COMMUNIST PARTY

COMMUNIST PARTY

Thursday, December 3, 2020

 

கண்ணோடு காண்பதெல்லாம்

சங்கிகளுக்குச் சொந்தமில்லை

பாசிசத்துக்கு தன் கண்ணில் படும் அனைத்தும் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும். இப்போது அது இணையதளங்களில் வெளியாகும் படங்கள், செய்திகள், துணுக்குகள், கேலிப் படங்கள் என அனைத்தும் அதன் கட்டுப்பாட்டில் வர வேண்டும் என விரும்புகிறது.

நவம்பர் 9 அன்று வெளியிடப்பட்டுள்ள ஒன்றிய அரசின் அறிவிப்பாணைப்படி, இந்திய அரசாங்கத்தின் வர்த்தக ஒதுக்கீடு விதிகள், 1961ல் மாற்றம் கொண்டு வரப்பட்டு, இணைய உள்ளடக்க தயாரிப்பாளர்கள் வெளியிடும் படங்கள் (22 எ) மற்றும் காட்சி நிகழ்ச்சிகள், இணையதளத்தில் வெளியிடப்படும் செய்திகள் மற்றும் தற்போதைய விவகாரங்கள் (22 பி) ஆகியவை தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் கொண்டு வரப்படுகின்றன. எப்படிப்பட்ட கட்டுப்பாடுகள், என்ன விதிகள் என்ற விவரங்கள் வரையறுக்கப்படவில்லை.

இந்த அறிவிப்பாணைப்படி, நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற இணையதளங்களில் இன்று தணிக்கை இல்லாமல் வெளியிடப்படும் படங்கள் இனி தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் தணிக்கைக்குப் பிறகு வெளியிடப்படும். படங்கள் மட்டுமின்றி, செய்திகள், தொடர்கள், ஆவணப்படங்கள் உள்ளிட்ட எல்லாவிதமான இணைய உள்ளடக்கங்களும் இனி ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் வரும்.

இந்த இணையதளங்களில் வெளியாகும் படங்கள், கருத்துகள், காட்சிகள் விமர்சனத்துக்குள்ளாக்கப்படுவதும் பிறகு அவை மாற்றப்படுவதும் நீக்கப்படுவதும் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இதுபோன்ற பதிவுகளை முறைப்படுத்த, மின்னணு நிறுவனங்கள் சேர்ந்து உருவாக்கிய மின்னணு தயாரிப்பு உள்ளடக்க முறைப்படுத்துதல் புகார் கவுன்சில் முன்வைத்த சுய கண்காணிப்பு மாதிரியில் வெளியார் கண்காணிப்புக்கு இடமில்லை, அற விதிகள் சரியாக வரையறுக்கப்படவில்லை, தடை செய்யப்படும் உள்ளடக்கம் எது என சரியாக விவரிக்கப்படவில்லை என்று சொல்லி அந்த முன்வைப்பை ஒன்றிய அரசு நிராகரித்துவிட்டது.

சுதர்சன் நியூஸ் என்ற சங்கி வகை இணைய தளத்தில் மத்திய அரசுப் பணி தேர்வாணைய தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற இசுலாமியர்களை இழிவாக சித்தரிக்கிறார்கள். இது தொடர்பான வழக்கில், இணையதள நிகழ்ச்சிகள், செய்திகள், படங்கள் ஆகியவற்றை முறைப்படுத்த ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிடுகிறது. அந்த உத்தரவை ஒட்டி மோடி அரசு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை, தணிக்கை நடவடிக்கைகளை எடுக்க தயாராகிறது.

தகவல் தொழில்நுட்பச் சட்டம், 2000ன் கீழ் இணையதளத்தில் வெளியிடப்படும் பல பதிவுகள் நீக்கப்படுவது, பல கணக்குகள், பக்கங்கள் தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ முடக்கப்படுவது ஏற்கனவே நடக்கிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அரசாணை என்ன நிபந்தனைகள், கட்டுப்பாடுகள், எந்த மட்டத்தில் விதிக்கும் என்று தெளிவான விவரங்கள் முன்வைக்கப்படவில்லை என்றாலும், கருத்துச் சுதந்திரத்துக்கு, ஜனநாயகத்துக்கு பாதிப்பு ஏற்படுத்துவதாகவே அவை அமையும் என்று நமது அனுபவங்கள் சொல்கின்றன.

