% இடஒதுக்கீடு கேட்டு டிசம்பர், ஜனவரியில் தீவிரப் போராட்டம் நடக்கும் என்கிறார். தேமுதிக சிணுங்கி, முனகி, கடைசியில் கொடுத்த இடத்தை வாங்கிக் கொள்ளும் நிலையில் உள்ளது. ஜி.கே.வாசனை நினைக்கும்போது அனுதாபமே மிஞ்சுகிறது.


அஇஅதிமுகவிடம் அதிக இடங்கள் கேட்டுப் பெறுவதுதான் பாஜகவின் அணுகுமுறையாக இருக்கும். 1996ல் ஜெயலலிதா பலத்த அடி வாங்கிய ஒரு  முறை மட்டுமே 21.47% வாக்குகள் பெற்றது.  மற்ற நேரங்களில் 30% தாண்டிய வாக்கு வங்கி கொண்டிருந்தது. 2019 மக்களவைத் தேர்தல்களில் பலத்த அடி விழுந்த பிறகும், அடுத்து நடந்த இடைத் தேர்தல்களில் அஇஅதிமுக மீண்டெழுந்தது. அஇஅதிமுக ஆட்சி ஊழல் ஆட்சி என்று, 2018ல் அமித் ஷா சொன்னார். 2020ல் நல் ஆளுகை என்கிறார். அஇஅதிமுக ஒன்றுமில்லை என்று கருதுவது பொருந்தாத, பொறுப்பில்லாத அணுகுமுறையாகும். பாஜக எந்த அளவுக்கு தீமையானது என்பது புரிகிறது. ஆனால், வலது சாரி தீமையை, ஏதோ ஒரு விதத்தில் நன்மை என, அய்க்கிய அமெரிக்காவில், பீகாரில் கணிசமான மக்கள் கருதும்போது, சமூகமும் பொருளாதாரமும் வலது திசையில் செல்லும்போது, தீவிர வலதுசாரி கட்சியும் கூட செல்வாக்கு பெற்றுக் கொள்ளும் காலம் இது என்பதை நாம், தமிழ்நாட்டிலும் காணத் தவறக் கூடாது.


திமுகவுக்கு ஒரு சங்கடம் உள்ளது. போட்டியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. கூடுதல் தொகுதிகளில் போட்டியிட்டாக வேண்டும். இடதுசாரிகள், விசிக என்ற கூட்டாளிகள் இருந்தால்தான் நல்லது. காங்கிரசை கழட்டி விட முடியாது. அதேநேரம், பீகாரில் 70 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, 19 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று, 51 தொகுதிகளில் தோற்றுவிட்ட காங்கிரசின் பலவீனத்தையும் கணக்கில் கொண்டாக வேண்டும். தேர்தலில் பழுத்த அனுபவம் உள்ள திமுக, பாஜக - அஇஅதிமுக கூட்டணிக்கு எதிரான தேர்தல் கூட்டணிக்கு உரிய விதத்தில் வியூகம் அமைப்பது அதன் வேலையாக இருக்கும்.


ஆனால், நமது கவலை ஒன்றுதான். திமுக மற்ற கட்சிகளோடு கூட்டணி அமைக்கும் போது, திமுகவும் கூட்டணி கட்சிகளும், பீகாரின் மக்கள் நலன் காக்க லாலு கட்சியும் இடதுசாரிகளும் முன்வைத்தது போன்ற ஒரு மக்கள் சார்பு திட்டத்தை, தமிழ்நாட்டில் முன்வைப்பார்களா? மாட்டார்களா? அதனை கூட்டணி கட்சிகள் வலியுறுத்துவார்களா? மாட்டார்களா? இங்கேதான் மக்கள் இயக்கங்களுக்கு மிகப் பெரிய வேலை உள்ளது. 2016ல் இடதுசாரிகள் மக்கள் சார்பு தேர்தல் அறிக்கை வெளியிட்டனர். விஜய்காந்த் முதலமைச்சர் வேட்பாளராகி, வைகோவும் உள்ளே புகுந்து, அந்தத் தேர்தல் அறிக்கையை பின்னுக்குத் தள்ளிவிட்டார்கள். விஜய்காந்த் அபத்தங்கள் கூட்டணியை கேலிக்குள்ளாக்கியது.


திமுக, திமுக கூட்டணி, ஆளும்கட்சி என அனைவரும் கவனத்தில் கொண்டாக வேண்டும், ஒரு நிலை எடுத்தாக வேண்டும் என்ற நிர்ப்பந்தத்தை உருவாக்கும் விதம், 2021 துவங்கியவுடன், மக்கள் சார்பு முற்போக்கு ஜனநாயகத் திட்டம் ஒன்றின் மீது மக்கள் மத்தியில் பரப்புரை நடத்தப்பட வேண்டும்.


கொரோனா மக்கள் வாழ்க்கையை வேட்டையாடியுள்ள பின்னணியில், தொழிலாளர்களின் வருமானம், வேலை நேரம் ஆகியவை தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள பின்னணியில், மாநில உரிமைகளும் ஜனநாயக உரிமைகளும் பறிபோயுள்ள நிலையில், மக்களுக்கான போராளிகள் மக்கள் சாசனம் ஒன்றை முன் வைத்தாக வேண்டும். சிஎஎ, யுஎபிஎ உள்ளிட்ட கருப்புச் சட்டங்கள் ரத்து, தேசத் துரோக, அவதூறு பிரிவுகள் நீக்கம், போராட்டக்காரர்கள் மீதான வழக்குகள் ரத்து, பத்தாண்டுகளுக்கு மேல் சிறையில் இருப்போர் விடுதலை, காவலர் உரிமைகள், தமிழ்நாட்டின் மொழி, பண்பாடு, வருவாய், சமூகநீதி உரிமைகள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர் நலன்கள், தரமான, கவுரவமான, பாதுகாப்பான அரசு வழங்கும் கல்வி, மருத்துவம், குடியிருப்பு, சூழல் பாதுகாப்பு, தொழிலாளர் நலன்கள், சமூகநீதி, ஊழல் எதிர்ப்பு, மக்களின் வாங்கும் சக்தியை உயர்த்துவது ஆகியவை தொடர்பான கோரிக்கைகளுடன் கோடிக்கணக்கான மக்களிடம் நாம் சென்றாக வேண்டும்.


நாம் முன்வைக்கும் மக்கள் நலன் சார்ந்த கோரிக்கைகள் மீது நாம் காப்புரிமை கோரப் போவதில்லை. அவை, அனைவரும் எழுப்பத் தக்க, அனைவருக்குமான கோரிக்கைகள்.


2021 தேர்தலை, கட்சிகளின் லாவணிக் கச்சேரியாக மாற்ற நாம் அனுமதிக்கக் கூடாது. மாறாக, மக்கள் கோரிக்கைகள் பேசப்படும் தேர்தலாக, அந்தக் கோரிக்கைகளுக்கு கட்சிகள் பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் உள்ள தேர்தலாக, 2021 சட்டமன்றத் தேர்தலை மாற்றுவோம்.

Search