மூக்குத்தி அம்மன் போன்ற ஜனரஞ்சக படங்களை கூட இந்துக்கள் மனதை புண்படுத்துகிறது என்று சொல்லி தடை செய்ய வரவிருக்கும் விதிகளில் வழியிருக்கலாம். தணிக்கை சான்றிதழ் பெற்ற பிறகு திரையரங்குகளில் திரைப்படங்கள் வெளியிடப்படுவதுபோல், சான்றிதழ் பெற்ற பிறகே இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும் என்று விதி வரலாம். எதிர்க் கருத்து கொண்ட எந்த உள்ளடக்கத்தையும் இந்துக்கள் மனது புண்படுகிறது என்று தடுத்து விடும் கெடுவாய்ப்பு நேரலாம். பாசிசத்துக்கு ஜனநாயகபூர்வமான நடைமுறை எந்த காலத்திலும், எந்தச் சூழலிலும், எந்தத் தளத்திலும் ஒவ்வாத ஒன்றுதான்.

இணையதளங்களில் வெளியிடப்படும் படங்களில் ஆபாசம், ஆபத்தான கருத்துகள் உள்ளன, அதனால் அவை முறைப்படுத்தப்பட வேண்டும் என்று சொல்பவர்கள், இன்று தணிக்கைக்கு உட்பட்டு வெளியிடப்படும் திரைப்படங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், விளம் பரங்களிலும் அது போன்ற கருத்துகளை கட்டுப்படுத்தாமல் அனுமதிக்கிறார்கள்.

பெண்களை கண்ணியமாகக் காட்டுவது என்பது ஜனரஞ்சக உள்ளடக்கம் என்ற ஒன்றை உருவாக்குவதாகச் சொல்லும் ஆண்களின் அறிவெல்லைக்கு அப்பாற்பட்டது. முழுக்கால், முழுக்கை சட்டைகள் போக, அதற்கும் மேல் ஒரு கோட், இன்னும் சில நேரங்களில் ஒரு தொப்பி என்று தூசோ, வெயிலோ, படாத மிகவும் பாதுகாப்பான உடை உடுத்திய நாயகனுடன் நடனமாடும் நாயகிக்கு தொடையும் மார்பும் தெரிய வேண்டும். எம்ஜிஆர் காலத்து மஞ்சுளா முதல் இன்றைய நாயகிகள் வரை இப்படித்தான் காட்டப்படுகிறார்கள். இது வரை எந்த சென்சார் போர்டும் இத்தகைய காட்சிப்படுத்துதலை தடை செய்யவில்லை. பெண்களை போகப் பொருட்களாகக் காட்டுவதை நிறுத்துங்கள் என்று எதிர்ப்புக் குரல்கள் ஒலிக்கத் துவங்கிய பிறகும் அது கட்டுப்படுத்தப்படாத காட்சிப்படுத்துதலாக தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

பெண்கள் உள்ளாடை விளம்பரங்கள் 5 நிமிடங்களுக்கு ஒரு முறை தொலைக்காட்சி அலைவரிசைகளில் வெளியாகின்றன. உள்ளாடைகள் மட்டும் அணிந்து உடலை வளைத்து நெளித்து காட்டும் பெண்கள் வருகிறார்கள். குடும்பத்துடன் பார்க்க நேரிடுகிறது. இந்தியப் பெண்கள் இன்னும் உள்ளாடைகள் மட்டும் அணிந்து பொதுவில் நடமாடிப் பழகவில்லை. அதனால் உள்ளாடைகள் மட்டும் அணிந்து வரும் பெண்களை தனிமையில் இருந்து பார்ப்பது கூட சங்கடமாகவே இருக்கிறது. (மேலை நாடுகளில் கூட கடற்கரைகளில், நீச்சல் குளங்களில் உள்ளாடைகளுடன் இருக்கிறார்களே தவிர பிற இடங்களில் அப்படி இருப்பதில்லை).  பெண்கள் பெருமை, தூய்மை என ஓயாமல் பேசும் கலாச்சாரக் காவலர்களுக்கு வீடுகளுக்குள் வந்து சேரும் இந்த ஆபாச விளம்பரங்கள் பற்றி சற்றும் அக்கறை இல்லை.

நெட்ப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் வீடியோ, டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் போன்ற இணைய தளங்களில் படங்கள் பார்ப்பது பார்வையாளர் தேர்வு. ஆனால், இந்த அரை ஆபாச விளம்பரங்கள், பெண்களை போகப் பொருட்களாகக் காட்டும் விளம்பரங்கள் திணிக்கப்படுகின்றன. இந்தத் திணிப்புக்கு தணிக்கை வர வேண்டும். தொலைக்காட்சி அலைவரிசைகளை வாடிக்கையாளர் தேர்ந்தெடுத்துக் கொண்டாலும் இந்த விளம்பரங்களில் இருந்து தப்ப முடியாது. இசுலாமிய மருமகளுக்கு இந்து குடும்பத்தினர் வளைகாப்பு நடத்தும் டாடாவின் விளம்பரத்தையே நீக்கிய சங்கிகள் கவனத்துக்கு இது போன்ற விளம்பரங்கள் இன்னும் வரவில்லை என்றா சொல்லப் போகிறார்கள்?

பெண்களை வியாபாரப் பொருட்களாக்கும், சாமான்ய மக்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களின், நிகழ்ச்சிகளின், திரைப்படங்களின், தொலைக்காட்சி தொடர்களின் பட்டியல் மிக நீளமானது.

இணையதள உள்ளடக்கத்தை முறைப்படுத்தப் போகிறோம் என்று புறப்பட்டுள்ள ஒன்றிய அரசின் தற்போதைய நடவடிக்கை அடிப்படையில், எதிர்க்கருத்து தணிக்கையே அன்று வேறில்லை.

பிரதமர் கோ பேக் மோடியை சந்திப்பது மட்டுமன்றி, அவர் மனதோடு பேசும் பேச்சை, அவரது அதிகாரபூர்வ சுட்டுரை பக்கத்துக்குப் போய், அது பிடிக்கவில்லை என ஆயிரக்கணக்கானவர்கள் சொல்கிறார்கள். எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க, அப்படி கருத்து தெரிவிக்கும் அந்த வசதியையே அந்தப் பக்கத்தில் இருந்து சங்கிகள் நீக்கிவிடுகிறார்கள். இன்றைய நிலைமைகளிலேயே இப்படி நடந்துகொள்பவர்கள் கட்டுப்பாட்டில் இணையதள உள்ளடக்கமும் முழுமையாக வந்துவிட்டால், பாரதி சொன்ன இம் என்றால் சிறைவாசம், ஏனென்றால் வன வாசம்தான்.

சங்கிகள் கண்ணில் படுவதெல்லாம் அவர்களுக்குச் சொந்தமாகிவிடாது. சங்கிகளும் ஓடிடி தளத்தில் தங்கள் கருத்துகளைச் சொல்ல முடியும். கருத்துகளை கருத்துகளால் மக்கள் எதிர்கொள்ளட்டும். இணையதள வெளியின் ஜனநாயகம் பாதுகாக்கப்படட்டும்.

இணையதளத்தில் அவதூறுகள் பரப்பப்படுவதை தடுப்பது என்ற பெயரில், காவல்துறைக்கு கட்டற்ற அதிகாரம் அளித்து, கேரள காவல் துறை சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து கேரள இடது முன்ணணி அரசாங்கம் பிறப்பித் துள்ள அவசரச் சட்டம் முழுக்க முழுக்க ஜனநாயக விரோதமானது, கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரானது, கருப்புச் சட்ட வகைப்பட்டது என எதிர்ப்புகள் எழுந்த பிறகு, இப்போது சட்ட அமலாக்கம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்கள் எப்போதும் மக்கள் கருத்துகளுக்கு செவி சாய்ப்பவர்கள், அதனால் எங்கள் கட்சி இது போன்ற ஒரு சட்டத்தை நிறுத்தி வைத்திருக்கிறது என்றெல்லாம் இப்போது சொல்வதில் பயனில்லை. இப்படி ஒரு சட்டத்தை, அதுவும் அவசரச் சட்டமாகக் கொண்டு வருவதற்கு முன்பே தீர சிந்தித்திருக்க வேண்டும். காவல் துறைக்கு கட்டற்ற அதிகாரம் தருவது சாதாரண விசயம் அல்ல. அது ஜனநாயகத்துக்கு எதிரானது இப்போதும் நிறுத்தி வைத்திருப்பது போதாது. இடது முன்னணி அரசாங்கம் இந்த அவசரச் சட்டத்தை உடனே முழுவதுமாக ரத்து செய்ய வேண்டும்.

Search